வார விடுமுறை என்பதால் நண்பர்கள் அனைவரும் அறையில் இருந்ததால் காலையில் மெதுவாக எழுந்தாலும் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்று நிறைய விஷயங்களை அலச நேரம் கிடைத்தது. சினிமா, அரசியல், முள்ளிவாய்க்கால் முற்றம், விஜயதாரிணியை சத்யம் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் ஒருவர் தவறாகப் பேசியது என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயம் பேச ரசனையுடன் விவாதம் போய்க் கொண்டிருந்தது.
நண்பர் ஒருவர் தெண்டுல்கர் பற்றி பேச்சை ஆரம்பித்தார். இருபத்து நாலு வருசமா விளையாண்டு இந்தப் போட்டியுடன் விடை பெறுகிறார் என்று சொன்னதும் எல்லாருடைய பேச்சும் சச்சின் பக்கம் திரும்பியது. உடனே ஒரு நண்பர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் கேன்சருக்கு இலவச மருத்துவமனை கட்டி இருக்கிறார். இவன் என்ன செய்தான் என்று முதல் விவாத முத்தை ஆரம்பித்தார்.
நான் எதுவும் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தேன். எனக்கு சச்சினை ரொம்பப் பிடிக்கும். எனக்குப் பிடிக்கும் என்பது அவருக்கும் தெரியும் அதனால் என்னிடம் எதாவது பிடுங்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் சொன்னார். அவர்கள் விவாதத்தில் நான் கலந்து கொள்ளவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு சச்சின் ஒன்றும் செய்யவில்லை என்பது விவாதப் பொருளாக இருக்கிறது இதில் நாம் சொல்ல என்ன இருக்கிறது.
பிறகு அவர்களாகவே சச்சினை விமர்சித்து பெரிய விவாதமே நடத்தினார்கள். விவாதப் பொருள் சச்சின் என்றாலும் சரி தவறென்று சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம் போல் விவாதம் நடக்கவில்லை. அம்மாவின் ஆட்சி போல எல்லோரும் ஒரு பக்கமாகவே பேசினார்கள். மக்களுக்கு என்னத்தை செய்தான்... கோடிக்கோடியாக சம்பாரித்து அவன் குடும்பத்துக்குத்தான் சேர்த்து வைத்திருக்கிறான். சரியான சுயநலவாதி என எல்லாரும் அவரவர் மனதில் உதித்ததை பேசிக்கொண்டே போனார்கள். எல்லாருமே ஒருமையில்தான் பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது ஒருவர் நூறு கோடிக்கு வீடு கட்டி வச்சிருக்கான். தெருவுல திரியிற எத்தனையோ கோடிப் பேர் இருக்கிறார்கள் என்ன செய்தான் எனச் சொன்னார். உடனே ஒருவர் அவன் களவாணிப்பய அடுத்தவங்களுக்குச் செய்யணுங்கிற எண்ணமே இல்லாதவன். கோடிக்கோடியா சம்பாரிச்சு என்னத்துக்கு செய்யிற மனசில்லையே என தனது ஆதங்கத்தைக் கொட்டினார். இதற்கு மேல் கேட்டுக் கொண்டிருக்க விடாமல் எதாவது பேசு என்று என்னை சச்சின் மோகம் உந்தித் தள்ள, நான் எதைப் பேசினாலும் விவாதத்தின் வீச்சுக் கூடும் என்று தெரிந்தாலும் அவர்களுக்குப் பதில் சொல்லும் விதமாக ஆரம்பித்தேன்.
சரி உங்க விவாதத்துக்கே வருவோம். சச்சின் கோடிக்கோடியாக சம்பாதித்து வீடு கட்டியிருக்கிறார். வெளிநாட்டில் சொத்து வாங்கிப் போட்டிருக்கிறார் என்றே வைத்துக் கொள்வோம். அது அவர் சம்பாதித்த காசுதானே. நம்ம அரசியல்வாதிகள் போல் மக்கள் வயிற்றில் அடித்து சம்பாதிக்கலையே... அவரோட பணம் அவர் யாருக்குக் கொடுத்தால் என்ன... கொடுக்கலைன்னா என்ன... என்றேன். எனது பதில் எனக்குச் சரியானதாக இருந்திருக்கலாம். அவர்களுக்கு இது தவறாகத் தெரிந்திருக்கலாம்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக இவன மாதிரித்தான் அவனும் அதான் டோனியும் ஐந்து லட்சம் சொத்தோட வந்தவன் இன்னைக்கு வீட்டை சுத்திப் பாக்க குதிரை வண்டியில போறானாம் என்று ஒருவர் எடுத்துக் கொடுக்க, மற்றவர்களுக்கு செய்யும் எண்ணம் இல்லாத இவனுகளை தலையில தூக்கி வச்சிக்கிட்டு ஆடுறாங்க. கிரிக்கெட்டின் கடவுள்ன்னு வேற சொல்றாங்க... சில கிறுக்குப்பய புள்ளங்க சேர்ந்து கோயில் வேற கட்டியிருக்குங்களாம் விளங்குமா நாடு என்றார் மற்றொருவர். இவரது பேச்சில் எப்போதும் தான் மட்டுமே நல்லவன் சுற்ரி இருப்பவன் எல்லாம் கெட்டவன் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும்.
கோயில் கட்டுறதை நானுந்தான் தப்புன்னு சொல்றேன். சச்சினுக்கு கோயில் கட்டுனவங்களுக்கு குடியிருக்க வீடு இருக்குமா என்று நான் சொல்ல, நண்பர் ஒருவர் அவனுக வீடு கட்ட வச்சிருந்த பணத்தைத்தான் சச்சினுக்கு கோயிலாக் கட்டியிருப்பானுங்க. நம்ம ஊர்ல குஷ்புக்கு கோயில் கட்டலையா அது மாதிரித்தான் என்றார். விவாதம் திசை மாறி மீண்டும் சச்சினை மையம் கொண்டு தொடர, என்னமோ சச்சின் பணத்தை சுலபமா சம்பாரிச்ச மாதிரி பேசுறீங்க... வெயில்ல நின்னு விளையாண்டு கஷ்டப்பட்டுத்தானே இந்த பணத்தை சம்பாரிச்சு இருக்கார். அவர் தேர்ந்தெடுத்த பாதை பணம் கொழிக்கும் பாதை.. இது எல்லாருக்கும் அமைவதில்லை என்றதும் அதுக்காக கோடிக்கோடியா கொடுக்கிறானுங்க... அதுல செஞ்சா என்ன கொறஞ்சா போயிடும் என்றார் நண்பர் ஒருவர்.
சரி அவர் செய்தாரா செய்யலையான்னு யாருக்குத் தெரியும். உதவி செய்யிறதை ஒரு சில நடிகர்கள் போல விளம்பரம் பண்ணிட்டு செய்யணுங்கிறது இல்லையில்ல. எத்தனையோ பேர் எவ்வளவோ உதவிகளை வெளிய தெரியாமத்தானே செய்யிறாங்க. அப்படி இவரும் செய்திருக்கலாமே. நமக்கு என்ன தெரியும். அதுவும் பிரபலமா இருந்தால் நான் உதவி செய்யிறேன்... உதவி செய்யிறேன்னு சொல்லிட்டுச் செய்யணுமா என்ன... என்றதும் நீங்க அவனைத் தூக்கி வச்சி ஆடுற கோஷ்டி, அவனை மாதிரி எத்தனை பேரு விளையாட இடம் கிடைக்காமல் இருக்கானுங்க... எல்லாருக்கும் இந்த வாழ்க்கை கிடைப்பதில்லையே என்றார் மற்றொருவர்.
இடம் கிடைக்காமல் நிறைய பேர் இருக்காங்க. அதுக்காக என்ன செய்ய முடியும். யாருக்கு என்னன்னு நிர்ணயம் பண்ணித்தானே பிறக்கவைக்கிறான். அப்புறம் கிடைக்கலைன்னு புலம்பி என்னாச்சு நமக்கு கிடைச்சிருக்கிற இந்த வாழ்க்கையை வாழ்ந்தாப் போதும். கிட்டத்தட்ட இருபத்தி நாலு வருசமா மைதானத்தில் வெயிலில் கிடந்துதான் சம்பாரித்து இருக்கிறார். எத்தனை ஏச்சுக்கள் பேச்சுக்கள் வாங்கியிருப்பார். நாம அடுத்தவனுக்கு என்ன செய்தோம்ன்னு பாருங்க... அடுத்தவன் என்ன செய்யிறான்னு பாக்காதீங்க என்றதும் நீங்க சொல்றது சரிதான்... இன்னைக்கு நாம வாங்குற சம்பளத்துல எத்தனை பேர் அடுத்தவங்களுக்குச் செய்யிறோம். அப்புறம் பிரபலங்கள் மட்டும் சம்பாதிக்கிற காசுல அதைச் செய்யலை... இதைச் செய்யலைன்னு எப்படி பேசலாம் என்றார்.
எப்படியிருந்தாலும் சச்சின் களவாணிப்பயதானுங்க. ஒரு நூறு அடிக்கணுமின்னாலும் அம்பது அடிக்கணுமின்னாலும் எத்தனை பந்தை வீணாக்குவான் தெரியுமா... அவனுக்கு சாதனை செய்யணும் அதுதான் அவனோட எண்ணம். கேட்டா நாட்டுக்காக விளையாடுறான்னு சொல்லுவானுங்க என்று ஒருவர் சொல்ல, எந்தத் துறையா இருந்தாலும் அதுல இருக்கவனுக்கு சாதிக்கணுமின்னு ஆசை இருக்கதான் செய்யும். தன்னோட கண் முன்னாடி தன்னால சாதிக்க முடியும்ன்னு தெரியும் போது அவருக்குன்னு சில சாதனைகள் செய்ய ஆசை இருந்துதான் இருக்கும். அதுக்காக எல்லாப் போட்டிகளிலும் சதமடிக்கணுமின்னு விளையாண்டாரா என்ன. தொன்னூறுக்கு மேல போகும் போது எல்லாருக்கும் நூறைத் தொடணுமின்னு ஆசை இருக்கத்தான் செய்யும். இதை ஏன் அப்படிப் பாக்குறீங்க என்றதும் கொஞ்ச நேரம் தொடர்ந்த விவாதம் வேறு மாதிரிப் போக, நான் பேசுவதை நிறுத்திக் கொண்டேன்.
எனக்கு இவங்க பேசுற இந்த வியாக்கியானம் பிடிபடவில்லை. நம்மால் என்ன முடியுதோ அதைச் செய்யும் மனமிருந்தால் போதும். செய்வதை வெளியில் சொல்லி விளம்பரம் தேடிக் கொள்ள என்ன வேண்டியிருக்கிறது. எனக்குத் தெரிந்த ஒருவர் மகளுக்கு செய்ததைக் கூட நாலு பேர் கூடியிருக்கும் போது சொல்லிக்காட்டி பெருமைப்பட்டுக் கொள்வார். அதுபோல் செய்ய வேண்டுமா என்ன. சச்சின் என்றில்லை நிறைய பிரபலங்கள் அதைச் செய்யவில்லை... இதைச் செய்யவில்லை என்று நாம் எப்படிச் சொல்லலாம். செய்வது என்பது அவரவர் விருப்பம். நடிகன் செய்யவில்லை... விளையாட்டு வீரன் செய்யவில்லை என்று பேசுவது சரியா..? அவனவன் வேலை பார்த்துத்தான் சம்பாதிக்கிறான். அரசியல்வாதி தவிர மற்ற யாருக்கும் உடல் உழைப்பு இல்லாமல் பணம் கிடைத்து விடுவதில்லை. என்ன அவனவனுக்கு வாய்க்கும் தொழிலில் ஏற்ற இறக்கம் இருக்கிறது. அதற்காக நாம் கல்லெறிய முடியுமா?
பல்லிருக்கவன் பக்கோடா சாப்பிடுறான் என்பதற்காக அவனைப் பார்த்து கோபப்பட முடியுமா... உதவும் குணம் அவரவர்க்குள் இருந்தால் போதும் வெளிச்சம் போட்டுக்காட்டித்தான் ஆக வேண்டும் என்பதில்லை என்பது என் எண்ணம். என்னங்க நான் சொல்வது சரிதானா?
மீண்டும் மனசு பேசும்.
-'பரிவை' சே.குமார்
10 எண்ணங்கள்:
நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே. இன்று உலகம் முழுமைக்கும் நாம் நிமிர்ந்து நின்று பெருமைப்பட்டுக்கொள்வது சச்சின் சாதனைகளைத்தானே? வெறியர்களான ரசிகளை விட்டுத்தள்ளுங்கள். இன்றைக்கு தான் அவுட் ஆனதும் மைதானம் முழுமைக்கும் நன்றி சொல்லி சச்சின் புறப்பட்ட போது, டிவியிலும் பின்னால் வர்ணனையிலும் தாங்க்யூ, தாங்க்யூ சச்சின் என்று சொன்ன போது நம் மனம் ஒரு சில நிமிடங்கள் கனத்துப்போகவில்லையா? ஸ்ரீகாந்த் ஒரு முறை சொன்னார், ' சச்சினின் சாதனைகள் எல்லோருக்கும் தெரியும், அதை நான் மறுபடியும் சொல்ல வேன்டியதில்லை. ஆனால் அவர் விளையாட ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை அவர் ஒரு நல்ல மனிதனாக இருக்கிறார். இத்தனை பணம், புகழ் வந்தும் அவர் நல்ல மனிதனாக இருப்பது தான் சாதனை'என்று! நல்ல மனிதராக இருப்பவருக்குள் நிச்சயம் கருணையும் இருக்கத்தான் செய்யும். அதை மற்றவர்களுக்கு நிரூபித்துக்காட்ட வேண்டிய அவசியமில்லை.
வணக்கம் சகோதரரே.
மிகச்சரியாகவே தங்களது பதிலைக் கூறியிருக்கிறீர்கள். இவர்கள் சம்பாதிப்பதை ஊருக்கு கொடுத்தது போலவும் பிரபலங்கள் கொடுக்கவில்லை என்று குறைப்பட்டு கொள்வதும் அடுத்தவரைக் குற்றம் சொல்லும் இழிகுணம். செய்யும் உதவி பக்கத்து கைக்கு கூட தெரியக்கூடாது என்பார்கள். மனிதம் மனதில் இருந்தாலே உலகம் வளம் பெறும். பகிர்வுக்கு நன்றி சகோதரரே..
வணக்கம்
சே.குமார்(அண்ணா)
அருமையான பகிர்வு இனியாவது இப்படிப்பட்டவர்கள் புரிந்து கொண்டால் சரி.. வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நான் மனோ அக்கா சொன்னதையே ஆமோதிக்கிறேன்.சச்சின் என்ற நல்ல மனிதன் ஒழுக்கம் தெரிந்தவன் உயர்வானவன் என்றும் சொல்லலாமே
அவரின் சாதனைகளைப் பேச வேண்டிய நேரம். இது மாதிரிப் பேச்சுகள் ஒருவிதப் பொறாமையினால் விளைபவை.
ஒருவர் கடுமையாக உழைத்து முன்னேறி சம்பாதித்துள்ளார் ! ஆக அது அவர் பணம் என்பதில் ஐயமில்லை, ஆனால் அது அவருக்கும், குடும்பத்துக்கும் சகல சவ்பாக்கியங்களையும் பெறும் அளவைக் கடந்து போகும் போது அதை இல்லாதாரோடு பகிர வேண்டும், அதுவே நியாயம்.. மராத்திய மாநிலத்தில் மேற்கு விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள், கல்விமான்கள் தம் அளவுக்கும் அதிகமாய் சம்பாதிக்கின்ற போது, கிழக்கில் சில ஆயிரம் கடனையும் கட்ட முடியாமல் பல் ஆயிரம் விவசாயிகள் தூக்கில் தொங்குகின்றனர். விளையாட்டுக்கு சம்பளத்தையும் தாண்டி சம்பாதிக்கும் நிலை அநீதியானது, அது நியாயமாய் உழைப்பவர்களின் பங்கு என்பதை நாம் உணர வேண்டும், வருமான உச்சவரம்புகள் அவசியம். சச்சினை தெய்வீகத்தனமாக உயர்த்திவிட்ட ஊடகங்கள் மற்றும் ரசிகர்களை விமர்சிக்கவே வேண்டும். விளையாட்டைத் தாண்டி வாழ்வியலை சிந்திக்க கற்க வேண்டும். மற்றபடி வீண்விவாதங்கள் மற்றும் அவதூறுகள் பயனில்லை.
தம்பி பகிர்ந்த விதமும் கூறிய விசயமும் நன்றே..
உன் கருத்துப்படியே சச்சின் சம்பாதித்தான் அவன் பணம் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும் என்பது ஏற்புடையதே. அது அவரது தனிப்பட்ட விருப்பம். எமது பார்வையில், அப்படியிருக்க சச்சினாகட்டும் தோனியாகட்டும், நடிகர் ரஜினியாகட்டும் அவரவர்க்கு அது தொழில், ஒரு ஐடி நிறுவனத்தில் ஒருவர் வேலைபார்ப்பதுபோல், ஒரு விவசாயி வேலைபார்ப்பதுபோல்தான் அவர்களுக்கு விளையாட்டு என்பது ஒரு தொழில். அப்படியிருக்க இருக்கும் வேலைகள் அனைத்தையும் விட்டு இப்படி அவரவர் ஒருவர் பின்னால் கடவுள் ரேஞ்சுக்கு பூஜிப்பதைதான் ஏற்க இயலவில்லை..குறிப்பிட்டு சச்சினை கூறவில்லை..அவர் இடத்தில் எவர் இருப்பினும். சாதனை செய்தார்..சரி பணத்திற்காகவும், பெயருக்காகவும்தானே..ஒரு நிறுவனத்தில் சேல்ஸ் மேனேஜர் நல்ல பெயர், பதவி உயர்வுக்காக எப்படி உழைக்கிறாரோ அப்படியே இவர்களும். அந்த சேல்ஸ் மேனேஜரை அவரது நிறுவனம் கொண்டாடலாம்(அதுவும் சுயநலத்தோடே..) அதற்காக அனைவரும் அவரை பூஜிக்கும் அளவு செல்வதில்லையே..யார் மனதும் வருந்துவதற்காக கூறவில்லை. சச்சினை குறைவாகவும் கூறவில்லை. அவரவரை அவரவர் இடத்தில் ரசிப்பதோடு அவரவர் கடமையைச்செய்தால் போதுமென்பது எமது தனிப்பட்ட கருத்து. அறையில் பேசிய ஒரு விசயத்தை அழகா நல்ல பதிவாகக் கொடுத்த தம்பிக்கு வாழ்த்துகள்..
தனிப்பட்ட மனிதரை அளவுக்கு மீறி கொண்டாடுவது கேடே .
அசிம் பிரேம்ஜி என்ற தொழில் அதிபர் செய்த உதவி 8000 ஆயிரம் கோடியாம் ..
அவரல்லவா மனிதன். தனக்கு திறமை இருந்து சமுகத்தில் உயர்ந்த பின் ,
திருப்பி சமுகத்திற்கு செய்யாமல் செல்பவன் யாராக இருந்தாலும் , மிக அற்பர் என்பது என் எண்ணம்.
சமுக அளவில் புகழில் உயரத்தில் இருக்கும் போது நாட்டு மக்களுக்கு பல அறிவுரைகளை சொல்ல முன் வர வேண்டும். சுகாதாரம் , சாலை பாது காப்பு , பெண்களின் பாதுகாப்பு , மூட நம்பிக்கை என்பவைகள் பற்றி பேச வேண்டும். ராக்கெட் விட அறிவியல், கணக்குகளை நம்பாமல் தேங்காய் உடைப்பதை நம்புவது சரியல்ல என்று சொல்ல வேண்டும். அதனால் பல இளைஞர் சிந்தித்து நல்வழி நடக்க வாய்ப்புள்ளது. இதெல்லாம் என் கடமை இல்லை என்று ஒடுங்குவது சரியாக இருக்காது. பல மக்கள் வாழ்வு மேம்படும். வெறும் கிரிக்கெட் புகழால், மற்ற மனிதர் வாழ்வு எந்த விதத்திலாவது மேம்படுமா.
பல்லிருப்பவன் பக்கோடா சாப்பிடுகிறான்! :)
நல்ல விவாதம் தான். அவர் யாருக்கும் உதவி செய்தாரா இல்லையா என்பது வெளியே தெரியாதவரை இப்படி பேச்சுகள் வரத் தான் செய்யும்.....
த.ம. 4
அடுத்தவரைக் குறைசொல்ல ஆயிரம் காரணம் கண்டுபிடிக்கலாம் என நினைத்துக்கொள்ளுங்கள்.தங்களின் பதிவிலுள்ள உண்மை புரியட்டும்
கருத்துரையிடுக