மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 26 அக்டோபர், 2013

தொடர்கதை : கலையாத கனவுகள் - 25

முந்தைய பதிவுகளைப் படிக்க...



-----------------------------------------------------------------------

25. சந்தேகப் பொறி பறக்கிறது

முன்கதைச் சுருக்கம்: 

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான்.  அக்காவுக்கு விருப்பமில்லாத மாப்பிள்ளையை பேசி வைத்திருக்கும் அம்மாவுடன் மல்லுக்கு நிற்கிறான். கல்லூரியில் வைரவனைத் தாக்க வந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக கெட்டபெயர் ஏற்படுகிறது. இதன் பின்னான நிகழ்வுகளில் புவனா தன் காதலை ராம்கியிடன் சொல்கிறாள்.  ஐயா வீட்டை தாங்கள் சந்திப்பதற்கு பயன்படுத்தி வந்தவர்கள் முதல்முறையாக பூங்காவிற்குச் சென்று நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.  ராமுக்கு புவனா அனுப்பிய பொங்கல் வாழ்த்து ராசு கையில் கிடைக்கிறது.

இனி...


'வித் லவ்... யுவர் புவி' என்று இருக்கவும் 'ஆஹா... பய படிக்கப் போறேன்னு வேற வேலயில்ல பாக்குறான்...' என்று நினைத்தபடி ஒரு ஒரமாகக் கிழித்து வாழ்த்து அட்டையை பிரித்துப் பார்க்க அழகாக இதயம் வரைந்து அதற்குள் நான்கு வரிகள் எழுதி கீழே 'புவனாராம்' என எழுதியிருக்க, 'சரி... இன்னைக்கு அவன் வரட்டும்' என அதை மட்டும் எடுத்து தனியாக வைத்துவிட்டு மற்றவற்றை உத்திரத்தின் மீது வைத்தான்.

மாலை ராம்கி வீட்டுக்குள் நுழைந்ததும் "என்னடா நாளையில இருந்து லீவுதானே?" என்றதும் "ஆமாண்ணே..." என்றபடி புத்தகத்தை வைத்துவிட்டு டிபன் பாக்ஸை பாத்திரம் வெலக்கும் இடத்தில் வைத்துவிட்டு கை,கால்களை கழுவி  கொடியில் கிடந்த குத்தாலம் துண்டை எடுத்து துடைத்துக் கொண்டு கயிற்றுக் கட்டிலில் அண்ணனுக்கு அருகில் அமந்தான்.

"என்னடா... காலேசு படிப்பு ரொம்ப பிடிச்சிருக்கும் போல..." என்றான் ராசு.

"ஆமாண்ணே... ஸ்கூல் மாதிரி இல்ல.. இது ரொம்ப வித்தியாசம்ண்ணே..."

"எல்லாமே மாறும் போல..."

"ம்... " என்றவன் 'என்ன ஒரு மாதிரி பேசுறாரே? ஆஹா... பிடி கொடுக்காம பேசணுமேன்னு' மனசுக்குள்ள சொல்லிக் கொண்டான்.

சீதா காபி கொண்டு வந்து கொடுக்க, "சீதா அந்த உத்தரத்துல இவனுக்கு வந்த கிரீட்டிங்க்ஸ் இருக்கு... எடுத்துக் கொடு..." என்று ராசு சொல்ல அவள் எடுத்துக் கொடுத்துவிட்டுச் சென்றாள்.

வேகவேகமாக அனுப்பியவர் அட்ரசைப் பார்த்தவன், ஒண்ணும் சொல்லாமல் மடியில் வைத்துக் கொண்டு காபியைக் குடித்தான்.

"என்னடா... யாராவது முக்கியமான ஆள் அனுப்புவாங்கன்னு நினைச்சிருந்தியா... என்ன?" 

"அதெல்லாம் ஒண்ணுமில்லேண்ணே... எப்பவும் நம்ம சரவணப்பய அனுப்புவான். அதான்.."

"அவன் அனுப்புறது எப்பவும் மாட்டுப் பொங்கல் அன்னைக்குத்தான் வரும்... நீ வேற யாரோ அனுப்புவாங்கன்னு நினைச்சிருக்கே... உண்மையைச் சொல்லு..."

"ஐயோ அண்ணே... அப்படியெல்லாம் யாரும் இல்ல... இந்தா என்னோட பிரண்ட்ஸ்தான் அனுப்பியிருக்காங்க... வேணுமின்னா பிரிச்சிப் பாரு... சும்மா... ஏதோ பொம்பளப்புள்ள அனுப்புனது மாதிரி கேக்குறே... இதை நீயே பிரிச்சிப் பாத்துக்க..." என்று கோபமாக எழுந்தான்.

"டேய் இருடா... எதுக்கு இப்ப உனக்கு இம்புட்டுக் கோபம்... என்னடா கேட்டேன்.."

"அப்புறம் என்னண்ணே... நீ அப்படித்தானே கேக்குறே...?"

"சரி... இரு வாறேன்..." என்றபடி எழுந்து சென்றவன் கையில் வாழ்த்தோடு வந்து "இந்தா..." என்றதும் 'என்ன' என்பது போல ஏறிட்டுப் பார்த்தான். முகத்துக்கு நேராக நீட்டிய கிரிட்டிங்க்ஸை வாங்கியவன் அது பிரித்து இருப்பதைப் பார்த்ததும் யாரு அனுப்பியது என்று புரிந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அனுப்பியவர் அட்ரஸைப் பார்த்தவன் புவி பெயரைப் பார்த்ததும் கொஞ்சம் உஷாரானான்.

"புவியா... எனக்கா வந்திருக்கு?" என்று திருப்பிப் பார்த்தான்.

"யாருடா புவனா?" நேரடியாகக் கேட்டான். அப்போதுதான் பொங்கலுக்கு சுப்பி பொறக்கிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்த நாகம்மா "என்னடா... என்ன?" என்று வினவினாள்.

"ஒண்ணுமில்லேம்மா... இவனோட பிரண்ட்ஸ் பொங்கல் வாழ்த்து அனுப்பியிருக்காங்க... அதான்.... வேற ஒண்ணுமில்லை..." என்றவன் அம்மா அவர்களைக் கடந்து உள்ளிக்குள் சென்று கல்தூணில் சாய்ந்து அமரும் வரை பேசாமல் இருந்துவிட்டு " சொல்லுடா யாருடா அவ?" என்றான் மெதுவாக.

"யாரு... புவனாவா..? யாருன்னே தெரியலை... இந்தப் பயலுக எவனாவது இந்த வேலையைப் பாத்திருப்பானுங்க..."

"பொம்பளப்புள்ள கையெழுத்தாவுல்ல இருக்கு...?"

"இது பெரிய விஷயமா என்ன... அவனுக அக்காவை விட்டு எழுத வச்சிருப்பானுங்க.... இது சரவணன் அக்கா எழுத்து மாதிரி இருக்கு... அவங்ககிட்ட கேட்டா தெரிஞ்சு போயிடும்... இல்லேன்னா எங்க கிளாஸ் பொண்ணுங்க யாராவது எழுதியிருப்பாங்க... இந்தா நீயே வச்சிக்க..." என்று அவனிடம் கொடுத்துவிட்டு எழுந்தான்.

"எதையோ மறைக்கப் பாக்குறேன்னே தெரியுது... சரி விடு... நீ படிச்சா உனக்கு நல்லது... நாளைக்கு எனக்கு எதுவும் செய்யப் போறதில்லை... அண்ணன்னு வாறியோ இல்ல வர்றவ பேச்சைக் கேட்டுக்கிட்டு என்னைய முறைச்சிக்கிட்டு நிக்கிறியோ.."

"எதுக்குண்ணே இப்படியெல்லாம் பேசுறே... நான் அப்படியெல்லாம் இல்ல..." என்றபடி எழுந்தான்.

"இந்தா இதை வச்சிக்கிட்டு நான் என்ன பூஜையா பண்ணப் போறேன்... நீயே எடுத்துக்கிட்டுப் போ..." என்று அவனிடம் எல்லாத்தையும் எடுத்துக் கொடுக்க, ஒவ்வொன்றாக பிரித்துப் படித்தபடி சென்றவன், புவனா அனுப்பிய வாழ்த்தில் 'புவனாராம்' என்று இருக்கவும், 'களவாணி வேற பேர்லதான் அனுப்புவேன்னு அட்ரஸ் வாங்கிட்டு இப்படி பண்ணிட்டாளே' என்று நினைத்தபடி அதை மட்டும் தனியாக எடுத்து பத்திரப்படுத்தினான்.

"அம்மா..."  என்று தோளில் கோலம் வரைந்தபடி சாய்ந்தாள்.

"என்ன வேணும்... ரொம்ப குழையுறே...?"

"எல்லாரும் பிரண்ட் ஊருக்குப் பொங்கலுக்கு வர்றதா சொல்லியிருக்கோம்... பொங்கல் அன்னைக்கு இல்லை... மாட்டுப் பொங்கலன்னைக்கு அவங்க ஊர்ல ரொம்ப விசேசமா இருக்குமாம்...ப்ளீஸ் அம்மா..."

"ஆத்தாடி... நீ பாட்டுக்கு அங்க போறேன்... இங்கே போறேன்னு கிளம்பினா உங்க அப்பாவுக்கு நான் பதில் சொல்ல முடியாதுடி... ஆளை விடு நீயாச்சு அவராச்சு... ராத்திரி அவரு வந்ததும் பேசிக்க..."

"அம்மா ப்ளீஸ்... நீ சொன்ன அப்பா ஒண்ணும் சொல்லமாட்டாரு..."

"ஆமா... காரியம் ஆகணுமின்னா மட்டும் எங்கிட்ட வாங்க அண்ணனும் தங்கச்சியும்... சரி எந்தப் பொண்ணு வீட்டுக்கு..."

"அது..."

"என்னடி.. இழுக்கிறே...?"

"பொண்ணு இல்லம்மா... பையன்..."

"என்னது ஆம்பளப்பய வீட்டுக்கா..? ஆத்தாடி உங்கப்பன் கொன்னே புடுவாரு..."

'அம்மா கூடப்படிக்கிறதுல ஆணு பொண்ணுன்னு பிரிச்சா பழகமுடியும்... கிளாஸ் பிரண்ட்ஸ்ம்மா... நீ லேசா ஆரம்பி... நான் பேசிக்கிறேன்... ப்ளீஸ்ம்மா..."

"என்னடி... பயலுக சகவாசமெல்லாம் வச்சிக்கிட்டு... இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு சரி வராது... சும்மா போ... நா ஒண்ணும் பேசமாட்டேன்...."

"அப்படியே பட்டிக்காடாவே இருங்க... அப்ப பொம்பளப்புள்ளங்களா படிக்கிற காலேசுல சேத்து விட்டுருக்கனும்... நானா இங்க சேத்து விடுங்கன்னு கேட்டேன். அப்புறம் ஒரே கிளாஸ்ல படிக்கிற பசங்க வீட்டுக்கு எல்லாரும் போகும்போது நாமட்டும் போகலைன்னா என்னை எல்லாத்துலயும் ஒதுக்கிருவாங்க.... என்னையப் பத்தி உங்களுக்கு தெரியுமில்ல... பெத்த பிள்ள மேல உங்களுக்கு நம்பிக்கை வரலைன்னா என்னத்தை சொல்றது..." என்றபடி கண்ணைக் கசக்கினாள்.

"எதுக்கு இப்போ அழுகுற மாதிரி நடிக்கிறே... சரி அவரு வரட்டும் பேசலாம்... என்ன.. பசங்க வீடுன்னா என்ன சொல்வாரோ தெரியலை ... சரி பேசிப்பாப்போம்..."

"என்ன எங்க போகணும் உங்க செல்லப்புத்திரி..." என்றபடி உள்ளே நுழைந்தான் வைரவன்.

'அய்யோ எருமை வந்திருச்சே...' என்று நினைத்தபடி "அம்மா அவனுகிட்ட சொல்லாதீங்க... காரியம் கெட்டுப் போயிரும்... ப்ளீஸ்..." என்று மெதுவாக காதைக் கடித்தாள்.

"ஒண்ணுமில்லேடா... பொங்கலுக்கு பிரண்ட் வீட்டுக்குப் போகவான்னு கேட்கிறா"

"பசங்க வீடா... பொண்ணுக வீடா..."

"....."

"என்ன ரெண்டு பேரும் பேசாம நிக்கிறீங்க...?"

"யார் வீடா இருந்தா என்ன.... என்னோட கிளாஸ்மெட்டு வீட்டுக்குப் போறோம்... உன்னோட வேலையைப் பாரு... அப்பா போகச் சொன்னா நான் போவேன்..."

"நீ எங்கயும் போக வேண்டாம்... பயலுக வீட்டுல போயி ஆட்டம் போட்டுட்டு வந்தா பாக்குறவங்க என்ன நினைப்பாங்க..."

"உன்னைய மாதிரி ஒண்ணும் ஊரு சுத்தப் போகலை... ப்ரண்ட்ஸ் கூப்பிட்டாங்க... அப்பாகிட்ட கேட்டுச் சொல்றேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன்... நீ உன் வேலையைப் பாரு..."

"அம்மா இவ போகக்கூடாது சொல்லிப்புட்டேன்... " என்று கத்தினான்.

"ஏண்டா கத்துறே... அவளாச்சு அவ அப்பாவாச்சு... எதுக்கு என்னைய இழுக்கிறே... வேணுமின்னா நீ அப்பாகிட்ட சொல்லு..." 

"ம்க்கும்... நா சொன்னா கேட்டுட்டுத்தான் மறுவேலை பார்ப்பாரு... அவரு கொடுக்கிற செல்லத்துலதான் இவ இந்த ஆட்டம் போடுறா..." என்றவன் அவளை முறைத்தபடி வெளியேறினான்.

அவன் பின்னால் சென்றவள் "டேய்... நான் போகத்தான் போறேன் என்ன பண்ணுவே?" என்று அவனை வெறியேத்த "இருடி எவன் வீட்டுக்குப் போறேன்னு தெரிஞ்சிக்கிட்டு உன்னை பாத்துக்கிறேன்.." என்று கத்தினான்.

அவனைப் பார்த்து சிரித்தவள் "தம்பி காலேஸ் லீவு விட்டாச்சு... இனி பொங்க முடிஞ்சுதான்... அதுக்குள்ள நான் பொயிட்டு வந்து பழைய ஆளாயிடுவேன்... அப்புறம் என்னைத்தைக் கிழிக்கப் போறே... போ... போ... பொங்கலுக்கு சரக்கடிக்க உன்னோட பிரண்டோட பேசி சரி பண்ணு... சும்மா என்னோட வழியில கிராஸ் பண்ணிக்கிட்டு திரியாதே... மூக்கு உடஞ்சி போயிடும்..."

"ஆட்டமாடி போடுறே... பொம்பளப்புள்ளைய அடக்கம் ஒடுக்கமா இருக்கே... பெரிய படிப்பாளின்னு பேரை வாங்கி வச்சிக்கிட்டு ஆட்டம் போடுறே... நீ அவன் வீட்டுக்கு மட்டும் பொயிட்டு வா உனக்கு மட்டுமில்ல... அவனுக்கும் சேத்து இருக்குடி..."

அவனைப் பார்த்து சிரித்தபடி "அம்மா... நான் பொங்கலுக்கு போறேன்னு சொன்ன பிரண்ட் பேரு கேட்டியே... அவன் பேரு ராம்கி... அதாம்மா உங்க சீமந்தபுத்திரனை காப்பாத்தினானே அவன் வீட்டுக்குத்தான்..." என்று கத்தினாள்.

"என்னடி சொன்னே... அவன் வீட்டுக்கு எப்படி போறேன்னு பாக்குறேன்..."

'சைக்கிள்லதான்..." என்றதும் அவளை அடிக்க கையை ஓங்கினான்.

"ஐயோ... அம்மா அடிக்க வாறான்..." என்று கத்த, "டேய்... வயசுக்கு வந்த பிள்ளையை கையை நீட்டிக்கிட்டு... எதுக்குடா அவளை அடிக்கப் போறே... அவ பிரண்ட்ஸ் வீட்டுக்குப் போறதுக்கு கேக்குறா... நீ எங்க போறேன்னு சொல்லாமயில்ல போவே..." உள்ளேயிருந்து கேட்டபடி வியர்வையை சேலை முந்தானையில் துடைத்தபடி வந்தாள்.

"அம்மா அவ போறது ஒரு பய வீட்டுக்கு..."

"இருக்கட்டுமே... கூடப்படிக்கிறவன்தானே... அதுவும் உன்னய காப்பாத்துன பையன்... அவனை நானும் பாக்கணுமின்னு நினைச்சிருக்கேன்... ஒரு நாள் அவனை நம்ம வீட்டுக்கு வரச்சொல்லுடி..."

"சரிம்மா... கண்டிப்பா வரச்சொல்லுறேன்..."

"அம்மா.... என்னம்மா நீங்க... அவ ஆம்பளப்பய வீட்டுக்கு போறேங்கிறா... நீங்க என்னடான்னா கண்டிக்காம அவனை வீட்டுக்கும் கூட்டியாரச் சொல்றீங்க..."

"அதுக்கு என்னடா இப்ப... அவளைப்பத்தி எனக்குத் தெரியும்... எல்லார்கிட்டயும் ப்ரியா பழகுவா... அவங்க வீட்டுக்குப் போறதால என்ன வந்துருது... படிக்கும் போது கிடைக்கிற சின்னச் சின்ன சந்தோஷத்தை எல்லாம் அனுபவிச்சிக்கணும்... அதுபோக அங்க போகாதே இங்க போகாதேன்னு அவளை கட்டி வச்சாத்தான் எல்லாத் தப்பையும் பண்ணனுமின்னு நினைப்பா... சரி... அப்பா போகச் சொன்னா அவ பாட்டுக்குப் பொயிட்டு வரட்டும்... நீ உன்னோட வேலையைப் பாரு..."

"நல்ல ஆத்தா... நல்ல அப்பன்... இருக்கு உங்களுக்கெல்லாம் ஒரு நாள் ஆப்பு வப்பா... அப்பத்தான் நான் கத்துனது உங்களுக்கு உரைக்கும்... இருடி உன்னோட காட்டுல மழை பெய்யுது... எம்புட்டு நாள் பேயிதுன்னு பாக்குறேன்..." என்றபடி கிளம்பினான்.

"அவனுகிட்ட எதுக்குடி வாயைக் குடுத்துக்கிட்டு... ஆமா... அந்தப்பய நல்லவன்... அப்படி இப்படின்னு பேசினவன்... நீ அவன் வீட்டுக்கு போறேன்னு சொன்னதுக்கு இம்புட்டுக் குதிக்கிறானே... என்னாச்சு இவனுக்கு... அவனுகிட்ட சொல்லாதீங்கன்னு சொல்லிட்டு இன்னார் வீட்டுக்குத்தான் போறேன்னு எதுக்குடி நீ சொல்லித் தொலைச்சே... சரி அப்பா போகச் சொன்னா போ... ஆனா நம்ம குடும்பத்துக்குன்னு ஒரு பேர் இருக்கு... அதை மனசுல வச்சிக்க... அப்புறம் காலேசு திறந்ததும் அந்தப் பையனை நம்ம வீட்டுக்கு வரச்சொல்லு... நீ கூட்டியார வேண்டாம்... வைரவன்கிட்ட சொல்லி கூட்டியாரச் சொல்றேன்...." என்றாள்.

"ரொம்ப தாங்க்ஸ்ம்மா..." என்று அவளது கன்னத்தில் முத்தமிட்டவள் 'ஏய் ராம்...மாமியா மாப்பிள்ளையைப் பாக்கணுமாம்...' என்று முனங்கியபடி சந்தோஷமாக ஓடினாள். அவளது சந்தோஷம் புரியாவிட்டாலும் வைரவன் சத்தம் போடுவதில் ஏதோ இருப்பதாகப்பட பெத்த வயிற்றுக்குள் புளியைக் கரைத்தது.

(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

7 எண்ணங்கள்:

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
தொடர் கதையின் ஒவ்வொரு பகுதியும் நன்று தொடர வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கவியாழி சொன்னது…

'அம்மா கூடப்படிக்கிறதுல ஆணு பொண்ணுன்னு பிரிச்சா பழகமுடியும்..//ஆம் உண்மைதான் அதுவும் இன்றைய கிராமத்தில் ?

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

பெண்கள் நிம்மதியான வாழ்க்கை வாழும் வரை, பெற்றோர்களின் வயிற்றுக்குள் புளி கரைக்கும்தான். அருமை ஐயா. தொடர்கிறேன்

துரை செல்வராஜூ சொன்னது…

கதை நிகழ்வுகளை - அப்படியே கண் முன் நகர்த்தும் விதம் - அருமை!..
அன்பின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!.. அப்படியே, ராம் - புவனா இருவருக்கும்!..

Unknown சொன்னது…

பெத்த வயிற்றுக்குள் புளியைக் கரைத்தது.////ஹூம்..........!

சென்னை பித்தன் சொன்னது…

நிறையவே மிஸ் பண்ணி விட்டேன்;பிடித்து விடுகிறேன்!

அ.பாண்டியன் சொன்னது…

தொடரைப் படிக்கும் பொழுதே காட்சிகள் கண்களில் வந்து ஒட்டிக்கொள்கிறது. அழகான மொழிநடை. பெண்ணிற்கு சுதந்திரமும் கொடுத்து குடும்ப நிலையை கூறுவதும் சிறப்பு சகோதரரே.. பகிர்வுக்கு நன்றி..