முந்தைய பதிவுகளைப் படிக்க...
-----------------------------------------------------------------------
24. அண்ணன் வந்தாச்சு...
முன்கதைச் சுருக்கம்:
கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான். அக்காவுக்கு விருப்பமில்லாத மாப்பிள்ளையை பேசி வைத்திருக்கும் அம்மாவுடன் மல்லுக்கு நிற்கிறான். கல்லூரியில் வைரவனைத் தாக்க வந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக கெட்டபெயர் ஏற்படுகிறது. இதன் பின்னான நிகழ்வுகளில் புவனா தன் காதலை ராம்கியிடன் சொல்கிறாள். ஐயா வீட்டை தாங்கள் சந்திப்பதற்கு பயன்படுத்தி வந்தவர்கள் முதல்முறையாக பூங்காவிற்குச் சென்று நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.
இனி...
வீட்டு வாசலில் வைரவனின் பைக் நிற்பதைப் பார்த்ததும் ஒரு திடுக்கிடலுடன் சைக்கிளை விட்டு இறங்கிய புவனா, 'ஆஹா வில்லன் வந்தாச்சா..?' என்று நினைத்தபடி உள்ளே சென்றாள்.
"ஏன்டி உனக்கு எத்தனை தடவை சொல்றது... இருட்டுக்குள்ள வாராதேன்னு... நேரமாவே வான்னு சொன்னா எப்பவும் இப்படி இருட்டுலயே வர்றே..." என்ற அம்மாவிடம் "வந்தா என்னம்மா... எதுக்கு பயப்படுறே...?" என்றபடி சோபாவில் அமர்ந்தாள்.
"உனக்கென்னடி... நானுல்ல வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்கேன்..."
"போங்கம்மா... நெருப்பெல்லாம் கட்ட வேண்டாம்... இன்னும் பட்டிக்காடாவே இருந்துக்கிட்டு... காலத்துக்குத் தகுந்த மாதிரி மாறுங்கம்மா... நம்ம ரோட்ல வர்றதுக்கு என்னம்மா பயம்... ஆமா வைரவன் வந்துட்டானா?"
"எது சொன்னாலும் கேக்க மாட்டே... எல்லாம் உங்கப்பா கொடுக்கிற செல்லம்... ஆமா வந்துட்டான்.... அதுக்கு என்ன இப்போ... எதுக்குடா அவன் இப்போ வந்தான்னு கேக்குற மாதிரி கேக்குறே..?"
"இல்ல வாசல்ல வண்டியப் பார்த்தேன்... அதான் கேட்டேன்...".
"ம்... அது எங்கிட்டோ பொயிட்டு இப்பத்தான் வந்துச்சு. வரும்போதே கடுகடுன்னு வந்துச்சு... வாசல்ல வண்டிய வச்சிட்டு மறுபடியும் எங்கிட்டோ போயிருச்சு... எங்க வீட்ல தங்குறேங்குது... இனி எப்போ வருதோ...." என்று சொல்லியபடி அம்மா உள்ளே செல்ல எழுந்து நைட்டிக்கு மாறினாள்.
"ஆமா... சித்தி பொங்கலுக்குத்தானே அனுப்புறேன்னு சொன்னுச்சு... என்ன சீக்கிரம் வந்துட்டான்...?" கேள்வி கேட்டபடி அடுப்படிக்குள் நின்ற அம்மாவிடம் சென்றாள்.
"இதுக்கு அங்க இருக்க புடிக்கலையாம்... இங்க இருந்தா ஊர் சுத்தலாம்... அதான் அவகிட்ட சண்டை போட்டுக்கிட்டு ஓடியாந்திருச்சு... அவன் வந்ததுல உனக்கென்னடி அம்புட்டுக் கஷ்டம்... துருவித் துருவிக் கேக்குறே.... இந்தப் பாத்திரங்களை தேச்சுப் போடேன்..."
"போம்மா... இப்பத்தான் வந்தேன்.. களைப்பா இருக்கு..." என்றபடி அங்கிருந்து நகர, "ஆமாண்டி வெட்டி முறிச்சிட்டு வாறீங்க எல்லாரும்... நா மட்டுந்தான் வேலையில்லாம இருக்கேன்... போ.... டீவிக்கு முன்னால உக்காரு..." என்று சொன்னதை காதில் வாங்காமல் சோபாவில் அமர்ந்து டிவி பார்க்க ஆரம்பித்தாள்.
சிறிது நேரத்தில் வைரவன் வீட்டுக்குள் நுழைந்தான். இவளைப் பார்த்ததும் "இம்புட்டு நேரம் என்னடி பண்ணுனே..?" என்றான்.
"ம்... ஐயா வீட்டுக்குப் போனேன்... கொஞ்சம் வேலை... எதுக்கு சந்தேகமா கேக்குற மாதிரி கேக்குறே...?"
"உனக்கு தினமும் ஐயா வீடு போகணுமா..? எப்பவாவது போனா பத்ததா..?"
"நான் போறதால உனக்கென்ன பிரச்சினை?"
"எதுவும் பிரச்சினை வந்துடக்கூடாதுன்னுதான் கேக்குறேன்..."
"ஆஹா... நீங்க ரொம்ப ஒழுக்கசீலர் எங்களை கண்டிக்க வந்துட்டீக... போ... போய் உன்னோட வேலை என்னவோ அதைப் பாரு... சும்மா எம்பின்னாடியே வரிக்காரன் மாதிரி திரியாதே..."
"ரொம்ப பேசுறே... வீட்ல நீ என்ன சொன்னாலும் கேக்குறாங்கல்ல அதான் நீ ரொம்ப ஆடுறே.... இருக்கு... எனக்கு தெரிய வரட்டும் அன்னைக்கு இருக்கு உனக்கு கச்சேரி..."
"சீ... போ... அரியரை தூக்கப் பாரு... சும்மா எங்க போனே... யாரைப் பாத்தேன்னு கேட்டுக்கிட்டு..."
"பாப்போம்டி... எங்கிட்ட மாட்டாமயா போவே..""
இதுக்கு மேல இவன்கிட்ட பேசினா சரியா வராதுன்னு நினைத்தபடி "அம்மோவ்... இங்க பாருங்க இவனை..." என்று கத்தினாள்.
"டேய் வந்ததும் வராததுமா அவளுக்கிட்ட என்னடா சண்டை உனக்கு..." என்று உள்ளிருந்து குரல் வர "ஆமா அவளுக்கு செல்லங் கொடுத்து கெடுங்க... இரு நாளைக்கு எல்லாத்துக்கும் சேத்து வைக்கப்போறா...." என்றான்.
"அப்படி அவ என்னடா பண்ணுனா...?"
வைரவன் பதில் சொல்லும் முன் முந்திக் கொண்ட புவனா, " காலேசுக்குத்தானே பொயிட்டு வாறேன்... நா என்னமோ வீட்டுக்குத் தெரியாம சுத்திட்டு வாற மாதிரி கேள்வி கேக்குறான்... சந்தேகமா இருந்தா ஐயா வீட்டுக்கு போனடிச்சுக் கேளுங்க... அங்க புத்தக வேலை... அதான்.... இன்னைக்கு முடிஞ்சிருச்சு... நாளைக்கெல்லாம் நேரத்தோட வந்துருவேன்..."
"ஏன்டா... அவளைப் பத்தி எங்களுக்குத் தெரியும்... சும்மா அவளோட சண்டை போடாதே... ஆமா வண்டிய கொண்டாந்து வச்சிட்டு எங்க போனே..?"
"சும்மா... கோயில் பக்கம் பசங்க பேசிக்கிட்டு இருந்தாங்க... அங்க போயி பேசிக்கிட்டு இருந்துட்டு வாறேன்..."
"பொய்..." கத்தினாள் புவனா.
"என்ன நொய் உன்னோட வேலையைப் பாரு... வீட்டுல நம்புறாங்கன்னு குதிக்காதே.... உன்னோட களவாணித்தனத்தை சீக்கிரமே போட்டு உடைக்கிறேன்..."
"வவ்வே... போடா... போ..." என்று சொன்னவளைக் கடந்து போய் டிவிக்கு முன்னால் அமர்ந்தான்.
'சை... இன்னும் ரெண்டு மூணு நாளு சந்தோஷமா போயிருக்கும்.. சனியனாட்டம் வந்துட்டான்...' என்று முனங்கியபடி ஒரு கதைப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு அமர்ந்தாள்.
செவ்வாய்க்கிழமை...
தனது அண்ணனை சைக்கிளில் கூட்டிக் கொண்டு போனான் ராம்கி.
"படிப்பெல்லாம் எப்படிடா இருக்கு? நல்லா படிக்கிறியா?"
"ம்... நல்லா படிக்கிறேண்ணே..?"
"என்ன அம்மாவை எதுத்துப் பேசுறியாம்... காலேசு பொயிட்டோமுன்னா..."
"ஐய்யயோ... அதெல்லாம் இல்லண்ணே..."
"அதுதான் லெட்டர்ல விலாவாரியா எழுதியிருந்துச்சே...."
"அதெல்லாம் இல்லண்ணே... அக்காவை முத்து மச்சானுக்கு கட்ட வேண்டான்னு சொன்னது அம்மாவுக்குப் பிடிக்கலை..."
"ம்... அம்மா சொந்தம் விட்டுப் போகக்கூடாதுன்னு நினைக்கிது..."
"அதுக்காக ஊதாரிக்கு கட்டணுமா..?"
"ஏன்டா அவன் திருந்தமாட்டானா என்ன..."
"அப்ப நீயும் அம்மா பக்கம்தானா? அக்காவுக்கு ஆதரவா பேசுவேன்னு நினைச்சேன்..."
"இப்போ அம்மாவுக்கு ஆதரவா பேசலை... நானும் சிங்கப்பூர் போறதுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன்... கொஞ்சம் பணம் ரெடி பண்ணிக் கொடுத்துட்டு அப்புறம் அங்க போயி மாசாமாசம் அடைக்கிற மாதிரி பேசியிருக்கிறேன்.. பொங்கக் கழிச்சு கிளம்பிருவேன்... அப்படியே அங்கன அவனுக்கு ஒரு வேலையைப் பார்த்துட்டா அங்கிட்டு வந்து இருந்தான்னா திருந்திடுவான்...."
"ஆனா அக்கா..."
"சீதாக்கிட்ட பேசுறேன்... அப்பா இறந்ததும் மாமாதானே நமக்கு நல்லது கெட்டது எல்லாத்துக்கும் முன்னாடி நின்னு செஞ்சாரு... அம்மா மாமா வீட்டுக்கு அவ போனா நல்லாயிருப்பான்னு நினைக்கிது.. வயசுல எல்லாப் பயலுகளும் அப்படியிப்படித்தான் இருப்பாய்ங்க... எல்லாம் சரியாயிடும்... அவனை நாமதான் சரி பண்ணனும்.. மாமாகிட்ட கொஞ்ச நாள் கழிச்சு கல்யாணம் வச்சிக்கலாம்ன்னு சொல்லிட்டு அவனை சிங்கப்பூர் பக்கம் கொண்டு போயி ரெண்டு வருசம் போட்டா... தன்னால் சரியாயிருவான்... அப்புறம் கல்யாணத்தை பண்ணி வச்சா சீதாவும் சந்தோஷமா இருப்பா... சரி நான் அம்மாகிட்ட பேசுறேன்... இது விசயமா நீ யார்க்கிட்டயும் எதுவும் சொல்லிக்க வேண்டாம் சரியா..?"
"ம்..." என்றான் சுரத்தில்லாமல்.
"ஏம்ப்பா... நம்ம சீதை கல்யாண வெசயமா நீ என்ன நெனைக்கிறே...?" இரவு சாப்பிட்டு வாசலில் அமர்ந்திருந்த மூத்தவனிடம் கேட்டபடி அருகில் வந்து அமர்ந்து அவனது தலையை வாஞ்சையாய் தடவியபடி உக்கார்ந்தாள்
"அம்மா... பொங்கல் முடியட்டும்... மாமா வீட்டுக்குப் போயி பேசலாம்..."
"என்னடா இழுத்தாப்ல சொல்லுறே..?"
"இல்லம்மா... சீதா அவனைப் பிடிக்கலைன்னு சொல்றா... முதல்ல நா சிங்கப்பூரு பொயிட்டு அவனையும் அங்கிட்டு கூட்டிக்கிட்டு ரெண்டு வருசம் அங்கிட்டுத்தானே போட்டு ஆளாப் பேரா மாத்தியாந்து கட்டி வச்சா அவளும் சந்தோஷமா இருப்பா..."
"அதானே வரும்போதே அந்தக் கருவாப்பய நல்லா சொல்லிக்குடுத்து கூட்டியாந்திருப்பான்...?"
"சும்மா அவனைத் திட்டாதீங்க... அவன் இதைப் பத்தியே பேசலை... எதுவா இருந்தாலும் பொங்கல் முடிஞ்சதும் பேசலாம்..."
"இல்லடா... முத்தை சிங்கப்பூருப் பக்கம் அனுப்பிட்டா ரெண்டு வருசத்துக்கு இவளை வூட்ல வச்சிக்கிட்டு வவுத்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்கணுமுடா... கலியாணத்தை முடிச்ச்சிட்டு அவனை அங்கிட்டு கூட்டிக்கிட்டா என்ன... எதுக்கு சொல்லுறேன்னா நம்ம சவுந்திரம் மக இவ வயசுதான் ஓடிப்போயி ஒரு வருசமாச்சு... அதான்..."
"ஏம்மா... இப்படி பேசுறீங்க... சீதாவை யாரோட பேசுறீங்க... "
"அதுக்குச் சொல்லலைடா... வெளஞ்ச கதிர காலாகாலத்துல அறுத்தாத்தான்டா நெல்லு வூடு வந்து சேரும்..."
"சரி இப்ப இந்தப் பேச்சை விடுங்க... பொங்கல் முடிஞ்சதும் மாமாகிட்ட கலந்து பேசி நல்ல முடிவா எடுப்போம்...இங்க பாரு சீதா எதுவா இருந்தாலும் உன்னோட நல்லதுக்குத்தான் செய்வோம்... புரிஞ்சதா.... முகத்தை உம்முன்னு வச்சிக்கிட்டு திரியாம சந்தோஷமா இரு... பொங்கல் முடிஞ்சதும் பேசி ஒரு முடிவுக்கு வருவோம்..." என்றபடி எழுந்து துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு வெளியில் கிளம்பினான்.
'ஆமா தம்பி வந்துச்சின்னா வீட்ல இருக்காது... அந்த பாண்டிய பாக்காட்டி தூக்கம் வராது' என்று முனங்கியபடி "டேய்... சீக்கிரம் வந்துடு... ரொம்ப நேரம் உக்காந்துறாம..." என்றாள்.
"இப்ப வந்துடுவேன்.. ஒரு தலகாணிய மட்டும் எடுத்து கயித்துக் கட்டில்ல போட்டு வையிங்க... சரியா" என்றபடி கிளம்பினான்.
மறுநாள் மதியம்... வெயிலுக்குத் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு கையில் வயர்கூடையை பிடித்து நடந்து வந்த தபால்காரரைப் பார்த்ததும் "என்ன சாமி எப்படியிருக்கீங்க?" என்றான் ராம்கியின் அண்ணன் ராசு.
"அட வாப்பா ராசு.... எப்ப வந்தே..? நல்லாயிருக்கேன்... நீ எப்படியிருக்கே...?"
"நல்லாயிருக்கேன் சாமி... நேத்து வந்தேன்... "
"ம்... இந்தாப்பா... தம்பி காலேசு போனதும் நிறைய பொங்கல் வாழ்த்து வந்திருக்கு... எல்லாம் அவனுக்குத்தான்..." என்றபடி அவர் கொடுத்த வாழ்த்துக்களில் அனுப்பியவர் யாரென்று பார்த்துக் கொண்டே வந்தான். ஒரு வாழ்த்து மட்டும் சற்று வித்தியாசமாகத் தெரிய யாருடா என்று பார்த்தான். அனுப்பியவர் பெயர் இல்லை... கையெழுத்து யோசிக்க வைக்க, ஓரு ஓரமாக கிழித்து உள்ளிருந்து வாழ்த்து அட்டையை எடுத்துப் பிரிக்க அதில் அழகாக இருந்த இதயம் போன்ற பகுதிக்குள் அழகிய கையெழுத்தில் 'வித் லவ்... யுவர் புவி' என்று இருந்தது.
(சனிக்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.
11 எண்ணங்கள்:
இந்தப் பதிவிற்கான உங்கள் உழைப்பு என்னை அசர வைக்கிறது..
நாங்களும் தொடர்கிறோம்...
///வெளஞ்ச கதிர காலாகாலத்துல அறுத்தாத்தான்டா நெல்லு வூடு வந்து சேரும்..."///
அனுபவ வார்த்தைகள்.
அருமை. தொடருங்கள் நண்பரே, தொடரக் காத்திருக்கின்றேன்
நானும் அதேதான்...
ஒரு 10 லைன் டைப்பண்ணி பதிவாக்குவதே கடினம்...
ஒரு தொடர்களையை பொருமையாக பதிவிடுவதே.. இந்த தொடர்கதைக்கு கிடைக்க வெற்றி....
வாழ்த்துக்கள்...
தொய்வில்லாத நடை. ஆற்று நீரோட்டம் போல கதை செல்கின்றது. மகிழ்ச்சி!..
ம்................மாட்டிக்கப் போறாங்களோ?
அருமையான நடை நண்பரே.. அனுபவ வார்த்தைகளும் ஆங்காங்கே சேர்ந்து கொண்டு வலுச்சேர்க்கிறது.உயிரோட்டமாய் கதை நகர்கிறது. முழு கதையும் படிக்க வேண்டும். அவ்வப்பொழுது வந்து படிப்பேன்.
வாங்க கருண்...
அப்படியெல்லாம் இல்லை நண்பரே... எதோ எழுதலாம் என்ற ஆர்வம்தான்...
வாங்க மனோ அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஜெயக்குமார் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சௌந்தர்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சகோ. யோகராஜா...
மாட்டிக்க விட்டுறமாட்டோமுல்ல...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க துரை அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க பாண்டியன்...
தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கருத்துரையிடுக