பைத்தியங்களை கடவுளின் குழந்தைகள் என்பார்கள். ஆமாம் அவர்கள் கடவுளின் குழந்தைகள் தான். சோகம்... சுகம்... துக்கம்... சந்தோஷம் என எத்தனையோ விஷயங்களை மறந்து அவர்களுக்கென இருக்கும் தனி உலகத்தில் சஞ்சாரிப்பதால் அவர்கள் கடவுளின் குழந்தைகள்தான் என்று நாமும் நமக்குள்ளேயே சொல்லிக் கொள்வோம். உண்மையில் அவர்கள் கடவுளின் குழந்தைகளா... ?
வீட்டில் யாராவது எதற்காகவாவது அடம்பிடித்து அழுதாலோ... நண்பர்கள் எதையாவது திரும்பத் திரும்ப பேசினாலோ என்ன பைத்தியம் மாதிரி பேசுகிறாய் என்போம். பெரியவர்கள் வீட்டில் தொந்தரவாக இருந்தால் அது கெடக்கு பைத்தியம் என்போம். நடிகையின் மீதோ நடிகையின் மீதோ தீவிரமான பற்று வைத்திருப்பவனையும் பைத்தியம் என்போம். காதலில் விழுந்தவர்கள் கூட அவனை/அவளை பார்க்காமல் பைத்தியம் பிடித்தது மாதிரி இருக்கிறது என்பார்கள். ஆக பைத்தியம் பிடிக்கிறதோ இல்லையோ அந்த வார்த்தை எல்லாருக்குள்ளும் இருக்கத்தான் செய்கிறது.
நாங்கள் படிக்கும் போது வெளிமாநிலத்தில் இருந்து ராமேஸ்வரம் போகும் வழியில் தேவகோட்டையில் பைத்தியம் பிடித்தவர்களை இறக்கிவிட்டுச் சென்றுவிடுவார்கள். அவர்களும் வயிற்றுப் பாட்டுக்காக பிச்சை எடுத்து சாப்பிடுவார்கள். கடைக்கு கடை கையேந்தி நின்று அவர்களின் வசவுகளை வாங்கி வாழ்க்கை நடத்தியிருக்கிறார்கள். இப்பொழுதும் அப்படி கொண்டு வந்து விடுகிறார்களா தெரியவில்லை... இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால் ஒரு சிலர் வாகனங்களில் அடிபட்டு செத்துப் போய்விடுவார்கள் அனாதையாக...
சின்ன வயதில் ஒருவர் எங்க ஊர்ப்பக்கம் எல்லாம் வருவார். பேண்ட் போட்டு ஒரு காலை மடித்து விட்டிருப்பார். சட்டையை ஒழுங்கில்லாமல் போட்டிருப்பார். கோவிலுக்கு அருகில் வந்து உட்கார்ந்திருப்பார். அவருக்கு ஒரு பெயர் வைத்து அழைப்போம்... அந்தப் பெயர் ஞாபகத்தில் இல்லை... ஆங்கிலம் சரளமாகப் பேசுவார். எது கொடுத்தாலும் சிநேகமாய் வாங்கிச் சாப்பிடுவார். அப்ப இவரு ஏரோப்பிளேன்னுல இருந்து விழுந்ததால இப்படி ஆயிட்டாராம்ன்னு ஒரு கதை சொல்லுவாங்க... நம்புறது வயசுங்கிறதால அப்படியே நம்பினோம். அடிக்கடி வருவாரு... அப்புறம் வருவதில்லை. கடவுள் அழைத்துச் சென்றுவிட்டாரோ அல்லது காணாமல் போய்விட்டாரோ தெரியவில்லை.
இன்னொருத்தர் எங்க தூரத்துச் சொந்தம்... அப்பவே எம்.எஸ்.ஸி கணிதம் படித்தவர். குடும்ப பிரச்சினையின் காரணமாக பைத்தியம் ஆகிவிட்டார். சில நாட்கள் நல்லா இருப்பார்... சில நாட்கள் உக்கிரமாக இருப்பார்... அமாவாசை வந்தால் இப்படி ஆயிடுவார் என்பார்கள். எப்படிப்பட்ட கணக்கா இருந்தாலும் அழகாக சொல்லிக் கொடுப்பார். அவருக்கும் திருமணமாகி குடும்பம் குழந்தைகள் எல்லாம் இருந்தது... வீட்டில் அதிகம் தங்கமாட்டார்... ஊரெல்லாம் சுற்றுவார்.... இறந்துவிட்டதாக கேள்விப்பட்டேன்.
எங்கள் பங்காளி வீட்டில் ஐயா ஒருவர் எல்லாரிடமும் நல்ல பேர் வாங்கி வாழ்ந்து வந்தார். என்ன பேராண்டி என்று சொல்வதைத் தவிர வேறெதுவும் சொல்லமாட்டார். திடீரென அவரது செய்கைகளில் மாற்றம் வந்தது. ஒரு அருவாளைத் தூக்கி வைத்துக் கொண்டு மாட்டுக்கு தண்ணிவைக்கும் தொட்டிக்கல்லில் அமர்ந்து கொண்டு யாரையாவது திட்டிக்கொண்டே இருப்பார். அவரது மைத்துனர்கள் அவருக்கு மருத்துவம் செய்ய நினைத்து சில ஆட்களுடன் காரில் வந்து அவரைப் பிடிக்க முயற்சித்தால் அருவாளைத் தூக்கிக் கொண்டு அவர்களை எதிர்த்தார். அவரை ஒரு சந்துக்குள் செல்ல வைத்து இரு புறமும் ஆட்கள் வந்து ஒரு வழியாக அவரை மடக்கிப் பிடித்து கொண்டு சென்றார்கள். பின்னர் சில நாட்களில் அவரை கொண்டு வந்து விட்டார்கள். மீண்டும் பழைய நிலையில் அவரைப் பார்த்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி... ஆனால் அது நீடிக்கவில்லை... மீண்டும் வேதாளம் முருக்கை மரம் ஏறியது... இந்த முறை அருவாள் மட்டுமின்றி நாலு ஐந்து நாள் சாப்பாடு உறக்கம் எல்லாம் துறக்க ஆரம்பித்தார். அவரது குடும்பம் அப்படியே அவருடன் வாழ பழகிவிட்டது. ஆனால் சில வருடங்களுக்கு முன்னர் திடீரென உயிரிழந்தார்.
கல்லூரியில் என்னுடன் படித்த கிறிஸ்தவ நண்பன் மூன்றாம் வருடம் படிக்கும் போது திடீரென என்னென்னவோ பேச ஆரம்பித்தான். அவர்களும் நிறைய மருத்துவரைப் பார்த்தார்கள். நாங்களும் கல்லூரிக்கு அருகில் அவனது வீடு என்பதால் பெரும்பாலான நேரங்களில் அவனுடன் இருக்க ஆரம்பித்தோம். நாங்கள் இருந்தால் சாப்பிடுவான். அவனது அம்மாவும் நீங்க வந்தாத்தாம்பா பேசுறான்... சாப்பிடுறான்... இல்லைன்னா எதையோ வெறிச்சுப் பார்த்துக்கிட்டு என்னமோ பேசுறான்னு அழுவார்கள். எங்களுடன் ரொம்ப நன்றாக பேசிக் கொண்டிருப்பான். திடீரென எதாவது பேச ஆரம்பிப்பான். அவன் சொல்லும் கதைகள் எல்லாம் பெங்களூரையே சுற்றி வரும். அவன் பள்ளிப் படிப்பை பெங்களூரில் படித்தவன் என்பதால் அங்கு பயந்திருக்கக் கூடுமோ என்று சந்தேகப்பட்டு அங்கெல்லாம் அனுப்பி வைத்துப் பார்த்தார்கள். நாங்களும் எங்கள் துறையில் பேசி அவனுக்கு ஒரு செமஸ்டர் முழுவதும் கல்லூரிக்கு வராமல் பரிட்சை மட்டும் எழுத அனுமதி வாங்கினோம். அப்புறம் அடுத்த செமஸ்டரில் கல்லூரிக்கு கூட்டி வந்தோம். வகுப்பில் இருக்கும் போது திடீரென சப்தமாக பேச ஆரம்பிப்பான். அவனுக்கு அருகில் இருந்த ராமகிருஷ்ணன் அவனை சமாதானம் செய்து அமர வைப்பான். இப்படி இருந்தவன் பின்னர் சரியாகி இப்போது குடும்பத்துடன் பெங்களூரிலேயே செட்டிலாகிவிட்டான் என்று கேள்விப்பட்டேன்.
எங்கள் ஊரில் இருந்து பக்கத்து ஊரில் வாக்கப்பட்ட ஒரு அக்கா, கணவன் மகன்கள் என்று சந்தோஷமாக வாழ்ந்த போதும் அடிக்கடி மனநிலை மாற்றம் வந்து எங்க ஊருக்கு வந்துடுவார். எதாவது பேசுவார்.... டேய் அது பைத்தியம்டா அதுக்கிட்ட போகாதீங்க எதாவது பேசும் என்பார்கள்... ஒரு சில நாள் நமக்கு எதிரே அந்த அக்கா வரும்போது உள்ளே உதறல் எடுக்கும்... என்னடா முறைச்சுப் பார்க்கிறே... திமிரான்னு கோவமா கேட்டபடி முறைக்க ஆரம்பிச்சா நாம அங்க புடிக்கிற ஓட்டம்தான்.... வீட்டுக்கு வந்துதான் நிக்கிறது. ஒருசில நாள் 'என்னடா செவாமி அக்கா மகனே... அயித்தைன்னு கூட சொல்ல மாட்டேங்கிறே.... உங்கப்பா ஆத்தான்னு வாய் நிறைய கூப்பிடும்ன்னு...' சொல்லிக்கிட்டே போகும்.
தேவகோட்டையில் ஒருவர் வெள்ளைக்காகிதங்களில் படங்களை வரைந்து தோளில் தொங்கும் அழுக்கடைந்த சோல்னாப்பையில் சேகரித்து வைத்திருப்பார். இன்னொருவரோ சற்று வித்தியாசமாக செங்கலை எடுத்து தேய்த்துத் தேய்த்து அவர் இருக்கும் இடத்தில் தூளாக சேகரித்து வைத்திருப்பர். மற்றொருவரோ கரித்துண்டால் சுவர்களில் படம் வரைவார். இப்படி எத்தனையோ பேர் கடவுளின் குழந்தைகளாக திரிந்ததை நான் பார்த்திருக்கிறேன்.
ஆனால் இவர்கள் எல்லாம் என்ன தவறு செய்தார்கள்... எங்கயோ பைத்தியம் பிடித்த ஒருவரை பாஷை தெரியாத ஒரு இடத்தில் கொண்டு வந்து இறக்கிவிட்டு விட்டு புண்ணியஸ்தலம் போகும் மனிதர்கள் என்ன புண்ணியத்தை வாங்கிக் கட்டிக்கொள்ளப் போகிறார்கள். பிச்சை எடுத்தும்... சாக்கடைத் தண்ணீரைக் குடித்தும் வாழ்ந்து ஒரு நாள் இயற்கையாகவோ அல்லது வாகனங்களில் அடிபட்டோ இறக்கும் போது அநாதைகளாக அரசுப் பொது மருத்துவமனை பிரேதக் கூடத்தில் கிடத்தப்பட்டு பின்னர் யாரோ ஒருவரால் எரிக்கப்பட்டு அழிந்து போகிறார்கள்...
ஆமா இவர்கள் எல்லாம் உண்மையிலேயே கடவுளின் குழந்தைகளா?
-மீண்டும் மற்றொரு தலைப்பில் பேசுவோம்....
-'பரிவை' சே.குமார்.
10 எண்ணங்கள்:
இப்போ எங்க ஊரிலும் இதே போல ஒருவர் ஆகி விட்டார் நல்லா இருந்த மனிதன் இப்போ இப்படி ஆகி விட்டார்
பைத்தியம் என்ற சொல் வன்மையானது. கடவுளின் குழந்தைகள் என ஏன் சொல்கின்றார்களோ. ஆனால் உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் மனப் பிறழ்வுகள் வெவ்வேறு அளவில் இருக்கு. சிலருக்கு வெளியே தெரியும், சிலருக்கு தெரியாது, சிலருக்கு எப்போதாவது, சிலருக்கு எப்போதுமே. மனித மூளை பச்சைக் களிமண் போன்றது கொஞ்சம் பிசகினாலும் பிழைத்துவிடும். பிசகாமல் பார்த்துக் கொள்வதிலே வெற்றி. தினம் தினம் லட்சம் பேர் மதுச்சாலைகளிலும், திரையரங்குகளிலும், இன்ன பிற கேளிக்கைகளிலும், பெண்களைத் தேடியும், பணத்தை தேடியும், மதங்களை, அரசியலை, கோவிலை எனத் தேடிப் போவதேன் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு பைத்தியம் ஒளிந்திருக்கின்றது.
எங்கள் ஊரிலும் இவர்களை போன்றவர்களைப் பார்க்கும் போது மிகவும் மனது கஷ்டப்படும்.
இவர்களை யாராவது காப்பகத்தில் கொண்டு விட்டால் என்ன என்று நினைப்பேன்.
நானும் இதுமாதிரி கடவுளர்களின் குழந்தைகளைச் சந்தித்திருக்கிறேன். கனக்கும் மனம்.
வாங்க சக்கரக்கட்டி...
இப்படி ஆவதால் அவருக்கு மட்டுமின்றி அவரது குடும்பத்துக்கே கஷ்டமல்லவா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க நிரஞ்சன்...
உங்கள் கருத்துக்கள் உண்மைதான்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க கோமதி அக்கா...
நிறையப் பேரை ரோட்டில் கொண்டு வந்து விட்டுச் செல்கிறார்கள்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஸ்ரீராம்...
உண்மைதான்... மனம் வலிக்கத்தான் செய்கிறது.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
மிகவும் உண்மை தம்பி..வருத்தமான பல உண்மைகளைப் பகிர்ந்திருக்கிறாய். சகோதரர்@நிரஞ்சன் தம்பி அவர்களின் கருத்துதான் எம்முடைய கருத்தும். நாம் அனைவருமே ஒவ்வொரு விதத்தில் மனம் பிறண்டவர்கள்தாம். :) நம் கட்டுப்பாட்டில் மனம் இருக்கும்வரை, மனம் கட்டுப்பாட்டைத்தாண்டி சென்றவர்களை மனதிற்குத் தோன்றியதைக்கூறி அழைக்கிறோம் அவ்வளவே..
பெரிதாக மூச்சு விடுவதைத் தவிர எதுவும் தோன்றவில்லை.கனக்கிறது மனசு,ஹூம்!!!
கருத்துரையிடுக