சூர்யா படம் வரைக்கும் வந்தாகி விட்டது.. தெலுங்கு சினிமாவிலும் முன்னணி இடம்... சமந்தாவின் வளர்ச்சி ஆச்சரியமாக இருக்கே....?
யாருக்கு எந்த சான்ஸ் கிடைக்கும் என்று யாருக்கும் தெரியாது. அதுதான் சினிமாவின் அழகு. நினைத்த இடம்தான் கிடைக்க வேண்டும் என்று நினைத்தால் அது நிச்சயம் கை கூடி வராது. எந்த மொழி சினிமாவாக இருந்தாலும் திறமைதான் முதலிடத்தில் நிற்கும். ஆரம்பத்தில் கதைக்காக ஒரு படம் ஹிட் ஆகலாம். ஹீரோவுக்காக ஒரு படம் ஒடலாம். ஆனால் அதை மட்டுமே வைத்துக் கொண்டு பயணிக்க முடியாது.
எந்த வகையான கதையாக இருந்தாலும், சின்ன சின்ன ஸ்பரிசங்களில் ஹீரோயின் கவர வேண்டும். எல்லோருக்கும் ஒரு நேரம் வரும். அந்த நேரம் முன்னணி இடமாக இப்போது என் பக்கத்தில் இருக்கிறது. சினிமாவில் சில கணிப்புகள் தவறலாம். சில கணிப்புகள் நம் ஆச்சரியப்படுகிற அளவுக்கு நினைக்காத இடத்தில் போய் நம்மை வைக்கலாம். என்னிடம் இருந்த சின்ன சின்ன தவறுகளை திருத்திக் கொண்டு விட்டேன். இனி எல்லாம் நல்ல விதமாக இருக்கும். எனக்கு கிடைத்த கதைகளும், இயக்குநர்களும்தான் என்னை இந்த இடத்துக்கு கொண்டு வந்திருக்கிறரர்கள். இந்த இடத்தில் அவர்களுக்கு நன்றி சொல்லியாக வேண்டும்.
நஸ்ரியா, அஸ்ரிதா ஷெட்டி, இஷா தல்வார்ன்னு ஒவ்வொருத்தருக்கும் முதல் படத்திலேயே அடையாளம்.... இன்னும் நிறைய பேர் வந்து கொண்டே இருக்கிறார்கள்... ஆனால் உங்களிடம்தான் நம்பர் ஒன் இடம் இருப்பதாக பேச்சு.. எப்படியிருக்கிறது இந்த ஃபீல்...?
இதற்கு நான் நேர்மையாக பதில் சொல்லியாக வேண்டும். "மாஸ்கோவின் காவிரி' நடித்து விட்டு காத்திருந்தபோது, இன்னும் ஆறு மாதங்கள் கூட சினிமாவில் இருக்க மாட்டேன் என்றுதான் தோன்றியது. ஆனால் இப்போது இருக்கிற இடம்.. நினைத்துக் கூட பார்க்கவில்லை. அதுவும் ரசிகர்களுக்கு என்னை எப்படி பிடித்ததென்று இப்போது வரைக்கும் தெரியவில்லை. இந்த நிமிடம் வரைக்கும் சினிமாவில் எந்த எதிர்கால திட்டமும் இல்லை. ஒவ்வொரு நாளையும், சினிமாவுக்கு வந்த முதல் நாள் போல்தான் பார்க்கிறேன்.
ஷூட்டிங் ஆர்வம் இருக்கிற வரைக்கும் சினிமாவில் இருப்பேன். அதன் பின் எந்த இடத்தில் இருப்பேன் என்று எனக்கேத் தெரியாது. முதல் படம் ரிலீசான போது இருந்த பதற்றம் பத்து வருடங்கள் கழித்து இப்போதும் இருக்கிறதென, பத்து வருட சினிமா அனுபவம் பற்றி த்ரிஷா பதில் சொல்லியிருந்தார். அதுதான் உண்மை. "மாஸ்கோவின் காவேரி', "பாணா காத்தாடி' ஆரம்பித்து "நீதானே என் பொன் வசந்தம்' வரைக்கும் இப்படித்தான் இருந்திருக்கிறேன்.
நிச்சயமாக முதல், முன்னணி இடங்களில் எல்லாம் நம்பிக்கை இல்லை. அதற்காக எந்த உழைப்பையும் தனியாக செய்யவில்லை. வித்தியாசமான கேரக்டர்கள் கிடைத்தால் ஒரு நடிகை எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் சினிமாவில் இருக்காலம். ஒரு நடிகைக்கான இமேஜ்தான் அவரை எத்தனை வருடம் சினிமாவில் இருக்க வேண்டும் என தீர்மானிக்கிறது. எனக்கான இடத்தை யார் வேண்டுமானாலும் பிடிக்கலாம். அவர்களுக்கு என் வாழ்த்து.
வந்தவர்களில் யாரையெல்லாம் பிடித்தது..?
எல்லோரும் நன்றாகவே நடிக்கிறார்கள். முழுப் படம் பார்த்து வெகு நாள்களாகி விட்டது. சின்ன சின்ன க்ளிப்ங்க்ஸ்தான் பார்த்தேன். அந்த சின்ன சின்ன நிமிடங்களில் கூட, நிறைய பேர் கவர்ந்திழுத்தார்கள். "அட்டக்கத்தி' நந்திதா, "உதயம்' அஸ்ரிதா ஷெட்டி, "வழக்கு எண்' மனிஷா, நஸ்ரியா நல்லா அழாக இருந்தாங்க... சிம்ரன், ஜோதிகா இடங்கள் எல்லாம் இன்னும் காலியாகத்தான் இருக்கிறது. த்ரிஷாவுக்கு ரீ ப்ளேஸ் மெண்ட் யாரு....? அதனால் யார் வேண்டுமானாலும் எந்த இடத்துக்கும் போட்டி போடலாம். ப்ளீஸ் என் கூடேயும் போட்டி போடுங்க....
"நீதானே பொன் வசந்தம்' தவிர... வேறு எந்த படங்களிலும் பளீரென்ற நடிப்பு வரவில்லையே...?
நான் காரணம் கிடையாது. என் படத்தின் இயக்குநர்களிடம்தான் இதைக் கேட்க வேண்டும். எல்லா இடங்களிலும் இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் ஆச்சரியப்படுகிற அளவுக்கு இதுவரை எதுவும் வரவில்லை. "நீதானே என் பொன் வசந்தம்' படத்தில் கூட அதிகமாக நடிப்பு வெளிப்பட்டு விட்டதாக விமர்சனங்கள்... ஆனால் அந்தப் படம் நிச்சயம் என் சினிமா கேரியரில் மறக்க முடியாத படமாக இருக்கும்.
ஹீரோக்களை முன்னிறுத்தி வரும் கதைகள் இப்போது குறைந்து விட்டன. தமிழ் சினிமாக்களில் ஹீரோயின்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நல்ல சினிமாவில் நிச்சயம் நல்ல நடிப்பு இருக்கும். பெரிய ஹீரோ, பெரிய இயக்குநர் இதையெல்லாம் தாண்டி நல்ல கேரக்டரைத்தான் விரும்புகிறேன். அதனால் நிச்சயம் அந்தக் குறை தீரும்.
அனுஷ்கா, இலியானா, காஜல், ஹன்சிகா, சமந்தா... இப்படி சில பேர்தான் முதல் வரிசையில் போட்டியில் இருக்கீங்க... உங்கள் எதிர்கால சினிமா திட்டம் என்ன...?
எல்லா இடங்களிலும் இருக்க வேண்டும். நல்ல கதைகளும், இயக்குநர்களும்தான் அதை தீர்மானிக்க வேண்டும். அனுஷ்காவுக்குக் கிடைத்த இடம் பெரியது. உண்மையில் அனுஷ்காவை "வானம்' படத்தில் பார்த்த போது, அத்தனை அதிர்ச்சி. அத்தனை பெரிய இடம் இருந்தாலும், எனக்கு கேரக்டர்தான் முக்கியமென்று நடித்திருந்தார். அப்படி ஒரு கேரக்டருக்கு என்னை அழைத்திருந்தால், நான் நடித்திருப்பேனா...? என்று தெரியவில்லை.
அனுஷ்கா எல்லோருக்கும் நல்ல ரோல் மாடல். எந்த கேரக்டரிலும் பொருந்துவதுதான் நடிகைக்கு அழகு. எப்படிப்பட்ட கேரக்டர் வந்தாலும், நிச்சயம் ப்ளஸ், மைனஸ் பார்த்து நடிக்கத் தயாரக இருக்கிறேன். எந்த ஒரு தனிப்பட்ட இமேஜுக்குள்ளும் சிக்காமல் சினிமாவில் இருக்க ஆசை. அதுதான் திட்டமும் கூட.
கல்யாண வாழ்க்கையில் நம்பிக்கை இல்லையென்று... ஆண்ட்ரியா, டாப்ஸி...எல்லாம் சொல்லுகிறார்கள்.... நீங்க இந்த விஷயத்தில் எப்படி...?
அது ரொம்பவே சுவராஸ்யமானது. வாழ்க்கை முழுவதும் ஒருவருடன் வாழ வேண்டி வரும். ஆனால் நிச்சயம் அதில் சலிப்பு வரக் கூடாது. சினிமாவில் இப்படிப் பேசுகிறவர்கள் அதிகம் இருக்கிறார்கள். இயல்பான ஒரு வாழ்க்கையில் சந்தோஷமான தருணங்களைத்தான் எல்லோரும் விரும்புவார்கள். நானும் அப்படித்தான். யாரிடமாவது நம்பிக்கை வேண்டும். அந்த ஆள் கிடைக்கும் போதுதான் கல்யாண வாழ்க்கை இனிக்கும். அப்படியான ஆள் வரும் போது, கல்யாண வாழ்க்கைக்குள் போய் விடுவேன்.
சில உணர்வுபூர்வமான உறவுகளில் சமந்தாவுக்கு இடம் உண்டென சித்தார்த் பேசினாரே....? உங்களுக்கும் அவருக்கும் கூட காதல்...?
சித்தார்த் நல்ல ஃப்ரெண்ட். சினிமாவில் எனக்கு பொருத்தமான ஹீரோ. அதற்கு மேல் எதுவும் இல்லை. இதுதான் உண்மை. இந்த விஷயத்தை நீங்க நம்பியே ஆக வேண்டும். ஆனால் இன்னொரு விஷயம். சமந்தா லவ் பண்றா. அது யார்...? என்பதில் சஸ்பென்ஸ். இன்னும் மூன்று வருடங்கள் கழித்து நிச்சயம் நல்ல செய்தி வரும்.
இயல்பான அழகு...
வார்த்தைக்கு வார்த்தை தெளிவு...
அணுகுமுறையில் சிநேகம்...
சமந்தா எப்போதுமே
சமத்துப் பொண்ணு.
-நன்றி : தினமணி சினிமா எக்ஸ்பிரஸ்
-'பரிவை' சே.குமார்.
1 எண்ணங்கள்:
பின்ன,சமர்த்தா இருக்கிறதால தானே உண்மை?!யெல்லாம் போட்டு ஓடைச்சிருக்கா?ஹ!ஹ!!ஹா!!!
கருத்துரையிடுக