(சில தவிர்க்க முடியாத வேலைகளால் புதன்கிழமை பதிவிடமுடியவில்லை)
முந்தைய பதிவுகளைப் படிக்க...
11. ஊடலுக்குப் பின் நட்பு
முன்கதைச் சுருக்கம்.
கல்லூரிக்குப் போகும் கிராமத்து மாணவனான ராம்கி, அங்கு புவனாவுடனான சந்திப்புக்குப் பின்னர் அவளை மனசுக்குள் விரும்புகிறான். புவனாவோ கல்லூரியின் முக்கிய ரவுடியான வைரவனின் தங்கை என்று தெரியவர சற்றே யோசிக்கிறான். இந்ந்iலையில் வைரவன் வேறு கல்லூரிக்குள் அவளிடம் பேசாதே என்று சொல்லி வைக்கிறான். அதனால் அவளுடன் பேசுவதை தவிர்த்து வருகிறான். இதனிடையே அவனது அம்மா, தனது அண்ணனின் மகனான ஊதாரி முத்துவுக்கு மகளைக் கட்ட வைக்க நினைக்கிறார். ராம்கி எதிர்க்கிறான். ராம்கியின் மச்சானான சேகருக்கும் சேகரின் அத்தை மகளுக்கும் காதல் என்ற வதந்தியும் ஊருக்குள் பரவிவருகிறது. அதனால் சேகருடன் சுற்றுவதற்கு அம்மா கோபப்படுகிறாள்.சேகரோ அப்படியெல்லாம் இல்லை என்றும் நீயும் காதலில் விழுகாதே அது உன் கனவுகளை அழித்துவிடும் என்றும் அட்வைஸ் பண்ணுகிறான்.
இனி...
நாட்கள் நகர ஆரம்பிக்க, வைரவனுக்குப் பயந்து புவனாவைப் பார்ப்பதைத் தவிர்த்து வந்தான். இந்நிலையில் காரைக்குடிக்கு போட்டிக்குச் செல்லும் நாளும் வந்தது. ராம்கி போட்டியில் கலந்து கொள்ளும் சில நண்பர்களுடன் பேருந்தில் கிளம்பி விழா நடைபெறும் மண்டபத்திற்குச் சென்றான். சிறிது நேரம் கழித்து புவனா சில பெண்களுடன் வந்து சேர்ந்தாள். ராம்கியிடம் எதுவும் பேசாமல் தனியாக போய் அமர்ந்து கொண்டாள். ராம்கிக்கு கஷ்டமாக இருந்தது.
அவளருகில் சென்று "சாரி... பஸ்ஸ்டாண்டுல காத்திருந்தோம்... உங்களை எல்லாம் காணோம்... அதான் வந்துட்டோம்..."
"நான் இப்ப உங்ககிட்ட கேட்கலையே... யாரும் எங்கிட்ட எதுவும் சொல்லத் தேவையில்லை..."
"இல்ல... அது.."
"டீ... வாடி அங்கிட்டுப் போய் இருப்போம்... அவங்க அவங்க பாட்டுக்கு வந்தோம்... அவங்க அவங்க பாட்டுக்கு போட்டியில கலந்துக்கிட்டு போய்க்கிட்டே இருப்போம்... யாரைப் பத்தியும் நமக்குத் தேவையில்லை..." என்றபடி கொஞ்சம் தள்ளிப்போய் அமர, ராம்கி பேசாமல் அங்கிருந்து நகர்ந்து மீண்டும் நண்பர்களுடன் கலந்துவிட்டான்.
போட்டிகள் ஆரம்பித்தாலும் கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் மதியம்தான் என்றும் எல்லாருக்கும் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால் யாரும் வெளியில் சென்று சாப்பிடவேண்டாம் என்று போட்டியின் அமைப்பாளர் அறிவித்ததும் மற்ற கல்லூரி மாணவர்கள் எல்லாம் மதியம்தானாம் என்று வெளியில் கிளம்ப, ராம்கியும் மற்ற மாணவர்களும் அருகில் இருக்கும் தியேட்டரில் படம் பார்க்கப் போகலாம் என்று முடிவெடுத்தனர். ராம்கிக்கு புவனாவிடம் கேட்கப் பயம்... ஆனால் அவளை விட்டுட்டுச் செல்லவும் மனமில்லை... கோபித்துக் கொண்டு அமர்ந்திருந்தாலும் அவளைப் பார்த்துக் கொண்டு இருப்பதே சந்தோஷமாக இருந்தது. மற்றவர்கள் அழைத்து செல்லாமல் இருந்தாலும் பிரச்சினை... ஒருவனிடம் பெண்களும் வருகிறார்களா என்று கேட்கச் சொன்னான். அவன் போய் கேட்டதற்கு நாங்கள் வரவில்லை என்று பதில் வந்தது. எனவே மாணவர்கள் மட்டும் கிளம்பினர். ராம்கி போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள் புவனா.
தியேட்டரில் கூட்டமாய் இருந்தது... டிக்கெட் எடுக்க காத்திருந்த போது மாணவிகளும் வந்து சேர்ந்தார்கள்... புவனாவைப் பார்த்ததும் ராம்கிக்கு மனசு சந்தோஷமானது. எல்லாருக்கும் டிக்கெட் எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தார்கள். இடம் தேடி அமரும் போது படியில் தடுக்கி விழப்போன புவனா ஆதரவுக்காக அருகில் நின்ற தோளில் கைவைத்து முகத்தைப் பார்த்தவள் அது ராம்கி என்று தெரிந்ததும் சாரி என்று சொல்லி படக்கென்று கையை எடுத்துக் கொண்டாள்.
அமரும் போதும் வரிசையாக நண்பர்கள் அமர ராம்கிதான் கடைசி அவனுக்கு அருகிலிருந்த இருக்கையில் புவனா அமர அவளைத் தொடர்ந்து தோழிகள் அமர்ந்தனர். ஆனால் ராம்கி பக்கம் திரும்பாமல் கைபடாமலும் இருந்தாள். 'பேசாம இருக்கிறதுக்கு எதுக்கு எங்கிட்ட உக்காரணும்... தள்ளிப்போயி உக்கார வேண்டியதுதானே' என்று ராம்கி மனசுக்குள் நினைத்துக் கொண்டான். அதே நேரம் 'உனக்கு அருகில் என்னைத் தவிர எவளையும் உக்கார விடமாட்டேன்' என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள் புவனா.
படம் ஆரம்பித்த சிறிது நேரத்தில் ராம்கி மெதுவாகக் குனிந்து 'சாரி... உங்க அண்ணனுக்குப் பயந்துதான் உங்ககிட்டப் பேசலை... இன்னைக்கு அதனாலதான் ரொம்ப நேரம் வெயிட் பண்ணலை... அது போக செகண்ட் இயர் பசங்களும் வந்தாங்க... அதனால..."
"அப்பவே சொல்லிட்டேனே... நான் கேட்கலைன்னு..."
"கோபம் நியாயந்தான்... ஆனா இதுதான் உண்மை... இந்த மஞ்சள் தாவணி ரொம்ப நல்லாயிருக்கு..."
"என்னைய வர்ணிக்கச் சொன்னேனா... அதான் மண்டபத்துக்குள்ள நுழையும் போதே செகண்ட் இயர் பயதான் குட்டி சூப்பரா வந்திருக்கான்னு சொன்னானே... கேட்கலை... பாவம் அவனுக்கு என்னோட குணம் தெரியலை... எங்க அண்ணனுக்கிட்ட சொன்னா பெரியாஸ்பத்திரியில ஒரு பெட்டு ரெடி பண்ணிக் கொடுத்துடுவான்... அடுத்து உனக்கும் பக்கத்துல போடச் சொல்லணுமா?"
"அவனுக்கு உங்களைத் தெரியுமின்னு நினைக்கிறேன்... அவன் வேற பொண்ணச் சொன்னான்... உங்களையில்லை...."
"வேற பொண்ணுன்னா பேசுவிங்களா...? வைரவனுக்கிட்ட சொன்னா வாயைப் பேத்துடுவான்"
"..."
"என்ன பதிலைக் காணோம்...?"
"நான் தப்புப் பண்ணுனாத்தானே என் வாயைப் பேப்பாரு... ம்... மஞ்சள் புடிச்சிருந்தது அதான் நல்லாயிருக்குன்னு சொன்னேன்... ஆனா உங்களுக்கு எம்மேல உள்ள கோபம் குறையலை... சாரி..."
"ம்... படத்தைப் பாருங்க... பக்கத்துல பாக்காம..."
படம் முடியும் வரை இருவரும் பேசிக் கொள்ளவில்லை. அனைவரும் மதியம் சாப்பிட்டுவிட்டு போட்டிகளில் கலந்து கொள்ள ஆயத்தமானார்கள். மரபுக்கவிதைகள் போட்டியில் புவனா கலந்து கொண்டாள். அவளுக்கு பரிசு கிடைக்க வேண்டும் என்று ஊரில் இருக்கும் எல்லாத் தெய்வங்களையும் வேண்டிக் கொண்டான். பின்னர் கட்டுரைப் போட்டியையும் முடித்து முடிவுகள் அறிவிப்பதற்காக காத்திருந்தனர்.
ஒருவழியாக முடிவை அறிவித்தனர். ராம்கி கட்டுரைப் போட்டியில் முதல் பரிசைப் பெற்றிருந்தான். புவனா கவிதையில் முதல் பரிசைப் பெற்றிருந்தாள். கட்டுரையில் மூன்றாம் பரிசும் அவளுக்கே.... பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். மற்ற நண்பர்களும் சில போட்டிகளில் பரிசுகளை வெல்ல சந்தோஷமாய் எல்லோரும் கிளம்பினர்.
பேருந்தில் ஏறும் முன் "எனக்குக் கொஞ்சம் புக்ஸ் வாங்கணும் நீங்கல்லாம் போங்க நான் வாங்கிக்கிட்டு வாறேன்" என புவனா சொல்ல, "இனி புக்கெல்லாம் வாங்கிட்டு திரிஞ்சு ராத்திரியிலயா வீட்டுக்குப் போவே...இன்னொரு நாளைக்கு வாங்கிக்கலாம் வாடி" என்று மற்ற பெண்கள் சொல்ல,
"இல்ல வந்தது வந்துட்டோம்... நான் வாங்கிக்கிட்டு வாறேன்..."
"ஏங்க நான் வேணா உங்களுக்கு துணைக்கு வாறேன்..." என்று ராம்கி சொன்னதும் "என்ன ராம்கி மஞ்சத் தாவணிக்கு துண்டு போடுறியா?" என்றான் இரண்டாமாண்டு மாணவன்.
"என்ன நக்கலா பேசுறே... காலையில வரும்போது குட்டி சூப்பரா வந்திருக்கான்னு சொன்னே... இப்ப துண்டு போடச் சொல்லுறே... நான் யாருன்னு தெரியுமில்ல... நாளைக்கு காலேசுக்கு வரணுமா... வேண்டாமா?" புவனா கோபமாக, "ஏங்க அவங்க யாரோட தங்கச்சின்னு தெரிஞ்சும் இப்படி பேசுறீங்க... தேவையில்லாம பேசி பிரச்சினையாக்காதீங்க... எல்லாரும் ஒண்ணா வந்தோம்... சந்தோஷமாப் போவோம்... நான் அவங்க கூட பொயிட்டு லேட்டாயிட்டா தேவகோட்டையில ஐயா வீட்ல விட்டுட்டுப் போயிடுவேன்... அதான் கேட்டேன்... இல்ல யாராவது பொண்ணுங்க துணைக்குப் போங்க.. " என்றான் ராம்கி.
"இல்ல ராம்கி..." ரொம்ப லேட்டான வீட்ல திட்டு வாங்க முடியாது.. நீயே இருந்து கூட்டிக்கிட்டு வா" என பெண்கள் ஜகா வாங்க, ராம்கி, புவனா தவிட மற்றவர்கள் எல்லாரும் வந்த பேருந்தில் ஏறினார்கள்.
"வாங்க போகலாம்"
"எங்க?"
"புக்ஸ் வாங்கணுமின்னிங்க..."
"சும்மா சொன்னேன்..."
"சும்மா சொன்னீங்களா..?"
"ஆமா... நாம தனியாப் போகணுங்கிறதுக்காக சொன்னேன்..."
"தனியாவா... நான் நிக்காம போயிருந்தா..."
"போகமாட்டீங்கன்னு தெரியும்...காலையில விட்டுட்டு வந்ததுக்கே இவ பேசலை... இப்ப விட்டுட்டுப் போனா பேசவே மாட்டாளேன்னு யோசிச்சிப்பீங்கன்னு தெரியும்..."
"பொண்ணுங்க யாராவது நின்னுருந்தா..."
"நிக்க மாட்டாளுங்க... ஏன்னா என்னோட தோழி கனிக்கிட்ட முன்னாடியே சொல்லிட்டேன்... அதனால அவ யாரையும் நிக்க விடமாட்டா"
"அடேங்கப்பா... எதுக்கு இப்படி..."
"சும்மாதான்... சரி வாங்க பஸ் வருது"
பேருந்தில் ஏறியதும் இருவர் அமரும் இருக்கையில் சன்னலோரம் அமர்ந்த புவனா, ராம்கியைப் பார்த்து "உக்காருங்க" என்றாள்.
"இல்லைங்க... பரவாயில்லைங்க..."
"சும்மா உக்காருங்க..." மெதுவாகச் சொன்னாள்.
"இல்லை... நான் நிக்கிறேன்... அந்த அம்மாவை உக்காரச் சொல்லலாம்..."
"நீங்க இப்ப உக்காருவீங்களா மாட்டிங்களா..." மெதுவாகக் கேட்டபடி பல்லைக் கடித்தாள்.
அவள் கோபமாவதைப் பார்த்ததும் வைரவனுக்கு வேண்டியவன் எவனும் பஸ்ஸில் இருக்ககூடாது என்ற பயத்துடன் மெதுவாக அவளருகில் அமர்ந்தான்.
"இப்ப கோபமெல்லாம் இல்ல... தியேட்டர்ல படம் பார்த்த மாதிரி இருக்காம நல்லா இருங்க..." என்று புவனா சிரித்தபடி சொன்னதும் ராம்கி கொஞ்சம் ரிலாக்ஸாக அமர்ந்தான். அவளது தோளில் அவனது தோள் உரச, அவனுக்குள் புதுவித உணர்வு மெல்ல எட்டிப்பார்த்தது,
பேருந்தில் 'இந்த மான் உந்தன் சொந்தமான் பக்கம் வந்துதான் சிந்து பாட...' என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.
(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.
2 எண்ணங்கள்:
வைரவன் தங்கச்சின்னு தெரிஞ்சும்...................ஹூம்,என்ன துணிச்சல்?ஹ!ஹ!!ஹா!!!
வைரவன் பயத்தை “இந்தமான் உந்தன் சொந்தமான் பக்கம் வந்துதான் சிந்து பாட,,,? என்ற பாடல் போக்கி விட்டது ராம்கிக்கு.
எங்களுக்கு தான் திக் திக்.
கருத்துரையிடுக