மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 22 ஜூலை, 2013

கோச்சடையான் கைவிடப்பட்டதா?- தயாரிப்பாளர் விளக்கம்

கடந்த சில தினங்களாக ரசிகர்கள் மத்தியில் உலாவரும் பரபரப்பு கேள்வி கோச்சடையான் படத்தை கைவிட்டுவிட்டார்களாமே என்பதுதான். ஆரம்பத்தில் இந்தக் கேள்வியை யாரும் பொருட்படுத்தவில்லை. ஆனால் நாளாக ஆக, இந்த கேள்விகள் ஒரு செய்தியாகவே மாறும் அளவுக்கு பெரிதாகிவிட்டன. 

சில இணையதளங்களும் அதேபோல செய்தியை வெளியிட்டு வருகின்றன. ஆனால் ரஜினி தரப்பிலோ, படத்தின் இயக்குநர் சௌந்தர்யா தரப்பிலோ எந்த விளக்கமும் இல்லை. 

என்னது... கோச்சடையான் கைவிடப்பட்டதா?- தயாரிப்பாளர் விளக்கம்

இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர்களிடம் தொடர்பு கொண்டு நாம் விசாரித்தோம். இதுகுறித்து தயாரிப்பாளர்களில் ஒருவரான டாக்டர் முரளி மனோகர் கூறுகையில், 

"இதெல்லாம் மிகத் தவறான செய்திகள். இந்தப் படத்தின் ப்ரமோஷனை மனதில் வைத்து நாங்கள் திட்டமிட்ட ஓரிரு நிகழ்ச்சிகளை தவிர்க்க முடியாத காரணங்களால் மேற்கொள்ள முடியவில்லை. ஆனால் எந்த குழப்பமும் இல்லாமல் மிக நம்பிக்கையுடன் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளனர். 

படத்தின் பிரமாண்டம் பார்த்தவர்களை பிரமிக்க வைத்துள்ளது. ரஜினி சார் டப்பிங்கைக் கூட முடித்துவிட்டார். இன்னும் கொஞ்சம் வேலைகள் முடிந்த பிறகு இசை மற்றும் பாடல்களை வெளியிடவிருக்கிறோம். ஆனால் அது கொஞ்சம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதால், பொறுமை காக்கிறோம். ரஜினி சார் ரசிகர்கள் புரிந்து கொண்டு ஒரு நல்ல படத்துக்காக காத்திருப்பார்கள் என நம்புகிறேன்," என்றார்.

நன்றி : தட்ஸ் தமிழ் இணையம்
-'பரிவை' சே.குமார்.

ராசாவே என் ராசாவே


களத்துமேட்டுக் காவலுக்கு
நீ கருப்பராட்டம் போனாலும்
கனத்த மனசோட
காத்திருப்பேன் என் ராசாவே...

திருவிழாத் தேரோட்டம்
தெருவிலோ மக்கள் கூட்டம்
வடம் பிடிக்கும் உன்னை
ஆவலோடு தேடுவேன் என் ராசாவே...

கண்மாய்த் தண்ணி எடுக்க
தனியே நான் வரும்போது
கொடுக்காப்புளி மரத்தருகே
நீ கொடுத்த முத்தச்சுவை
கொடுக்காப்புளி காயாட்டம்
தொண்டைக்குள்ளே இனிக்கவே
ரசித்து ருசித்தேன் என் ராசாவே...

விறகு உடைத்து வேர்த்து
வெயிலில் வைரமாய் மின்னும்
உன் தேகத்தின் மீது
கடந்து போகும் என் கண்கள்
தேங்கி நிற்க புன்னகையோடு
தேகம் பருகுவேன் என் ராசாவே...

ராசாவே என் ராசாவே
சிலம்பம் சுற்றும் போதும்
இளவட்டக்கல் சுமக்கும் போதும்
கபடியில் கால்தூக்கி ஆடும் போதும்
மாடு பிடித்து மகிழும் போதும்
எனக்கானவன் நீ என்றும்
உனக்கானவள் நான் என்றும்
பெருமை பொங்க
காத்திருந்தேன் என் ராசாவே....

வாக்கப்பட்டு நாளாச்சு...
வருசமும் ஓடிருச்சு...
வாரிசும் வந்திருச்சு...
அருகிலிருப்பேன்னு
ஆசைப்பட்டு வந்தவ...
வாழ்க்கைப் பசிக்காக
பொருள் தேடி தூரதேசம்
போன உன்னை
தினம் தேடுகிறேன்
சீக்கிரம் வா என் ராசாவே...

படம் : இணையத்திலிருந்து...
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 21 ஜூலை, 2013

சிம்புவுடன் எப்போது திருமணம்..? - ஹன்சிகா பேட்டி

கடந்த சில மாதங்களாகவே மீடியாக்களில் கிசுகிசுக்களாக கசிந்து வந்த சிம்பு-ஹன்சிகா காதல், இப்போது உறுதியாகியுள்ளது. இருவரும் காதலிப்பதாக, தங்களது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டு இருந்தனர். இந்நிலையில் நடிகை ஹன்சிகா நமது தினமலர் நிருபருக்கு அவரே போன் செய்து அளித்த எக்ஸ்குளூசிவ் பேட்டி இதோ...


என் தொடர்பான உண்மை செய்திகளை கொடுக்கும் மீடியாக்களில் தினமலர் ரொம்ப முக்கியமானது. அதனால் தான் நானே போன் செய்தேன். தற்போது பிரியாணி படத்தின் ஷூட்டிங் முடித்துவிட்டு மும்பையில் உள்ள என் வீட்டுக்கு வந்துள்ளேன். 

தற்போது தமிழில் எனக்கு 4 படங்கள் கைவசம் உள்ளன. ரொம்ப பிஸியாக நடித்து வருகிறேன். இந்த நேரத்தில் சிம்புவுடன் காதல் பற்றி‌ய செய்திகள் வெளியாகியுள்ளன. ஆமாம், நாங்கள் இருவரும் காதலிக்கிறோம். ஆனால் திருமணம் இப்போது கிடையாது. 


எனக்கும் பல படங்கள் இருக்கிறது, அதேபோல் சிம்புவுக்கும் பல படங்கள் இருக்கிறது. எங்கள் காதல் செய்திகளால் எங்களை நம்பி படம் எடுக்க முன் வந்த தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. மேலும் தற்போது எனக்கு 21 வயது தான் ஆகிறது. அதனால் திருமணத்தை தள்ளி வைத்துள்ளோம். 

திருமணம் தொடர்பாக இன்னும் நாங்கள் நிச்சயம் கூட செய்யவில்லை. எங்கள் படவேலைகள், எங்களுக்கான கமிட்மென்ட்டுகளை எல்லாம் முடித்துவிட்டு திருமணம் செய்ய எண்ணியுள்‌ளோம். இன்னும் 5 வருடங்கள் கழித்து சிம்புவை நான் திருமணம் செய்து கொள்வேன் என்றார்.


மேலும் சிம்புவை உங்களுக்கு எதனால் பிடித்தது என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஹன்சிகா, சிம்புவிடம் இதுதான் பிடித்தது என்று என்னால் குறிப்பிட்டு சொல்ல முடியாது. சிம்புவின் ஒவ்வொரு செயலும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அது அவரது திறமையாக இருக்கலாம், குணமாக இருக்கலாம், பேச்சாக கூட இருக்கலாம் என்று கூறினார்.

செய்திக்கு நன்றி: தினமலர்
படங்களுக்கு நன்றி : கூகிள் இணையம்
-'பரிவை' சே.குமார்

மனிதர்கள்...


மனிதர்கள் பலவிதம் அதில் ஒவ்வொருவரும் ஒரு விதம். அடுத்தவன் நல்லா இருக்கட்டும் என்று நினைக்கிற மனிதர்களைவிட அவன் கெட்டுப் போயிடணும் அவன் குடும்பம் அழிந்தே போயிடணுமின்னு நினைக்கிற மனிதர்களே இந்தப் புவியில் அதிகம் இருக்கிறார்கள்.

மறைந்த வாலிபக் கவிஞன் வாலி, 'கல்லறைக்கு செல்லும் வரை சில்லறை வேண்டுமே' என்று ஒரு முறை சொல்லியிருக்கிறார். இங்கே பணம் மனித மனங்களை விசித்திரப்படுத்தி விகாரமாக்கி வைத்துவிட்டது. வாலி மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வரும் வேளையில் சிலர் அவரை தூற்றியும் வருகிறார்கள். அதுதான் மனிதர்கள்... ஒரு மனிதன் வாழும் காலத்தில் எல்லாருக்கும் நல்லவனாக இருக்கமுடியாது. அதற்காக இறந்த பிறகு நல்லவனில்லை... அவன் இப்படி இருக்கவில்லை... அப்படியிருக்கவில்லை... இப்படி இருந்திருக்கலாம் என்று பேசுவதால் யாருக்கு லாபம்?  இருக்கும் போதே நீ செய்வது சரியில்லை.. நீ இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நேரிடையாக மோதுவதற்கு தயாராக இல்லை என்பதையே இறந்த பின்னர் வசனம் பேசும் மனிதர்கள் உணர்த்துகிறார்கள். இறந்த பின்னர் இறந்தவரைப் பற்றி பேசும் இவர்களும் மனிதர்கள்தானே...

பத்திரிக்கையில் படித்த செய்தி ஒன்று... ஒரு தாய் தன்னிடம் இருபத்து ஐயாயிரம் பணம் கொடுத்து 13 வயது மகளைக் கட்டிக் கொடுக்கச் சொன்ன வாலிபனை வீட்டிற்கு வர வைத்து இணங்காத மகளை அவனுடன் அறையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் பண்ண வைத்திருக்கிறார். கதவை திறந்த ஒரு சந்தர்பத்தில் அந்தச் சிறுமி அவர்களிடம் இருந்து தப்பியோடி வீதியில் இருந்தவர்களிடம் சொல்லி அவர்கள் போலீசுக்குப் போய் இன்று அந்தத் தாயும் இளைஞனும் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். சிறுமியோ மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறாள். பெற்ற தாயே பிள்ளையை பாழுங்கிணற்றில் தள்ள நினைத்திருக்கிறாள். இதுபோன்று ஏராளமான செய்திகளைப் பார்க்க முடிகிறது. இவளைப் போன்றவர்களும் மனிதர்கள்தானே....

மனித மனங்கள் விசித்திரமானவை மட்டுமல்ல விகாரமானவை அடுத்தவனைக் கெடுக்க நினைத்து தானே கெட்டுப்போன மனிதர்களையும் பார்த்திருக்கிறேன். அடுத்தவன் வாழ்வதில் சந்தோஷப்பட்டு தானும் சந்தோஷமாக வாழ்பவர்களையும் பார்த்திருக்கிறேன். அதேபோல் ஒரு கை செய்வதை மறு கைக்கு தெரியாமல் வைத்திருக்கும் மனிதர்களையும் பார்த்திருக்கிறேன். இவர்கள் எல்லாம் மனிதர்கள்தானே...

எங்கள் பேராசிரியர் மு.பழனி இராகுலதாசன் அவர்கள் கல்லூரியில் வேலை பார்த்து பணி நிறைவு பெற்ற பின்னரும் வாடகை வீட்டில்தான் காலம் தள்ளுகிறார். நாங்கள் படிக்கும் போது ஐயாவின் மகன், மகள், நான், முருகன், சுபஸ்ரீ, கனிமொழி, தமிழ்க்குமரன் (படிக்கும் போதே இறந்துவிட்டான்), அன்பு அண்ணன் என பத்துப் பதினைந்து பேர் எப்பொழுதும் அவர்கள் வீட்டில்தான் இருப்போம். அரட்டை, வாக்குவாதம், கோபங்கள் என எல்லாமே ஐயா வீட்டில்தான் அரங்கேறும், ஐயாவுக்கும் அம்மாவுக்கும் அப்போது பேச்சு வார்த்தை கிடையாது. ஒரே வீட்டிற்குள் பலகாலம் பேசாமலே இருந்தார்கள். நாங்களும் எவ்வளவோ முயற்சித்தும் பேசாதவர்கள் மகள் திருமணத்தின் போதுதான் பேசினார்கள் என்றாலும் இருவரும் பேசியதில் எல்லாருக்கும் சந்தோஷம். எங்க எல்லாருக்கும் என்ன என்ன பிடிக்கும் என்பது தெரிந்து அம்மா சமைத்து வைப்பார்கள். அவர்கள் அசைவம் சாப்பிட மாட்டார்கள் ஆனால் எங்களுக்காக சமைத்துக் கொடுப்பார்கள். மற்ற நண்பர்களைக் காட்டிலும் எனக்கு எப்போதும் அதிக சலுகை உண்டு. எம்மகனுக்கு காபி பிடிக்காது என்று தனியாக பால் காய்ச்சிக் கொடுப்பார்கள். ஒரு நாள் போகவில்லை என்றாலும் மற்றவர்களிடம் குமார் ஏன் வரலைன்னு கேட்டுக் கொண்டே இருப்பார்கள்... இப்பவும் அவர்களிடம் அதே பாசம் தொடர்கிறது. நான் வீடு கட்டப் போறேன் என்றதும் அதிகம் சந்தோஷப்பட்டவர்கள் அவர்கள்தான். அவர்களும் மனிதர்கள்தானே...

நாம நல்லாயிருந்தாலும் அவன் கெட்டுப் போக வேண்டும் என்று நினைக்கிற சொந்தங்களே அதிகமாக இருக்கிறார்கள். எங்கே அவன் நம்மளைவிட நல்லா வந்துடுவானோ என்ற எண்ணத்தில் இல்லாததையும் பொல்லாததையும் சொல்வதில் வல்லவர்களாகவே இருக்கிறார்கள். அவனா... என்ன இருக்கு வெறும்பய... என்று அடுத்தவர்களிடம் சொல்லி சந்தோஷப்படுகிறவர்களாகவே இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களும் மனிதர்கள்தானே...

இந்த இணைய உலகில் வலைப்பூ வாயிலாக சார், ஐயா,  அப்பா, அம்மா, அக்கா, அண்ணன், தம்பி, நண்பன், தோழி என எத்தனையோ முகம் தெரியாத உறவுகளைப் பெற்று இன்று நமக்கு ஒன்று என்று வரும் போது வருத்தத்தையும் சந்தோஷத்தையும் பகிர்ந்து கொள்ளும் இடமாகவும், அதன் வாயிலாக முகம் தெரியாத உறவுகளின் ஆறுதல்களையும் வாழ்த்துக்களையும் பெறுகின்ற இடமாகவும் இணைய நட்பு இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இங்கே முகம் பார்க்காமல் எழுத்தால் இணைந்து இருக்கிறோம். யார் யார் எப்படிப்பட்டவர்கள் என்பது யாருக்குத் தெரியும்... இருந்தும் நட்பு என்னும் வட்டத்துக்குள் இறுக்கமாக அமர்ந்து கொண்டுள்ளோம். இந்த முகம் தெரியாத உறவுகளும் மனிதர்கள்தானே...

நம்மில் எத்தனை பேருக்கு அடுத்தவருக்கு உதவும் எண்ணம் இருக்கிறது... சொல்ல முடியுமா?  கையேந்தும் பிச்சைக்காரனிடம் சில்லறையில்லை என்று சொல்லும் மனிதர்களில் நானும் ஒருவனாகத்தான் இருந்திருக்கிறேன்.... இன்னும் சில வேலைகளில் இருக்கிறேன். நமக்கு உதவும் குணம் இருக்கிறதா... இல்லையா என்பதைப் பற்றி நாம் யாரும் சிந்திப்பதே இல்லை. ஆனால் எங்காவது ஒரு பிரச்சினை என்று வரும் போது எல்லாருமே நடிகர்கள் உதவவில்லை என்பதையே பெரிதாக பேசுகிறோம்... காரணம் அவர்கள் பொதுவான மனிதர்கள் ஆகிவிட்டார்கள் என்பதுதானே? அவர்களும் நம்மளைப் போல்தான் உழைக்கிறார்கள். என்ன நமக்குச் சம்பளம் ஆயிரங்களில் கிடைக்கிறது. அவர்களுக்கு கோடிகளில் கிடைக்கிறது, இது அவர்கள் தவறல்லவே... அவர்கள் சார்ந்த துறையில் அப்படி பணம் கிடைக்கிறது. அதற்காக நாம் லட்சலட்சமாக சம்பாதித்தும் உதவ மனமில்லையே என்று அவர்களை திட்டுவதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கிறது. அவர்கள் உதவி செய்ய நினைத்தால் செய்துவிட்டு போகட்டும். அவர்கள் செய்தார்களா இல்லையா என்றும் எவ்வளவு கொடுத்தார்கள் என்றும் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்று நாம் நினைப்பது நியாயமா? உதவிகள் செய்யும் போது அதை விளம்பரம் செய்யாதவன் மனிதன் என்றால் என்ன செய்தான் என்பதைச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிற நாமும் மனிதர்கள்தானே...

இன்னும் சிலர் இருக்கிறார்கள் என்ன உதவி செய்வதாலும் அதை வீடியோவிலும் புகைப்படத்திலும் போட்டுக்காட்டி விளம்பரம் செய்பவர்கள். தயாநிதி மாறன் தனது சொந்தப் பணத்தை கொடுக்காமல் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து உத்தரகண்ட் இழப்புக்கு கொடுத்ததை தயாநிதி மாறன் லட்சங்களை வழங்கினார் என்று செய்தி போட்டது போல... நம்ம முதல்வர் மக்கள் வரிப்பணத்தில் இருந்து சலுகைகளைக் கொடுத்துவிட்டு எல்லாவற்றிலும் தனது போட்டோவைப் போட்டு தம்பட்டம் அடிப்பது போல... (ஸ்கூல் பேக்கிலும் அம்மா படம் பெரிசா போட்டிருக்காங்கன்னா பாத்துக்கங்க) கணிப்பொறி கொடுத்துவிட்டு எல்லாரும் கணிப்பொறியை ஆன் பண்னி வையுங்க அம்மா படம் தெரியணும் என்று ஒரு அம்மா விசுவாசி சொன்னது போல... செய்யும் உதவி எதுவானாலும் அதிலும் விளம்பரம் தேடிக்கொள்ளத்தான் செய்கிறார்கள்.. இப்படிப்பட்ட விளம்பரப் பிரியர்களும் மனிதர்கள்தானே...

காசுக்காக கொலை செய்பவர்களும்... ஜாதி, மதம் காக்க கொலை செய்கிறவர்களும்... சொத்துக்காக கொலை செய்கிறவர்களும்... சொத்துக்காக உறவை இழப்பவர்களும்... கள்ளக்காதல் ஜோடிகளும்... காமுகர்களும்... அரசியல் ஆதாயத்துக்காக அடுத்தவனை கவிழ்ப்பவரும்... இப்படி எண்ணிலடங்கா பாதகர்கள் உலகெங்கும் நிறைந்து இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் மனிதர்கள்தானே....

மனிதர்கள் குறித்து இன்னும் நிறைய பேசிக்கொண்டே போகலாம்... நல்ல எண்ணங்கள் நிறைந்தவர்களாக... அடுத்தவனுக்கு உதவாவிட்டாலும் அவனும் நல்லா இருக்கட்டும் என்ற எண்ணங்களைச் சுமந்தவர்களாக... நாம் சார்ந்த சமூகம் மட்டுமல்ல சாமுதாயமும் நல்லா இருக்கணும் என்று வாழ்பவர்களாக... வாழக்கற்றுக் கொள்வோம். பிறர்க்கு உதவவில்லை என்றாலும் மனிதனாக வாழ்ந்து செல்வோம்..

மீண்டும் மற்றுமொரு தலைப்பில் பேசுவோம்.

படம் : இணையத்திலிருந்து
-'பரிவை' சே.குமார்

சனி, 20 ஜூலை, 2013

தொடர்கதை : கலையாத கனவுகள்

6. கண்ணெதிரே தோன்றினாள்

முன்கதைச் சுருக்கம்...

ஏழைக் குடும்பத்தில் பிறந்து  தந்தையில்லாமல் தாயின் அரவணைப்பில் வாழும் ராமகிருஷ்ணன் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேர்கிறான். முதல் நாள் கல்லூரிக்கு செல்லும் அவனை அவனது தாயார் அக்கம் பக்கம் பார்த்து அனுப்பி வைக்கிறாள். ராக்கிங் அதன் பின்னான நட்பு வட்டம் என கல்லூரி வாழ்க்கை இனிமையாக கழிய ஆரம்பிக்கிறது. 

தொடர்கதையின் முந்தைய பகுதிகளைப் படிக்க 

முந்தைய பகுதிகளைப் படிக்க....  


---------------------------

இனி...

நாட்கள் வாரங்களாக... வாரங்கள் மாதங்களாகிப் போய்க்கொண்டிருந்தது... கல்லூரி வாழ்க்கையும் பழகி முதல் செமஸ்டரையும் அரியர் இல்லாமல் முடித்துவிட்டான் ராம்கி. இரண்டாம் செமஸ்டருக்கான வகுப்புக்கள் மொழிப்பாடங்களுக்கான ஆசிரியர்கள் மாற்றத்துடன் துவங்கிவிட்டன.

ஒரு மதியவேளை சாப்பிட்டுவிட்டு வகுப்பறையை ஆர்க்கெஸ்ட்ரா அரங்கமாக மாற்றியிருந்தார்கள் ராம்கியும் நண்பர்களும்... அவர்களில் சேவியர்தான் பாடகன், சர்ச்சில் பாடுவதுடன் ஒரு சிறிய இசைக்குழுவிலும் அவ்வப்போது பாடி வந்தான். அதனால் மதியம் எப்பவும் கச்சேரி களைகட்டும். ஒரு முறை வெள்ளையன் சார் கூட பாடுங்க வேண்டாங்கலை... அடுத்தவங்களுக்கு டிஸ்டர்ப்பா இருக்கக்கூடாது என எச்சரித்திருந்தார். எனவே டெஸ்க் இசை ராஜாக்கள் தங்களது இசையை வெகுவாக குறைத்துவிட்டார்கள்.

"இங்க யாரு... ராம்கி" ரம்மியமான குரலைக் கேட்டு பாடிக்கொண்டிருந்த சேவியர் பாட்டை நிறுத்த, ராம்கி உள்பட எல்லாரும் வகுப்பறை வாசலை நோக்கினர்.

மஞ்சள் கலர் தாவணியில் பட்டுப் போல ஒரு பருவச்சிட்டு நின்றாள். எல்லாரும் அவளையே பார்க்க, "அலோ பட்டிக்காட்டான் மிட்டாய்கடையை பார்த்த மாதிரி பாக்கிறீங்க... முன்னப்பின்ன பொண்ணுங்களைப் பார்த்ததில்லையா? இங்க யாரு செந்தூரப்பூவே ராம்கின்னு கேட்டேன்" நக்கலாகக் கேட்டாள்.

"டேய்.... மச்சான்... நிரோஷா கேக்குறாங்கடா... நாந்தேன்னு சிவாஜி மாதிரி எந்திரிச்சி நில்லுடா" என்று பழனி சொல்லவும் எல்லாரும் 'ஹே...' என சிரிக்க, 

"என்ன நக்கலாக்கும்" என்றவள் "ஆழந்தெரியாம காலை விடாதீங்க... அப்புறம் நொண்டிக்கிட்டுத்தான் திரியணும்... என்ன நீ.... நீங்கதான் ராம்கியா... முத்துச்சாமி ஐயா வரச்சொன்னார்..."

"அட புறாப்பொறக்கி அய்யான்னு சொல்ல வேண்டியதுதானே..."

"வாத்தியாரை கேலி பண்ணாதீங்க... உங்க மார்க்கையும் புறா பொறக்கிக்கிட்டுப் போயிடும்... சரி வாங்க கூப்பிட்டார்"

"மாப்ளே... நடத்து... நடத்து... பொம்பளப்புள்ள உன்னய தேடி வருது... நம்மளை எல்லாம் போலீசுதான் தேடி வரும்... ம்.... எங்கயோ மச்சம் இருக்குடா உனக்கு" மெதுவாக முணங்கினான் அண்ணாத்துரை.

"சும்மா இருங்கடா... நான் ஐயாவைப் பார்த்து என்னன்னு கேட்டுட்டு வாறேன்..."

"வாங்க ராம்கி..." என்றார் முத்துச்சாமி ஐயா.

"என்னங்கய்யா... எதுக்கு என்னைய வரச்சொன்னீங்க..."

"காரைக்குடி கம்பன் கழகத்துல கட்டுரைப் போட்டி வச்சிருக்காங்க... அது குறித்த தகவல் எல்லா வகுப்பறைக்கும் வரும். நீங்க கண்டிப்பாக கலந்துக்கணும்..."

"காரைக்குடியிலயா... அம்மாகிட்ட கேக்கணும்..."

'அது சரி... பால்வாடி போல... இதெல்லாம் போட்டிக்கு வந்து... ம்...' வாய்க்குள் சொல்லிக் கொண்டாள் அவள்.

"சரி.... நாளைக்குச் சொல்லுங்க அவசரமில்ல... உங்களைப் பற்றி தேபிரித்தோவுல வேலை பார்க்கிற என்னோட மாணவர் அலெக்ஸ் சொல்லியிருக்கார். அது போக நான் ஒரு பேச்சுப் போட்டிக்கு உங்க பள்ளிக்கு நடுவரா வந்திருக்கேன். அதுல நீங்கதான் முதல் பரிசு... சரியா.."

"ம்..."

'பால்வாடிக்கிட்ட சரக்கு இருக்கும் போல...ம்' மனசுக்குள் நினைத்தவள் சிரித்துக் கொண்டாள்.

"அதனாலதான் உங்களைப் போகச் சொல்றேன்... அப்புறம் இது புவனா... நல்ல பேச்சாளி, கவிஞரும் கூட... முதல் பருவம் வரைக்கும் திறமையாளர்களை கண்டுபிடிக்க முடியலை... ஏன்னா எந்தப் போட்டியும் வைக்கலை... சண்டையும் விடுமுறையுமா போச்சு... இவங்க என் பொண்ணோட பிரண்ட்... அதனால சுலபமா தெரிஞ்சிக்க முடிஞ்சது... இவங்க... நீங்க... அப்புறம் கலந்துக்க போறவங்க எல்லாரும் சேர்ந்துதான் காரைக்குடி போறீங்க... பேருந்துக் கட்டணத்தை தமிழ்துறை ஏத்துக்கும்... அதனால போட்டிக்கு தயாராகுங்கள்."

"சரிங்கய்யா..."

ராம்கி சார்ந்த துறையும் தமிழ் மற்றும் ஆங்கிலத்துறையும் ஒரே அறைக்குள் இருந்தது. ராம்கி ஐயாவிடம் பேசிக் கொண்டு நிற்கும்போது அவர்களை கடந்து சென்ற வெள்ளையன் சார் "என்னப்பா இங்க நிக்கிறே...?" என்று வினவினார்.

"ஐயா கூப்பிட்டாங்க... அதான் சார்..." பவ்யமாய் சொல்ல

"வெள்ளையன் சார் தம்பி ராம்கி நல்ல படிப்பாளி மட்டுமில்ல... பேச்சு, கட்டுரையின்னு நிறைய பரிசு வாங்கியிருக்காங்க... ரொம்ப தங்கமான பிள்ளை" என்று ஐயா சொல்ல, ஒற்றைச் சிரிப்பை உதிர்த்துச் சென்றார் பசங்களால் சில்வர் பிளஸ் மண்டையன் என்று செல்லமாக அழைக்கபடும் வெள்ளையன் சார். அவரது டாலடிக்கும் வழுக்கைத் தலையைப் பார்த்து ராம்கி சிரித்துக் கொண்டான்.

"சரி வாரேன்ய்யா" என்று கிளம்ப அவன் பின்னே வந்த புவனா, "எக்ஸ் கியூஸ் மீ..." என்றாள். என்ன என்பது போல ராம்கி திரும்பிப் பார்க்க... ஆணின் பார்வை பட்டதும் மாராப்பை சரிசெய்யும் பெண்களின் வழக்கத்தை அவளும் தொடர்ந்தபடி கேட்டாள்.

"பேரே ராம்கிதானா இல்ல வேற..." உதட்டை சுளித்து இழுத்தாள். அதுவும் அழகாய்த்தான் இருந்தது. ஆனால் ராம்கிக்கு அதெல்லாம் தெரியவில்லை.

இதுவரை பெண்களுடன் அதிகம் பேசியதில்லை, முதன் முதலில் ஒரு பெண் பெயரைக் கேட்கிறாள். அதுவும் தங்கச்சிலையாட்டம் அழகி அருகில் வந்து பேசுகிறாள். அவனுக்குப் படபடப்பு அதிகமாகியது. நாக்கு வறண்டு மேலே ஒட்டிக்கொண்டது. என்ன சொல்வது என்று தெரியாத நிலையில் இருந்தான்.

"என்னப்பா... பேரைக் கேட்டா பேந்தப் பேந்த விழிக்கிறே...? ராம்கியின்னு கிராமத்து அம்மா பேரு வச்சாங்களான்னு சந்தேகத்துல கேட்டேன்... ஓகே... நான் வாறேன்..."

"ரா.. ராம்... ராமகிருஷ்ணன் மு... முழுப்பேரு..." சொல்வதற்குள் முகமெல்லாம் வேர்த்தது.

"அழகா டிரஸ் பண்ணித்தானே முன்னாடி நிக்கிறேன்... பேயைப் பார்த்த மாதிரி குழறுது....ம்ம்... ஓகே... நான் புவனா... பர்ஸ்ட் மாத்ஸ்... சரி பார்க்கலாம்...பை..." என்றபடி கிளம்பினாள். அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு வகுப்பை நோக்கி நடந்தான்.

"மாப்ளே... என்னடா... என்ன பேசினா... எதோ சொன்னா நாங்க பார்த்தோமே..." அண்ணாத்துரை அவசரமாக கேட்டான்.

"ஒண்ணும் சொல்லலைடா... ஐயா ஒரு போட்டிக்குப் போகச் சொன்னார். அம்புட்டுத்தான் வெளிய வந்ததும் பாக்கலாம்ன்னு சொல்லிட்டுப் போனா...."

"அப்புறம் என்ன அடிக்கடி பார்த்துட வேண்டியதுதானே....?"

"போங்கடா... சும்மா கேலி பண்ணாம..."

"ம்.... தேவதை தேடி வந்திருக்கா... அப்புறம் என்ன காரைக்குடி பயணம்... பாண்டியன்ல படம்... ம் கலக்குடா மச்சான்..."

"அட போங்கடா.... ஐயா கூட்டியார சொன்னதால கூட்ட வந்திச்சி... இனி அதுக்கும் நமக்கும் என்ன இருக்கு..."

"சரி... பார்ப்போம்... என்ன இருக்குன்னு... ஆமா இம்புட்டு அழகியா இருக்காளே... யார் இவ... மொதல்ல விசாரிக்கணும்டா..." என்ற பழனி, "என்ன டிபார்ட்மெண்டுன்னு சொன்னால..." என்றான்.

"இல்லடா... பேசவே இல்லை அதெல்லாமா கேப்பாங்க..." அப்பாவியாய் சொன்னான்.

"எப்படியும் நாளைக்கு அவ என்ன கிளாஸ்ன்னு கண்டுபிடிக்கிறோம்... " அண்ணாத்துரை அழுத்தமாக சொல்ல, மீண்டும் தனது கச்சேரியை ஆரம்பித்த சேவியர் "பாவாடை தாவணியில் பார்த்த உருவமா..." எனப்பாட மற்றவர்கள் சந்தோஷமாய் தாளமிட ஆரம்பித்தார்கள். 

ராம்கி மனசுக்குள் மஞ்சள் தாவணி லாவணி பாடியது.

(தொடரும்)

(அடுத்த வாரம் முதல் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் தொடர்கதை பதிவு செய்யப்படும்)

-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 19 ஜூலை, 2013

வாலியின் பெருமை யாருக்கும் வாய்க்காது - வைரமுத்து இரங்கல்


கவிஞர் வாலியின் பெருமை யாருக்கும வாய்க்காதது என்று கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

 கவிஞர் வாலியின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை: நிரப்ப முடியாத வெற்றிடம் தமிழகத்தின் முதுபெரும் பாடலாசிரியர் காவியக் கவிஞர் வாலியின் மறைவு பாட்டுலகில் இட்டு நிரப்பமுடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டது. 

அழைத்த போதெல்லாம் அன்பாக பேசிமகிழ்ந்த ஒரு மூத்த நண்பரை நான் இழந்து விட்டேன். வாலி பெற்ற சில பெருமைகள் எந்தப் பாடலாசிரியருக்கும் எளிதில் வாய்க்காதவை. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் பாடல் எழுதிய பாடலாசிரியர் வாலியாகத்தான் இருக்க முடியும். எம்.ஜி.ஆர். - சிவாஜி தொடங்கி நடித்துக்கொண்டிருக்கும் நான்காம் தலைமுறை வரைக்கும் பாட்டெழுதிய பெருமை அவருக்கு உண்டு. 

கண்ணதாசன் என்ற கவியரசருக்கு சற்றே இணையாக நெடுந்தூரம் நடந்து வந்த சிறப்பும் வாலிக்கே வாய்த்தது. எஸ்.எம்.சுப்பையா நாயுடு முதல் ஏ.ஆர்.ரகுமான் வரை எத்தனையோ இசையமைப்பாளர்களுக்கு வரிகளால் வலிமை சேர்த்தார். 

எம்.ஜி.ஆரின் பிம்பத்தை உயர்த்திப் பிடித்ததில் வாலியின் வார்த்தைகளுக்கு பெரும்பங்கு உண்டு. திராவிட இயக்க அரசியலை சாகித்தியத்தில் கொண்டு வந்த சாமர்த்தியம் வாலிக்கு வசப்பட்டிருந்தது. "மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்" என்று எம்.ஜி.ஆருக்கு எழுதியவர், கலைஞரின் மைந்தர் மு.க.முத்துவுக்கு "மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ, நீ மூவேந்தர் வழி வந்த மன்னவனோ" என்று எழுதினார். 

மூன்று என்ற தொடங்கும் பல்லவியை இரண்டு பேருக்கும் பயன்படுத்தி இரு சாராரின் மனம் கவர்ந்த திறமை வாலிக்கு மட்டுமே வரும் உள்ளொன்று வைத்துப்புறமொன்று பேசாதவர்; தான் உண்டு தன் தமிழ் உண்டு என்று வாழ்ந்தவர். வாழ்வின் நிறைவுக்காலத்தில் நோய்களை சந்தித்தாலும் நொந்து கொள்ளாதவர்.

 "தாய்கொண்டு வந்ததை தாலாட்டி வைத்ததை நோய்கொண்டு போகும் காலம் அம்மா" என்று எழுதிய வாலி தன் வரிகளையே தனக்கு இரங்கல் பாடலாக்கி இறந்து விட்டார். 

அவர் உயிர் பிரிந்திருக்கலாம்; உடலை ஐம்பூதங்கள் பிரித்துக் கொண்டிருக்கலாம். அவர் தமிழ் மரணம் தொடமுடியாத உயரத்தில் இருக்கிறது. அது காலமெல்லாம் அவர் புகழைப் பாடிக்கொண்டிருக்கும். இறங்கும் கண்ணீரை துடைத்து கொண்டு என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 

இவ்வாறு கவிஞர் வைரமுத்து தனது இரங்கல் அறிக்கையில் கூறியுள்ளார். 

செய்திக்கு நன்றி : இணையம்
-'பரிவை' சே,குமார்