(இணையத்தில் சுட்ட படம் - எந்த ஊர் திருவிழா என்பது தெரியாது)
கிராமியப் பாடல்களில் தாலாட்டுப் பாட்டுக்கு அடுத்து நாம் பார்க்க இருப்பது குலவைப்பாடல். இந்தக் குலவைப்பாடல் என்பது ஒரு பெண் பாடல் சொல்ல அவள் முடிக்கும் போது மற்றவர்கள் சேர்ந்து வாய்க்குள் நாக்கைச் சுழற்றி ஒருவித ஒலி எழுப்புவார்கள். அந்த ஓலி கேட்பதற்கு அவ்வளவு அழக்காக இருக்கும். குலவைப் பாடல் சொல்லும் பெண் பெரிய பாடகி அளவிற்கு பாடவில்லை என்றாலும் ராகத்தோடு பாடும்போது அந்தக் குரலும் ரசனைக்குரியதாகத்தான் இருக்கும்.
குலவைப் பாடல்கள் பெரும்பாலும் நாற்று நடவின் போதும் திருவிழாவின் போதும் பாடப்படும். முன்னெல்லாம் வயல்களில் விவசாய நேரத்தில் ஆங்காங்கே குலவைப் பாடல் கேட்கும். வயலில் நாற்று நடும்போது குனிந்தபடியே நடவு செய்யும் பெண்கள் தங்கள் மீது அடிக்கும் வெயிலில் உக்கிரத்தில் முதுக்குப்படை தீயாய் எரிவதையும் குனிந்தே நிற்பதால் இடுப்பில் ஏற்படும் வலியையும் மறக்கவே இந்தப் பாடல்களைப் பாடுவார்கள். அவர்க்ள் பாட ஆரம்பிக்கும் முன்னர் ரோட்டோரத்தில் வயலென்றால் ரோட்டில் ஒரு துண்டை விரித்து அதன் மீது ஒரு நாற்று முடியை வைத்து குலவை போட ஆரம்பிப்பார்கள். இதுவே ரோட்டோரத்தில் இல்லாத வயலென்றால் வரப்பில் இதுபோல் வைப்பார். அதைத் தாண்டிப் போகும் எல்லாரும் காசு போடவேண்டும் என்பது கிராமங்களில் எழுதப்படாத சட்டம்.
நடவு செய்யும் போது அந்த நிலத்தின் உரிமையாளர் காபி, பலகாரம் கொடுக்க வரும் போது 'ஏய் ஐயா வாராரு... குலவையைப் போடுங்கடி... ஏய் வைராத்தா நீதான் கணீருன்னு பாடுவே... சட்டுன்னு பாடுல' அப்படின்னு சொல்லவும்... 'மவராசன் செய்யில... மணிக்கையால் நடவுங்க... ஐயா வருவாங்க... அம்பது நூறு தருவாங்க'ன்னு சும்மா எடுத்துவிடும். உடனே எல்லாரும் சேர்ந்து 'உலுலுலு...'ன்னு சத்தம் கொடுப்பார்கள். அவர் சிரித்துக் கொண்டு பத்தோ இருபதோ போட்டுவிட்டுப் போவார். இப்படி வருவோர் போவோரிடம் எல்லாம் காசு பார்த்துவிடுவார்கள்.
"மவராசன் வாராக...
மண்ணெல்லாம் பொன்னாக...
நாத்து நடும் எங்களுக்கு
சோறு மட்டுமில்லாம...
பொருளாவும் கொடுக்கும்
புண்ணியராம் எங்க ஐயா.."
அப்படின்னு அந்த நிலத்துக்காரரை மவராசன், புண்ணியவான், உத்தமன் என்றெல்லாம் வர்ணித்துப்பாடி காசு வாங்குவார்கள். அதே போல் ஆடு, மாடு எல்லாத்தையும் பாட்டுல கொண்டு வருவாங்க...
"ஆனைகட்டி தாளடிக்க
ஆறுமாசம் செல்லும்
மாடுகட்டி தாளடிக்க
மறுவருசம் செல்லும்
குதிரை கட்டி தாளடிக்க
கோடிநாள் செல்லும்"
அப்படின்னும் பாடுவாங்க. இப்பல்லாம் கிராமங்களில் விவசாய் முறை மாறியாச்சு. பல கிராமங்களில் விவசாயமே இல்லை என்பதுதான் இன்றைய நிஜம். அப்பல்லாம் நாற்றங்காலில் நாற்றுப்பாவி அது வளர்ந்ததும் அதைப் பறித்து முடிபோட்டு நூறு நூறாக எண்ணி குப்பம் கணக்கில் எண்ணி வைப்பார்கள். அன்று மாலையோ அல்லது மறுநாள் அதிகாலையோ நாற்று முடிகளை எல்லாம் வரப்பில் அடுக்கி நீர் இறங்க வைப்பார்கள். அடுத்த நாள் காலை எந்த வயலில் முதல் நடவோ அந்த வயலுக்கு எத்தனை குப்பம் தேவையோ அதை கூடைகளில் அள்ளிக் கொண்டு போய் நடுவதற்கு தோதாக வயலெங்கும் இறைத்து வைக்க வேண்டும். நடவுப் பெண்கள் வருவார்கள்... நடுவார்கள் பாடல் பாடுவார்கள்... நமக்கும் கேட்பதற்கு சந்தோஷமாக இருக்கும்.
இன்றைக்கோ நிலமை வேறு... நாற்றுப் பாவி நடுவதெல்லாம் இல்லை... நடவுக்கு ஆள் கிடைப்பது கஷ்டம்... எனவே இன்று மழை பெய்ததும் வயலில் டிராக்டர் வைத்து ரெண்டு மூணு ஓட்டு ஓட்டிட்டு விதைத்து விடுவார்கள். அதில் களை எடுப்பதற்கு அதிகமாக செலவு செய்வார்கள். அதனால் இன்று நடவுப் பாடல் எல்லாம் காணாமல் போய்விட்டது.
இதே குலவைப் பாடல் கிராங்களில் இருக்கும் அம்மன் கோவில் திருவிழாவில் பெண்களால் பாடப்படும். கரகம் எடுத்து வரும் போது, தீபம் பார்க்கும் போதெல்லாம் குலவை போடுவார்கள். நடவைப் போலத்தான் இங்கும் ஒரு பெண் பாட்டுப்பாட மற்றவர்கள் குலவை போடுவார்கள். குலவைப் பாடல்கள் பலருக்கு சாமி வரவைத்து விடும். ஆத்தா குலவை போடுங்கத்தா என்று யாராவது சொன்னால் போதும் பெரியவர்கள் போடுகிறார்களோ இல்லையோ சின்னப் பெண்கள் கணீர்க்குரலில் பாட ஆரம்பித்துவிடுவார்கள்.
'தெற்குத் தெருவிலே
தேரோடும் வீதியிலே
தேங்காய் குலைபறிச்சு
வாறாளாம் மாரியாத்தா'
என்று பாடி முடிக்கும் போது சுற்றியிருப்பவர்கள் 'உலுலுலு' அப்படின்னு குரல் எழுப்புவார்கள். இப்பல்லாம் எங்க ஊரில் கூட குலவை போட பெண்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள். 'ஆத்தா குலவை போடுங்கத்தா' என்று பலமுறை கத்தினாலும் இப்ப மக்கள் பாட்டை ஆரம்பிப்பதில்லை. எங்க ஊருக்கு இப்ப மொளக்கொட்டுப் பாட்டுச் சொல்ல ஒருவர் வருவார். இப்பெல்லாம் அவர்தான் குலவைப் பாடலும் சொல்லுகிறார். மொளக்கொட்டுப் பாட்டைப் பற்றி அடுத்து ஒரு பதிவு தேற்றிக்கலாம்.
சென்ற முறை மனைவியின் அம்மா ஊருக்கு திருவிழாவுக்குப் போனபோது ஒரு சின்னப் பெண் மைக் எல்லாம் இல்லாமல் கணீர்க்குரலில் குலவைப்பாடல் சொல்லியது. பார்க்க ஆச்சர்யமாகவும் கேட்க சந்தோஷமாகவும் இருந்தது. இன்னும் குலவைப் பாடல் இளவயதினரிடமும் தொற்றிக் கொண்டிருப்பது மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது.
'மதுவாம் மதுக்குடமாம்
மதுக்கேத்த தெம்மாங்காம்
மதுவ இறக்கி வைக்க
மனங்குளிர்வா மாரியாத்தா...'
***
'எல்லாரு வீட்டுலயும் எண்ண
ஊத்தி விளக்கெறியும்
மாரியாத்தா வாசலிலே
எளநித்தண்ணி நின்னெறியும்...'
இப்படி நிறையப் பாடுவார்கள்... இவையெல்லாமே அம்மனுக்கு காப்புக்கட்டி தினம் கரகம் எடுத்து கொண்டாடும் அந்த நாட்களில் பாடப்படும் பாடல்கள்... இசையில்லாமல் ஊரே கூடியிருக்க... ஒற்றைக் குரலெடுத்து அழகாய் பாடும் போது பின்பாட்டாய் குலவைச் சத்தம் ஆத்தாளை மட்டுமல்ல நம்மளையும் குளிரச் செய்யும்.
************
நம் குடும்பத் திருவிழாவாம் வலைப்பதிவர் திருவிழா குறித்து முத்துநிலவன் ஐயா தளத்தில் பகிர்ந்திருக்கும் பகிர்வில்...
வரும் 11-10-2015 ஞாயிறு
“வலைப்பதிவர் திருவிழா-2015”
புதுக்கோட்டையில்
சிறப்பான ஏற்பாடுகள்
நடந்து வருகின்றன.
புதுக்கோட்டைப் பதிவர்கள்
நிதி உதவி செய்வதில் முந்திக்கொண்டு,
விழாவுக்காக
உடல் உழைப்பையும் தந்து வருகிறார்கள்..
மற்ற மாவட்டப் பதிவர்களும் இதில் பங்கேற்க வேண்டுகிறோம்.
கடந்த புதனன்று வயிறு வலியின் காரணமாக அலுவலகத்துக்கு விடுப்புப் போட்டுவிட்டு படுத்திருந்தேன். ஊரில் ஒரு சிறிய பிரச்சினை, அது குறித்தான சர்ச்சைகள்... பேச்சு வார்த்தைகள் என மதியம் வரை போனிலேயே கரைந்தது. வயிறு வலி மட்டும் கரையாமல் இருந்தது. மதியம் சாப்பாட்டுக்குப் பின்னர் படுத்தாலும் உறக்கம் வரவில்லை. சரி எதாவது படம் பார்க்கலாம் என ஆன்லைனில் தேடினேன். சரி நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்ன்னு படம் பேரு இருக்கே.... கொஞ்சம் சிரிக்கலாம்... வயிறுவலியோட மனவலியும் போகும்ன்னு நினைச்சு பார்க்க ஆரம்பித்தேன்.
படத்தோட ஆரம்பத்துல காட்டின தொடர்ந்து ஜனாதிபதி அவார்டு வாங்கும் கிராமத்தைப் பார்த்ததும் ஆஹா ஓவராக் காட்டுறாங்களேன்னு நினைச்சிக்கிட்டே பார்க்க ஆரம்பித்தேன். பிரசிடெண்டே இறங்கி கால்வாய் சுத்தப்படுத்துவது, கடையில் பால்காரர் பால் ஊற்றிவிட்டு கல்லாவில் பணம் எடுத்துக் கொண்டு போவது, பத்துப் பவுனு நகையை ரோட்டுல போட்டு ரெண்டு நாளாக் கிடக்குது தொலச்சவங்க வந்து எடுத்துக்கிட்டுப் போவாங்கன்னு சொல்றதுன்னு வித்தியாசமாப் போனப்பவே சுதாரிச்சிருக்கணும்... வேற வலி தூக்கமும் வரலை... அறையில் பேச்சுத் துணைக்கும் ஆளில்லை... இருந்தாலும் ஆளாளுக்கு கணிப்பொறியே தெய்வம்ன்னுதான் இருப்போம். அது வேற விஷயம்... இருந்தாலும் ஓரிரு வார்த்தைகள் பேசலாமே... இன்னைக்கு தனியாத்தானே இருக்கோம் தொடர்ந்து பார்ப்போம்ன்னு தொடர ஆரம்பித்தேன்.
நம்ம கலைஞர் பேரன்தான் நாயகன்... ஆரு... தம்பி உதயநிதியான்னு கேக்குறீகளா? இல்லைங்க இது அருள்நிதி... இது வம்சத்துல வந்துச்சே அந்தத் தம்பி... அதுல கூட அப்புடி இப்புடி இருந்துச்சு... இதுல ஆளு நல்லாத் தெரிஞ்சிச்சு... சரி கொஞ்சம் நல்லாயிருக்கும் போலன்னு நெனச்சா... நாலு போலீசுல எஸ்.ஐ, ஏட்டு ரெண்டு பேரும் இருக்கும் போது தம்பிதான் எல்லா முடிவும் எடுக்குது. நம்ம ஊருப்பக்கமெல்லாம் கான்ஸ்டபிள் கொஞ்சம் எந்திரிச்சிப் பேசினாலே 'யோவ் இருய்யா... நாங்க பேசிக்கிட்டு இருக்கோம்ல்ல' என்று அதட்டும் எஸ்.ஐயைத்தானே பார்த்திருக்கிறோம். இங்க எஸ்.ஐ. எதுவுமே சொல்றதில்லை. எப்படி இப்படியெல்லாம் படமெடுக்கிறாங்கன்னு தெரியலையேன்னு நினைக்காதீங்க... எல்லாம் நாம பாக்குறோங்கிற தைரியத்துலதான் எடுக்குறாங்க.
நாயகன் அருள்நிதிக்கு வீடு இருக்கு அம்மா அப்பா இல்லை.... எஸ்.ஐக்கும் இன்னொரு கான்ஸ்டபிளுக்கும் வீடே இல்லை... சிங்கம்புலிக்கு மட்டும் குடும்பம் குட்டி இருக்கு. நாயகி டீச்சராம்... இவரு தேடிப் போயி லவ் பண்றாராம்... பாவம் நாயகி ரம்யா நம்பீசன் கனவு காண்கிறார்... பாட்டுப் பாடுகிறார். அதிகம் வேலை இல்லை. சிங்கம்புலிதான் நல்லா இருந்த ஊரைக் கெடுக்க திட்டம் தீட்டுகிறார். எதற்காக என்றால் இராமநாதபுரத்துக்கு நாலு பேரையும் மாற்றப் போறோம் என்று மேலதிகாரி சொல்லியதற்காக...
படத்தில் ரசிக்க வைத்த இடம் என்றால் சிங்கப்பூர் மாப்பிள்ளை முதல் காட்சியில் ஊருக்குள் வரும்போது பார்த்து மலைப்பதும் பின்னர் இறுதிக் காட்சிகளில் மனைவியுடன் வந்து படாதபாடுபட்டுப் போவதும்தான். மற்றபடி சின்னச் சின்ன பாத்திரங்களில் எட்டிப் பார்த்த ஒரு ஆளை வில்லனாக்கி அவன் திருட ஆளெடுப்பதும் அவர்களை திருட அனுப்பும் போது ஏதோ இசை ராஜா போல் கையை ஆட்டி ஆட்டி சைகை செய்வதும்... தான் திருடன் என்று தெரிந்து தன்னை அன்போடு பார்த்த ஊருக்குள் திருடுவதும்... என ஸ்ஸ்ஸ்... அப்பா முடியலை சாமி.
சிங்கம்புலி செய்த காரியங்களால் ஊருக்குள் அடிதடி சண்டை, திருட்டு, வெட்டுக் குத்தெல்லாம் வருது. அப்பத்தான் ஜனாதிபதி விருதுக்காக அந்த ஊரைப் பார்வையிட்டு மக்களிடம் பேச கலெக்டர் வருகிறார். சரி... சரி... இருங்க நீங்க கேக்குறது தெரியுது... என்னாச்சு...? படத்தில் அந்த ஊர் மீண்டும் நல்ல நிலைக்கு வந்து ஜனாதிபதி அவார்ட் வாங்குச்சான்னுதானே?... அடப்போங்கப்பா கலெக்டரையே கடத்திடுறானுங்க... ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் ஊர் வந்திருது... அதுக்கப்புறம் எப்படி முடிக்கிறதுன்னு தெரியாம நாயகன் வாயால ஒரு வசனத்தைச் சொல்ல வச்சி முடிச்சிட்டானுங்க...
பொற்பந்தல்ன்னு பொய்யான கிராமத்தைக் காட்டின இயக்குநர், இராமநாதபுரம் என்றாலே அடிதடி, வெட்டுக்குத்து, 144 தடை உத்தரவு எனச் சொல்வதும்... இராமநாதபுரம் பேருந்துக்குள் அடிதடி பற்றி பேசுவதும்... படிக்காத மனிதர்கள் அடித்துப் பிடித்து ஏறுவதும்... என காட்சிப்படுத்தியிருக்கிறார். அதை கடைசியில் இராமநாதபுரத்தில் இருந்து சிலரை பொற்பந்தலுக்கு மாற்றுவதாக கேள்விப்பட்ட எஸ்.ஐ என்னய்யா உங்களை பொற்பந்தலுக்கு மாத்திட்டாங்கன்னு வருத்தப்படுறாருங்கிற மாதிரி காட்சி வைத்து சரி பண்ணியிருக்காரு. இயக்குநர் இராமநாதபுரத்துக்காரராய் இருப்பார் போல.
சரி விடுங்க... இந்த மாதிரி படமெல்லாம் பார்க்க நேரம் கிடைக்குது பாருங்க... சண்டி வீரன் படத்துல தண்ணிப் பிரச்சினை பேசி, காதல், அழகிய பாடல்கள்ன்னு கொண்டு போன சற்குணம் லால் போன்ற நல்ல நடிகரை கடைசியில் காமெடியன் ஆக்கி தண்ணி ஓடுற வாய்க்காலோட அழகை ரசிச்சிக்கிட்டே போகும் போது டக்குன்னு வாகமடை போட்டு அடச்சி எல்லாரையும் என்னடா இந்தாளு இப்படி காமெடி பண்ணிட்டாருன்னு சொல்ல வைக்கலையா... அது மாதிரித்தான் இதுவும்... அதுல இயக்குநர் கடைசியில சிரிக்க வச்சாரு... இதுல இயக்குநர் கதையே இல்லாட்டியும் அங்க அங்க சிரிக்க வைக்கிறாரு...
-:000:-
-:பாரதிபாரதிபாரதிபாரதிபாரதிபாரதிபாரதிபாரதி:-
இன்று நம் நேசக் கவிஞன்... தேசக் கவிஞன் பாரதியின் நினைவுநாள்... 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்று சொன்ன நம் தமிழன் பாரதியை நினைவில் நிறுத்துவோம்.
"ஏழை யென்றும் அடிமையென்றும்
எவனும் இல்லை ஜாதியில்,
இழிவு கொண்ட மனித ரென்பது
இந்தி யாவில் இல்லையே
வாழி கல்வி செல்வம் எய்தி
மனம கிழ்ந்து கூடியே
மனிதர் யாரும் ஒருநிகர் கர்ச
மானமாக வாழ்வமே!"
என்று சொன்னவன் பாரதி.... இன்னைக்கு அப்படியிருக்கான்னு கேக்கக்கூடாது... இன்னைக்கு அவனையே சாதிக்குள்ள் கொண்டு வந்துட்டோமுல்ல....சரி விடுங்க... எட்டுத் திக்கும் தமிழ் என கொட்டும் முரசடித்த நம் மீசைக் கவிஞனை என்றும் நினைப்போம்...
மக்கள் வரிப்பணத்தில் சிவாஜிக்கு மணிமண்டபம் தேவையா என்பதுதான் இன்னைக்குமுக்கியமான விவாதமா முகநூல், டுவிட்டர் என எல்லா சமூக வலைத்தளங்களிலும் இருக்கு. எங்க அறையில் கூட இது குறித்து பயங்கர விவாதம் நடந்தது. ஆம்... மணிமண்டபம் தேவையா என்று நாமும் விவாதிப்போமே...
நம் நாட்டில் இதுவரை கட்டப்பட்ட மணிமண்டபங்கள் எல்லாம் என்ன நிலையில் இருக்கு என்பதை நாம் அறிவோம். எங்கள் காரைக்குடியில் கூட கண்ணதாசன் மணிமண்டபம், கம்பன் மணிமண்டபம் எல்லாம் இருக்கு. விழாக்களின் போது மட்டுமே அவை ஜொலிப்பதை நான் பார்த்திருக்கிறேன். அதே போல் தலைவர்களின் சிலைகளை மூலைக்கு மூலை வைத்திருக்கிறோம். அவர்களின் பிறந்தநாள்... இறந்தநாளில் மட்டுமே மாலைகளில் சிரிப்பார்கள். மற்ற நாட்களில் எல்லாம் குருவிகளின் எச்சத்தை சுமந்து நிற்பார்கள். இதில் என்ன கொடுமை என்றால் சிலைகளை வைத்து நாம் சாதியை வளர்த்துக் கொண்டிருக்கிறோம். சுதந்திரமாக வாழ்ந்த பல தலைவர்களை இப்போது சிலைகளாய் கூண்டுக்குள் அடைத்து வைத்திருக்கிறோம். இதில் சிவாஜியை கடல்கரையில் இருந்து தூக்குங்கள் என்று வேறு சொல்லிவிட்டார்கள்.
சரி விஷயத்துக்கு வருவோம்... அரசு சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டுவோம் என்று சொல்லியிருப்பது சரியா தவறா என்பதெல்லாம் இங்கு விவாதம் இல்லை மக்கள் வரிப்பணத்தில் கட்டுவது சரியா என்பதே கேள்வி. அதிமுக அரசு சென்ற முறையே இதற்காக இடம் ஒதுக்கியது என்றும் அதன் பின்னான திமுக அரசு அதை வாடகைக்கு விட்டுவிட்டது என்றும் படித்த ஞாபகம். இப்போது தன் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை எல்லாம் மறக்கும் முகமாக முதல்வர் அறிவிக்கும் திட்டங்களில் இதையும் மீண்டும் அறிவித்திருக்கிறார்.
சிவாஜி...
மிகச் சிறந்த நடிகர்... சிம்மக் குரலோன்.... நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த கலையார்வம் மிகுந்த அர்ப்பணிப்புக் கலைஞன்... வரலாற்று நாயகர்களை எல்லாம் திரையில் காட்டியவர்... கட்டபொம்மன், இராஜராஜ சோழன், வ.உ.சிதம்பரநாதன், வீரசிவாஜி என எல்லாரையும் திரையில் நம் கண் முன்னே நிறுத்தியவர். இன்றும் வரலாற்று நாயகர்கள் என்றாலே நம் மனக்கண்ணில் வருவது சிவாஜிதான்.
ஒருவரின் நடிப்புத் திறமைக்காக மணிமண்டபம் கட்ட வேண்டுமா? ஆம்... வேண்டும் என்றுதானே பிரபு கேட்டார். சினிமாவில் சிறப்பாய் நடித்த ஒரு கலைஞன்... தான் சம்பாதித்து சேர்த்த சொத்தில் ஏழைகளுக்கு உதவியிருக்கலாம் அது நமக்கு தெரிய வேண்டியதில்லை... அவரும் சொல்ல வேண்டியதில்லை... ஏன்னா ஒரு கை செய்வது இன்னொரு கைக்கு தெரியாமல் இருப்பதுதான் உதவி... தம்பட்டம் அடித்துக் கொள்வது உதவியல்ல. எத்தனையோ பேர் வெளியில் தெரியாமல் உதவிக் கொண்டிருக்கிறார்கள்... ஆனால் சினிமா நாயகர்கள் எல்லாருமே பெரும்பாலும் நான் இதைச் செய்தேன்... அதைச் செய்தேன்னு விளம்பரம் செய்யத்தான் செய்கிறார்கள். ஏன் ஒரு பாடாவதி ரசிகன் குடும்பத்தை விட்டுட்டு இவனுக்காக செத்தாக்கூட அவனோட வீட்டுக்குப் போயி பணம் கொடுத்து போட்டோ எடுத்து விளம்பரம் தேடிக்கத்தான் செய்கிறார்கள்.
இந்த உதவி விஷயத்தில் விஜயகாந்த் பெரும்பாலானவைகளை வெளியில் தெரியாமல் செய்து கொண்டிருந்தார். ஆனால் இப்போது ஒரு சின்ன விஷயம் செய்தாலும் அவரது கட்சிக்கான முகநூல் பக்கத்தில் நான் செய்தேன்... நான் செய்தேன்... என முரசு அடித்து அறிவிக்கிறார்கள். அஜீத் செய்வதாகச் சொல்கிறார்கள்... எல்லாவற்றிற்கும் மேலாக ராகவா லாரன்ஸ் சமீபத்தில் தனது படத்துக்காக கிடைத்த பணத்தை மக்களுக்காக மேடையில் வைத்தே கொடுத்து அதற்காக இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து கலாமின் காலடியில் என்ற அமைப்பின் மூலமாக சேவை செய்யப் போவதாகத் தெரிவித்தார். இதில் அவர் விளம்பரம் தேடிக்கொண்டதாகத் தெரியவில்லை. விஷயம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்பதே அவரின் நோக்கமாக இருந்தது.
பாருங்க... மணிமண்டபத்தைப் பற்றி பேச வந்துட்டு பேச்சு அங்கிட்டும் இங்கிட்டுமாப் போயிருது... சிவாஜி தனது குடும்பத்துக்கு தேவையான சொத்தைத் சேர்த்து வைத்துவிட்டுப் பொயிட்டார். எந்த ஏழைக்காவது உதவணுமின்னு டிரஸ்ட் ஆரம்பிச்சி வச்சிருக்காரா...? எனக்குத் தெரிந்தவரை இல்லை என்றுதான் நினைக்கிறேன்... அப்படியிருந்தால் சொல்லுங்கள். அரசியலில் வந்து ஆட்சியைப் பிடிக்கும் ஆசையும் அவருக்கு வர தனிக்கட்சி எல்லாம் ஆரம்பித்தார். கஞ்சிக்கு இல்லாதவனுக்கு உதவவா அரசியல்ல இறங்கினார்... இப்படி மக்களுக்கு எதுவுமே செய்யாத ஒரு மனிதருக்கு மக்களின் வரிப்பணத்தில் மணிமண்டபம் எதற்கு?
மக்களுக்காகவே உழைத்து மறைந்த பலர் இருக்கும் போது ஒரு கலைஞனுக்கு ஏன் மணி மண்டபம்? மக்களெல்லாம் கேப்பை சாப்பிடுகிறார்கள் என்று தன் தாயையும் கேப்பைதான் சாப்பிட வேண்டும் என்று சொன்ன காமராஜர், மக்களுக்ககாகவே வாழ்ந்த ஜீவா, கக்கன்... இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்தவர்தான் என்றாலும் தனது குடும்பத்தினருக்கு சலுகை அளிக்காத, அனுபவிக்க விடாத அப்துல் கலாம் இப்படி எத்தனையோ மனிதர்கள் மக்கள்... மக்கள் என்று இருந்தார்கள்... ஆனால் சிவாஜி அப்படி இருந்தாரா... அவருக்கு மக்கள் வரிப்பணத்தில் மணிமண்டபம் எதற்கு?
மணிமண்டபம் கட்டப்படும் என்று சொன்ன நம்ம முதல்வர் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருக்கிறார் என்று வழக்கு நடந்து தீர்ப்பும் வந்து மீண்டும் வழக்கு தொடரப்பட்டிருக்கும் வேளையில் இந்த அறிவிப்பு செய்தவர் ஏன் தன் சொந்தப் பணத்திலேயே கட்டக்கூடாது? கல்யாண் ஜீவல்லரிக்கு மட்டுமே வாங்க... தங்கம் வாங்கன்னு மக்களை ஏமாற்றும் விளம்பரத்தில் நடிக்கும் பிரபுவிடம் அரசு கொடுத்த இடத்தில் மணிமண்டபம் கட்ட பணம் இல்லையா என்ன? இந்த வேஷ்டி சட்டையில் எங்க சிவாஜி தாத்தா மாதிரியே இருக்கீங்கன்னு பேசும் விக்ரம் பிரபு கூட இன்னைக்கி சினிமாவுல சம்பாதிக்கத்தானே செய்கிறார். ஏன் பிரபுவின் அண்ணன் ராம்குமார் சிவாஜி பிலிம்ஸ் மூலமாக படங்களை தயாரித்துக் கொண்டுதானே இருக்கிறார். கோடிகளை வைத்திருக்கும் குடும்பம் இருக்க மக்கள் வரிப் பணத்தில் மணிமண்டபம் எதற்கு?
மணிமண்டபம் கட்டப்படும் என்று சொன்னதும் கமல், ரஜினி, பிரபு என ஆளாளுக்கு அம்மாவுக்கு நன்றி சொல்றாங்க. தமிழக திரைப்பட நடிகர்கள் சங்கத்தில் தலைவராக போட்டிபோடும் நடிகர்கள் மணிமண்டபம் கட்ட ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டாலுமே போதுமே மிக அழகான, நல்லதொரு மணிமண்டபத்தைக் கட்டிவிடலாமே? சிவாஜியைப் பார்த்துத்தான் நடிக்கக் கற்றுக் கொண்டேன் என்றும்... தமிழ் சினிமாவின் பிதாமகன் அவர் என்றும்... சொல்லும் நடிகர்கள் எவருமே இதற்கு பணம் நாங்கள் போடுகிறோம் என்று சொல்லவில்லையே ஏன்? வரியே கட்டாமல் ஏய்க்கும் இவர்களுக்கு அன்றாடம் சம்பாரித்து அதற்கும் வரிக்கட்டும் குப்பனும் சுப்பனும் கொடுக்கும் பணத்தில் மணிமண்டபம் எதற்கு?
நாட்டுக்காகவோ நாட்டு மக்களுக்காகவோ உழைத்தவர்களுக்கு வரிப்பணத்தில் மணிமண்டபம் கட்டப்படுமேயானால் அதை கரம் குப்பி வரவேற்கலாம்... ஆனால் சினிமா என்னும் கவர்ச்சி ஊடகத்தில் ஆடிப்பாடி சம்பாதித்த ஒருவருக்கு மணிமண்டபம் கட்ட மக்கள் வரிப்பணம் பயன்படுத்தப்படுமேயானால் அதை எப்படி வரவேற்பது? இதை அரசு சொல்லியிருப்பதுதான் வேடிக்கை... என்ன செய்வது கூத்தாடிகள்தானே நம்மை ஆள்கிறார்கள். நடிகர்களையும் ஒரு குடுபத்தையும் குளிர்விக்க செய்யும் இந்தச் செயலால் யாருக்கு லாபம்? நாட்டில் ஆயிரத்தெட்டு தேவைகள் அடிப்படை மக்களுக்கு இருக்க ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த ஒருவருக்கு மணிமண்டபம் கட்டி என்னவாகப்போகிறது?
சிவாஜி ரசிகர்கள் மகிழ்ச்சி என்று செய்தி போடுகிறார்கள்... உண்மையில் எத்தனை பேர் மகிழ்ந்திருப்பார்கள்... குடும்பத்தை விட்டு கூத்தாடிகளை தலையில் தூக்கி வைத்து ஆடும் அந்த ரசிகர்கள் மட்டுந்தான் நம்ம வரிப்பணத்தில் கட்டுறாங்களே என்று சிந்திக்காமல் வெடிவெடித்து மகிழ்ந்திருப்பார்கள். சரி... நாளை மணிமண்டபம் கட்டியதும் எல்லாரையும் உள்ளே விடுவானுங்களா என்ன..? தலைவருக்கு மணிமண்டபம் என்று குதிக்கும் இவர்கள் டாஸ்மார்க் சரக்கை உள்ளே இறக்கிக் கொண்டு அழுக்கடைந்த உடையோடு போனால் காவலாளி அடித்து விரட்டுவான். இவன் பணத்தில் கட்டிவிட்டு இவனையே உள்ளே விடமாட்டானுங்க... அதுதானே நடக்கும்... அப்புறம் இவனோட வரிப்பணத்தில் மணிமண்டபம் எதற்கு?
சமூக வலைத்தளங்களில் கேலி, கிண்டல்கள் செய்கிறார்கள் என்றாலும் அவர்களின் பார்வையும் சரியாகத்தான் தெரிகிறது. இப்படி ஒவ்வொருவருக்கும் மணிமண்டபமும் சிலைகளும் மக்கள் வரிப்பணத்தில் செய்வதால் என்ன லாபம்? அடிப்படை வசதிகளற்ற எண்ணற்ற குடும்பங்கள் இன்னும் தமிழகத்தில் இருக்கத்தான் செய்கிறது. அவர்களுக்கு செலவு செய்து அவர்களை உயர்த்த முயற்சித்தால் அதை பாராட்டலாம்... அதைவிடுத்து மணிமண்டபம் கட்டுவது எதற்கு?
கடைசியாக சொல்லிக்கிறேன்... நான் சிவாஜி ரசிகனுமில்லை... அவருக்கு எதிரியும் இல்லை... எனது இந்தக் கட்டுரை சிலருக்கு பிடிக்கலாம் பலருக்கு பிடிக்காமலும் இருக்கலாம். இது என் மனதில்பட்ட கருத்து... நல்ல கலைஞன்... தான் ஏற்ற கதாபாத்திரங்களை அப்படியே நம் கண்முன் நிறுத்தியவர்... தமிழ் சினிமா என்றால் தவிர்க்க முடியாத கலைஞன்... என எல்லாவற்றிலும் அவர் மீது மரியாதை இருக்கு... ஆனால் மக்கள் வரிப்பணத்தில் மணிமண்டபம் கட்டும் அளவுக்கு என்ன மக்கள் தொண்டாற்றினார் என்று நினைக்கும் போது மணிமண்டபம் தேவையா என்றே தோன்றுகிறது...
இது சிவாஜிக்கு எதிரான பதிவு அல்ல.... என்னோட வரிப்பணமும் அந்த மணிமண்டபத்துக்கு போகுமே அப்ப சிவாஜி நமக்கு என்ன செய்தார்ன்னு தரையில படுத்துக்கிட்டு மோட்டுவலையைப் பாத்து யோசிக்கிற ஒவ்வொரு தமிழனோட மனசாட்சிப் பகிர்வுதான் இது... யார் திட்டினாலும் ஏற்றுக் கொள்ளப்படும்... தயக்கம் வேண்டாம்... தயங்காமல் உங்கள் கருத்துக்களையும் கூறுங்கள்.
என்னோட கேள்வி மக்கள் வரிப்பணத்தில் சிவாஜிக்கு மணிமண்டபம் தேவையா?.என்பதுதான். மணிமண்டபம் தேவை என்றால் கோடிகளைக் குவித்து வைத்திருக்கும் முதல்வரும், கோடிகளில் புரளும் நடிகர்களும், வளமாய் வாழும் பிரபு குடும்பமும் சேர்ந்தே செய்யட்டும்... மக்கள் வரிப்பணத்தில் தேவை இல்லை என்பதுதான் என்னோட எண்ணம்.
முதல்லயே சொல்லிக்கிறேன்... ஒரு படத்தோட பாடலுக்காக நான் பதிவெல்லாம் இதுவரை எழுதியதில்லை. சினிமா விமர்சனமே எப்பவாவது என்னைக் கவர்ந்த படங்களுக்கு மட்டுமே எழுதுவேன். ஒரு சினிமாவை பிரிச்சி மேயும் அளவுக்கு எனக்கு அதிம் ஞானம் இல்லை... அப்படியிருக்க பாட்டுக்காக பதிவெழுதி... அந்த வரியை இப்படி மாற்றியிருக்கலாம்... இந்த இடத்தில் கிட்டாருக்குப் பதில் ட்ரம்ஸே போட்டிருக்கலாம்ன்னு எல்லாம் கருத்துச் சொல்லும் அளவுக்கு நமக்கு இசை ஞானம் இல்லை...
அப்புறம் எதுக்குய்யா இப்ப எழுதுறேன்னு நீங்க கேட்கலாம்... சேனைத்தமிழ் உலான்னு ஒர் இணையப் பக்கம் இருக்கு, அந்தப் பக்கமா நான் ஒதுங்குனது ஒரு சிறுகதை போட்டி அறிவிச்சிருந்தப்போ காயத்ரி அக்கா சொல்லித்தான்... ஒதுங்கினேன்... பரிசும் வாங்கினேன்... அதெல்லாம் மேட்டர் இல்லை... என்ன மேட்டர்ன்னா.... அங்க ஒரு நட்பு வட்டம்... மிகச் சிறந்த உறவுகளின் உன்னத இணைப்பு அந்த உலா...
அங்க போற வரைக்கும் நிஷா(ந்தி) அக்காவைத் தெரியது. அவர் பதிவரும் இல்லை... ஆனால் மிகச் சிறந்த எழுத்தாளர்... அவரது கருத்துக்களே ஒரு பெரிய பதிவாகத்தான் இருக்கும்... அங்கு வரும் எல்லோரையும் கருத்துக்களால் கவர்பவர் அவர். எனது பதிவுகளைப் பலர் வாசித்தாலும் வரும் பத்துப் பதினைந்து கருத்துக்களை எழுதுபவர்களை மட்டுமே அறிவேன். சேனையில் வாசிக்கும் நண்பர்களை எல்லாம் நான் அறியேன். அங்கு சென்றதும் அவர் எனது எழுத்துக்களின் ரொம்ப நாள் வாசகி என்பதை அறிந்த போது இரட்டிப்புச் சந்தோஷம் எனக்கு... இப்போ எனக்கு ஒரு அன்பான அக்கா கிடைத்திருக்கிறார் என்றால் பாருங்கள்.... அப்படி ஒரு அழகான உறவுகளைக் கொடுக்கும் இடம்தான் சேனைத்தமிழ் உலா.
இயக்குநர் ரா,ராஜசேகர்
சரி என்ன சொல்ல வாறேன்னுதானே கேக்குறீங்க... சேனையின் உறுப்பினர் ரா.ராஜசேகர்தான் நான் சொல்லப் போற ஜிப்பா ஜிமிக்கி படத்தின் இயக்குநராம்... இவருக்கு இது முதல் படம்... அந்தப் படத்தின் பாடல்கள் வெளியானதும் நிஷா அக்கா அதன் யூடிப் இணைப்பை பகிர்ந்து சேனையில் பாடல்களைக் கேட்டு கருத்திடும்படி செய்திருந்தார். நானும் சென்றேன்... அங்க கொஞ்சம்... இங்க கொஞ்சமாப் பாட்டைக் கேட்டுட்டு வாழ்த்துக்கள்ன்னு சொல்லிட்டு வந்துட்டேன். எனக்கு அப்ப அவர் அங்கு உறுப்பினர் என்றெல்லாம் தெரியாது. அக்காவுடன் முகநூல் அரட்டையில் இருந்த போது தம்பி ஜிப்பா ஜிமிக்கி படத்தோட இயக்குநர் நம்ம சேனை உறுப்பினர், அவரோட படப்பாடல்கள் குறித்து உனக்கிட்ட இருந்து ஒரு பதிவை எதிர் பார்க்கிறேன் என்றார். எல்லாம் எழுதுறோம்... நட்புக்காக... நானும் அவரும் இதுவரை ஒரு வரி கருத்துக்கூட இட்டுக் கொண்டதில்லை என்றாலும் சேனையின் உறுப்பினர் என்ற போது நமக்கும் நட்புத்தானே என்பதால் சரி அக்கா எழுதுறேன்னு சொல்லிட்டேன்.
ஜிப்பா ஜிமிக்கின்னு டைட்டில் வச்சிட்டு கீழே 'ஜிகுஜிகுன்னு' அப்படின்னு போட்டிருக்காரு... ஜிப்பாங்கிறது ஆண்கள் போடுறது... கிராமங்களில் ஜிப்பா போட்டுக்கிட்டு போனா ஏய் ஜிப்பா போட்ட மைனருன்னு கேலி கூட பண்ணுவாங்க... ஜிமிக்கி பொண்ணுங்க போடுவாங்க... ரெண்டுமே ஜிகுஜிகுன்னுதான் இருக்கும்... அதுவும் திருவிழா நேரங்களில் பாவாடை தாவணியில் பெண்கள் ஜிமிக்கி போட்டு வரும் அழகே தனிதான்... அதைப் பார்த்தால் ஐய்யோ.. ஐய்யோன்னு மனசு பரவசப்படும்... ம் அதெல்லாம் ஒரு கனாக்காலம். இப்ப பாவாடை தாவணியே இல்லை... கொஞ்ச நாள் கழித்து பாவாடை தாவணியில் பார்த்த உருவமான்னு பாட்டு பாடுனா பாவாடை தாவணின்னா என்னன்னு கேப்பாங்க... பிளாஸ்டிக் கம்மல் வந்து ஜிமிக்கியும் போயே போச்சு...
ஜிப்பா ஜிமிக்கி ஒரு வித்தியாசமான காதல் கதை என்பதை இதன் பாடல்கள் சொல்லாமல் சொல்கின்றன. படத்தின் பாடல் வெளியீட்டில் படத்தின் கதை குறித்து இயக்குநர் ராஜசேகர் சொல்லும் போது 'மிக நெருங்கிய இரண்டு நண்பர்கள் தங்கள் பிள்ளைகள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார்கள். ஆனால் இது அவர்களின் பிள்ளைகளுக்கு பிடிக்கவில்லை. எனவே இருவரும் ஒரு பயணம் மேற்கொண்டு திருமணம் செய்யாமல் தப்பிக்க ஒரு காரணத்தை கண்டு பிடிக்க முடிவு செய்கிறார்கள். அதன்படி மேற்கொண்ட பயணத்தில் பிரிந்தார்களா... அல்லது சேர்ந்தார்களா...' என்பதை படத்தின் கிளைமாக்ஸில் சொல்லியிருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்.
அவர்கள் மேற்கொள்ளும் பயணம் ஒரு கட்டத்தில் காதலாகி... பின்னர் பிரிவாகி... மீண்டும் இணையும் போல்தான் பாடல்கள் இருக்கின்றன. இப்ப படத்தின் கதை குறித்து பேச, படம் இன்னும் வெளியாகவில்லை என்பதால் பாடல்கள் குறித்துப் பார்க்கலாம். படத்தின் பாடல்களுக்கு இசை ரனிப் என்ற புதிய இசை அமைப்பாளர். நமக்கெல்லாம் அறிமுகமான இசையமைப்பாளர் தீனாவின் சகோதரர் இவர் என்பது கூடுதல் செய்தி. படத்தின் இயக்குநரும் சேனையின் உறுப்பினருமான ரா.ராஜசேகர் அவர்கள் மாலை முரசு பத்திரிக்கையில் பணியாற்றியவர் என்பதும் கூடுதல் செய்திதான். நானும் தினமணியில் இருந்தவன்தான்... அப்ப சினிமாவுக்கு வருவியான்னு கேக்ககூடாது... வருசத்துக்கு ஒரு தடவை ஊருக்கு வர்றதுக்கே அரபிக்கிட்ட கெஞ்ச வேண்டியிருக்கு... இதுல சினிமாவுக்கா... சரித்தான் போங்க...
படத்தில் பாடல்கள் எல்லாமே கேட்கும்படி இருப்பது மிகச் சிறப்பு... பாடல் வரிகளை எழுதியிருப்பவர் மோகன்ராஜன், இவர் சினிமாவுக்கு புதியவர் போல தெரிகிறது. என்னோட நண்பன் தமிழ்க்காதல்ன்னு ஒருத்தன் இருக்கான். நல்ல கவிஞன்... ரெண்டு மூணு பேருக்கிட்ட பாட்டெழுதிக் காட்டி அவங்க ரசனைக்கு எழுத மறுத்து வாய்ப்புக்கள் இழந்தவன்... அவனுக்கும் இதுபோல் வாய்ப்பு வந்தால் நல்ல பாடல்களைக் கேட்கலாம்... வருமா?.
அடித்து நொறுக்கி காதுகளைக் கிழிக்காத இசையும், வரிகளில் வரும் வார்த்தைகளை எல்லாம் கேட்கும்படி எழுதப்பட்ட பாடல்களும், நல்ல உச்சரிப்போடு பிசிறில்லாமல் பாடிய பாடகர்களும் என முக்கனிச் சுவையும் ஒன்றாக கிடைப்பதென்பது இன்றைய தமிழ்ச்சினிமாவில் அரிதாகிவிட்டது. இசை இருந்தால் வரிகள் சொதப்பல்... வரிகள் நல்லா இருந்தால் பாடியவர் பாதி எழுத்தை மென்று முணுங்கி துப்பும் பரிதாபம்... இல்லையென்றால் வரியும் பாடியவரும் கலக்கலாய் செய்ய இசை ரணகளமாகிவிடும். ஆனால் இந்தப் படத்தை பொறுத்தவரை முக்கனிச் சுவையையும் சரி சமமாகக் கொடுத்து கேட்கும் காதுகளுக்கு சந்தோஷத்தைக் கொடுத்திருக்கிறாரகள்.
'வண்டாள மரத்துக்காடு...' என்று ஆரம்பிக்கும் முதல் பாடல் ஆட்டம் போட வைக்கும் வரிகளை அள்ளிக் கொண்டு வருகிறது.
'ஏ சிப்பா போட்ட மைனரு...
சிமிக்கி போட்ட பெண்டிரு...
சேர்ந்து நின்னா கலக்குது...
ஜிகுஜிகுன்னு ஜொலிக்குது...'
என்று சும்மா கலக்கலாக இருக்கிறது.
அடுத்து வரும் பாடலின் வரிகளை வைத்தே இது காதல் பாடல்தான் என்று அடித்துச் சொல்ல முடியும். பாடலின் வரிகள் அழகிய கவிதையைக் கொடுத்து நம்மையும் பரவசப்பட வைக்கிறதே தவிர, இசையும் பாடகர்களும் நம்மை படுகொலை செய்யவில்லை... அழகான வரிகள்... பாடலே ஒரு கவிதையாய்.... இது ஆண் பெண் இருவரும் பாடும் பாடல்... 'கண்கள் நுனியில் காதல் வந்து மோதிச் சாய்க்கிறதே...' என்ற வரிதான் எத்தனை கவித்துவமாய் இருக்கிறது... இதே போல் எல்லா வரிகளும்....
'ஹையோ... ஹையோ...
பரவசப் படுகொலையே...
இது பரவசப் படுகொலையே...
கண்கள் திறக்கலை
தேகம் அசையலை
பேசத் தெரியலை அன்பே...'
அடுத்த பாடல் குத்துப் பாடல் வகை... தியேட்டரில் ஆட வைக்கும் பாடல்... தமிழ் சினிமாவில் புதிதாக வரும் இயக்குநர்கள் கூட குத்துப்பாடல் என்னும் வலைக்குள் விழத்தான் செய்கிறார்கள் என்பதைச் சொல்லாமல் சொல்லும் பாடல் இது. புதியவர்கள் இன்னும் சிறப்பாய் சிந்திக்க வேண்டும்... குத்துப்பாடல் என்னும் வட்டத்தை உடைத்து வர வேண்டும். மலையாளத்தில் நல்ல கதைகளுடன் இளையவர்கள் வர ஆரம்பித்திருக்கும் வேலையில் வித்தியாசமாய்ப் பண்ணினாலும் அடுத்தவனைப் போல் அதே குத்துப்பாடல் நாலு சண்டை என்ற வட்டத்துக்குள் தமிழக இளம் இயக்குநர்கள் விழுவது வருத்தமான விஷயம்..குத்துப் பாடல்தான் ஆனாலும் வரிகள் நல்லாத்தான் இருக்கு. உங்களுக்கும் பிடிக்கும்.
'அல்லாடும் வாழ்க்கையிலே
பொல்லாத சோகமில்லை...
........
டோலாரே டோலாரே
டோலாக்கு டோலுடா...
.......
ஏய்... ஐலே... ஐலே... ஐலலலே...லே...'
அடுத்த பாடலும் நல்லா இருக்கு... இது கொஞ்சம் அடிகலந்த பாடல்... இது ஒரு விழாவில் பாடுவது போல் இருக்கிறது. ஒருவேளை திருமண நிச்சயமாகக்கூட இருக்கலாம்.. இதிலும் வரிகள் நல்லா இருக்கு. என்னடா இப்படி எல்லாத்தையும் ஆஹா ஓஹோன்னு சொல்றானேன்னு நினைக்காதீங்க... இது சும்மா சொல்வது இல்லை... வெறும் வாய் வார்த்தை இல்லை... இந்தப் பதிவை எழுதி முடிக்கும் வரை இந்தப் பாடல்களைக் கேட்டுக் கொண்டேதான் இருந்தேன்... உண்மையிலேயே வரிகள் அருமை... கவிஞருக்கு மனசின் வாழ்த்துக்கள்.
'தணனனான... தணனனான
தண்னனான... தாணானன்னா...
.................
வெண்ணிலா போல் ஒரு
தேவதைக் கண்கள்...
ஆஆஆஆயிரம் பேசியதே...'
இது நம்ம ஏ.ஆர்.ரகுமான் வகைப்பாடல் மெதுவான வரிகளும் பரபரப்பான வரிகளும் கலந்த பாடல் வித்தியாசமான ராப் வகை... ஆரம்பத்தில் சொல்லும் வார்த்தைகளை என்னால் புரிஞ்சிக்க முடியலை வாய், கழுத்து, கண்ணு, காதுன்னு எல்லாம் சொல்றாங்க... ரொம்ப வேகமா பாடுறாங்க...
'ரசவாச்சியே... ரசவாச்சியே...
ரசவாச்சியே... ரசவாச்சியே வாச்சியே...
இருவாச்சியே... இருவாச்சியே
இருவாச்சியே... இருவாச்சியே... வாச்சியே...'
அடுத்தது பிரிவின் வலி சொல்லும் பாடல், நாயகன் நாயகி பிரிவைப் பற்றி ஒருவர் வருத்தமுற்று பாடுவதுபோல் தெரிகிறது பாடலின் வரிகளைக் கேட்கும் போது... நீங்களும் கேட்டுப் பாருங்கள்.
'ஐய்யோ... ஐய்யோ... ஐய்ய்ய்யோஓஓஓஓஓ....
நெஞ்சு கொதிக்குதே...
விம்மி வெதும்புதே
செஞ்ச பாவம் என்னதானோ...'
அடுத்ததும் ஒரு குத்துப் பாடல் ரகம்தான்... மியூசிக்கும் அடித்து ஆடுகிறது... கேட்கும் நமக்கும் பரபரன்னு இருக்கு என்பதே உண்மை. இதுவும் ஆட வைக்கும்.
'பரபரன்னு இழுக்குதய்யா...
பளபளன்னு சிரிக்கிதய்யா...
சிலுசிலுன்னு சிலுக்குதய்யா...
ஏங் கிளையில் வந்து இலை பறிக்கிறியே...
தேன் தேன் துளியா நீ மழை அடிக்கிறியே...'
அப்புறம் இன்னொரு பாட்டு, அதுவும் கேட்க நல்லாத்தான் இருக்கு. இது காதல் டூயட்டா அல்லது வேறு மாதிரியான்னு தெரியலை. ஆனா உறுத்தாத இசையால நல்லாயிருக்கு.
என்னானதோ எல்லாம் இங்கே...
கொண்டாடுதோ நெஞ்சம் இங்கே...
ஜி.வி. திவாகர் தயாரித்திருக்கிறார். அவரோட மகன் கிரிஷ் திவாகரே கதாநாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக குஷ்பு பிரசாத் என்பவரை அறிமுகம் செய்கிறார்கள். ஆடுகளம் நரேன், மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் வேல் நடராஜனிடம் உதவியாளராக இருந்த சரவணன் நடராஜன் இதில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். கலக்கலாகச் செய்திருக்கிறார் என பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன. எந்தளவுக்கு உண்மை என்பது படம் வந்தால்தான் தெரியும்.
பாடல்கள் அருமையா வந்திருக்கு... இவனுக்கு இவள் அல்லது இவளுக்கு இவன்னு சொந்தங்களில் பேசி வைத்து கட்டுவது இன்னும் எங்கள் பக்கமெல்லாம் வழக்கத்தில்தான் இருக்கு, அது போல ஒரு கதைதான்... அதில் இருந்து விடுபட ஒரு பயணம்... காதல்.... மோதல்... மீண்டும் சேரல் என்பது போல்தான் கதை இருக்கும் என்று தெரிகிறது. இது தமிழ் சினிமாவின் டிரேட் மார்க் ரகம்தான். புதிய முயற்சிகளோடு இறங்கலாம். எத்தனை நாளைக்குத்தான் அரைத்த மாவையே அரைப்பது.
பெரும்பாலும் பாடல்கள் கேட்கும் போது அருமையாக இருந்தால் காட்சிப் படுத்துதலில் சொதப்பி விடுவார்கள். இங்கே புதிய இயக்குநர் எப்படிச் செய்திருக்கிறார் என்று தெரியவில்லை. சேரனைப் போல் படத்தின் கதையோடு பாடல்களையும், பாடல் காட்சிகள் கூட கதை சொல்லும் வித்தையையும் புதியவர்கள் யாருமே பயன்படுத்துவதில்லை. எல்லோருமே அந்தப் பக்கம் போக பயப்படுகிறார்கள். சேனையின் உறவு, நண்பர் புதிய இயக்குநர் அதிலிருந்து மாறுபட்டு தனக்கென ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே எங்களது ஆசை... பிடிப்பாரா பார்க்கலாம். ஜிப்பா ஜிமிக்கி ஜெயித்தால் ரா.ராஜசேகர் தமிழ் சினிமாவில் நிலையான இடத்தைப் பிடிக்கலாம். பார்ப்போம்.
பாடல்களை நீங்களும் கேளுங்கள்... உங்களுக்குப் பிடித்திருந்தால் நண்பரை வாழ்த்துங்கள்.... அவரும் வளரட்டும்...