மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2024

புத்தக விமர்சனம் : கமழ்ச்சி

மழ்ச்சி-

எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களின் கதைகளில் வரும் கதைநாயகர்கள் அல்லது நாயகிகளின் உள்ளுணர்வுகளையும், அவர்களைச் சுற்றி நிகழ்பவற்றையும் மிக அற்புதமாகக் காட்சிப்படுத்தியிருப்பார். அப்படி அவர் நடமாடவிட்டிருக்கும் கதாபாத்திரங்களை நாம் 'கமழ்ச்சி'யிலும் பார்க்கலாம், அவர்களுடன் பயணிக்கலாம்... வாழலாம்.


ஆனால் வாசித்து முடித்தபின் அவரின் பெரும்பாலான கதைகளை மற்றவர்களின் கதைகளைப் போல் நம்மால் அவ்வளவு எளிதாகச் சொல்லிவிடமுடியாது, பவா போன்ற ஒருசிலர் பலவற்றை அதனுடன் இணைத்துப் பேசிவிட முடியும். புதியவர்களால் அப்படிச் சொல்லுதல் எளிதன்று என்பதே என் எண்ணம். 

வாசிக்கும் போது நமக்குப் பெரும் தாக்கத்தை உண்டாக்கினாலும் வாசித்து முடித்தபின் அந்தக் கதையை நமக்குள் சுழலச் செய்து பார்த்தால் கண்டிப்பாக அதனுடன் நம்மால் பயணிக்கவே முடியாது, ஏனென்றால் அந்தக் கதைகள் நிறையப் புற, அக விஷயங்களையும் இயற்கையின் பரிணாமங்களையும் பற்றிப் பேசியிருக்கும். அதையெல்லாம் நம்மால் எப்படிக் கதையாகச் சொல்லமுடியும்..?

இப்படியான கதைகள் நிறைந்ததுதான் 'கமழ்ச்சி' தொகுப்பு. 'நான் பயணித்த தூரம் குறைவு, பார்த்த இடங்கள் குறைவு' என்று நேர்ப்பேச்சுக்களில் இவர் கூறி வந்தாலும் எதிர்ப்படும் மனித முகங்கள் ஒவ்வொன்றும் இவருக்கு ஒவ்வொரு உலகத்தை விட்டுச் செல்கின்றன. அந்த ஒவ்வொரு உலகத்தின் பெருமூச்சும் பெருவியப்பும் இவருக்கு அனுபவங்களாகின்றன. மனித உணர்வுகளின் நோக்கை நுண்ணுணர்வைக் கண்டு சொல்கிற விந்தைக் கலைஞன் வண்ணதாசன் என்றால் அவற்றை அவர் பதிவு செய்யும் மொழியோ பிசிறற்றது; அசலானது. நம்மைப் பின்னிப் பிணைக்கும் வாய்மை நிறைந்த மாய வலை அது' என்று பதிப்பாளர் சந்தியா நடராஜன் அவர்கள் எழுதியிருக்கிறார். இதுதான் நிதர்சன உண்மை. ஒரு மனிதனின் உலகத்துக்குள் புகுந்து, வெளிவந்துதான் அவரின் ஒவ்வொரு கதைகளும் பயணிக்கும்.

வண்ணதாசன் தனது 'ஒளியோடும் மாயத்தோடும்' என்னும் என்னுரையில் 'வாழைத் தாரை நிமிர்த்தி வைத்ததும், மேஸ்திரி வீட்டைத் தேடிப் போனதும், சிக்னலில் துணிப்புழுவை வாங்கினதும், ஆற்றில் ராமகிருஷ்ணனின் எலும்பு பொறுக்கி அக்கரை போனதும், பிரப்பங்கூடையின் மூன்றாவது முட்டையைக் கையில் எடுக்கையில் இந்த உலகின் பாரத்தை உணர்ந்ததும், வாய்க்காலில் கன்றுக்குட்டியைக் குளிப்பாட்டியதும் நானன்றி, என் போலன்றி யார்?' என்று சொல்லியிருப்பார். உண்மைதான், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் எழுதுபவன் வாழ்ந்து பார்த்தால்தான் அந்தக் கதாபாத்திரம் எதார்த்தமாய், தான் சொல்ல வருவதை எந்தப் பகட்டுமின்றி சொல்லும்.

ஒரு கனவு , ஒரு சொப்பனம் என்னும் கதையில் உழவர் சந்தைக்குச் செல்லும் சிதம்பரத்துக்கு தனக்கு ஒரு கனவு வந்தது ஞாபகத்துக்கு வருகிறது. அவர் அதை நினைத்த வண்ணம் நிகழ்காலத்தில் நடப்பவைகளையும் கவனிக்கிறார். அவற்றுடன் தன்னை இணைத்துக் கொள்கிறார். ஒரு பெண், பூனைக்குட்டி என நகரும் காட்சிகளில் பூனைக்குட்டியைத் தேடும் போது 'என்ன தேடுறீங்க பன்னீரு..?' என கேட்கும் ருக்மணி அக்காவைப் பார்த்ததும் தான் கண்ட கனவை அக்காவிடம் சொல்லிவிடலாம் என நினைக்கிறார். அதற்கான ஆரம்பமாக 'எப்படி இருக்கீங்க அக்கா..?' என ஆரம்பிக்கும் போது 'எல்லாம் சொப்பனம் போல ஆயிட்டுது பன்னீரு' என அவள் அழ ஆரம்பிப்பதாய் கதை முடியும். கதை முழுவதும் பன்னீரு என்ற சிதம்பரத்தைச் சுற்றிய பயணிக்கும்.

உண்மை, வேறு ஓர் உண்மை, இதுவும் கதை நாயகனின் சொப்பனத்தில் வரும் வாள் பற்றிப் பேசும் கதை. ஒரு மழை நாளில் ஆரம்பிக்கும் இக் கதையில் 'மழை பெய்யுதா சாந்தி' என மனைவியிடம் கேட்கும் கணபதியின் கனவில் வரும் வாள், அதில் அவனுக்குப் பிடித்த ஜீவா, நிகழ்வுகளால் அவள் ராஜபுத்ரிப் பெண்ணாக அவனுக்குத் தெரிய, அந்த நினைவுகளுடன் பயணிக்கிறான். அவன் உலகம் தனி உலகமாய்... அவனின் செய்கைகளைப் பார்த்து 'என்ன கையையும் காலையும் உக்காந்த இடத்திலே ஒசத்திக்கிட்டு' எனச் சாந்தி சிரிக்கும் போது அவலை அணைத்துக் கொள்ளும் அவன் வாளின் ஞாபகத்தில் 'ராஜபுத்ரி' எனச் சொல்ல நினைத்து 'ராஜாத்தி' எனக் கட்டிக் கொள்வான்.

இப்படித்தான் 'புழுவாய்ப் பிறக்கினும்' சுலோச்சனா,   'நீலப் பாலம்' சிற்சபேசன், 'ஒரு பிரப்பங் கூடையும் மூன்றாவது முட்டையும்' பரமன், 'இன்னொரு அர்த்தம்' சந்தானம், 'தோப்பு' சாமிநாதன், 'மனோன்மணீயம்' மனோன்மணி, 'வரும்போது இருந்த வெயில்' திரிகூடம், 'சரியாய்ப் போகுதல்' அருணாசலம், 'வாய்க்கால்' ரெங்கன், 'பச்சை' பச்சை, 'அடைதல்' சுமித்ரா என எல்லாரும் தங்களுடைய, தங்களைச் சேர்ந்தவர்களுடைய வாழ்க்கைக் கதையை நம்முன்னே வி(வ)ரிக்கிறார்கள். நாமும் அவர்களுடன் வாழ்ந்து விட்டுப் போகிறோம். சில கதாபாத்திரங்களை அவ்வளவு எளிதாக நம்மால் கடந்து போய்விட முடியவில்லை.

கமழ்ச்சி என்னும் தலைப்பிலான கதை சற்றே சற்றே - 37 பக்கங்கள் - பெரியது. காக்கும் பெருமாள் மாமா என்னும் அனைத்தும் அறிந்த மனிதரையும் அவருக்குக் கட்ட மாட்டேன் என்று சொல்லி வேறு இடத்தில் திருமணம் செய்து கொடுத்துப் புத்தி சுவாதீனமில்லாமல் போன அன்னம்மாவை அவர் கூட்டி வந்து வாழ்வதைப் பற்றியும், கத்திக் கொண்டும் உடையில்லாமல் தோட்டத்தில் ஓடிக் கொண்டும் திரியும் அன்னம்மாவை அவர் அடைத்து வைத்து ஒரு குழந்தையைப் போல் பார்ப்பதும், மாமாவுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தவன் பல வருடங்களுக்குப் பிறகு அவரைத் தனக்கு முதன் முதலில் அறிமுகம் செய்து வைத்த நண்பனின் மகள் திருமணத்தில் மாமாவையும் அத்தையையும் வயதான கோலத்தில் சந்திக்கும் போது தன் நினைவுகளைச் சுழல விடுவதாய் கதை பயணிக்கும்.

இந்தக் கழமச்சியை என்னால் விரிவாகச் சொல்ல இயலவில்லை. காரணம் மேலே சொன்னதுதான் வாசிக்கும் போது ஆச்சர்யமாய் விரிந்து பயணிக்கும் இந்த நெடுங்கதை தோட்டம், பாவா, பாட்டு, ஏழு புறாக்கள், அத்தையை அவன் பார்க்கும் பார்வை, மாமாவின் குணம், நண்பன் அம்மையப்பன், வேலை இல்லாதவனாய் ஊர் சுற்றிய... அதாவது மாமாவின் பின்னே ஒரு ஈர்ப்பில் சுற்றிய கதை சொல்லி எனக் கதை விரிவாய் பயணிக்கும். நிறையப் பேசும். வாசிக்கும் போது அதை அனுபவிக்கலாம். இரண்டு மூன்று முறை வாசித்தால் கூட என்னால் கமழ்ச்சியின் கதையை அவ்வளவு எளிதாகச் சொல்லிவிட முடியாதுதான். கமழ்ச்சி ஈர்க்கும்.

சிறப்பான தொகுப்பு. ஒவ்வொரு கதையும் ஒருவனின் உலகத்துக்குள் பயணிக்கின்றன. கழச்சியைப் போலத்தான் மற்ற கதைகளும். வாசிக்கும் போது அந்த மனிதர்களுடன் பயணிக்கலாம். அதன்பின் அசை போடும் போது கோர்வையாக அசைபோடுவது என்பது எல்லாருக்கும் வாய்க்கும் என்று சொல்லமுடியாது. நல்ல அனுபவத்தைக் கொடுக்கும், கதையாய் மீண்டும் நம்மால் விரித்துப் பார்ப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல.

'என் எழுத்தில் உணர்ச்சிகளுக்குத்தான் இடமுண்டு; புத்திசாலித்தனங்களுக்கு இடமே இல்லை. உணர்வுகள் நெகிழ்ந்து நெக்குருக்குவனவாகவும், அசட்டுத்தனமாகவும், கள்ளம் கபடமற்ற சிறுபிள்ளைத்தனமாகவும் இருப்பது இயல்புதான். உணர்வுகள் பகடை உருட்டா. தொழுத கையுள்ளும் படை ஒடுங்காது. தரையில் விழுகிற மழைத்தாரை மாதிரி கொப்புளம் வெடிக்கும். ஆனால், உடனடியாய் உடைந்து தண்ணீரோடு தண்ணீராகித் தரை நனைக்கும். எழுத்தும் தரை நனைக்கத்தான்.' என்று பின்னட்டையில் வண்ணதாசன் சொல்லியிருப்பார். உண்மைதான். அப்படித்தான் இருக்கின்றன அவரின் கதைகள் எல்லாம்.

கமழ்ச்சி வித்தியாசமான வாசிப்பனுபவத்தைக் கொடுக்கும்.

----------------------------
கமழ்ச்சி
வண்ணதாசன்
சந்தியா பதிப்பகம்
முதல் பதிப்பு : 2017
விலை ரூ. 195/-
---------------------------

-பரிவை சே.குமார்.


1 எண்ணங்கள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சிறப்பான விமர்சனம். பாராட்டுகள்.