மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2024

சினிமா விமர்சனம் : உள்ளொழுக்கு (மலையாளம்)

ள்ளொழுக்கு

படத்தின் முக்கிய கதாபாத்திரமே மழைதான். படத்தின் ஆரம்பம் முதல் மழை சாரலாய், தூறலாய், பேய் மழையாய் அடைமழை பெய்து கொண்டே இருக்கிறது. முழங்கால் தண்ணீருக்குள் கதாபாத்திரங்கள் நடந்து திரியும் போது அவர்களுடன் நாமும் மழையில் நனைந்து கொண்டே பயணிப்பது போல் இருக்கிறது.


மழை பிடிக்காதவர்கள் இருக்கக் கூடும்தான் என்றாலும் பெரும்பாலானோருக்கு மழை பெய்ய ஆரம்பித்தாலே மனதுக்குள் மகிழ்ச்சி பூக்க ஆரம்பித்துவிடும். மழையில் அது சாரலோ தூறலோ இல்லை மின்னல் இடியென அடித்துப் பெய்யும் மழை என எதுவாக இருந்தாலும் அதில் நனைவதும், நனைந்து கொண்டே சைக்கிளில் அல்லது வண்டியில் பயணிப்பதும் பலருக்கு மகிழ்வான ஒன்றாக இருக்கும். அந்த மகிழ்ச்சிக்கு ஈடு எதுவும் இல்லை... அனுபவித்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும் அந்த மழையின் அழகு.

இந்த மழையோ ஒரு இறந்த உடலைப் புதைக்க முடியாமல் நகரும் நாட்களில் அந்தக் குடும்பத்து மனிதர்களின் அகத்துக்குள் வைத்திருக்கும் ஒன்று, அதனால் மற்றவர்களுக்கு என்ன பாதிப்பு உண்டாகும், அதற்கான காரணிகள் என்ன என்பதை நமக்கு அடித்துப் பெய்தபடியே மெல்ல மெல்ல மழைக்குப் பின் வெட்டரிக்கும் வானமென காட்சிப்படுத்துகிறது.

நாம் என்னதான் அழுகை, சிரிப்பு, வேதனை, மகிழ்ச்சி என எல்லா உணர்ச்சிகளையும் கொட்டித் தீர்த்தாலும், எல்லார் முன்னிலையில் நமக்கான வாழ்வைக் கொண்டாடித் தீர்த்தாலும் புற உணர்ச்சிகளைத் தாண்டி நமக்குள் இருக்கும் அக உணர்ச்சிகளை நாம் அத்தனை எளிதில் வெளியில் கொட்டிவிடுவதில்லை. அது எப்போதும் நமக்குள்ளே புதைத்துதான் கிடக்கும் முதல் காதலைப் போல. அதை வெளிக் கொண்டு வருவதற்காக காலம் எல்லாருக்கும் அமைந்து விடுவதில்லை. சிலருக்கு எப்போதேனும் அப்படியான காலம் அவர் மூலமாகவோ அல்லது மற்றொருவர் மூலமாகவோ அமைந்து விடும் அப்படித்தான் இதில் ஒவ்வொருவரின் அக உணர்ச்சியும் வீட்டில் கிடக்கும் இறந்த உடலின் சாட்சியாக மெல்ல மெல்ல வெளியில் வருகிறது.

அஞ்சுக்கு -பார்வதி - ஒரு காதல், அது பிடிக்காமல் நோயாளியான ஒருவனின் நோயை மறைத்து திருமணம் செய்து வைக்கப்படுகிறது. திருமணத்துக்குப் பின் தன் காதலனுடனான பழக்கத்தைத் தொடர்கிறாள். நோயாளியான கணவனைக் கவனிப்பதிலும் அவள் குறை வைக்கவில்லை என்றாலும் தனக்கான உடல் தேவையை எத்தனை நாள் அடக்கி வைத்திருக்கிற  முடியும் என்ற நிலையில் ஒரு நாள் காதலனிடம் தன்னை ஒப்படைப்பதில் நாட்கள் தள்ளிப் போக, தவித்துப் போகிறாள். அதைவிட தான் ஏமாற்றித்தான் கட்டப்பட்டோம் இதற்கு எல்லாருமே உடந்தை என்று தெரிந்ததும் உடைந்து போகாமல் தன் எதிர்ப்பைக் காட்ட ஆரம்பிக்கிறார்.


லீலாம்மா - ஊர்வசி - தன் மகனின் நோயை மறைத்து அஞ்சுவை மருமகளாக்கிக் கொண்டாலும் அவளை ஒரு மகளாகத்தான் பார்க்கிறாள். அவள் மீது அன்பைத்தான் விதைக்கிறாள். மருமகள் கர்ப்பமாக இருப்பதை நினைத்து மகிழ்ந்து பிள்ளைத் தொட்டி முதல் மேலிருந்து இறக்கி, அந்தக் கர்ப்பம் தன் மகனால் இல்லை என்றானதும் இறப்பு வீட்டுக்குள் சொந்த பந்தங்கள் இருக்கும் நிலையில் தன் கோபத்தை மருமகளிடம் காட்டி, இறக்கிய பிள்ளைத் தொட்டியை மீண்டும் மேலேற்றி, இறுதிக் காட்சி வரை தவித்துத் தடுமாறி பித்துப் பிடித்தவராய் திரிவார்.

தாமஸ் குட்டி - பிரசாந்த் முரளி - நோயாளியான இவருக்கு மனைவி மீது பாசம் உண்டு என்றாலும் படுக்கையில், அடுத்தவரின் உதவியை எதிர்பார்த்தே வாழ்க்கை நடத்தும் வேதனையை முகத்தில் காட்டி நடித்தாலும் படத்தின் பெரும்பாலான காட்சிகளில் பிணமாகவே இருக்கிறார். வாழ்ந்த சில காலங்கள் கூட அப்படித்தான் இருந்திருக்கிறார் மனைவிக்கும் கூட.

ராஜீவ் - அர்ஜூன் ராதாகிருஷ்ணன் - சர்வராக வேலையில் இருந்து கொண்டு நல்ல வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருப்பவர். பார்வதியின் காதலனாய் படம் முழுவதும் வந்து இறுதியில் ஒரே ஒரு வசனத்துடன் அவர் எதற்காக, திருமணத்துக்குப் பின்னும் பார்வதியை நேசிக்கிறார் என்பதை காட்டிச் செல்கிறார்.

பார்வதியின் காதல் பிடிக்காமல் திருமணம் செய்து வைக்கும் ஜார்ஜ் (அலான்சியர் லோபஸ்), ஜிஜி - ஜெயா குரூப் இருவரும் தாங்கள் செய்தது தவறு என்பதை உணர்ந்திருந்தாலும் கூட அதை வெளிக்காட்டாமல் மகளுக்கு எதிராய் மாமியாருக்கு ஆதரவாய்தான் நிற்கிறார்கள்.

மழையின் காரணமாக இறந்த உடலைப் புதைக்க முடியாமல் தடுமாறும் நேரத்தில் மனதிற்குள் புதைத்து வைக்க முடியாமல் அக உணர்ச்சிகள் ஒவ்வொன்றாய் வெளியில் வருவதும், அதன் தீர்வை, இங்கு தீர்வு என்பதைவிட தனக்கான இடமாய் எது அமையுமோ அதை நோக்கி ஒவ்வொருவரும் நகரும் போது முடிவு என்னவாக இருக்கும் என்ற யோசனையை மழை நம்முள் வெள்ளமென எழச் செய்கிறது.


மாமியார் மருமகள் உணர்வுப் போராட்டத்தில் வெற்றி பெற்றது யார்..? இங்கே திரையின் இரு பெரும் மலைகள் ஓரிடத்தில் நிற்கும் போது வெற்றி இவருக்குத்தான் என எப்படிச் சொல்ல முடியும். இரண்டு பேரின் முகங்களும் ஒவ்வொரு உணர்ச்சியையும் பிரதிபலிப்பதில் போட்டி போட்டு பிரதிபலிக்கின்றன. ஊர்வசியைச் சொல்லவே வேண்டாம்... என்ன ஒரு நடிப்பு என வியந்தால்... நாள் தள்ளிப் போய் விட்டதே எனத் தவித்து தன்னை ஏமாற்றிக் கட்டி வைத்தவர்கள் முன்னிலையில் என் முடிவு இதுதான் என்று சொல்லி, தன் உடல் மொழி காட்டும் பார்வதி இன்னொரு பக்கம் வியக்க வைக்கிறார்.

தன் மகனின் உடலைத் தனது கணவரின் உடலைப் புதைத்த இடத்தில்தான் புதைக்க வேண்டுமென லீலாம்மா உறுதியாய் நிற்க, மழை வடியும் வரை காத்திருக்கும் போது அஞ்சு அடக்கம் பண்ணிய பின்பு தன் வாழ்க்கையின் புதிய பயணத்தை ஆரம்பிக்க போகிறேன் எனக் காத்திருக்கிறார். நாமும்தான் இந்த மாமியார் - மருகளின் கோபதாபங்கள் தீருமா...? லீலாம்மா தனித்து விடப்படுவாளா...? அஞ்சுவின் காதல் வாழ்க்கை இனிக்குமா..? மகளின் வாழ்க்கையைக் கெடுத்து விட்டோமே என்ற வருத்தம் பெற்றவர்களுக்கு ஏற்பட்டதா..? என நாம் யோசனையோடு படத்தின் இறுதியை நோக்கிப் பயணிக்கிறோம். 

மழையும் விடுகிறது... மகனின் உடலும் அடக்கம் செய்யப்படுகிறது. இறுதிக் காட்சிகளைப் படகில் ஏறுவதற்கு முன் ஒவ்வொரு மனிதரின் தவிப்பையும் நமக்குள் இறுத்தி நிற்கும்  போது காதலன் கேட்கிறான், 'உன்னைய அவனுடன் கிடந்துறங்க சம்மதித்தேனுல்ல' என்ற வார்த்தையுடன் இன்னும் சில வார்த்தையைச் சொல்கிறான்.

இந்த இடத்தில் பார்வதியின் முடிவு என்னவாக இருக்கும்...? என்பது நமக்குத் தெரிந்தாலும் அவள் எடுப்பதை மாமியார் ஏற்கிறாளா...? இருவரும் என்ன முடிவு செய்கிறார்கள் என்பதைச் சொல்லியிருக்கிறது 'உள்ளொழுக்கு'.

சுஷின் ஷ்யாமின் இசை படத்துக்கு மிகப் பெரிய பலம் . மனிதர்களின் அடிப்படை உணர்வுகளை வெளிப்படுத்தும் இசை மிகச் சிறப்பு. அதேபோல் வெளியில் மழை, வீட்டுக்குள் கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்கும் உடல், மாமியார் மருமகளுக்கு இடையே நிகழும் உணர்வுப் போர் என எல்லாவற்றையும் மனதில் கொண்டு படத்தின் ஒளிப்பதிவைக் கையாண்டிருக்கிறார் ஷெனாத் ஜலால். மழையும் மழை சார்ந்த காட்சிகளுமாய் படத்தின் ஒளிப்பதிவு - கிரண் தாஸ் - மிகச் சிறப்பு.


குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் கலை இயக்குநர் முகம்மது பாவா. நான் ஆரம்பத்தில் சொன்னது போல் மழையும் நனையும் ஆசை கொண்டவர்களாக நாமிருந்தால் இந்த மழை வெள்ளத்தில் இருந்தது போன்ற உணர்வை நமக்குள் விதைத்திருக்கிறார்.

மிகச் சிறப்பான படத்தைக் கொடுத்த இயக்குநர் கிறிஸ்டோ டோமி அவர்களுக்கு வாழ்த்துகள். படத்தின் மிக முக்கியமான காட்சிகளை மற்ற படங்களைப் போல் பில்டப் காட்சியால் நிறைத்திருக்கலாம் அதைச் செய்யாமல் மழை வெள்ளத்தை நிறைத்து, பெய்யும் மழையின் இசையினூடே மனிதர்களின் உணர்வுகளை முகபாவனை வழியாகக் காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு. உள்ளொழுக்கில் சாதித்திருக்கிறார்.

மிகச் சிறப்பான படம். மலையாளப் படங்களே உரித்தான மெதுவாக கதை நகர்தல்தான் என்றாலும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம் இது.

-பரிவை சே.குமார்.

2 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

பார்க்க வேண்டிய லிஸ்ட்டில் இருக்கும் படம்..

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இந்தப் படம் குறித்த மற்றொரு விமர்சனமும் படித்தேன். பார்க்க நினைத்திருக்கிறேன். தங்கள் விமர்சனமும் நன்று.