மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2024

புத்தக விமர்சனம் : சமவெளி

 மவெளி-

எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு.
நான் வாசித்த எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களின் முதல் சிறுகதைத் தொகுப்பு 'ஒரு சிறு இசை', அதன்பின் சமீபத்தில் ஊருக்குப் போனபோது பழனி ஐயா வாசிக்கக் கொடுத்த நான்கு புத்தகத்தில் 'தீரா நதி', 'கமழ்ச்சி' இரண்டையும் வாசித்து முடித்துவிட்டு 'சமவெளி'யைக் கையில் எடுத்தேன். சமீபத்தில் வாசித்த மற்ற இரண்டையும் விட சமவெளியில் இருந்த கதைகளை உள்வாங்கிக் கொண்டு மீண்டும் கதையாக நம்மால் வெளியில் சொல்ல முடியும் என்பதாகவே தோன்றியது.

'சமவெளி'யின் முதல் பதிப்பை விஜயா பதிப்பகம் 1983-ஆம் ஆண்டு கொண்டு வந்திருக்கிறது. அதன்பின் சந்தியா பதிப்பகம் 2011-ல் முதல் பதிப்பையும் 2017-ல் இரண்டாம் பதிப்பையும் கொண்டு வந்திருக்கிறது. விஜயா பதிப்பகம் கொண்டு வந்த 'சமவெளி'யின் விலை 9 ரூபாயாகவும், மாணவர் பதிப்பு 6 ரூபாய்க்கும் கிடைத்திருக்கிறது.
புத்தகத்தின் முதல் பக்கத்தில், 'ஆக்கர் வாங்காத பம்பரம், மணி உதிராத வெள்ளிக் கொலுசு, நசுங்காத பித்தளைக் குடம், கருகிப் போகாத பலாக்கொட்டை, கொறுவாய் இல்லாத தங்கச்சி ஊற்றுகிற தோசை, காயம் படாத ஆண்பிள்ளை மனது... இவையெல்லாம் நன்றாகவா இருக்கும். எல்லாவற்றையும் நீருக்கும், நெருப்புக்கும், காற்றுக்கும், வெளிச்சத்துக்கும் உண்மையாக இருக்க அனுமதியுங்கள். இயல்பு நம்மை வழி நடத்தும். புல்லை யாரும் நடுவதில்லை. தானாக வளர்கிறது' என்று சொல்லியிருக்கிறார்.
'தாகமாய் இருக்கிறவர்கள்' என்னும் கதை புத்தி சுவாதீனமில்லாதவளாய் பார்க்கப்படும் பொன்னம்மா என்பவளின் கதையைப் பேசி, புரோக்கர் மணி அவளைக் கூப்பிட்டுப் பார்த்து அவள் உதறியதும் அவள் சேலையை இழுக்க, அவளோ அவனின் கைலியை உருவிவிட, கோபம் கொண்டு அவளை அடித்துத் துவைக்க அவளைக் காக்கும் விதமாக அம்மையப்பன் வருகிறான். அவள் குடிக்க எதாவது கேட்க, டீ வாங்கப் போனவன் தான் காதலித்த சரசுவை கைக்குழந்தையுடன் டீக்கடையில் பார்த்ததும் அவள் பற்றிய நினைவுகளில் நீந்தி டீயை அவளுக்கு வாங்கிக் கொடுக்கிறான். டீக்கேட்ட பொன்னம்மா எப்பவும் போல் கைகளை விரித்துப் பேருந்தை மறித்துக் கொண்டு நிற்கிறாள்.
'நிலை' தேர் பார்க்கப் போக முடியாத வீட்டு வேலைக்காரச் சிறுமியின் மனசு பேசுவதை நமக்குக் காட்சிப் படுத்துகிறது. தேரைப் பார்க்கவும், அதை இழுக்கவும் எல்லாருக்கும் ஆசையிருக்கும். நிலை என்பது இந்தப் பக்கம் அந்தப்பக்கம் என ரெண்டு காட்சியை நமக்குக் காட்சிப்படுத்தும். 'தேர் எங்கே ஆச்சி வருது?' என ஆரம்பிக்கும் கதையில் தேர் பார்க்கப் போகமுடியாத கோமுவின் நிலையையும், இறுதியில் நிலைக்குத் திரும்பிய அங்கிருந்து கோமுவைப் பார்க்கும் போது தேரின் நிலையையும் பற்றிப் பேசியிருக்கிறது.
'பளு' தனக்கு வேலை வாங்கித் தருவதாக இழுத்தடிப்பவனைச் சந்திங்க வருவதுடன், திருமணமாகி வாழாமல் வீட்டுக்கு வந்திருக்கும் அவனின் தங்கையை தனக்குக் கட்டித் தருவதுடன் இன்னும் கொஞ்சம் பணம் கொடுத்தாவது அந்த வாத்தியார் வேலையை தனக்கு வாங்கிக் கொடுத்தால் இருவருக்கும் கஷ்டம் குறையும் என்று சொல்லும் ஒருவனின் கதையைப் பேசுகிறது.
'வருகை' என்னும் கதையோ சலவைக் கடையில் வேலைபார்க்கும் குஞ்சு தன்னுடன் பள்ளியில் படித்த பக்காவை வீதியில் பார்த்து அவளைப் போய் பார்த்து, கடைக்கு கூட்டி வந்து சர்பத் வாங்கிக் கொடுத்துப் பேசுவதைப் பற்றிப் பேசுகிறது.
'சமவெளி' என்னும் கதை ஒரு படம் வரைபவன் தான் விரும்பி வரைந்த படத்தை காதல் மனைவியிடம் காண்பிக்கும் போது அவள் காட்டும் உடல்மொழி பற்றிப் பேசியிருக்கிறது.
'வரும் போகும்' என்னும் கதையோ தன் மனைவி தன்னை மதிக்கவில்லை என நினைக்கும் ஒருவன் தன் நண்பனைச் சந்தித்து தன் மனக்குமறலைக் கொட்டுவதையும், வீட்டுக்கு வந்த பின் நடப்பவைகளையும் பற்றி விரிவான கதைக்களத்தை நம்முன் விரிக்கிறது.
'பூனைகள்' என்னும் கதையில் தன் அறைக்குள் வந்து அட்டூழியம் செய்து செல்லும் பூனை மாட்டிக் கொள்ள, அதைப் பயமுறுத்தும் விதமாக அறைக்குள் விரட்டித் திரியும் ஒருவனைப் பற்றிப் பேசியிருக்கிறது.
'சில பழைய பாடல்கள்' என்னும் கதையில் தன் கணவனின் இழப்புக்குப் பின் வேறு வீடு வந்து, வேலைக்குப் போறவள் அங்கே தான் என்றோ ஒருநாள் பார்த்த பேருந்தில் பாடிக் கொண்டு பயணித்தவனைச் சந்திக்கிறாள். ஆனால் அதை வெளியில் சொல்லவில்லை. அவன் அவளுக்கு உதவியாய் இருக்கிறான். உலகம் வேறு மாதிரிப் பார்க்கிறது என்றாலும் அவன் தன் உதவியை நிறுத்தவில்லை. அவனை ஒரு கட்டத்தில் பாடச் சொல்கிறாள். இப்படியாக விரிகிறது கதை.
'கூறல்' கதையில் எங்கிட்ட எதுவும் சொல்ல மாட்டேங்கிறீங்க என அழும் தாத்தாவை, சவரம் பண்ணிக் கொள்ள மாட்டேன் என அடம் பிடிக்கும் தாத்தாவை எப்படி சமாதானம் செய்வதென யோசிக்கும் போது , நாவிதர் கிருஷ்ணன் அவரைக் கையாள்வதையும், தாத்தா மீண்டும் பழைய நிலையில் பேசி மகிழ்வதையும் பற்றிப் பேசுகிறது.
'விசாலம்' என்னும் கதை உடம்புக்கு முடியாத தன் அத்தை மகளான சாலாவைப் பார்க்கப் போவதையும், அவள் குறித்த நினைவுகளையும் பற்றிப் பேசியிருக்கிறது.
'வெளியேற்றம்' கதை பக்கத்து வீட்டில் இருந்து தன் வீட்டிற்கும் நிழலைப் பரப்பும் பூவரச மரம் வெட்டப்படுவதை, அந்த வீட்டுக்காரியின் பார்வையில் நமக்குக் காட்சிப்படுத்துகிறது.
'உதிரி'யோ யாருமற்று பூ வியாரம் செய்து கொண்டு வடக்குத் தெரு வேப்பமரத்து வீட்டிற்கு உரிமையோடு வந்து சாப்பாடு போடச் சொல்லும் சுடலையின் இறப்பையும் அதை ஊர் எப்படி எடுத்துக் கொள்கிறது என்பதையும் சொல்கிறது.
இதில் இருக்கும் ஒவ்வொரு கதையும் ஒவ்வொருவருடைய வாழ்க்கையைப் பேசியிருக்கிறது. வாசிக்கும் போது அவர்களுக்கு அருகில் அமர்ந்து அவர்கள் வாழ்க்கையை வாழ்ந்த அனுபவத்தைக் கொடுக்கிறது.
சமவெளி வாசிக்கலாம்.
-----------------------------
சமவெளி
வண்ணதாசன்
சந்தியா பதிப்பகம்
விலை ரூ. 115/-
-----------------------------
-பரிவை சே.குமார்.

1 எண்ணங்கள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதொரு விமர்சனம்.