மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 28 ஏப்ரல், 2020

‘அப்பாக்களை எப்போது முழுதாய் அறிவோம்?’ - திரு. பார்த்திபராஜா

ல்லூரி விரிவுரையாளர் திரு. பார்த்திபராஜா அவர்களின் கட்டுரை... நீளமான பகிர்வுதான்... முகநூலில் பகிர்ந்து கொண்ட போது தனபாலன் அண்ணன்தான் இங்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் என்றார். அவருக்கு நன்றி.

காந்தி சாருக்கும் பார்த்திபராஜாவுக்குமான உறவு எங்களுக்கும் பழனி ஐயாவுக்குமான உறவை மனதுக்குள் நிழலாட வைத்தபடி வாசிக்க வைத்தது. கட்டுரையின் போக்கில் பல இடங்களில் கண்ணீர் வெளியானதைத் தவிர்க்க முடியவில்லை. இது காந்தி சாருக்கும் அவரின் பிள்ளைகளுக்குமான வாழ்க்கையல்ல... ஒவ்வொருவரும் தங்கள் அப்பாவை எப்படி மனதில் வைத்திருக்கிறோம் என்பதை உணர வைக்கும் பதிவு. கண்டிப்பாக வாசிக்க வேண்டிய பகிர்வு.

திரு.பார்த்திபராஜாவின் அனுமதி பெறாமல்தான் இங்கு பகிர்ந்திருக்கிறேன்... எல்லாரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக...  கடிதத்தின் படங்களை பதிவின் ஊடே பகிர்ந்திருக்கிறேன்.

நன்றி திரு.பார்த்திபராஜா.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், அமர்ந்துள்ளார், உட்புறம் மற்றும் வெளிப்புறம்
(முனைவர். க. காந்தி ஐயா)
‘அப்பாக்களை எப்போது முழுதாய் அறிவோம்?’

அல்லது

‘புத்தகங்கள், மரணத்திற்குப் பிறகு நம்மை இனங்காட்டும் ஒரு குறியீடு’

முனைவர் பட்ட பொது வாய்மொழித் தேர்வில் எனது ஆய்வு குறித்து விளக்கவுரை ஆற்றிக் கொண்டிருந்தேன். சாதாரண பி.எச்.டி. வைவா என்றாலே தீட்டப்பட்ட கத்திகளோடு பலர் காத்திருப்பார்கள். நாம் ஸ்பெஷல் கேஸ் வேறு. அவ்வளவு வம்பு இழுத்து, நிறைய ‘நேசர்களை’ வேறு உருவாக்கி வைத்திருந்தோம்.

கொஞ்சம் பதட்டமாக இருந்தது.

தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் ஆய்வுப் பங்களிப்பை விவரித்துக்கொண்டிருந்தேன். குறிப்புத் தாள்களைப் பார்ப்பதும், பார்வையாளர்களை அவ்வப்போது நிமிர்ந்து பார்ப்பதுமாகப் பேசிக் கொண்டிருந்த தருணத்தில்…

பார்வையாளர்கள் வரிசையில் கடைசி இருக்கையிலிருந்து மூன்றாவது வரிசையில் காந்தி சாரைப் பார்த்தேன்.

'அட.. இவர் எப்படி இங்கே?'- ஆச்சரியமாக இருந்தது.

கல்லூரிப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு காரைக்குடியிலேயே இருக்கிறார் என்று நினைத்தேன். இன்று எனது ‘பொது வாய்மொழித் தேர்வு’க்கு வந்து அமர்ந்திருக்கிறாரே… சென்னைப் பல்கலைக் கழகத்தின் மெரினா வளாகத்தில் அவரை இத்தருணத்தில் சந்திக்க நேரும் என்று நான் கற்பனைகூடச் செய்தது கிடையாது.

இடையிடையே அவரைப் பார்த்தபடி பேசிக் கொண்டிருந்தேன்.

அவர் பூரித்த முகத்துடன் என் பேச்சுக்குத் தலையசைத்துக் கொண்டிருந்தார்.

இளநிலை (Under Gratuation) கல்லூரியின் முதலாமாண்டின் முதல் நாளில் வகுப்பெடுத்த ஆசிரியரை, டாக்டர் பட்டம் பெறும் தருவாயில் சந்திக்க நேர்ந்தால் எப்படி இருக்கும்?

அவருடைய கனிவான புன்னகை எனக்கு மிகப்பெரிய உந்து சக்தியைத் தந்தது. ‘எங்கள் காந்தி சார் இருக்கார்… அப்புறம் என்ன?’ என்ற தெம்பு பிறந்தது.

பேசி முடித்தேன். கேள்விகள் முடிந்தது. முனைவர் பட்டம் பெறத் தகுதியானவர் என்று தேர்வாளர் அறிவிப்பு முடிந்ததும் நான் நன்றிகூற, சபை கலைந்து கொண்டிருந்தது.

காந்தி சார் மேடைக்கு வந்தார். பிளாஸ்டிக் கவர் ஒன்றிலிருந்து சால்வை ஒன்றை உருவிப் பிரித்து, எனக்குப் போர்த்தினார்.

‘எதுக்கு சார் இதெல்லாம்?’ என்று கூச்சத்துடன் மறுதலித்தேன்.

‘அட… எங்க பையன் பி.எச்.டி வாங்குறதுல… எங்களுக்கெல்லாம் எவ்வளவு பெருமை?’ என்றார்.

கல்லூரிப் பணி ஓய்வுக்குப் பிறகு, ‘இணையப் பல்கலைக் கழகத்தில்’ தற்காலிகப் பணி ஒன்றில் இருப்பதாகவும், அதன் நிமித்தம் சென்னையில் தங்கியிருப்பதாகவும் சொன்னார்.

‘இன்னிக்குக் காலையில எங்க அலுவலகத்தில் இருந்த பேராசிரியர்கள் பேசிக் கொண்டார்கள்… தெ.பொ.மீ.பற்றிய பி.எச்.டி. மதிப்பீடு இன்னிக்கு… ‘பார்த்திபராஜா’ன்னு ஒரு பையன்… அவனோட பி.எச்.டி.ன்னு பேசிக்கிட்டாங்க. அப்போதான் எனக்குத் தகவல் தெரியும். மதியத்துக்கு மேல பர்மிஷன் சொல்லிட்டு வந்தேன்…’ என்றார்.

அவருடைய இரண்டு கைகளையும் சேர்த்துப் பிடித்துக் கொண்டேன்.

காந்தி சார், எனக்கு பி.ஏ. பட்டப்படிப்பில் தமிழ் கற்பித்த பேராசிரியர்களில் ஒருவர்.

காந்தி சாருக்கு நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். ஏதோ பதட்ட மனநிலையில், படபடப்பாகவே வகுப்பில் பேசுவார்; நிமிடத்துக்கொருமுறை மூக்குக்கண்ணாடியைக் கழற்றி மாட்டுவார்; தேர்வுக்குப் படிக்கும் மாணவனைப் போன்ற முகபாவத்தோடேயே இருப்பார்; வகுப்பிலும் சரி, தனிப்பட்ட முறையிலும் சரி பேசும்போது சிரிக்க நேர்ந்தால், மிகவும் கஷ்டப்பட்டு சிரிப்பதைப் போல கடின முயற்சிக்குப் பிறகே புன்னகைப்பார்.

ஒரு மணிநேர வகுப்புக்கு ஏறத்தாழ முப்பதுக்கும் மேற்பட்ட குறிப்புத் தாள்கள் வைத்திருப்பார். தயாரிப்பு இல்லாமல் ஒரு வகுப்பைக் கூட அவர் நடத்தியதாக எனக்கு நினைவு இல்லை.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

இளநிலை மாணவர்கள்தானே… அவர்களுக்கு ஏன் நிறையச் சொல்ல வேண்டும்… என்று அவர் ஒருபோதும் நினைத்ததில்லை. ஒரு குறிப்பிட்ட விஷயத்தை விளக்கினால், அதனோடு தொடர்புடைய பல்வேறு ஆய்வுக் கருத்துக்களையும் குறிப்பிட்டே அகலுவார்.

அவருடைய இந்தப் பண்புதான், என்னை அவரிடம் நெருங்க வைத்தது. ‘இதைப் படியுங்கள்… அதைப் படியுங்கள்…’ என்று வழிகாட்டினார்.

நூல்கள் பெறுவதற்காக அவருடைய வீட்டுக்குப் போக ஆரம்பித்துப் பிறகு, அவருடன் பேசிக் கொண்டிருப்பதற்காகவே போகத் தொடங்கினேன்.

இளநிலை மாணவன்தான் ஆனாலும் ‘வாங்க, போங்க’ என்றுதான் பேசுவார்.

காந்தி சாரின் அருகாமை எனக்கு ரொம்பப் பிடிக்கும். கட்டம்போட்ட லுங்கியும் முண்டா பனியனுமாக அவர் மர நாற்காலியில் அமர்ந்தபடி பேசுவார். எதிரில் பிளாஸ்டிக் நாற்காலியில் நான்.

அவரது வீட்டுக்குப் போன பத்தாவது நிமிடத்தில் தேநீர் கொண்டுவந்து தருவார் காந்திசாரின் துணைவியார். பன்னிரெண்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த காந்திசாரின் மகள், எனக்குத் தங்கையாகிப் போனார். ஆறாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த மகன, எனக்குத் தம்பியாகிப் போனான்.

பெரும்பாலான குடும்பங்களின் வழக்கப்படி, வீட்டுக்கு வந்திருப்பவரை ‘வாங்க…’ என்று கேட்க வேண்டுமென அம்மாவின் அழைப்புக்குப் பிறகு வந்து எனக்குத் தரிசனம் தருவார்கள் தங்கையும் தம்பியும்.

இரண்டு பேரும் என்னைப் பார்த்து, ‘வாங்கண்ணே…’ என்று கேட்கும்போது, புன்னகைப்பேன்.

‘நல்லா இருக்கீங்களாப்பா?’, ‘என்னப்பா சாப்டாச்சா?’, ‘ஞாயிற்றுக்கிழமை என்னப்பா ஸ்பெஷல்?’ என்று ஏதாவது ஒன்று கேட்பேன்.

அவர்கள் வந்து என்னிடம் பேசும்போதெல்லாம், அவர்களுக்குத் தெரியாமல் என்னிடம் ஜாடை காட்டி, முகத்தை ஒரு வெட்டு வெட்டுவார் காந்திசார்.

அவர்கள் உள்ளே சென்ற பிறகு ஒருநாள், என்னிடம் ரகசியக் குரலில் சொன்னார்:

‘நீங்க அவங்க ரெண்டு பேர் கிட்டயும் பேசுங்க பார்த்திபராஜா… என் பேச்சை அவங்க மதிக்கிறதே இல்ல… நான் என்ன சொன்னாலும் கேட்கிறதில்ல… அவங்க அம்மாதான் அதட்டி அதட்டி சில சமயம் கேட்க வைக்கிறாங்க. நான் ஏதாவது சொன்னா காதுல வாங்கிக்கிறதே இல்ல… கூப்பிட்டாக்கூட திரும்பிப் பார்க்கிறதில்ல… நான் சொன்னேன்னு சொல்லாம… நீங்க கொஞ்சம் பேசுங்க…’

இதைச் சொல்லும்போது கவனித்தேன்… காந்திசாரின் கண்கள் லேசாகக் கலங்கின. நான் காந்திசாரின் மாணவன். அதிலும் பி.ஏ. முதலாமாண்டு படிக்கும் மாணவன். உலக அனுபவம் அதிகம் இல்லாதவன். ஆனால் என்னவோ தெரியவில்லை. என்னைப் பேசுங்க… பேசுங்க… என்றார். அவருடைய குரல் இறைஞ்சுவதுபோல இருந்ததை என்னால் பொறுக்க முடியவில்லை.

எவ்வளவு பெரியவர்? எவ்வளவு படித்தவர்? என்னைப் போன்ற நூற்றுக்கணக்கான மாணவர்களை அன்பால் நிறைப்பவர். அவருடைய பிள்ளைகள் அவரை உதாசீனப்படுத்துகிறார்கள் என்பதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.

‘என்ன பேச்சு வேண்டிக் கெடக்கு? அவங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டு, நாலு அப்பு அப்புவோமா? என்று ஆத்திரமாக வந்தது எனக்கு.

யோசித்துப் பார்த்தேன். பாவம். அவர்களும் சின்னப்பிள்ளைகள், ஏதோ அப்பாவின் மனம் காயம்படும்படி நடந்து கொண்டார்கள். பேசலாம் என்று தோன்றியது.

நேரடியாகப் பேசாமல், அவர்களோடு பேசிப் பேசிச் சிலவற்றைப் புரிந்து கொண்டேன். அப்போதெல்லாம் கல்லூரி ஆசிரியர்களுக்கெல்லாம் மிகச் சாதாரணமான சம்பளம்தான். கிராமத்திலிருக்கும் தன்னுடைய உடன்பிறந்தாரின் குடும்பத்தையும் சேர்த்துப் பார்க்க வேண்டிய பொறுப்பு காந்திசாருக்கு. வீட்டு வசதி வாரியக் குடியிருப்பின் சின்னஞ் சிறு கூட்டில் வாசம். கூடுதலாக எந்த வருமானமும் பார்க்க முடியாத, வாத்தியார் வேலை. பிள்ளைகளின் அலட்சியத்துக்கு அவருடைய பொருளாதாரச் சிக்கலும் ஒரு காரணம் எனப் புரிந்தது.

சின்னச் சின்ன கோபங்கள்… தாபங்கள். தங்கை, தன்னுடைய தகப்பனாகிய காந்திசாரை, ‘அப்பா…’ என்று கூப்பிடுவதில்லை என்பதைக் கவனித்தேன். ‘எனக்குக் கூப்பிடப் புடிக்கல…’ என்றுவேறு சொன்னது அது.

‘ஏன்பா இப்படி?’ என்றால், ‘என்ன எங்களுக்குப் பெருசா செஞ்சிட்டாரு?’ என்று நினைத்தார்கள் அவர்கள்.

அவரை நடத்தும் முறையில் மாற்றம் வந்ததோ இல்லையோ… ‘பார்த்தி அண்ணே… பார்த்தி அண்ணே…’ என்று என்னிடம் பாசமாக ஒட்டிக் கொண்டார்கள்.

அப்பாவிடம் வைக்க வேண்டிய சில முறையீடுகள் என் வழியாகப் பரிமாறப்பட்டன.

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

‘பார்த்தி அண்ணே சொன்னா… அவரு கேப்பாரு…’ என்றார்கள் அவர்கள்.

தங்கை, பன்னிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு, எங்கள் கல்லூரியிலேயே அறிவியல் படிப்பில் வந்து சேர்ந்தது.
அப்பாவை அலட்சியம் செய்வதை நான் அவ்வப்போது பார்த்துக் கொண்டுதான் இருந்தேன்.

மூன்றாண்டுகள் கல்லூரிப் படிப்பை முடித்ததும் மதுரை காமராசர் பல்கலையில் சேருவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்த என்னை மடைமாற்றிச் சென்னைப் பல்கலைக்கு அனுப்பி வைத்தவர் காந்திசார் தான்.

பிறகு, அவ்வப்போது கடிதங்கள் எழுதிக் கொள்வதோடு சரி. ஊருக்குப் போகும் சமயங்களில் எல்லாப் பேராசிரியர்களையும் சந்திக்கலாம் என்பதால் கல்லூரிக்குப் போவேன். அங்குதான் காந்திசாரைப் பார்க்க வாய்த்தது.

‘தமிழக வரலாறும் பண்பாடும்’ பாடத்தைப் பயிலும்போது, ஒரு நூலைக் குறிப்புதவி நூலாகப் படித்தேன்.

‘தமிழர் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும்’ என்னும் நூல். ஏராளமான தகவல்கள் அடக்கிய மிக முக்கியமான புத்தகம். எழுதியவர் யார் தெரியுமா? டாக்டர் க.காந்தி.

ஆம். எங்கள் காந்திசார் தான். ‘தமிழர் எண்ணங்கள்’ என்ற அவருடைய மற்றொரு நூலையும் படித்தேன்.

இந்த நூல்களைப் படித்த பிறகு, காந்திசாரைப் பற்றிய பிம்பம் என்னுள் பூதாகரமாய் எழுந்து நின்றது.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வு செய்திருக்கிறார். பிறகு அங்கேயே ஆராய்ச்சி அலுவலராகப் பணி செய்திருக்கிறார். அப்போது எழுதியவைதான் மேற்குறித்த அந்த நூல்கள்.

வ.சுப.மாணிக்கனாரின், ‘தமிழ்க்காதல்’ போல, மு.வரதராசனாரின், ‘சங்க இலக்கியத்தில் இயற்கை’ போல, தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின், ‘கானல்வரி’ போல… ‘தமிழர் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும்’ மிக முக்கியமான படைப்பு.

அப்படிப்பட்ட காத்திரமான நூல்களைப் படைத்த காந்திசாரிடம் படித்தோம் என்பதே பெருமையாக இருந்தது. ஒருவகையில், ஏன் இதுபற்றியெல்லாம் காந்திசார் நம்மிடம் பகிர்ந்து கொள்ளவில்லை என்று வருத்தமும் மேலோங்கியது.

தன்னுடைய நூல்களைத் தானே ஏன் சொல்ல வேண்டும்? மாணவர்கள் கண்டுபிடித்துக் கொள்ளட்டுமே என்ற எண்ணமாக இருக்க வேண்டும் என்று தோன்றியது.

காந்திசாரிடமிருந்து எனது படிப்பை விசாரித்தும், படிக்க வேண்டிய நூல்கள், சந்திக்க வேண்டிய நபர்கள் குறித்தும் அவ்வப்போது கடிதங்கள் வந்து கொண்டிருந்தன.

பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்ச்சி வெளியான நாள். நமக்குத் தெரிந்த பசங்க யார் யார்… பன்னிரெண்டாம் வகுப்பு? என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, காந்திசாருடைய மகனின் நினைவு வந்தது.

தொலைபேசியில் அழைத்தேன்.

மதிப்பெண் ரொம்ப ரொம்பக் குறைவு. கட்டாயப்படுத்தித்தான் காந்திசார் அவனை என்னிடம் தொலைபேசியில் பேச வைத்தார்.

‘தைரியமா இரு. மதிப்பெண் பெரிய விஷயமில்ல… உனக்குப் பிடிச்ச துறையைத் தேர்ந்தெடு… கண்டிப்பா அதில் சாதிக்கலாம்….’ என்று தேற்றினேன்.

பொறியியல் படிக்க வேண்டும் என்ற தன்னுடைய ஆர்வத்தில் மண் விழுந்துவிட்டதே என்று சொல்லி அழுதான் அந்தத் தம்பி.

அப்போதெல்லாம்… பொறியியல் படிப்புக்குப் பெரிய மவுசு இருந்த நேரம். என்ன செய்வது? மனதைத் தேற்றிக் கொண்டு, கலை அறிவியல் படிப்புகளில் ஒன்றைத் தேர்ந்தெடு… என்று சொல்லித் துண்டித்தேன்.

அந்த வாரத்திலேயே எங்கள் விடுதியின் பொதுத் தொலைபேசிக்கு அழைத்திருந்தார் காந்திசார்.

‘மணிகண்டனுக்கு எஞ்சினியரிங் காலேஜ் கவுன்சிலிங் வந்திருக்கு… அண்ணா யுனிவர்சிடியில போய்க் கலந்துக்கணும்…’

‘நீங்க வாங்க சார்… நான் கூடவே இருந்து பார்த்துக்கிறேன்…’ என்றேன்.

‘திருவல்லிக்கேணியிலேயே ஒரு அறை எடுத்துக்கலாம். நானும் தம்பியும் தங்கிக்கிறோம்…. முன்னாலயே பார்த்து புக் பண்ணி வச்சிடுங்க பார்த்திபராஜா…’

‘சரிங்க சார்...’

‘அப்புறம்… கவுன்சிலிங் நடைமுறைகள் என்னென்ன… எப்படிப் பண்ணனும்னு தெரிஞ்சவங்க யார்கிட்டயாவது கேட்டு வைச்சிக்கிடுங்க… ஏன்னா… எனக்கு இப்போ உள்ள நடைமுறைகள் அவ்வளவா தெரியாது…’

‘சரிங்க சார்…’ என்றேன்.

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

மிகவும் குறைவாக மதிப்பெண் வாங்கிய காந்திசாரின் மகன் மணிகண்டனுக்கு எப்படி பொறியியல் படிப்புக்குக் கலந்தாய்வு வந்தது? வியப்பாக இருந்தது.

அப்போது பொறியியல், மருத்துவப் படிப்பு இட ஒதுக்கீட்டில், ‘தமிழறிஞர் கோட்டா’ என ஒன்றிருந்தது. தமிழறிஞர்கள், தங்கள் பிள்ளைகளின்… பேரப்பிள்ளைகளின் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். ஒரு குழு… அவர்களின் தகுதியை ஆராய்ந்து வரிசை முறை (Rank) ஒன்றை உருவாக்கும். அதன் அடிப்படையில் முன்னுரிமை தந்து அந்தப் பிள்ளைகளுக்கு இடத்தை அளிப்பார்கள்.

இந்த நடைமுறையின்படிதான், காந்திசாரின் மகனுக்குப் பொறியியல் படிப்பில் இடம் கிடைத்திருக்கிறது.

காந்திசாரும் மணிகண்டனும் வந்தார்கள். நெடுநெடுவென்று வளர்த்தியாய் ஒல்லியாக இருந்தான் மணிகண்டன். காந்திசார்… இன்னும் ஒடுங்கிப் போயிருந்தார். தலையில் நரைகூடியிருந்தது. கண்ணாடியைக் கழற்றிக் கழற்றி மாட்டும் பழக்கம் மட்டும் இன்னும் மாறாமலேயே அவரிடம் தங்கியிருந்தது.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் விருந்துநிலைப் பேராசிரியராகப் பணிபுரிந்த நல்லதம்பி அவர்களிடம் பொறியியல் கலந்தாய்வு நடைமுறைகளை விசாரித்துத் தெரிந்துகொண்டேன்.

காந்திசாரிடம் விளக்கிச் சொன்னேன். அவருக்குப் பெரிதும் புரியவில்லை.

‘அண்ணே… அப்பா வெளியிலயே இருக்கட்டும்… கவுன்சிலிங் போகும்போது நீங்களே என்கூட வாங்கண்ணே…’ என்றான் மணிகண்டன்.

காந்திசாரை ஏறிட்டுப் பார்த்தேன்.

நூறு சதவிகிதத் திருப்தியோடு தலையாட்டி ஆமோதித்தார். கவுன்சிலிங் போக மணிகண்டன் என்னை அழைத்ததில் அவருக்கு ரொம்ப மகிழ்ச்சி என்று முகத்திலேயே தெரிந்தது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குச் சென்று இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து, பலகையில் ஒட்டப்பட்டிருந்த பட்டியலைப் பார்த்தேன்.

அந்த ஆண்டு நிபுணர் குழு தயாரித்திருந்த பட்டியலில் முதலிடத்தில் காந்திசாரின் பெயர்தான் இருந்தது. இருபதாண்டுகளுக்கு முந்தைய அவருடைய உழைப்புக்கு அரசு இப்போது தரும் மரியாதை அது. மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது எனக்கு.

எனது மரியாதைக்குரிய தமிழறிஞர்கள், எழுத்தாளர்களில் சிலரும் அங்கு வரிசையில் அமர்ந்திருந்தார்கள். சென்று வணக்கம் சொல்லி அவர்களுக்கு மரியாதை செலுத்தி வந்தேன்.

மணிகண்டனிடம் சொன்னேன்:

‘மணி… அவர் யார் தெரியுமா… பெரிய தமிழ்ப் பேராசிரியர்… இவர்… முக்கியமான நாவலாசிரியர்… இவர்… இவர்…’

நான் சொல்லச் சொல்ல மணிகண்டன் ஆச்சர்யத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

‘மணி… இவர்களில் இந்த ஆண்டு யாருக்கு முதல் இடம் தெரியுமா?’

மணி என்னை ஏறிட்டுப் பார்த்தான். யார் என்ற கேள்வியை அவன் புருவங்களின் நெறிப்பில் என்னைத் திருப்பிக் கேட்டான்.

‘தமிழறிஞர்களில் இந்த வருஷம் பர்ஸ்ட் ரேங்க் வாங்கியவர்… டாக்டர் க.காந்தி, எம்.ஏ., பி.எச்.டி.,’

சொல்லும்போதே அவனுடைய முகத்தை ஊன்றிக் கவனித்தேன்.

வியப்பில் அவன் முகம் விரிந்தது.

‘அப்பாவா?’

‘ஆமா மணி…’

‘சூப்பர்னா… சூப்பர்னா…’ என்றான் குழந்தையைப் போன்ற குதூகலத்தோடு.

அவனுடைய குதூகலத்தை நான் மிகவும் ரசித்துக் கொண்டிருந்தேன்.

கலந்தாய்வுக்கு உள்ளே அழைத்தார்கள்.

கணிப்பொறிகளோடு பத்துப் பேர் ஒரு பெரிய அறையில் அமர்ந்திருந்தார்கள். மணிகண்டனை முன்னால் அனுப்பிச் சற்றுப் பின்னால் போனேன் நான். மணிகண்டன் ஒரு கணிப்பொறிக்காரருக்கு அருகில் அமர்ந்தான். நான் அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்து கொண்டேன்.

கணிப்பொறிக்காரர் ஏதோ சொல்லியபடி, கனிணியை இயக்கினார். திரையில் தமிழகத்தின் அனைத்து முன்னணிப் பொறியியல் கல்லூரிகளும் பட்டியலிடப்பட்டு ஒளிர்ந்தன.

அதாவது, அந்த ஆண்டு தமிழறிஞர் கோட்டாவுக்கு இருபது இடங்கள் (Seats) என்றால், முதல் தகுதியில் இருக்கும் காந்திசாருடைய மகனுக்கு இருபது பொறியியல் கல்லூரிகளும் ‘இடமுள்ளது’ என்று காட்டும்.

இவன் தேர்ந்தெடுத்த பிறகு, அடுத்து வருபவர்க்கு, பத்தொன்பது கல்லூரிகளில் மட்டுமே இடம் இருக்கும். இப்படி ஒவ்வொருவர் ஒவ்வொருவராக இடம் பிடிக்க இருபதாவது நபருக்கு ஒரே ஒரு சாய்ஸ்தான் இருக்கும். அந்தக் கல்லூரியைத்தான் அவர் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும்.

கணினி காட்டிய கல்லூரிகளின் பெயர்ப்பட்டியலை வியந்து பார்த்தவன், கணிப்பொறிக்காரரிடம் அனுமதி பெற்று வேகமாக என்னிடம் வந்தான்.

‘அண்ணே… அந்த காலேஜ்ல எடம் காட்டுதுண்ணே… இந்தக் காலேஜ்ல எடம் காட்டுதுண்ணே… அந்த காலேஜ்தான் தமிழ்நாட்டுல நம்பர் ஒன் எஞ்சினியரிங் காலேஜ்ணே… அதுலயே சீட்டுக் கெடைக்கும் போலருக்குண்ணே…’

பொங்கிப் பொங்கி வழிந்தது அந்த முகத்தில் பூரிப்பு. பதற்றத்தில் மணிகண்டன் கொஞ்சம் குழறுகிறான் என்றுகூட எனக்குத் தோன்றியது. அதையும் சேர்ந்து ரசித்துக் கொண்டிருந்தேன்.

‘ஒனக்குப் புடிச்ச காலேஜா பார்த்து எடு மணி… அண்ணா யுனிவர்சிடிலயும் கூட எடம் இருக்குதானே உனக்கு?’ என்று கேட்டேன்.

‘அண்ணா யுனிவர்சிடிலயும் எடம் இருக்குதுண்ணே… எதுவேணும்னாலும் எடுக்கலாம்… நாம எடுத்த பிறகுதான் அண்ணே மத்தவங்களுக்கு எடம்…’

‘சரிப்பா.. பார்த்து முடிவு பண்ணு…’ என்றேன்.

அங்கேயே இருந்த தொலைபேசியில் நண்பர்களுக்கு அழைத்துப் பேசினான் மணிகண்டன்.

திரும்பி வந்து, ‘அண்ணே… திருச்சி நேஷனல் காலேஜ்…’ என்று சொல்லிவிட்டுக் கணிப்பொறிக்காரரிடம் சென்றான்.

இடத்தை உறுதிப்படுத்திக் கணிப்பொறி வழங்கிய துண்டுத் தாளைப் பெற்றுக் கொண்டு, வெளியே வந்தோம்.

மணிகண்டனின் கால் மண்ணில் பாவவில்லை. பரபரத்துக் கொண்டிருந்தான். நண்பர்களுக்கு மீண்டும் தொலைபேசி செய்தான். வாயெல்லாம் பல்லாகச் சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான்.

‘ஆமாடா.. ஆமாடா… ஷாக் ஆயிட்டேன் டா… இருபது காலேஜ்லயும் எடம்… என்ன பண்றதுன்னே எனக்குப் புரியலைடா…’

ஏதேதோ பேசிக் கொண்டிருந்தான். மஞ்சள் தொலைபேசிக்கு அருகில் படிக்கட்டில் உட்கார்ந்தபடி அவன் நண்பர்களிடம் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை

தூரத்தில், ஒரு மரத்தடி நிழலில் இருந்த சிமிண்ட் பெஞ்சில், மணிகண்டனின் சான்றிதழ் தாள்களைக் கையில் வைத்துக் கொண்டு, ஒரு துணிக்கடை ‘பிக் ஸாப்பர்’ பையைக் கால்களுக்கிடையே வைத்துக் கொண்டு காந்திசார் உட்கார்ந்திருந்தார். ஆங்காங்கே நரைத்த தலைமுடி, அவர் மீது விழுந்த ஒளிக்கீற்றில் மினுமினுத்தது. ஏனோ காந்திசாரைப் பார்க்கும்போது பரிதாபமாக இருந்தது. அழுகை அழுகையாக வந்தது எனக்கு.

பேசி முடித்துவிட்டு மணிகண்டன் என்னிடம் வந்தான். நடையிலேயே துள்ளல் தெரிந்தது.

‘அண்ணே… என்னோட பிரென்ஸ் எல்லாம்… ‘எப்டிடா… எப்டிடா…’ன்னு கேக்குறானுக அண்ணே… ‘ஒன்னவிட அதிக மார்க்கு வாங்குன எங்களுக்கெல்லாம் இன்னும் கவுன்சிலிங்கே வரல. அதுக்குள்ள நீ முடிச்சிட்ட. அதுவும் நல்ல நேஷனல் காலேஜ்லயே வாங்கிட்ட…’ன்னு பொறாமப்படுறானுங்க அண்ணே…’ என்றான் மணி.

நான் அவனைத் தீர்க்கமாகப் பார்த்தேன். காந்திசாரைப் பிள்ளைகள் எப்படி நடத்தினார்கள் என்று தெரியும். இதே மணிகூட வயசைமீறி என்னென்னவெல்லாம் சொன்னான்?

‘மணி… ஒரு நிமிஷம்…’

‘என்னண்ணே…’

‘இந்த சீட்டு நீ படிச்ச படிப்புக்கு இல்ல…’

புரிந்தது போலத் தலையசைத்தான்.

‘உங்கப்பா… தன்னை வருத்திக்கிட்டு, இராத்திரி பகலா தூக்கமுழிச்சு, கஷ்டப்பட்டு, அவமானப்பட்டு படிச்சு எழுதுன புத்தகங்களுக்காகக் கெடைச்ச சீட்டு. அந்த மனுஷன் இருவது வருசத்துக்கு முன்னால இந்த மெட்ராஸ்ல ஒழைச்ச ஒழைப்புக்குக் கெடைச்ச சீட்டு மணி…’

மணி ஆமோதித்துத் தலையசைத்தான். முகம் மாறியிருந்தது.

‘தமிழ்நாட்டோட பெரிய காலேஜ்ல… நல்ல காலேஜ்ல நீ எஞ்சினியரிங் சேரப்போற. உன்னோட பிரென்ஸ்ங்ள்ள.. நல்ல மார்க் வாங்குன பசங்களுக்கு அந்தக் காலேஜ் கெடைக்குமோ கெடைக்காதோ… உனக்குக் கெடைச்சிருக்கு. தோ பாரு மணி… நீ எஞ்சினியரிங் படிச்ச பெறகு வேலைக்குப் போயி சம்பாதிப்ப. நல்ல வசதியான வாழ்க்கை வாழுவ. ஆனா ஒன்னை மட்டும் ஞாபகத்துல வச்சுக்கோ மணி… நீ சாப்பிடப்போற சாப்பாட்டுல ஒன்னோட பேரு எழுதியிருக்காது… உங்க அப்பாவோட பேருதான் எழுதியிருக்கும்….’

சின்னப்பையனிடம் அதிகமாகப் பேசிவிட்டேனோ என்று தோன்றியது. ஆனால் இப்போது பேசித்தான் ஆக வேண்டும். இப்போது சொல்லவில்லை என்றால் எப்போதுதான் சொல்லுவது? கொஞ்சம் கடுமையாக இருந்தாலும் பரவாயில்லை…. ஒறைக்கட்டும் என்று சொல்லிவிட்டேன்.

இளைஞர்கள் புத்திசாலிகள். உடனடியாகப் புரிந்துகொள்ளும் திறன் மிக்கவர்கள். தவறுகளைத் திருத்திக் கொள்ளும் நேர்மை மிக்கவர்கள். மணியும் புரிந்து கொள்வான்.

‘மணி அப்பாகிட்ட தகவலைச் சொல்லிக்கிட்டு இரு. குடிக்க தண்ணி தீர்ந்து போச்சு. வாட்டர் பாட்டில்ல புடிச்சிட்டு வந்துடறேன்…’ என்று சொல்லிவிட்டு நடந்தேன்.

குடிதண்ணீர்க் குழாயில் தண்ணீர் பிடித்தபடி, மரநிழல் சிமெண்ட் பெஞ்ச்சைப் பார்த்தேன்.

மணி… கவுன்சிலிங்கில் நடந்தவற்றை ஆச்சரியத்தோடு விளக்கிக் கொண்டிருந்தான்.

அவனது இரண்டு கைகளும் காந்திசாரின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டிருந்தன.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், புன்னகை
(Prof. பார்த்திபராஜா)
(பின் குறிப்பு: ஐந்தாண்டுகளுக்கு முன்பு காரைக்குடி கம்பன் கழகத்தின் அழைப்பின்பேரில் ‘கம்பனும் நாடகவியலும்’ என்னும் தலைப்பில் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தேன். ‘கம்பன் அடிசூடி’ அண்ணன் பழ.பழநியப்பன் அவர்கள் வெளிநாடு சென்றிருந்தார்கள். பேராசிரியர் அண்ணன் மு.பழனியப்பன் அவர்கள் ஏற்பாட்டில் உரையாற்றினேன். முன் வரிசையில் எனது மரியாதைக்குரிய பல ஆளுமைகள். பேராசிரியர் அய்க்கண் உள்ளிட்டவர்கள் வரிசையில் எனது மரியாதைக்குரிய ஆசிரியப் பெருந்தகை ம.கார்மேகம் சார்.

கூட்டம் முடிந்ததும் வந்து எனது கைகளைப் பற்றிக் கொண்டு நலம் விசாரித்தார் கார்மேகம் சார்.

‘காந்திசாரைப் பற்றிய சேதி உன்னோட காதுக்கு வந்ததா…?’ என்று கேட்டார்.

‘இல்லையே… என்ன விஷயம் சார்?’ என்றேன்.

‘காந்திசார் தவறிப் போயிட்டாருப்பா…’

‘சார்.. சார்… எப்போ… எப்டி… யாருமே தகவல் சொல்லலியே சார்… தகவல் தெரியாதே சார்…’

அழுதுவிட்டேன் நான்.

கூட்டம் முடிந்து விடைபெற்றுக் கொண்டிருந்த பலர் என்னைத் திரும்பி வேடிக்கை பார்த்தார்கள்.

‘இவனுக்கு காந்தி ரொம்ப நெருக்கம். கூட்டம் தொடங்குறதுக்கு முன்னால சொன்னா… இப்டிக் கலங்கிப் போயிருவான்னுதான்… கூட்டம் முடிஞ்சதும் சொல்லலாம்னு வெயிட் பண்ணேன்…’ என்று ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்.

கூட்டம் முடிந்து அப்பாவின் டி.வி.எஸ்.பிஃப்டி வண்டியில் தேவகோட்டை ரஸ்தாவிலிருக்கும் எங்கள் வீட்டை நோக்கி விரைந்தேன். இருளில் கண்ணை மீறி வழிந்த கண்ணீரை நான் துடைத்துக்கொள்ள விரும்பவில்லை.

‘போய் வாருங்கள் காந்திசார்… காலமெல்லாம் நான் நினைத்திருப்பேன் உங்களை…’

2001 இல் எனது முதல்நூல் அச்சிலிருக்கும்போது காந்திசாருக்குக் கடிதம் எழுதியிருந்தேன். 14.07.2001 ஆம் தேதியிட்டு அவர் எனக்கு பதில் எழுதியிருந்தார்.

"தங்களின் எழுத்து முயற்சிகள் தொடர வாழ்த்துகிறேன். மரணத்திற்குப் பிறகு நம்மை இனங்காட்டும் ஒரு குறியீடு"

என அக்கடிதத்தில் ஒருவரி குறிப்பிட்டிருந்தார். 

------------

நன்றி.
-'பரிவை' சே.குமார்.

7 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மிக்க நன்றி குமார்...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அடுத்த பதிவாக கடிதத்தை பகிர்வீர்களா...?

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நன்றி நண்பரே

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மனதைத் தொட்ட பதிவு.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மனதைத் தொட்டுவிட்டது குமார்.

துளசிதரன்

குமார் கண்ணுல தண்ணி கட்டிருச்சு படிக்க படிக்க...மகனின் கவுன்சலிங்க் அங்கு காத்திருந்த போது அந்த இடம் எல்லாம் மனதை என்னவோ செய்தது. கடைசி வரி...ரொம்பவே நெகிழ்த்திவிட்டது..

கீதா

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கடிதத்தையும் இணைத்து விட்டீர்கள்... நன்றி...

ஸ்ரீராம். சொன்னது…

தெகிழ்ச்சி.