சில நிகழ்வுகள் மனசுக்கு நிறைவைக் கொடுக்கும்... அப்படியான நிகழ்வுகள் இப்பாலையில் பூப்பது என்பது அரிது. அதுவும் லேசான குளிர் நிறைந்த மாலையில் செயற்கை ஏரிக் கரையோரம் பேரீச்சம் மரங்கள் இல்லாத... நம்ம ஊர் நாட்டுக்கருவை மரங்களைப் போன்ற மரங்கள் நிறைந்த ஓரிடத்தில் பறவைகளின் ஆனந்த ராகத்தைக் கேட்டபடி, நம்ம ஊரில் மடை திறந்து தண்ணீர் வெளியாகும் போது கேட்கும் ஓசையினை ஒத்த ஓசையை ஏரிக்குள் குழாய் வழிப் பாயும் நீர் கொடுக்க வாசித்த புத்தகம் குறித்து அதன் ஆசிரியருடன் ஒரு அளவளாவல் செய்தல் என்பது வரம்தானே.
கனவுப்பிரியன் அண்ணனின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு 'சுமையா'. இது குறித்தான ஒரு விமர்சனக் கூட்டம் ஒன்றை நிகழ்த்த வேண்டுமென காளியின் காதலன் தல பிரபு கங்காதரன் அவர்கள் ஓராண்டுக்கும் மேலாக சொல்லிக் கொண்டே இருந்தார். இப்பாலையில் அப்படியான ஒரு நிகழ்வைச் சாத்தியமாக்குதல் என்பதும் ஒரு குழுவாய் மிகச் சிறந்த எழுத்தாளர்களையும் வாசிப்பாளர்களையும் என்னைப் போன்ற பார்வையாளர்களையும் (பார்வையாளன் இல்லையென்றால் விழா சிறக்காதுல்ல) ஒருங்கிணைத்தல் என்பது எத்தனை சிரமம் என்பதை இந்த ஓராண்டு சொல்லிக் கொண்டேயிருக்க, ஒரு வழியாக நேற்றைய தினம் அந்த நிகழ்வைச் சிறப்பாக நிகழ்த்தி முடித்துள்ளோம். இதற்காக உழைத்த சகோதரர் பிரபு அவர்களுக்கும் கேமராக் கவிஞர் அண்ணன் சுபஹான் அவர்களுக்கும் நன்றி.
அல் குத்ரா என்னுமிடத்தில் சந்திப்பு என முடிவாக... இதற்கென தூபம் போட்ட பிரபு, பற்றவைக்க.... அந்தத் திரியின் அடியொற்றி சுபஹான் அவர்கள் பத்திரிக்கை எல்லாம் அடித்து அழைக்காமல் முகநூல் மூலமாகவே அழைப்பு விடுத்து ஒரு சிறு கூட்டத்தைக் கூட்டிவிட்டார்... பிரபு அவர்கள் சொன்னதைப் போல் என்னையும் சுபஹான் அவர்கள் அதற்கான அழைப்பு இணைப்பில் இணைக்கவில்லைதான்... கேட்டால் தமிழ்ல ஏன்யா பேர் வச்சிருக்கே... இணைய மாட்டேங்குது என்பார்...:).
அல்குத்ரா பூங்கா வாசலில் குதிரை உபகரணங்கள் விற்பனை நிலையம் முன்னே காத்திருந்து ஒவ்வொருவராய் வர, ஒன்றிணைந்து பூங்காவின் பின்னே சிறிது தூரத்தில் தெரிந்த ஆப்பிள் வடிவ இரும்புக் கூண்டை நோக்கிக் கார்கள் அணிவகுக்க, மேலே சொன்ன செயற்கை ஏரி கண்ணில் காட்சியாய்... நிழலான மரங்களின் கீழெல்லாம் மனிதத் தலைகள். மெல்ல மண் பாதையில் ஊர்ந்து சென்று சற்றே தள்ளியிருந்த ஒரு நிழலில் பாய்களை விரிந்து அமர்ந்து கொண்டோம்.
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கி, பின்னர் சுய அறிமுகம் ஆரம்பமானது. பிரபுதான் தலைமை என்பதாலும் நம்மைப் பற்றி அவருக்குத் தெரியும் என்பதாலும் அவரே சொல்லிவிட, என்னத்தைச் சாதித்தோம் நம்மைப் பற்றிச் சொல்ல... நமக்கு அதிகம் பேசவும் வராது... அம்புட்டுத்தானா என்று கேட்குமளவுக்கு சொல்லி முடிச்சாச்சு... அதுக்கு மேல என்ன இருக்கும் நம்மிடம்...? வரிசையாய் அறிமுகங்கள்.. எல்லாருமே பெரிய ஆட்கள்... சிறந்த பின்புலம் உள்ளவர்கள். ஒவ்வொருவராய் அறிமுகம் செய்யும் போது ஆச்சர்யமாய் இருந்தது... அடங்கொக்காமக்கா எல்லாம் பெரிய தலக்கட்டா இருக்கே அப்படின்னு யோசனையா இருந்தப்போ நீங்க எப்படி உங்க ஊருல தலக்கட்டோ அப்படி அவங்க அவுங்க ஊருலன்னு சொல்ல மனசைத் தேத்திக்கிட்டாச்சு.
ஒருவர் யாக்கை இயக்குனரின் தம்பி... மற்றொருவரோ ஒரு பிரபல இயக்குநரின் நண்பர். வேஷ்டியில் வந்தவர் ஜெயா தொலைக்காட்சியில் பத்து வருடங்கள் செய்தி வாசிப்பாளராக இருந்தவர்... ஒருவர் ஜெயமோகனின் நண்பர்... இப்படியான அறிமுகங்கள் நிகழ நம்ம முத்து நிலவன் ஐயா அவர்களின் மகன் நெருடாவும் வந்திருந்தார். . அபுதாபியில் இருந்து விழா இடம் நோக்கிச் செல்லும் போது வழியில் சந்தித்தோம். அவர் என்னை அடையாளம் கண்டு கொள்ள எனக்குத்தான் முதலில் அடையாளம் தெரியவில்லை, கில்லர்ஜி அண்ணனுடன் அவரைச் சந்திக் சென்றதை நினைவு கூர்ந்தார். ஒரு வழியாக சுய அறிமுகம் முடிந்து 'சுமையா' குறித்தான சுவையான விவாதம் ஆரம்பமானது.
இப்படியான ஒரு இலக்கிய நிகழ்வை முன்னெடுக்கக் காரணமே படைப்பாளிகளை வெளிக்கொணரவே... ஒரு படைப்பாளியின் படைப்பு குறித்த விமர்சனத்தை... குறிப்பாக நிறைகளைவிட குறைகளைச் சுட்டுக் காட்டி செம்மைப்படுத்தும் நிகழ்வே இது... இது தொடக்கம் தான்... இனி அடுத்தடுத்த நிகழ்வுகள் அடிக்கடி நிகழ வேண்டும். முதல் நிகழ்ச்சியில் கைக்கு எட்டும் தூரத்தில் இருந்த கனவுப்பிரியனின் சிறுகதைத் தொகுப்பை எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதாய் தல பிரபு அவர்கள் ஆரம்பித்து வைக்க, ஒவ்வொருவராய் நிறை குறைகளைப் பேச ஆரம்பித்தார்கள்.
'இந்தக் கதையில் திருமணம் வேண்டாம் என்று சொல்லும் பெண் மனம் மாறுவதற்காக ஏன் சியால் கோட் செல்ல வேண்டும்' என்ற கேள்வியை முன் வைத்தார் நெருடா. அதைப் பின்பற்றிப் பேசிய பிலால் அவர்கள் 'ஒரு பெண்... அதுவும் இஸ்லாமியப் பெண் படித்தவளாய் காட்டப்பட்டதில் மகிழ்ச்சி என்றும் எங்கள் வீட்டில் கூட பெண்கள் படிக்கவில்லை... எங்கள் வீட்டில் மட்டுமில்ல நிறையப் பெண்கள் படிக்க வைக்கப்படுவதில்லை... அதை உடைத்து எழுதியிருக்கும் கதைக்கு வாழ்த்துக்கள்' என்றார்.
ரபீக் அவர்கள் எங்களைப் பார்த்த போது கனவுப்பிரியன் அண்ணனிடம் 'நாகராஜைக் கூட்டி வரவில்லையா?' என்றார். அப்போது நம்மைப் போல் நாகராஜ் என்ற நண்பரும் அண்ணனுக்கு இருப்பார் போல என்று நினைத்தால் அவர் ஷாகீர்க்கா தட்டுக்கடை குறித்துப் பேசும் போதுதான் தெரிந்தது அவர் கேட்டது அந்தக் கதையில் வரும் நாகராஜை என்பது. இது ஒரு உண்மை நிகழ்வின் அடிப்படையில் எழுதிய கதையா என்ற அவரின் கேள்விக்கு 'இல்லை... முழுக்க முழுக்க புனைவுதான்... நான் அந்தக் கடைக்குச் சாப்பிடச் செல்வேன்... அப்ப அந்தக் கடையின் கண்ணாடிக்குள் தட்டுக்கடை போட்டோ இருக்கும்... ஏன் இவ்வளவு பெரிய கடையில் இந்தப் போட்டோ என்று யோசித்ததின் விளைவே இந்தக் கதை' என்று விளக்கம் அளித்தார் எழுத்தாளர் கனவுப்பிரியன்.
அடுத்தடுத்தது ஒவ்வொருவராய் பேச பெரும்பாலும் சுமையா என்ற முதல் சிறுகதைக்குள்ளேயே பேச்சு நகர்ந்து கொண்டிருந்தது. பதினெட்டுப் புத்தகங்கள் போட்டிருக்கும்... இந்த நிகழ்வில் ஆறு கதைக்கான கரு எனக்குக் கிடைத்திருக்கிறது என்று சொல்லி எப்பவுமே கதை கவிதைகள் எனச் சிந்திக்கும் (நமக்கெல்லாம் சிந்தக்கவே தோணுதில்லையே... நௌஷாத்கிட்ட டிரைனிங் எடுக்கணும் போல) எழுத்தாளர் நொஷாத் அவர்கள் கதைக்குள் கொடுக்கப்படும் செய்திகளால் கதை வாசிப்பில் அயற்சி ஏற்படுவதாகச் சொல்லி நம்பி கோவில் பாறைகள் கதை பேய், அமானுஷ்யம், சாமி இதில் எந்த வகை எனக்கு அதுதான் புரியவே இல்லை என்றார்.
இதே கருத்தைத் தான் நெருடா அவர்களின் நண்பரான இராமநாதபுரத்துக்கார அண்ணாச்சியும் சொன்னார். மேலும் அவர் கதை மாந்தருடன் மட்டுமே நகராமல் சுற்றியிருப்பவற்றையும் கதைக்குள் கொண்டு வரவேண்டும். அப்படியிருந்தால் கதையின் சுவை இன்னும் கூடும் என்றார். வாசிப்பாளனாய் அவரும் அவருடைய மற்றொரு நண்பரும் முன் வைத்தது இதைத்தான்... இது ஏற்றுக் கொள்ளக் கூடியது. அண்ணனின் கதைகள் செய்திகளைத் தாங்கிப் பயணிப்பதால் பெரும்பாலும் கதை மாந்தர்களின் பின்னே மட்டுமே நகரும். அபுதாபியில் இவர்கள் நடத்தும் எரிதழல் என்ற வாசிப்புக் குழுவைப் பற்றி அறிய முடிந்ததில் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
இதற்கான பதிலாய் எஸ்.ராவின் சந்திப்பில் உங்கள் கதைகளில் சின்னச் சின்ன நகாசு வேலைகள் செய்தீர்கள் என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று சொன்னதைச் சொல்லி இப்போதைய கதைகளில் இப்படியான மாற்றங்களைச் செய்து வருகிறேன் என்றும் இதன் காரணமாகவே பாதிவரை எழுதிய நாவலை நிறுத்தி மீண்டும் எழுதுவதாகவும் சொன்னார் அண்ணன் கனவுப்பிரியன். விரைவில் ஒரு நாவலை வாசிக்கும் அனுபவம் கிடைக்கும்.
மகேந்திரன் அவர்கள் எழுத்தில் திராவிடம், அரசியல் குறித்துப் பேசினார். மிகவும் தீர்க்கமானதொரு பேச்சு. இந்தக் கதைதான் என்றில்லை காதல் கதை என்றாலும் அதிலும் அரசியல் இருக்கும் என்றார். அவர் பேசும் போது வடை கொடுக்கப்பட, என் பேச்சை நிறுத்த வடை கொடுக்கப்பட்டதால் இதிலும் அரசியல் இருக்கு என்றார் நகைச்சுவையாய்.
எழுத்தாளர் ஐயனார் அவர்கள் சுமையாவை முழுவதுமாக வாசித்திருந்தார் என்பதை அவரின் கருத்துக்கள் பறை சாற்றின. ஒவ்வொரு கதைக்கும் வலிந்து திணிக்கும் முடிவுகள் தேவையில்லை. முடிவில்லாமல் விட வேண்டும்... வாசகன் இதன் பின்னே என்ன நிகழ்ந்தது என்பதை யோசிக்க வேண்டும் என்றார்.
நௌஷாத் முடிவுகள் இல்லாமல் மொட்டையாய் நிற்கும் கதைகள் முழுமை பெறுவதில்லை... முடிவுகள் வேண்டும் என்பதை விவாத ஆரம்பத்தில் முன் வைத்தார். ஐயனார் அவர்கள் முடிவுகள் தேவையில்லை... வாசகனின் பார்வையில் விட வேண்டும் என்றார். இதற்கான பதிலாய் கனவுப்பிரியன் அவர்கள் வாசகர்களில் பல படிகள் இருப்பது குறித்துச் சொல்லி, ஒருவருக்கு முடிவு வேண்டும்... இன்னொருவருக்கு முடிவு வேண்டாம்... என்று விளக்கம் கொடுத்தார்.
தமிழாசிரியை ஷோபியா அவர்கள் கதைக்குள் செய்திகள் அதிகமிருப்பதால் வாசித்து வரும் கதையின் வரிகள் மறந்து விடுகின்றன என்றார். தமிழாசிரியருக்கு வரிகள் மறக்கலாமா... இருப்பினும் சுமையாவில் அண்ணன் கொடுத்த செய்திகள் அதிகமே. இப்போது முகநூலில் எழுதும் கதைகள் எல்லாம் முத்தாய்ப்பாய் மலர ஆரம்பித்திருக்கின்றன... இனி வரும் கதைகள் சுமையாவின் சுமைகளைக் குறைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு மட்டுமல்ல நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் வந்திருக்கும்.
வேல்முருகன் அண்ணன் மிகச் சிறந்த வாசிப்பாளர் என்பதால் அவரின் பேச்சு மிகவும் வித்தியாசமாய் இருந்தது. தற்கொலைப் பறவைகள் குறித்துப் பேசினார். அதன் முடிவில் அவள் இறந்து கிடந்தாள் என்பது தேவையில்லாதது என்றார். மகேந்திரன் அவர்களின் எழுத்து அரசியல் என்ற பதம் குறித்து அவருடன் விவாதித்தார். அப்போதுதான் மகேந்திரன் அவர்கள் காதல் பற்றி எழுதினாலும் அதிலும் அரசியல் இருக்கும் என்பதை விளக்கினார்.
ஜஸீலா அவர்கள் விவாத ஆரம்பத்திலேயே மற்றவர்கள் பேசட்டும்... குறைகளை நான் இறுதியில் பேசுகிறேன் என்றார். அதன்படி சுமையாவில் ஆயிஷாவின் வயது குறித்த கேள்வியை வைத்தார். அதற்கான விளக்கமும் கொடுக்கப்பட்டது. பச்சையப்பா கல்லூரியில் விசுவல் கம்யூனிகேசன் இல்லை என்றார். இவ்வளவு தூரம் மெனக்கெட்டு செய்திகள் சேகரித்து எழுதும் போது அதில் சிறிய தவறு என்றாலும் மற்ற கதைகளின் மீதான நம்பகத்தன்மை குறையும் என்றவர் இந்த இடத்தில் இந்த வரியில் எழுத்துப் பிழை இருக்கு என்ற போது இவ்வளவு தீவிரமான வாசிப்பா என்ற ஆச்சர்யமே எழுந்தது.
ஜெயமோகனின் நண்பரும் எழுத்தாளருமான ஆசீப் மீரான் அவர்கள் மிக விரிவாய் தன் விமர்சனத்தை முன் வைத்தார். நேற்றைய கூட்டத்தின் மொத்தப் பேச்சுக்களுக்குமான முடிவுரையாக அது அமைந்தது. சுமையாவின் முடிவில் அவள் திருமணத்துக்கு ஒத்துக் கொள்வதாய் எழுதியிருப்பதை, இதை ஏன் சியால்கோட் வரை கொண்டு செல்ல வேண்டும் என்பதை பலர் கேள்விகளாய் முன் வைத்திருந்ததால் அது குறித்துப் பேசினார். இது ஆயிஷாவின் எண்ணம்தானே ஒழிய சுமையா தான் திருமணத்துக்கு ஒத்துக் கொள்வதாய்ச் சொல்லவில்லை என்றார். கதையின் முடிவு வாசகன் கையில் இருக்க வேண்டும். கதைக்குள் வாசகனை இழுக்க வேண்டும் என்பதை இவரும் வலியுறுத்தினார். சுஜாதாவின் கதை, அவரிடம் ஒருவர் கதை எழுதிக் கொடுக்க அதை வாசித்தவர் கதையில் வரும் மரம் என்ன மரம் என்ற கேள்வி கேட்டது என மிக விரிவாகப் பேசினார். மேலும் முகநூலில் கதைகளை எழுதும் போது முடிவை வாசகனிடம் விடுங்கள். அவன் கேள்வி கேட்டால் நீங்கள் பதில் சொல்லுங்கள் என்றார். பெரும்பாலான கேள்விகளுக்கான விடைகளையும் கொடுத்தார்.
மொத்தத்தில் முகநூலில் எழுதுவதை சேகரித்து வையுங்கள்... செய்திகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்... கதாபத்திரத்திரத்தின் பின்னே மட்டும் நடக்காதீர்கள்... சுற்றிலும் கொஞ்சம் பாருங்கள் என்பதே ஒருமித்த கருத்தாக இருந்தது.
இறுதியில் நன்றி கூறிய எழுத்தாளர் கனவுப் பிரியன் அவர்கள் குறைகளைச் சுட்டிக் காட்டியமைக்கும் மிகச் சிறப்பான நிகழ்வாக அமைத்துக் கொடுத்தமைக்கும் நன்றி கூறினார். மேலும் நான் நடையாடி... செய்திகளின் பின்னே செல்பவன் எனவே செய்திகள் இருக்கும் சுமையாவைப் போல பெரும் 'சுமை'யாக இல்லாமல் சுமக்கும் சுமையாக சுவையாக இருக்கும் என்றார்.
வேல் முருகன் அண்ணனுடன் அவரின் நண்பர்கள், புகைப்படக் காதலர்களான ராமகிருஷ்ணன், தமிழ்ச்செல்வன் மற்றும் சகோதரர் நெருடா அவர்களின் நண்பர்கள், பிலால் அவர்களின் நண்பர் என எதிர்பார்த்ததைவிட அதிகமாய் நட்புக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டார்கள். மிகச் சிறப்பான கூட்டமாக அமைந்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி.
சுபஹான் அண்ணா கொண்டு வந்த இஞ்சி டீ, ராமகிருஷ்ணன் அவர்கள் கொண்டு வந்த வடை, வேல் முருகன் அண்ணன் கொண்டு வந்த சுண்டல், ஜஸீலா அவர்கள் கொண்டு வந்த பிரியாணி (சுவை கூட பார்க்கவில்லை... பிரியாணி பாத்திரம் எங்கேய்யா என பாலாஜியும் நாங்களும் தேடியது தனிக்கதை...:)) நொஷாத் கொண்டு வந்த பிஸ்கட், ஜூஸ் என சாப்பாட்டுக்கும் பஞ்சமில்லை.
ஒரு அரங்கத்துக்குள் அடைபட்டு பேசும் இலக்கியப் பேச்சுக்களைவிட ஒன்றாய் அமர்ந்து ஜாலியாய் அரட்டை அடித்தபடி பேசிய இந்த இலக்கியக் கூட்டம் உண்மையிலேயே மிகச் சிறப்பாய்... மன நிறைவாய் அமைந்தது. தல பிரபு நீ பேசினியான்னு கேக்கக்கூடாது... பார்வையாளன்தாய்யா கெத்து.
விழா ஒருங்கிணைப்பாளர் காளியின் காதலன் பிரபு, போகும் போதும் வரும் போதும் காருக்குள் சிறப்பான இலக்கிய விவாதம் நடத்தினார். கூட்டம் முடிந்த பின்னர் ஒரு மணி நேரத்துக்கு மிகச் சிறப்பான விவாதத்தை நிகழ்த்தினார். அதைக் குறித்து தனிப்பதிவே எழுதலாம். புனைவு அபுனைவு குறித்தான விளக்கத்தை அங்கிருந்தவர்கள் ஜென்மத்துக்கும் மறக்க மாட்டார்கள். தீனதயாள் உபத்யாயாவை விட செம... அதுவும் காருக்குள் நௌஷாத்துடனான இலக்கிய விவாதம் இனிமை.
இப்படியெல்லாம் இடை விடாது தீவிர இலக்கியம் பேசியவர் கூட்டத்தை ஆரம்பித்து வைத்ததுடன் சரி... அதன் பின் என்னைப் போல் பார்வையாளனாய் ஆகிவிட்டார்... பேசு அஞ்சலி பேசு என அவர் முகம் பார்த்த போதெல்லாம் சிரித்தே மழுப்பி விட்டார். அதேபோல் சுபஹான் அண்ணன் சுய அறிமுகத்துடன் எஸ்கேப், போட்டோ பிடிப்பதில் இறங்கிவிட்டார்.
குறிப்பாக ஆரம்பம் முதல் இறுதிவரை அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டே இருந்தார் பாலாஜி அவர்கள். மதுரை மண்ணுய்யா என்பதைச் சொல்லாமல் சொல்லியது அவரின் ரசிக்க வைக்கும் பேச்சு. வேல் முருகன் அண்ணனின் மகனிடம் உன்னைப் பற்றிச் சொல் என்ற போது 'என்னைப் பற்றி என்னைவிட எங்கப்பாவுக்கு ரொம்ப நல்லாத் தெரியும். அவரே சொல்வார்' என்றானே பார்க்கலாம். அதுக்கு அப்புறம் கேப்பீங்க.
இடையிடையே அரசியல், மய்யம், கமல் ரசிகனாய் பாட்ஷா படம் பார்க்கப் போய் இருக்கையை கிழித்த கதை என சோர்வில்லாமல் பயணித்தது நிகழ்வு.
மொத்தத்தில் மிகச் சிறப்பானதொரு நிகழ்வு. இப்படியான நிகழ்வுகள் பாலையில் எப்போதேனும் நிகழக் கூடும். இதை நிகழ்த்திக்காட்டிய பிரபு மற்றும் சுபஹான் அவர்களுக்கு நன்றி.
-'பரிவை' சே.குமார்.
5 எண்ணங்கள்:
நல்லதொரு கூட்டம் அமைந்ததற்கு வாழ்த்துகள்.
என்னையும் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி
செம இன்ட்ரெஸ்டிங்க் நிகழ்வு போல...சாப்பாட்டையும் சேர்த்துத்தான்...ஹா ஹா ஹா..செவிக்கும், வயிற்றுக்கும் நு இனியும் இப்படி நடக்கட்டும்...வாழ்த்துகள்...
கீதா
அருமையான நிகழ்வு நண்பரே
இனிய நினைவுகள்...
இனிமையான சந்திப்பு.
கருத்துரையிடுக