மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 19 மார்ச், 2018

தோஷம் (முத்துக்கமலம் மின்னிதழ்)


முத்துக்கமலம் மின்னிதழில் எனது இரண்டாவது சிறுகதை வெளியாகியிருக்கிறது, முத்துக்கமலத்தில் வாசிக்க 'தோஷம்' 

கதையை வெளியிட்ட ஆசிரியர் குழுவுக்கு நன்றி.

Image result for இளையராஜா ஓவியம்

"ன்னம்மா சொல்றீங்க..? மூத்தவ இருக்கும் போது இளையவளுக்குச் செய்யிறது நல்லாவா இருக்கும்... ஜாதி சனம் என்ன சொல்லும்... அதை விடுங்க... ரேணுகா மனசு உடைஞ்சி போயிடமாட்டாளா..?"

"ஊரு ஆயிரம் பேசும்... அதுக்காக நாம ஊருக்காகவா வாழ முடியும்... இங்க பாரு மாணிக்கம்.... மூத்தவளுக்கு இதுவரைக்கு எத்தனையோ இடம் வந்து தட்டிக்கிட்டே போகுது... அவ ஜாதகத்துல தோஷம் இருக்குன்னு சாதகக்காரன் சொன்ன எல்லாக் கோயில்லயும் போயி பரிகாரம் பண்ணிட்டு வந்தாச்சு... ஒண்ணும் அமையலை... சின்னவளுக்கு முடிச்சிட்டு இவளுக்குப் பாக்கலாமே... அவளுக்கும் வயசு ஏறிக்கிட்டே போகுதுல்ல..." பாக்கு உரலில் வெற்றிலையை இடித்துக் கொண்டே பேசினாள் காளியம்மாள்.

"அதுக்கில்லைம்மா... என்ன இருந்தாலும் பெரியவளுக்கு ஏதும் பிரச்சினை இருக்குமோன்னு ஊர் பேசாதா?"

"நாந்தேன் சொல்றேனுல்ல... ஊருக்காக நாம வாழக்கூடாது... நமக்காகத்தான் வாழணும்... இங்க பாரு நம்ம செல்வராஜூ மூத்தவ இருக்கும் போது இளையவளுக்குப் பண்ணலையா என்ன... அதைவிடு நம்ம சின்ன மாமா என்ன பண்ணுனாரு... தேவிகா இருக்கும் போது சுஜாதாவுக்கு பண்ணி வைக்கலையா என்ன... சும்மா யோசிக்காம நம்ம புவனாவை கட்டிக்கிறோம்ன்னு நல்ல இடத்துல இருந்து கேக்கிறாக... பெரியவளுக்காக இதையும் விட்டுட்டா... இந்த இடமும் போகும்... இப்பவே சின்னவளுக்கும் வயசு ஏறிக்கிட்டே போகுதுல்ல..."

"எனக்கென்னவோ யோசனையா இருக்கும்மா... ரேணுகா இதை எப்படி எடுத்துப்பான்னு தெரியலை... எல்லாப் பொண்ணுகளுக்கும் உள்ளது போல இவளுக்கும் ஆசை இருக்கும்ல்லம்மா... இப்ப அவளை விட்டுட்டு சின்னவளுக்குச் செய்யப்போறேன்னு சொன்ன அவளுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்... அதான் யோசிக்கிறேன்..."

"அவ புரிஞ்சிப்பாப்பா... எத்தனை இடம் வந்துச்சு எல்லாமே தட்டிக்கிட்டுத்தானே போகுது... ஒருவேளை  சின்னவளுக்கு கல்யாணம் நடந்தா இவளுக்கு ஆகுமோ என்னவோ... சொல்றவிதமா சொல்லு மாணிக்கம்..."

"ம்..."

அம்மாவுடன் பேசியதை மனசுக்குள் மீண்டும் மீண்டும் ஓட விட்டபடியே கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டு மோட்டு வலையை வெறித்துப் பார்த்துக் கொண்டு படுத்திருந்த மாணிக்கத்துக்கு மனசுக்குள் ஒரு வித வலி, எப்படி ரேணுகாவிடம் பேசுவது...? அவள் வருத்தப்பட்டா என்ன செய்வது...? மனசொடிஞ்சி பொயிட்டான்னா... எதாயிருந்தாலும் அவளுக்குத்தான் முதல்ல செய்வேன்... ஆனா திருமணத்தை... தங்கையின் கல்யாணத்துக்குப் பின்னால உனக்குன்னு சொன்னா... எப்படி எடுத்துப்பா... யோசனையின் வலியில் கண்ணீர் கன்னத்தில் இறங்கியது. யாரும் பார்க்கும் முன்னர் நெஞ்சில் கிடந்து துண்டால் துடைத்துக் கொண்டார்.

"அப்பா..." ரேணுகாவின் குரல்.

"எ... என்னம்மா..?"

"உடம்புக்கு முடியலையா... ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க..? தலைவலிக்குதா...? மருந்து தேய்ச்சுவிடவா?"

"ஏய் அதெல்லாம் இல்லைம்மா... மனசுக்குள்ள ஆயிரம் கேள்வி... பதிலைத் தேடித்தேடி எனக்கே சோர்வாப் போச்சு..."

"என்ன கேள்விப்பா... வயலுக்கு தண்ணி பாய்ச்சணும் உரம் போடணுமின்னா..." சிரித்தாள்.

"ம்... வெளஞ்ச பயிருல்ல... முதல்ல அறுக்க வேண்டியதை விட்டுட்டு அடுத்ததை முதல்ல அறுக்க வேண்டிய கட்டாயம் வந்திருச்சேன்னு யோசனையா இருக்கும்மா..."

"போங்கப்பா... எப்பவும் இப்படித்தான் வேதாந்தி மாதிரி பேசுவீங்க... வாங்க சாப்பிடலாம்..."

"ம்... இப்படி உக்காரும்மா... உங்கிட்ட கொஞ்சம் பேசணும்..."

"எங்கிட்டயா..? என்ன விஷேசம் அப்பா..."

"உக்காரும்மா... ஆமா உங்கம்மா எங்கே...?"

"அம்மாவா... டிவியில நாடகம் பாக்குறாங்க... புவனா எப்பவும் போல மொபைலை நோண்டிக்கிட்டு இருக்கா...?"

"ம்... இருக்கட்டும்... நாம கொஞ்சம் தனியாப் பேசணும்..."

"தனியாவா... எங்கிட்ட என்ன ரகசியம் அப்பா... நாம ரெண்டு பேரும் தனியாப் பேசினா உங்காத்தா அதான் எங்கப்பத்தா என்ன குசுகுசுன்னு பேசுறீங்கன்னு வந்திரும்..."

"ஏய்... அப்பத்தாதான் தூங்கிக்கிட்டு இருக்கே... நீ உக்காரும்மா..."

"அதானே... ஆத்தாவை பாத்துக்கிட்டுத்தான் இந்த ஆத்தாக்கிட்ட பேச நினைச்சீங்களாக்கும்..." சிரித்தபடி அவரருகில் அமர்ந்தாள்.

"ஏம்மா... அப்பா கேக்குறது தப்புன்னா எங்கிட்ட நேர சொல்லிடணும்... சரியா?"

"என்னப்பா பீடிகையெல்லாம் பலமா இருக்கு...?"

"இல்லம்மா... முடிவு நீ எடுக்க வேண்டிய ஒரு காரியம்... அதான்..."

"சரி..."

"ரெண்டு நாளைக்கு முன்னால உன்னைப் பெண் பார்க்க வந்தாங்கல்ல... அவங்க எப்படிப்பட்டவங்கன்னு நினைக்கிறே..."

"என்னப்பா அவங்க என்ன சொன்னாங்கன்னுதான் உங்களுக்குத் தெரியுமில்ல... அப்புறம் எப்படிப்பட்டவங்கன்னு எங்கிட்ட கேட்டா..." சிரிப்பை விடுத்து கொஞ்சம் சீரியஸாக் கேட்டாள்.

"இல்லம்மா... அவங்களுக்கு நம்ம புவனாவைப் பிடிச்சிருக்குன்னு சொன்னாங்கதானே...?"

"ம்... ஆமா... அதுக்கு..."

"அந்தப் பையன் நம்ம புவனாவுக்கு சரியா வருவானாம்மா...?" நேரடியாகக் கேட்டு விட்டார்.

"அப்பா..."

"இல்லம்மா... நல்ல குடும்பம்... நமக்குத் தூரத்துச் சொந்தம் வேற... உன்னையத்தான் பாக்க வந்தாங்க... ஏனோ அவளைப் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டாங்க... உங்கிட்ட இதைப் பற்றிப் பேசக்கூடாதுதான்... ஆனா உங்கிட்ட கேட்டாத்தான் எனக்கு சரியான பதில் கிடைக்கும்... சொல்லும்மா..."

"ம்... நல்ல பையனாத்தான் இருக்கான்... " அவளின் முகத்தில் ஆரம்பத்தில் இருந்த குதூகலம் இல்லை. மாணிக்கத்திற்கு ஏன்டா கேட்டோம் என்றாகிவிட்டது.

"சரிம்மா...  வா சாப்பிடலாம்" என்று பேச்சை மாற்றினார்.

"அப்பா... அந்த மாப்பிள்ளையை புவனாவுக்கு செய்யலாம்ன்னு உங்களுக்கு ஆசையிருக்காப்பா..." அவரின் மார்பு முடியில் கோலம் போட்டபடிக் கேட்டாள்.

"அப்படியெல்லாம் இல்லைம்மா... உன்னோட ஜாதகமும் சரியில்லை... வர்ற வரனெல்லம் தட்டிக்கிட்டே போகுது... பரிகாரம் எல்லாம் பண்ணியாச்சு... அவளை பிடிச்சிருக்குன்னு சொன்னாங்க... உன்னோட எண்ணம் என்னவோ அதுதான் என்னோட முடிவு..."

ரேணுகா வறட்சியாய் சிரித்தாள் "எனக்குத்தான்  ஜாதகம் சரியில்லையே... எனக்குத்தான் சரியான வரன் அமையாம தள்ளிக்கிட்டே போகுது... அவளுக்காச்சும் முடியட்டுமேப்பா...."

"இல்லம்மா... நீ இருக்கும் போது அவளுக்கு..."

"என்னப்பா... தங்கச்சிக்கு கல்யாணம் முடிஞ்சாத்தான் உனக்குன்னு ஆம்பளப் பசங்களுக்கு முப்பது முப்பத்தி ரெண்டு வயசு வரைக்கும் கல்யாணம் பண்ணாம வச்சிருக்கிறது இல்லையா..? அது மாதிரி நான் நினைச்சிக்கிறேன்... என்ன எனக்கு இருபத்தெட்டுத்தானே ஆகுது... அவளுக்கு நடக்கட்டும்... அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சா நமக்குச் சந்தோஷம்தானேப்பா... எனக்குன்னு இனிமேயா பிறக்கப்போறான்... எங்கயாச்சும் இருப்பானுல்ல... வர்றப்போ வரட்டும்... இப்ப அவளைக் கட்டித்தாரேன்னு அவங்ககிட்ட பேசுங்க..." மனசுக்குள் வேதனை இருந்தாலும் அதை மறைத்துக் கொண்டு சாமர்த்தியமாய்ப் பேசினாள்.

"இல்லம்மா... உன்னைக் கஷ்டப்படுத்தி..."

அவரை இடைமறித்து "அப்பா... என்னோட மாப்பிள்ளையை அவ கட்டலையில்ல... வந்தவங்களுக்கு என்னைவிட அவளைப் பிடிச்சாச்சு... என்னைப் அவங்களுக்குப் பிடிச்சி... நாம ஜாதகம் பாத்து சரியில்லையின்னு வச்சிக்கங்க... அப்ப அவங்க அவளைக் கேப்பாங்களா... இப்பவே அவங்களுக்குப் பிடிச்சபடி அவளோட ஜாதகத்தைப் பாருங்க... அதான் சரிப்பா..."

"ம்... நீ இவ்வளவு உயர்வாச் சிந்திக்கிறே... ஆனா ஊரும் உறவும் என்ன சொல்லும்...?"

"அப்பா ஊருக்காகவும் உறவுக்காகவும் நாம இல்லை... எனக்கு எங்கப்பாவைத் தெரியும்... என்னோட தங்கைக்கு நல்ல வாழ்க்கை அமையுதுன்னா எனக்குச் சந்தோஷம்தான்...  அவங்க என்ன பேசினா என்ன...?"

"ம்.... எனக்கு மனசு கஷ்டமா இருக்கும்மா..."

"அப்பா... முதல்ல அவளுக்குப் பேசுங்க... யாரு கண்டா அவளுக்கு வரன் வந்த நேரம் என்னோட ஜாதக தோஷம் போயி எனக்கும் மாப்பிள்ளை வரலாமுல்ல..."

"அப்படி அமைஞ்சா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா... எல்லாம் அந்த மாரிதான் பாத்துக்கணும்..."

"சரிப்பா... வாங்க.... சாப்பிடலாம்... உங்களுக்குப் பிடிச்ச கருவாட்டுக் குழம்பு... உங்களுக்காக நாந்தான் வச்சேன்.... என்னோட கருவாட்டுக் குழம்பு உங்களுக்குப் பிடிக்கும்ல்ல... வாங்க... இன்னைக்கே மாப்பிள்ளை வீட்ல பேசி நம்ம புவனா கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க... எனக்கு ரொம்பச் சந்தோஷம் அப்பா..." என்று எழுந்தவள் கலங்கிய கண்ணை அவர் பார்க்காது தாவணியில் துடைத்துக் கொண்டாள். 

அவள் இப்படிச் சந்தோஷமாப் பேசினாலும் அவள் மனசின் வலியும் வேதனையும் வார்த்தைகளில் தெரிந்ததை மாணிக்கமும் உணர்ந்திருந்ததால் அவருக்கும் கண்ணீர் வர எங்கே மகள் பார்த்து விடுவாளோ என்ற எண்ணத்தில் செருமிக் கொண்டே முகத்தைத் துடைப்பது போல் கண்ணீரைத் துடைத்தார். அப்போது அவர் மனசுக்குள் ஏனோ இதுவரை அத்துப் போயிருந்த தங்கை உறவு வந்து செல்ல, மாப்பிள்ளையும் ஞாபகத்தில் வந்தான். கடவுள் நினைத்தால் எல்லாம் நடக்கும் என்று நினைத்தபடி எழ, சுவற்றின் மூலையில் பல்லி ஒன்று 'உச்... உச்...' என்று கத்தியது.
-‘பரிவை’ சே.குமார்.

5 எண்ணங்கள்:

துரை செல்வராஜூ சொன்னது…

அருமை.. மனம் நெகிழ்கின்றது..

ஸ்ரீராம். சொன்னது…

அருமை. தீர்வொன்று இருக்கிறது என்றும் சொல்லாமல் சொல்லி விட்டீர்கள்!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ரொம்ப நல்லாருக்கு குமார்....ஸோ தோஷம் விலகலாம்...சுபமாய் முடிய வாய்ப்பிருக்கு....முடியட்டும்...

கீதா

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

பாராட்டுகள். தொடரட்டும் உங்களின் எழுத்துப்பணி.