மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 17 நவம்பர், 2017

வாசிப்பனுபவம் : முதல் யுத்தம்

சென்ற வருடம் போல் தீவிர வாசிப்பு இல்லாவிட்டாலும் வாசிப்பு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தற்போதைய மனநிலையில் பணி முடிந்து திரும்பியதும் சமையல், ஊருக்குப் பேசுதல், இணையத்தில் எப்போதேனும் சினிமா பெரும்பாலும்  வள்ளி திருமண நாடகத்தில் வள்ளி - நாரதரின் தர்க்கம் என்பதே தினசரி நிகழ்வாகிறது. 

பிரச்சினைகளின் தீவிரப் பிடிக்குள் சிக்குண்டு கிடக்கும் மனசுக்கு இதற்கு மேல் சிந்திக்க நேரமில்லை. சிந்தனையின் கிளை என்னில் இருந்து விலகி, வேறு பாதை நோக்கி நகர, எங்கே அப்படியான முடிவுக்குள் சிக்கிவிடுவோமோ என்பதால்தான் அவ்வப்போது மனசுக்கு பதிவுகள் வந்துகொண்டிருக்கின்றன.

ஜெயகாந்தான் எழுதிய 'அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள்'  முடித்ததும் ப்ரியா கல்யாணராமனின் 'தெற்கத்தி தெய்வங்கள்' வாசிக்க ஆரம்பித்தேன். தெய்கத்தி தெய்வங்கள் பாண்டி ஐயா, பதினெட்டாம்படி கருப்பர் குறித்து நாம் கேட்ட கதைகளும் அவர் எழுதியிருக்கும் கதைகளும் வித்தியாசமாக இருந்தாலும் ஏனோ பாதிக்கு மேல் மனம் அதில் ஒட்டவில்லை.

Image result for முதல் யுத்தம்

பின்னர் வாசிக்கலாமென மீண்டும் சாண்டில்யனுடனோ கல்கியுடனோ பயணிக்கலாமென முடிவெடுத்து இணையத் தேடலில் கல்கியின் 'சிவகாமியின் சபதம்' கிடைக்க, முதல் பாகம் முடித்து பரஞ்சோதியுடனும் சிவகாமியுடனும் இரண்டாம் பாகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். கல்கி கல்கிதான்... நம்மை ஈர்க்கும் எழுத்து.

பேருந்தில் மட்டுமே வாசிக்கும் மனநிலை என்பதால்... அதுவும் சில நாட்களை கிரிக்கெட் கேம் எடுத்துக் கொள்வதால் மெல்லவே பயணிக்க முடிகிறது. சீதோஷ்ண நிலை மாறியிருப்பதால்... பேருந்தினுள் விளக்கின் ஒளி அவ்வளவு சரியில்லாததாலும்  அதிகமான கூட்டத்தினாலும் மாலையில் அதிகம் வாசிக்க முடிவதில்லை.

சாண்டில்யனும் கல்கியும் ஏற்படுத்திய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் உடையாரில் பல விஷயங்கள் பிடிக்காதிருந்தாலும் பாலகுமாரன் கோவில்கள் பற்றி எழுதிய கட்டுரையை வாசித்தபோது அதிலும் குறிப்பிட்ட சமூகத்தை தூக்கி வைத்துக் கொண்டாடினார் என்றாலும் பிடித்தே இருந்தது. அதன் தொடர்ச்சியாக அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகளை வாசிக்கும் முன்னர் பாலகுமாரனின் இரண்டு குறுநாவல்களை வாசித்தேன். 

முதல் யுத்தம் என்றொரு குறுநாவலை வாசித்தேன்... மொத்தம் 132 பக்கங்கள்தான். 

இராஜராஜனின் பிரதான முதலமைச்சர் கிருஷ்ணராமனான மும்முடிச் சோழ பிரம்மராயரின் மகன் அருண்மொழிப்பட்டன் ஆறாண்டுகள் சேர நாட்டிலிருக்கும் காந்தளூர்க் கடிகையில் போர்ப்பயிற்சியும் அத்துடன் 100 பேருக்கு போர்ப் பயிற்சி அளிக்கவல்ல ஆசிரியர் பயிற்சியும் பெற்று அதற்குச் சான்றாக வெள்ளிக்கேயூரம் பெற்று மதுரை வழி சோழ நாட்டுக்குத் திரும்புகிறான்.

வைகையில் குளிக்கும் போது தன் காதலி அன்பு பரிசாக ஐந்து வருட படிப்பு முடிந்து சிலநாட்கள் சோழ நாடு சென்று திரும்பிய போது கொடுத்த 'நடராஜா' என்ற குதிரையுடன் பேசிக் கொண்டிருக்கிறான். அப்போது அங்கு குளிக்க வரும் பெரியவருடன் பேச ஆரம்பித்து, அவர் இல்லம் சென்று உணவருந்தி, அவருடன் அளவளாவ அவர் 'கர்வம் அழி, அன்பு செய், கர்வம் அழிய, அன்புதானே வரும்' என்று சொல்லி அனுப்புகிறார்.

இருள் மெல்ல பகலைத் துரத்த ஆரம்பிக்கும் நேரத்தில் மதுரைக்குள் செல்பவன் வீரர்களால் மடக்கப்படுகிறான். அவர்களை அடித்துத் தப்பிப் போகும்போது அவனின் நண்பனும் சோழர்படை உபதளபதியுமான பாண்டியன் ஸ்ரீவல்லபனால் பிடிக்கப்படுகிறான். 

பாண்டிய மன்னன் அமரபுயங்கன் காட்டுக்குள் மறைந்து படை திரட்டி பயிற்சி அளித்து வருவதாகவும் நாடாள ஆளில்லாத சூழலில் பொதுமக்களை யாரும் துன்புறுத்தாதிருக்கவும் பாண்டிய மன்னன் மீண்டும் அரியணையில் ஏறாதிருக்கவும் சோழர்படை பாண்டிய நாட்டில் விலாசமில்லாமல் சுற்றுவதாக வல்லபன் மூலம் அறிகிறான்.

மேலும் அவன் அரசாங்க மரியாதையுடன் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவனைக் காண அவனின் தந்தை பிரம்மராயரும் வந்தியத் தேவரும் வருவதாகவும் அவர்களுடன் சேனாதிபதிகள் பரமன் மழபாடியும் தென்னவனும் வருவதாகவும் அதுவரை தான் சொல்கிறபடி நடந்து கொள்ள வேண்டும் என்றும்  சொல்கிறான் வல்லபன். 

நண்பனின் சிறையில் இருக்கும் போது இராஜராஜரின் மகளும் பௌத்த மதத்தின் மீது ஈடுபாடு கொண்டவளுமான சந்திரமல்லியினை... (இவள் இராஜேந்திரருக்கும் குந்தவை நாச்சியாருக்கும் இடையில் பிறந்தவள்.) சந்தித்ததையும் அப்போது நிகழ்ந்தவைகளையும் நினைத்துப் பார்க்கிறான். 

அவள் பௌத்த மதத்தை விரும்புவது அவளின் பாட்டியாரும் கோவில்களை எல்லாம் கற்றளியாக மாற்றி வருபவருமான செம்பியன் மாதேவியாருக்கு பிடிக்கவில்லை. அதன் காரணமாகவே மற்ற மதத்தை அழிக்க நினைக்காத மன்னர் அடக்கி வைக்க நினைக்கிறார் என்றும் சேரன் பாண்டியனுக்கு உதவ இருப்பதால்தான் சேரனை அடக்கி வைக்க நினைக்கிறார் என்பதையும் அறிந்து கொள்கிறான்.

தனக்கு குதிரை பரிசளித்த சுந்தரியை சந்தித்த நாளை நினைத்துப் பார்க்கிறான். அம்மாவைப் பார்த்துவிட்டு அமண்குடியில் குல தெய்வத்துக்கு செய்ய வேண்டிய நேர்த்திக்கடனான நந்தா விளக்குப் போட ஊருக்குப் போய் நண்பர்களைச் சந்திக்கிறான். அவர்களோ நீ பெரிய ஆளாகப் போகிறாய் எங்களை எல்லாம் நினைப்பாயா, சேரப் பெண்களெல்லாம் அழகிகளாமே... அவர்களில் ஒருத்தியை கட்டிக் கொள்வாயோ என்றெல்லாம் பேசுகிறார்கள்.

நந்தா விளக்குப் போட்டுவிட்டு பழையாறை வழியாக நடந்து போகும் போது தளிர்சேரி பெண்கள் தங்கியிருந்த வீடுகளைக் கடந்து செல்கிறான். அப்போது  உதவி கேட்ட பெண்ணுக்கு யாரும் உதவி செய்யாத சூழலில் தான் போய் ஒன்றல்ல இரண்டு பாம்பைப் பிடிக்கிறான். 

அவனின் வீரச் செயலைப் பார்த்து எல்லாரும் அதிசயிக்க, அவள் விரும்பிக் கேட்க, அவளின் அத்தையைக் காணச் செல்கிறான். அவள்தான் பிரம்மராயரின் ஆசைநாயகி சரபன் தொண்டவை. உன் அப்பாவைப் பற்றி ஏதும் அறிந்தாயா என அம்மா அவனிடம் கேட்டதன் அர்த்தம் அப்போதுதான் விளங்குகிறது. தொண்டவை பற்றி அறிந்து அவளை அம்மா என்றே அழைத்து வணங்கி விடைபெறுகிறான். 

என் அத்தையின் மகன் எனக்கு முறைதானே எனச் சொல்லும்  சுந்தரி, அவனுக்குப் பரிசாக குதிரை ஒன்றைக் கொடுக்கிறாள். அந்தக் குதிரைக்கு 'நடராஜா' என்று பெயர் வைத்திருக்கிறான். அதனுடன்தான் வைகையில் பேசிக் கொண்டிருந்தான் என்பதை ஆரம்பத்தில் பார்த்தோம் அல்லவா.

சிவிகையில் மதுரை வரும் சுந்தரி மூலம் அவனுக்கு மன்னரின் ஓலை கொடுத்தனுப்பப்படுகிறது... அதில் அவனைக் குதிரைப்படையின் உபதளபதியாக நியமிக்கப்பட்டிருப்பதாகவும் தங்கள் வீரனை சிறை பிடித்து சேரன் துன்புறுத்துவதே இந்தப் போருக்கு காரணம் என்பதைக் காந்தளூர்க் கடிகையில் தெரிவிக்க தூதனாகச் செல்லவேண்டும் என்பதையும் அறிகிறான். 

மேலும் வீரனை சிறை பிடித்ததே காரணம் என்பது இவர்களே உருவாக்கியது என்பதையும்  சுந்தரிதான் ஒற்றர்படை ஆள் என்பதையும் அவள் காந்தளூர் கடிகைக்குள் சென்று ஆராய்ந்து வரவேண்டும் என்பதையும் அறிந்து வருந்துகிறான். 

தன் முகம் காட்டது ஓலை கொடுத்துவிட்டு இங்கு வேண்டாம் மாலையில் பேசலாம் என சுந்தரி சொன்னதை வைத்து அவளைப் பார்க்கப்போனால் பரமன் மழபாடி அவனைத் தடுத்து காந்தளூர்ச் சாலை கடிகை குறித்து விபரங்கள் கேட்கிறார். அதன்பின் அவருக்குத் தெரியாமல் சுந்தரியைச் சந்திக்கிறான். அவளுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு வரும் மழபாடி உங்கள் பேச்சை போகும் வழியில் வைத்துக் கொள்ளுங்கள். அருண்மொழி உன் சாகசங்களுக்கு பெரிய வாய்ப்புக்கள் இருக்கின்றன என்பதை மறக்காதே என்று சொல்லி கிளம்பச் சொல்கிறார்.

கடிகை நோக்கிச் செல்லும் போது சிவிகையில் இருந்து இறங்கி அவனின் குதிரையில் சுந்தரி ஏறிக்கொள்ள பேசிக் கொண்டே அவளின் பாட்டையும் கேட்டுப் பயணிப்பவன் கூட்டத்தை விட்டு குதிரையை விரைவாக செலுத்தி சேர, பாண்டிய தேச எல்லையை அடைந்து ஒரு மரத்தடியில் அமர்ந்து பேசப் பேச, பேச்சின் வீச்சு கொடுத்த சுகம் உடல் சுகத்தைத் தேட அருண்மொழியின் அணைப்பிற்கு மறுக்காமல் இணங்குகிறாள் சுந்தரி.

சுந்தரியை விடுத்து தான் மட்டும் கடிகை சென்று தனக்கு கற்றுக் கொடுத்த ஆசான் ஐயன் குஞ்சன் நம்பூதிரியிடம் விபரத்தை எடுத்துச் சொல்லி இரண்டரை லட்சம் வீரர்களின் தாக்குதலை சமாளிப்பது கடினம் என்கிறான். அவர் எவ்வளவு பேர் வந்தாலும் சமாளிப்போமெனச் சொல்லி அவனை வீட்டுக்காவலில் வைக்கிறார். அங்கு சோழ வீரர்களால் விரட்டப்படுவது போல் நாடகமாடி நுழைந்த சுந்தரியும் காவலாளிகளும் கூட சிறை வைக்கப்படுகிறார்கள்.

மறுபுறம் மன்னன், வந்தியத் தேவன், பிரம்மராயர், சேனாதிபதிகள் என பலரும் போருக்கு ஆயத்தமாகிறார்கள். மழபாடி மூலம் அருண்மொழிப்பட்டன் சிறைப்பிடிக்கப்பட்ட விபரம் தெரிய வருகிறது. கடிகையின் அருகே இருக்கும் காட்டில் சோழர்படையால் தீ வைக்கப்படுகிறது.

கடிகைக்குள் சிறை பிடிக்கப்பட்டவர்களைக் கட்டி வைத்திருக்கிறார்கள், அருண்மொழி கண் முன்னே சுந்தரி செய்த தவறுக்காக வலி தெரியாவண்ணம் அவளையும் அவளுடன் வந்த வீரர்களையும் தன் மாணாக்கர்களிடம் சொல்லி கொல்லச் சொல்கிறார் ஐயன். அவரிடம் சுந்தரி நேற்று முதல் என் மனைவி அவளை விட்டுவிடுங்கள் என்று அருண்மொழி கெஞ்சியபோதும் அவளின் தவறுக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என அவனின் கண் முன்னே குறுவாளால் குத்தப்படுகிறார்கள். கட்டவிழ்க்கப்பட்ட அருண்மொழி அவளை மடியில் தூக்கிக் கதற, உயிர் பிரிகிறது.

தனக்குப் பாடம் கற்பித்த குரு என்றாலும் தன் கண் முன்னே... வேண்டாமெனக் கெஞ்சக் கெஞ்ச சுந்தரியைக் கொன்ற ஐயனுடன் ஆக்ரோஷமாக மோதி அவரைக் கொல்கிறான்.. உன் கையால்தான் நான் சாகவேண்டும் என அவர் சொன்னதை நினைத்துப் பார்த்து அதற்குத்தான் இத்தனை வெறியேற்றினாரோ என்றும் தனக்குத்தானே சொல்லிக் கொள்கிறான்.

சோழ வீரர்கள் உள்ளே நுழைய, அவர்களுடன் மழபாடியும் நுழைகிறார். வந்தியத்தேவனிடம் ஐயனைக் கொன்றதை சொன்னதும் முதல் யுத்தம்... முதல் கொலை... அதுவும் உன் குரு குஞ்சன் நம்பூதிரியாக அமைந்தது அதிர்ஷ்டம்... வாழ்த்துக்கள் என்று சொல்லி கடிகைக்கு நெருப்பு வைக்கச் சொல்ல, சுந்தரியின் உடலை எடுத்து தான் அடக்கம் செய்ய நினைத்து உள்ளே காதலி இருக்கிறாள் என்று சொல்கிறான். வெளியே வந்தாலும் எரியூட்டத்தான் போறோம்... உள்ளே இருக்கட்டும் என எரியூட்டப்படுகிறது.

'வீரனுக்கு உறவுமில்லை... உற்றாருமில்லை.... அவனின் உறவு மரணம்... காதலி போர்' என்று வந்தியத்தேவன் அவனுக்கு எடுத்துச் சொல்ல, அங்கிருந்து 'நடராஜா'வின் மீதேறி கிளம்புகிறான். கடிகை எரிந்து கொண்டிருக்கிறது. 

அப்போது ஆயிரம் வீரர்களுடன் முன்னே சென்று கொண்டிருக்கும் மன்னனின் ஓலையை வல்லபன் கொண்டு வந்து கொடுக்க, அதில் 'மெச்சினோம்... தெரிஞ்ச கைக்கோள குதிரைப்படையின் தளபதியாக்கினோம். வாழ்த்துக்கள்' என எழுதி புலி இலச்சினை பொறிக்கப்பட்டிருக்கிறது. மெச்சியதற்கும் பதவி உயர்வுக்கும் அவன் முகத்தில் மகிழ்ச்சியின் அறிகுறி இல்லை.

உன் அப்பாவிடம் சொல்ல வேண்டாமா...? என்ற வல்லபனின் கேள்விக்கு 'வீரனுக்குத்தான் தாய், தந்தை, மனைவி, மக்கள், குரு, சீடன், நண்பன் எவருமில்லையே' என்று விரக்தியாகச் சொல்லிவிட்டு பயணிக்கத் தொடங்குகிறான்.

பதினெட்டு வயதில் ஒரு வீரன் சந்திக்கும் முதல் போர் குறித்த கதைதான் இது.... இதற்குள் ஒரு காதலியைக் கொண்டு வந்து... கதை சொல்லிச் சென்றாலும் அதன் போக்கில் பயணிக்கும் போது கடிகையில் நிகழும் போர் காட்சிகள் அவசரமாக முடிக்கப்பட்டிருப்பதால் கதையை வாசித்து முடிக்கும் போது ஏதோ தொக்கி நிற்பது போல் தோன்றுகிறது.

பாலகுமாரனைப் பிடிக்காதென்றாலும் இந்தக் கதையை வாசிக்கலாம்... மரணம் குறித்த பேச்சு... முதல் போர் கொடுக்கும் அழுத்தம்... காதலர்களின் பேச்சில் சங்கப்பாடல் விளக்கம்... குறிப்பாக துதிபாடல் இல்லாதது என வாசிப்பில் அலுப்பில்லாமல் நகர்கிறது.

இதைத் தொடர்ந்து வாசித்த 'கவிழ்ந்த காணிக்கை' குறித்து மற்றொரு பதிவில் பார்ப்போம்.

*****

பிரதிலிபி போட்டியில்.... (வாசிக்க நினைத்தால் இணைப்பைச் சொடுக்குங்கள்)
                                               சிறுகதை : தலைவாழை
                                               கட்டுரை   : பதின்மம் காப்போம்

-'பரிவை' சே.குமார்.

13 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

கதைச்சுருக்கமாகவே கொடுத்து விட்டதால் முழுவதும் தெரிந்து கொள்ள முடிந்தது. அது போகட்டும் அந்த ஊர் பஸ் பயணத்துக்கும், நம்ம ஊர் பஸ் பயணத்துக்கும் வேறுபாடு உண்டா?

பூ விழி சொன்னது…

படித்து இருக்கிறேன் அநேகமாய் அவரின் எல்லா நாவல்களும் நீங்கள் சொல்வது போல் குறிப்பிட்ட சமூகத்தை குறித்தே அதிகம் இருக்கும் இருந்தாலும் எழுத்து நடை பிடிக்கும் மனதை தோண்டி பார்க்கும் தன்மை

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

இதுவரை படிக்கவில்லை. அவசியம் படிப்பேன். அருமையான மதிப்பீடு செய்துள்ளீர்கள்.

G.M Balasubramaniam சொன்னது…

தொடர்ந்து புத்தகங்கள் வாசித்த அந்த பொற்காலம் என் நினைவிலாடுகிறது

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நானும் இப்போதுதான் வாசிக்கத் தொடங்கியுள்ளேன் ஒரு சில. கதைச் சுருக்கமே கதையை அறிய முடிகிறது. நல்ல விமர்சனம் குமார்.

கீதா

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
இங்கு பேருந்து ரொம்ப வேகமாகச் செல்வதில்லை.... சிட்டிக்குள் பயணிப்பதால் பெரும்பாலும் வலப்பக்கம் டிராக்கில் மட்டுமே செல்லும்.
ஏசிப்பேருந்து என்பதால்... கதவுகளும் மூடப்படு விடுவதால் காற்று உள்ளே புகுவதில்லை...
ஒரு சிக்னலுக்கும் மற்றொரு சிக்னலுக்கும் இடையில் குறைந்தது இரண்டு முதல் நான்கு நிறுத்தம் இருக்கும்.
பேருந்துக்குள் காலை நேரம் நம்ம ஊர்போல் நெருக்கடிதான்... புளிமூட்டை நிலைதான்...
ஒவ்வொரு நிறுத்தத்திலும் டிரைவர் கதவை அடைக்க உள்ளே போ, உள்ளே போ என சென்சாரை மறைத்து அடைத்து நிற்பவர்களுக்கு மைக்கில் கத்த வேண்டும்.. இதுவே நேரத்தை விழுங்கிவிடும்.
கண்டக்டர், டிக்கெட் எல்லாம் இல்லை... கார்டுதான். பஸ்சில் ஏறும்போதும் இறங்கும் போதும் கார்டை சுவைப் பண்ண வேண்டும். பஸ் நகர ஆரம்பித்தால் மிஷின் வேலை செய்யாது.
அடிக்கடி கார்டு செக்கிங் இருக்கும்... கார்டை சுவைப் பண்ணி ஏறினோமா இல்லையா என.... சில நேரங்களில் விட்டு விடுவார்கள்... சில நேரங்களில் அடுத்த நிறுத்தத்தில் இறக்கி விடுவார்கள்... சிலரோ கார்டை அடுத்த நிறுத்தத்தில் சுவைப் பண்ணிக் கொடுப்பார்கள்... சில நேரம் பைன் அடிப்பேன் என மிரட்டி எமிரேட்ஸ் ஐடியை பறித்துக் கொள்வார்கள்...
இவ்வளவு இருந்தாலும் பெங்காலி, பிலிப்பைனி, நம் ஆட்கள் எல்லாம் கார்டு இல்லாமல்... கார்டு சுவைப் பண்ணாமல்... பழைய கார்டை வைத்து... ஏறுவதும் உண்டு. மாட்டினால் கதை சொல்வதும் உண்டு.
நான் பெரும்பாலும் பின்பக்க இருக்கையில் அமர்ந்து விடுவேன்... எங்கள் நிறுத்தம் பேருந்து கிளம்பும் இடத்தில் இருந்து மூன்றாவதாய் இருப்பதால் 90% சீட் கிடைப்பது உறுதி.
கடைசி சீட் என்பதால் மொபைலில் டவுன்லோட் பண்ணி வச்ச கதைகளை வாசிக்க ஆரம்பித்து விடுவேன்... 35 நிமிடம் ஆகும் எங்கள் அலுவகத்துக்கு அருகில் இருக்கும் நிறுத்தத்தில் இறங்க.
சாலைகள் குண்டு குழி இல்லாதிருப்பதாலும் குறைவான வேகம் என்பதாலும் படிப்பதில் சிரமம் இருப்பதில்லை.... காபி கூட குடித்துக் கொண்டு பயணிக்க முடியும்... ஆனால் உள்ளுக்குள் எதுவும் அனுமதியில்லை...
இது குறித்து ஒரு பதிவே எழுதலாம்... தங்கள் கேள்விக்காய் இங்கு... கொஞ்சம்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
உண்மைதான்... மன ஆழம் பார்க்கும் எழுத்து.
சில விஷயங்கள் ரொம்ப ஆழமான பார்வையில் எழுதப்பட்டிருக்கும்.
முன்பைவிட தற்போது அவர் ரொம்ப மாறிவிட்டார்...
தங்கள் கருத்துக்கு நன்றி அக்கா...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா...
வாசியுங்கள்... நல்ல கதைதான்.
எப்பவும் கதையினைச் சொல்லி முடிவுக்கு வராமல் விட்டு நகர்ந்துவிடுவேன்... வாசிப்பின் சுவராஸ்யம் போகாமலிருக்க...
இதில் ஏதோ தெரியவில்லை முழுவதும் எழுதிவிட்டேன்.
இனி எழுதும் போது முழுக்கதைக்குள் பயணிக்காமல் பார்த்துக் கொள்கிறேன்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா...
வாசிப்பு ஒரு சுகம்... அது பொற்காலம்தான்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
எப்போதும் கதைக்குள் பயணித்து முடிவு என்ன என்பதைச் சொல்லாமல் விடுபவன் இதில் முழுக்கதையையும் எழுதிவிட்டேன்...
வாசியுங்கள்... இன்னும் சில செய்திகள் அதற்குள் இருக்கும்

கோமதி அரசு சொன்னது…

கதை படிக்கவில்லை, உங்கள் விமர்சனம் படித்தவுடன் படிக்க ஆசை.

கோமதி அரசு சொன்னது…

"புரிஞ்சு வாழனும்' கதை படித்தேன் மிக நன்றாக எழுதி இருந்தீர்கள்.
வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். சொன்னது…

நன்றி குமார். வாய்ப்பு கிடைக்கும்போது ஓரிரு படங்களை பகிருங்கள்! நான் என்னால் "விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்கு சந்து, துபாய்- 1" கேஸ்!