மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 8 நவம்பர், 2017இலக்கில்லா பேச்சின் இனிமை - 2

ழுத்தாளர் எஸ்.ராவுடன் பேசிக் கொண்டே ஷேக் ஷயீத் பள்ளியின் அழகை ரசித்தபடி,  நடந்து சென்றதை சென்ற பகிர்வில் பகிர்ந்திருந்தேன். 

தரையில் ஒட்டியிருக்கும் பூக்களை, சுவரில் ஒட்டியிருந்தாலும் தனியாகத் தெரியும் பூக்களை, பள்ளியில் வந்து தயாரித்துக் கொடுத்த எங்கும் இணைப்பில்லாத மிகப்பெரிய பூ விரிப்பை, ஒன்னறை, நான்கரை டன் தொங்கும் விளக்குகளை. தூண்களில் இருக்கும் கலை நயத்தை ரசித்தபடியே நாங்கள் ரசிக்கும்படியாக பேசிக்கொண்டே நடந்தார்.

ஏசியில்லாது பள்ளி குளுமையாக இருக்க கட்டிடத்தின் கீழே ஓடும் குளிர் நீர் குறித்தும் அதற்காகவே பதிக்கப்பட்ட கற்களுக்கு இடையில் அடைக்காது இடைவெளி விட்டிருப்பது, பள்ளியில் வேலை செய்யும் எல்லாருக்கும் மூன்று வேலையும் பாரபட்சம் பார்க்காமல் ஒரே மாதிரியான சாப்பாடு வழங்கப்படுவது போன்ற விபரங்களை எல்லாம் சுபான்பாய் சொல்லிக் கொண்டே வந்தார்.

வாருங்கள் சிரித்தபடி பெருமழையென பேசிக் கொன்டு செல்லும் எஸ்.ராவின் பின்னே பயணிப்போம்.


இன்றைக்கு இளைஞர்கள் குறிப்பாக பதின்ம வயதுப் பையன்கள் பெயருக்குப் பின்னே சாதியைப் போட்டு சாதியைத் தூக்கிப் பிடிப்பது குறித்த நண்பர்களின் பேச்சுக்குப் பதிலளிக்கும் போது ஆண்கள் வெளியில் செல்லும் போது சாதி பார்ப்பதில்லை ஆனால் பெண்கள்தான் சாதியைத் தூக்கிப் பிடிக்கிறார்கள். அவர்கள் அதை விட்டால் சாதி ஒழிந்து விடும் என்றார். இது முற்றிலும் உண்மை.... பெரும்பாலும் வீடுகளில் பெண்கள்தான் மற்றவரின் சாதி குறித்துக் கேட்பதும் பேசுவதும்.  

எங்க ஊரில் கூட பள்ளிக் கல்லூரி படிக்கும் பையன்களின் வண்டிகளில் பெயரோடு சாதியும் இரண்டு படங்களும் இருப்பதைக் காண முடிகிறது. ஊருக்குள் சாதியின் பெயரோடு வரவேற்புப் பலகையும் சிரிக்கிறது.

தன் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வை நினைவு கூர்ந்தார். சிறுவயதில் நண்பனுடன் விளையாண்டபடி அவன் வீட்டுக்குச் செல்ல, அவன் தோசை சாப்பிட உக்காரும் போது தானும் உட்கார, அவன் தட்டில் முதல் தோசை விழ, அடுத்த தோசையை கரண்டியில் எடுத்து தனக்கு முன் நீட்டியபடி, என்ன ஆளுகடா என நண்பனிடம் கேட்டு நம்மாளுக இல்லை எனத் தெரிந்ததும் அந்தத் தோசையை தட்டில் போட்டு இனி உனக்கில்லை என்றாராம் அவனின் அம்மா. வீட்டிற்கு வந்ததும்  அம்மா அங்கெல்லாம் சாப்பிடக்கூடாது அவங்க நம்ம ஆளுக இல்லை என்று சொன்ன போதுதான் சாதி பற்றி அறிந்ததாகக் கூறினார்.

எப்போதெல்லாம் சாதி தலை தூக்குகிறதோ அப்போது கல்வி வீழ்ச்சியடைந்திருக்கும்... கல்வி உயர்ந்த நிலையில் இருக்கும் போது கல்வியாளர்கள் போற்றப்படுவார்கள். கல்வித் தரம் தாழும் போது சாதி மீண்டும் தலை தூக்க ஆரம்பிக்கும் என்றார். சாதியையும் கல்வியையும் பணமே தீர்மானிக்கிறது என்றார்.

முன்பெல்லாம் கிளினிக் என்பது வீட்டோடு இருக்கும்... மருத்துவரை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பார்க்கலாம். தங்களது வீட்டு விசேசங்களுக்கு எல்லாம் மருத்துவரை அழைப்பார்கள்... அவரும் செல்வார். தங்கள் வீட்டில் விளைந்ததில் மருத்துவருக்கும் கொண்டு வந்து கொடுப்பார்கள். வீடு ஒரு இடத்தில் மருத்துவமனை மற்றொரு இடத்தில் என்பது 17 ஆம் நூற்றாண்டில்தான் ஆரம்பித்தது. அதன் பிறகே மருத்துவருக்கும் மக்களுக்குமான தொடர்பு குறைந்தது என்றார். 

இப்போது பணம் உள்ளவர்கள் மருத்துவமனை கட்டி, மருத்துவர்களை வேலைக்கு வைக்கிறார்கள்... அதனால் முன்பிருந்த அந்நியோன்யம் போய் பணம் பார்க்கும் நிலை வந்துவிட்டது என்றவர் குடும்ப நலம் விசாரித்து... தொட்டுப் பார்த்து... தொடமாலே மருத்துவம் செய்யும் மூன்று வகையை மருத்துவர்களைப் பற்றியும் விவரித்தார்.

தான் ஒரு கல்லூரி ஆசியராகத்தான் நினைத்ததாகவும் அப்பத்தான் நிறைய படிக்க முடியும் எழுத நேரம் கிடைக்கும் என்று எண்ணியதாகவும் சொன்னவர், அவரின் அண்ணன் நீ ஒரு வகுப்பறைக்குள் இருக்கும் மாணவர்களுக்கு பாடம் சொல்லித்தர நினைக்கிறாயா இந்த பரந்த சமூகத்துக்கு சொல்லித் தர நினைக்கிறாயா... எது என்பதை முடிவு செய் என்ற போதுதான் வகுப்பறையை விட சமூகத்துக்குத் சொல்லித்தருவதுதான் சிறந்தது என எழுத வந்ததாகத் தெரிவித்தார்.

தான் படித்ததை... நான் அறிந்ததை... மற்றவர்களுக்குக் கொடுத்து விடுவேன்.... எனக்குத் தெரியவில்லை என்றால் அது என்ன என்பதை தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வேன்... அதை பிறிதொரு தருணத்தில் மற்றவர்களுக்குக் கொடுத்து விடுவேன் என்றவர், நமக்கு என்ன தெரியுமோ அதை மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்றார். நாம் படித்து வைத்திருப்பதன் பலன் அதுவே என்றார்.பழைய பிறன்மலைக் கள்ளர் குறித்துப் பேசும் போது அவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் உள்ள தொடர்பைச் சொன்னார்... அவர்கள் முஸ்லீமாக மதம் மாறி மீண்டும் இந்து மதத்திற்கு வந்தவர்கள் என்றும் அதனால்தான் அவர்கள் திருமணத்தில் மாப்பிள்ளை இன்றும் குதிரையில் வருகிறார் என்றும் சொன்னவர் அவர்கள் இப்பவும் சுன்னத் செய்வதாக கூறினார். இது எனக்குப் புதிய செய்தி... இதுவரை அறியாதது. சில நண்பர்கள் அவர் ஏதோ ஒரு நாவலில் இது குறித்து எழுதியிருப்பதாகச் சொன்னார்கள். 

நான் தற்போது நாவல் ஏதேனும் எழுதுகிறீர்களா என்று கேட்டதும் எழுதி முடியும் தருவாயில் இருக்கிறது... இனி அதை திருத்தி, இன்னும் சிலரிடம் கொடுத்து திருத்தி வாங்கி, அவர்கள் இணைக்கச் சொன்னதை, எடுக்கச் சொன்னதை எல்லாம் இணைக்கணுமா... எடுக்கணுமா என யோசித்து மீண்டும் திருத்தி பதிப்பகத்துக்கு அனுப்ப குறைந்தது இன்னும் ஆறு மாதம் ஆகும் என்றவர் எழுதுவதை விட திருத்துவதற்கே அதிக நாட்கள் எடுத்துக் கொள்வேன்... ஒரு நாளைக்கு பத்துப் பக்கம் திருத்துவதே பெரிய காரியம் என்றார். நானெல்லாம் எழுதி வைப்பதுடன் சரி... யாரிடமும் கொடுத்துத் திருத்தியதில்லை... இது ஒரு பாடம் எனக்கு.

பள்ளியின் எழிலில் மயங்கி வெளியாகி நிலாமகளின் ரசிக்கும் வெளிச்சத்தில் நகர்ந்து காரில் ஏறி, சில வருடங்களுக்கு முன்னர் போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவாக பள்ளியின் அருகே எழுப்பப்பட்டிருக்கும் வஹ்த் அல் கராமாவிற்குச் சென்றோம். 

நினைவுத் தூண்களை எழுப்பி அதில் அந்த நாற்பது வீரர்களின் பெயர்களையும் பொறித்து, அதன் முன்னே வட்ட வடிவமாய் மைதானம் போல் ஒரு இடம் அமைத்து இருக்கிறார்கள். அதில் சிலு சிலுவென அடித்தளத்தோடு ஒட்டியும் ஒட்டாமல் காதல் பேசும் தண்ணீர், அந்தத் தண்ணீரின் பிம்பத்தில் அழகிய விளக்கொளியில் ஜொலிக்கும் ஷேக் ஷயூத் பள்ளியின் நிழலுருவம்... அதைப் பார்க்கும் போது எது நிழல்... எது நிஜம் என்பதை கண்டு பிடிக்க முடியாததொரு அழகு. யமுனையில் குளிக்கும் தாஜ்மகால்தான் இதற்கு முன்னோடி என்பதாய்தான் தெரிகிறது. அதை ரசித்தபடியே கேலரியில் அமர்ந்தோம்.

சுபான் பாய் கொண்டு வந்திருந்த டீயை ஊற்றியபோது செக்யூரிட்டி மெல்ல வந்து 'நண்பர்களே இது உயிர் நீத்தவர்களுக்கான நினைவிடம்... இங்கு எதுவும் சாப்பிடக் கூடாது என அன்பாய்ச் சொல்லிச் செல்ல, ஊற்றிய டீ பேப்பர்  கோப்பைகளில் இருந்து மீண்டும் பிளாஸ்க்கிற்குள் அடைக்கலமானது. 

பின் பேச்சு மீண்டும் பெருமழையாய்... அவர் ஆசானாய் மாறி வகுப்பெடுக்க, குண்டூசி விழுந்தால் கூட சப்தம் கேட்கக் கூடிய நிசப்தத்தோடு நாங்கள் கதை கேட்டோம். எங்களுக்கு சற்றே தள்ளி ஒருவர் தன் மனைவி குழந்தையுடன் வந்திருந்து பள்ளியின் அழகை தண்ணீருக்குள் இருந்து தனது கேமராவில் விழுங்கிக் கொண்டிருந்தார்.

Image may contain: one or more people and night

நிலவும் எங்களோடு வாசகனாய் பேச்சுக்குச் செவி கொடுக்க, தொடர்ந்த பேச்சை பதிவின் நீளம் கருதி அடுத்த பதிவில் பகிர்கிறேன்.

(தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

6 கருத்துகள்:

 1. உங்கள் அனுபவத்தை படித்தேன் இடங்கள் பற்றிய விவரனையும் நல்ல இருக்கு

  பதிலளிநீக்கு
 2. எழுத்தாளருடனான உங்களது அனுபவப் பகிர்வு அருமை. புதுக்கோட்டையில் நடைபெற்ற வலைப்பதிவர் விழாவில் நான் அவரிடம் என்னைப் பற்றியும் என் வலைப்பூவினைப் பற்றியும் அறிமுகப்படுத்திக் கொண்டபோது அவர் என்னைப் பற்றி பல ஆண்டுகளாகத் தெரியும் என்றும் என் வலைப்பூவினை தொடர்ந்து படித்துவருவதாகவும் கூறியதோடு, அவருடைய உரையில் என் பௌத்த ஆய்வு தொடர்பான வலைப்பூவினையும் களப்பணியையும் பாராட்டிப் பேசினார். அவருடைய வாசிப்பினையும், அவர் பகிர்ந்ததையும் எண்ணி வியந்தேன்.

  பதிலளிநீக்கு
 3. அனுபவங்கள் தொடரட்டும் நானும்.......

  பதிலளிநீக்கு
 4. நல்ல சுவையான தகவல்கள். தொடர்கின்றேன்.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...