மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 11 நவம்பர், 2017

இலக்கில்லா பேச்சின் இனிமை - 3

ழுத்தாளர் திரு. எஸ்.ரா. அவர்களுடன் ஒரு நிலா ஊர்வல இரவில் அபுதாபி ஷேக் சையீத் பள்ளியில் பள்ளி நாட்களில் சுற்றுலா செல்லும் போது ஆசிரியர் அந்த இடம் குறித்து விளக்கமாய்ச் சொல்லிச் செல்ல, அதைக் கேட்டுக் கொண்டு அந்த இடத்தை ரசிக்கும் மாணாக்கர்களாய் பள்ளியின் அழகினைப் பருகியபடி, எஸ்.ரா. அவர்களின் பேச்சைச் சுவாசித்துக் கொண்டு நடந்த கதையை சென்ற இரண்டு பகிர்விலும் பார்த்தோம்.

அதன் பின் போரில் உயிர் நீத்த வீரர்களின் நினைவிடம் சென்று அங்கும் தொடர்ந்த பேச்சினைக் குறித்தும் அந்த இடத்தில் பெரிய பள்ளியின் அழகு பிம்பமாய் சொக்க வைப்பதையும் சென்ற பதிவில் சிலாகித்திருந்தேன். சிறு வயதில் வீட்டு வாசலில் பாய் விரித்து நிலா ஊர்வலத்தை ரசித்தபடி, நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டே நகரும் நட்சத்திரங்களையும் கடக்கும் விமான விளக்குகளையும் ரசித்தபடி அம்மா சொல்லும் கதைகளுக்கு உம் கொட்டிக் கொண்டு உறங்கிய நாட்களின் ஞாபகம் மனசுக்குள் எழ, எழுத்தாசிரியரின் பேச்சின் வீச்சில் வீழ்ந்து கிடந்தோம்.


ஏழை, பணக்காரன் குறித்தான பேச்சில் பணக்காரனைப் பார்த்த்து ஏழை ஆடம்பரம் என்பான் என்றும் ஏழையைப் பார்த்து பணக்காரன் அநாதை என்பான் என்றும் சொல்லி இலக்கண இலக்கியம் குறித்து விளக்கினார். இந்தப் பணக்காரன் - ஏழை மிக நீளமான பேச்சாக அமைந்தது.

பசி, காதல், காமம், வாழ்க்கை என எல்லாவற்றையும் மிக விரிவாக அலசினார்... அவரின் இலக்கில்லாத பேச்சை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தோம். பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன், காந்தி என இன்னொரு பரிமாணத்திலும் பயணித்தார்.

சிறுவயதில் தீபாவளிக்கு ஒரு மாதம் முன்னரே என்னென்ன பலகாரம் செய்வோம், அதை விரும்பி எப்படிச் சாப்பிடுவோம் என்பதே பேச்சாக இருக்கும். தீபாவளி அன்று எல்லாப் பலகாரமும் தயாராக, நசநசக்கும் மழையும் ஏதோ காரணத்தால் சாப்பாட்டின் மீதான விருப்பமின்மையும் எதெல்லாம் சாப்பிட வேண்டுமென நினைத்தானோ அதை சாப்பிடாமல் வெடியுடன் செல்பவனை என்னடா நல்லா சாப்பிடடியான்னு சகதோழன் கேட்கும் போது இல்லடா என்பான் என்று பசி, காமத்தில் பயணிக்கும் போது விளக்கமாய் சொல்ல இதையும் சொல்லிச் சென்றார். இதன் பின்னே தொடர்ச்சியாய் பயணித்தார்.

ஜோசப் நீத்தம் என்னும் அயர்லாந்து மருத்துவர் பெயரில் சீன அரசு விருது வழங்குவது குறித்துச் சொன்னவர் அந்த மருத்துவரே இதுதான் சீனா என்பதாய் 23 தொகுதிகள் கொண்ட புத்தகம் எழுதியவர் என்றும் அதுவே சீனா குறித்து இதுவரை உலகம் அறிய உதவும் கருவி என்பதையும் சொன்னார். அதற்காக அந்த மருத்துவர் சீன மொழி கற்றதுடன் நில்லாமல் லட்சக் கணக்கான புத்தகங்கள் வாசித்ததாகவும் அதற்காக ஒருவர் ஒரு லட்சம் புத்தகங்களை அவருக்கு கப்பலில் அனுப்பிக் கொடுத்த தகவலையும் அவர் கதையாகச் சொன்னபோது வியப்பாக இருந்தது.

நேரம் அதிகமாகிவிட்டபடியால் சாமி கும்பிட கோவிலுக்கு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று ஊரில் திருவிழாவில் மைக்கில் கத்துவது போல... (நானும் கத்தியிருக்கிறேன் எங்கள் ஊரில்). ஹோட்டல் அடைத்து விடுவார்கள் என்பதை நண்பர்கள் மெல்லச் சொல்லிக் கொண்டிருந்ததால் இச்சுவை நிறுத்தி அச்சுவை பெறச் செல்வோம் என மெல்ல நகர்ந்தோம்.

பள்ளியின் பிம்பத்தினை பிரமாண்டமாக்கி தரையோடு காதல் கொண்டு நகர்ந்த தண்ணீர் வாய்க்காலோட அதைக் கடக்கும் போது தண்ணீர் பூமிக்கு எதிர் திசையில் பயணிக்குமா எனக்கேட்டு, அதற்கு அவரே பதிலாய் பயணிக்கும் என்று சொல்லி, அதன் பின் தண்ணீர்தான் ஆவியாகவும் நீராகவும் பணிக்கட்டியாகவும் முப்பரிணாமத்திலும் இருக்கும் என்றும் மற்ற எதற்கும் அப்படி ஒரு தன்மை இல்லை என்றும் காரணங்களுடன் விளக்கினார்.

சிறுகதைகள் எழுதும்போது சம்பந்தப்பட்ட கதாபாத்திரமே சொல்ல வந்ததை பேசக்கூடாது.... எல்லாரும் அறிந்த செய்திகளை உள் வைத்து எழுதுவதை விட, புதிய செய்திகளை உள்வைத்து எழுதப் பழக வேண்டும் என்று கனவுப்பிரியன் அண்ணனிடம் அவர் சொன்னபொது அங்கிறைத்த நீர் இங்கும் கொஞ்சம் பாய்ந்தது. அவர் சொன்னதைப் போல் பல கதைகள் எழுதியிருக்கிறேன் என்றாலும் கனவுப்பிரியன் போல் செய்திகளை கதைக்குள் வைத்து எழுத நமக்கு வருவதில்லை.

கூழாங்கற்கள் பற்றிப் பேசியவர், மழையை ரசித்தபடி ஒருவர் பயணிக்கும் கதையை உங்கள் தொகுப்பில் எழுதியிருக்கிறீர்கள் இல்லையா என கனவுப்பிரியன் அண்ணனிடம் கேட்டார். வியப்பாக இருந்தது... பிரபலங்கள் ஒருவரின் கதையை ஞாபகத்தில் வைத்து கேட்பதென்பது அரிது. இது கனவுப்பிரியன் அண்ணனுக்கு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.

மெல்ல நகர நான்கு கார்களில் அபுதாபி நகருக்குள் பயணித்தோம். நான் துபையில் இருந்து வந்த நண்பர் நந்தகுமாரின் காரில் அவருக்குத் துணையாக... அந்தக் காருக்கு வழிகாட்டியாக சுபான் பாயும் கனவுப்பிரியனும் முன்னே. எங்களுக்குப் பின்னே வந்து பின் முன் சென்றது மற்ற இரண்டு கார்களும். ஒன்றில் எஸ்.ராவின் பேச்சை ரசித்துக் கொண்டே பயணித்தார்கள் நண்பர்கள்.

காரில் பயணிக்கும் போது நண்பர் நந்தகுமார் பிஸ்கெட் கொடுத்து சாப்பிடச் சொன்னார். துபைக்குள் கார் ஓட்டியவருக்கு அபுதாபியில் கொஞ்சம் பயமே. காரணம் இடம் அறியவில்லை என்பதே என்றாலும் எனக்கும் பயமே... பின்னே சிக்கனலில் கார் நிற்கும் போது மொபைல் பார்த்து சிக்னல் விழுந்த பின்னே நாம் சொல்லித்தான் நகர்கிறார். இங்கு சிக்னல் அபராதம் எல்லாம் ஆயிரங்களில் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை போலும். அவரின் நட்பு மிகச் சிறப்பு. அருமையான நண்பர் அவர். அவரால்தான் நாங்கள் ஒரு இலக்கிய மாலையை அனுபவிக்க முடிந்தது. நன்றி நண்பா.

அஞ்சப்பர் உணவு விடுதி சென்று  சாப்பிட்டபடி மீண்டும் எங்கள் பேச்சு ஆரம்பமானது... ஒரு நண்பர் பாலாவின் அவன் இவனில் வசனங்கள் குடும்பத்துடன் பார்க்க முடியாத அளவுக்கு இருந்ததைச் சொல்லி, நான் குடும்பத்துடன் சென்று ரொம்பக் கஷ்டப்பட்டதாகச் சொன்னார். இப்ப நாமெல்லாம் இந்த வசனங்களை ஜஸ்ட் லைக் தட் என்று கடந்து செல்கிறோம்.  அவர் கடந்தாரா இல்லையா தெரியவில்லை ஆனாலும் அவன் இவன் அவரைப் பாதித்திருக்கிறது.

கதைகளில் கூட வட்டார வழக்கில் எழுதும் போது பல வார்த்தைகளை அப்படியே எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். சமீபத்தில் என் நண்பர் நாடோடி இலக்கியனின் கதை வாசித்தேன். முழுக்க முழுக்க வட்டார வழக்கு... நிறைய வார்த்தைகள்... அதற்காக அந்தக் கதை சொல்ல வந்ததை... அது கொடுத்த தாக்கத்தை அனுபவிக்காமல் கடந்து சென்றேன் எனச் சொல்வது சரியல்ல... கிராமங்களில் எல்லா வார்த்தைகளும் சாதாரணமாக வந்து விழும்.

அந்த நண்பரின் குடும்பத்துடன் பார்க்க முடியவில்லை என்ற கூற்றை பிரபு ஆட்சேபித்தார். வீட்டில் நாம் கெட்ட வார்த்தை பேசுவதில்லையா என்றார். அவரின் கேள்வி நியாயமானதே... இப்போது கெட்ட வார்த்தைகள் வராத படங்கள் ஏது...? அதைப் பார்க்காத பெண்கள் ஏது..? 

இதற்குப் பதிலளிக்கும் போது அந்த மக்கள் அப்படித்தான் பேசுவார்கள்... இதுதான் வேண்டும் என்பதில் பாலா தீவிரம் காட்டியதாகவும் தனக்கு அவன் இவனில் வசனம் எழுதிய அனுபவம் குறித்தும் சொன்னவர், பாபாவில் அவருக்குக் கிடைத்த அனுபவத்தையும் அந்தப் படம் ஏன் தோல்விப்படம் ஆனது என்பதையும் விரிவாகச் சொன்னார்.

அவர் சென்ற ஆஸ்திரேலிய கிராமங்களில் காலையில் டீக்குடித்து விட்டு வயல் வேலை பார்க்கச் செல்பவர்கள் மாலை திரும்பி வரும்போது மீண்டும் டீக்குடித்துக் கொண்டு அளவளாவுவதையும் மாதம் ஒருமுறையோ அல்லது இருமுறையோ டவுனுக்குச் சென்று வேண்டியதை வாங்கி வருவதையும் பற்றியும் பேசினார்.

இந்திய பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் ஜெய்சல்மார் பாலைவனத்தில் எல்லைப் பகுதியைப் பார்க்க தில்லியில் அனுமதி பெற வேண்டியதையும் அங்கு ஒட்டகத்தில் பயணித்த அனுபவத்தையும் சொன்னார்.

நிறைவான சாப்பாட்டுக்குப் பின்னர் அவர் தங்க இருந்த ஹோட்டலுக்குச் சென்றோம். எங்கள் அலுவலகத்தின் அருகில், நான் தினமும் கடந்து செல்லும் ஒரு கட்டிடமாக இருந்தாலும் அவருடன்தான் முதன் முதலில் அந்த ஹோட்டலுக்குள் நுழைந்தோம். அங்கு வரவேற்பரையில் சில நிமிடங்கள் பேச்சு... பின் அவர் ஓய்வெடுக்க ஒதுக்கப்பட்ட பத்தொன்பதாவது தளத்தின் அறைக்குச் சென்றோம்.

அறையில் விளக்கு எரியவில்லை என்றாலும் மேசை விளக்கு வெளிச்சத்தில் அந்த அறை இலக்கியம் ருசிக்க ஆரம்பிக்க, போனில் சொன்னதால் சிறிது நேரத்தில் எலெக்ட்ரிசன் வந்து பீஸ் போகியிருந்த பல்பை மாற்றி வெளிச்சமாக்கினார். அதற்குள் எஸ்.ராவின் பேச்சின் மின்சாரம் பத்து முகங்களிலும் பரவி வெளிச்சக் கீற்றை அறையெங்கும் நிரப்பியிருந்தது.

நினைவிடத்தில் பிளாஸ்க்குள் புகுந்த டீ எங்கள் வயிற்றுக்குள் மெல்ல இறங்கியது... சுபான் பாய் அவர்களின் அன்பு மகள் எங்களுக்காக இஞ்சியெல்லாம் சேர்த்து மிக அருமையாக தயாரித்துக் கொடுத்த டீ... அவருக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். இந்த ஊரில் மிக அருமையான டீக் குடித்து எவ்வளவு நாளாச்சு... இதுவரை பெங்காலி கடை டீத்தான் சுவையாய் நாக்கை ஆக்கிரமித்திருக்கிறது.  மாலையே குடித்திருந்தால் இன்னும் சூடாய் இருந்திருக்கும்... நாங்கள் குடித்ததோ இரவு பதினோரு மணியளவில்... அப்போதும் இளஞ்சூடாய்.

பின்னர் மீண்டும் பெருமழையெனப் பெய்யாமல் ரம்மியமான சாரல். மழை நாளில் காபியுடன் சன்னலருகில் அமர்ந்து மழையை ரசிப்பது போல்... இந்தச் சாரல் என்னை மிகவும் கவர்ந்தது... ஏனென்றால் இந்த மழை சென்னை மழையின் போது கூட ஒரு சொட்டு மழை பெய்யாத எங்கள் சிவகங்கை, ராமநாதபுரத்தைச் சுற்றி வந்தது.

ஐந்திணைகள் பற்றி பேச்சு எழுந்த போது பாலைத் திணை என்பது பாலையைக் குறிப்பதல்ல அது கரடு என்பதைக் குறிக்கும் சொல் என்று சொன்னார். அப்ப பாலை என்பது பாலைவனத்தைக் குறிப்பதில்லையா அப்படியானால் இங்கு  நிலப்பரப்புக்கள் பிரிக்கப்பட்டிருக்குமா என்ற நண்பரின் கேள்விக்கு நாம் நமது நிலங்களை ஐந்திணைகளாகப் பிரித்திருப்பது போல் இங்கும் திணைகள் பிரிக்கப்பட்டிருக்கலாம்  என்றார்.

திணைகள் குறித்துப் பேசும் போது நாம் மேலிருந்து கீழாக வருவதால்தான் ஆழத்தைப் பார்த்ததாகச் சொல்கிறோம்... அவர் ஆழமாக யோசிப்பார்... அவர் ஆழமான விஷயத்தைப் பேசக்கூடியவர் என்று நாம் சொல்கிறோம்... ஆனால் மேலை நாட்டவரோ கீழிருந்து மேல் செல்பவர்கள் அதனால்தான் அவர்கள் 'உச்சத்தை' அடைந்தார் என்று சொல்கிறார்கள் என்றார்.

பழைய இராமநாதபுர மாவட்டம் அதாவது இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மூன்றும் ஒன்றாய் இருந்த போது ஐந்திணைகளையும் ஒருங்கே கொண்ட மாவட்டம் அது என்று அதன் சிறப்பைச் சொன்னார். இப்பவும் அந்த மாவட்டத்தில் இருக்கும் இந்து முஸ்லீம் ஒற்றுமையையும் ஒரு கிராமம் இந்துக்கள் ஒரு கிராமம் முஸ்லீம்கள் என்று இருப்பதையும் சொன்னவர் முஸ்லீம் ஒருவர் மற்ற மதத்தவர்களின் ஊரில் பிரசிடெண்டாக இருப்பதை யாரும் எதிர்ப்பதில்லை என்றார். எங்கள் தேவகோட்டைக்கு அருகில் ஒரு கிராமத்தில் சந்தனக்கூடு விழாவை மற்ற மதத்தினரே முன்னின்று மிகச் சிறப்பாக இன்றுவரை நடத்தி வருகிறார்கள். யாருக்கும் மதம் பிடிப்பதில்லை.

எல்லா நதியும் கடலில் கலந்தாலும் கடலில் கலக்காமல் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கண்மாயில் கலக்கும் வைகை பற்றியும், நாரை பறக்க முடியாத 48 மடைகளைக் கொண்ட ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய் குறித்தும் சொன்னார்.  

ஓரியூரில் சர்ச் கட்டியதும் அங்கு வந்த பாதர்களை வரவிடாமல் தடுத்து வந்ததையும் பின்னர் அவர்கள் அனுமதி பெற்று உள்ளே வந்ததையும் சொல்லி, தற்போது சர்ச் இல்லாத ஊரே இல்லை... எல்லா ஊரிலும் சர்ச் உண்டு என்றார்.

இடைக் காட்டூரில் ஐயர்கள் இருக்கும் வீதியில் இருக்கும் பிரமாண்ட சர்ச்சைக் குறித்தும் அந்தச் சர்ச் பெல்ஜியத்தில் இருக்கும் சர்ச்சைப் போல் இருப்பதாகவும் பல பொருட்கள் அங்கிருந்து தருவிக்கப்பட்டவை என்று சொன்னார். மேலும் இன்றும் அந்த ஊரில் ஜோசப் ஐயர், ஜேம்ஸ் ஐயர் எனப் பெயர்கள் இருப்பதைச் சொல்லி, கிராமங்களில் சர்ச் பாதர்களை ஐயர்மார் என்று சொல்லும் வழக்கம் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

கலாச்சாரத்துக்கும் பண்பாட்டுக்கும் இருக்கும் வித்தியாசத்தை அவர் விவரித்த போது ஆச்சர்யமாக இருந்தது. தான் பண்பாடு என்றுதான் எழுதுவதாகவும் பேசுவதாகவும் சொன்னார். தீவிரவாத கலாச்சாரம் துவங்கியது என்றுதான் சொல்கிறோமே தவிர பண்பாடு என்று சொல்வதில்லை. இரண்டும் ஒன்றைக் குறிக்கும் சொல்லாக இருந்தாலும் பண்பாடு என்ற சொல் நல்லதுக்கே பயன்படுத்தப்படுகிறது என்பதையும் சொன்னார்.

இங்கிருக்கும் வெயில் குறித்துப் பேசும் போது இது அடர்த்தியான வெயில் என்றார். நம் ஊர் வெயிலில் நாம் சென்றாலும் நம் உடலில் ஒரு பிசுபிசுப்பு ஏற்படுவதில்லை. இங்கு அந்த பிசுபிசுப்பு இருக்கிறது என்ற போது நண்பர் ஒருவர் நாங்க இங்கதான் இருக்கிறோம்... வேலைக்குப் போறோம் வர்றோம்... அடர்த்தியா இருக்கா... அடர்த்தியில்லாம இருக்கானுல்லாம் பாக்குறதில்லை என்றபோது நான் பலநாடுகள் செல்பவன் ஒவ்வொரு நாட்டு வெயிலும் எப்படியானது என்பதை நான் அறிவேன் என்று சொன்னார்.

வருடத்தில் ஒரு மாதம் நம்ம ஊர் வெயிலில்  இருந்து விட்டு இங்கு வரும்போது கருத்துப் போய்த்தான் வருவோம். இங்கு பதினோரு மாதங்கள் வெயிலில் அலைந்தாலும் உடல் கருப்பதில்லை. ஒரு வேலை அடர்த்தி அதிகமிருந்து உடம்பில் பிசுபிசுப்பு உண்டாவதால் இருக்குமோ தெரியவில்லை.

யாருமே அயலக வாழ்க்கையை சினிமா ஆக்கவில்லையே என்று ஆதங்கப்பட்டபோது இந்த வாழ்க்கையை ஆக்க நினைத்தால் அனுமதி பெறுவது சிரமம்... முன்பு ஒரு முறை முயற்சித்து முடியாமல் போய்விட்டது. இதிலிருக்கும் நல்லதைச் சொல்ல விடுவார்கள்... தீமையைச் சொல்ல விட மாட்டார்கள் என்றவரிடம் மலையாள சினிமாக்கள் பல இங்கு எடுக்கப்படுகிறதே என்ற கேள்வியை நண்பர் ஒருவர் முன்வைத்தார்.

மலையாளத்தில் எத்தனை சினிமா வந்தாலும் அவற்றில் இந்த வாழ்க்கையைப் பேசுவதில்லையே என்றார். அது உண்மைதான் மலையாள சினிமாக்கள் அரபு நாட்டைப் பற்றி பேசுமே ஒழிய அரபு நாட்டில் வேலை பார்ப்பவர்களின் கறுப்புப் பக்கங்களைப் பேசாது. நான் எழுதிய பேச்சிலர் ரூம் நிறையப் பேரால் வாசிக்கப்பட்டது.

இந்த வாழ்க்கையைச் சொல்ல நினைத்தால் செட்டுப் போட்டு எடுக்கலாம்ல்ல என்றவரிடம் இந்த வாழ்க்கையை... இந்தத் தெருவை... நீங்கள் தங்கியிருக்கும் இடத்தை... உங்கள் வலிகளை ஒரு செட்டுக்குள் சொல்லிவிட முடியாது. இங்கு வந்து படம் பிடித்தால்தான் இங்கிருப்போரின் வாழ்க்கையைச் சிறப்பாகச் சொல்ல முடியும்.

இந்த மண்ணைப் பற்றி அதிகம் எழுதப்படவில்லை என்ற ஆதங்கத்துக்கு இங்கிருப்பவர்கள் முயற்சியுங்கள் என்று சொன்னார். அப்போது பாலை மண்ணின் காதலன் கனவுப்பிரியன் அதற்கான முயற்சியில் இருக்கிறார் என்றும் தற்போது எழுதும் நாவல் கூட அரபு தேசத்தைப் பேசும் என்றும் பிரபு அவர்கள் சொன்னார். அப்படியா... சிறப்பாக எழுதுங்கள் உங்களால்தான் இதை சிறப்பாகச் சொல்ல முடியும் என்றார்.

தனது குடும்பம் பற்றி... தன் பசங்களில் மூத்தவர் சினிமாத் துறையிலும் சிறியவர் எழுத்துத் துறையிலும் பயணிக்க ஆரம்பித்திருப்பதைச் சொன்னார். அவர் எழு புத்தகங்கள் வெளியிட்டிருப்பதாகவும் தற்போது ஆங்கிலத்தில் கதைகள் எழுதுவதாகவும் சொன்னார்.

வெளிநாடுகளில் எழுத்தாளன் என்பவன் செல்வந்தன்.... நம் நாட்டில் அப்படியா... ஒரு முறை வெளிநாட்டு விமான நிலையத்தில் நான் யார் என்று கேட்க எழுத்தாளன் என்றதும் மில்லியன் கணக்கில் சொத்து இருக்குமே என்றார்கள். அவர்களைப் பொறுத்தவரை எழுத்து வருமானம் என்றார். நமக்கு அது அத்ம திருப்திக்கானது என்றார்

தமிழ் எழுத்தாளனாய் இருப்பது குறித்துக் கேட்கப்பட்ட போது மிகப் பழமையான நம் தமிழ் மொழியில் எழுத எனக்கும் ஒரு இடம் கிடைத்திருக்கிறதே... தமிழ் எழுத்தாளனாய் இருப்பதில்  எனக்குப் பெருமையே என்றார்.

வெளிநாட்டு வாழ்க்கையில் நிறைய வாழ்க்கைச் சுமைகள் இருக்கும் என்றும் அதனால் ஊருக்குச் சென்றாலும் சில நாளில் என்ன இன்னும் கிளம்பலையா என்ற கேள்வி எழும் என்றும் ஏன் பிள்ளைகள் கூட கேட்பார்கள் என்றும் சொன்னார்... இது உண்மையே... இதை அனுபவித்தவர்களுக்கே அந்த வலி தெரியும்.

இன்னும் இன்னுமாய் பள்ளியில் ஆரம்பித்து நினைவிடம் நகர்ந்து அஞ்சப்பரில் அடித்து ஆடி அறையில் அமர்ந்து பெருமழையென விடாமல் அவர் பேசிக் கொண்டே இருக்க,   மறுநாள் அலுவலகம் செல்ல வேண்டுமே என பிரிய மனமின்றி விடைபெற்ற போது எங்களைத் தனித்தனியே அணைத்து அன்பு செலுத்தி சென்னை வந்தால் வீட்டிற்கு வாருங்கள் என்றவரிடம் மீண்டும் ஒருமுறை குடும்பத்துடன் அபுதாபி வாருங்கள்... சில நாட்கள் தங்கியிருந்து சுற்றிப் பார்த்துச் செல்லலாம் என்று சொன்னதும் கண்டிப்பாக வருகிறேன் நாமெல்லாம் மீண்டும் சந்திப்போம் என்றார். 

சுபான் பாய் கனவுப்பிரியன் அண்ணனுடன் செல்ல, நான் திரு.வேல்முருகன் அவர்களின் காரில் நண்பர்களுடன் கார்னிச் சாலையில் பயணிக்க, காருக்குள்ளும் தல பிரபும் மற்றொரு நண்பரும் இலக்கியம் பேச, அலைனில் இருந்து வந்திருந்த பிரபு தான் தங்கியிருந்த நண்பரின் அறைக்கருகே இறங்கிக் கொள்ள, இரவுப் பசி தீர்த்துக் கொள்ள நடந்த பேரத்தைப் பார்த்தபடியே கார் ஹம்தான் சாலைக்குள் வர நான் இறங்கி அறைக்கு வந்தபோது அமீரகத்தின் தலைநகரம் அபுதாபியில் நள்ளிரவைக் கடந்து ஞாயிறு பிறந்திருந்தது.

நன்றி.
-'பரிவை' சே.குமார்.

6 எண்ணங்கள்:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

நினைவாக ஒன்றுவிடாமல் பகிர்ந்துள்ளீர்கள். நாங்களும் உங்களோடு இருப்பதைப் போல உள்ளது. அருமை.

KILLERGEE Devakottai சொன்னது…

நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நானும் அபுதாபி வந்தால் ஷேக் பள்ளியை சுற்றிக்காட்டவும்.

Unknown சொன்னது…

விரிவான பதிவு!

பூ விழி சொன்னது…

எல்லாவற்றையும் நினைவாய் தொகுத்து அருமையாக கொடுத்து இருக்கீங்க படித்தது நிறைவாக இருந்தது

நிற்க அதற்குத் தக சொன்னது…

உங்களோடு பயணித்த உணர்வு! அருமை.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

குமார் எப்படி நினைவு வைத்து எழுதுகிறீகள் அதுவே பெரிய விஷயம். அழகாகத் தொகுத்து வழங்கியுள்ளீர்கள் ! சுபான் பாய் அவர்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்!

கீதா