மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 18 அக்டோபர், 2017

சிறுகதை : தீபாவளிக் கனவு

'ஞாயித்துக் கெழம தீவாளி... இன்னக்கி செவ்வாக்கெழமயாச்சி... புசுபாக்காவுக்கு போனடிச்சி சொல்லுறேன்னு சொன்ன அம்மா இன்னமும் போன் பண்ணல... இன்னக்காச்சும் பண்ணுமா...?' யோசித்தபடி பாத்திரங்களை விளக்கிக் கொண்டிருந்தாள் சுந்தரி.

சுந்தரிக்கு இப்ப வயசு பதினைந்து இருக்கும்... மூணு வருசத்துக்கு முன்னாடி அவ பெரிய மனுஷியானப்ப ஊருக்கு வந்த அவளோட பெரியம்மா சரசுதான் தூரத்து சொந்தமான புசுபவதி இருக்காள்ல அவ வீட்டுக்கு ஒரு ஆள் வேணுமின்னு சொன்னா... தெரிஞ்ச பிள்ளையா இருந்தா நல்லதுன்னும் சொன்னா... இவள அங்க கொண்டு போயி விட்டுடலாம்ன்னு சொன்னப்போ சுந்தரியோட அம்மாவுக்கு இஷ்டமில்லை... 

'இப்பத்தான் பெரிய மனுசியாயிருக்காக்கா... அவளுக்கு அது பத்தின வெவரம் பத்தாதுக்கா...கொஞ்சநா நம்ம கூட இருந்தாளுன்னா அந்த நாள்ல எப்படி இருக்கணும்... என்ன செய்யணுமின்னு சொல்லிக் கொடுத்துடுவேன்... புது இடம்... புது மனுசங்க... அவளுக்கு அந்த நாளுக்கு இன்னது  வேணுமின்னு கூட கேக்கத் தெரியாதுக்கா....' அப்படின்னு சொல்ல, 'அடி என்னடி இவளே... இது நல்ல வாய்ப்பாக்கும்... அங்க பிக்குப் பிடுங்கல் இல்ல... பிள்ளங்க எல்லாம் தனித்தனியா மருதயிலயும் மெட்டுராசுலயும் இருக்குதுக... நல்லநாளு பெரிய நாளுக்குத்தான் வருங்க... புசுபவதியும் அவ வீட்டுக்காரருந்தான்... பிள்ள மாதிரி பாத்துப்பாக... முப்பது கழிஞ்சதும் மாசாமாசம் எப்படி நடந்துக்கணும் என்ன ஏதுன்னு சொல்லிக் கொடுத்து வையி... நா அவகிட்ட சொல்லிட்டு வந்து கூட்டிக்கிட்டுப் போறேன்... ஒரு நாளஞ்சி வருசத்துக்கு அங்கிட்டு இருந்தான்னா அவ கலியாணத்துக்கு ஏதாச்சும் பெரிசா செய்யிவாங்க... நீ அவளுக்குச் செய்ய என்ன வச்சிருக்கே... அஞ்சுக்கு பத்துக்கும் பாக்குற வேலயில வர்ற வருமானம் வாயிக்கும் பத்தாது... வயித்துக்கும் பத்தாது... இவளுக்குப் பின்னே மூணு இருக்கு... அதுல ஒண்ணுதான் ஆம்பளப்புள்ள... அதுவும் கடசி... அதையாச்சும் படிக்க வக்கணுமில்ல... ஒம்புருசனிருந்தான்னா சம்பாதிச்சி பிள்ளயளக் கட்டிக் கொடுத்துருவான்னு சொல்லலாம்... பாழாப்போன லாரிக்காரன் பகல்ல அடிச்சித் தூக்கிப் போட்டுட்டுப் பொயிட்டான்... ஒம்புருசமுட்டு சொந்தபந்தமுன்னு யாரு ஒதவியாச்சும் இருக்கா... ஏதோ இருக்க ஒரு ஓட்டு வீடு இருக்கு... இதுவும் இல்லன்னா நடுத்தெருவுலயில்ல நிப்பே... சும்மா இங்க பஞ்சு மில்லுக்கு அனுப்புறேங் கிஞ்சு மில்லுக்கு அனுப்புறேன்னு புள்ளய அனுப்புனா... காலங் கெட்டுக் கெடக்கு ஒண்ணு கெடக்க ஒண்ணுன்னா என்ன செய்யிறது... போன மாசம் இப்பிடித்தான் எங்க வூட்டுக்குப் பக்கத்துல பதினாறு வயசு... செல்போனு கடக்கி வேலக்கிப் போச்சு... எவனோடவோ கூட்டாம்... வேலக்கி போனபுள்ள வீடு திரும்பல... திருப்பூரு பக்கம் இருக்காகன்னு சொல்றாக... பதினாறு வயசுல அதுக்கு என்ன தெரியுஞ் சொல்லு... புசுபவதியின்னா நம்ம ஆளு... பத்தரமாப் பாத்துப்பா... என்ன நாஞ் சொல்றது' அப்படின்னு நிறையப் பேசி சொன்ன மாதிரி  ஒரு மாதம் கழித்து இங்க கூட்டியாந்து விட்டுட்டா.

புஷ்பவதி... முதலாளியம்மா மாதிரி நடந்துக்க மாட்டா... சுந்தரிய வீட்டுல ஒருத்தியாத்தான் வச்சிப்பா... என்ன வாங்கிட்டு வந்தாலும் என்ன செஞ்சாலும் சுந்தரிக்கும் ஒரு பங்கு இருக்கும்... ஆரம்பத்துல அவளுக்கு நாப்கின் வாங்கிக் கொடுத்து அதை எப்படி வைக்கணும்... எப்படி சுத்தம் பண்ணனுமின்னு பெத்த புள்ளக்கி சொல்ற மாதிரி சொல்லிக் கொடுத்தா... ஆரம்ப நாள்ல வயித்துவலி அதிகமிருக்கும் போது ரொம்ப வேலையும் சொல்லமாட்டா... ஆச்சு வருசம் மூணு.... இது வரைக்கும் கடிஞ்சி பேசினதெல்லாம் இல்ல... என்ன அதிகமா ஊருக்கு விட மாட்டா... அதுவும் தீபாவளி பொங்கன்னா... அன்னைக்கித்தான் புள்ளகுட்டியெல்லாம் வரும்... இங்க யாரு வேல பாக்குறது... புள்ளங்க வந்துட்டு போனதுக்கு அப்புறம் போகலாம்ன்னு சொல்லிடுவா... சொன்னபடி அனுப்பியும் வைப்பா... ரெண்டு தீபாவளிக்கும் தீபாவளி முடிஞ்சி பதினைந்து நாளைக்கு அப்புறம் அனுப்பும் போதெ அதிக நாள் தங்குறதா இருந்தா இங்க வரவேண்டாம்... போனமா வந்தமான்னு இருக்கணும்ன்னு சொல்லியே விடுவா... சுந்தரியோட அம்மாவும் அங்க நீயில்லாம சிரமப்படுவாகன்னு ரெண்டு மூணு நாள்ல திருப்பி அனுப்பிடுவா... இந்தத் தடவை பக்கத்து வீட்டு சாமியாடி தாத்தாக்கிட்ட போன வாங்கி  புஷ்பாவுக்குத் தெரியாம சுப்பிரமணிக்கு மாமாவுக்குப் போன் பண்ணி அம்மாவைப் பேசச் சொல்லி இந்தத் தீபாவளிக்கு நான் ஊருக்கு வரணும்... நீ  புஷ்பாக்காக்கிட்ட சொல்லிடுன்னு சொல்லி வச்சிருக்கா... ஆனா அவ அம்மா இன்னும் போன் பண்ணலை...

'இந்தத் தீவாளியாச்சும் தம்பி தங்கச்சியோட கொண்டாடணும்... ரெண்டு வருசமா அதுக கூட கொண்டாடாத தீவாளி என்ன தீவாளி... அப்பா இருக்கும் போது தீவாளி பொங்கன்னா அம்புட்டு சந்தோசமா இருக்கும்... தீவாளிக்கி புதுத்துணி, வெடின்னு வாங்கிட்டு வந்து கொடுப்பாரு... காலையில எல்லாரும் வரிசையா அப்பாக்கு முன்னால உக்காந்து அவரு கையால எண்ணெ தேச்சிவிடச் சொல்லி, சீயக்காய டம்ளருல எடுத்துக்கிட்டுப் போயி குளிச்சி புதுத்துணி மாட்டிக்கிட்டு சாமி கும்பிட்டு, அம்மா செஞ்ச பலகாரத்த சாப்பிட்டுட்டு வெடியோட வெளிய போயி புள்ளயளோட சந்தோசமா வெடிச்சி... ஆட்டம் போட்டு... எத்தன சந்தோசம் அன்னக்கி... அப்பா செத்ததுக்குப் பின்னால அம்புட்டுச் சந்தோசமும் அழிஞ்சி போச்சு... யாரு ஒதவியும் இல்லாம அம்மா கசுட்டப்பட்டு வேல பாத்து கஞ்சி குடிக்கிறதே பெரும்பாடா இருந்துச்சி... நா இங்கன வேலக்கி வந்தோடனே  புசுபாக்கா மாசாமாசம் அம்மாக்கு பணம் அனுப்புறதால இப்பக் கொஞ்சங் கசுடமில்லாம இருக்கு... ' என்று நினைத்தபடி பாத்திரங்களை வெயில் பார்த்துக் கவிழ்த்து வைத்தாள்.

புஷ்பா ஜவுளிக்கடைக்கு போயிருக்கா... காலையில போனவங்க... எல்லாருக்கும் டிரஸ் எடுத்துக்கிட்டு வர சாயந்தரம் ஆயிரும்... மத்தியானச் சாப்பாடெல்லாம் அங்கிட்டுத்தான்... பாவம் புஷ்பா புருஷந்தான் நொந்து போயி வருவாரு... 'இந்தப் பொம்பளங்க ஒரு தண்ணியில வேக மாட்டாங்க... ஒரு கடையில என்னைக்கும் எடுத்ததா சரித்திரமே இல்லை... ரெண்டு மூணு கடை போயி... அப்புறம் மொதல்ல போன கடைக்கே வந்து... அப்பப்பா இந்தக் கூட்டத்துல... வெளயல... வெளயலன்னு புலம்புற எல்லாக் கிராமத்தானும் என்ன வெல இருந்தாலும் வாங்கத்தான் செய்யிறானுங்க...' என்று ஒவ்வொரு முறையும் புலம்பினாலும் பொண்டாட்டி கிளம்பலையான்னு கேக்குறதுக்கு முன்னால கிளம்பி நிப்பாரு.


'என்னதான் புதுத்துணி எடுத்துக் கொடுத்தாலும் நம்ம வூட்டுல எல்லாருமா சேந்து சந்தோசமா கொண்டாடுற சொகம் இதுல இல்ல... எல்லாரும் வந்திருப்பாக... பிள்ளங்க எல்லாம் டஸ்சு புஸ்சுன்னு இங்கிலீசு பேசுங்க... டிவியில சரவணே மீனாச்சி பாக்க விடாதுக... எப்பப் பாத்தாலும் பொம்மப் படமாப் பாக்குங்க... ஆளாளுக்கு வேல சொல்லுவாக... சத்த ஒக்கார விடமாட்டாங்க... அதுவும் புசுபாக்காவோட ரெண்டாவது மருமவ ரொம்ப ராங்கி புடிச்சவ... நா வேலக்காரப்புள்ளய எல்லாம் நடுவீட்டு வரக்கிம் வரவிடமாட்டேன்...  இங்க என்ன இம்புட்டுச் சலுக கொடுத்து வச்சிருக்கீகன்னு புசுபாக்காக்கிட்ட சத்தம் போடும்... அந்த வேல பாரு... இந்த வேல பாருன்னு சொல்லிக்கிட்டே இருக்கும்... என்னோட சேல எல்லாம் வாசிங்குமிசினில போட்டா சரியா வராது... பவுடரப் போட்டு ஊறவச்சி கையால தொவச்சிருன்னு சொல்லும்.... அம்புட்டும் சிமிக்கி வச்சது... தொவச்சி முடிக்கிறதுக்குள்ள போதும் போதுன்னு ஆயிரும்... மூத்த மருமவ நல்ல மனுசி... மவராசி... என்ன எப்பப் பாத்தாலும் எந்தலயப் பாரு... அங்க பேனு பாக்கல்லாம் ஆளில்லன்னு சொல்லும்... ஆனா ஊருக்குப் போம்போது நூறு எரநூறுன்னு கையில கொடுத்துட்டுப் போவும்... அதோட புள்ளகளுக்கு பத்தாத சுரிதாரெல்லாம் கொண்டாந்து கொடுத்து போட்டுக்கச் சொல்லும்... ம்... நாளக்கி இல்லாட்டி நாளனக்கி எல்லாரும் வந்துருவாக... தீபாளி சந்தோசம் எல்லாரு மொகத்துலயும் இருக்கும்... ஆட்டம் பாட்டம்ன்னு... அவுக வந்ததுல இருந்து கறி மீனுன்னு ஒரே கவுச்சியாத்தானிருக்கும்...' என்று மனசுக்குள் பேசியவள் 'இந்தக் கறி மீனெல்லாம் நா நல்லாத்தேன் திங்குறேன்... அங்க வீட்ல அம்மா வாரம் ஒருக்கா வாங்குறதே கசுடம்... பாவம் அதுக... இந்தத் தடவ போயி கறி, மீனு, நண்டெல்லாம் அம்மாவ வாங்கியாரச் சொல்லி அதுகளுக்கு செஞ்சி குடுக்கணும்' என்றும் நினைத்துக் கொண்டாள்.

'ம்... நாம்போனா எந்தம்பி தங்கச்சிங்க எம்புட்டு சந்தோசப்படுவாக... அப்ப அப்ப கெடக்கிற காசயெல்லாம் சேத்து வச்சி ஒரு தொக இருக்கு... புசுபாக்கா போச்சொல்லிட்டா சாமியாடி தாத்தாவ கூட்டிக்கிட்டுப் போயி தம்பி தங்கச்சிங்களுக்கு புதுடிரசு எடுக்கணும்... பாவம் அம்மா... அப்பா செத்த பின்னால நல்லது எதுவுமே உடுத்துறதில்ல... அவ மொகத்துல அந்தப் பொட்டுத்தான் அழகா இருக்கும்... சினிமாவுல பாடும்ல்ல சின்னப் பொண்ணு... அதான் மருக்கொழுந்தே மல்லியப்பூவேன்னு பாடுச்சில்ல அது மாதிரி பெரிய பொட்டு வட்டமா நெலாவாட்டம் வச்சிருக்கும்... எல்லாம் போயி அம்மா என்னவோ மாதிரி ஆயிருச்சி இப்போ... அதுக்கு நாங்கதான் சந்தோசமே...  என்னய அனுப்ப அதுக்கு இசுடமேயில்ல... என்ன பண்ண... அது ஒராளு வேல பாத்து அஞ்சி பேரு சாப்பிட முடியலயே... அம்மாக்கு ஒரு நல்ல சீலையா எடுக்கணும்... எனக்கு எடுக்காட்டியும் பரவால... அதான் புசுபாக்கா எனக்கு எடுத்துருமில்ல... அவுங்க நாலு பேருக்கும் எடுக்கணும்... இந்த மாச சம்பளத்தோட புசுபாக்கா கொஞ்சக்காசு சேத்துத்தான் போட்டு விட்டுச்சு... அதுல அம்மாவ எல்லாருக்கும் டிரசெடுத்துட்டு மளியச்சாமானெல்லாம் வாங்கிக்கங்கன்னு சொல்லியிருந்தே... என்ன பண்ணுச்சின்னு தெரியல... பக்கத்துல வாங்குனதக் குடுத்தேன் சரியாப் போச்சுன்னு சொல்லுதோ என்னவோ... அது என்னக்கி அதுக்கு டிரசெடுத்திருக்கு... அப்பா செத்ததோட எண்ண தேச்சிக் குளிக்கிறதயும் விட்டிருச்சு... யாராச்சும் ஏன்டி இப்புடியிருக்கேன்னு கேட்டா இனி என்னருக்கு எனக்குன்னு கேக்கும்... நாங்கள்லாம் இல்லையான்னு தோணும்... சூரப்புலி வீட்டு முத்தையா மாமா பொண்டாட்டி செத்த மூணாவது மாசத்துல கொழுந்தியாவ கட்டிக்கிட்டு வந்துட்டாரு... அவுகளுக்கு எல்லாம் வாழ்க்க இருக்கும் போது அம்மாவுக்கு மட்டும் வாழ்க்க இல்லமா எப்படிப் போகும்ன்னு தோணும்... ஆனா அப்பா பணங்காசு இல்லாட்டியும் அம்மாவையும் எங்களயும் அப்புடி வச்சிருந்தாரு... அவரு செத்ததுக்கு அப்புறம் அம்மாக்கு மட்டுமில்ல எங்களுக்கும் என்ன இருக்குன்னு கூட தோணுது' மனசுக்குள் புலம்பியவளின் புலம்பல் கண்ணீராய் வெளியாக துடைத்துக் கொண்டு வீட்டைக் கூட்டி சுத்தப்படுத்திவிட்டு அவளுக்கு மட்டும் உலை வைத்து விட்டு 'நேத்து வச்ச கொழம்பு இருக்கு... அது  போதும்... ராத்திரிக்கி எதாச்சும் புசுபாக்கா வைக்கும்..' என்றபடி டிவியை ஆன் பன்ணினாள்.

டிவியில் தீபாவளி விளம்பரங்கள்... போத்தீஸ், சென்னை சில்க்ஸ், சரவணா ஸ்டோர்ஸ், சாரதாஸ் என அணிவகுக்க இங்கல்லாம் போயி எப்பத் துணியெடுப்போம் என்று நினைத்தவள் சிரித்துக் கொண்டாள். அப்பா இருக்கும்போது எம்பொண்ண ராஜகொமாரனுக்குத்தான் கட்டுவேன்னு சொல்லுவாரு... சோத்துப்பாட்டுக்கே கசுடப்படுறவளக் கட்ட எந்த ராஜகொமாரன் வருவான்னு தெரியல....' என்று நினைத்து சிரித்துக் கொண்டாள்.  

விளம்பரம் முடிந்ததும் இரவு ஒளிபரப்பான பிக்பாஸ் மறு ஒளிபரப்பில் தொடர, ம்... சல்லிக்கட்டுல உண்மயாப் போராடுனவுக எல்லாம் எங்கயோ இருக்க, இந்தப்புள்ளக்கி வந்த வாழ்வப் பாரு... எவ்வளவு மோசமான பொம்பள இது... எங்கதெருவு காளியம்மா அக்கா மாதிரி... அதுவும் இப்பிடித்தான்.... அதை எனக்கு சுத்தமாப் பிடிக்காது... அதுமாரி இதப்பாத்தாலே கடுப்பு வருது... அது பேசுறதுகூட கடுப்படிக்கிது... எனக்குத்தான் புடிக்கலன்னு பாத்தா... புசுபாக்காவுக்கு புடிக்கலை... பக்கத்து வீட்டு அக்காக்களுக்கெல்லாம் புடிக்கல... இப்பிடியும் பொம்பள இருப்பாளான்னு காலையில கதகதயாப் பேசுவாங்க... என்ன செய்ய எவ எவளுக்கு என்ன வாழ்வுன்னு எழுதியிருக்கோ அதுதானே நடக்கும்... எங்க தலயில இப்பிடி எழுதியிருக்கு...' என்று நினைத்தபடி சேனலை மாற்றினாள்.

'ஒவ்வொரு தீவாளிக்கும் சுந்தரப்பய நெறய வெடிப் போடுவான்... அவுக அப்பா செட்டியவூட்டு கணக்கப்பிள்ள... அவுருக்கு செட்டியாரு நெறய வெடி கொடுத்துவுடுவாரு... எப்பவுமே ஓவராப் பீத்திப்பான்... லெச்சுமி வெடி, அணுகுண்டுன்னு போட்டுக்கிட்டே இருப்பான்... கொட்டாச்சிக்குள்ள வச்சி அணுகுண்டு போடுறது ஒரு சந்தோசந்தேன்... அதேமாரி பாட்டில்ல வச்சி ராக்கெட் விடுறது... சுந்தரப்பய கையில புடிச்சி விடுவான்... விர்ருன்னு தூக்கி வீசுவான்... மாரியம்மங் கோவிலு திருவிழாவுல வானம் போடுறதப் பாத்து அது மாதிரி விடுவான். ஒரு வருச தீவாளிக்கு சுந்தரப்பய மேல உள்ள ஆத்தரத்துல அவன் வெடி வக்கிம்போது அவனுக்குத் தெரியாம சரவணன் சாணியில வெடிகுண்ட வச்சி... அது வெடிச்சி... சுந்தரத்தோட புதுடிரசு எல்லாம் சாணியாகி... ரெண்டு பேரும் கட்டி உருண்டு... நாங்க வெளக்கிவிட்டு... அதெல்லாம் எத்தன சந்தோசம்... இனிமே அப்புடி வருமா... சுந்தரங்கூட எங்கயோ வெளியூருல படிக்கிறானாம்... சரவணனும் அவுக அக்கா வீட்டுலயிருந்து படிக்கிறானாம்... அன்னக்கி பேசின மாதிரி... சண்ட போட்டு வெளாண்ட மாதிரி இனிப் பாத்தா பேசுவானுங்களா... சண்ட போடுவானுங்களா... போனவாட்டி ஊருக்குப் போனப்பவே ரோட்டுல போன முருகன நிப்பாட்டிப் பேசினதுக்கு இப்ப நீ பெரியபுள்ள... ரோட்டுல நின்னுலாம் பேசக்கூடாது... பாக்குறவுக தப்பாப் பேசுவாகன்னு அம்மா சத்தம் போட்டுச்சு... நம்ம கூட ஒண்ணா ஓடிப்புடிச்சி வெளாண்ட பயக கூட பேசுனா ஊரு எதுக்கு தப்பாப் பேசணும்... வயசுக்கு வந்துட்டா பொட்டப்புள்ளக எல்லாத்தயும் மாத்திக்கணுமா... ஆனா இங்க வயசு வந்த புள்ளக எல்லாத்தையும் மாத்திக்கிட்ட மாதிரி தெரியலையே...  எதுக்கு தேவயில்லாததெல்லாம்... அம்மா சொன்னா சரியாத்தானிருக்கும்...' என்று நினைத்தவள் டிவியை ஆப் பண்ணிவிட்டு காய்ந்த துணி எடுக்க மொட்டமாடிக்குப் போனாள்.

'புசுபாக்கா வர்றதுக்குள்ள அம்மாக்கு போன் பண்ணி ஏன் பேசலைன்னு கேக்கலாம்... வாரத்துல ஒருநா அம்மாக்கிட்ட பேசச்சொல்லி புசுபாக்காவே அதோட செல்லுப்போனுல நம்பர் போட்டுக் கொடுக்கும்... இப்ப செல்லு வந்ததுல இருந்து யார் வீட்டுலயும் டெலிபோனு இல்ல...  புசுபாக்கா ஒரு போனு... அது வீட்டுக்காரருக்கிட்ட ஒரு போனு... அப்புறமெதுக்கு வீணால பணங்கட்டனுமின்னி... இங்க இருந்ததையும் வேண்டான்னு கொடுத்துட்டாக... துணிய மடிச்சி வச்சிட்டு சாமியாடி ஐயா வீட்டுக்குப் போயி அம்மாக்கு ஒரு போன் பண்ணி இன்னக்கி பேசச் சொல்லணும்... நாளக்கி எல்லாரும் வந்துட்டா அப்புறம் அக்கா ஒத்துக்காது...' என்று நினைத்தபடி துணிகளின் மீதிருந்த கிளிப்பை எடுத்து டப்பாவில் போட்டுவிட்டு துணிகளை எடுத்து மடித்து மடித்து கட்டைச் சுவற்றில் தரம் பிரித்து  வைத்து மொத்தமாக அள்ளிக் கொண்டு கீழிறங்கினாள்.

'ரெண்டு வருசமா தீவாளிக்கி ஊருக்குப் போகல... இந்த வருசமாச்சும் புசுபாக்கா மனசு வச்சி போச்சொல்லணும்... தீபாளிக்குப் பொயிட்டு எல்லாரும் சினிமாக்குப் போகணும்... அப்புறம் கொலசாமி கோயிலுக்குப் போயி சாமி கும்பிட்டு வரணும்... ஒரு நாலஞ்சி நாளு லீவு கேக்கணும்... எனக்கென்னவோ இந்த வாட்டி புசுபாக்கா போச்சொல்லும்ன்னு மனசு சொல்லுது... எப்பவும் எம்மனசு சொன்னா சரியா இருக்கும்... அம்மாதான் பேசணும்... இந்தவாட்டி அவள அனுப்புங்கக்கா புள்ளங்க அவகூட கொண்டாடனும்ன்னு சொல்லுதுகன்னு அம்மாவைச் சொல்லச் சொல்லணும்... ஊருக்குப் போன்னு சொன்னா புசுபாக்கா பஸ்சுக்குப் போக செலவுக்கு கண்டிப்பா காசு கொடுக்கும்... பெரிய மருமவ வந்திருச்சின்னா அதுவும் கொடுக்கும்... புசுபாக்கா பேத்தி நருமதா, எங்கயோ கம்பூட்டரு கம்பெனியில வேல பாக்குதாம்... அதுதான் போனதடவ வந்தப்ப கடக்கி கூட்டிப் போயி பிராவெல்லாம் வாங்கி கொடுத்துச்சு... எல்லாம் பழசாப்போச்சு... ரெண்டு சட்டியும் ரெண்டு பிராவும் வாங்கித்தரச் சொன்னா வாங்கிக் கொடுக்கும்... அதுகூட ஊருக்குப் போறேன்னு சொன்னா ஏதாச்சும் காசு தரும்...' என நினைவுகளோடு அடுத்திருந்த சாமியாடி ஐயா வீட்டுக்குப் போனாள்.

'இப்பத்தாண்டி புஸ்பாக்காக்கிட்ட பேசினேன்... துணிக்கடயில நிக்கிதாமாம்... நாளான்னக்கி அனுப்புறேன்னு சொன்னுச்சு...' என்றதும் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே போனாள். நினைத்ததெல்லாம் நடந்தது போல 'அய்ய்ய்ய்யா' என்று கூச்சலிட்டாள் 'அடியேய்... இவளே... எதுக்கு கத்துறே... அது சரியின்னு சொல்லிருச்சி.... ஆனா...' என்று அம்மா இழுக்க, 'என்னம்மா... என்ன ஆனான்னு இழுக்குறே...' கலவரமாய்க் கேட்டாள். 'உங்க பெரியப்பாவுக்கு முடியலன்னு ஆசுபத்திரிக்கி கொண்டு போனாக... செத்துப்பொயிட்டாராம்... இப்பத்தான் சுப்பிரமணி அண்ணனுக்கு சந்துரு போன் பண்ணினானாம்... வந்து சொல்லிட்டுப் போவுது... என்ன இருந்தாலும் உங்கப்பனோட கூட பொறந்தவரு.... பேச்சு வார்த்த இல்லன்னாலும் செத்த மொற கேக்கணுமில்லயா... அப்பொறம்   அவர சாகக் கொடுத்துட்டு நாம தீவாளி கொண்டாட முடியுமா...? புள்ளயளுக்கு புதுத்துணி எடுத்தேன்... இந்தவாட்டி நீ வருவேன்னு ஒனக்குங்கூட ஒரு சுரிதாரு எடுத்து வச்சேன்... அழுகுற பண்டமா... துணிதானே.... இருக்கட்டும் பொங்கலுக்கு போட்டுக்கலாம்...  நீ என்னத்த இப்ப வந்தே... ஒரு வாரமோ பத்து நாளோச் செண்டு வா... நா நாளக்கி புசுபாக்காக்கிட்ட வெவரம் சொல்லுறேன்... அங்க புதுத்துணி எடுத்துக் கொடுத்தாலும் தீவாளி அன்னக்கிப் போடாதடி... வாங்கி வச்சிக்க பின்னால போட்டுக்கலாம்' அம்மா பேசிக் கொண்டே போக,  'இதுவரைக்கும் இல்லாத பெரியப்பன் இப்ப எங்க இருந்து வந்தானாம்... அவனுக்காக நாங்க தீவாளி கொண்டாடக் கூடாதாம்... இந்தம்மா இப்படித்தான்... அதுக்காக வாழாது... எப்பவும் ஊருக்கும் ஒறவுக்கும் பயந்தே வாழும்... ஒரு வருசம் தட்டுனா மூணு வருசம் தட்டும்ப்பாங்க... மூணு வருச தீவாளிக்கு ஊருக்குப் போவல... இந்த வருசத்துக்கு பெரியப்பன்... அடுத்த வருசம் என்னவோ...' என்று நினைத்தவள் மேற்கொண்டு அம்மாவுடன் பேச விருப்பமில்லாமல் போனைக் கட் பண்ணி சாமியாடி தாத்தாவிடம் கொடுத்துவிட்டு வீடு நோக்கி நடந்தவளின் நெஞ்சுக்குள் நிரம்பியிருந்த தீபாவளி நினைவுகள் மெல்ல அழுகையாய் விக்கி வெடிக்க, அந்தக் கண்ணீரில் மெல்லக் கரைந்து வெளியானது காலை முதல் மனசுக்குள் பூத்திருந்த தீபாவளிக் கனவு.
-'பரிவை' சே.குமார்.

19 எண்ணங்கள்:

மனோ சாமிநாதன் சொன்னது…

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

இராய செல்லப்பா சொன்னது…

ஏழையின் ஆசைகள் பெரும்பாலும் கனவுகளாகவே நின்றுவிடுகின்றன...சுந்தரி மட்டும் விதிவிலக்கா என்ன? அடுத்த தீபாவளி அவளுக்கு நல்ல தீபாவளியாகட்டும். - இராய செல்லப்பா சென்னை.

(2) தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

பலருக்கு விழாக் கனவுகள் இதுபோலவே....தீபாவளி வாழ்த்துகள்.

ராஜி சொன்னது…

எல்லா நாளையும்போலதான் இந்த நாளும்ன்னு நினைச்சுட்டா எதும் பாதிக்காது. பாவம் அந்த பிள்ள.. சிறு பெண் தானே! சீக்கிரத்துல ஞானம் வந்திரும்

உங்கள் அனைவரின் கவலைகளும் வெடியாய் வெடித்து சிதற...
மகிழ்ச்சி மத்தாப்பூவாய் மலர....
வாழ்க்கை ராக்கெட்டாய் உயர...
குடும்பம் கல்பட்டாசாய் கலகலத்து மகிழ இறைவன் அருள் புரிய வேண்டும்.
அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள்

துரை செல்வராஜூ சொன்னது…

கதை என்றாலும் - கனவுகள் பலிக்கவில்லை எனில் கஷ்டம் தான்..

அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..
வாழ்க நலம்..

Nagendra Bharathi சொன்னது…

அருமை

Avargal Unmaigal சொன்னது…

நல்லதொரு கதையை தீபாவளி பரிசாக கொடுத்தற்கு பாராட்டுக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை
தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள் நண்பரே

ஸ்ரீராம். சொன்னது…

அந்த அப்பாவிப்பெண்ணின் நிலையிலிருந்து படித்ததால் கஷ்டமாக இருக்கிறது. பாவம்.

இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்.​

சேக்காளி சொன்னது…

பரிவை சே குமார் நீங்க ஆம்பளயா இல்ல பொம்பளயா?
ஒரு பொண்ணோட நிலையில இருந்து அழகா எழிதியிருக்கீங்க.

சேக்காளி சொன்னது…

கசுடப் படாம சங்கடம் ன்னு எழுதுனா என்ன?

Geetha Sambasivam சொன்னது…

மிகவும் மனவேதனை! என்ன பெரிசா! தீபாவளியைக் குடும்பத்தோடு கொண்டாட ஆசைப்பட்டது தான்! தப்பா அது? பாவம், இந்த வேதனை பல நாட்கள் மனசில் இருக்கும். நல்லதொரு கதை! அருமையாகக் கொண்டு சொல்கிறீர்கள். கதை முழுவதும் அந்தப் பெண்ணின் நினைவுகளிலேயே வருகிறது. கடைசிப் பத்தியில் தான் தொலைபேசி உரையாடல்! அருமையான உத்தி! வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள்.

ராமலக்ஷ்மி சொன்னது…

பதினைந்து வயது சிறுமியின் உணர்வுகளை.. கனவு, ஏக்கம், ஏமாற்றத்தை அருமையாகக் கொண்டு வந்திருக்கிறீர்கள்.

இனிய தீபாவளி வாழ்த்துகள்!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம்.
தங்கள் கருத்தையும் தீபாவளி வாழ்த்தையும் சொன்ன அனைவருக்கும் நன்றி.

G.M Balasubramaniam சொன்னது…

தீபாவளித் திருவிழா என்னவோ ஒருநாளைக்குத்தான் ஆனால் அது பற்றிய எதிர்பார்ப்புகள் பல நாட்கள் எல்லாஎதிர்பார்ப்புகளும் இனிதாய் முடிவதில்லை தீபாவளி நல் வாழ்த்துகள்

Unknown சொன்னது…

படித்தேன் மனப்பாரம் !தாங்கயிலா!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அருமையான கதை குமார். வழக்கம் போல் உங்கள் எழுத்து நடை..பாவம் சுந்தரி அவளுக்கு அந்த வயதில் ஏற்படும் ஏக்கங்கள் உணர்வுகள் அதனால் ஏற்படும் ஏமாற்றம்..ஓர் ஏழைச் சிறுமி அதுவும் வீட்டு வேலை செய்பவளுக்கு கனவுகள் பலித்திடுமோ அதற்கு சின்ட்ரெல்லாவா என்ன....அடுத்த தீபாவளி இனிதாய் அமைந்திடட்டும்...அருமை

நிஷா சொன்னது…

எப்போதும் போல கிராமத்து எழுத்து நடையில் நிரம்ப நாட்களுக்கு பின் குமாரின் இயல்பில் கதை படிக்க கிடைத்திருக்கின்றது. ஏழையாய் பிறந்து, அதிலும் பெண்ணாய் பிறந்து வீட்டு வேலைக்கு செல்லும் பெண்அளின் மன நிலையை அப்படியே கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள். எங்கள் வீட்டிலும் இப்படி சின்ன பெண்கள் வேலை செய்ததுண்டு. இருந்தாலும் அவர்கள் வீட்டுக்கு செல்வதை விட எங்கள் வீட்டில் நின்றால் நல்ல ஆடை, சாப்பாடு கிடைக்கும் என்பதனால் அவர்கள் குடும்பமே எங்கள் வீட்டுக்கு விருந்துக்கு வந்து விடுவார்கள். நல்ல நாட்கள் விசேஷ நாட்கள் எனில் யாரையுமே பாகுபடுத்தி பார்க்காமல் வீட்டுக்கு வெளியே பெரிய பானையை விறகடுப்பில் ஏத்தி விடுவார் அம்மா.எல்லோருக்கும் அந்த மனம் வராது தானே? இந்த பெண் போல் இருக்கும் நிஜப்பெண்கள் என்றேனும் தன் குடும்பத்துடன் இனைந்து விசேச நாளை கொண்டாட நாம் வேண்டுவோம்.

இன்னும் எழுதுங்கள் குமார்.

Menaga Sathia சொன்னது…

படிக்கும்போதே மனம் கனக்கிறது.....பெருபாலும் ஏழைகளின் ஆசைகள் கனவாகவே போய்விடுகிறது...பாவம் அந்த சிறுமி!!
கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை...