மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 15 அக்டோபர், 2017

மனசின் பக்கம் : ஒருநாளும் பலசுவைகளும்

ங்க அலுவலகத்தின் புதிய புராஜெக்ட்டுக்கு அதிக ஆட்கள் தேவை என்பதால் இங்கிருக்கும் இந்திய மேனேஜரின் ஏற்பாட்டில் (அவருக்கு நல்ல கமிஷன் வந்திருக்கும் போல) கேரளாவில் இருக்கும் ஒரு கம்பெனி மூலமாக இரண்டு பெண்கள் உள்பட பதினைந்து பேரை இரண்டு வருட ஒப்பந்தத்தில் எடுத்து வந்திருக்கிறார்கள். அதற்கான நேர்முகத் தேர்வு நடத்த எங்க அலுவலகத்தில் இருக்கும் லெபனான் மேனேஜர் கேரளா சென்றான். அவனிடம் என் நண்பனை இந்தப் புராஜெக்ட்டில் எடுத்து கொள் என்று சொன்ன போது என்னிடம் பயோடேட்டா வாங்கி கேரளா கம்பெனிக்கு அனுப்பி நான் நேர்முகத் தேர்வு செய்ய வரும் நாளில் இவருக்கும் அழைப்பு விடு என எனக்கு முன்னர்தான் மின்னஞ்சல் அனுப்பினான். அவன் கேரளா போய் நேரடித் தேர்வு நடத்தியும் நண்பருக்கு அழைப்பு போகவில்லை. நான் எங்க மேனேஜரிடம் மின்னஞ்சலில் என்னாச்சு... ஏன் நண்பருக்கு அழைப்பு போகவில்லை என்று கேட்டபோது அவர் சொன்ன பதில் அவங்க அலுவலகத்தில் போதுமான ஆட்கள் இருக்கிறார்களாம் அதனால் அவர்களை அனுப்புகிறார்களாம்... தங்கள் நண்பருக்கு மற்றுமொரு வாய்ப்பு வரும் போது கண்டிப்பாக அழைப்பு விடுகிறேன் என்று சொல்லிவிட்டார்கள் என்றான். மலையாளிகள் மலையாளிகளுக்குத்தான் முதலிடம் கொடுப்பார்கள் தமிழன் என்றாலே தள்ளி வைத்துத்தான் பார்ப்பார்கள். மேலும் கேரளா என்பது தனி நாடு போல்தான் இங்கு அவர்கள் பேச்சு இருக்கும். நல்லதொரு வாய்ப்பில் நண்பருக்கு வேலை கிடைக்காதது மிகுந்த வருத்தமே. அந்தக் கம்பெனி அனுப்பியவர்களுக்கு நம்ம ஊர் மதிப்பில் சம்பளம் கொடுக்குமாம். அந்தக் கம்பெனிக்கு பதினைந்து பேரை வைத்து இந்த ரெண்டு வருடத்தில் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும். எங்க கம்பெனிக்கு இந்தப் பதினைந்து பேரால் மில்லியன் கணக்கில் லாபம் கிடைக்கும். ஆனால் எவ்வளவுதான் கஷ்டப்பட்டாலும் நமக்கு கூடுதலாக பணம் கொடுக்க நினைப்பது கூட இல்லை. இப்போது ஒப்பந்தத்தில் ஆட்களைக் கொண்டு வந்து விட்டதால் பிடிக்கலைன்னா வேலையை விட்டுட்டுப் போன்னு சொல்ற மாதிரி பேச ஆரம்பிச்சிட்டானுங்க.

சரி அடுத்த கதைக்கு வருவோம்... இங்கு வந்திருக்கும் பதினைந்து பேருடன் எங்க ஆட்கள் இருவரையும்... நானும் போக வேண்டியவன்... வேறொரு புராஜெக்ட்டில் இருப்பதால் என்னை விட்டுவிட்டார்கள்... அந்த புராஜெக்டில் நம் மேற்படி இந்திய இஞ்சினியரால் நானும் எகிப்து சர்வேயரும் படும் பாடு தனிக்கதை...  அதுக்கு அப்புறம் வாரேன்... இப்ப பதினைந்து பேருக்கு வாரேன்... மூன்று அலுவலத்தில் பணி... ஆட்களை பிரித்துக் கொடுத்தாச்சு...  மூன்றும் அரசு நிறுவனங்கள்... இரண்டு அலுவலகத்தில் எந்தப் பிரச்சினை இல்லை... ஒரு அலுவலகத்துக்கு கொடுத்த மூன்று பேருக்கும் பணி தெரியவில்லை என மின்னஞ்சலை அந்தப் பிரிவின் மேலாளரான அரபிப் பெண் எல்லாருக்கும் அனுப்பிவிட, அவர்களுக்கு எப்படி பணி எடுக்க வேண்டும் என வகுப்பெடுக்க வேண்டும் என்று முடிவாகி, என்னைப் போய் வகுப்பெடு அதற்கு முன்னர் அவர்களுடன் பேசு என்று சொன்னான் புதிதாய் அந்த புராஜெக்ட்டிற்கு மேனேஜராய் வந்திருக்கும் பாகிஸ்தானி, நான் மூவரில் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது அவர் உங்களிடம் யார் சொன்னது எங்களுக்கு பணி அறியவில்லை என... இஞ்சினியர் கொடுத்த ஒரு பணியைச் செய்து வெரிகுட் வாங்கினோம்... அவர் எங்களைப் போல் வேறு யாரும் பணி எடுக்கவில்லை எனச் சொல்லி ஒரு பெண் குட்டியை கூட்டி வந்து அவருக்கும்  படிச்சிக் கொடுக்கச் சொன்னார் என ஏதோ நான் அவர்களைத் தப்பாகச் சொன்னது போல் என்னிடம் சண்டையிட்டார். நமக்கு சும்மாவே சுள்ளுன்னு வரும்... போனில் சம்பந்தமில்லாமல் பேசினால்... என்னிடம் அந்த மின்னஞ்சல் இருந்தது. அதில் அவர்களுக்கு பணி தெரியவில்லை எனச் சொல்லி முதல் மின்னஞ்சல் அனுப்பியது அவர்களிடம் படிக்கப் போன பெண்குட்டி என்பதை நான் அவர்களிடம் சொல்லாமல் சற்றே கோபமாக உன் இஞ்சினியர் சொன்னான்... அவனுக்கிட்ட கேட்டுக்க... என ஆரம்பித்து சுதி கூட்ட,  எதிர்முனை ஸாரி சேட்டா என்றது.

வியாழனன்று பத்து மணிக்கு வகுப்பெடுக்க வேண்டும்... பாகிஸ்தானி முதல் நாள் என்னிடம் நாளை நீ அங்கு வந்துடு என்றெல்லாம் சொல்லவில்லை. மறுநாள் எப்பவும் போல் அலுவலகம் போயாச்சு. பாகிஸ்தானி வரவில்லை... ஒன்பது மணி முதல் போன் அடித்தால் எடுக்கவே இல்லை... அலுவலக எண்ணில் இருந்து போன் வந்திருக்கிறதே என திருப்பியும் அடிக்கவில்லை. 9.40க்கு பொனெடுத்து என்ன நீ இன்னும் வரலை... இங்க எல்லாரும் வந்தாச்சு... இன்சினியரும் வந்திருக்கு என்றான். அவனிடம் ஒரு சவுண்ட் விட, சரி நீ பஸ்சில் வந்துவிடு லேட்டானாலும் பரவாயில்லை என்றான். பஸ் பிடித்துப் போனால் ரொம்ப நேரமாகும் என்பதால் டாக்சியில் பயணப்பட்டேன்... இப்போது டாக்ஸி வாடகை எல்லாம் ஒட்டகத்தை விட உயரமாய் ஆக்கி வச்சிருக்கானுங்க... அலுவலகத்தில் பில் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் டாக்ஸி ஏறினேன்.  

டாக்ஸி டிரைவர் நேபாளி, அவன் பேசிக்கொண்டே வந்தான்... பயங்கர சூடா இருக்குடா என்றதும் என்ன பண்ணச் சொல்றே... எனக்கு இந்த மாச டார்க்கெட் முடிக்கணும்... வெயில் பார்த்தா ஆகுமா... இந்தச் சூட்டுலதான் வண்டி ஓட்டுறேன் என்றவன் அதுவும் இந்த மாசம் கூடுதலாய் உழைக்கணும் என்றான். ஏன் என்று கேட்டபோது ஒரு பைன் இருக்கு... 4000 திர்ஹாம் அடைக்கணும்... அதுக்கும் சேர்த்து உழைக்கணும் என்றான்.. வாங்குற சம்பளத்தைவிட பைன் அதிகமாச் சொல்றே... உனக்குத்தான் அதிக வேகம் போனால் வார்னிங் வந்துருமே அப்புறம் என்ன எங்க வேகமாக ஒட்டினாய் என்றதும் சிரித்தபடி சிக்னல்ல நின்னேன்... போன் நோண்டுறது என்னோட முக்கியமான வேலை... அப்படி நோண்டிக்கிட்டு இருக்கும் போது லெப்ட்ல திரும்புற சிக்னல் விழ, நான் நமக்குத்தான் பச்சை விழுந்துருச்சின்னு நேரா வண்டியை விட்டுட்டேன்... நாலாயிரம் தீட்டிட்டான் என்றான். இப்போது இங்கு ரோட்டை கண்ட இடத்தில் நடந்து கடந்தால் 400 திர்ஹாம் பைன்... முன்னர் 200 இருந்தது... எல்லாத்தையும் அதிகமாக ஏத்தி வச்சிட்டானுங்க கில்லர்ஜி அண்ணா...  டாக்ஸி வாடகை இரவை விட கூடுதல் ஆக்கி இப்ப இரவு பகல் இரண்டும் ஒரே மாதிரி கொண்டு வந்துட்டானுங்க... ஏறி இறங்கினால் 12 திர்ஹாம் கொடுக்கணும். ஒரு வழியாக அலுவலகம் போனா பாகிஸ்தானி அங்கு வந்திருந்த ஒரு அரபி இஞ்சினியர் பெண்ணிடம் அவனோட பிரதாபத்தை அளந்து கொண்டிருந்தான். ஒருவழியாக அங்கு போய் அமர்ந்தாச்சு.

சிறிது நேரத்தில் எல்லாருக்கும் மேனேஜரான அரபிப் பெண் சைமா வர எல்லோரையும் அறிமுகப்படுத்திக் கொள்ளச் சொன்னான். புதிய மூவரும் அறிமுகம் செய்துகொள்ள, என்னை பார்த்து குமாரை எனக்கு நல்லாத் தெரியும் என்று சிரித்தாள். அந்தச் சிரிப்பின் பின்னே வெறொரு கதை இருக்கு... இந்த மூணு பேர் மாதிரி ஒரு மாதம் அங்கு போன என்னை எல்லாப் பயலும் சேர்ந்து பாடாய் படுத்த, நம்ம சுயமரியாதை எகிறியபோது இதேபோல் மின்னஞ்சல் எல்லாருக்கும் பறக்க, பெரிய மேனேஜரான இவள் எட்டு வருசமா குமாரை எனக்குத் தெரியும்... என்ன வேலையோ அதை மட்டும் செய்யச் சொல் எல்லாருடைய வேலையையும் செய்ய அங்கு அனுப்பவில்லை... அப்படி கொடுக்க முடியவில்லை என்றால் குமார் அங்கு வரமாட்டார் என மின்னஞ்சல் அனுப்பினாள்... அதான் அந்த சிரிப்புக்குக் காரணம். பின்னர் அந்த இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டுச் செல்ல, பாகிஸ்தானியும் நான் மேலே இருக்கேன் எனக் கிளம்பினான், மற்ற மூவருக்கும் எப்படி பணி எடுக்க வேண்டும் என இரண்டரை மணி நேரம் வகுப்பெடுக்க... இந்த வகுப்பெடுக்கிற வாழ்க்கை இன்னும் மாற மாட்டேங்குது... இறுதியில் சேட்டா நான் கேட்டதுக்கு அன்னைக்கு சூடாயாச்சு... சாரி என்றான் ஒருவன். பின்னர் நட்பாகி பேசிக் கொண்டிருந்துவிட்டு பாகிஸ்தானியை தேடினால் ஆளில்லை. அந்த வெயிலில் ரெண்டு சிக்னல் நடந்து பஸ்சிற்க்கு காத்திருந்தால் வெயில் காரணமாக குளித்துக் கொண்டிருந்தேன். அருகில் நின்ற ஒருவன் என்ன சூடு... என்ன ஊரு... பஸ்சையும் காணோம் என்று ஆங்கிலத்தில் புலம்பினான். நான் அக்டோபராச்சு இன்னும் சூடு குறையலை என்ற போது எங்க ஊரில் குளிர்காலம்... நான் ஜோர்டான்... இங்க இந்த சூட்டுல கோட்டை மாட்டிக்கிட்டு நிக்க வேண்டியிருக்கு என்று சிரித்தான். அவன் போக வேண்டிய பஸ் வர, நீயும் வா என்றான்... எனக்கான நம்பர் இதில்லை என்று சொல்ல, அப்ப இன்னும் இந்த வெயிலை அனுபவி என்று சிரித்தபடி சென்றான்.

அரை மணி நேரத்துக்குப் பின் பேருந்து வர, சரியான கூட்டம் ஏறி இரண்டாவது சிக்னல் கடந்ததும் இருக்கை கிடைக்க, அமர்ந்து கிரிக்கெட் கேமை விளையாட ஆரம்பித்தேன். பேருந்து நிறுத்தம் வந்து இறங்கிய போது வீட்டில் போய் படுத்திருந்துவிட்டு அலுவலகத்துக்கு வர, முன்பக்கமாக இறங்கினான் பாகிஸ்தானி. இப்படியானவர்களுக்குத்தான் எங்க கம்பெனியில் வாழ்க்கை.  இவன் பரவாயில்லை எங்க மேனேஜருக்கு அலுவலகம் வந்து விட்டு வீட்டுக்கு போகனும் என்றால் ஏதோ மீட்டிங்கிற்குப் போறது போல லாப்டாப் சகிதம் கிளம்பி வீட்டில் போய் தூங்கிருவான்..  என்னோட புராஜெக்ட் கதையை இப்பச் சொன்னா பதிவு நீண்டுடும்... இன்னொரு நாளில் பார்க்கலாம்.

சில மலையாளப் படங்கள் பார்த்தேன்... ஒன்றும் மனதில் ஒட்டவில்லை...விமர்சனம் எழுதுமளவுக்கு இல்லை என்பதால் எழுதவில்லை. சில நல்ல ஆங்கிலப் படங்களையும் பார்த்தேன். கொஞ்சம் கதைகள் எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த வார விடுமுறையில் இரண்டு கதைகள் எழுதினேன். தினமணிக் கதிரில் நீண்ட நாட்களுக்குப் பிறகு என் கதை வந்ததில் மிக்க மகிழ்ச்சி. அதை என்னைவிட மிகச் சந்தோஷமாக கொண்டாடிய ஜம்புலிங்கம் ஐயா, ஸ்ரீராம் அண்ணா, துளசிதரன் அண்ணா, கீதா அக்கா, நிஷாந்தி அக்கா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் அன்பின் ஐயா கரந்தை ஜெயக்குமாருக்கும் அன்புத் தம்பி கலியுகம் தினேஷ்குமாருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

-'பரிவை' சே.குமார்.

10 எண்ணங்கள்:

KILLERGEE Devakottai சொன்னது…

நேபாளிக்கு சம்பளமே 1800 தானே இருக்கும் இதுல அவனுக்கு பைன் 4000 மா ? இவன் என்றைக்கு கரை ஏறுவது ? சிக்னலில் போனை நோண்டுனான்ல... வேணும் எல்லாம் வாட்ஸ்-அப் படுத்தும் பாடு
த.ம.2

Unknown சொன்னது…

வெளிநாட்டில் வேலையில் படும் துன்பம் அறிந்தேன்!விளக்கமான பதிவு!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

பிழைப்புக்காக வெளிநாட்டிற்குச் செல்வோர் படும் சிரமங்களைப் பார்க்கும்போது மனம் சற்றே கனக்கிறது. எழுத்துகளின் மூலமாக ஓரளவு சுமையை இதுபோல குறைத்துகொள்வது மிகவும் நல்லது. தினமணிக்கு தொடர்ந்து எழுதலாமே?

ஸ்ரீராம். சொன்னது…

அப்புறம் சொல்றேன், அப்புறம் சொல்றேன் என்று மூன்று கதைகள் நிறுத்தி வச்சிருக்கீங்க! ஒவ்வொருத்தரும் சுயநலமா அவங்கவங்க வேலையை மட்டும் பார்த்துக்கறாங்க போல.

யுவராணி தமிழரசன் சொன்னது…

பகிர்தல் அருமை... பணியில் இருக்கும் communication gap, status problem, ego, border பிரச்சனைகள் இவற்றை கடந்து வர emotional intelligence தேவைப்படுகிறது. இப்பொழுதெல்லாம் இது அவசியமாயிற்று வேலையை சிறப்பாய் செய்ய கற்பதை விட. எனது மேற்படியும் வேறு நாட்டைச்சேர்ந்தவர் தான்(பக்கத்து மாநிலம்)

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

பிறந்த நாள் வாழ்த்திற்கு
நன்றி நண்பரே
தம=1

Anuprem சொன்னது…

பல பல பிரச்சனைகள்...


பல பல சூழ்நிலைகள்...


போராடுவோம் முடியும் வரை...

உங்க கதை வெளிவந்தர்க்கும் வாழ்த்துக்கள்...தொடர்ந்து எழுதுங்கள்...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

வாழ்க்கை என்ன கஷ்டம் இல்லையா..வஅதுவும் வெளிநாட்டில் வேலை எனும் போது...எல்லோரையும் சமாளித்து வேலை செய்வது என்பது...வேதனையாகத்தான் இருக்கிறது..விரைவில் உங்கள் கதைகளை உங்கு எதிர்பார்க்கலாமா? குமார்? பணிச்சுமை இந்தச் சுமைகள் எல்லாம் கொஞ்சம் விலகுமே..தொடர்ந்து இதழ்களுக்கு எழுதுங்கள் குமார்!

”தளிர் சுரேஷ்” சொன்னது…

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே! வெளிநாட்டு பணியின் சுமைகளை இப்படி பகிர்ந்து கொள்வதில் மனபாரம் குறையும்!

G.M Balasubramaniam சொன்னது…

எனக்கு எப்பவுமே இந்த வளைகுடா நாட்டுப் பணிகள் மேல் நல்லெண்ண்ம் இருந்ததில்லை உண்மை நிலையை கில்லர்ஜியிடம் எழுதக் கேட்டு இருக்கிறேன்