மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 28 அக்டோபர், 2017மனசு பேசுகிறது : எழுத்தால் கிழித்தது...

ழுத்து...

இந்த எழுத்து எதைக் கொடுத்து விடப்போகிறது..?

இது உனக்கான வருமானத்தைக் கொடுத்துவிடுமா..?

இது உனக்குச் சோறு போடுமா..?

இதன் பின்னே போனவர்களில் ஜெயித்தவர்களை விட காணாமல் போனவர்களே அதிகம் என்பது தெரியுமா..?

உன்னை நம்பி ஒரு குடும்பம் இருக்கு என்பதை யோசித்துப் பார்த்தாயா...?

என இது மாதிரியான எத்தனை எத்தனையோ கேள்விகளை எழுத்தின் பின்னே பயணித்த பலரும் சில வருடங்களுக்கு முன்பு வரை கண்டிப்பாக கேட்டிருக்கக் கூடும். இப்போது இந்த வார்த்தைகளை அதிகம் கேட்க வாய்ப்பில்லை என்றாலும் இன்னும் இந்த வார்த்தைகளின் காரம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அன்று எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வருமா... வருமா... எனக்காத்திருந்து வரமாலேயே போக, முயற்சிகளை மட்டும் தொடர்ந்து கொண்டே இருந்து சில மாதங்களிலேயே வெறுப்பின் உச்சத்தில் எழுத்தின் நாதத்துக்கு சுருக்கிட்டுத் தொலைத்தவர்கள் எத்தனையோ பேர்... பல நல்ல எழுத்தாளர்களை இரண்டாயிரத்துக்கு முன்னான காலம் தொலைத்திருக்கிறது என்பதை நான் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை.

இன்றைக்கு எழுத ஆரம்பிக்கும் எல்லாருடைய எழுத்துக்களையும் வாசிக்கும் வாய்ப்பை இணையம் கொடுத்திருக்கிறது. நாம் எழுத, நமக்கான ஒரு களத்தை ஏற்படுத்துவதுடன் நம் எழுத்தைப் பகிர பல இணைய மின்னிதழ்களும் திரட்டிகளும் வந்துவிட்டன. இதன் காரணமாகவே இணைய வெளியில் புதிது புதிதாய் எழுத்தாளர்கள் பூத்துக் கொண்டே இருக்கிறார்கள். எத்தனை விதமான எழுத்துக்கள்... வார்த்தை அலங்காரமில்லாத... வர்ண ஜாலம் காட்டாத... பட்டிக்காட்டுத்தனமாய்... பட்டவர்த்தனமாய்... வாழ்க்கைக் கதை பேசிகள் பலர் இன்று பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். வாசிக்கும் நம்மை அந்த வாழ்க்கைக்குள் மெல்ல மெல்ல இழுத்துச் சென்று வாழ வைக்கிறார்கள். என் எழுத்து பத்திரிக்கையில்தான் வரணும் என்றெல்லாம் நினைப்பதில்லை... சிந்தையில் உதிர்த்ததை சிறகு விரித்துப் பறக்க வைத்து இணையத்தில் விதைக்கிறார்கள்.

நானெல்லாம் பிறவி எழுத்தாளன் இல்லை என்பதையும் கல்லூரியில் படிக்கும் போது என் நண்பனின் கதைகளை வாசித்துத் திருத்திக் கொடுத்த எங்கள் பேராசான் 'நீங்களும் எழுதுங்கய்யா' என்று சொல்லி ஒரு கதை எழுத வைத்து... அது மிகக் கேவலமான கதை என்றாலும்... கல்லூரியில் படிக்கும் வயதில் என்ன கதை பெரிதாய் எழுதி விடப்போகிறோம்... எங்கு சுற்றினாலும் அது காதல் கதையில்தானே வந்து நிற்கும்... மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல என்ற கருவில் உதித்த கதை பாடலில் ஆரம்பித்து பாடலில் முடியும். அதையும் பொறுமையாக வாசித்து, நான் ஒரு பக்கம் என் நண்பன் ஒரு பக்கம் சைக்கிளை உருட்ட, நாடு நாயகமாய் தன் கேரியல் இல்லாத சைக்கிளை உருட்டியபடி, எங்கள் பேராசான் குடியிருந்த தேவி பவனத்தில் இருந்து கவிஞர் பாலு அண்ணா வீட்டிற்கு நடந்தே... திருப்பத்தூர் ரோடு, குதிரை வண்டிச் சந்து (இப்ப ஸ்டேட் பாங்க் ரோடு), கருதாவூரணி வழியாக கதைகள் பேசி நடந்தபோது 'கதை நல்லாயிருக்குய்யா... இன்னும் நல்லா எழுதணும்... சமூகப் பிரச்சினைகளைப் பார்த்து அதைக் கதையாக்கணும்.. (இது வரைக்கும் சமூகப் பிரச்சினைகளை கதையாக்கியிருக்கிறேனா தெரியலை...:)) வாழ்க்கையை கதையை மாற்றும் கலை தெரிஞ்சிக்கணும்.' (இது ஓரளவு வந்திருச்சின்னு நினைக்கிறேன்) என்றெல்லாம் சொல்லி என்னை எழுத்தாளனாக்கிய கதையையும் பல முறை சொல்லிவிட்டேன். ஐயா வீட்டில் நான் எப்பவும் செல்லப்பிள்ளை... இப்பவும் கூட என்பதில் பெருமை எனக்கு.

புதுசாக் கல்யாணம் பண்ணினவன் பொண்டாட்டிய சுத்திச் சுத்தி வர்ற மாதிரி எப்பவும் பேப்பரும் பேனாவுமா அப்பா கணக்கெழுதுற மேசையை தூக்கிப் போட்டு கதை எழுதுறேன் பேர்வழின்னு... ஏன்னா ஐயா நல்லாயிருக்குன்னு சொல்லிட்டாருல்ல... அதனால எழுதி... எழுதி... எழுதிக் கிழிக்க... (இதெல்லாம் கல்லூரி இரண்டாம் ஆண்டின் தொடக்கத்தில் என்பதை நினைவில் கொள்க.) அப்புறம் கவிதை எழுதுறேன் பேர்வழின்னு பல பயலுக காதலுக்கு கவிதை எழுதிக் கொடுத்த கதையெல்லாம் பல தடவை சொல்லியாச்சு... மறுபடியும் சொன்னா இவனுக்கு வேற வேலையில்லையான்னு திட்டிடப் போறீங்க... விவசாய நேரத்துல ராத்திரி மழை பெய்திருக்கும்.. காலையில 'வாகமடையை அடைச்சிட்டு வா...', 'அந்த வயல்ல யூரியாவைத் தூவிட்டு வா...', 'பனிப்பதத்துல பூசிமாவைத் தூவிவிட்டா கப்புன்னு புடிச்சிக்கும்...' என்றெல்லாம் அப்பா வேலை சொல்ல, நாமதான் கதாசிரியன் கனவுல இருக்கோமோ... பேனாவை கர்ணனோட கவச குண்டலம் மாதிரி கையை விட்டு இறக்காமல் அதெல்லாம் முடியாது எனச் சொல்ல , 'இதெல்லாம் எங்க உருப்படப் போகுது... எல்லாத்துக்கும் நாந்தான் போவனும் தொரைக (நானும் தம்பியும்)  ரெண்டு பேரையும் வீட்டுக்குள்ளயே இருக்கச் சொல்லு சமஞ்சபுள்ளயளாட்டம்... தம்பி கத எழுதுதாம்... கத... இது கதயெழுதி என்னத்தைக் கிழிக்கப் போவுது' என அப்பா கத்திவிட்டு மம்பட்டிய எடுத்துக்கிட்டு போக, அம்மா அடுத்த அர்ச்சனையை ஆரம்பிக்கும். அப்பா திட்டு கொஞ்சந்தான்... ஏந்திட்டு இம்புட்டுத்தான் உங்கம்மா திட்டு கப்பல்ல வருதுன்னு சொல்லாம சொன்ன மாதிரி செமையாத் திட்டு விழும். அதுக்கு மேல உக்கார முடியாத நிலையில வாய்க்குள்ளயே முணங்கிக்கிட்டே வயலுக்கு போன நாட்கள் மறக்க முடியாதவை. இப்ப எங்கம்மாக்கிட்ட கேட்டா அது எங்க வய வேல பாத்துச்சு... அது இப்ப மாதிரித்தான் அப்பவும் எழுதுறேன்னு கிறுக்கிக்கிட்டு கெடக்கும் என்றுதான் சொல்லும்.

'என்னத்தை கிழிக்கப் போறான்..?' - இது அப்பாவின் வார்த்தைகள்... இதுவரைக்கும் என்னத்தைக் கிழிச்சிட்டோம்... ஒண்ணுமே இல்லை... என் கதைகள் கல்லூரிக் காலத்தில்... அதன் பின்னான வருடங்களில்... சென்னை வாழ்க்கையில்... அபுதாபி வாழ்க்கையில் என அடிக்கடி பிரேக் போடப்பட்டு பின்னர் மீண்டும் உதித்து இதுவரை தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு சமயத்திலும்  வேறு வேறு பாதையில் பயணிக்க ஆரம்பித்து இப்போது கொஞ்சம் மன நிறைவாய் மலர ஆரம்பித்திருக்கின்றன என்று நினைக்கிறேன். இந்த எழுத்து வாழ்க்கையை நகர்த்தும் பணத்தைப் பெற்றுக் கொடுக்கவில்லை. முதல் கதைக்கு ஐம்பது ரூபாய் சன்மானமாய் பெற்று இன்று போட்டிகள் தவிர்த்து இதழ்களில் வெளியாகும் போது ஐநூறு வரை கிட்டியிருக்கிறது. இது பணத்துக்கான... பணத் தேவைக்கான எழுத்து அல்ல... மன நிறைவுக்கான... நிம்மதிக்கான எழுத்தே... அப்பா சொன்ன வாசகங்கள் போல் எதையும் கிழிக்கவில்லை என்றாலும் நிறைய நேசமுள்ள மனிதர்களின் மனங்களைக் களவாடியிருக்கிறேன் அல்லவா..? வாழ்க்கை நகர்த்துதலுக்கான பணத்தைக் கொடுக்கவில்லை என்றாலும் என் வாழ்வின் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ளவும் என்னை நேசத்தோடு கொண்டாடவும் கூடிய மனங்களை உலகெங்கும் உறவாகக் கொடுத்திருக்கிறது அல்லவா...? இதை விட வேறு என்னத்தை மகிழ்வோடு கிழிக்க முடியும் சொல்லுங்கள்.

இந்த வாரத்தின் இரு தினங்களும் எனக்கு மிகச் சிறந்த நாட்களாக அமைந்தன. நேற்றைய பொழுதில் ஒன்பது வருடங்களாக பாலைவனப் பூமியில் இருந்தாலும்... குடும்பம் வந்திருந்த போது பாலைவன மண்ணில் கொஞ்சமே கொஞ்சத் தூரம் குழந்தைகளுடனும் மனைவியுடனும் நடந்து சென்றதுடன் சரி... அந்த மண்ணில் அமர்ந்து ஓடி சந்தோஷப் படும்படியான நாட்கள் எனக்குக் கிட்டவில்லை... நேற்று அந்த சந்தோஷத்தை புகைப்படக் கவிஞன் அண்ணன் சுபான் பாய் அவர்களும் சுமையாவைச் சமைத்த எழுத்தாளர் அண்ணன் கனவுப்பிரியன் அவர்களும் ஏற்படுத்திக் கொடுத்தார்கள். மாலை நேரத்தில் பாலை மண்ணில் ஒரு அஞ்சாறு பேர் போட்டோக்களைச் சுட்டுத் தள்ளினோம்... கதாநாயகன் கனவுப்பிரியன் என்பதையும் சொல்லிவிடுகிறேன்... சூரியனைப் பந்தாடினோம்... கொண்டாடினோம்... காற்று மணலுடன் காதல் கொண்டு எங்களை ஊடல் கொள்ள வைத்தது... அள்ளி இறைத்தாலும் அன்பாய்த்தான் உடலில் அமர்ந்து கொண்டது. மணலில் நாயகனாய் நடை பழகினோம்... இன்று அந்த வீடியோ பின்னணிப் பாடலுடன் பகிரப்பட, 'இவருக்கு சூர்யான்னு நெனப்பு... சும்மா இருக்கமாட்டாரு போல...' என்று விஷாலின் கருத்து வந்ததாய் ஊரிலிருந்து மனைவி ரொம்ப மகிழ்ச்சியாய்ச் சொன்னது சொல்லக்கூடாத கதை என்றாலும் சொல்லத் தோன்றும் கதையாகிவிட்டது.

நேற்றைய பொழுது மணலில் கழிய இன்றைய பொழுது மகிழ்வில் கழிந்தது. போன பதிவைப் பகிர்ந்த பின்னர் 'குமார் உங்க போன் நம்பரை என் மெயிலுக்கு அனுப்புங்க' என்ற அழைப்பு... அதன் பின் அனுப்ப, உடனே தொடர்பு கொண்டு பேசி, 'வார இறுதியில் நாம் சந்திக்கிறோம்' என்றார் அவர்  அன்பாய்... நேற்று இரவு மீண்டும் அழைப்பு... 'நாளை மதியம் எங்க வீட்டிற்கு வாரீங்க... சாப்பிட்டு எங்களுடன் பேசிக் கொண்டிருந்து விட்டுச் செல்லலாம்' என்றார். திடீர் அழைப்பு... சாப்பாடு செய்கிறோம் என்று வேறு சொல்கிறார்... அவரைச் சந்தித்ததும் இல்லை... அதிகம் பேசியதும் இல்லை என்ற எண்ணம்... சரி சாப்பாடு என்பதை அப்புறம் பார்த்துக்கலாம்... அந்த அன்பிற்காக அவரை நேரில் சந்தித்து பேசிவிட்டு வரலாம் என காலையில் போன் செய்து 'நாம சந்திக்கலாம் சார்... சாப்பாடெல்லாம் வேணாம்' என்ற போது 'சமையல் முடிஞ்சாச்சு... வாங்க பேசிக்கிட்டு இருந்திட்டு... சாப்பிட்டுப் போகலாம்... யோசிக்காதீங்க... உங்க வீடு மாதிரி நினைச்சிக்கங்க' என்றார் போனில் சிரித்தபடி... இவனுக்கிட்ட பேசணுமின்னா காசு கொடுக்கணும் என்ற பேரு ஊருக்குள்ள இருந்ததெல்லாம் ஒரு காலம். புதியவர்கள் என்றால் பேச்சுக்கூட அளந்துதான் வரும். இப்பக் கொஞ்சம் பரவாயில்லை என்றாலும்... பலர் கூடினால் குறைவாய் பேசியது நாமாகத்தான் இருக்கும். என்னையும் கவியரங்கில் கவிபாட வைத்த பெருமை எங்க பேராசானுக்கு உண்டு. அதுவும் தேவகோட்டை பூங்கா எதிரே... அப்ப நமக்கு பில்டிங் ஸ்ட்ராங்க்... பேஸ்மெண்ட் வீக் கதைதான்.. துரை.செல்வராஜூ ஐயா இங்கு வந்த போது அவரும் கில்லர்ஜி அண்ணாவும் நான் ஸ்டாப்பாய் பேச, நான் மட்டும் மௌனியாய் இருந்ததை ஐயா ஒரு பதிவில் கூட சொல்லியிருந்தார். எப்பவுமே அதிகம் பேசுவதில்லை... அது அப்பவே ஒட்டிக்கிட்டது.... இன்னும் தொடருது.... இனிமேல மாறப் போகுது... ஆனா இன்னைக்கு கொஞ்சம் பரவாயில்லை.. :)

கிளம்பி அவர் சொன்ன கட்டிடம் சென்று போன் செய்து அவர் இருக்கும் தளத்துக்குச் சென்றால் புன்சிரிப்போடு வரவேற்றார். புதிதாய்ப் பார்ப்பவனைப் போலில்லாமல் அவர்கள் வீட்டில் ஒருவனாய் அவரும் அவர் துணைவியாரும் மிகுந்த அன்போடு பேசினார்கள். அவரின் குட்டிப் பையன் அவ்வப்போது ஒரு சிரிப்பை உதிர்த்து விஷாலை நினைவில் நிறுத்திக் கொண்டே இருந்தான். பெண் எங்க ஸ்ருதி போல்தான் என்று நினைக்கிறேன்... புதியவர்கள் வந்தால் எட்டிப் பார்ப்பதில்லை போலும். சனிக்கிழமை பெரும்பாலும் சைவம்தான் என்பதாலும் சைவத்தின் மீதே விருப்பம் அதிகம் என்பதாலும் சிக்கன், மட்டன்னு வச்சி தாளிச்சிடாம சைவமாச் சமைச்சிருந்தால் மகிழ்வாய் இருக்குமென நினைத்துச் சென்றால்...  மிகச் சிறப்பான சைவச் சமையல்... நம்ம வீட்டில் சாப்பிட்டதொரு நிறைவு... நிறையப் பேசினார்... எல்லாம் நிறைவாய்... அவரின் பணிகளுக்கு இடையே வலைப்பூவில் எழுதும் எழுத்தாளர்கள் எல்லாரையும் வாசிக்கிறார் என்பது எத்தனை சந்தோஷம்... ஜோதிஜி அண்ணா, தேனக்கா, முத்துநிலவன் ஐயா, மணிகண்டன், மதுரை செந்தில்குமார் சார், கில்லர்ஜி அண்ணா, கனவுப்பிரியன் என எல்லாருடைய எழுத்தையும் பற்றிப் பேசினார். எல்லாரைப் பற்றியும் அவர் சந்தோஷமாய்ப் பேச எனக்குள் எத்தனை மகிழ்ச்சி தெரியுமா... இலக்கணம், இலக்கியம் எல்லாம் நமக்கு ரொம்பத் தூரம்... அவர் முழுக்க முழுக்க வலை எழுத்தை லயித்துப் பேசினார்... கொஞ்சமே கொஞ்சம் அரசியலும் பேசினோம். அவர் வீட்டிற்குச் சென்று சாப்பிட்டுப் பேசி வந்த இன்று மதியம் மறக்க முடியாது. அவரைச் சார் என்றுதான் சொன்னேன்... ஆனாலும் மனசுக்குள் அவர் அண்ணனாய் உயர்ந்து நின்றார் திரு. பூபதி. தொட்டுத் தொடரும் பட்டுப் பாரம்பரியம் போல் இந்த வாழ்க்கையில் கிடைத்த இன்னொரு உறவு இவர்கள்.

இந்த எழுத்தால் என்னத்தைக் கிழிச்சோம் என்றால் இப்படி எத்தனை எத்தனையோ அன்பான மனிதர்களைப் பெற்றது போதாதா... வேறு என்ன வேண்டும்... உன் தொடர்கதை நாவலாக வேண்டும்... நான் அதைச் செய்கிறேன் குமார் என பேசும்போதெல்லாம் வார்த்தைக்கு வார்த்தை சொல்லும் நிஷா அக்கா, எல்லாரும் புக் போட்டுட்டாங்க... மண்ணின் மனத்தோட இருக்கிற உன் கதைகள் எப்ப புத்தகமாகுறது அடுத்த வேலை நமக்கு அதுதான் என பார்க்கும் போதெல்லாம் சொல்லும் தேவா அண்ணன்... உங்க கதைகளுக்கு நான் அடிமை அண்ணா என்று முகநூலில் தட்டிவிட்ட மேனகா சத்யா, குமார் நான் இதை எழுதியிருக்கிறேன்... உங்ககிட்ட சொல்லணும்ன்னு நினைச்சேன் எனச் சொல்லும் ஆர்.வி.சரவணன் அண்ணன்... என்ன உதவி என்றாலும் உடனே செய்து கொடுக்கும் தனபாலன் அண்ணன்... உங்க எழுத்தை வாசிக்க எனக்கு ஒரு லிங்க் மட்டும் கொடுங்க குமார் எனச் சொல்லும் கவிஞர் மீரா செல்வக்குமார்.. போனில் கூப்பிடுங்களேன் என்று உரிமையோடு சொல்லும் கில்லர்ஜி அண்ணா, மிக அருமையா எழுதுறீங்க என்று சொல்லும் ஜம்புலிங்கம் ஐயா, பாலசுப்ரமணியம் ஐயா, என் எழுத்தில் சந்தோஷிக்கும் ஸ்ரீராம் அண்ணா, துளசிதரன் அண்ணா, கீதா அக்கா, குடும்பத்தில் ஒருவரான காயத்ரி அக்கா, என் நண்பன் தமிழ்க்காதலன், தம்பி தினேஷ் இப்படி எத்தனை உறவுகளைப் பெற்றிருக்கிறேன்.இங்கு சொன்னவர்களை விட சொல்லாதவர்கள் அதிகம். இப்படி எத்தனை எத்தனையோ நல்ல உள்ளங்களைப் பெற்றிருக்கிறேன்... எல்லாரையும் சொல்லிக்கிட்டே போகலாம்... எல்லாரையும் பற்றி எழுத ஆசைதான் ஆனா நாலஞ்சி பதிவு எழுத வேண்டியிருக்கும் என்பதால் எல்லாரும் மனசில் இருக்கீங்கன்னு சொல்லிகிறேன்.  

இந்த எழுத்து ஓட்டுக்காகவும் முன்னணி ரேசுக்காகவும் எழுதுவதில்லை.. என் ஆத்மா திருப்திக்கான எழுத்து... இப்போது என் எழுத்து மீண்டும் பத்திரிக்கைகள், இணைய இதழ்கள் என கிளைவிட ஆரம்பித்திருக்கிறது. அதைவிட நிறைய உறவுகளைப் பெற்றுத் தந்திருக்கிறது... எத்தனை மனங்களைப் பிடித்திருக்கிறோம். இதைவிட நிறைவாய் இந்த எழுத்தால் என்னத்தைக் கிழித்து விடப் போகிறோம்..?
-'பரிவை' சே.குமார்.

43 கருத்துகள்:

 1. சாதி மத சார்பின்றி நிறைய நண்பர்களை பெற்றதற்கு பாராட்டுக்கள் நண்பரே..அதுதான் வேண்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அண்ணா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 2. அருமையான பதிவு.
  ஆத்மா திருப்திதான் முக்கியம் குமார்.
  நிறைய எழுதுங்கள்.
  பத்திரிக்கைகள், இணைய இதழ்களில் கதைகள் தொடர்ந்து வரட்டும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அம்மா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 3. இந்த எழுத்தால் நேரத்தை நன்கு பயன்படுத்திக்கொள்கிறோம். நம்மை மேம்படுத்திக் கொள்கிறோம். தன்னம்பிக்கை பெறுகிறோம். அதற்கெல்லாம் அப்பால் நம் மனச்சுமையை குறைக்கும் வாய்ப்பினை அதிகம் பெறுகிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஐயா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 4. எண்ண ஓட்டங்களோடு பயணித்தேன். உண்மைதான். ஆத்மதிருப்திக்கு அடுத்தே எதுவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அக்கா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 5. நல்ல எழுத்து நடை குமார்... உங்களுடைய எழுத்தில் நான் வாசித்ததிலேயே இதுதான் சிறந்தது என்று கூறுவேன்... அத்தனை அழகு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நண்பரே...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 6. ஆத்ம திருப்திக்கான எழுத்து..

  அதுதான் மிக மிக முக்கியம்!.. வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஐயா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 7. எழுத்து, உனக்கு வருவாய் தருமா?
  எழுத்து, உனக்கு சோறு போடுமா?
  எழுத்து, உனக்கு நல்ல பெயரையாவது பெற்றுத்தருமா?
  என் வீட்டிலும்
  இதே கேள்விக்கணைகள் காதைக் குடையும்?
  ஆனாலும்,
  நானும் எழுதுகின்றேன்...
  தங்கள் எண்ணங்களைப் படித்ததும்
  இன்னும் அதிகமாக எழுதப் போகின்றேன்.

  வாசகர்கள் உள்ளம் மகிழ - எங்கள்
  எழுத்தை விரும்பிப் படிக்கின்றனர் - அவர்கள்
  எதிர்பார்ப்புக்கு நல்விருந்து வழங்கிய எவரும்
  எழுத்தால் வென்று வாழ்ந்து இருக்கிறார்களே!

  எனவே, தொடர்ந்து எழுதுங்கள் - என்றும்

  உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்
  துணைநிற்பர்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கவிஞரே...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 8. என்னைப் பொருத்தவரை நான் எழுதுவது எனது மன ஆறுதலுக்காக மட்டுமே...

  உங்களது நண்பருக்கு எனது நன்றிகளும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அண்ணா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 9. எழுத்து மன நிறைவினைத் தருகிறது
  எழுதுங்கள் நண்பரே
  தொடர்ந்து எழுதுங்கள்
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஐயா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 10. வாழ்த்துகள் குமார். இங்கே கிடைத்தது நட்பு. அது மட்டுமே நிறைவு.

  தொடர்ந்து பதிவுகள் எழுதிட வாழ்த்துகள். நட்பில் திளைத்திருப்போம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அண்ணா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 11. உங்கள் எழுத்தில் நான் வாசித்ததில் மிக சிறப்பான ஆக்கம் இது. தொழில் ரீதியாக அலுவலக ரீதியாக உறவினர் ரீதியாக என்ற பழக்க வழக்கதில் உள்ளவர்களை விட வலையுலகம் மூலம் அறிமுகமானவர்களின் வார்த்தைகளும் உதவிகளும் நான் பெற்றது ஏராளம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அண்ணா...
   வசிஷ்டரின் வாழ்த்தாய் எனக்கு இது...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 12. பதில்கள்
  1. வணக்கம் சகோதரா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 13. பதிவு நன்று!தெளிவான நடை சிறப்பு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஐயா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 14. ஆத்மார்த்தம்தான் எழுதை நேசிக்கவும் எழுதவும் வைக்கிறது.தவிர எழுத்தை நம்பியெல்லாம் வாழ்க்கையை ஓட்டி விட முடியாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அண்ணா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 15. உண்மை மிக அழகா எடுத்து சொல்லியிருக்கீங்க அன்று இருந்த கஷ்டம் இன்று கிடையாது எல்லாம் பகிர இணைதளம் உதவி இருக்கிறது நல்ல நண்பர்களை கொடுக்கவும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோதரி...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 16. இங்க எழுதி நாம சம்பாதிச்சது அன்பான உள்ளங்களைதான். முன்னலாம் இண்ட்லி, தமிழ்10, வலைச்சரம், தமிழ்மணம்ன்னு திரட்டி இருந்து ஒருத்தருக்கொருத்தர் அறிமுகப்படுத்திச்சு.
  தமிழ்மணம் ஹிட்ஸை வச்சு ஒரு சுக்கும் பண்ண முடியாதுன்னு எல்லாத்துக்கும் தெரியும். ஆனா, பாருங்க, இப்ப இந்த திரட்டி மட்டும்தான் இருக்கு. இதுக்கும் வேட்டுன்னும்போது மனசு தாங்கல சகோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அக்கா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 17. வலை மூலம் கிடைத்த நட்பிற்கு ஈடு இணை ஏது...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அண்ணா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 18. ஆம், இதைவிட எதைப் பெற்றுவிடப் போகிறோம்? அன்பைவிட எது பெரிது? புரியாதவர்க்குப் புரியாமலே போகட்டும்.வாழ்த்துகள் குமார். உங்கள் தமிமையைச் சற்றுக் குறைத்த அந்த அண்ணனுக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அண்ணா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 19. வெகுஜன முன்னணி இதழ்களில் எழுத தொடங்கிய காலத்தில் நிறைய சன்மானம் வந்தது ,கொண்டு வந்து தரும் தபால்காரர்கூட என்னிடம் தன் அன்பைத் தெரிவித்தார் ,தற்போது வலைஉலகின் மூலமாக பல நண்பர்களின் நட்பு தொடர்வது மகிழ்ச்சி தருகிறது ஜி :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஜி...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 20. பாராட்டு....

  ஒவ்வொரு மனத்திற்கு உள்ளேயும் ஒரு குழந்தை மனசு இருக்கும் அது எப்போதும் பாராட்டிற்கு ஏங்கி நிற்கும்...ஆனால் வெளி பார்வையிலோ ..அல்லது ஆழ்ந்து யோசிக்கும் போதெல்லாம் அது தெரியாது....

  ஆனால் இந்த வலையுலகில் ஒருவருக்கு ஒருவர் பாராட்டும் போதும்...வாழ்த்தும் போதும் ....மனதிற்கு ஒரு புத்துணர்வு கிடைக்கிறது....அது அந்த குழந்தை மனதால் தான்...

  எழுதுவது என்பது நமது மகிழ்சிக்காகவே...அதை தொடர்ந்து செய்யுங்கள்...

  அட்லீஸ்ட் நம் மகிழ்ச்சி எது என்ற புரிதலாவது நமக்கு கிடைத்ததே என்ற நிம்மதியோடு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோதரி...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 21. வலையுலகால் கிடைத்த அன்பையும் நட்பையும் சொல்லிட வார்த்தைகள் இல்லை. மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் குமார். நம் ஆத்ம திருப்திக்காக எழுதுகிறோம். மற்றதைப் புறம் தள்ளூங்கள். உங்களை மகிழ்வித்த மகிழ்வான தருணங்களைத் தந்த நண்பர்களுக்கு வாழ்த்துகள். நல்ல நண்பர்களைப் பெற்றிருக்கின்றீர்கள். அதுவும் சிறப்புதானே!!!

  கீதா: அக்கருத்துடன், நீங்கள் முதலில் சொல்லியிருக்கின்றீர்களே அதே கேள்விகளை இப்போதும் ஏன் நேற்று கூடக் கேட்க நேர்ந்தது. ப்ளாக் அதால் என்ன நன்மை? என்ன எழுதற? ...இப்படி எழுதினா மேகசின்ல பப்ளிஷ் ஆகுமா? ஆகியிருக்கா? உனக்கு வருமானம் கிடைக்குமா இல்லைனா வேஸ்ட் தானே நீ நெட் க்கு செலவழிக்கறதாவது கிடைக்குமா..இல்லைனா வேஸ்ட் தானே பண விரயம்... என்று அடுக்கடுக்காக.....நான் பதில் சொல்லவே இல்லை. அமைதியாகச் சிரித்துவிட்டு வந்துவிட்டேன். பதில் சொல்வதில் அர்த்தம் இல்லை என்று. எழுதுவது நமது மகிழ்விற்காக. எனவே நீங்கள் எழுதிக் கொண்டே இருங்கள் குமார். வாழ்த்துகள்.

  ஹான் பிரதிலிபியில் கதை வாசிச்சு ஸ்டார் போட முடிஞ்சுச்சு. ஆனா கருத்து போட முடியலை. வெளியில சைன் அவுட் பண்ணி வரவும் முடியலை. அப்புறம் அப்படியே வெளியில் வந்துட்ட்டோம். கதை நல்லாருக்கு குமார் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அண்ணா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   வணக்கம் அக்கா...
   நிறையக் கேள்விகள் அக்கா...
   நம்ம சந்தோஷத்துக்கே எழுத்து... அவ்வளவுதான்.

   வாசிங்க... வாசிச்சி கருத்தைச் சொல்லுங்க.

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 22. வணக்கம்.

  செல்லப்பன் ஐயா எழுதிய மிகச் சிறந்த கருத்தை ஒகே பண்ணிய பின் எங்கே போனதெனத் தெரியவில்லை.

  ஐயா சொல்லியிருந்ததன் சாராம்சம்...

  ஒவ்வொருவருக்கும் ஒரு நடையிருக்கும் அப்பத்தான் இன்னார் எனத் தெரிந்து வாசிக்க முடியும். என்னிடமும் அப்படி ஒரு நடை இருப்பதாய்ச் சொல்லியிருந்தார்.

  கட்டுரைகளுக்கு வாழ்வு குறுகிய காலமே... கதைகளுக்கு என்றும் அழிவில்லை.... கதைகளில் கவனம் செலுத்துங்கள் என்று சொல்லியிருந்தார்.

  அப்புறம் கோவிச்சுக்கலைன்னா ஒண்ணு சொல்லவான்னு கேட்டுட்டு சொல்லியிருந்தார். ஐயா கோவிக்க என்ன இருக்கு... தங்களைப் போன்றோரின் கருத்துக்கள்தான் என் எழுத்தை வளமாக்கும்.

  ஐயா சொன்னது பெரிய பத்திகளாக எழுதாதீர்கள்... வாசிக்க அயற்சியாக இருக்கிறது என்பதே.

  உண்மைதான்... நானும் ஒவ்வொரு பதிவின் போதும் மாற்ற நினைக்கும் ஒன்று இது... இருந்தாலும் அப்படியே தொடர்கிறது.
  கதைகள் பெரும்பாலும் ரெண்டு பேரோ மூணு பேரோ பேசுவதாய் எழுதுவதில்லை... ஒருவரின் பார்வையாய்த்தான் நகரும் பெரும்பாலும் 'நான்'தான் முக்கிய கதாபாத்திரமாக அமைவதால் பத்திகளாக எழுதுகிறேன்... பத்தியைச் சுருக்கி. பதிவைச் சுருக்கி எழுத வேண்டும் என்ற எண்ணம் இன்னும் முயற்சி ஆகவில்லை என்பதே உண்மை. இனி முயல்கிறேன் ஐயா....

  தங்களின் அன்பான கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...