கோட்டைப்புரத்து வீடு...
நம் தமிழகத்தில் வீடுகளுக்கு... குறிப்பாக கிராமங்களில் வீடுகளுக்குப் பெயர் உண்டு என்றாலும் அதை நாம் எங்கும் பயன்படுத்துவதில்லை. ஆனால் கேரளாவில் நமக்கு நேர்மாறாக வீட்டின் பெயரை பாஸ்போர்ட் முதல் கொண்டு எல்லா இடத்திலும் தங்கள் பெயருக்குப் பின்னே பயன்படுத்துகிறார்கள். என்னுடன் வேலை பார்க்கும் மலையாளிகளில் ரபீக் வைத்தேக்காரன், முகம்மது குட்டி புதுப்பரம்பில் என்ற பெயர்கள் உண்டு. இது எதுக்கு இந்தப் பெயர் ஆராய்ச்சி என்று தோன்றுகிறதல்லவா... இந்திரா சௌந்தரராஜன் அவர்களின் நாவல் 'கோட்டைப்புரத்து வீடு'. எத்தனையோ மனிதர்களை வைத்துப் பின்னப்பட்ட கதையின் பிரதான பாத்திரம் இந்த வீடு. அதாவது கோட்டைப்புரத்து அரண்மனை... அங்கு நடக்கும் நிகழ்வுகளே கதையின் மையப்புள்ளி... நாவலைப் படிக்க ஆரம்பித்தால் தொடர்ந்து வாசிக்கச் சொல்லும் விறுவிறுப்பு... அடுத்தது என்ன என்ற பரபரப்பு... போன்றவை வாசிப்பின் வேகத்தை அதிகரிக்கின்றன.
'இந்தக் கோட்டைப்புரத்து வீடு அன்றைய சரித்திரமும் இன்றைய சமூகமும் கைகோர்த்து நடந்த ஒரு கற்பனை, அதனூடே மர்மத்தைப் புதைத்து, கடைசி அத்தியாயத்தின் கடைசி வரி வரை அந்த மர்மம் கலையாமல் நான் செயல்பட மிகுந்த சிரத்தை எடுத்தேன்' எனவும் 'பெண்ணைப் போதைப் பொருளாகவே கருதும் காலம் இன்னும் மலையேறவில்லை. சுருட்டு விளம்பரத்தில் கூட சம்பந்தமேயில்லாத அவர்களின் திறந்த மார்பு கவர்ச்சிப் படங்களாய், நம் தேசம் இன்னும் அம்மட்டில் தலைநிமிரவும் இல்லை. ஆகையால் என் படைப்புக்களில் அவர்களைப் பிரதான பாத்திரங்களாக்கி, ஆணுக்குச் சமமாக - சந்தர்ப்பம் கிடைத்தால் அதற்கும் மேலாகவே கொண்டு சென்று விடுவதுண்டு' எனவும் 'பலர் இது நிஜ சம்பவமா? என்று கேட்டனர். அந்த அளவு இது மற்றவர்களை நினைக்க வைத்தபோது என் நெஞ்சு தானாக நிமிர்ந்தது. பரவாயில்லை - ஒரு கற்பனையைக் கூட நமக்கு நிஜம் போல் சொல்லத் தெரிகிறது என்று செருமாந்தேன்' எனவும் ஆசிரியர் தனது முன்னுரையில் சொல்லியிருக்கிறார். இதில் அவர் சொல்லியிருப்பவை எவ்வளவு தூரத்துக்கு உண்மை என்பதை நாவலை வாசித்து முடிக்கும் போது உணரலாம்.
மதுரைக்குத் தெற்கே 40 மைல் தொலைவில் இருக்கும் கோட்டைப்புரத்து ஜமீனுக்கு ஒரு சாபக்கேடு. அதன் ஆண் வாரிசு தனது முப்பதாவது பிறந்தநாளில் இறக்கும் என்பதுதான் அந்தச் சாபம்... அப்ப பெண் வாரிசு அப்படின்னு கேட்டீங்கன்னா இந்த சாபத்திலிருந்து விமோசனம் பெற காலம் காலமாக பாதுகாத்து வரும் மூங்கில்பெட்டியை பெண் வாரிசுதான் திறக்க வேண்டும். ஆனால் பெண் குழந்தைகள் பிறப்பதில்லை அப்படியே பிறந்தாலும் குறிப்பிட்ட வயது வரை உயிரோடு இருப்பதில்லை. முப்பது வயதில் உயிரைவிடக் கூடிய சாபம் வரக் காரணம் பெண் சபலம்... சாபம் கொடுத்தவள் வஞ்சியம்மா என்ற நூறுகுடிக் கூட்டத்துப் பெண். உண்மையில் இது சாபம்தானா..? இல்லை சதிவேலையா என்பதை விறுவிறுப்பாக அடுத்து என்ன... அடுத்து என்ன... என்ற ஆவலோடு படிக்க வைக்கும் கதைதான் கோட்டைப்புரத்து வீடு.
இராணி ரத்னாவதியின் கணவன் வேங்கைராஜன் முதல் கொண்டு அடுத்து வந்த வாரிகள் அனைவருமே மனைவியிருக்க மற்ற பெண்களை தங்களது காம இச்சைக்கு பலியாக்குவதைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இரட்டையர்களான வேங்கைராஜன், சிம்மராஜன், வேங்கைராஜனின் வாரிசுகளான இந்திரராஜன், சந்திரராஜன் என இது வாழையடி வாழையாக காமமும் அதற்கான வேட்டையும் தொடர்கிறது.
இவர்கள் தங்களது காம இச்சையை, கோட்டைப்புரத்து சமஸ்தானத்துக்கு வேலை செய்வதற்கென்றே அதனருகிலேயே குடிசைகள் போட்டுத் தங்கியிருக்கும் நூறுகுடிக் கூட்டத்துப் பெண்களிடம்தான் தீர்த்துக் கொள்கிறார்கள். அதுவும் எப்படித் தெரியுமா? திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணைச் சீர் வரிசையுடன் ராஜாக்கள் பெரும்பார்வை பார்க்க எனக் கூட்டி வந்துவிட, இவர்கள் அந்தப் பெண்ணை வேட்டையாடி மகிழ்கிறார்கள். இதற்கு இவர்கள் சொல்லும் பெயர் 'இராஜப் பிரசாதம்'. மேலும் விருப்பப்பட்ட பெண்ணை எப்படியும் தங்களது கட்டிலுக்குக் கொண்டு வரத் தயங்கமாட்டார்கள். இவர்களுக்கு எடிபிடி வேலை செய்ய குழந்தைச்சாமி போன்ற சிலரும் இருக்கிறார்கள்.
நூறுகுடிக் கூட்டம் ஜமீனை விட்டு வெளியே போகக்கூடாது என்ற சட்டதிட்டம் இருக்க, நாட்டுப்பற்றுக் கொண்ட நண்டுவடாகன் வெள்ளையர்கள் எதிர்ப்புக் கூட்டங்களுக்குப் ஜமீனுக்குத் தெரியாமல் போய் வருவது தெரிய, மூன்று நாட்களுக்கு அன்னந்தண்ணி கொடுக்கக்கூடாது என்று சொல்லி வேங்கைப்பொன்னி கோவில் வாசலில் கட்டிப் போடப்படுகிறான். அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளால் சில நாட்களில் சிம்மராஜனால் நாக்கறுக்கப்படுகிறான். இதை அறிந்த அவனின் மனைவி வஞ்சியம்மா கோபத்தில் கோவில் வாசலில் தனது தாலிச் சரடை வெட்டிப் போட்டுவிட்டு போலீஸ் பிடித்துச் சென்ற கணவனைப் பார்க்க , கைக்குழந்தையோடு ஓடி வருகிறாள்.
அவளை மறித்து பிரச்சினை செய்யும் வேங்கைராஜனிடமிருந்து தப்பி மீண்டும் கோவிலுக்கே ஓடுபவளைத் துரத்தி வந்து கோவிலில் வைத்துக் கெடுத்து விடுகிறான். வேங்கையிடம் அகப்பட்ட மானைக் காப்பாற்ற நினைத்த ஊருக்குள் அவளது குழந்தையுடன் ஓடும் பூசாரி, மக்களுடன் திரும்பி வரும்போது கோவில் மணி கட்டிய இரும்புச் சங்கிலில் வஞ்சியம்மா பிணமாகத் தொங்க, பூசாரியிடமும் மற்றவர்களிடமும் பிறந்தும் பெற்றவர்களை முழுங்கிருச்சு என்ற அவப்பெயரோடு வளர்கிறான் அவளின் மகன் விருச்சிகமணி. தங்களது முப்பதாவது பிறந்தநாளில் ஆங்கிலேயன் கொடுக்கும் விருந்துக்குச் செல்லும் வேங்கைராஜனையும் சிம்மராஜனையும் காட்டுப்பாதையில் புலி தாக்கிக் கொள்கிறது.
நூறுகுடிக் கூட்டத்தில் ஒரு அழகி... சதா சர்வகாலமும் காட்டு விலங்குகளுடன் வாழ்க்கை நடத்தும் யாருக்கும் பிடிக்காத தன் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவன் மீது அவளுக்குக் காதல்... இதை அறிந்த ரத்னாவதி, அரண்மனையில் இருந்து சீர் செய்து திருமணம் செய்து வைக்க நினைக்கிறாள். ஆனால் அந்த அழகியை புலியிடமிருந்து காப்பாற்றிய போது அவளின் அழகில் மயங்கிக்கிடந்த இந்திரராஜனும் சந்திரராஜனும் அவளை அனுபவிக்கத் துடித்து இராஜபிரசாதமாக அவள் வேண்டும் எனச் சொல்கிறார்கள், இதை அறிந்த அழகியோ ராணியிடம் நியாயம் கேட்கிறேன் என்று போய் இந்திரராஜனால் கற்பழிக்கப்படுகிறாள். இதனால் கோபமும் வருத்தமும் கொண்ட ரத்னாவதி இந்திரராஜனுக்கு இரண்டாம் தாரமாக அவளைக் கட்டி வைக்கிறாள். அந்த அழகிதான் விருச்சிக மணியின் காதலி பாண்டியம்மாள்.
நூறுகுடிக் கூட்டத்தில் பெண் வயதுக்கு வந்தால் முதலில் கோட்டைப்புரத்து வீட்டுக்குத் தகவல் சொல்லி அவர்கள் கொடுக்கும் நூறு படி அரிசியில் பால் அப்பம் செய்து எல்லாருக்கும் கொடுத்து பெரியவளான செய்தியை சொல்லி, தாய்மாமனோ அல்லது முறைப்பையனோ பச்சை ஓலை கட்ட நீராட்டுவார்கள். அப்படி வயதுக்கு வந்த ஒரு பெண், தனது தம்பி மற்றும் அம்மாவுடன் வேங்கைப்பொன்னி ஆலையம் செல்லும் முன்னர் ராணி ரத்னாவதியிடம் ஆசி வாங்க மேளதாளத்துடன் வர, அவளைப் பார்க்கும் சந்திரராஜனிடம் திவான் குழந்தைச்சாமி தூபம் போடுகிறான். சந்திரராஜன் தயங்க அவனை மெல்லக் கரைத்து சம்மதிக்க வைக்கிறான். தனது அம்மாவையும் தம்பியையும் கட்டி வைத்து அவர்கள் முன்னிலையில் சீரழிக்கப்படுகிறாள். தான் இனி உயிருடன் இருப்பதில் பலன் என்ன இருக்கு என்று நினைத்து அந்த அபலை கத்தியால் தன்னைக் குத்திக் கொண்டு உயிரை விடுகிறாள். அந்த அபலைப் பெண் பூவாத்தா.
இரண்டாம் தாரமாக வாக்கப்பட்ட பாண்டியம்மாள் கருவுற்றிருக்கும் போது மற்ற ராணிகளால் துன்புறுத்தப்பட்டவள் தொடர்ந்து வேதனையை அனுபவித்து வருகிறாள். தனது முப்பதாவது வயதில் மரக்கிளை முறிந்து விழுந்து இந்திரராஜன் இறக்க, சந்திரராஜனோ தனது முப்பதாவது வயதில் சாரட்டில் போகும்போது குதிரை தறிகெட்டு ஓடிய விபத்தில் இறக்கிறான். இதன் பின் எல்லாம் மாற, நூறுகுடிக் கூட்டத்தில் இருந்து ஜமீனுக்கு மருமகளாய் வந்த பாண்டியம்மாளுக்கு மதிப்புக்கூடி பெரியராணியாகிறாள்.
மேலே சொன்ன கதைகளில் பூவாத்தா கதை தவிர மற்றவை நூறுகுடிக் கூட்ட கிறுக்கன் விஷ்ணுசித்தன் என்பவனால் சொல்லப்படுகிறது. பூவாத்தா கதை இறுதிக் கட்டத்தில் சொல்லப்படுகிறது. இந்தக் கதைகளை யார் சொல்கிறார்கள்..? எதற்காகச் சொல்கிறார்கள்..? யாரிடம் சொல்கிறார்கள்..? என்பதைச் சொன்னால் சஸ்பென்ஸ் போயிரும்ல்ல... அதனால கதையை வாசிச்சித் தெரிஞ்சிக்கங்க.
கோட்டப்புரத்து இளைய வாரிசு விசு என்கிற விஸ்வநாத ரூபசேகர கோட்டைபுரத்தான், இஞ்சினியரிங் முடித்துவிட்டு ஊரில் ஏதாவது தொழில் செய்ய நினைப்பவன். விசுவின் அண்ணன் கஜேந்திர ரூபசேகர கோட்டைபுரத்தானும் தன் முன்னோரைப் போல சல்லாப சபலத்தில் கிடக்கிறான். விசு வெளியூரில் இருந்து திரும்பும் அன்று அதாவது தனது முப்பதாவது பிறந்தநாளில் வேங்கைப் பொன்னி கோவிலில் சாபத்துக்கு பலியாகாமல் இருக்க பூஜை செய்யும் போது பாம்பு கடித்து இறக்கிறான் கஜேந்திரன். அடுத்த சாவு விசுதான் என்பதை பத்திரிக்கைகள் பறைசாற்ற, அல்பாயுசுக்கு உன்னை கட்டிவைக்க மாட்டேன் என அப்பா சொல்ல, உயிரை இழந்ததுபோல் துடிக்கிறாள் விசுவின் காதலி அர்ச்சனா.
அதன்பின் அப்பாவுக்குத் தெரியாமல் கோட்டைப்புரத்துக்கு வரும் அர்ச்சனா அங்கு நிகழும் சில கொலைகளையும் அதன் பின்னணிகளையும் ஆராய்ந்து விசுவைக் காப்பாற்ற முனைகிறாள். அவளின் செய்கைகளுக்கு எதிர்ப்பு வருகிறது. அந்த எதிர்ப்பில் இருந்து விசுவைக் காப்பாற்றினாளா? உண்மையில் வஞ்சியம்மாவின் சாபம்தான் பலி வாங்குகிறதா...? இல்லை விருச்சிகமணி, பூவாத்தாவின் தம்பி, விஷ்ணுசித்தன் அல்லது கதை கேட்டவர் என இவர்களில் யாரேனும் கொலை செய்கிறார்களா..?
கதையில் கோட்டைப்புரத்து ஜமீனில் எல்லாரும் மதிக்கும் தேவர், இந்திரராஜனின் மற்றொரு மனைவி திவ்யமங்களம், திருமேனித்தேவர், கார்வார் சிவக்கொழுந்து, சிவக்கொழுந்து மகன் கார்வார் கருணாமூர்த்தி, பூசாரி பொன்னம்பலம், கஜேந்திரன் உயிரைக் காப்பாற்றப் போய் உயிரை விடும் பாண்டிக்குட்டி, பாண்டிக்குட்டி சாவுக்கு எதிர்த்துப் பேசி ஜெயிலுக்குப் போகும் இருசன், பாண்டிக்குட்டியின் அக்கா செல்லம்மாள், செல்லம்மாளின் கணவன் சோலை, கோடாங்கி வீரநாட்டார், தேவரின் பி.ஏ. தில்லைநாயகம், கஜேந்திரனின் மனைவி வளையாம்பிகை, அர்ச்சனா வீட்டு வேலைக்காரி வசந்தி, விசுவுக்கும் அர்ச்சனாவுக்கும் உதவியாய் இருக்கும் வடிவேலு, அர்ச்சனாவின் தோழியுடைய டாக்டர் அக்கா, மாடுமுட்டி இறக்கும் இலங்கைக்காரன், நூறுகுடி கூட்டத்து ஆட்கள், அர்ச்சனாவின் அப்பா, பத்திரிக்கைக்காரர்கள், போலீஸ்... இன்னும் இன்னுமாய் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள், எல்லாமே கதையோடு பிண்ணிப் பிணைந்து பயணிப்பதால் கதையை விரிவாச் சொன்னால் பல பக்கங்கள் எழுத வேண்டியிருக்கும்.
ரத்னாவதிக்கு மட்டும் தெரிந்த தங்க, வைரங்கள் பாதுகாப்பாக வைத்திருக்கும் உண்டிக்குழி என்னாச்சு..? அதன் சாவிகள் யாரிடம் இருந்தன..? தன் அக்காவின் குழந்தையை காப்பாற்றச் சொல்லி உயிரிழந்த பாண்டிக்குட்டிக்கு கொடுத்த வாக்கை அர்ச்சனா காப்பாற்றினாளா..? வளையாம்பிகை வயிற்றில் இருந்த குழந்தை ஆணா... பெண்ணா..? மூங்கில்பெட்டி திறக்கப்பட்டதா..? அதற்குள் இருந்தது என்ன...? போலீசாரால் பிடித்துச் செல்லப்பட்ட இருசன் திரும்பினானா...? விருச்சிகமணி என்ன ஆனான்...? குழந்தைச்சாமிக்கு தண்டனை கிடைத்ததா..? இப்படி ஏகப்பட்ட கேள்விகளுக்கான பதிலை மிகவும் விறுவிறுப்பாய் அமானுஷ்யமாய் 328 பக்கங்களில் சொல்லிச் செல்கிறது கோட்டைப்புரத்து வீடு.
அமானுஷ்ய விரும்பிகள் அவசியம் வாசிக்க வேண்டிய நாவல்.
-'பரிவை' சே.குமார்.
3 எண்ணங்கள்:
இது ஏதோ ஒரு இதழில் தொடராக வந்தது போன்ற நினைவு. முழுவதும் வாசித்ததில்லை. அமானுஷ்யம் பிடிக்கும். இந்திராசௌந்தரராஜன் அதற்கு பெயர் பெற்றவரும் கூட. அவரது சில கதைகள் வாசித்ததுண்டு. இதையும் வாசித்திடுகிறோம்...பகிர்விற்கு மிக்க நன்றி குமார்
கீதா
தொடராக வந்த போது முதலில் இக்கதையாக படித்து விட்டு தான் அப்புறம் மற்றவை படிப்பது. படிக்கும் போது கதைதான் என்றாலும், கோபம், வருத்தம் எல்லாம் ஏற்பட்ட கதை.
கதை விமர்சனம் அருமை.
மீண்டும் படிக்கும் ஆவலை ஏற்படுத்தி விட்டீர்கள் குமார்.
நான் படிப்பதற்காக வைத்துள்ள, எங்கள் இல்ல நூலகத்திலுள்ள நூல்களில் இதுவும் ஒன்று. படிக்கும் நாளுக்காகக் காத்திருக்கும்போது உங்களுடைய மதிப்புரை, என் ஆவலை மிகுவித்துவிட்டது.
கருத்துரையிடுக