மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 26 ஆகஸ்ட், 2017மனசின் பக்கம் : சுமைகளும் சுமையாவும்...

முதல்லயே சொல்லிடுறேன்... என் நட்பு வட்டத்தில் இருக்கும் அனைவரின் பதிவுகளையும் படித்துவிடுகிறேன். கருத்து இடுவதில்தான் சிக்கல்... தட்டச்சு செய்து பதியும் கருத்து எங்கு போகிறது என்றே தெரியவில்லை. இதனால் சில நாள் முன் அலுவலகத்தில் இருந்து சிலருக்கு கருத்து இட்டுப் பார்த்தேன். கருத்து காணாமல் போகவில்லை... அதிலிருந்து எனது கணிப்பொறியில்தான் பிரச்சினை என்பதை அறிந்து கொண்டேன். இன்றும் சிலருக்கு கருத்து இட்டேன்... யாருக்குமே கருத்துச் சென்றதாகத் தெரியவில்லை. கணிப்பொறிக்கு வயசாயிருச்சு... உள்ளே ஏதோ பிரச்சினை... தளங்கள் திறப்பதிலும்... அட ஏன் முகநூல், ஜிமெயில் என எது திறந்தாலும்தான் சுற்றிக் கொண்டே இருக்கிறது. பலமுறை கணிப்பொறியை ஸ்கேன் பண்ணியாச்சு... வைரஸார் எவரும் உள்ளுக்குள் இல்லை... கூகிள் குரோமையும் தூக்கிட்டு பலமுறை புதிதாய்ப் போட்டுப் பார்த்தாச்சு... ம்ஹூம்... ஒண்ணும் நடக்கலை. சரியாகுமா தெரியலை... அதனால கருத்து வரலையேன்னு யாரும் நம்ம கடைப்பக்கம் வராம இருந்துடாதீங்க...உங்கள் எழுத்துக்களை வாசித்து விடுகிறேன்... என் வார்த்தைகள்தான் வழி தவறிப் போய் விடுகின்றன.

நெருஞ்சியும் குறிஞ்சியும் அப்படின்னு ஒரு தொடர்கதை இங்க எழுதிக்கிட்டு இருந்தேன்... உங்களுக்கு எல்லாம் ஞாபகம் இருக்கா தெரியலை. பாதிக் கிணறு தாண்டும் முன்னர் அதை நிறுத்திட்டேன். சரி இங்க எழுதாட்டியும் கதையையாவது எழுதி முடிச்சிடலாம்ன்னு நினைச்சிருக்கேன்... ஆனா இப்ப என்னவோ தெரியலை உக்காந்து எழுத மனசு வரலை... அதனால் அந்தத் தொடர்கதை மொட்டைக் கோபுரமாட்டம் முழுமையடையாமல் இருக்கிறது. விரைவில் எழுதி முடிக்கணும் என்ற எண்ணம் மட்டும் இருக்கிறது. முடியுமா தெரியல... அதற்கு இடையில் இன்னொரு தொடர்கதை... (சத்தியமா இங்கு பதியமாட்டேன்... கவலைப் படாதீங்க...) எழுதலாம் என்ற எண்ணம்... அதற்கான ஆரம்பமாய் முதல் பகுதி எழுதிவிட்டேன்... சற்றே வித்தியாசமாய்... சாவை எதிர் நோக்கிக் கிடக்கும் ஒரு மனிதன் தன்னோட வாழ்நாளில் சந்தித்த மறக்க முடியாதவர்களின் சாவைப் பற்றி நினைப்பதாய்.... 12 அல்லது 15 பகுதிகளாக எழுத எண்ணம்... கொஞ்சம் வரலாற்று விவரங்கள்... நாட்டுப்புற பாடல்கள்... இப்படி சேர்த்துக்கலாம்ன்னு எண்ணம்... ஆனா சந்தோஷமான கதையாக இல்லாமல் ஒவ்வொரு சாவும் சொல்லிச் செல்லும் கதையாக இருக்கும். பார்க்கலாம்... விரைவில் எழுதி முடிக்க எண்ணமிருக்கிறது... மனசு ஒத்துழைக்கணும்.

மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கும் நிலை வந்து இன்னும் மீளமுடியாத நிலையில் மனைவியின் உடல்நலமும் இன்னும் சீராகவில்லை. அருகில் இருந்து பார்த்துக் கொள்ள ஆசையிருந்தும் வாழ்வின் வருத்தமிகு பக்கங்கள் நிறைந்த நிலையில் பொருளாதார சிக்கலில் சுழன்று அதற்கேனும் வெளிநாட்டு வாழ்க்கை வேண்டும் என்பதற்காக வருத்தங்களைச் சுமந்து இங்கு கிடக்க வேண்டியிருக்கு... அவருக்கு  டெங்குக் காய்ச்சல் வந்து நாலைந்து வருடம் ஆன பின்னாலும் காய்ச்சல் வந்தவுடன் பிரஷர் குறைந்து விடுகிறது. சென்ற வாரத்தில் காய்ச்சல் வர, பிரஷர் 40க்கும் கீழ் இறங்கிவிட்டது. பின்னர் ஊசி, குளுகோஸ்... தொடர் மருத்துவம் என உடல் நலம் கொஞ்ச தேறினாலும் வியர்வை அருவி நிற்கவில்லை.... ஒரு நாளைக்கு நாலைந்து டிரஸ் மாற்றும் அளவுக்கு வியர்வையில் குளிக்கிறார். யாரும் பார்க்க ஆளில்லை என்று ஆதங்கப்படுவதால் எதுவும் நடந்து விடப்போவதில்லை. இப்போதைக்கு குழந்தைகள் மட்டுமே பாதுகாவலாய்... ஆனால் குழந்தைகள் இன்னும் குழந்தைகளாகவே இருப்பதுதான் கஷ்டமாக இருக்கிறது. இந்த வியர்வை அருவியை நிறுத்துவதற்கு ஏதேனும் மருத்துவ முறைகள் இருந்தால் சொல்லுங்களேன்.

வேரும் விழுதுகளும் மற்றும் கலையாத கனவுகள் தொடர்கதைகளை புத்தகமாக்க வேண்டும் என தேவா அண்ணன் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார். வேரும் விழுதுகளும் மொத்தம் எத்தனை பக்கம் வரும் என சில மாதங்களுக்கு முன்னர் கணேஷ்பாலா அண்ணனுக்கு அனுப்பிக் கேட்டு வைத்திருக்கிறேன். மீன் பிடிக்க ஆசைதான்... கையில் சரியான வலை இல்லையே... ஓட்டை வலையை வைத்துக் கொண்டு எப்படி மீன் பிடிப்பது. சில வருடங்களாக புத்தகம் போட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குவதும் பொருளாதாரம் அதைப் பிடித்துக் கீழே இறக்கிவிடுவதும் வாடிக்கையாகிவிட்டது. எது எப்படி என்றாலும் ஒரு தொடர்கதையை நாவலாகவும் சில சிறுகதைகளைத் தொகுப்பாகவும் கொண்டு வர வேண்டும் என்ற ஆசை விருட்சமாய் மனசுக்குள்... நேரமும் காலமும் கூடி வருகிறதா என்பதை பொறுத்திருந்து  பார்க்கலாம். யாரேனும் இந்த இரண்டு தொடர்கதைகளையும் வாசித்து தவறுகளைச் சுட்டிக்காட்டி, இன்னும் எப்படி மேம்படுத்தலாம் எனச் சொல்ல முடியும் என்றால் சொல்லுங்கள் அனுப்பித் தருகிறேன் திருத்தித் தாருங்கள்... நான் விருப்பப்பட்டு சிலரிடம் கொடுத்து அதை அவர்கள் எடுத்துக்கூட பார்க்கவில்லை என்பது வருத்தமே.

விவேகம் எனக்குப் பிடித்திருந்தது... தொடர்ச்சியான கதை அமைப்பு இல்லாத, அடிக்கடி மாறும் காட்சிகள் என எடிட்டிங்கில் சொதப்ப, கேமராவை ஆட்டி ஆட்டி படம் பிடித்திருக்கும் கலையும் சேர்ந்து கொண்டாலும் கலைப்பட விரும்பிகளுக்கு பிடிக்காது என ராஜ சுந்தரராஜன் அண்ணா அவர்கள் விமர்சனத்தில் சொன்னது போல நான் கலைப்பட விரும்பி இல்லை என்பதால் பிடித்திருந்தது. விரிவான விமர்சனம் எழுதினால் அஜீத்தை பிடிக்கும் என்பதால் பாஸிட்டிவ் விளம்பரம் என்று சொல்லி சிலர் சண்டைக்கு வரலாம்... எனவே ஆங்கிலப் படத்துக்கு நிகரான ஒரு படம் தமிழில்... குடும்பமும் பார்க்கும் வேலையும் என கலந்து கட்டி நகர்த்திச் செல்லப்படும் கதை... விருப்பம் இருந்தால் பார்க்கலாம்.

டுத்த வாரம் பக்ரீத் வருவதால் வாரவிடுமுறையுடன் ஒரு நாள் கூடுதல் விடுமுறையாய் கிடைக்கும். எங்கு செல்வது...? என்ன செய்வது...? என்ற எந்தப் பிளானும் இன்றி அறையில் கிடக்கப் போகிறோம் என்ற நினைப்பை அதெல்லாம் இல்லை சனிக்கிழமை மாலை ஒரு பெரிய விழாவை முன்னின்று நடத்த வேண்டும்... நீங்க எல்லாரும்தான் வேலை பார்க்க வேண்டும் என்று கனவுப் பிரியன் அண்ணாவின் ஆணை... ஆம் அவரின் 'சுமையா' சிறுகதைத் தொகுப்பு அபுதாபியில் ஒரு வெளியீடு காண இருக்கிறது. அரபு தேசத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பேரீச்சம் மரம் போல வளர்ந்து நிற்கும் எழுத்தாளர் குழாமைச் சந்திக்க ஒரு வாய்ப்பு. அரப் உடுப்பியில் நடக்க இருக்கும் இந்த விழாவில் பிரபல எழுத்தாளர்கள் (அபுதாபி வாழ் மக்கள்) பேச இருக்கிறார்கள். அதனால் சனிக்கிழமை ஒரு சந்தோஷ நாளாக அமையுமென்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன... அப்புறம் அபுதாபி வாழ் மக்கள் விழாவுக்கு மறக்காம வந்திருங்க...

-'பரிவை' சே.குமார். 

13 கருத்துகள்:

 1. காலம் கனியும். விரைவில் தங்கள் கனவுகள் நனவாகட்டும். மனைவியின் உடல்நலம் தேறிடப் பிரார்த்தனைகள். நல்ல மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெற்றிடச் சொல்லுங்கள்.

  பதிலளிநீக்கு
 2. பிரச்சனைகள் விரைவில் தீரட்டும். உங்கள் இல்லத்தரசியின் உபாதைகளும் குணமடைய எனது பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 3. குமார் சகோதரிய க்ரீன் டீ குடிக்கச் சொல்லிப் பாருங்க. அப்புறம் தியானம். செய்யச் சொல்லுங்க. நமது பல பிரச்சனைகளுக்கு நமது மனதில் புதைந்திருக்கும் நம்மை அறியாமல் ஆழ் மனதில் புதைந்திருப்பவை நமது மனதில் எழுந்து அதில் வியர்வை அதிகமாகலாம். மெனோ பாஸ் வயது என்றால் வியர்வை அதிகம் இருக்கலாம். ஆனா அந்த வயது இருக்காது என்று நினைக்கிறேன். நடைப்பயிற்ச்சி செய்யலாம். யோகாவில் மற்றும் இயற்கை மருத்துவத்தில் நிச்சயமாக தீர்வு இருக்கும் ஆலோசானைகள் கேட்கலாம். முயற்சி செய்து பார்க்கலாம்...மனதை அமைதியாக ரிலாக்ஸ்டாக வைக்க யோகா தியானம் மிக மிக உதவும். என்பவை எனது தாழ்மையான கருத்துகள்..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கரெக்ட் கீதா . ஆழமன சிந்தனைகளாக இருக்கலாம் என நான் சொல்லி விட்டேன்.தொடர் வலிகள் மனதோடும் சம்பந்தப்பட்டிருக்கின்றன. கவுன்சிலிக்க போன்றவை நல்ல பலனைத்தரும்.

   நீக்கு
 4. உங்கள் தொடர்கதை நினைவு இருக்குதே! பாதியில் இருக்கிறது. ஓ புதிய தொடர்கதையா! இங்கு இல்லை என்றாலும் வாழ்த்துகள்! உங்க்ள் பிரச்சனைகள் எல்லாம் சரியாகிட பிரார்த்தனைகள்! விலகிப் போகும் இதுவும் கடந்து போகும்....

  பதிலளிநீக்கு
 5. தங்களின் மனைவி விரைவில் நலம் பெறுவார்
  கவலை வேண்டாம் நண்பரே

  பதிலளிநீக்கு
 6. உங்கள் கனவுகள் நிறைவேற வாழ்த்துக்கள்.தங்கள் மனைவி விரைவில் உடல் நலம் பெறுவார்கள் இறைவன் அருளால்.
  நிலவேம்பு கஷாயம் அப்பல்லோ மருந்தகத்தில் கிடைக்கிறது. அதை குடித்தால் விரைவில் நலம் கிடைக்கும்.

  பதிலளிநீக்கு
 7. தங்களது மனைவி பூரண குணமடைய எமது பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 8. மனைவி உடல் நலம் சீராகப் பிரார்த்தனைகள் . எனக்கு உங்கள் மனைவியின் உடல் நிலைக்கு நேர் மாறான பிரச்னை .
  வேர்க்கவே வேர்க்காது .
  கரண்ட் கட் ?
  நோ ப்ராப்ளம் .
  ஆனால் அது கிட்னியில் கல்லாக மாறி விட்டது.
  வேர்க்க வழி என்ன என்று தெரியவில்லை

  பதிலளிநீக்கு
 9. உங்கள் துணைவியாரின் உடல்நிலை சீராக எங்கள் பிரார்த்தனைகள். பொருளாதாரத் சிக்கல்களும் சீக்கிரம் திரட்டும். உங்கள் புத்தகம் சீக்கிரம் வெளிவர எங்கள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 10. எல்லாமே சரியாகும் குமார். புத்தக வெளியீடும் நடக்கும், அப்படி என்ன வயதாகி விட்டது உங்களுக்கு. எல்லாத்துக்கும் நேரமும் காலமும் உண்டுப்பா. அனைத்து பிரச்சனையும் நீங்கி விடும். நித்யாவின் உடல் நலன் பெற்றால் தான் அங்கே குழந்தைகளும் இங்கே நீங்களும் ஆரோக்கியமாக இருக்க முடியும், அவருக்கு சீக்கிரம் குணமாகட்டும்.

  பதிலளிநீக்கு

 11. சகோதரிக்கு உடல் விரைவில் நலம் பெற எனது பிரார்த்தனைகளும்...

  விரைவில் அனைத்து தடைகளும் நீங்கி ....புத்துணர்வோடு வர எனது வாழ்த்துக்களும்...

  பதிலளிநீக்கு
 12. நண்பரே! நீண்ட நாளாக தங்கள் வலை பல முறை முயன்றும் திறக்கவில்லை கவனிக்க! த ம 3

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...