மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

சாண்டில்யனின் ராஜ்யஸ்ரீ

ருக்குச் சென்று திரும்பிய பின்னர் அங்கும் பிரச்சினைகள்... இங்கும் பிரச்சினைகள் என மனம் எதிலும் நாட்டமில்லாமல் இருந்த சூழலில் தான் பஸ் பயணத்தில் வாசிக்கும் பொருட்டு சாண்டில்யனின் ராஜ்யஸ்ரீ நாவலை தரவிறக்கம் செய்தேன். இந்த நாவல் ஹர்ஷவர்த்தனன் எப்படி அரியணை ஏறினான் என்பதைச் சொன்னாலும் முழுக்க முழுக்க ஹர்ஷவர்த்தனனின் தங்கை ராஜ்யஸ்ரீயின் வாழ்க்கையைச் சுற்றித்தான் எழுதப்பட்டிருக்கிறது. 'கால் பங்கு சரித்திரத்தை வைத்தும் சரித்திரக்கதை எழுதலாம். முக்கால் பங்கு சரித்திரத்தை வைத்தும் சரித்திரக்கதை எழுதலாம். சரித்திரத்தோடு கதை இழைந்து ஓடுகிறதா என்பதுதான் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம்' என்று தனது முன்னுரையில் திரு. சாண்டில்யன் அவர்கள் சொல்லியிருக்கிறார். உண்மைதான்... சரித்திரக்கதை என தனக்கு எப்படித் தோன்றுகிறதோ அப்படியெல்லாம் எழுதியவர்களையும் எழுதிக் கொண்டிருப்பவர்களையும் நாம் வாசித்திருக்கிறோம் அல்லவா..? நம் வரலாற்றுப் பாடங்களில்  பல சரித்திரங்கள் மாற்றித்தானே நமக்குப் புகட்டப்பட்டிருக்கின்றன... புகட்டப்படுகின்றன. ஜான்சிராணியை நமக்குச் சொல்பவர்கள் வேலு நாச்சியாரைப் பற்றி சொல்வதில்லையே. சரி நாம ராஜ்யஸ்ரீ பின்னே போவோம்.

Image result for சாண்டில்யனின் ராஜ்யஸ்ரீ

ராஜ்யஸ்ரீ... இவளின் வாழ்க்கையே ஒரு சரித்திரம்தான் என்பதால் கால் பங்கு... முக்கால் பங்கு எல்லாம் அவசியமில்லை... 98% சரித்திரம் பேசும் கதையில் 2% மட்டுமே சுவைக்காக உப்பு, உரைப்பு சேர்த்திருப்பதாகவும் முன்னுரையில் சொல்லிவிடுகிறார் ஆசிரியர். மேலும்  வடபுலச் சக்கரவர்த்தி ஹர்ஷனுடைய அவையிலிருந்த பாணபட்டன் இயற்றிய ஹர்ஷ சரித்திரத்தில் ராஜ்யஸ்ரீயின் இன்பமும் துன்பமும் கலந்தே எழுதியிருப்பதாகவும் 'சரித்திர அமைப்புக்கள்' ஆசிரியர் வின்செண்ட் ஸ்மித் அவர்கள்  எழுதிய இந்தியாவின் புராதன வரலாற்றில் விரிவாக எழுதப்பட்டிருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.

ராஜ்யஸ்ரீ கதை என்ன?

தானேசுவரத்தின் அரசன் பிரபாகரவர்த்தனன்... இவர் 'ஹூணர்களாகிய மான்களுக்கு சிங்கம்' என அழைக்கப்பட்டவர். பட்டத்துராணி யசோவதி, இவர்களுக்கு ராஜ்யவர்த்தனன், ஹர்ஷவர்த்தனன் மற்றும் ராஜ்யஸ்ரீ என மூன்று மக்கள். மூத்தவன் இமயமலைப் பக்கம் போருக்குச் சென்றிருக்கிறான். இளையவன் ஹர்ஷன் வாள் சுழற்றுவதில் வீரன் என்றால் இன்னும் பருவம் அடையாத ராஜ்யஸ்ரீயும் வாள் போர் புரிவதில் கில்லாடி. மன்னுக்கு மகள் மீது அலாதிப் பிரியம். அப்பாக்களுக்கு மகள்கள் மீதுதானே அதிகப் பிரியம் இருக்கும். இதில் மகாராஜா  மட்டும் விதிவிலக்கா என்ன..? 

மகாவீரனான மஹாசேனகுப்தன் மகன் தேவகுப்தன், ராஜ்யஸ்ரீயை பெண் கேட்டு வருகிறான்... மன்னரோ தன் மகளுக்கு இப்போது திருமணம் சாத்தியமில்லை என்று காரணங்களை அடுக்க, யோசித்துப் பதில் சொல்லுங்கள் என்று பிடித்த பிடியாய் நிற்கும் தேவகுப்தனை, அரண்மனையில் தங்கி செல்லச் சொல்லி அவனுக்கு ராஜ உபச்சாரம் செய்யச் சொல்கிறார். அன்று இரவு நந்தவனத்து வாவிக்கரையில் உட்கார்ந்து பாடிக்கொண்டிருக்கும் ராஜ்யஸ்ரீயைப் பார்த்து அவளுடன் வம்பு செய்ய, அங்கு வரும் ஹர்ஷன் அவனை தூக்கி தண்ணியில் போட்டு விடுகிறான். அதன் பிறகு இருவரும் வாட்பயிற்சிக் கூடத்தில் மோதுவது என முடிவு செய்கிறார்கள். அதன்படி வாட்பயிற்சி கூடத்தில் வாட் போர் ஆரம்பமாக அங்கும் தேவகுப்தனுடன் மோதுவது ஹர்ஷன் அல்ல... தான் யார் என்ற அடையாளத்தை மறைத்து அவனுடன் மோதி ஜெயிப்பது ஒரு பெண்.. அதுதான் ராஜ்யஸ்ரீ... பெண்ணால் ஏற்பட்ட அவமானத்தால் அவனுக்குள் வன்மம் முளை விடுகிறது.

அந்த சமயத்தில் மகாமந்திரி கன்னோசி அரசகுமாரன் வந்திருப்பதாகச் சொல்கிறார். அவரை அழைத்து வரச் சொல்ல, சென்று திரும்பிய மகாமந்திரி ஆளைக் காணோம் என வருகிறார். அப்போது தேவகுப்தன் உப்பரிகையில் ராஜ்யஸ்ரீயின் கையைப் பிடித்துக் கொண்டு நிற்கும் கன்னோசியின் அரசன் கிருகவர்மனைக் காட்டி கேவலமாகப் பேசுகிறான். தன் தங்கை ஒரு ஆடவனுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து ஹர்ஷனுக்கு கோபம் வருகிறது. மன்னரோ கோபப்படாமல் அவனை அழைத்து வரச் சொல்லிப் பேசுகிறார். அப்போதுதான் கிருகவர்மன் தங்கைக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை என்பது  ஹர்ஷனுக்குத் தெரிய வருகிறது. பருவம் அடையாத பெண்ணை உடனே கல்யாணம் பண்ணித் தர முடியாது என்பதை மறைமுகமாச் சொல்லி அவனை இரவு தங்கிச் செல்லச் சொல்ல, அவனோ தேவகுப்தனைப் போல் இரவில் வாவிக்கரையில் ராஜ்யஸ்ரீயைச் சந்திக்கிறான். இந்த இடத்தில் சாண்டியல் எப்படி எழுதியிருப்பார் என்பதைச் சொல்லவும் வேண்டுமா... மனிதர் அடித்து ஆடியிருக்கிறார்.. இந்த சந்திப்பின் முடிவில் ராஜ்யஸ்ரீ பருவம் அடைகிறாள்.

பருவம் அடைந்த பெண்ணை உடனே கட்டி வைக்க முடியாது என்று மகாராணி யசோவதி சொல்ல, காதலைவிட காமம் தலைக்கேறிய கிருகவர்மனுக்கு மாமியார் துரியோதனி ஆகிறாள். பருவம் அடையும் முன்னரே கிருகவர்மனின் சேட்டைகளால் சொக்கிய ராஜ்யஸ்ரீக்கோ தங்கள் திருமணத்தை தள்ளிப்போட அம்மா செய்யும் முயற்சிகளைக் கண்டு அவள் மீது கோபம் வருகிறது. கன்னோசி செல்லும்முன் கிருகவர்மன் விரைவில் ராஜ்யஸ்ரீயை மணமுடிக்கும் முகமாக தானேசுவர அரண்மனை சோசியருக்கு பொற்காசுகளைக் கொடுத்து கல்யாணத்தை சீக்கிரம் வைப்பதுதான் அரச குடும்பத்துக்கு நல்லது என பொய் சொல்ல வைக்கிறான். மகாராணிக்கு இதில் விருப்பம் இல்லை.

அரண்மனை நிகழ்வுகளால் திருமணம் தள்ளிப் போவதை விரும்பாத ராஜ்யஸ்ரீ தன்னை உடனே திருமணம் செய்ய வரும்படி ஓலை அனுப்ப நினைக்கிறாள். அதை யாரிடம் கொடுத்துவிடுவது என்று யோசனையில் ஆழ்ந்திருக்கும் போது ஆபத்தாந்தவனாக வருகிறான் தனது மாமன் பண்டியிடம் வாள் பயிற்சி கற்றுக்கொள்பவனும் தேவகுப்தனின் தம்பியுமான மாதவகுப்தன். அவனிடம் ஓலை கொடுத்த விவரம் மகாராணிக்குத் தெரிய, பண்டி அவனைச் சிறை செய்கிறான். மகாராஜா தப்ப வைக்கிறார். இமயமலைப் பக்கம் போருக்குச் சென்ற மூத்தவனும் வெற்றியுடன் திரும்புகிறான்.

ஓலை கிடைத்த பின்னர் கிருகவர்மனால் அனுப்பப்பட்ட அவனது அரண்மனை சோசியரும், தானேசுவர அரண்மனைச் சோசியரும் திருமணத்தை உடனே நடத்த முயற்சிகள் எடுக்க, அரண்மனையில் தங்கும் கன்னோசி சோசியருக்கு நான்கு பேரிடம் இருந்து அழைப்பு வந்து அதன் காரணமாக நாலு ஓலைகளை கன்னோசிக்கு அனுப்புகிறார் உடனே புறப்பட்டு வாருங்கள் என்ற தனது ஐந்தாவது ஓலையையும் அதனுடன் இணைத்து...

கன்னோசி வரும் கிருகவர்மன் ராஜ்யஸ்ரீயை சந்தித்தல்... மாமியார் மாப்பிள்ளை பிரச்சினைகள்... எல்லாம் முடிந்து மாப்பிள்ளை அழைப்பின் போது யானைக்கு மதம் பிடித்து ஓட, அதை அடக்கி கிருகவர்மனைக் காப்பாற்றும் ஹர்ஷக்க்கு யானை மதம் பிடித்து ஒடவில்லை... அதன் மீது விரிக்கப்பட்ட பட்டுத்துணிக்குள் ஆணிகள் வைத்திருக்கிறார்கள் என்பது தெரியவர, அதற்கு காரணமான தேவகுப்தனைக் கொல்ல நினைக்கிறான். ஆனால் பண்டியோ இருவரையும் மோதவிட்டு தேவகுப்தனை தோற்கடித்து ஊருக்கு அனுப்பி வைக்கிறார். முதலில் அவனுள் விழுந்த வன்ம விதை வளர்ந்து விருட்சமாகிறது,

ராஜ்யஸ்ரீ திருமணத்துக்குப் பின் நிறைய மாற்றங்கள்... மகளின் பிரிவால் தானேசுவர மன்னனுக்கு உடல் நலம் பாதிக்கிறது. கிருகவர்மனோ மனைவி மோகத்தில் அந்தப்புரத்தில் கிடந்து அரசைக் கவனிக்க மறக்கிறான். தேவகுப்தன் தனது நண்பனான கௌட நாட்டு சசாங்கனுடன் இணைந்து ராஜ்யஸ்ரீயை பலி வாங்க கிருகவர்மனை அழிக்க நினைக்கிறான். ஹூணர்கள் மீண்டும் எல்லைப் புரத்தில் பிரச்சினை செய்வதாய் செய்தி வர, கன்னோசியைக் காக்க யாராவது ஒரு மகன் போகவேண்டும் என்ற மன்னரின் விருப்பம் நிறைவேறாமல் அண்ணன் தம்பி இருவரும் இமயமலைச் சாரலுக்கு படையுடன் விரைகிறார்கள். அடிவாரம் சென்றது அண்ணன் தம்பியை தன் பெற்றோரை பாதுகாப்பும் பொருட்டு அங்கு தங்கியிருக்கும்படியும் ஏதேனும் ஓலை வந்தால் எனக்குத் தெரிவி என்று சொல்லிவிட்டுச் செல்கிறான்.

விதி விளையாடுகிறது... மன்னன் பிரபாகவர்த்தனன் உயிருக்குப் போராட, மகன்களுக்கு ஓலை போகிறது... ஹர்ஷன் மட்டுமே வருகிறான். மன்னர் இறக்கிறார்... மகாராணி உடன்கட்டை ஏறுகிறாள்.  போர் முடித்து வெற்றியுடன் திரும்பும் ராஜ்யவர்த்தனனை பெற்றோரின் இழப்பு மிகவும் பாதிக்கிறது. தம்பியை அரசாளச் சொல்லி  துறவியாக நினைக்கிறேன். அந்தச் சமயத்தில் வஞ்சகமாக வேட்டைக்கு அழைக்கப்பட்ட கிருகவர்மன் கொலை செய்யப்பட்டு ராஜ்யஸ்ரீ சிறையில் அடைக்கப்பட்ட செய்தி கிடைக்க, தங்கையைக் காக்கவும் மைத்துனனைக் கொன்றவர்களைப் பலி வாங்கவும் படையுடன் கிளம்பும் ராஜ்யவர்த்தனன், சசாங்கனின் குள்ளநரித்தனத்தால் வஞ்சகமாகக் கொல்லப்பட, கோபத்துடன் தேவகுப்தனைத் தேடி ஹர்ஷன் கிளம்புகிறான்.

சிறையில் அடைபட்ட ராஜ்யஸ்ரீ தப்பித்தாளா..? அவளை யார் காப்பாற்றினார்...? ஹர்ஷவர்த்தனன் தேவகுப்தனையும் சசாங்கனையும் பலி வாங்கினானா...? தானேசுவரம் யாரால் ஆளப்பட்டது...? கன்னோசி என்ன ஆனது...? என்பதை விறுவிறுப்புடன் தனக்கே உரிய வர்ணனைகளை தூக்கலாகப் பரிமாறிக் கொடுத்திருக்கிறார் சாண்டில்யன்.

மக்களுக்காக... மக்கள் நலனுக்காக நாங்கள் பேசுகிறோம் என தீவிர பேச்சு வார்த்தை நடத்துபவர்கள் மத்தியில் நாம் வாழ, நம் முன்னோரான... நம்மை ஆண்ட அரசர்கள் எல்லாருமே உண்மையிலேயே மக்களுக்காக வாழ்ந்து மடிந்திருக்கிறார்கள். மகள் போகும்போது ஸ்ரீதேவியே போச்சு என்று ஒரு சிலர் சொல்வதைக் கேட்டிருப்போம்... இங்கு மன்னனும் மகள் செல்லும் போது இந்த வார்த்தையைச் சொல்ல அதன் பின் பிரச்சினைகளை மட்டுமே சுமக்கிறது தானேசுவரம். மனைவியின் அழகில் மயங்கி, காமமே வாழ்வெனக் கிடக்கும் மன்னனால் ஒரு நாடு பாதிக்கப்படுகிறது.

மன்னன் வயதானாலும் மகாராணியிடம் கொஞ்சுவது சுவராஸ்யம்.. மன்னனின் இடக்கு மடக்கான பேச்சுக்கள் ரசிக்க வைக்கிறது. தங்கைக்கு மாப்பிள்ளை நிச்சயம் பண்ணியிருப்பது அண்ணன்களுக்கு தெரியாமல் இருப்பது சாத்தியமா என்ற கேள்வி எழலாம். 

ராஜ்யஸ்ரீயில் வர்ணனைகளில் கலக்கியிருக்கிறார் சாண்டில்யன். கடல்புறா, ஜலதீபம், கன்னித்தீவு போன்றெல்லாம் இல்லை என்றாலும் போரடிக்காமல் வாசிக்க முடிகிறது.

அப்புறம் கில்லர்ஜி அண்ணா, ஸ்ரீராம் அண்ணா, வெங்கட் நாகராஜ் அண்ணா உள்ளிட்ட பலருக்கு கருத்து இட்டேன்... ஆனால் கருத்துக்கள் அவர்கள் தளங்களுக்குச் செல்லவில்லை... என் கணிப்பொறியில் ஏதோ பிரச்சினையா... அல்லது வலைப்பூவில் ஏதேனும் பிரச்சினையா தெரியலை... துரை செல்வராஜூ ஐயாவின் கதைக்கு (கேட்டு வாங்கிப் போடும் ஸ்ரீராம் அண்ணா) நீண்ட கருத்துப் போட்டேன். அதுவும் போகவில்லை போலும்... என்ன செய்வது..:(

-'பரிவை' சே.குமார்.

6 எண்ணங்கள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சிறப்பான பகிர்வு. இந்த நாவல் படித்த நினைவில்லை. படிக்க முயல்கிறேன்.

உங்கள் கருத்து வரவில்லையே. மற்றவர்கள் கருத்துகள் வருகின்றன. பணிச்சுமை காரணமாக வரவில்லை என நினைத்தேன்.

Avargal Unmaigal சொன்னது…

சிறுவயதில் இந்த கதையை படித்து இருக்கிறேன் சாண்டியல்னின் அனைத்து கதைகளும் அருமையாக இருக்கும் அதற்கு லதாவின் படமும் அருமையாக இருக்கும்

ஸ்ரீராம். சொன்னது…

ராஜ்யஸ்ரீ படித்ததில்லை. .லிங்க் அனுப்புங்கள் குமார். நேரம் கிடைக்கும்போது பொறுமையாக கொஞ்சம் கொஞ்சமாகப் படித்து விடுகிறேன்.

உங்கள் கமெண்ட் மாடரேஷனிலோ, ஸ்பாமிலோ இருக்கிறதா என்று பார்த்து வந்தேன். இல்லை. கமெண்ட் போகாத பட்சத்தில் அந்தப்பக்கத்தை ஒருதரம் ரெப்ரெஷ் செய்து பின்னூட்டம் இட்டுப் பாருங்கள். எங்கள் தளத்தில் வேறு யாருக்கும் இந்தப் பிரச்னை இருக்கிறதா என்றும் தெரியவில்லை.

Anuprem சொன்னது…

தரவிறக்கம் செய்து ஏற்கனேவே...வாசித்து விட்டேன்...


உங்கள் விமர்சனத்தை படிக்கும் போது மீண்டும் வாசிக்கும் நிறைவு..

G.M Balasubramaniam சொன்னது…

இப்போதெல்லாம் புத்தகங்கள் வாசிக்க முடிவதில்லை இருந்தால் என்ன கதை முழுவதும் சொல்லி விட்டீர்கள் சாண்டில்யனைத்தான் வாசிக்க வில்லை

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ராஜ்யஸ்ரீ வாசித்ததில்லை...குமார்...பகிர்விற்கு மிக்க நன்றி..விமர்சனம் வேறு வாசிக்கத் தூண்டிவிட்டது. சாண்டில்யனின் கதைகளைப் பெரும்பாலும் கல்லூரிக் காலத்தில் வாசித்துவிடுவதுண்டு.