அவரை எனக்கு முன்பின் தெரியாது...
இங்கு நிறையப் பேர் எழுதுகிறார்கள் என்றாலும் ரெண்டு மூணு பேர் மட்டுமே உறவாய்... அப்படி ஒரு ஆறுதலாய் இருந்தவர் அன்பின் அண்ணன் கில்லர்ஜி... அவரும் ஊருக்குப் போய்விட இப்போது ஆறுதலாய், நம் சுக துக்கங்களைக் கொண்டு போய்ச் சேர்க்கும் இடமாக இருப்பவர் அன்பின் அண்ணன் யூசுப் (கனவுப் பிரியன்)... மற்றபடி பலர் திடீரென முகநூல் அரட்டையில் வருவார்கள்... போவார்கள்... அவ்வளவே... அப்படித்தான் அவரும் வந்தார். சிறுகதைப் போட்டிக்கு சிறுகதை அனுப்புங்கள் நண்பரே என முகநூல் உள்பெட்டியில் வந்தார்.
பின்னர் முகநூல் அரட்டை தொடர, அவரைப் பற்றி அறிய முடிந்தது... ஊர் பெரம்பலூர் என்றும் அலைனில் இருக்கிறேன் என்றும் சொன்னார். அவரது கவிதைகள் அவ்வப்போது ஏதேனும் ஒரு சிற்றிதழில் வெளிவர. அதைப் பகிர்ந்து கொள்வார். அவர் சிற்றிதழ்களின் காதலன் என்று அறிந்தபோதும் சிற்றிதழ்கள் சேகரிப்பு, அது குறித்தான பார்வை என அவரின் மனக்கிடங்குக்குள் அவ்வப்போது இணையவழி மூலமாக மூழ்கிய போதும் வெளிநாட்டு வாழ்க்கையில் எத்தனையோ போராட்டங்கள் இருக்கும் அப்படியிருக்கும் போது இத்தனைக்கும் இடையில் அவரால் சிற்றிதழ்கள் குறித்தான ஒரு ஆய்வையே மேற்கொள்ள முடிகிறதே என வியந்தேன்.
அவருடன் இணைய வழி தொடர்பு மட்டுமே அதிகமிருந்தது. ஒரு முறை மட்டுமே போனில் பேசிய நியாபகம். அவர் நடத்திய சிறுகதைப் போட்டியில் என் கதைக்கு மூன்றாமிடம் கிடைத்தது. சிற்றிதழ்கள் உலகம் என்னும் சிற்றிதழ் இணைய வெளியில் கொண்டு வர இருப்பதாகச் சொன்னார், பின்னர் அதை அச்சிலும் கொண்டு வருகிறோம் என்றார். அதற்கு வாழ்த்துச் செய்தி வாங்கி அதை முதல் இதழில் பிரசுரித்தார். அடுத்த இதழில் சிற்றிதழ்கள் உலகம் குறித்து நான் இங்கு பகிர்ந்த பதிவை பகிர்ந்து கொண்டவர் மூன்றாவது இதழ் தயாராகும் முன்னர் இரண்டு கதைகள் அனுப்புங்க ஒண்ணை இதழிலும் மற்றொன்றை ஒரு போட்டிக்கும் பயன்படுத்திக் கொள்கிறேன் என முகநூல் மூலமாகக் கேட்டார். நானும் அனுப்ப முயற்சிக்கிறேன் ஐயா என்று சொன்னேன்.
மறுநாள் கதையை மெதுவா அனுப்புங்க அடுத்த இதழ்ல போடுவோம்... இப்ப அசோகமித்ரனைப் பற்றி ஒரு பக்கம் எழுதி அனுப்புங்க என்றார். அசோகமித்திரனைப் பற்றியா என்ற யோசனையோடு அவர் கேட்டதற்காக எழுதி அனுப்பினேன். அதை எனது போட்டோவுடன் பிரசுரித்தார். சிற்றிதழ்கள் உலகம் இதழை ஊரில் தனது மகள் மூலமாக எல்லாருக்கும் அனுப்பி வருவதாகவும் நீங்களும் கனவுப்பிரியனும் சந்தாதாரராக சேர்ந்து கொள்ளுங்கள் என்றும் சொல்ல, நாங்க இங்கயே பணம் தந்துடுறோமே என்ற போது இல்லை வங்கிக் கணக்கில் போடுங்க என்று சொல்லிவிட்டார். மிகச் சிறிய தொகைக்காக சேவைக்கட்டணம் தேவையில்லாமல் போகுமே மே மாதம் ஊருக்குப் போகும் போது அங்கு எனக்கும் அண்ணனுக்கும் பணம் போடுகிறேன் என்றதும் சரி உங்க முகவரி கொடுங்க இதழ் அனுப்பச் சொல்றேன் என்றார். பணம் போட்டதும் இதழ் அனுப்பலாம் என்றதற்கு அட பணம் என்னங்க பணம் முகவரி கொடுங்க என்றார் உரிமையாக.
ஊருக்குப் போய் திருவிழா, குழந்தைகள் என இணையப் பக்கமே வரலை. ஒருநாள் அலுவலக மின்னஞ்சல் பார்த்த போது முகநூல் உள்ளே போனால் இதழ் கிடைத்ததா என உள்பெட்டியில் கேட்டிருந்தார். அவர் அனுப்பிய... அனுப்பச் சொன்ன இதழ்கள் எதுவும் என் முகவரிக்கு வரவேயில்லை. இல்லை என்றதும் தாங்கள் கொடுத்த முகவரியில்தான் அனுப்பியிருக்கு... தபால்காரரை விசாரிங்க என்றார். சரி என்றவன் அதன் பின்னான வாழ்க்கைச் சிக்கல்கள்களில் சிதறி எல்லாம் மறந்தேன்... இதழுக்கு சந்தா அனுப்புதல் உள்பட.
பிரச்சினைகள் சூழ் உலகில் கில்லர்ஜி அண்ணாவைப் பார்த்து அவரின் தங்கை மறைவு குறித்துக் கூட கேட்கவில்லை... செல்வக்குமார் அண்ணனிடம் புதன்கிழமை வருகிறேன் என்று சொல்லி செல்ல முடியாத சூழல்... தமிழ்வாசியை மதுரையில் சந்திக்கிறேன் என்று சொல்லி மதுரையில் இருந்தும் பார்க்கவில்லை என்ற வருத்தம் இன்னும் மனசுக்குள்... கில்லர்ஜி அண்ணா தேவகோட்டையில் இருந்திருந்தால் சந்தித்திருக்கலாம். நான் ஊருக்கு கிளம்ப இருக்கும் அன்று பரம்பக்குடியில் இருக்கிறேன் மாலை சந்திப்போம் என்றார். நான் ஊருக்குப் போறேன் என்றதும் சரி போனில் பேசுவோம் என்று சொன்னார். ஆனால் மனைவியின் உடல்நிலை காரணமாக அன்றைய பயணம் பத்து நாட்கள் ஒத்திப்போடப்பட்டதை பிரச்சினைகள் சூழந்த நிலையில் யாருக்கும் தெரிவிக்கவில்லை என்பது என் தவறுதானே.
இங்கு வந்த பிறகு இன்னும் சில பிரச்சினைகள்... அவற்றில் எல்லாம் மூழ்கி முத்தெடுக்க முடியாமல் திணறிய நிலையில் சிற்றிதழ்கள் உலகம் மறந்தேன். அவரும் அழைக்கவில்லை... நானும் நினைக்கவில்லை. திடீரென ஒருநாள் வதிலை பிரபா அண்ணன் அவர்கள் பதிவின் மூலமாக உடல்நலமில்லாமல் துபை மருத்துவமனையில் இருப்பதாக அறிந்ததும் கனவுப்பிரியன் அண்ண்னுக்கு போன் செய்து விசாரிக்க, ஆமா உடல் நிலை சரியில்லாம மருத்துவமனையில் இருக்கார் என்றார். எனக்கு மிகுந்த வருத்தம்... எப்படி இதழ்... இதழ்... என ஓடிய மனிதருக்கு என்னாச்சு...? என்ற குழப்பமான மனநிலை. பின்னர் என் பிரச்சினைகளின் பின்னேயான பயணத்தில் அவர் என்ன ஆனார்...? உடல் நலம் பெற்று பணிக்குத் திரும்பினாரா..? இல்லை ஊருக்குப் போய்விட்டாரா...? என்று சிந்திக்கவே இல்லை. ஊரில் போய் செட்டில் ஆகணும் என முன்பு ஒரு முறை சொன்ன நியாபகம்.
நேற்று அலுவலகத்தில் வேலை இல்லை... முகநூல் மேய்ந்தபோது அதே வதிலைப் பிரபா அண்ணன் அவர்கள் அவரின் இறப்பை பகிர்ந்திருந்தார். என்னால் நம்பவே முடியலை... நண்பரே என்னோட பிளாக்ல அதை வைக்கணும் இதை வைக்கணும் நீங்க ஹெல்ப் பண்ண முடியுமா? என மூன்று மாதம் முன்னால் கேட்டாரே... முதல் இதழின் அட்டைப் படம் எப்படியிருக்கு பார்த்துச் சொல்லுங்க...? என்று அனுப்பி வைத்தாரே... நிறைய இருக்கு அதை எல்லாம் பத்திரமாக பாதுகாக்க ஒரு ஹார்ட் டிஸ்க் வாங்கணும் என்றாரே... இன்னும் இன்னுமாய் நிறைய மனசுக்குள் சுழல கண்கள் கலங்கின. அவரின் சிற்றிதழ்கள் மேம்பாடு குறித்தான ஆசைகள் இனி என்னவாகும். சிலர் வதிலை பிரபா அண்ணாவை தொடரச் சொல்லி எழுதும் பதிவுகளை முகநூலில் பார்த்தேன். அவர் தொடர்ந்தால் சந்தோஷம்.
அன்பின் ஐயா கிரிஷ் இராமதாஸ் அவர்களே... ஏன் இந்த அவசரம்...? மனம் கனக்கிறது ஐயா... தாங்கள் என்னுடன் முகநூல் அரட்டையில் தட்டச்சிய வார்த்தைகளை இன்று காலையில் பார்த்தேனே... அவை அழியாமல் இருக்கின்றனவே ஐயா...
ஐயாவின் பேரிழப்பால் பெரும் துயரில் ஆழ்ந்திருக்கும் அவரின் குடும்பத்தாருக்கு இறைவன் அமைதியைக் கொடுக்கட்டும்.
ஐயாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
-'பரிவை' சே.குமார்
6 எண்ணங்கள்:
ஆழ்ந்த இரங்கல்கள்! பிரார்த்தனைகள்!
இவ்வளவு பழகியவர் மறைவை திடீரென அறிய நேரிடும்போது ஏற்படும் அதிர்ச்சியை உணர முடிகிறது.. மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள்.
இருக்கும் போது தெரியாத நட்பு போனபின் வாட்டுகிறது ஆழ்ந்த இரங்கல்கள்
அன்னாருக்கு கண்ணீர் அஞ்சலிகள்
நேற்று இருந்தவர் இன்று முதல் இனியில்லை எனும் நிலையை மனம் ஏற்றுக்கொள்ள கடினமாய் தான் இருக்கும், நாமும் ஐயோ இப்படி இருந்தால் அபப்டி செய்திருக்கலாமோ என யோசித்தே கவலைப்படுவதும் குறையப்போவதில்லை. சில மாதங்களின் பின் குமாரின் எழுத்து வாசிக்கின்றேன். எல்லோருமே ஒருவரை சுழலுக்குள் இழுக்கப்ப்ட்டுக்கிண்டிருக்குன்றோம் அல்லவோ?
நெருங்கியவரின் மறைவு சட்டென நடந்தால் இப்படித்தான் என்ன செய்வது ?
எனது இரங்கல்களை தெரிவிக்கிறேன்
தொழுதூர் என்றால் சாலைக்கிராமம் அருகில் உள்ளதா ?
ஆழ்ந்த இரங்கல்கள்
கருத்துரையிடுக