பிக்பாஸ் பற்றி எழுதிய பதிவுக்கு வந்த கருத்துக்களில் நண்பர் வருணின் கருத்து மிகவும் வித்தியாசமாகவும் சற்றே கோபமாகவும் வந்திருந்தது. பிக்பாஸ் பற்றி எழுதியது எப்படி எனது விருப்பமோ அப்படித்தான் கருத்து என்பது அவரவர் விருப்பம்... அவர் மனதில் உள்ளதை தெள்ளத்தெளிவாகச் சொன்னதில் எனக்கு எவ்வித வருத்தமும் இல்லை. அதே நேரத்தில் நான் கமல் ஆதரவாளனும் இல்லை... எதிர்ப்பாளனும் இல்லை... ஆண்ட, ஆளத்துடிக்கிற பரம்பரையும் இல்லை... இதையெல்லாம் விட திராவிட அடிமையும் இல்லை என்பதை சொல்லித்தான் ஆகவேண்டும். இன்ன சாதியாய் இருப்பாய் என்று அவராக, மாவட்டத்தை வைத்து சாதியைக் கணித்திருக்கிறார் ஆனால் அது தவறான கணிப்பு. என்னைப் பொறுத்தவரை சாதி பார்த்துப் பழகுவதும் இல்லை... சாதியைத் தூக்கி தலையில் வைத்துக் கொள்வதும் இல்லை... அதனால் அந்த வரிகள் சிரிப்பைத்தான் கொடுத்தது.
மேலும் அந்தப் பதிவில் கமல் குறித்து அதிகம் எழுதவும் இல்லை... போராளிகளாய் தங்களைக் காட்டிக் கொண்டு புத்தி சொல்வோரைப் பற்றிய பகிர்வாய்த்தான் எனக்குத் தெரிந்தது. சரி விடுங்க... ஒவ்வொருவரின் பார்வையும் வித்தியாசப்படும்தானே... வருணின் கருத்துக்களிலும் அவரின் பதிவுகளிலும் ஒரு சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர் தளத்தை தொடர்ந்து வாசிப்பவன் நான்... கருத்துப் போர்களையும் வாசிப்பதுண்டு. கருத்துப் போர் செய்யத் தெரியாததால் அதிகம் கருத்து இடுவதில்லை. நிறைய விஷயங்களை நிறைவாய் எழுதக்கூடியவர் அவர்... அவரைப் போல் என்னால் எழுத இயலாது... நானெல்லாம் போகிற போக்கில் கிறுக்கிச் செல்லும் ஆள்தான்...அவரின் கருத்துக்கு மட்டுமின்றி எனது முந்தைய பகிர்வில் கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி.
இதுவும் பிக்பாஸ் பற்றிய பகிர்வுதான். ஒவியாக்கள் கொண்டாடப்பட வேண்டியவர்களா...? ஆரவ்கள் செய்ததை ஏற்றுக் கொள்ளலாமா..? ஜூலிக்கள் ஒதுக்கப்பட வேண்டியவர்களா..? சிநேகன்கள் செய்வது சரியா..? என நிறையக் கேள்விகளை நம்மிடம் மற்றுமின்றி நம்மைச் சுற்றியிருப்பவர்களிடமும் கேட்கத் தோணலாம். ஏன் நமக்குள் எழும் இதே கேள்விகள் அவர்களுக்குள்ளும் எழலாம் இல்லையா..?
ஓவியாவைப் போல் ஒரு பெண் நம் வீட்டில் இருந்தால் தூக்கி வைத்துக் கொண்டாடுவோமா அல்லது தூக்கிப் போட்டு மிதிப்போமா என்று சிலர் முகநூலில் கேட்டிருந்தார்கள். ஓவியாவைப் போல் ஒரு பெண், தனக்குச் சரியெனப்பட்டதை... மனதில் நினைத்ததை... அப்படியே வாழ நினைத்தால்... அப்படியான ஒரு வாழ்க்கை வாழ்ந்தால் அவரை அப்படியே வளர விடவேண்டும் என்பதுதான் என் எண்ணம். ஆனால் கிராமங்களில் அப்படி வளரும் பிள்ளைகளை 'பொட்டப் பிள்ளைக்கு அடக்கம் வேணும்...' என்றும் 'சமஞ்சபுள்ள மாதிரியா நடந்துக்கிறே' என்றும் அடக்கி வளர்ப்பதைப் பார்க்கலாம். எங்களுடன் கல்லூரியில் படித்த தோழி இப்படித்தான் தனக்கு எது சரியெனப்படுகிறதோ அதை தயங்காமல் செய்து அப்படியே நடந்து கொள்ளவும் செய்தார். எதற்கும் பயப்படமாட்டார்.. இது சரி... இது தவறென மூஞ்சிக்கு நேராக சொல்லிவிடுவார். அவரை அடங்கி ஒடுங்கி வாழ் என்று யாரும் சொல்லவில்லை.. சொல்லப் போனால் அவரின் அந்தக் குணம்தான் எல்லாருகும் அவரைப் பிடிக்கும்படி செய்தது.
சரி ஓவியாக்கு வருவோம்... அவரின் தனிப்பட்ட தன்மை எல்லாரையும் கவர்ந்ததில் ஆச்சர்யமில்ல... ஆனாலும் நான் கொடுத்ததைக் கொடு போய்விடுகிறேன் என்று சொல்லி வாங்கிக் கொண்டு பின்னரும் துரத்துவதும்... மிரட்டுவதும்... நான் இப்படித்தான் என்று சொல்லும் ஒரு பெண், தூக்கிப் போட்டுட்டுப் போயிடுவேன் என்று உதார் விட்டு விட்டு மீண்டும் மீண்டும் சீண்டி விளையாடுவதும்... அதற்காக எல்லை தாண்டுவதும் சரியானதல்ல... இப்படியான மனநிலை கொண்ட ஆணோ அல்லது பெண்ணோ தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டியதில்லை... பிடித்தவர்கள் எது செய்தாலும் சரி என்ற மனநிலை நம்மில் மாற வேண்டும். நடவடிக்கை மாற்றம் என்பது சரியா.. தவறா... என்பதை புரிந்து தூக்குவதும் தூர எறிவதும் இருக்க வேண்டும்.
மருத்துவ முத்தம் கொடுத்த... கொடுக்கும் ஆரவ்கள்... ஆபத்தானவர்கள் அல்ல என்றாலும் தங்களுக்கு தேவை என்றால் ஒட்டிக் கொள்ளவும், தேவையில்லை என்றால் வெட்டிக் கொள்ளவும் அவர்களால் முடியும். ஒருவரின் மனதுக்குள் நுழைந்து ஒரு பிம்பத்தை உருவாக்கிவிட்டு உடனே வெளிவர இவர்கள் தயங்குவதில்லை. அப்படியான அதிரடி மாற்றத்தைப் பாதிக்கப்பட்ட நபரால் ஏற்றுக்கொள்ள முடியுமா என்பதைப் பற்றி சிந்திக்கத் தெரியாதவர்கள் அல்லர் இவர்கள்... சிந்திக்க நினைக்காதவர்களே இவர்கள். உன்னைப் பழி வாங்குகிறேன் பார் என நேற்றைய எதிரியை இன்று தூக்கி வைத்து கொண்டாடும் மனநிலை இவர்களுக்கு இன்பம் அளிக்கலாம் ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு..? இந்தச் செயல் அவர்களின் வெந்த புண்ணில் வேலைத்தான் பாய்ச்சும் என்பதை அறியாதவர்கள் அல்லர்... அறிந்தே அதைச் செய்பவர்கள், என்ன இருந்தாலும் ஓவியாக்களுக்கும் இதில் பங்கு இருக்கும்போது ஆரவ்களை மட்டுமே திட்டுவது என்பது தவறு. ஆரவ்களின் ஆசைக்கு எங்கோ ஓரிடத்தில் ஓவியாக்கள் இடமளித்து விடுவது விபரீதங்களை விலைக்கு வாங்கும் நிலைக்கு கொண்டு செல்கிறது. ஆரவ்களில் செயல்களுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்றில்லை என்றாலும் மன்னிப்புக் கேட்கும் மனிதர்களாக மாறும் ஆரவ்களை கேவலமாகப் பார்க்க வேண்டியதில்லை என்பதே என் எண்ணம். ஆனாலும் ஒரு முத்தம் கொடுத்துட்டு அதை மருத்துவ முத்தம் எனச் சொல்லும் மகத்தான இந்த மனிதர்கள் கொஞ்சம் கவனமுடன் அணுக வேண்டியவர்களே என்பதில் சந்தேகம் இல்லை.
நம்மில் பெரும்பாலானோர் ஜூலிகளாய்த்தான் இருக்கிறோம் என்றால் அதை கண்டிப்பாக ஒத்துக்கொள்ளமாட்டோம். ஆனால்அதுதான் உண்மை... அரிச்சந்திரனாய் உண்மை மட்டுமே பேசுவது என்பது இயலாத காரியம்... ஆனால் பொய் மட்டுமே வாழ்க்கையல்ல என்பதை உணர்ந்து வாழ எல்லாராலும் முடியும். ஒரு சிறு பொய்யை... அட இது சும்மா எனக் கடந்து போகத் தெரிந்தால் நாம் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொண்டுவிட்டோம் என்பதை உணரலாம். அதை விடுத்து அந்தப் பொய்க்கு மசாலா தூவி புதிதாக அடுத்தவருக்குக் கொடுக்கும் போதுதான் நாம் பொய்யிலே வாழத் தொடங்குகிறோம். இப்படித்தான் ஜூலிகள்... தனக்கான இலக்கை நோக்கிப் பயணிக்க உண்மையைவிட பொய்யே சிறந்த ஆயுதம் என்பதை மனதுக்குள் ஆணி அடித்து மாட்டி வைத்துக் கொண்டு அதற்கான வாழ்வை வாழத் துணிபவர்கள்... இதனால் அடுத்தவர் செய்ய நினைப்பதை தன்மேல் சுமத்தி, தன்னைச் செய்யத் தூண்டுவதை அறியாமல் பலி ஆகும் ஆடுகள்... புறம் பேசும் மனிதர்களிடையே பொய் பேசி இலக்கை அடைந்து விடலாம் என்ற நப்பாசையில் நாளுக்கு நாள் பொய்யில் நெய் ஊற்றி பிரகாசிக்க வைப்பவர்கள். அதிலிருந்து வெளிவந்தால் நல்லாயிருக்கும் என்றாலும் அந்த நடிப்பில் இருந்து வெளிவரத் தயங்குபவர்கள்... இப்படியே இருப்போமே என போலியாக நடிக்கத் தெரிந்தவர்கள்... இவர்கள் ஒதுக்கப்பட வேண்டியவர்கள் அல்லர்... நான் உத்தமன் எனக்கு பொய் பிடிக்காது என்று சொல்லும் நூறு சதவிகித சுத்தமானவர்களுக்கு ஜூலிகள் தள்ளி வைக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்கும் இவர்கள் கவனிக்கப்பட வேண்டியவர்களே... அரவணைப்பே இவர்களை திருத்தும் மருந்து.
புறம் பேசாதார் யாருண்டு...? நானும்... நீங்களும்... அவர்களும்... இவர்களும்... எங்கோ ஒரு இடத்தில், ஏதோ ஒரு விஷயத்தில் புறம் பேசத்தானே செய்கிறோம். அதைத்தான் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் கேமராவை மறந்து செய்து கொண்டிருக்கிறார்கள். இதில் காயத்ரிகளும் சக்திகளும் மட்டுமின்றி சிநேகன்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். கட்டிப்புடி வைத்தியம் நோயாளிக்கு நல்லதென கமல் சொன்னதை தவறாகப் புரிந்து கொண்டவர்கள் சிநேகன்கள்... ஆறுதல் என்ற போர்வையில் கட்டிப்பிடிப்பது திரைக்கு அழகு... ஆனால் பொதுவெளிக்கு அழகல்லவே... ஆறுதல் சொல்ல ஆயிரம் வழிகள் இருக்க இது மட்டுமே உடனடி நிவாரணம் என நினைக்கும் மனிதர்கள் இவர்கள்... இவர்களின் கட்டிப்பிடி வைத்தியம் எதிர்பாலரிடம் மட்டுமே... இதைத் தவிர்த்துப் பார்க்கும் போது இவர்கள் மனிதாபிமானம் நிறைந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள்... எதுக்கெடுத்தாலும் பொசுக்கு பொசுக்குன்னு அழுகுறான் பாருன்னு ஊரில் சொல்வாங்க... இன்னொன்னும் சொல்லுவாங்க... ஆம்பளை அழக்கூடாதுன்னு.... ஆனாலும் சிநேகன்களின் மனசு இளகிய மனசு என்பதை பொசுக்கென்று பொங்கும் கண்ணீர் சொல்லத்தான் செய்கிறது ஆம்பளை அழலாம் என... கட்டிப்புடி வைத்தியம் தவறு என்பதை... அதுவும் எதற்கெடுத்தாலும் ஏய் அழாதே எனச் சொல்லி கட்டிப்பிடிப்பது என்பது தவறுதான் அதைச் செய்யக் கூடாதுதான்.
எது எப்படியோ பிக்பாஸ் நம்மை நாம் எடை போட்டுப் பார்க்க வைக்கிறது... இந்த நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்கினாலும் அங்கிருக்கும் மனிதர்கள் ஸ்கிரிப்படியோ அல்லது சுயமாகவோ நடித்தாலும் என் பார்வை இப்படியாகத்தான் இருக்கும். அந்த வீட்டுக்குள் நடமாடும் மனிதர்களை வைத்து நம்மை சுயபரிசோதனை செய்து கொள்ள முடியும் என்பதே என் எண்ணம். கருத்துக்கள் எப்படி வந்தாலும் இது பற்றி இன்னும் பேசுவேன்.
தூக்கிக் கொண்டாடப்பட்ட ஓவியாவும் வில்லியாக்கப்பட்ட ஜூலியும் இல்லாமல் பிக்பாஸ் போரடிப்பதாகச் சொல்கிறார்கள். காய் நகர்த்தும் காயத்ரியும் போய்விட்டால்... சீந்துவாரின்றிப் போகுமோ...?
-'பரிவை' சே.குமார்.
8 எண்ணங்கள்:
உண்மை வெகு விரைவில்...
அவர்களும் கல்லாக் காட்டுகிறார்கள். மக்களுக்கும் பொழுது போகிறது!
ஓவியாவும் ஜூலியும் இல்லாமல் கொஞ்சம் டல் தான் என்று என் உறவினர்கள் சிலர் சொல்லுவதைக் கேட்டேன். ஸ்ரீராமின் கருத்தையும் வழி மொழிகிறேன்...
கீதா
அருமை
எது எப்படியோ ஓவியா மேலும் பிரபலமானது உண்மை.
நம்மாழ்வாருக்கு கிடைத்ததைவிட இந்த வி........ க்கு கிடைக்கிறது
வாழ்க தமிழ் தேசம்.
வணக்கம் குமார்!
பிக்க் பாஸ் பார்ப்பதில்லை என்பதால் வேறெதும் இது பற்றி சொல்ல இயலவில்லை.பாகுபலி பார்க்கவில்லை, பிக்க் பாஸ் பார்க்க தோனவில்லை. வலைதளங்களில் முந்திபோல் நேரம் செலவிட முடியவில்லை. ஆனால் வாழ்க்கை வேகமாகவே ஓடுகிறது. நேரம் பற்றாமல்ப் போகிறதேயன்றி,, நேரத்தைக் கொல்லணும் என்கிற நிலையை அடையவில்லை என்கிற சந்தோஷம்தான் எனக்கு.
தினந்தோரும் நம்மைச் சுற்றி ஆயிரம் நாடகங்கள் நடக்கத்தான் செய்கிறது.. அதில் ஏகப்பட்ட கேரக்டர்கள் நடிகர்கள் நடிகைகள் இருக்கத்தான் செய்றாங்க. டி வி முன்னால உக்காந்து பிக்க் பாஸ் பார்த்துத்தான் இவர்களை தெரிந்து கொள்ளணுமா என்ன? என்பது என்னுடைய இன்றைய "சப்பைக் கட்டு"! :)
In any case, we always have mutual respect for each other though we have our opinion differences in several issues. Let us move on!
எந்த சமூக தொடர்பும் இல்லாத போது மனித மனம் இயங்குவதைத் தெரிந்து கொள்ள உதவுகிறது
இது ஒரு எதிர்மறை விளைவை
ஏற்படுத்துகிற நிகழ்ச்சி என்றே
சொல்லலாம்,பரவலாக எல்லோராலும்
தூற்றப்படுகிற ஒரு நிகழ்ச்சி
இவ்வளவு பரவலாகவும் பரபரப்பாகவும்
பேசப்படுகிறதே,அதுதான் அந்த நிகழ்ச்சியின் வெற்றி.
நூறு நாட்கள்வரை அவர்களின் சிந்தனை ஓட்டமும்,
விரிவும் வெளி உலக நடப்புகளைப்பற்றிய
அவர்களின் அவதானிப்பும் என்னவாக இருக்கும் ,,,,?
கருத்துரையிடுக