மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 4 மார்ச், 2017

மனசு பேசுகிறது : சாண்டில்யனின் சேரன் செல்வி

ன்னி மாடம் குறித்தான பகிர்வை 'சாண்டில்யனின் நாவல்களில் இரண்டு நாயகிகள்...அவர்களைப் பற்றிய வர்ணனைகள் சற்று கூடுதலாக இருக்கும்' என்று ஆரம்பித்திருந்ததைப் பற்றி மதிப்புக்குரிய இராய. செல்லப்பா ஐயா அவர்கள் தனது கருத்தில் 'சாண்டில்யனை சாண்டில்யனாக்கியதே இந்த வர்ணனைகள்தானே' என்று சொல்லியிருந்தார். ஐயா சொல்லியது உண்மையே... கதையின் பயணத்தில் கிடைக்கும் இடத்தில் எல்லாம் நாயகிகளை வர்ணிக்கத் தவறுவதில்லை அவர். கதை முழுவதும் ஆங்காங்கே நாயகிகளை வர்ணித்தாலும் ஒரு இடத்தில் சொன்ன அழகின் வர்ணிப்புக்கள் அடுத்த இடத்தில் இருக்காது என்பதே அவரின் மிகத் தெளிவான எழுத்தின் வெற்றி என்பதோடு இன்றும் சாண்டில்யனை வாசகர்கள் மத்தியில் நிலை நிறுத்தியும் வைத்திருக்கிறது. சேரன் செல்வியில் இளமதியை கடற்கரையில் ஆரம்பித்து இறுதி வரை கிடைக்கும் இடத்தில் எல்லாம் அவரின் பார்வையிலும் நாயகனின் பார்வையிலுமாக வர்ணித்திருப்பார். 

Image result for சேரன் செல்வி

சேரன் செல்வி...

சோழ, பாண்டியர்களின் கதைகளை அதிகம் எழுதியிருக்கும் சாண்டில்யன், சேரர்களின் வரலாற்றை முழு அடிப்படையாகக் கொண்டு எழுதிய முதல் நாவல் இது என்று தனது முன்னுரையில் தெரிவித்துள்ளார். நாமும் சேர,சோழ, பாண்டியர்கள் என்று சொன்னாலும் சோழனுக்கும் பாண்டியனுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை சேரர்களுக்கு கொடுப்பதில்லை. இந்தப் புதினம் முழுக்க முழுக்க சேர மன்னன் ரவிவர்மன் குலசேகரனின் தீரச் செயலைப் பேசும் கதை. சேர, சோழர்கள் தமிழைக் காக்க வேண்டும், தமிழர்களைக் காக்க வேண்டும் என்று நினைத்தார்கள் என்று சொல்லும் வரலாறுகள் 'சங்கம் வைத்து தமிழ்' வளர்த்த பாண்டியர்கள் மட்டுமே சிங்களவனை தமிழகத்தில் ஆட்சி புரிய வைத்ததார்கள் என்றும் மேலும் வடக்கில் இருந்து வந்த முகமதியருக்கும் பாண்டியர்களே சிவப்புக் கம்பளம் விரித்தார்கள் என்றும் சொல்கின்றன். இது என்ன விந்தை என்று தெரியவில்லை... தெரிந்த வரலாற்று ஆசிரியர்கள் சொல்லுங்களேன்.

சரி விஷயத்துக்கு வருவோம்...

பாண்டியர்களின் தயாதிச் சண்டையில்... இதுதான் மற்றவர்கள் உள்புக மிகப்பெரிய காரணமாய் இருந்திருக்கிறது. இன்னைக்கு வரைக்கும் நாம பங்காளிச் சண்டைதானே போடுறோம்... அதுனாலதான் மீத்தேனும், ஹைட்ரோ கார்பனும்... இல்லை தாமிரபரணியில் நீரை உறிஞ்சினாலும் அரசியல்வாதிகள் ஆட்சி அதிகாரத்துக்கு தகுந்தவாறு பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இராஜராஜன் பரம்பரை, வேலு நாச்சியா பரம்பரை, மருது சகோதர்கள் பரம்பரை, கட்டப்பொம்மன் பரம்பரையின்னு நாம ஆளாளுக்கு சாதிக்கு சலங்கை கட்டி ஆடவிட்டு அதன் விளைவுகளை ஆழ்ந்து ரசித்து வருகிறோம். இதைத்தான் அன்று அவர்களும் செய்திருக்கிறார்கள். சேர,சோழ, பாண்டியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டிருந்தால்... அதான் செயல்படலையே இனி ஆண்டு முடிச்சிட்டுப் போனவங்களைப் பற்றி பேசி என்னாகப் போகுது. நம்ம இராஜராஜ சோழன் (இப்படிச் சொல்லக்கூட இப்ப யோசிக்கணும்... ஏன்னா உலகையே ஆண்ட தமிழன் என்ற நிலை போய் அவரும் சாதீய அமைப்புக்குள் போயாச்சு)  அவரின் துணைவியார் மகாராணி லோகமாதேவியின் சிலைகள் தஞ்சைக் கோவிலில் இருந்த வரலாறு இருப்பதாக படித்தேன். ஆனால் அவை தஞ்சையில் களவாடப்பட்டு குஜராத்தில் ஒரு மியூசியத்தில் இருக்கின்றனவாம். அதனை மீட்டு வர முயற்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன... ஆனாலும் இன்னும் காலம் கனியவில்லை... 

இப்படித்தான் எதாவது எழுதப் போயி எங்காவது போயிருது மனசு. சரி சேரன் செல்வி இளமதி பின்னால போகலாம் வாங்க.

பாண்டியரின் தயாதிச் சண்டையை சாதகமாக்கி தமிழகத்தை நாசம் செய்து கொள்ளையடித்துச் சென்ற மாலிக்கபூருக்குப் பின் மீண்டும் அத்தகையதொரு நிலை ஏற்பட இருந்த சமயத்தில் வீரபாண்டியனையும், சுந்தரபாண்டியனையும் வென்று, காஞ்சி வரை சென்று தமிழகத்தையும் ஹிந்து தர்மத்தையும் பாதுகாத்து,  தென்னிந்தியாவின் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொண்டான் சேரன் ரவிவர்மன் என்பது வரலாறு. இந்த வரலாற்றுச் சான்றுகள் காஞ்சி அருளாளப் பெருமாள் கோவிலிலும் பூந்தமல்லி பெருமாள் கோவிலிலும் இருக்கும் சாசனங்களில் இருப்பதாகவும் மேலும் ரவிவர்மன், சிறந்த வீரன் மட்டுமல்ல பெரிய கவி என்பதற்கும் 'பிரத்யும்னாப்யுதயம்' என்ற நாடகத்தை எழுதியவன் என்பதற்கும் ரவிவர்மனின் அவையில் இருந்த கவிபூஷணன், சமுத்திரகுப்தன் என்ற கவிகளைப் பற்றியும் சான்றுகள் இருப்பதாக சாண்டில்யன் அவர்கள் தனது முன்னுரையில் சொல்லியிருக்கிறார். இவற்றை எல்லாம் வைத்து மாலிக்கபூர், அமீர் குஸ்ரூ ஆகியோர் தமிழகத்துக்கும் தமிழர்களுக்கும் விளைவித்த கஷ்டங்களையும் இணைத்து இந்த 'சேரன் செல்வி'யைப் புணைந்திருக்கிறார்.

ரவிவர்மனின் மகள் இளமதி கடற்கரையில் நடந்து செல்லும் போது அவளின் அழகை வர்ணிப்பதில் ஆரம்பிக்கிறது கதை. இதுவரை நான் வாசித்த கதைகளில் சாண்டில்யனின் பெரும்பாலான கதைகள் கடற்கரையில்தான் ஆரம்பிக்கின்றன. அப்படி நடந்து செல்லும் போது அடிகளாரால் அனுப்பப்பட்ட பாண்டிய வீரன் இளவழுதியைச் சந்திக்கிறாள். வழக்கம்போல் இருவருக்கும் மோதல்... அவன் இளமதியைக் காண வந்திருப்பதாகச் சொல்ல, தான் இன்னாரெனச் சொல்லாமல் அவனை அரண்மனைக்கு அழைத்துச் சென்று திட்டிவாசல் வழியே உள்ளே போ என்று சொல்லிச் செல்கிறாள். அதன் வழி செல்ல, வீரர்களால் மடக்கப்பட, அவர்களுடன் லேசான சண்டையிட்டு உள்புகுந்து நந்தவனத்துக்குள் புகுந்து கொள்கிறான். பின்னர் ரவிவர்மன் அவனைப் பார்த்து அழைத்து வந்து இளமதியிடமே ஒப்படைக்க, அப்போதுதான் அவள் இளவரசி என்பதை அறிகிறான். வரலாற்று நாயகர்களுக்கே உரிய கண்டதும் காதல் அவனுக்கு வர, இரவில் அவள் வீணை இசைத்துப் பாடக்கேட்டு நந்தவனத்துக்குள் போகிறான். அங்கு மாலிக்கபூரின் ஒற்றன் அம்ஜத்கானை, ஸலீம் என்ற பெயரில் சந்திக்கிறான். மன்னன் ரவிவர்மனை ஏமாற்றி, நாடகமாடி அவரின் நண்பனாய் அரண்மனைக்குள்ளும் வந்து செல்லும் ஸலீம் என்னும் அம்ஜத்கான், தன்னைப் பற்றி மன்னருக்கு அக்குவேர் ஆணிவேராகத் தெரியும் என்பதை அறியவில்லை. அவனின் திட்டங்களை இளவழுதியிடம் சொல்லி அவனின் அழைப்பை ஏற்று அவன் சொல்கிறபடி நடப்பதாய் நாடகமாடச் சொல்கிறார்.

பின்னர் ஸலீமுடன் நட்பாகி, இளமதியுடன் காதலில் கசிந்துருகி, யாருக்கும் தெரியாமல் ரவிவர்மன் ஆற்றுக்கு உள்புறம் இருக்கும் காட்டில் பயிற்சி அளிக்கும் காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை (இளவழுதி யானைப் படையை அதிகம் விரும்பாததால் அதை நடத்தும் பொறுப்பு இளமதி மற்றும் அடிகள் வசம் போரின் போது அளிக்கப்படுகிறது) எல்லாவற்றிற்கும் படைத்தலைவன் ஆகிறான். அவனின் உபதளபதி ஆகிறான் சேரன் தளபதி பலபத்ரன்... காட்டுக்குள் படை வைத்திருப்பதை அறிந்த அம்ஜத்கான் (ஸலீம்) தந்திரமாக இளவழுதியை சிறைப் பிடித்து, இளமதியை மிரட்டி, படைப் பலத்தை காணச் செல்கிறான். இப்படி நடக்கும் என்பதை முன்பே ஊகித்து அவனுக்கு போக்குக் காட்ட திட்டமிடுவதே இளவழுதிதான் என்பதை அம்ஜத்கான் அப்போதும் அறியவில்லை. சிறையிலிருந்து மன்னனால் மீட்கப்படும் இளவழுதி, தரைப்படை, காலாற்படையில் ஒரு பகுதியை மதுரை நோக்கி கிளப்பிச் செல்ல, அடுத்த இரண்டு நாளில் அடிகளும் இளமதியும் யானைப்படைகளுடன் புறப்பட, அதன் பின்னர் ரவிவர்மன் புறப்படுகிறான். மூவரும் மதுரையை நோக்கி வேறு வேறு பாதையில்.

பலபத்ரனிடம் நாளை மாலைக்குள் நான் திரும்பவில்லை என்றால் நீ படையை நடத்திச் செல் மதுரையில் சந்திப்போம் என இளமதி வளர்த்த குதிரையும் தற்போது இளவழுதியின் தோழனாய் அவனைச் சுமக்கும் ராஜாவில் கிளம்பி, ஸலீமைத் தேடிச் செல்லும் இடத்தில் இளமதியை எதிர்பாராமல் சந்திக்க அங்கு வந்து அவர்களைச் சிறை பிடித்துச் செல்கிறான் மாலிக்கபூருக்கு அடுத்தபடியாக நவாப் அலாவுதீன் கில்ஜிக்கு நெருக்கமானவனும் நுட்பமான அறிவு படைத்தவனுமான குஸ்ரூகான், அவன் படைத்தளத்தில் இவர்களை சிறை வைக்கும் இடத்தில் அஜ்மல்கானும் சிறை வைக்கப்பட்டிருக்கிறான். ஒரு நாளுக்குப் பிறகு இளமதியை மட்டும் சிறையிலிருந்து அனுப்பி அவளைப் பின் தொடர்ந்து விபரம் அறிய அவளுடன் இரு வீரர்களை அனுப்புவதுடன் அஜ்மல்கானையும் அனுப்புகிறான் குஸ்ரூ. இளமதி தந்தை இருக்குமிடம் என்று தெரியாமல் மதுரைக்கு அருகே இருக்கும் பழைய பாண்டியன் கோட்டைக்குச் செல்ல, அங்கு அவளுக்கு முன்னே வந்த அஜ்மல்கான், ரவிவர்மனிடம் மாட்டிச் சித்ரவதை அனுபவிக்கிறான்.

அதன் பின்னான பரபர நிகழ்வுகள், மதுரைப் போரில் வீர பாண்டியன் தோல்வியை ஒத்துக்கொள்ள, அவனிடம் சில உதவிகள் எதிர்ப்பார்ப்போடு மதுரைக்குள் நுழைய மாட்டேன்... உன் தோல்வியை மக்கள் மத்தியில் சொல்லி மார்தட்டிக் கொள்ள மாட்டேன் என்று சொல்கிறான் ரவிவர்மன். அதற்கு காரணமும் இருக்கிறது. அந்தக் காரணம் வீரபாண்டியனின் மனைவி சேரமன்னனின் மூத்த மகளான நிலமங்கை. அவள் முதலில் தன் தந்தை தனது கணவனை தோற்கடித்து மதுரையை கைப்பற்ற நினைக்கிறார் என்று நினைப்பதால் அவர் மீது கோபமாய் இருக்க, ரவிவர்மனோ மதுரையில் வெற்றி விழா எதுவும் கொண்டாடக்கூடாது எனவும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடப் போறேன் என்று சொல்லும் அடிகளாரிடம் நாம் மதுரைக்குள் வருவதில்லை என்று வீரபாண்டியனிடம் சொல்லியிருக்கிறோம். காஞ்சியில் வெற்றி பெற்றுத் திரும்பியதும் மீனாட்சியைக் கும்பிடலாம் என்று சொல்லிவிட்டார் என்பதை அறிந்ததும் காஞ்சிக்குச் செல்லும் தந்தையை வழியனுப்ப கணவனுடன் வருகிறாள்.

வீரபாண்டியனின் அண்ணனான சுந்தரபாண்டியனை எதிர்க்க வீரதவளப் பட்டிணத்துக்கு இளமதியுடன் செல்லும் இளவழுதியிடம் சமாதானக்கொடி காட்டி, அவனை வரவழைத்து கத்தியால் குத்திவிடுகிறார்கள். இருப்பினும் இளமதி சுந்தரபாண்டியன் படைகளை சிதறடித்து வெற்றி வாகை சூடுகிறாள். உயிருக்கு போராட்டமான நிலையில் கவிபூஷணன்  அவர்களின் பாசறைக்கு வந்து அவன் உயிரைக் காப்பாற்றுகிறான். இளவழுதி தலைமை ஏற்ற படை என்னானது என்பது தெரியாமலேயே ரவிவர்மன் மற்ற படைகளுடன் குஸ்ரூகான், அஜ்மல்கானிடம் காஞ்சியில் மோத, ஒரு கட்டத்தில் அவர்களிடம் மாட்டிக் கொள்ளும் சூழல் வர, இளவழுதியின் படை சூறாவளியாய் புகுந்து துவம்சம் செய்து வெற்றி பெறுகிறது. பெரும் தோல்வியினால் போர் முடிந்த அடுத்த நாள் குஸ்ரூகான் தில்லிக்குத் திரும்ப, சிறைப்பட்ட அஜ்மல்கான் மன்னருக்கு வேகவதி நதிக்கரையில் நடந்த வீராபிஷேகத்தை முன்னிட்டு விடுவிக்கப்படுகிறான்.

பெருமாளுக்கு எழுதி வைக்கப்பட்ட இளமதியை பெருமாள்தான் சொந்தம் கொள்ள வேண்டும் என்று ஆரம்பம் முதலே சமுத்திரகுப்தன் சொல்லி வருகிறான். அவனுக்கு இளவழுதி - இளமதி காதலில் விருப்பம் இல்லை. போர் முடிந்து பேரரசனாக முடி சூட்டிய பின்னர் பெருமாள் கோவிலுக்குச் சென்று பெருமாளிடம் தன் மகளை ஒப்படைக்கிறார். அப்போது கவிபூஷணன், கற்பூர ஆரத்தி காட்டி இருவருக்கும் பொருத்தம் இருக்கிறதா என்று பார்க்கச் சொல்ல , பொருத்தம் இருப்பதால் இறைவனுக்கு சொந்தமான இளமதியை, அவனின் பிரசாதமாக இளவழுதிக்கு அளித்திருக்கிறான் என்றும் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு பெருமாள் பெயரை வைக்க வேண்டும் என்று சொல்ல, காஞ்சியை பாதுகாப்பை இளவழுதியிடம் கொடுத்து சேரநாடு திரும்புகிறான் ரவிவர்மன்.  பாதுகாப்பு ஏற்பாடுகளை முடித்து விட்டு இரண்டு நாளில் பாண்டிய நாட்டிற்குச் செல்கிறோம் என்று அடிகள் சொல்ல, அது சேர நாட்டுக்குள் அடக்கம் என்று சிரிக்கிறான் ரவிவர்மன். அப்போது அடிகளோ 'பாண்டியர் என்றும் அடங்காத சாதி' என்று சொல்ல, சாதியை விட்டுட்டு தமிழர் என்ற ஒரே சாதியை நினைக்கக் கற்றுக் கொள்ளுங்கள்' என்று சொல்லிச் செல்கிறான். நாம எங்கே தமிழர்ன்னு சொல்றோம்... இன்றும் சாதிக்குள்தான் சாய்ந்து கிடக்கிறோம்.

சேரன் செல்வி - மிக விறுவிறுப்பாய் நகரும் கதை... வாசிக்க ஆரம்பித்தால் முழுவதும் முடித்துவிட்டுத்தான் வைக்கத் தோன்றும்.

-'பரிவை' சே.குமார்.

11 எண்ணங்கள்:

Yarlpavanan சொன்னது…

நாம் சாதி சாதி என்று
நாம் தமிழர் என்றுரைக்க
மறந்து விடுகின்றோம்...
இதனால்
நம் அடையாளம் கறை படிகிறதே!

நூலறிமுகம் நன்று!

இராய செல்லப்பா சொன்னது…

சேரன் செல்வி என்ற இந்நாவலை எப்போது படித்தேன் என்பதே மறந்துவிட்டது. சென்னை திரும்பியதும் மீண்டும் படிக்கவேண்டும். அதற்கு உங்களுடைய அருமையான கதைச் சுருக்கம் நிச்சயம் பயன்படும்.நன்றி.

(இரண்டு இடங்களில் 'ததாதி சண்டை' என்று வருகிறது. 'தாயாதி' சண்டை என்று இருக்கவேண்டும். பங்காளிச் சண்டை என்று அர்த்தம்.அன்பு கூர்ந்து திருத்திவிடவும்.)

- இராய செல்லப்பா நியூஜெர்சி.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல விமர்சனம்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் கவிஞரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா...
தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

எழுத்துப்பிழையைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி ஐயா... இரு முறை சரிபார்த்தும் தயாதி ததாதி ஆகிவிட்டது. சரி செய்து விட்டேன் ஐயா....

தவறைச் சுட்டியமைக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமையான நூல் நண்பரே

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

அருமையான மதிப்பீடு. நன்றி.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமையான நூல் பற்றிய பகிர்வு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி குமார்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மீண்டும் வாசிக்க வேண்டும். ஆம்! சாண்டில்யனின் வர்ணனைகள் குறிப்பாக நாயகிகளைப் பற்றிய வர்ணனைகள் அற்புதமாக இருக்கும்! ரசித்து வாசித்ததுண்டு! இப்போது உங்கள் விமர்சனங்கள் மீண்டும் வாசிக்கத் தூண்டி அவற்றை நினைவுபடுத்திக் கொள்ளத்தூண்டுகிறது...மிக்க நன்றி பகிர்விற்கு

துபாய் ராஜா சொன்னது…

நாவலுக்கு ஏற்ற நல்ல விமர்சனம்.