மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 5 நவம்பர், 2016சொல்லச் சொல்ல இனிக்குதடா..!

Image result for முருகன்

முருகன்...

என்னமோ தெரியலைங்க... முருகன் மேல் அத்தனை பற்றுதல்...

சின்ன வயதில் இருந்தே அவன் மீது தீராத காதல்... அவன் அழகன் என்பதாலா...? அல்லது தமிழ்க்கடவுள் என்பதாலா..? அதுவும் இல்லை என்றால் அந்த சிரித்த முகத்திற்காகவா...? என்பதெல்லாம் தெரியவில்லை ஏனோ அவன் மீது தீராத காதல்... சஷ்டியை நோக்க சரவணபவனார் எங்க போட்டாலும் நம்ம வாயும் சேர்ந்து பாட ஆரம்பிச்சிரும்.

சாமி இல்லை என்று சொல்லும் நண்பர்களுடன் பழகியிருக்கிறேன்... அது அவர்கள் விருப்பம்... நம் விருப்பத்தை அவர்கள் மீது திணிக்கவோ அல்லது அவர்கள் விருப்பதை நம் மீது திணிக்கவோ நான் எப்போதும் விருப்பப்பட்டதுமில்லை... விரும்புவதுமில்லை... விருப்பமும் வெறுப்பும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்தது. சாமி கும்பிடுறவனைவிட சாமி கும்பிடாதவன் நல்லாத்தான் இருக்கிறான் என்று நண்பர்கள் சொல்வார்கள். இருக்கட்டும்... அது சந்தோஷம்தான்.... கல்லூரியில் படிக்கும் போது செல்லும் வழியில் இருக்கும் புவனேஸ்வரி அம்மன் கோவிலில் நாங்கள் சாமி கும்பிட எங்கள் நண்பன் சூசைமாணிக்கமும் திருநீறு இட்டுக் கொள்வான். நானும் முருகனும் வாரம் ஒருமுறை சர்ச்சில் மெழுகுவர்த்தி ஏற்றி வணங்கத் தவறுவதில்லை. மதம், ஜாதி எல்லாம் நம்மை சுற்றி இடப்பட்ட வட்டமே... நானெல்லாம் எப்போதும் அந்த வட்டத்துக்குள் நின்றதில்லை... மதத்தை மனசுக்குள் கொண்டு செல்லாததே நிறைய உறவுகளைப் பெறக் காரணமாக இருந்தது.

எனக்கு சின்ன வயதில் இருந்தே சாமி மீது அதிக பற்றுதல்... எங்க ஊர்த் தெய்வங்களான மாரியம்மன், கருப்பர், முனியய்யா, நாச்சியம்மன், ஐயனார், எங்கள் வீட்டுச் சாமியான உமையவள் போன்றவற்றின் மீது இருக்கும் பற்றுதலை விட முருகன் மீது கூடுதல் பற்றுதல்... இப்ப எங்க மாரியம்மன் கோவிலுக்குள் முருகனுக்கும் பிள்ளையாருக்கும் சந்நதி கொண்டு வந்தாச்சு. ஊருக்கு வருடாவருடம் கோவில் திருவிழாக்கு சென்று திருவிழா சமயத்தில் கோவில் வேலை செய்வதில் அவ்வளவு சந்தோஷம். எங்கள் ஊர் முனியய்யா எனது குடும்பத்தைக் காக்கும் தெய்வமாக நிற்பதாக கருப்பர் சாமி ஆடும் என் நண்பன் முதல் வீட்டிற்கு வரும் பெரியவர் வரை சொல்லியிருக்கிறார்கள். எனக்கும் முருகன் மீது இருக்கும் காதல் முனியய்யா மீதும் உண்டு.

முருகன் மீது கொண்ட காதலால் ஐயப்பன் மீது அவ்வளவு பற்றுதல் ஏற்படவில்லை... எல்லாரும் கார்த்திகை மாசத்தில் ஐயப்பன் பாடல் கேட்டால் நான் முருகன் பாடல் கேட்பேன். முருகன்... முருகன்..  என அவனை மனசுக்குள் நிறுத்தி வைத்ததல் ஐயப்பனை வெளியில் வைத்திருந்தேன் என்றாலும் முதல் முறை சபரிமலைக்குச் சென்று பதினெட்டுப்படி ஏறி ஐயனைத் தரிசித்து ஐந்து மலை அழகில் மயங்கி 'ஹரிவராசனம் விஸ்வமோகனம்' என்னும் யேசுதாஸின் குரலில் லயித்து மலை உச்சில் சாரல் பெய்து கொண்டிருக்க பஸ்மக் குளத்தில் நாலைந்து முறை நீராடி ஒரு நாள் தங்கி படிபூஜை பார்த்து... ஐயனை நினைத்த நேரத்தில் எல்லாம் சந்தித்து ஆனந்தமடைந்தது முதல் ஐயப்பன் பித்துப் பிடித்து நான்கு வருடங்கள் தொடர்ந்து மலைக்குச் சென்று வந்தது தனிக்கதை... இப்ப முருகனோடு பயணிப்போம்.

சின்ன வயதில் அப்பா உள்ளிட்ட உறவுகள் பழனிக்கு பாதயாத்திரை போவார்கள்... கிட்டத்தட்ட 20, 30 பேர் போவதால் மாரியம்மன் கோவில் அருகில் கொட்டகை போட்டு அதில் விரத காலத்தில் தங்குவார்கள். தினமும் பஜனை... சுண்டல், பொங்கல் விநியோகம் என அமர்க்களப்படும். தேவகோட்டையில் இருந்து பழனிக்கு ஏழு நாள் நடை... தைப்பூசத்துக்கு ஒரு வாரம் இருக்க நடக்க ஆரம்பிப்பார்கள்... அதிகாலையிலேயே 'அரோகரா...' போட்டுக் கிளம்பிடுவாங்க... அன்று பத்து மணிக்கு மேல் தேவகோட்டை நகரத்தார் காவடி பழனி நோக்கிப் புறப்படும்... பழனியில் நகரத்தார் காவடிக்கு மிகச் சிறப்பான மரியாதை கொடுக்கப்படும். முதல் நாள் நடை குன்றக்குடி வரை... ஊரில் இருந்து நிறையப் பேர் குன்றக்குடி வரை போய்த் திரும்புவார்கள். தேவகோட்டை முதல் குன்றக்குடி வரை ரொட்டி, மிட்டாய், புளியோதரை, பொங்கல், லட்டு என நிறைய விநியோகம் இருக்கும். மஞ்சள் பை கொண்டு போய் நிரப்பிக் கொண்டு வருவார்கள்.

கல்லூரியில் படிக்கும் போது எங்க சித்தப்பாவையும், இளையர் ஐயாவையும் நச்சரித்து நாங்க ஏழு பேர் பழனிக்கு நடைப்பயணம் கிளம்பியாச்சு... காலை 2 மணிக்கு மேல் எழுந்து நடக்க ஆரம்பித்தால் காலில் சூடு ஏறும் வரை... அதாவது 11 மணி வரை நடை பின்னர் சாப்பாடு... நிழலில் படுக்கை... பெரும்பாலும் எதாவது வீட்டு வேப்பமரம் இல்லையேல் கோவில்... மதியம் 3 மணிக்கு மேல் எழுந்து மெல்ல நடக்க ஆரம்பித்து 10 மணி வரை நடை... இப்படி நடந்து ஏழு நாள் நடையில் அடையும் பழனியை ஐந்தாம் நாள் காலை அடைந்து மடத்தில் இடம் பிடித்து சாமான்களை வைத்து விட்டு மீண்டும் சண்முகநதி நோக்கி நடை... அங்கு மொட்டை போடுபவர்கள் போட, சண்முகநதியில் ஆனந்தக் குளியல்... பின்னர் மலையேறி முருகன் தரிசனம்... இரவு தங்கத் தேர் பவனியை ரசித்து... கேரளக் காவடிகளின் ஆட்டத்தையும் ரசித்து இரவோடு இரவாக பேருந்தில் ஏறி குன்றக்குடியில் இறங்கி அதிகாலை குன்றக்குடி சண்முகநாதனைத் தரிசித்து வீடு வந்து சேர்வோம். இது ஆறு வருடம் தொடர்ந்தது. எங்க அண்ணனும் பெரியப்பா மகனும் மச்சானும் நடைப்பயணமாய் போய் மூன்றாம் நாள் இரவு பழனியை அடைந்து சாமி கும்பிட்டு நான்காம் நாள் ஊருக்குத் திரும்பிட்டாங்க... மனுசனுங்க எப்படித்தான் நடந்தாங்களோ... இது இப்பவும் எங்க ஊர்ல ரெக்கார்டாக்கும். ஆனா மச்சான் அடுத்த வருடம் இவனுக கூட நான் போகலப்பா... படுத்தவுடனே எழுப்பிடுறானுங்க... நடக்க விட்டே கொன்னுட்டானுங்க என்று சொல்லி விட மூவர் கூட்டணி கரைந்தது. மச்சானும் மறைந்து விட்டார்.

ஆறு வருடங்கள் முருகனை நடை பயணமாகத் தரிசிச்சிட்டு வந்தவன் செட்டியார் குழுவில் இணைந்து ஒரு முறை திருப்பரங்குன்றம் நடைப் பயணமும் சென்று வந்தேன். அப்போதே முருகன் போட்டோ என்றால் உடனே கிழித்து பத்திரப்படுத்தி வைப்பேன்... இப்போதும் அது தொடருது... என்னோட செல்போனில் முருகன்தான்  அதிகம் சிரிச்சிக்கிட்டு இருக்கான்.

'அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்' என்ற பாட்டைக் கேட்டிருப்பீங்கதானே... நமக்கு அவன் மீது கொள்ளைப் பிரியம்... காலை முதல் இரவு வரை எதற்கெடுத்தாலும் 'ஸ்... அப்பா... முருகா... பழனி ஆண்டவா...' என்றுதான் வாயில் வரும்.  இதுக்கு அடுத்து வரும் வார்த்தைக்குத்தான் எல்லாரிடமும் திட்டு வாங்குவேன்... அது என்னன்னா 'ஸ்... அப்ப்ப்ப்பா... முருகா... பழனி ஆண்டவா... என்னைய மட்டும் காப்பாத்து' அப்படின்னு சொன்னதும் சுயநலவாதிம்பாங்க... இதுல என்ன சுயநலம் இருக்கு... பொதுநலமே ஊறிக்கிடக்கு.. முருகன் எல்லாரையும் ஒரே நேரத்துல காப்பாத்த முடியுமா என்ன... என்னைக் காப்பாத்தினா நான் நாலு பேருக்கு உதவுவேன்... அந்த நாலு பேரு நாப்பது பேருக்கு உதவுவாங்க... அந்த நாப்பது நானூறாகும்... நானூறு நாலாயிரமாகும்... இப்படியே போனா எல்லாரும் சுபிட்ஷமா இருப்போமா இல்லையா..? அப்ப நான் கேக்குறதுல என்ன தப்புங்கிறேன்... இது பத்தாப்பு படிக்கும் போதுல இருந்தே வருது... இந்தா எழுதும் போதே ரெண்டு தடவை வந்திருச்சு.... தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்ன்னு சொல்லியிருக்காங்கதானே... ஸ்... அப்பா ,முருகா... என்னை மட்டும் காப்பாத்து.

இப்ப கந்தர் சஷ்டி நடக்குது... தேவகோட்டை சிவன் கோவிலில் நகரத்தார்களால் கந்தர் சஷ்டி மிகச் சிறப்பாக நடைபெறும்... பெரிய பெரிய ஆட்களை எல்லாம் அழைத்து வந்து தினமும் நிகழ்ச்சி நடத்துவார்கள். இப்ப தினமும் இரவு எங்க கல்லூரிப் பேராசிரியர் பகிரும் படங்களையும் வீடியோக்களையும் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொள்கிறேன்.  சென்ற வருடம் திருச்செந்தூர் முருகனையும் தரிசிச்சாச்சு... பழமுதிர்ச் சோலை முருகனை வருடாவருடம் சந்திச்சிருவேன்... காரணம்... குலதெய்வம் அழகுமலையானைக் காணப் போகும்போது சுப்ரமணியனையும் பார்க்காமல் வரமுடியுமா என்ன...

இன்றைக்கு சூரசம்ஹாரம்... காலண்டரில் பார்த்ததும் ஏனோ முருகன் ஞாபகம் வந்தாச்சு... எப்பவுமே என்னை ஆட்கொள்பவன் அழகன் முருகன்தான்... நட்பில் நிறைய முருகன் பேர் இருப்பவர்கள் இருப்பார்கள்.

என்னை எழுத்தாளனாக்கிப் பார்த்து மகனாகப் பாவிக்கும் என் பேராசானின் பெயர் பழனி.

கல்லூரி முதல் இன்று வரை குடும்ப உறவாய் கலந்திருக்கும் என் நண்பனின் பெயர் முருகன்.

சரிங்க... முருகனைப் பற்றிப் பேசினால் நிறைய பேசலாம்....

'ஸ்... அப்பா... முருகா... பழனி ஆண்டவா... என்னை... சரி இன்னைக்கு ஒரு நாளைக்காச்சும் எல்லோரையும் காப்பாற்று...'

'அரோகரா...'


-'பரிவை' சே.குமார்.

6 கருத்துகள்:

 1. முருகன் - பலருக்கும் பிடித்தமானவன்......

  இனிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 2. தமிழ் கடவுள்
  தமிழர் விரும்பும் கடவுள்
  முருகன் தான்!

  உங்கள் பதிவுத் தலைப்பையும் இணைப்பையும் இக்குழுவில் இணையுங்க...
  https://plus.google.com/u/0/communities/110989462720435185590

  பதிலளிநீக்கு
 3. இந்த மாதிரி நினைவுகள் குறித்து பெரிய பதிவே போடலாம்குமார். எங்க ஊரில் எங்க வீட்டுக்கு 200 மீற்றரில் தான் பிள்ளையார் கோயில். அந்தபக்கம் அரை கி.மீற்றரில் முருகன் கோயி. பக்கத்தில் அம்மன் கோயில்.

  இந்த பாட்டு விட்யத்தில் முருகனுக்கும் பிள்ளையாருக்கும் எப்போதும் போட்டிதான். அவர் முடிய இவர், இவர் முடிய அவரென ஸ்பீக்கரில் பாட்டு காலையும் மாலையும் தொடர்ந்து கொண்டிருக்கும்,

  நிர்வாகங்கள் வேறு என்பதனால் அவரவர் இஷ்டம் என ஒரே நேரத்தில் இரண்டு ஸ்பீக்கரும் சத்தம் போடுவதும் உண்டு.

  காலையில் கோயில் ஸ்பீக்கர் சுப்ரபாதத்தில் விழிந்தெழும்புவோம், அப்புறம் குன்றத்திலே குமரனுக்கு கல்யாணம்,அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்,கல்லானாலும் திருச்செந்தூரில் கல்லாவேன், கந்தனுக்கு வேல் வேல,திருச்செந்தூரின் கடலோடத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்,கள்ளும் முள்ளும் சபரி மலைக்கு, மார்கழி மாதத்தில் திருவெம்பாவை பாடல்கள், சிவராத்திரி காலத்தில், நவராத்திரி காலத்தில் என அதற்குரிய பாடல்கள் அத்தனையும் எனக்கு மனப்பாடமாகவே இன்னும் உறங்கிக்கொண்டிருக்கின்றது.

  இத்தனைக்கும் எங்க அம்மா இந்து,அப்பா கிறிஸ்தவம் என்பதனால் எங்களை அம்மா சர்ச் தான் அனுப்பினார்,பள்ளியில் படித்ததும் கிறிஸ்தவம் தான்,கோயில்களுக்கு திருவிழாக்காலங்களிலும் பொங்கல் சாப்பிடவும், சித்திரைகஞ்சி அன்று கஞ்சி வாங்கவும் செல்வோம்.அதனால் தானோ என்னமோ எனக்குள் மதம் குறித்த பேதமே தோன்றுவதில்லை.

  சீர்காழி கோவிந்த ராஜன் குரலில் பக்தியும் பரவசமாய் வழிய பாடும் பாடல்களுக்கு அடிமை நான்,அதே போல் கே.பி சுந்தராம்பாளில் முருகன் பாடல்களும் பிடிக்கும்,

  பதிலளிநீக்கு
 4. கல்லென கொண்டால் கல், கடவுளென கொண்டால் கடவுள் என்பார்கள், எல்லாமே நாம் நம்பிக்கை படியே என்பதால் உங்கள் அனுபவத்தினை என்னால் உணர்ந்து படிக்க முடிகின்றது. கிரேட்

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...