மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 25 நவம்பர், 2016

மனசு பேசுகிறது : யவனராணி

வாசிப்பின் தொடர்ச்சியாய் யவனராணி வாசித்து முடித்து சில நாட்கள் ஆகிறது. அதற்குப் பிறகு எடுத்த இராஜதிலகம்  அண்ணன் ஒருவரின் கட்டுரைகளை வாசித்ததால் ஆரம்பிக்காமல் இருக்கிறது. இதேபோல் கனவுபிரியன் அண்ணாச்சி வாசிக்க கொடுத்த இரண்டு புத்தகங்களும் பக்கங்கள் திருப்பப்படாமல் அப்படியே இருக்கின்றன. முன்னெல்லாம் தினம் ஒரு பதிவு போட்டுக் கொண்டிருந்தேன். கதைகளை பதியாமல் இருப்பதால் இடைவெளி வந்தது... எங்கள் அலுவலகத்துக்குச் செல்ல ஆரம்பித்த பின் இடைவெளி அதிகமானது. உடல் நலமின்மையால் நீண்ட இடைவெளி விட்டது போலாகிவிட்டது. அதான் இன்று நம் இருப்பைக் காட்டும் விதமாக எழுதலாம் என உட்கார்ந்தாச்சு.

Image result for யவனராணி
வனராணி... 

சாண்டில்யன் அவர்களின் வரலாற்றுப் புதினத்துக்கே உரிய இலக்கணத்தை மீறாமல் இரண்டுக்கும் மேற்பட்ட பெண்கள் விரும்பும் நாயகனைச் சுற்றி நகரும் கதைக்களம்தான். திருமாவளவன்... இந்தப் பேரைக் கேட்டதும் இவரு எதுக்கு இங்க வர்றாருன்னு நினைக்காதீங்க... இது வரலாற்றில் மிகப்பெரிய அரசனாக இருந்து நமக்கு காவிரியில் கல்லணை கட்டிக் கொடுத்த சோழப்பேரரசன் கரிகாலனுங்க... கரிகாலனின் தாய் தந்தையை தூங்கும் போது மாளிகையை எரித்துக் கொன்று விட்டு ஆட்சியைப் பிடிக்கிறான் இருங்கோவேள் என்பவன். இளவரசனான திருமாவளவன் காட்டுக்குள் மறைந்து இருந்து படைகளை உருவாக்கி, வெண்ணி என்னும் இடத்தில் சேரன், பாண்டியன், மற்றும் குறுநில மன்னர்களான பல்வேறு வேளிர்களுடன் இணைந்து எதிர்த்து நிற்கும் இருங்கோவேளைக் கொன்று மீண்டும் சோழர்களின் ஆட்சியை அமைக்கிறான். அவனுக்கு பெரும் உதவியாக இருப்பது பாண்டிய நாட்டைச் சேர்ந்தவனும் சோழப் படைத்தளபதியுமான இளஞ்செழியன்.

இளஞ்செழியனைச் சுற்றித்தான் கதை... இழந்த சோழ ராஜ்ஜியத்தை மீட்டெடுக்கத் துடிக்கும் அவனுக்கு அக்கா மகள் பூவழகி மீது காதல்... இருவருக்கும் அடிக்கடி ஊடல்... அவள் நினைவோடு பூம்புகாரின் கடலோரத்தில் நடந்து செல்பவன் காலில் யவனராணி தட்டுப்படுவதில் ஆரம்பிக்கும் கதை ஆயிரத்து இருநூறு பக்கங்களுக்கு மேல் மிக அழகாகப் பயணிக்கிறது. யவனராணியோ தமிழகத்தில் யவன (கிரேக்க) அரசை நிறுவ தன் நாட்டில் இருந்து படைத்தலைவன் டைபீரியஸூடன் வந்தவள் கப்பல் விபத்துக்குள்ளாகி கரை சேர்கிறாள். யவனராணியைக் காப்பாற்றுபவன் அவளின் அழகிய பொன்னிற கூந்தலுக்கும்... கவரும் கண்களுக்கும்... வசீகர இதழுக்கும் அடிமையாகி பூவழகி நினைவால் தடுமாறுகிறான். தன்னைக் காப்பாற்றிய தமிழன்தான் தன்னை இங்கு ராணி ஆக்குவான் என்ற சோதிடத்தை நம்பும் ராணியும் தன்னை முதலில் தொட்டுத் தூக்கிய இளஞ்செழியனைக் காதலிக்கிறாள். அவனுக்காக தான் வந்த காரியத்தை மறந்து இருங்கோவேளின் சதியை முறியடிக்க உதவுகிறாள்.

இளஞ்செழியன் மீது யவனராணி காதல் கொண்டு வந்த காரியத்தை மறந்து திரிகிறாள் என்பதால் அவளை சிறை பிடித்து, இவனை மயக்க மருந்து கொடுத்து நாடு கடத்துக்கிறான். கப்பலில் பயணிக்கும் இளஞ்செழியனைத் தேடி வரும் அவனின் உபதளபதி ஹிப்பலாஸூடன் கடலில் கொள்ளையரிடம் மாட்டி, அவர்களிடம் இருந்து தப்ப சாம்பிராணி நாட்டில் இல்-யாசுவிடம் மாட்டி அங்கிருந்து அலீமா உதவியுடன் தப்பி வருகிறான். அலீமா அவனை விரும்ப, அவளிடம் தான் வேறொருத்தியை விரும்புவதாய்ச் சொல்லி, அவளை கப்பலை இயக்கும் உபதளபதியாக்கி தமிழகம் திரும்புகிறான். இந்த அலீமா யவனராணியின் தோழி, டைபீரியஸ் அவளை மகளாய் நினைத்து கடலில் கப்பலைச் செலுத்தும் பயிற்சியெல்லாம் அளித்தான் என்பதெல்லாம் கதை நகர்வில் வரும்.

தமிழகத்தில் பூவழகி தன் காதலன் இளஞ்செழியன் நினைவால் வாடுகிறாள். அவளை சிறை வைத்து திருமணம் செய்து கொள்ள இருங்கோவேள் முயற்சிக்கிறான். திருமாவளவன் தீப்பிடித்த மாளிகையில் இருந்து தப்பி வரும் போது எதிரிகளிடம் இருந்து சுவாமிகளும் இளஞ்செழியனும் காப்பாற்ற, பூவழகிதான் காயத்துக்கு மருந்து இடுகிறாள். அவள் மீது கொண்ட பாசத்தில் தன்னைக் கரிகாலன் என்று அழைக்கச் சொல்லி அவளை தங்கை ஆக்கிக் கொள்கிறான். இது நடப்பது கதையின் ஆரம்பத்தில்... இந்தப் பாசத்தில் அவளை இருங்கோவேளின் சிறையில் இருந்து தன் காதலி மற்றும் அவளின் தந்தை உதவியால் காப்பாற்றி தான் ஒளிந்திருக்கும் காட்டுக்குள் வைத்துப் பாதுகாத்து வருகிறான். 

கரிகாலனுக்கு சுவாமிகள், இளஞ்செழியனின் உப தளபதிகள் என பலர் உதவி செய்ய, அவனின் மாமா இரும்பிடத் தலையாருடன் சேர்ந்து மிகப்பெரிய படையை உருவாக்க, தமிழகம் திரும்பும் இளஞ்செழியனும் டைபீரியசிடம் தான் யார் என்று காட்டாது யவனராணியை சந்தித்து திட்டம் தீட்டி, நாகையில் படைத்தளம் அமைத்து வெண்ணிப் போருக்கு வித்திடுகிறான். வரலாற்றில் மிக முக்கியமான வெண்ணிப் போர் நிகழ்வுகளை மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார் சாண்டில்யன்.

பூம்புகாரில் டைபீரியஸை தன் புத்தி சாதுரியத்தால் வெல்கிறான் இளஞ்செழியன், தான் வந்த வேலை மறந்து தமிழன் பின்னால் சுற்றிய யவனராணியை டைபீரியஸ் கொல்ல, இறக்கும் தருவாயில் பூவழகியையும் இளஞ்செழியனையும் சேர்த்து வைத்து உயிரை விடுகிறாள் அழகி யவனராணி.

போர்க்காட்சிகள், காதல் காட்சிகள் என எல்லாவற்றையும் நம் கண்முன்னே நிறுத்துகிறார் சாண்டில்யன். இளஞ்செழியனின் வீரதீர செயல்களை விவரிக்கும் போதும் ஒவ்வொரு முறை அவன் திட்டம் தீட்டும் போதும் அவனின் முகத்தில் ஏற்படும் மாறுதல்கள், யவனராணி குறித்த வர்ணனைகள் என எழுத்தில் அசர அடித்திருப்பார். இளஞ்செழியனாகவே நம்மை மாற வைத்துவிடுவார்.

முக்கியமாக சொல்ல வேண்டியது ஹிப்பலாஸ் என்ற அந்த யவன உப தளபதியைத்தான்... தன் ராணி முன்னே வணங்க வேண்டியவன், தனது படைத்தலைவனும் யாரும் வெற்றிக் கொள்ள முடியாத வீரனுமான இளஞ்செழியன் மீது கொண்ட அன்பினால் அவனுடன் இருப்பதும்... அவனைத் தேடி கடலில் உடைந்த மரத்தில் பயணித்து அவனை அடைந்து யவனக் கப்பலில் மருத்துவனை கைக்குள் வைத்து காப்பாற்றி,  அவனுடன் சுறாக்கள் நிறைந்த நீருக்குள் குதித்து... அங்கும் காப்பாற்றி... சாம்பிராணி நாட்டில் மாட்டி... அங்கிருந்து தப்பித்து... டைபீரியஸிடம் மாட்டி... தப்பி.. சோழ நாட்டை மீட்கும் போரில் துணை நிற்பது வரை அருமையான கதாபாத்திரம்... கதையை வாசித்து முடிக்கும் போது மரக்க முடியாதவனாகிறான் ஹிப்பலாஸ்.

மாமனைக் காதலித்து தன் பெண்புத்தியால் சண்டையிட்டு பிரிந்திருந்தாலும் அவன் பிரிவால் வருந்தி.... அவன் வருவான் என்ற நம்பிக்கையோடு உடல் இளைக்க காத்திருக்கும் பூவழகி மனசுக்குள் உயர நின்றால் என்றால் அரசமைக்க வந்து ஒருவன் மீது கொண்ட காதலால் அவனுக்கு உதவ ஒவ்வொரு முறையும் தன் உயிரைப் பணையம் வைத்து இறுதியில் உயிரையே கொடுக்கும் யவனராணி ஏனோ சற்று அதிகமாக மனசுக்குள் உயர்ந்து நிற்கிறாள். அதனால்தானோ என்னவோ பூவழகி என்று வைக்காமல் யவனராணி என்று பெயர் வைத்தார் போலும் சாண்டில்யன்.

-'பரிவை' சே.குமார்.

7 எண்ணங்கள்:

ர. சோமேஸ்வரன் சொன்னது…

கல்லூரியில் படிக்கும் போது குறிப்பிட்ட பாடத்தின் ஆசிரியர் வரவில்லை என்றால் அந்த 1 மணி நேரம் நூலகம் செல்ல வாய்ப்பு கிடைக்கும் அப்படி ஒரு ஒரு மணி நேரமாக நண்பனுடன் போட்டி போட்டு ஓடி சென்று புத்தகத்தை எடுத்து படித்து, சில சமயங்களில் அவன் எடுத்தால் அவனிடம் கதை கேட்டு தெரிந்து கொண்டு புத்தகத்தை படித்து முடிக்க 2 வருடம் ஆயிற்று.

இலஞ்செழியன் ஒவ்வொரு முறையும் கண்கள் மூடி திட்டத்தை யோசிக்கும் போது மிகவும் சுவாரசியமாக இருக்கும். அருமையான எழுத்து நடை.

ஸ்ரீராம். சொன்னது…

சாண்டில்யன் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தது யவனராணி. அப்புறம் கடல்புறா.

Yarlpavanan சொன்னது…

அருமையான பதிவு

வாசிப்பு என்பது
அறிவைப் பெருக்க மட்டுமல்ல
ஆயுளை நீடிக்கவும் உதவுமே!

கோமதி அரசு சொன்னது…

கதை விமர்சனம் முன்பு கதை படித்த நினைவுகளை கொண்டு வருகிறது.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசனை மிகவும் ரசனை(பிடித்தது)...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

யவனரா ராணி மற்றும் கடல்புறா மிகவும் ரசித்து வாசித்த நினைவு. பல வருடங்களுக்கு முன்னால். இப்போது தங்களின் விமர்சனம் கண்டதும் மீண்டும் வாசிக்க வேண்டும் என்ற ஆவல் மேலிடுகிறது...

தளம் பக்கம் வர பல நாட்கள் ஆகிவிட்டன. மீண்டும் வரத் தொடங்கியுள்ளோம். தொடர்கிறோம். உங்கள் பழைய பதிவுகளையும் வாசிக்க வேண்டும்...

”தளிர் சுரேஷ்” சொன்னது…

பாலகணேஷ் சார் இந்தநாவலை தருவதாக சொல்லியிருக்கிறார் வாங்கிக் கொள்ளத்தான் எனக்கு நேரம் வாய்க்கவில்லை!