ஸ்ரீராம் அண்ணா அவர்களின் 'எங்கள் பிளாக்'கில் கேட்டு வாங்கிப் போடும் கதை என்ற பகிர்வை செவ்வாய்கிழமை தோறும் வெளியிட்டு வருகிறார்கள். இதுவரை சிறந்த எழுத்தாளர்களின் கதைகளை கேட்டு வாங்கிப் போட்டார்கள் (நம்மளையும் பெரியாளாக்கிட்டாங்கன்னு நினைக்கிறேன்). இந்த செவ்வாய் ஏனோ எனது கதையைக் கேட்டார்கள். பத்திரிக்கையில் வந்த கதை படத்துடன் வேண்டும் என்பதுதான் அவர்களின் கோரிக்கை. என்னிடம் அப்படி எந்தக் கதையும் இங்கு இல்லை என்பதே உண்மை. காரணம் புத்தகங்கள் எல்லாமே ஊரில்தான் இருக்கின்றன. எனவே முதலில் ஒரு கதை கொடுத்தேன். அதில் படம் இல்லை.... பத்திரிக்கையில் வந்ததற்கான ஆதாரமும் என்னிடம் இல்லை. நானும் அந்தப் பத்திரிக்கையில் போய் தேடியும் பார்த்தேன். 2009-ல் எழுதிய கதை என்பதால் கிடைக்கவும் இல்லை. (தற்போது பத்திரிக்கைகளுக்கு இங்கிருந்து அனுப்புவது இல்லை) பின்னர்தான் மங்கையர் சிகரத்தில் வந்த 'ஹரிணி'யை அவருக்கு கொடுத்தேன்.
அவரும் 'மனசு தள அதிபர்'ன்னு எல்லாம் இந்த சிறிய கிராமத்தானைச் சொல்லி (மொத்தமா பத்து ஏக்கர் கூட ஊரில் இல்லை) அமர்களமாக வெளியிட்டிருந்தார். எங்கள் பிளாக்கில் மிகப் பெரிய வலைஞர்கள் எல்லாம் வலம் வருவார்கள். அவர்கள் எல்லாம் சேனைத் தமிழ்உலா உறவுகளைப் போல அலசி மிகச் சிறப்பான கருத்துக்களைப் பகிர்ந்திருந்தார்கள். என் தளத்தில் கூட கதைகளுக்கு அப்படியான கருத்துக்கள் கிடைப்பதில்லை.... இது எங்கள் பிளாக் கொடுத்ததால் கிடைத்த கருத்துக்கள் என்பதே உண்மை.
ஹரிணி வீட்டு வேலை பார்த்திருக்க வேண்டும் எனவும், அவள் எதற்கு வேலை பார்க்கணும் எனவும் கருத்துப் போர்கள்... இந்தக் கதையில் ஹரிணி வேலை பார்த்தாளா... இல்லையா என்பதைப் பேசவில்லை. பொதுவாக வேலைக்குப் போகும் கூட்டுக் குடும்ப மருமக்கள் சின்னச் சின்ன வேலைகளைப் பார்ப்பார்கள். பார்க்காமல் இருக்க மாட்டார்கள்... அப்படித்தான் ஹரிணியும் என எடுத்துக் கொள்ளலாமே... இது அவளை மாமியார் தாங்குகிறார் என்ற ஈகோ போர்தான்... இதில் மற்ற விவரங்கள் குறித்தான பார்வை இல்லை.... திரு.ஜீவி அவர்கள் அதை மிக அழகாகச் சொல்லியிருக்கிறார். மேலும் உரையாடல்களிலேயே கதையை நகர்த்தியிருக்காமல் காட்சிப்படுத்தியிருக்கலாம் என்றும் சொல்லி மிகச் சிறப்பாக அலசியிருக்கிறார். நான் எழுதும் கதைகள் எல்லாமே பெரும்பாலும் உரையாடல்களாய் அமைவதில்லை... சில கதைகள் மட்டுமே விதிவிலக்காய்... அப்படி ஒரு கதைதான் இது. என் கதைகளை வாசிக்கும் ஸ்ரீராம் அண்ணா உள்ளிட்ட பலருக்கும் இது தெரியும். பெரும்பாலும் சுபமாய் முடியவும் செய்யாது. இந்தக் கதை எல்லா வகையிலும் மாற்றமாய்த்தான் இருக்கும்.
அப்புறம் 'இப்பல்லாம் இப்படி இல்லை... அப்பா அம்மா கூட இருப்பாங்களான்னு கேட்பாங்க' என்று சொல்லியிருக்கிறார் ஒரு அம்மா... இது நகர வாழ்க்கையில் இருக்கலாமே ஒழிய, இன்னும் கிராமங்களில் பெரியவர்களுடன் வாழும் வாழ்க்கை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இப்பவும் சில இடங்களில் சாத்தியப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது என்பதை, எங்கள் குடும்பத்தில் இதுவரை எல்லா விழாக்களையும் ஒன்றாகக் கொண்டாடித்தான் வருகிறோம் என்பதனை வைத்து என்னால் கூட்டுக் குடும்ப வாழ்வு இன்னும் இருக்கிறது என்று அடித்துச் சொல்லமுடியும். மேலும் கதை எழுதியது 2008 கடைசியில் என்று நினைக்கிறேன். வெளியானது 2009-ல்... அன்றைய காலகட்டத்தில் (7 ஆண்டுகளுக்கு முன்னர்) கண்டிப்பாக சாத்தியப்பட்ட ஒன்றுதானே...
எழுத்துப் பிழை அதிகம் என்றும் சொல்லியிருந்தார்கள்... நான் முழுவதும் பிழையில்லாமல் எழுதினேன் என்று சொல்ல மாட்டேன்... கண்டிப்பாக பிழை இருக்கும்... ஆனாலும் அதிகமாய் இருக்க வாய்ப்பில்லை என்பது என் எண்ணம். காரணம்... பெரும்பாலும் எனது கதைகள் எல்லாமே எங்க பக்கத்து பேச்சு வழக்கில் இருக்கும். அதனால் வார்த்தைகளில் வித்தியாசம் கூட பிழையாகத் தெரியலாம். 'நீ பேச்சு வழக்கில் இருந்து பொதுவான வழக்குக்கு மாறுடா' என்று நட்புக்கள் சொன்னாலும் பொது வழக்கைவிட பேச்சு வழக்கில் எழுதுவதிலேயே ஒரு திருப்தி இருக்கிறது. எது எப்படியோ எனது தவறுகளைச் சுட்டிக்காட்டிய வலை நட்புக்களுக்கும் இதற்கு வாய்ப்பளித்த ஸ்ரீராம் அண்ணா உள்ளிட்ட 'எங்கள் பிளாக்' உறவுகளுக்கும் நன்றி.
எங்கள் பிளாக்கில் கதை வாசிக்க : ஹரிணி
நண்பர் சத்யா அவர்கள் நடத்தும் அகல் மின்னிதழில் மிகச் சிறப்பான கட்டுரைகளுக்கு களம் அமைத்துக் கொடுக்கிறார். எழுதுபவர்கள் எல்லாருமே மிகச் சிறப்பாக எழுதுகிறார்கள். பிப்ரவரி மாதம் அகல் மின்னிதழின் முதலாமாண்டு கொண்டாட்டமாம். இரண்டு இதழாக வெளியிடுகிறார். முதல் இதல் பிப்-1 அன்று வெளியானது. மிகச் சிறந்த கட்டுரைகளால் இதழ் சிறப்பாக வந்திருக்கிறது. நீங்களும் வாசிக்கலாம்... உங்கள் கருத்தைக் கூறலாம்... ஏன் நல்ல பகிர்வுகளை அகல் மின்னிதழில் எழுதலாம்...
என்னமோ தெரியலை... மிகச் சிறப்பானவர்களுடன் பயணிக்கும் எல்லாருமே நம்மளையும் கூப்பிடுறாங்க... சிறப்பானவர்களுடன் நம்மளையும் பயணிக்க வைக்கிறாங்க... அது நம்ம ராசி போல... சிறுகதைப் போட்டிக்காக அங்கு போனேன்... புத்தகங்கள் பரிசும் பெற்றேன்... சிறப்பான புத்தகங்களை வீட்டிற்கு அனுப்பி வைத்து... 'வந்து விட்டதா..?' என முகநூலில் கேட்டுக் கேட்டே நட்பானோம்... இப்போ தினமும் இரண்டு வார்த்தையாவது முகநூலில் பேசிவிடுகிறோம். திடீரென 'ஜி அகல் ஆண்டு மலருக்கு ஒரு கட்டுரை எழுதுங்க' என்றார். 'கதை என்றாலும் ஏதாவது கிறுக்குவேன்... கட்டுரையா..?' என்றதும் 'எழுதுங்க ஜி அதெல்லாம் முடியும்.. எனக்கு கட்டுரை வேண்டும்' என அன்பாய் கட்டளை இட்டார். எழுதி அனுப்பினேன்....
பின்னர் அவரிடம் 'நல்லாயிருக்கா..?' என்று கேட்க 'இது கிராமம் தொடர்பான கட்டுரை.... இதை அடுத்த மாதத்துக்கு புக் பண்ணிட்டேன்...' என்றவர், 'இப்ப வேற மாதிரி நீங்க பார்த்த, வாழ்ந்தவற்றைப் பற்றி எழுதுங்களேன்..' என்றார். சரியின்னு எழுதினால்... நம்ம எழுதினாத்தான் பக்கம் பக்கமாப் போகுமே... சும்மா ஒரு எட்டுப் பக்கத்துக்கு எழுதி அனுப்பி 'ரொம்ப நீளமா இருக்கு... நீங்களே சுருக்கிக்குங்க..' என்று சொன்னதும் 'பார்க்கிறேன்' என்றவர், படித்து விட்டு 'ரொம்ப அருமையா இருக்கு ஜி, இதை ரெண்டு பகுதியா போடுறேன்... இந்த மாதம் பாதி... அடுத்த மாதம் பாதி...' என்றார். ஆம் அகல் ஆண்டுவிழா மலர் இரண்டில் (வரும் - 14 இரவு) பகுதி ஒன்று வருகிறது. இப்படிப்பட்ட நட்புக்களால்தான் இன்னும் எழுத வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. நம் எழுத்தையும் நம்பி வாங்கிப் போடும் நண்பர் சத்யா அவர்களுக்கு நன்றி.
அகல் பிப்ரவரி ஆண்டு மலர் -1 வாசிக்க இங்கு கிளிக்குங்கள்.
விழுதுகளைத் தாங்கிய வேர்கள் பழுக்க ஆரம்பித்துவிட்டன... ஆம் எங்கள் ஊரில் 'பேராண்டி' என வாய் நிறைய அன்போடு அழைக்கும் ஆயா ஒருவர், நாங்கள் சிறுவர்களாக இருக்கும் போது தயிர் வியாபாரம் செய்ய காலையில் தேவகோட்டைக்கு தயிர்க்கூடை சுமந்து செல்வார். பெரும்பாலும் அதிர்ந்து பேசமாட்டார். வம்பு சண்டைக்கும் போகமாட்டார்....கணவரின் மறைவுக்குப் பின்னர் பழசை எல்லாம் மறந்தவராய் இருந்தாலும் நம்மைப் பார்த்தால் சில நேரங்களில் புரிந்து கொள்வார். கடந்த செவ்வாய் அன்று இறந்து போய் விட்டார். இன்று அவரின் இறுதிச் சடங்குகள் எங்கள் ஊரில் நடைபெற்றுள்ளது. அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
நேற்று விஷாலுடன் நடந்த உரையாடலில் ' அப்பா... மே மாசம் வரவாப்பா?' என்றதும் 'இப்ப வரவேண்டாம்... பத்து மாசத்துக்கு அப்புறம் வாங்க' என்றான். 'ஏன்டா?' என்று அவரின் அம்மா கேட்க, 'ஆமா அவரு வந்தா கிரிக்கெட்டே பாப்பாரு... என்னைய நாடகம் (சீரியல்) பார்க்க விடமாட்டாரு...' என்றானே பார்க்கலாம்... 'டேய் பத்தேமாரி படத்துல 50 வருசமா இருக்க அப்பன் பேசும் போது பெரிய பசங்களா வந்ததும்தான்... அம்மா அவரு பேசினா அறுத்துக் குமிச்சிருவாரு... தூங்கிட்டோம்ன்னு சொல்லுவானுங்க... நீ அஞ்சு வருசத்துலயே வரவேண்டாம்ன்னு சொல்றியேடா'ன்னு சொன்னதும் அவங்க அம்மாவுக்கு ஒரே சிரிப்பு. பயபுள்ளய சீரியல்காரன் என்னமா கெடுத்து வச்சிருக்கான்... ஆனாலும் அதிலும் ஒரு சந்தோஷம் என்னன்னா கொஞ்ச நாளா எனக்கும் என் செல்ல மகளுக்கும் சின்ன சண்டை அப்படியிருந்தும் நான் ஒரு தேதி சொல்ல, ஏன் அதுக்கு முன்னால வியாழக்கிழமை எல்லாம் வராதா...? அப்படின்னு ஸ்ருதி சொன்னுச்சு... மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும்... மகள்கள் எவ்வளவுதான் கோபமாக இருந்தாலும் அப்பா பாசத்தில் உசத்தி என்பது.... மொத்ததில் பார்த்தா நமக்கும் பத்தேமாரி கதைதான் போலும்.
இந்தப் பாட்டை கேட்கும் போது கிராமத்தில் இருக்கும் சந்தோஷம்... ஆடும் நாயகியை விடுங்க... பாடும் குரலைக் கேளுங்க... அந்தக் குரல் அப்படியே உங்களை இழுத்துக்கிட்டு போய் சுத்திக் காட்டும்.... கண்டிப்பாக ரசிப்பீங்க...
மனசின் பக்கம் தொடர்ந்து பேசும்...
-'பரிவை' சே.குமார்.
22 எண்ணங்கள்:
ரொம்ப நெகிழ்வா திண்ணையில் உக்காந்து ஊருல பேசுற மாதிரி இருக்குங்க ...
வணக்கம்
சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி குமார். எங்களைப் பற்றி இங்கு பகிர்ந்ததற்கு. தன்னடக்கத்துடன் நீங்கள் உங்களைச் சாதாரண ஆள் போலப் பேசினாலும் உங்கள் எழுத்தின் வீச்சு எங்களுக்குத் தெரியும். குடும்பத்தைப் பிரிந்து தனிமையில் வெளி நாட்டி வசிப்போரை ஆக்ரமிக்கும் அந்தத் தனிமை உணர்வை எழுத்துகலாக்குவது எல்லோருக்கும் சாத்தியமில்லை. உங்களுக்குச் சாத்தியமாகி இருக்கிறது. மனசை ஆளும் நீங்கள் மனசு அதிபர் இல்லாமல் என்ன!
கூட்டுக்குடும்ப வாழ்க்கை இன்னமும் எங்காவது சாத்தியமாக இருந்தால் அதைவிட மகிழ்ச்சி வேறு இல்லை. ஏனெனில் முந்தைய காலங்களைப் போல மண்ணை நம்பியும், வேறு தொழில் செய்தும் உள்ளூரிலேயே காலம் தள்ளுவது இந்நாளில் நடக்காத ஒன்று.
அகல் மின்னிதழில் தொடர் வெளியாவதற்கும் எங்கள் வாழ்த்துகள். உங்கள் குழந்தைகளுக்கு எங்கள் அன்பு.
தம +1
உங்கள் எழுத்துப்பயணத்திற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் சகோ
மயில் கலந்து கட்டியாடியது அருமை ஹாரினியை நண்பர் ஸ்ரீராம் அவர்கள் தளத்தில் அன்றே படித்து விட்டேன் ஸூப்பர்
தமிழ் மணம் 4
பல்சுவை விருந்தாக இன்றைய பதிவு..
வாழ்க நலம்..
சுபிட்ச மழை வரத்தான் போகிறது ,உங்கள் மனதில் உள்ள மயில் எழுத்திலும் ஆடுகிறதே :)
சுவையான, சுவாரஸ்யமான மனசின் தொகுப்பு!!! ஹரிணி எங்கள் ப்ளாகில் வாசித்தோம். நல்ல கதை...தங்கள் எழுத்துகள் பல பிரசுரமாவதற்கும், பரிசுகள் பெறுவதற்கும் வாழ்த்துகள்...பயணம் தொடரட்டும்..மனமார்ந்த வாழ்த்துகள் குமார்!
வாழ்த்துக்கள்நண்பரே
உங்களின் எழுத்துப்பயணம் மேலும் மேலும் சிறந்து விளங்க அன்பு வாழ்த்துக்கள்!!
அனுபவப் பகிர்வுகள் அருமை தோழர்
வாழ்த்துகள்
இன்னும் நிறைய எழுதுங்கள்
வாங்க ஜி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ரூபன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஜி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க துளசி சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க மது சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கருத்துரையிடுக