மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 25 ஜனவரி, 2016

பாரதி : கண் திறந்திட வேண்டும் - 2


முதல் பகுதி எல்லாரும் படிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன். படிக்காதவங்க மேல இருக்க இணைப்பில் சென்று படியுங்கள். மற்றவங்க வாங்க நாம சண்முகவடிவேலு ஐயாவைப் பின்தொடர்வோம். நேற்றே அவர் திருக்குறள் வகுப்பெடுத்த கதையைச் சொல்றேன்னு சொன்னேன்தானே அது என்னன்னா..


திருக்குறள் வகுப்பெடுத்த கதையை அவர் பெரிதாகச் சொன்னார்... அப்படியே சொன்னால் இந்தப் பதிவில் முடிக்க முடியாது... அதனால் அதைச் சுருக்கிச் சொல்றேன்... ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில் வளாகத்தில் 40 பேருக்கு திருக்குறள் வகுப்பெடுக்கச் சொன்னார்களாம். சரியின்னும் இவரும் போயிருக்கார். முதல் வாரம் 40 பேரும் இருந்தானுங்களாம்... அடுத்த வாரங்களில் அது குறைஞ்சி... குறைஞ்சி 13 பேருக்கு வர எங்கய்யா மத்தவனுங்க எல்லாம் என்றதும் அவனுங்க முக்கிய வேலையா போயிருக்கானுங்க... நீங்க நடத்துங்கன்னு சொன்னானுங்களாம். அதாவது அவனுகளுக்கு முக்கியமான வேலையிருக்கு... நமக்கு வேலையில்லை எனபதைச் சொல்லாமல் சொன்னார்கள் என்றவர், யாரைக் கேட்டாலும் முக்கியமான வேலை அப்படின்னு சொல்றாங்களே அப்படி என்ன முக்கியமான வேலை... நம்ம ஆவுடையப்பன் மகளுக்கு கல்யாணம் வச்சிருந்தார். எனக்கு பத்திரிக்கை கொடுக்கலை... பார்த்தப்போ என்ன எனக்குச் சொல்லலைன்னு கேட்டதுக்கு முக்கியமான ஆளுகளை மட்டுந்தான் கூப்பிட்டோம் என்றார். அப்ப நானெல்லாம் முக்கியமில்லை என்பதை சொல்லாமல் சொன்னார் என்று அவரைச் சீண்டி சிரிக்க வைத்தார். 

சரி திருக்குறள் கதைக்குப் போவோம்... அவனுகளுக்கு முக்கிய வேலை இருந்தா எனக்கு இல்லையா... இனி வகுப்பு கிடையாதுன்னு கோபமாச் சொல்லிட்டு கிளம்ப, அங்கிருந்த கோவில் நிர்வாகி ஒருவர் அவனுகளுக்காக நீங்க நிப்பாட்டிட்டா... எங்களுக்கும் திருக்குறள் கத்துக்க ஆசை இருக்கு... எங்களுக்காக நடத்துங்க... உங்களுக்கு கூட்டந்தானே வேணும் அதை நான் கூட்டுறேன் என்றார். ஆஹா நமக்கிட்ட கத்துக்க ஒரு கூட்டத்தைக் கூட்டுறேன்னு சொல்றாரேன்னு சரியின்னு சொல்லிட்டேன். மறுநாளே ஞாயிறு தோறும் கோவில் வளாகத்தில் திருக்குறள் வகுப்பு நடைபெறும் என என்பெயர் போட்டு விளம்பரம் வைத்திருந்தார். அதில் கீழே கோடு போட்டு பொங்கல், புளியோதரை விநியோகம் உண்டுன்னு போட்டிருந்தார். ஞாயிற்றுக்கிழமை நான் போறேன்... அந்த இடமே கூட்டத்தால் நிரம்பி இருக்கு... நூறு பேர் உக்கார்ற இடத்துல ஒருத்தர் மேல ஒருத்தர் அடுக்கி வச்சதுமாதிரி இருநூறு பேருக்கு மேல இருக்காங்க... நான் போனா உள்ளே விடலை... ஒருத்தர் இங்க உக்காரு எல்லாருக்கும் கிடைக்கும் என்றார். நான் மீண்டும் உள்ளே போகணும் என்று சொல்ல, அங்க பாரு அண்டா நிறைய இருக்கு... கண்டிப்பாக கிடைக்கும் என்றார். 

நாந்தான் திருக்குறள் வகுப்பெடுக்க வந்திருக்கேன்னு சொன்னதுக்கு இப்படித்தான் ஏழெட்டுப் பேரு சொல்லிட்டு முன்னால பொயிட்டானுங்க... இங்கயே உட்கார் என்றார். அப்ப அந்த நிர்வாகி பார்த்துட்டு தம்பி இங்க வாங்க என்று கூப்பிட, நீதான் வகுப்பெடுக்க வந்த ஆளா, முன்னாடியே சொல்ல வேண்டியதுதானேன்னு சொல்லி என்னைப் போகச் சொல்ல எப்படியே உட்கார்ந்திருந்த ஆட்களின் தோள் மீது ஏறி ஏறி முன்பக்கம் வந்து சேர்ந்தேன். ஒரு வழியா வகுப்பெடுக்க ஆரம்பிச்சு மூணு குறள் நடத்திட்டேன். அப்ப ஒருத்தர் சீக்கிரம் முடிங்க என்றார்.. சரியின்னு சொலலிட்டு தொடர, இன்னும் எத்தனை இருக்குன்னு கேட்டார். ஏழு இருக்குன்னு சொன்னதும் மூணுக்கே அரைமணி நேரம் ஆக்கிட்டே,.. ஏழுக்கு..? என்றார். நான் வேகமா முடிச்சிடுறேன்னு சொன்னேன். அதுக்கு அவர் உன்னைய யாரு எடுக்க வேண்டான்னு சொன்னா... விநியோகம் பண்ணிட்டு எடு... இல்லேன்னா ஆறிப் போயிரும்... அப்புறம் நல்லாயிருக்காது என்றார். அதன் பின் அவர் இந்தக் கதையை இன்னும் சுவராஸ்யமாய் விளக்கி அரங்கத்தை சிரிக்க வைத்து இனிமேல் வகுப்பெடுப்பதில்லைன்னு முடிவு பண்ணினேன் என்று சொல்லி உதவி செய்வதால் சங்கடமே என்று சொல்லி முடித்தார்.

இந்த நகைச்சுவையை எத்தனையோ முறை கேட்டிருக்கிறேன்.... எப்பக் கேட்டாலும் என்னால் சிரிப்பை அடக்க முடிவதில்லை.... இது ராமகிருஷ்ணன் போன்றோரின் நேயர் விருப்பம் வேறு என்று சொன்னவர், இவரைப் போல் இளைஞர்களும் நகைச்சுவையாய் ஆழ்ந்த கருத்தோடு பேச வரவேண்டும். அப்படி ஒருத்தர்தான் மணிகண்டன் எனச் சொல்லி அவரை சந்தோஷமே அணிக்கு பேச அழைத்தார்.

திரு. மணிகண்டன் : இவர் பேச வரும்போதே கோபமாய் வருவது போல் தெரிந்தது. காபி கொடுக்க வந்தவரை, காபி கொடுப்பதாக இருந்தால் எல்லாருக்கும் கொடுங்கள்... எனக்கும் கொடுங்கள்... ஏன்னா என்னோட ராசியோ என்னவோ எப்ப நான் பேச எழுகிறேனோ அப்போதுதான் காபி கொடுப்பார்கள். எனக்கு காபி வேண்டும். இந்த ஆறு பேருக்கும் நான் பேசி முடித்ததும் கொடுங்கள் என்று சபையில் பட்டென்று சொல்லி சந்தோஷத்துக்கு பேச ஆரம்பித்தார். தன் மகள் ஸ்கூலுக்குப் போகும் போது அப்பா நான் ஹேர் கட்டிங் பண்ணிக்கவா என்றாள். சரியென்று சொல்ல, கடைக்குப் போனதும் மொட்டை போட்டுக்கிறேன் என்றாள். என்னடா இது... மொட்டை போடுறேன்னு சொல்றாளேன்னு நானும் நடுவர் அவர்களைப் போல்தான் பிள்ளைகளை அடிப்பதோ திட்டுவதோ இல்லை. அதனால் சரியென்று சொல்லிவிட்டேன். பள்ளிக்கு போகிறேன்... அவளது வகுப்புத் தோழியும் மொட்டை அடித்திருந்தாள். என்னடா ரெண்டு பேரும் சொல்லி வச்சி மொட்டை போட்டீங்களா என்று கேட்க, அப்பா எங்க வகுப்புத் தோழி க்கு (ஒரு பெண் பெயரைச் சொல்லி) கேன்சராம்... டிரீட்மெண்ட் எடுக்கிறாளாம். டிரீட்மெண்ட் எடுத்தா தலை முடியெல்லாம் கொட்டிடுமாம். அதான் அவ மொட்டையா இருக்கதால மத்தவங்க கேட்டு அவ பீல் பண்ணாம இருக்க இந்த ரெண்டு மாசமும் எங்க கிளாஸ்ல எல்லாரும் மொட்டை போட்டுக்கிறதா பேசியிருக்கோம் என்றாள் என்றதும் அரங்கம் கைதட்டலால் நிரம்பியது.

அதன் பின் அவர் அப்துல்கலாம் குழந்தைகள் எடை அதிகமான செயற்கைக்காலைத் தூக்கி நடக்க சிரமப்பட்டதைப் பார்த்து தானே நாற்பெத்தெட்டு மணி நேரம் தொடர்ந்து முயற்சித்து விமானம் பறக்க இலகுவாக இருக்கும் அலுமினியத்தில் 400 கிராமுக்கு குறைவான செயற்கைக்காலை தயாரித்து அதை அந்தக் குழந்தைக்கு பொறுத்தி அது நடந்ததைப் பார்த்து நான் சந்தோஷப்பட்டதே எனக்கு கிடைத்த பெரிய சந்தோஷம் என்று அக்னிச் சிறகில் சொல்லியிருப்பதை எடுத்துக்கூறி, அன்னை தெரசா காளி கோவில் பூசாரி மயங்கிக் கிடந்த போது உதவியதை, ஆஸ்ரமக் குழந்தைகளுக்காக பணக்காரன் ஒருவனிடம் உதவி கேட்டு அவன் எச்சிலைத் துப்ப அதை ஒரு கையால் வாங்கிக் கொண்டு மறு கையை நீட்டி எனக்கு கொடுத்து விட்டீர்கள் என் குழந்தைகளுக்கு என்று கேட்டதை, இன்னும் சிலவற்றைச் சொல்லி சந்தோஷமே அணிக்கு வலு சேர்த்து 'ஜெய்ஹிந்த்' என்று சொல்லி அமர்ந்தார்.

அவரின் பேச்சைச் சிலாகித்த நடுவர், அடுத்து 'இவர் அருமையாகப் பாடுவார்.. ரொம்ப நன்றாகப் பேசுவார்... எப்பவாச்சும் பசங்களுக்கு வகுப்பும் எடுப்பார்' என்று சொல்லி முனைவர் விஜயசுந்தரி அவர்களை அழைத்தார்.

முனைவர் விஜயசுந்தரி : தனது கணீர் குரலில் பாடி ஆரம்பித்தவர், பாரதியின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்களைவிட அவர் மீது மொய்த்த ஈக்களின் எண்ணிக்கை அதிகம் என்பதை எடுத்துச் சொன்னார். பாரதி உதவி செய்ததால்தான் அவரை எல்லாருக்கும் பிடிக்கவில்லை என்றார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. சிறையில் இருந்த போது அவரின் சகோதரர மனநிலை சரியில்லாமல் தெருவில் திரிவதைக் கேள்விப்பட்டு ஒரு கடிதம் எழுதினார். அதில் என் சகோதருக்கு உணவளியுங்கள். நான் சிறையில் இருந்து வெளியே வந்ததும் அந்தக் கடனை அடைத்து விடுகிறேன் என்று மக்களைப் பார்த்து கேட்டிருந்தார் என்று வருத்தமாய்ச் சொன்னவர் மக்களுக்காக சிறைக்கு போன அவருக்கு கிடைத்தது என்ன... என்று கேள்வி கேட்டார்,  தில்லையாடி வள்ளியம்மை வயிற்றில் இருக்கும் போது அவரது குடும்பம் தென் ஆப்பிரிக்கா செல்ல, அங்கு பிறந்தாலும் இந்தியா மீது கொண்ட பற்றுதலால் வெள்ளையரை எதிர்த்துக் குரல் கொடுத்தாள் அந்த இளம்பெண். அதற்கு அவளுக்கு கிடைத்த பரிசு வெள்ளையனின் பூட்ஸ்காலால் வயிற்றில் கிடைத்த உதை. அவள் சாகும் தருவாயில் கிடக்க அவரைப் பார்க்க காந்தியடிகள் போனார். அவள் யார் தெரியுமா? நம் தில்லையாடி வள்ளியம்மைதான். அவளுக்கு கிடைத்த பரிசு என்ன என்று மீண்டும் கேட்டார்... மேலும் சில வரலாற்றுச் செய்திகளுடன் பாடல்களும் அழகாகப் பாடி கணீரெனப் பேசினார். இவர் இன்னொன்றும் சொன்னார்... அதாவது பாரதி தன்னோட முடி நரைக்கும் முன்னரே இறந்து போனான் ஏன் தெரியுமா..? அவனது தலை முடியில் கூட ஒரு வெள்ளையன் நுழைந்து விடக்கூடாது என்று நினைத்தான் என்று சொல்ல அரங்கமே அதிர்ந்தது. பேசியவர்களில் வரலாற்றுச் செய்திகளுடன் கணீரெனப் பேசினார் பார்க்க சிறிய உருவமாக இருந்த இந்தப் பேராசிரியை... வாழ்த்துகள் அம்மா.

பதிவு எழுதினால் ரொம்ப போய்க்கிட்டே இருக்கேன்னு குறைத்தாலும் நீளத்தை கட்டுப்படுத்த முடியவில்லை... பொறுமையாக வாசித்த அனைவருக்கும் நன்றி. வழக்கறிஞர் சுமதி என்ன பேசினார் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.


கொசுறு : நிஷா அக்கா சேனையில் தலைவலியுடன் பார்த்தே இவ்வளவா என்று சொல்லியிருந்தார். உண்மைதான் அக்கா.... இன்னும் தலைவலி தொடரத்தான் செய்கிறது. இந்த முறை செல்லும் எண்ணமே இல்லை.... கில்லர்ஜி அண்ணா அறைக்கு வந்ததால்தான் கிளம்பினேன். இல்லையேல் படுத்து உறங்கியிருப்பேன். இதுவரை பகிர்ந்தது சரிதான்.. இனி வரும் பேச்சாளர்களின் பேச்சை எல்லாம் அதிகம் கவனிக்கவும் முடியாமல் தலைவலி தொடரத்தான் செய்தது. தலைவலி மற்றும் அலுவலக காரணிகளால் பதிவாக பகிரும் எண்ணமும் இல்லை என்பதே உண்மை. திரு. சுபஹான் அண்ணன் அவர்கள் என்னாச்சு... எழுதலையா... என்று கேட்டதற்கு இணங்கவே பதிகிறேன்... சென்ற வருடங்களைப் போல் நிறைவாக எழுதவில்லை என்பதை நான் அறிவேன். இருப்பினும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறார்கள் என்பதாலே எழுதுகிறேன். உங்களிடம் சொன்னபடி இரண்டில் முடிக்க முடியவில்லை... இன்னும் ஒரு பகிர்வும் இருக்கு....

நன்றி.

படங்கள் உதவி : திரு. சுபஹான் அண்ணா.

(தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

10 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தொடர்கிறேன்... உடம்பையும் கவனியுங்கள்...

Unknown சொன்னது…

திருக்குறள் கூட்டம் ஹா...ஹா...

துரை செல்வராஜூ சொன்னது…

நிகழ்ச்சியை வழங்கிய விதம் அழகு..

குடியரசு தின நல்வாழ்த்துகள்..
வாழ்க நலம்..

UmayalGayathri சொன்னது…

முதலில் உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் சகோ...
தம் +1

Yarlpavanan சொன்னது…

சிறந்த பகிர்வு

இந்தியாவின் 67வது குடியரசு நாள் வாழ்த்துகள்!

மின்நூல் வடிவமைப்பும் வெளியீடும் பற்றி அறிந்திட......
http://www.ypvnpubs.com/2016/01/blog-post_26.html

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சுவையான பகிர்வு! நன்றி!

KILLERGEE Devakottai சொன்னது…

பட்டி மன்றத்தை தொடர்கிறேன் நண்பரே...
தமிழ் மணம் 5

நிஷா சொன்னது…

//கீழே கோடு போட்டு பொங்கல், புளியோதரை விநியோகம் உண்டுன்னு போட்டிருந்தார்.//
திருக்குறளுக்கு கூட்டம் கூடலையா? ஐயோ பாவம்!
வகுப்பிலிருக்கும் கான்சர் பிள்ளைக்காக முழு வகுப்புமே மொட்டை போட்ட நிஜழ்வு நெகிழ்ச்சியானது,
//பாரதி உதவி செய்ததால்தான் அவரை எல்லாருக்கும் பிடிக்கவில்லை என்றார்.//
நகைச்சுவையாக் சொன்னாலும் இது நிஜமான கருத்து தான், நான் என்னை வைத்தே உதாரணம் சொல்வேன், நாம் நல்லது செய்தால் நலல்வர் என பெயரெடுப்பதும் அனைவராலும் நேசிக்கப்படுவதும் குறைவே!
குறிப்பெடுக்காமல் தொகுத்தாலும் நிகழ்வுகள் கண் முன் வரும் படியான பதிவு குமார், பாராட்டுகள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

உடல் நலம் மிக முக்கியம் குமார். கவனியுங்கள்....

பட்டிமன்றம் நாங்களும் ரசிக்கத் தந்தமைக்கு நன்றி.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ரசித்தோம் பட்டிமன்றப் பேச்சுகளைத் தங்களின் பதிவின் மூலம். உடல் நலம் பேணவும் குமார். தலைவலி தொடர்ந்தால் தயவாய் டாக்டரை அணுகுங்கள்..