மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 23 ஜனவரி, 2014

மனசு பேசுகிறது : சினிமா பைத்தியங்கள்


சினிமா பிடிக்காதவர்கள் எவரும் இருக்கமுடியாது. அப்படியே இருந்தாலும் நூத்துல ஒருத்தர் சினிமா கொட்டகைப் பக்கமே போகாமல் இருப்பவராக இருக்கலாம். மொத்தத்தில் பார்க்கப் போனால் எல்லாருக்குமே சினிமாப் பிடிக்கும். என்னடா படம் இது என்று அலுப்பவர்கள் கூட கவுண்டமணியும் செந்தில் வரும்போது ரசித்திருக்கிறார்கள். எல்லாக் குழந்தைகளையும் 'ஆவ்வ்வ்வ்' என்று சொல்லியே கட்டிப் போட்டிருந்தவர் வடிவேலு. குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் சிரிக்க வைக்கும் நகைச்சுவையைக் கொடுத்தவர் இவர்.

சரி விஷயத்துக்கு வருவோம்... எனக்கும் சினிமாப் பிடிக்கும். படிக்கும் போது கமல் படம் என்றால் எப்படியும் பார்த்துவிடுவேன். கமல் மீது ஒரு பைத்தியம். ஆனால் கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் பண்ணி வேல் போட்டு பூக்குழி இறங்கும் அளவுக்கு தீவிர பைத்தியம் கிடையாது. படத்தையும் கமலையும் மனசுக்குள் ரசிக்கும் ஆரம்பப் பைத்தியம். இப்போது கமல் தவிர சில நடிகர்களையும் ரசிக்கிறேன்.

முன்பு கமல் ரஜினி ரசிகர்களுக்குள் எப்படி பிரச்சினைகள் வந்ததோ அதுபோல் இப்போது அஜீத் விஜய் ரசிகர்கள் மோதிக் கொள்கிறார்கள். சமீபத்தில் வெளியான இருவரின் படங்களுக்காக ரசிகர்கள் மோதிக் கொண்டதில் ஒருவர் படுகாயம் அடைந்ததாக செய்தியில் பார்க்க நேர்ந்தது. இந்த நடிகரைப் பிடிக்கும் என்பதற்காக இன்னொரு நடிகரின் ரசிகரை அடிப்பதால் என்ன கிடைத்து விடப்போகிறது. சம்பந்தப்பட்ட நடிகர் 'நன்றாகச் செய்தாய்... இன்னும் இதுபோல் செய்' என பண முடிப்பு கொடுக்கப்போகிறாரா என்ன. அவர் பாட்டுக்கு அவரது அடுத்த பட வேலையைப் பார்க்கப் போய்விடுவார். 


இங்கு எனது நண்பர் ஒருவர் இருக்கார் பழைய படம் முதல் புதிய படம் வரை எல்லா தகவலையும் தனக்குள் சேமித்து வைத்திருப்பார். எதைக் கேட்டாலும் டக்டக்கென்று பதில் சொல்லுவார். படம் இருந்தால் சாப்பிடக்கூட மாட்டார். பார்த்துக் கொண்டேயிருப்பார். அவரைப் பொறுத்தவரை அவரது உலகத்தில் குடும்பத்துக்குப் பிறகு பார்க்கும் வேலையைவிட சினிமாவுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்.

என்னுடன் வேலை பார்க்கும் ஒரு மலையாளி நண்பர் இரண்டு வருடத்துக்கும் மேலாக எங்கள் கம்பெனியில் இருக்கிறார். நானும் அவரும் ஒன்றாக பணி செய்தது கிடையாது. பார்த்திருக்கிறோம்... போனில் பேசியிருக்கிறோம். இப்போது எங்களது அணியில் அவரும் வந்திருக்கிறார். வேலை சம்பந்தமாக எதுவும் அவர் கேட்டுக் கொள்வதில்லை. எப்பவும் சினிமாப் பற்றித்தான் பேசுவார். அதிலும் குறிப்பாக தமிழ் சினிமா குறித்து நமக்குத் தெரியாத விஷயங்களை எல்லாம் பேசுகிறார். இன்று கூட நேற்று யாரோ ஒரு மலையாள நடிகை பேரை மாற்றிவிட்டாள் என்று சொல்லி என்னவோ பெயர் சொன்னார். 

பத்து நாளாக கணிப்பொறி இல்லாமல் என்னருகில் அமர்ந்து என்ன செய்ய வேண்டும் என்று பார்த்து சந்தேகங்கள் எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். இன்று எனக்கருகில் இருந்த எகிப்துக்காரன் ஊருக்குப் போக அவனது கணிப்பொறியில் தனியாக வேலை செய்ய ஆரம்பித்தார். ஆரம்பித்தது முதல் வேலை முடியும் வரை அவருக்கு சொல்லிச் சொல்லி எனக்கும் மற்றொரு மலையாளிக்கும் தொண்டை வறண்டு விட்டது. பத்து நாள் அருகிருந்து கவனித்ததற்கு பலனே இல்லை. கிளிப்பிள்ளைக்கு சொல்வதைப் போல் சொன்னாலும் மீண்டும் பழைய இடத்துக்கே வருகிறார். எப்பவும் கோபம் வரும் எனக்கு இன்று ஏனோ வரவில்லை. ரொம்ப பொறுமையாகச் சொல்லிக் கொண்டிருந்தேன். 

நான் சொல்லி... மலையாளி சொல்லி... இப்படியே போக ஒரு கட்டத்தில் சூடான மலையாளி சினிமா பத்தி நல்லா பேசத் தெரியுது... பணி எடுக்கத் தெரியலை என்று கத்திவிட்டான். உடனே அவர் ரொம்ப கூலாக அவரவருக்கு ஒரு இதுல ஆர்வம் இருக்கும்... உனக்கு அரசியல் ஆர்வம் இருக்கு... எனக்கு சினிமாவுல ஆர்வம் இருக்கு என்று பதிலளிக்க என்னிடம் நீயே பார்த்துக்க உன்னைத்தான் நாளைக்கு கேள்வி கேப்பானுங்க... என்னை கேக்க மாட்டானுங்கன்னு கழண்டுக்கிட்டான். 

நான் பொறுமையாகச் சொல்லிக் கொண்டே சினிமா பார்க்கலாம்... தப்பில்லைதான்... ஆனா அதுதான் வாழ்க்கை அப்படின்னு அதில் மட்டுமே நாட்டம் கொள்ளக்கூடாது. படம் பார்த்தியா தியேட்டரை விட்டு வரும்போது அங்கயே விட்டுட்டு வந்துடனும்... அதையும் தூக்கிக்கிட்டே அலையக் கூடாதுன்னு சொன்னதும் ஒரு ரஜினி வசனத்தைச் சொல்லி அப்படி இருக்கணும்ன்னு தலைவர் சொல்லியிருக்காருல்ல அப்படின்னு சொன்னார். நான் சொன்னேன் ரஜினி ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரின்னு சொல்லியிருக்கார். அது சினிமாவுக்கு ஓகே. வாழ்க்கையில் ஒத்துவருமா என்ன என்றதும் ஒன்றும் சொல்லவில்லை. என்ன வேலை பார்த்தாரான்னுதானே கேக்குறீங்க... கடைசி வரைக்கும் என்ன பண்ணனுமின்னு அவருக்குப் புரியலை... சினிமா பற்றி பேசினால் மிகவும் சந்தோஷமாக பேச ஆரம்பித்துவிடுவார். போகப்போக அவருக்கு வேலை பழகிவிடுவார் இல்லை என்றால் நாங்கள் சினிமாப் பற்றி பேசப் பழகிவிடுவோம் என்று நினைக்கிறேன்.


நடிகன் என்பவன் பணம் வாங்கிக்கொண்டு நடிப்பவன்தான். அவனுக்கு அது தொழில்... அவனது படம் பிடித்தால் பார்த்து ரசியுங்கள். அதைவிடுத்து வேலைக்கு போகாமல் வீதியில் ஆடி... அடிபட்டு... மிதிபட்டு... குழந்தைக்கு பால் வாங்க காசு இல்லை என்றாலும்... பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபாய் கொடுக்க மனமில்லை என்றாலும் 80, 90 உயர கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யச் சொன்னது யார்? மேலிருந்து விழுந்தால்... உன் வீட்டிற்கு வந்து அவன் கொடுக்கும் ஐம்பதாயிரம் உன் குழந்தைக்கும் குடும்பத்துக்கும் அன்பையும் ஆதரவையும் கொடுத்துவிடுமா? 

நம்ம தலைவர் படம் ஓடலையேன்னு தூக்குப் போட்டுக்கிறது... மருந்தைக் குடிக்கிறது... அந்த நடிகனை கடவுளாகப் பாவித்து எல்லாம் மறந்து அவனே உலகம் எனத்திரிவது... அம்மாவுக்கு உடம்பு முடியவில்லை என்றாலும் முதல் காட்சி பார்க்க தியேட்டர் வாசலில் காத்திருப்பது... நடிகனுக்காக மொட்டை அடிப்பது... என்று திரிவதால் என்ன லாபம்.... சினிமா என்பது ரசிக்க மட்டுமே... அதற்காக பைத்தியம் பிடித்து திரிந்தால் ரசிகனின் வாழ்க்கையை அந்த நடிகன் வந்து பார்க்கமாட்டான்... 

நம் வாழ்க்கை நம் கையில்தான் என்பதை உணர்ந்து வாழ்க்கைப் பாதையில் நகர்வோம்...

மனசு தொடர்ந்து பேசும்...
-'பரிவை' சே.குமார்.

8 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

நல்ல எண்ணங்களைப் பகிர்ந்திருக்கிறீர்கள். டிக்கெட் விலை 30 ரூபாய் நாற்பது ரூபாய் என்றிருந்தால் ரிலீஸ் ஆகும் நாட்களில் 100 200 என்று விற்கிறார்கள். அதையும் ரசிக மகா ஜனங்கள் வாங்கிப் பார்க்கிறார்கள். முன்பெல்லாம் ஏதோ கொஞ்சம் டிக்கெட் ப்ளாக்கில் விற்பார்கள். இப்போது எல்லா டிக்கட்டுமெ கூடத்தான் விற்கிறார்கள். நேற்றுகூட முக நூலில் விநியோகஸ்தர் வர்புருத்தியபடி 100 ரூபாய்க்குமேல் விற்க முடியாது என்று சொன்னதால் அவர்களுக்கு படப்பெட்டி தரவில்லை என்று போர்ட் வைக்கும் யுனிவெர்சல் திரையரங்கம் புகைப்படம் ஒன்று கண்டேன்! இளைய தலைமுறையும், அதனால் சமூகமும் சீரழிய இன்றைய திரைப்படங்கள் ஒரு முக்கிய காரணம்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

சினிமா என்பது பார்க்க ரசிக்க மட்டுமே
அழகாகச் சொல்லியுள்ளீர்கள்
ரசிகர்களை நினைத்தால்பாவமாகத்தான் உள்ளது

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

tha.ma.2

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

சரியாக சொல்லியுள்ளிர்கள் நடிகன் அவன் உழைப்புக்காக நடிக்கிறான்... தங்களின் பதிவை இந்தியாவில் உள்ள அனைவரும் படித்தால்.. திருந்துவாங்கள் என்று சொல்ல முடியாது.. அண்ணா.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பல வெறியர்களை திருத்த முடியாது... படம் வெளியானவுடன் செல்வதற்கு அனுமதித்த / அனுமதிக்கிற பெற்றோர்கள் / மனைவி - இவர்களின் தவறு தான் இவ்வளவு தூரம் வளர்ந்திருக்கிறது...

நிழலை நிஜம் என நம்பும் அறியாமையை என்னவென்று சொல்ல...?

Unknown சொன்னது…

நல்ல பகிர்வு!சினிமா..........பொழுது போக்கு சாதனம் மட்டுமே என்று உணர்ந்தால் போதும்!///கடந்த வாரம் ஈழத்தில் ஒரு பத்திரிக்கை ஜில்லா படம் பற்றி எதிர் மறையான விமர்சனம் எழுத,ரசிக்கக் கண்மணிகள்?!பத்திரிக்கை ஆபீசுக்கு முன்பாக கூடி போராட்டம்(!)நடத்தினார்களாம்.இத்தனைக்கும் ஈழ மக்கள் பட்ட/படும் பாடுகள் சொல்லித் தெரிய வேண்டுமா?எங்கே போய் முட்ட?

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல பகிர்வு குமார். சினிமா ஒரு பொழுது போக்கு மட்டுமே தானே தவிர அதுவே வாழ்க்கை அல்ல....

பல இளைஞர்கள் சினிமா மோகம் கொண்டு வாழ்க்கையைத் தொலைத்து விடுவதைப் பார்க்கும்போது/ படிக்கும்போது மனதில் வரும் கஷ்டம்.....

Kasthuri Rengan சொன்னது…

மனசு நல்லாப் பேசுது நல்லதை பேசுது
வாழ்த்துக்கள்
நல்ல பதிவு

அண்ணன் முத்து நிலவன் அவர்களின் தளம் மூலம் வந்தேன்..

http://www.malartharu.org/2014/01/word-verification.html