சினிமா... இந்த மூன்று எழுத்து மிகப்பெரிய சக்தியாக விளங்குகிறது என்பது எந்தளவுக்கு உண்மையோ அந்தளவுக்கு சமூகத்தைச் சீரழிக்கிறது என்பதும் உண்மை. அன்றைய சினிமாக்கள் பொழுதுபோக்கு ரகத்தில் இருந்தாலும் காதலைச் சொல்லின காமத்தைச் சொல்லவில்லை... பகையைச் சொல்லின வன்முறையைச் சொல்லவில்லை.... ஆனால் இன்றோ நிலைமை வேறு.
இன்றைய சினிமா வன்முறை நிறைந்ததாகவே இருப்பது வேதனைக்குரியது. பெரும்பாலும் கதைக்களமாக வன்முறை சூழ்ந்த இடமே தேர்ந்தெடுக்கப்படுகிறது, கதைக்கு தேவையில்லை என்றாலும் கவர்ச்சி பரிமாறப்படுகிறது. அடிதடி. வெட்டுக்குத்து, டாஸ்மார்க் என்ற கலாச்சாரத்தில் பயணிக்க ஆரம்பித்திருக்கிறது.
கொலை, கொள்ளை, கற்பழிப்பு என எல்லாவற்றையும் எப்படிச் செய்யலாம் என சொல்லிக் கொடுக்கும் களமாக சினிமா மாறியுள்ளது. பெரும்பாலான இயக்குநர்கள் நல்ல கதையோடு வந்தாலும் முதல்படம் கொடுக்கும் கசப்பான அனுபவத்தால் பத்தோடு பதினொண்ணு என்ற கணக்கில் அவர்களும் கலாச்சார சீரழிவுக்கான பாதையில் பயணிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
எந்த ஒரு சினிமாவும் நல்லதைச் சொல்லவில்லை என்றாலும் கெட்டதைச் சொல்லாமல் இருக்கவேண்டும் அல்லவா. ஆனால் இன்றோ படம் முழுவதும் குடிப்பதையும் கூத்தடிப்பதையும் காட்டிவிட்டு முடிவில் திருந்தி குடிக்காதீர்கள் என்று சொல்வது போல் வைப்பது சிகரெட் பெட்டியின் மீது சிறிய எழுத்தில் தீங்கானது என்று எழுதி விற்பது போலவும் மதுக்கடைகளில் மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு என்று எழுதி வைத்துவிட்டு காந்தி ஜெயந்தி அன்று கூட பின்புறமாக விற்பது போலவும்தான் இருக்கிறது.
சமுதாயம் சார்ந்த சினிமாக்களைவிட சமூகம் சார்ந்த சினிமாக்களுக்கும் காதலையும் காமத்தையும் கலந்து சொல்லும் சினிமாக்களுக்குமே இப்போது வரவேற்பு இருக்கிறது. சினிமாக் கலாச்சாரமே இன்று பெண்களை பொதுவெளி என்று கூட ஒரு நடிகனிடம் நாகரீகமற்று நடந்து கொள்ளச் சொல்கிறது. கலாச்சாரக் காவலர்கள் என்று சொல்பவர்கள் கூட படமெடுக்கிறேன் பேர்வழி என்று கலாச்சாரத்தைக் கெடுக்கிறார்கள்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரும் விரும்பும் ஒரு பொழுதுபோக்கு சாதனம் இப்போது நமது பொழுதைப் போக்குவதோடு மட்டுமல்லாமல் நல்லவையல்லா எல்லாவற்றையும் நெஞ்சில் விதைத்து பிஞ்சில் இருந்து பெருசு வரை பழுக்க வைக்கிறது.
இங்கே சினிமா நாயகன் என்பவன் இறைவனாகப் பார்க்கப்படுகிறான். நாயகனுக்கு ஏதாவது ஒன்று என்றால் மொட்டை அடிக்கவும் வேல் போடும் துடிக்கும் சராசரி மனிதன் ஒரு படி மேலே போய் தலைவா உயிர் உனக்கு என்று பிதற்றிக் கொண்டு திரிவதைப் பார்த்திருக்கிறோம். இதே தனது குடும்பத்தினருக்காக என்றாவது ஒருநாள் வருந்தியிருப்பாரா என்று சிந்தித்துப் பார்த்தால் வருத்தமே மிஞ்சும்.
கெட்டதைச் சொல்லும் சினிமாக்களில் வணிக நோக்கின்றி நல்லதைச் சொல்கிறேன் என்று வரும் சினிமாக்கள் குறையக் காரணமே நாம் அவற்றை விரும்பிப் பார்க்காததுதான். இன்றைய சினிமாக்கள் அரசியல்வாதி ஆகும் ஆசையிலும் மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் வகையிலும் வரும் படங்களை ஆராவாரத்துடன் நாம் ஆதரிப்பதால் சமூக மாற்றங்களைக் கொண்டு வரும் படங்கள் வருவது என்பது அபூர்வமான விஷயம்தான்.
(ரூபனின் பொங்கல் கட்டுரைப் போட்டிக்காக எழுதியது)
-'பரிவை' சே.குமார்.
13 எண்ணங்கள்:
வணக்கம்
சே.குமார் (அண்ணா)
மிக்க மகிழ்சியாக உள்ளது... இணைப்பை தனபாலன் (அண்ணவுக்கு அனுப்புங்கள்)பின்பு எங்களுக்கு வந்து சேரும் தங்களின் கட்டுரை நடுவர்களின் பரிசீலனைக்கு அனுப்பிய பின் மீண்டும் வந்து.. பார்க்கிறேன்...அண்ணா. வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ரசிகர்கள்தான் காரணம். உண்மை. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒரு படம் வந்து அந்தக் காலத்தின் டிரெண்டை மாற்றும். 16 வயதினிலே, மௌன ராகம் படங்கள் போல. இப்போதைய டிரெண்டை மாற்ற ஒரு நல்ல படம் சீக்கிரம் வரட்டும். முதலில் டாஸ்மாக் காட்சி படத்தில் வராமல் இருக்க வேண்டும்.
TH
அருமை நண்பரே
இன்றைய திரைப்படங்கள் ஆக்கத்திற்கு வழிகாட்டக் கூடியவை அல்ல
tha//ma.3
பணம் ஒன்றே பிரதானமாக இருக்கும் போது, என்ன செய்ய...?
வெறியர்களை மாற்றுவதும் சிரமம் தான்... காலம் (வயது) உணரச் செய்யும்...
உண்மை தான்,குமார்!அன்றைய சினிமாக்களில்,ஒரு 'செய்தி' இருந்தது.இன்று..............ஒரு சில (அற்பமாக) நல்ல படங்கள் வருகிறது தான்.வியாபார ரீதியில் வெற்றி பெறுவதில்லை கூட!///இந்தத் தலை முறைக்கு எல்லாமே "வேகம்" தானே?
சினிமா மோகம் குறைந்த பாடில்லை ,அருமையாகச் சொன்னீர்கள் !
த.ம 5
முந்தைய பதிவின் போதே போட்டியில் கலந்து கொள்ளலாம் என்று சொல்ல நினைத்தேன்... இதோ கட்டுரை எழுதி விட்டீர்கள்... கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி... நல்லதொரு கட்டுரையை (பதிவின் இணைப்பை) நடுவர்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.... மற்ற தலைப்பிலும் கட்டுரை எழுதலாம்... விளக்கங்களுக்கு விதிமுறையை பார்க்கவும்... போட்டியில் வெற்றி பெற எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...
என் வலைப்பக்கத்தில் உங்கள் வலைப்பக்க இணைப்பைத் தந்திருக்கிறேன். நடுவர்ங்கிற முறையில தனபாலன் சார் தரும் கட்டுரைகளில், பேரையெல்லாம் எடுத்துட்டு தனியே பிரித்துப் பார்த்துப் படிக்கும்போது , சரியான முடிவுக்கு வரமுடியும் என்று நம்புகிறேன். சரிதானே?
கருத்திட்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றி.
வாங்க முத்துநிலவன் ஐயா...
உண்மைதான்... நடுவர் என்ற பொறுப்போடு பெயரின்றி படிப்பதே நன்று...
என் வலைப்பக்க இணைப்பை தங்கள் தளத்தில் கொடுத்தமைக்கு நன்றி.,
//கெட்டதைச் சொல்லும் சினிமாக்களில் வணிக நோக்கின்றி நல்லதைச் சொல்கிறேன் என்று வரும் சினிமாக்கள் குறையக் காரணமே நாம் அவற்றை விரும்பிப் பார்க்காததுதான்.//
சரியாச் சொன்னீங்க குமார்....
கருத்துரையிடுக