ஊருக்கு ஒரு கோ-ஆப்டெக்ஸ் இருக்கும். அதில் துணிகள் மற்றும் கைவினைப் பொருட்களை வைத்து விற்பனை செய்வார்கள். தேவகோட்டையிலும் ஒன்று இருந்தது. நாங்கள் பள்ளியில் படிக்கும் காலத்தில் சரஸ்வதி திரையரங்கிற்கு எதிரே கோ-ஆப்டெக்ஸ்ன்னு போட்டு வண்ணத்துப்பூச்சி படம் போட்டிருக்கும். பெரிய கடையா இருந்தது, ஆளில்லாத கடையில யாருக்கு டீ ஆத்துறேன்னு சொல்லுற கணக்கா ரெண்டு பேரு உக்காந்திருப்பாங்க. மீனில்லாத கம்மாயில துண்டியப் போட்டுட்டு உக்காந்திருக்க மாதிரி மீனுக்காக காத்திருப்பாங்க. பக்கத்துக்கடைக்காரன் அழிஞ்ச கண்மாயில மீனை அள்ளுற மாதிரி அள்ளிக்கிட்டு இருப்பான்.
தீபாவளிக்கு எல்லாக் கடையிலும் விற்பனை சூடு பிடிக்கும். இங்க என்னடான்னா கடைக்கு முன்னாடி எவனாவது வெடிக்கடை போட்டிருப்பான். சரி தீபாவளிக்கு இப்படின்னா பொங்கலுக்கு அதே கடைக்கு முன்னால கரும்பு விற்பனை சூடு பிடிக்கும். கல்லூரியில் படிக்கும் போது கோ-ஆப்டெக்ஸின் இருப்பிடத்தை சரஸ்வதி திரையரங்கிற்கு அருகில் இருந்து லெட்சுமி திரையரங்கிற்கு அருகில் மாற்றினார்கள். அப்போது அதே நிலைதான்....
எங்க தமிழ் ஐயாவுடன் அடிக்கடி அங்கு செல்வேன். அங்கிருப்பவர் எங்க ஐயாவின் தோழர், இருவரும் இலக்கியம் பேசுவார்கள். நாங்கள் அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு இருப்போம். வாரத்தில் இரண்டு முறையாவது அங்கு செல்வோம். ஐயா பெரும்பாலும் கோ-ஆப்டெக்ஸில் வாங்கும் கதர் சட்டையும் பேண்ட்டும்தான் அணிவார். என்னைப் பொறுத்தவரை ஊதுபத்தி வாங்கியிருக்கிறேன்.
கோ-ஆப்டெக்ஸ் என்பது டாஸ்மார்க் போல் ஒரே நாளில் கோடிகளை அள்ளும் துறையாக இல்லை. இத்தனை வருட காலத்தில் கோடிகளில் லாபம் பெறவில்லை என்பதைவிட லாபமே இல்லாமல் நஷ்டத்தில் பயணித்துக் கொண்டிருந்த துறை என்றுதான் சொல்ல வேண்டும். எப்பவுமே நேர்மையான அதிகாரிகளை ஆளும் வர்க்கம் ஓரிடத்தில் இருக்க விடாது என்பது எல்லோரும் அறிந்ததுதானே. அந்த வகையில் இவரையும் இதுவரை 18 முறை இடமாற்றம் செய்திருப்பதாக செய்திகள் சொல்கின்றன.
மதுரையில் தீயாய் ஜ்வாலை விட்ட நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் கூட்டுறவுத் துறைக்கு மாற்றப்பட்டார். இது தேறாது என்று ஒதுக்கப்பட்ட துறை என்பதால் இவர் நாற்காலியில் உட்கார்ந்து நாட்களை எண்ணிக் கொண்டிருக்க வேண்டியதுதான் என்று நினைத்தவர்களின் நினைப்பை தவிடுபொடியாக்கும் உத்வேகத்துடன் புதுமைகளைப் புகுத்தி காய்ந்து கிடந்த நெசவுத் தொழிலை பசுமையாய் துளிர்க்கச் செய்தார்.
கடந்த ஆண்டு கோ-ஆப்டெக்ஸின் மொத்த வர்த்தகம் 245 கோடியாம். இத்தனை நாளாக நஷ்டத்தில் இருந்த ஒரு துறை இவர் பொறுப்பேற்ற ஒரு வருடத்தில் இரண்டே கால் கோடி லாபம் ஈட்டியிருக்கிறது என்பது இந்த மனிதரின் உழைப்புக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இதில் ஒரு கோடியை பாடுபட்ட நெசவாளர்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கி அவர்களை இன்னும் உற்சாகப்படுத்தியிருக்கிறார். அவர்களின் வாழ்வை மேம்படுத்தும் விதமாக பல முயற்சிகள் செய்து வருகிறார்.
இந்நிலையில் தமிழக கோ-ஆப்டெக்ஸ் 2013-ஆம் ஆண்டில் அதிக அளவில் கைத்தறித் துணிகளை உற்பத்தி செய்தமைக்காகவும் உற்பத்தியில் மகத்தான பங்களிப்பை தந்ததற்காகவும் மத்திய அரசின் இரண்டு தேசிய விருதுகளை அள்ளியிருக்கிறது. இத்தனை வருடங்கள் சாதிக்க முடியாததை ஒற்றை வருடத்தில் சாதித்திருக்கிறார் இந்த நெஞ்சுரமிக்க தமிழர். திறமையுள்ளவன் எங்கும் ஜெயிப்பான் என்பதற்கு திரு. சகாயம் அவர்கள் சிறந்த உதாரணம்.
'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' என்பதை வாழ்க்கை கோட்பாடாக வைத்திருக்கும் திரு.சகாயம் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுணை என்ற கிராமத்தில் உபகாரம் என்பவருக்கு பிறந்த ஐந்து மகன்களில் கடைக்குட்டி பெற்றவர்களின் ஆசை விதை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தனது அண்ணனுடன் கடக்கும் சமயத்தில் எல்லாம் ஒரு நாள் இந்த அலுவலக மாவட்ட ஆட்சியர் நாற்காலியில் அமர வேண்டும்' என நெஞ்சுக்குள் முளை விட்டு வளர ஆரம்பித்திருக்கிறது.
அந்த எண்ணம்.... முளைவிட்ட அந்த விதை.... இன்று விருட்சமாய் வளர்ந்து எண்ணத்தில் எண்ணியதை எட்டி இன்று தேசிய விருதுகளை அள்ளியிருக்கிறது. எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் ஒரு புன்னகையோடு அதை எதிர்கொண்டு வெற்றி பெற்ற திரு. சகாயம் அவர்கள் நம்மில் ஒருவர் என்று நினைக்கிறபோது நெஞ்சை நிமிர்த்தி வாழ்த்தச் சொல்கிறது.
திறமையுள்ளவன் எங்கு போனாலும் ஜெயிப்பான் என்பதற்கு திரு. சகாயம் அவர்கள் மிகப்பெரிய உதாரணம் என்பதை மீண்டும் ஒரு முறை சொல்லி லஞ்சம் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்தி தமிழனாய் வாழும் திரு.சகாயம் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்.
-'பரிவை' சே.குமார்.
11 எண்ணங்கள்:
அருமையான மனிதர் பற்றிய சிறந்த பகிர்வு. வாழ்த்துகள் குமார்.
திறமையுள்ளவன் எங்கு போனாலும் ஜெயிப்பான் என்பதற்கு திரு. சகாயம் அவர்கள் மிகப்பெரிய உதாரணம்!..
நிறைவான வரிகள்.. இனிய பதிவு!..
சிறக்கட்டும் 2014
நல்ல பதிவு ஆனால் social network sitela share பன்ன widget ஏதாச்சும் இருந்தா நல்லா இருக்கும்...
இனிய புத்தாண்டு நல வாழ்த்துக்கள்,உங்களுக்கும்,குடும்பத்தினருக்கும்!!!///வாழ்க பல்லாண்டு!உழைப்பு உயர்வு தரும் என்று நிரூபித்த பெரு மனிதர் அவர்!
அருமையான மனிதர் பற்றிய சிறந்த பகிர்வு. வாழ்த்துகள்.
திரு சகாயம் அவர்கள் போற்றப்பட வேண்டியவர்
சிறப்பான மனிதரைப் பற்றி சிறப்பான பகிர்வு... பாராட்டுக்கள்...
தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய 2014 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
உண்மை,நேர்மை, உழைப்புக்கு கிடைத்த வெற்றி மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணம்
லஞ்சம் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்தி தமிழனாய் வாழும் திரு.சகாயம் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்.//
நல்ல மனிதரை வாழ்த்துவோம் நிச்சயமாய்.
வாழ்க வளமுடன்.
தேசிய விருதுகள் பெற்று தந்தமைக்கு வாழ்த்துக்கள் திரு.சகாயம் அவர்களுக்கு.
திறமை, உழைப்பு என்றும் பெருமைகளை தேடி தரும்.
நல்ல பகிர்வுக்கு நன்றி.
திறமையுள்ளவன் எங்கு போனாலும் ஜெயிப்பான் என்பதற்கு திரு. சகாயம் அவர்கள் மிகப்பெரிய உதாரணம் என்பதை மீண்டும் ஒரு முறை சொல்லி லஞ்சம் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்தி தமிழனாய் வாழும் திரு.சகாயம் அவர்களை வாழ்த்துவோம்
கருத்துரையிடுக