மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 10 ஜனவரி, 2014

நண்பேன்டா: ராமகிருஷ்ணன்


ங்கள் நண்பர்கள் வட்டத்தில் முக்கியமான மற்றொருவன் நாச்சாங்குளம் என்ற ஊரில் இருந்து கல்லூரிக்கு வந்தவ ராமகிருஷ்ணன். ஆரம்பத்தில் எல்லாருடனும் கலகலப்பாக பேசமாட்டான். இவனுக்கு அருகில் அமர்ந்த பிரான்சிஸ் மற்றும் முத்தரசுடன் மட்டுமே பேசுவான். கொஞ்சம் கொஞ்சமாக எல்லாருடனும் ஒட்ட ஆரம்பித்தவன்... நெருக்கமாயிட்டான்.

ஒருமுறை நாச்சாங்குளத்துக்கு எங்கள் எல்லாரையும் கூட்டிச் சென்றான். அப்போது அவர்களது வீடு மிகப்பெரிய வசதி கொண்ட வீடு இல்லை. சின்ன ஓட்டு வீடும் முன்புறம் இழுத்துக் கட்டப்பட்ட கூரைக் கொட்டகையும்தான். ஆனால் அந்த வீட்டில் இருந்த அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, தங்கை என எல்லாருடைய மனசும் விசாலமாக இருந்தது. எங்களைப் பார்த்ததிலும் நாங்கள் வந்ததிலும் அவர்களுக்கு அவ்வளவு சந்தோஷம். படிக்கும் காலத்தில் சாதி என்ற வட்டத்துக்குள் வராமல் எல்லாரும் ஒன்றாய் பயணிப்பது மிகப்பெரிய சந்தோஷம் அல்லவா. இன்னும் சாதி என்ற கூட்டுக்குள் அடைபடாமல் பறப்பதும் சந்தோஷமே. 

அந்த ஊர் கண்மாய்க்கரையில் அமர்ந்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். கண்மாயில் குளிப்பது என்றாலே எனக்கெல்லாம் அலாதிப் பிரியம். எங்கள் ஊர்க் கண்மாயில் இக்கரையில் இருந்து அக்கரைக்கு நீச்சல் அடித்து குளிப்பவன். எனவே நீர் நிறைந்து கிடந்த கண்மாய்க்குள் இறங்கி நீண்ட நேரம் ஆட்டம் போட்டோம். அன்று இரவு அங்கேயே தங்கி மறுநாள்தான் திரும்பினோம்.

பின்னர் ஒருமுறை கோட்டூர் கோவில் திருவிழாவிற்காக என்னை மீண்டும் ஊருக்கு அழைத்துச் சென்றான். இருவரும் கல்லூரியில் இருந்து சைக்கிளில் கிளம்பினோம். இரவு கோட்டூர் கோவிலுக்குச் சென்று வந்தோம். மறுநாள் ஊருக்குத் திரும்பும்போது தேவகோட்டைக்கு அருகே இருக்கும் ஊரில் உள்ள அவனது அக்கா வீட்டுக்குச் சென்றோம். எங்களைப் பார்த்ததும் அக்கா கோழி அடித்து குழம்பு வைத்து சாப்பிட்டுத்தான் போகனும் என்று சொல்லிவிட்டார். அப்புறம் சாப்பிட்டுவிட்டு இருவரும் படத்துக்குப் பொயிட்டு அவரவர் வீட்டுக்குப் போனோம்.

எங்கள் கல்லூரியைப் பொறுத்தவரை பிரச்சினைகள் அதிகம் இருக்கும் என்பதால் கல்லூரிச் சேர்மன், துறைச் செயலர் என எதற்கும் தேர்தல் வைப்பதில்லை. மூன்றாம் ஆண்டு படிக்கும் போது அதற்காகவே நிறைய ஸ்ட்ரைக் எல்லாம் நடந்தது. பின்னர் துறைச் செயலாளர் பதவிக்கு மட்டும் தேர்தல் வைத்தார்கள். எங்கள் வகுப்பைப் பொறுத்தவரை மூன்று பிரிவு அதில் இரண்டு பிரிவு வெற்றி பெற வாய்ப்பில்லை. காரணம் ஐந்து பேர் கொண்ட பிரிவுகள் அவை. எங்கள் வட்டத்திலோ பத்துப் பேருக்கு மேல்... மேலும் பெண்கள் வேறு எங்களுக்குத்தான் ஆதரவு தருவார்கள் என்பதை அவர்கள் அறிவார்கள். எனவே எங்கள் ஆதரவைப் பெற பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 

பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து எங்களில் ஒருவரை நிற்க வைக்க நாங்கள் முயற்சித்தோம். முதல் மற்ற இரு பிரிவினரும் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. நாங்கள் எங்கள் முடிவில் பின்வாங்காத நிலையில் நின்றால் இவனுகதான் ஜெயிப்பானுங்க என்று உறுதியாகத் தெரிந்ததால் ராமகிருஷ்ணனின் ஊரைச் சேர்ந்த ஒரு நண்பன் பிகாம் பிரிவில் முக்கியமானவனாக (மாணவனாக அல்ல) இருந்ததால் அவனும் அவர்களிடம் சொல்ல ராமகிருஷ்ணனை நிறுத்தினால் நாங்களும் ஆதரவு என்று வர நண்பன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டான். உடனே கல்லூரி முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டி ஒரு ஆட்டம் போட்டுவிட்டோம்.

இவனுக்கும் காதல் வந்தது... ஆனால் அந்தப் பாழாப் போன காதல் ஆறாவது  செமஸ்டரில் அதாவது மூன்றாம் ஆண்டு முடிவில் வந்தது. இருவரும் விரும்பினார்கள். கல்லூரி முடிந்து விடுமுறையிலும் தொடர்ந்த காதல் பின்னர் என்னாச்சு என்று தெரியவில்லை. இருவருக்கும் குடும்பங்கள் இருக்கின்றன. இப்போது இவன் சிங்கப்பூரில் இருக்கிறான். இவனைச் சந்தித்து வருடங்கள் ஆகிவிட்டது.

நண்பேன்டா தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

8 எண்ணங்கள்:

Menaga Sathia சொன்னது…

நட்பு தொடரட்டும்..வாழ்த்துக்கள்!!

செங்கோவி சொன்னது…

நல்ல பதிவு..ஆனாலும் காதல் கதையை பொதுவில் வைக்கணுமா?

அம்பாளடியாள் சொன்னது…

நண்பர்களுடன் வாழும் காலத்தில் பெற்ற அனுபவங்களும் நீண்ட
காலம் கழித்து அவர்களைப் பற்றி நாம் அறியும் போதும் வரும்
உணர்வானது இரத்த உறவுகளை விட ஒரு படி மேலாகத் தோன்றும் .
நட்பின் உணர்வுத் தூறல் தொடர்ந்தும் சிறப்பாகத் தூறட்டும் .வாழ்த்துக்கள் சகோ .

”தளிர் சுரேஷ்” சொன்னது…

நினைவுகள் இனித்தன! அருமை! நன்றி!

Unknown சொன்னது…

பள்ளிப் பருவ நட்பு&காதல் எல்லோருக்கும் நன்றாக அமைந்து விடாது!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விரைவில் இனிய சந்திப்பு நடக்கட்டும்... நட்பிற்கு வாழ்த்துக்கள்...

கோமதி அரசு சொன்னது…

நட்புப் பற்றிய மலரும் நினைவுகள் அருமை.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

விரைவில் உங்கள் நண்பரைச் சந்திக்க வாழ்த்துகள்.....