மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 26 ஜனவரி, 2014

மண் பயனுற வேண்டும் - பாரதி விழா:2

பாரதி நட்புக்காக அமைப்பின் பொங்கல் சிறப்புப்  பட்டி மன்றமான இன்றைய வாழ்க்கை முறை நமக்கு தருவது நிம்மதியே / நெருக்கடியே என்பது குறித்த முதல் பதிவைப் பார்க்க... 



விழாவின் தொடக்க நிகழ்வுகள் எல்லாம் முடிந்ததும் பட்டிமன்றத்துக்காக மேடை தயாரானது. பேச்சாளர்களை திரு. முனீஸ்வரன் அவர்கள் அறிமுகம் செய்து மேடைக்கு அழைத்தார். நிம்மதியே அணிக்காக பேராசியர். திரு. இராமச்சந்திரன், முனைவர் சுந்தரவல்லி மற்றும் திரு. சிவக்குமார் ஆகியோரும் நெருக்கடியே அணிக்காக புலவர் திரு. இராமலிங்கம், திரு. மோகனசுந்தரம் மற்றும் டாக்டர்.பிரேமா குமார் ஆகியோரும் பேசுவதற்காக மேடைக்கு அழைக்கப்பட இறுதியில் சொல்வேந்தர் கலைமாமணி திரு.சுகிசிவம் அவர்களும் மேடை ஏறினார். பேச்சாளர்கள் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யப்பட்டது.

பட்டிமன்றத்தை ஆரம்பித்த நடுவர் அவர்கள் தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து நின்று கொண்டே பேச்சை ஆரம்பித்தார். நடுவர்ன்னா உக்காந்துக்கிட்டுத்தான் பேசணும். எனக்கும் அங்கு மைக் எல்லாம் வைத்து இருந்தார்கள். நானும் எனக்கான இடத்தில் அமர்ந்து எழுந்து வந்துவிட்டேன். இப்பல்லாம் நின்று கொண்டு பேசுவதையே வழக்கமாக வைத்திருக்கிறேன் என்றார்.

அதற்கு உதாரணமாக திருமாலுக்கு நின்ற கோலம் அமர்ந்த கோலம் படுத்த கோலம் என்று உண்டு அதுபோல பட்டிமன்றத்திலும் நின்ற கோலம், அமர்ந்த கோலம்  என பேசிவிட்டோம் இனி படுத்த கோலம் ஒன்றுதான் பாக்கி என தென்கச்சி சுவாமிநாதன் அண்ணன் அவர்கள் அடிக்கடி சொல்வார்கள் அதையும் செய்துவிட்டால் நன்று. ஏன்னா நின்னுக்கிட்டு பேசுறவனுக்கு உக்காந்தா பேச வராது. உக்காந்து பேசுறவனுக்கு நின்னுக்கிட்டு பேச வராது. ஒரு தடவை நெடுஞ்செழியன் அமைச்சராக இருக்கும் போது பொதிகையில அவர் பேசிய ஒரு நிகழ்ச்சியினை தென்கச்சி சுவாமிநாதன் அண்ணன்தான் பதிவு செய்தார். நெடுஞ்செழியன் உக்காந்து பேசுவதற்காக எல்லாம் தயார் பண்ணி வைத்திருக்கிறார்கள். ஆனால் அவரோ நின்று பேசிப் பழக்கப்பட்டவர் அதனால் வந்து உக்காந்ததும் பேச்சு வரவில்லை. உடனே அவர் நான் நின்று கொண்டுதான் பேசுவேன் அதற்கு தயார் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டாராம். உடனே மைக்கை கம்பில் கட்டி சுவாமிநாதன் அண்ணன் நிகழ்ச்சி முடியும் வரை தூக்கிப் பிடித்துக் கொள்ள இவர் கையை அங்கிட்டும் இங்கிட்டும் ஆட்டிப் பேசி முடித்தாராம்.

பாரதி ஒருமுறை விலங்குகள் சரணாலயத்துக்குப் (zoo) போனாராம். அங்கு போனதும் அங்கிருந்த சிங்கத்தைப் பார்த்தவருக்கு அதைத் தொட்டுப் பேச ஆசை வந்ததாம். அதற்காக அங்கிருந்து காப்பாளரிடம் நான் அந்த சிங்கத்தை தொட்டுப் பேச வேண்டும் என்றாராம். அவரோ தொட்டுப் பேசுறது பிரச்சினை இல்லை. ஆனா சிங்கத்துக்கிட்ட பேசணுமின்னு இதுவரை யாரும் கேட்டதில்லை என்று மறுத்திருக்கிறார். ஆனால் மகாகவியோ விடாப்பிடியாக நின்று சிங்கத்தின் அருகில் சென்று பாடி அதனை கர்ஜிக்கச் சொன்னாராம். அதுவும் தொடர்ந்து பத்து நிமிடங்கள் கர்ஜித்ததாம். இதை செல்லம்மா அவர்கள் எழுதும் போது அவரைப் பற்றி எனக்குத் தெரியும். இறைவா அந்த சிங்கத்துக்காவது நல்ல புத்தியைக் கொடு என்று வேண்டிக் கொண்டேன் என்று எழுதியிருக்கிறார் என்றவர் இதனை எதற்காகச் சொல்கிறேன் என்றால் இங்கு பாரதி நட்புக்காக அமைப்பினர் இதுவரையான நிகழ்வுகளைப் பற்றிய தொகுப்பின் ஆரம்பத்தில் சிங்கத்தில் இருந்து பாரதி வருவதாக காண்பித்தார்கள் அவர்கள் இதை நினைத்துப் போட்டார்களா இல்லையா என்பது தெரியவில்லை ஆனால் மிகவும் பொருத்தமான காட்சி அது என்றார்.


'அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்' பாடலைப் பற்றிச் சொல்லும் போது அக்கினிக் குஞ்சென்றால் என்ன என்று அழகாக விளக்கினார். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு ஸ்பார்க் வரும். அது வரும்போது வாழ்க்கையில் மாற்றம் வரும். அந்த ஸ்பார்க் முப்பதிலும் வரும். நாற்பதிலும் வரும் ஒரு சிலருக்கு வராமலே போய்விடும் எனச் சொல்லி பட்டினத்தார், திருநீலகண்டர் எனச் சிலரின் வாழ்க்கையில் அப்படி ஒரு அக்கினி (ஸ்பார்க்) வந்த இடத்தை அழகாக விளக்கினார். அதிலும் குறிப்பாக தத்தரிகிட தத்தரிகிட தோம் என்றால் என்ன என்று விளக்கினார் பாருங்கள். மிகவும் அருமை... ஒரு கவிஞனின் பார்வை மற்றவர்களின் பார்வை பார்க்காததை எல்லாம் பார்க்கும். அப்படி வாழ்க்கையில் ஸ்பார்க் வந்து அதனை அடைந்து வெற்றி பெற்ற பின் ஆடும் ஆனந்தக் கூத்து இருக்கு பாருங்க... அதுதான் இந்த தத்தரிகிட தத்தரிகிட தோம் என் இன்னும் பல விளக்கங்களுடன் விளக்கினார்.

இன்னும் நிறைய விஷயங்களுடன் பாரதி குறித்து நிறைய விஷயங்கள் பேசினார். பின்னர் பேச்சாளர்களை ஒவ்வொருவராக அறிமுகம் செய்தார். திரு. இராமச்சந்திரன், திரு இராமலிங்கம் இருவரையும் அறிமுகம் செய்யும் போது மிகச்சிறந்த பேச்சாளர் ஐயா திரு. சாலமன் பாப்பையா அவர்களின் குழுவில் பேசுபவர்கள் நகைச்சுவையுடன் பேசினாலும் சிந்தனைக்கு விருந்தாக பேசுபவர்கள் என்றார். பேராசிரியை பிரேமாவைப் பற்றிச் சொல்லும் போது கலைஞர் டிவியில் சூரிய வணக்கம் என்ற நிகழ்ச்சியை நடத்துபவர் என்றும் நல்ல பேச்சாளர் என்றும் சொன்னார். முனைவர் சுந்தரவல்லி அவர்களை பட்டிமன்றத்தின் சூப்பர்ஸ்டார் என்றவர் இவருக்காக நடுவரின் தேதியைக் கூட மாற்றுகிறார்கள் என்றார். மற்றும் திரு மோகனசுந்தரத்தை சிரிக்கச் சிரிக்க பேசக்கூடியவர் என்றும் திரு. சிவக்குமாரை மிகச்சிறந்த பேச்சாளர் என்றும் சொல்லி அவர்க்ளாய் அறிமுகம் செய்து வைத்தார்.

பேச்சாளர்களின் பேச்சுக்களுக்கு இடையே அவர்களின் கருத்துக்களை மையமாக வைத்துப் பேசினார். ஒரு முறை வீட்டில் சமையலுக்கு அரிசி இல்லை. இருந்த அரிசியையும் எடுத்து குருவிகளுக்குப் போட்டு காக்கை குருவி எங்கள் சாதி என பாடிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த பக்கத்து வீட்டு அம்மா செல்லம்மாவிடம் 'என்னம்மா சாப்பாட்டுக்கு இருந்த அரிசியையும் இந்த மனுசன் பறவைகளுக்குப் போட்டுட்டாரே' என்று கேட்டாராம் அதற்கு செல்லம்மா கோபப்பட்டு பேசாமல் சிரித்தபடியே அது அவரோட சுபாவம் என்று சொன்னார்களாம்.


சுந்தரவல்லி அவர்கள் மாமா, சித்தப்பா குறித்துப் பேசியதைப் பற்றி சொன்னவர் இன்னைக்கு மாமா இல்லைன்னா என்ன அந்த இடத்தைத்தான் நண்பர்கள் நிரப்பி விடுகிறார்களே.. எனது நண்பரின் வீட்டில் அவரும் அவரது மகளும் எதாவது பிரச்சினை பற்றி பேசும் போது நான் அங்கு சென்றால் இந்த உன்னோட சித்தப்பாக்கிட்ட கேட்டுக்க என்று சொல்லிவிடுவார். அதுவும் சித்தப்பா நீங்களே சொல்லிவிடுங்கள் என்று கேட்கும். அதேபோல் விருந்தில் சொந்தக் காரனை எழுப்ப முடியுமா? அப்படி எழுப்பினால் அதை பெரிய பிரச்சினை ஆக்கிவிடுவார்கள். அங்கும் நண்பனைத்தான் எழுப்ப முடியும் என்று விரிவாகப் பேசியவர் இதை இங்கு நட்புக்கு இலக்கணமாகச் சொல்கிறேன் என்றார்.

இப்படியாக ஒவ்வொருவரின் பேச்சுக்கும் இடையிலும் நல்ல நல்ல கருத்துக்களை சொல்லிக்கொண்டிருந்தார். நாளைய பகிர்வில் அறுவர் உரையின் சிறு தொகுப்பும் நடுவரின் தீர்ப்பும்...

-நாளை தொடரும்...
-'பரிவை' சே.குமார்.

9 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

சுகி சிவம் பேச்சுகள் எப்பவுமே சுவாரஸ்யம்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

பட்டிமன்றத்தில் கலந்து கொண்ட ஓர் உணர்வு
நன்றி நண்பரே

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

பட்டிமன்றத்தில் கலந்து கொண்ட ஓர் உணர்வு
நன்றி நண்பரே

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பாரதி அவர்களின் விலங்குகள் சரணாலய சம்பவம் சுவாரஸ்யம்...

நடுவரின் தீர்ப்பை அறிய ஆவல்...

துரை செல்வராஜூ சொன்னது…

விழாவின் நேர்முக வர்ணனையாக அழகான நடையில் அருமையான பதிவு. மகிழ்ச்சி!..

சசிகலா சொன்னது…

இந்த காலத்தில் உறவுகளை விட நண்பர்கள் தான் அன்பிலும் சரி உதவுவதிலும் சரி முன் வந்து நிற்கிறார்கள். நடுவர் தீர்ப்பு என்ன என்று பார்ப்போம்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

இதை செல்லம்மா அவர்கள் எழுதும் போது அவரைப் பற்றி எனக்குத் தெரியும். இறைவா அந்த சிங்கத்துக்காவது நல்ல புத்தியைக் கொடு என்று வேண்டிக் கொண்டேன்//

ஹா ஹா ஹா ஹா பாரதி வாழ்க்கையிலும் செம காமெடிகள் நடந்துருக்கும் போல....!

Unknown சொன்னது…

பட்டி மன்றப் பேச்சுக்களை தொட்டுக் காட்டி அழகாக எழுதியிருக்கிறீர்கள்./தொகுத்திருக்கிறீர்கள்.நன்று+நன்றி!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல தொகுப்பு... நாங்களே கேட்ட உணர்வு. பாராட்டுகள்.