மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 24 ஆகஸ்ட், 2013

ஆதலால் காதல் செய்யலாமாம்


ஆதலால் காதல் செய்வீர்...

இந்தப் படம் குறித்த விமர்சனங்கள் அதிகம் வந்துவிட்டன. அதிலும் குறிப்பாக இணைய விமர்சகர்கள் எல்லாரும் அருமையான படம் என்ற விமர்சனத்தைக் கொடுத்திருக்கிறார்கள் என்பது ஆச்சர்யமான விஷயம். ஏனென்றால் ஒருவர் நல்லாயிருக்கு என்று சொன்னால் நாலு பேரின் ரசனை மாறும். ஆனால் இதில் எல்லாருடைய ரசனையும் ஒன்றாகவே இருக்கிறது... அப்படியென்றால் ஆச்சரியம்தானே.

ஆதலால் காதல் செய்வீர் அனைவரும் பாராட்டும்படியான படம்தானா... எனது பார்வையில்...

* படம் என்ன சொல்கிறது என்றால் படிக்கும் வயதில் காதல்... அதனால் கர்ப்பம்... அதற்குப் பின் வரும் விளைவுகள்... வேதனைகள்...  திருமணத்திற்கு முன் பிறந்த குழந்தையின் நிலை என இளவயது காதலையும் அதன் விளைவுகளையும் அழகாக விவரிக்கிறது.

* ஆரம்பத்தில் படம் சாதாரண கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாகவே இருந்து... காதலில் விழும் போதும்... இளமையின் வேகத்தில் இணைந்து அதனால் கர்ப்பமான பின்னாலும் படம் சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது.

* வெகுளியான அம்மா, பெண் சொல்வதை எல்லாம் நம்பும் அம்மா, மகள் கெட்டுப் போய் நிற்கிறாள் என்று தெரிய வரும்போது பதறித் துடிப்பதும், கணவனை உடனே வீட்டுக்கு வரச்சொல்லி எவங்கிட்டயோ படுத்து வயித்தை ரொப்பிக்கிட்டு வந்திருக்காங்க என்று அழும்போதும், தனது மகளை ஏற்க மறுக்கும் பையனின் வீட்டின் முன்பு போய் சண்டை போடும் போதும்... எதார்த்தமான நடிப்பைக் காட்டி சபாஷ் போட வைக்கிறார் துளசி.


* மகள் மீது பாசத்தை வைத்திருக்கும் ஒரு நடுத்தர வர்க்கத்துத் தந்தையாக நடித்திருக்கும் ஜெயப்பிரகாஷ், மகள் கெட்டுப் போய் வந்து நிற்கும் போதும் அவளுக்காக பையனின் வீட்டாரிடம் பேச்சு வார்த்தை நடத்தி, ஒரு கட்டத்தில் அவர்கள் தன் மகளை கேவலமாகப் பேச, அங்கிருந்து அழுதபடி எழுந்து வீதிகளில் கண்களைத் துடைத்தபடி ஓடிவரும் போதும் தனது நடிப்பில் புதிய பரிணாமத்தைத் தொட்டிருக்கிறார்.

* நாயகன், நாயகியின் நட்புக்களாக வரும் குண்டுப் பையனும் அந்தப் பெண்ணும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். அவர்கள் பேசும் ஒவ்வொரு வசனமும் அருமை.

* மனிஷா யாதவ் வழக்கு எண்ணில் பார்த்ததற்கு இதில் இன்னும் அழகாக தெரிகிறார். ஆரம்பத்தில் அவரது நடிப்பு சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்றாலும் இடைவேளைக்குப் பிறகு நடிப்பில் அசத்தியிருக்கிறார். குறிப்பாக கற்பமான பிறகு அதை மறைக்கப் போராடுவது வீட்டிற்குத் தெரியாமல் கலைக்க முயல்வது காதலன் ஏமாற்றிய பிறகு அவனை வெறுத்து என் வாழ்க்கையை நானே பார்த்துக் கொள்கிறேன் என்று அம்மாவிடம் சொல்வது என பல இடங்களில் நன்றாகவே நடித்திருக்கிறார்.

* நாயகி அழகி நாயகன் மொக்கை என்ற தமிழ் சினிமா வழக்கப்படி பிடிக்கப்பட ஒரு முகம்தான் நாயகன் சந்தோஷ், அவரது நடிப்பு சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. எந்த ஒரு எக்ஸ்பிரஷனையும் வெளிக்காட்டாத் தெரியாத முகம். அடுத்தடுத்து படங்கள் வரும் என்றெல்லாம் சொல்லமுடியாது.

* நாயகனின் அப்பா, அம்மா, அக்கா என அனைவரும் அளவான நடிப்பு.


* சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக் திகழும் மஹாபலிபுரத்தை தமிழ் சினிமா உலகம் தப்பு செய்வதற்காகவே பயன்படும் இடமாகக் காட்டிக் காட்டி இப்போது அப்படியே ஆகிவிட்டது என்பதே உண்மை.

* தப்புப் பண்ற வயசுல தப்புப் பண்ணுனா எதுவும் தப்பில்லை என்று மஹாபலிபுரம் போவதற்கு முடிவெடுக்கும் போது நாயகன் சொல்வது படம்பார்க்கும் மாணவ மாணவிகளை நாமும் செய்து பார்ப்போமே என்று நினைக்க வைக்கும்படிதான் இருக்கிறது.

* நாயகி வீட்டில் பெற்றோர் இல்லாத போது அங்கு வந்து கொட்டமடிக்கும் நாயகன், வீட்டிற்கு அம்மாவின் தோழி வருகிறார் என போன் வந்ததும் கொரியர் பையன் போல் நடிப்பது, அம்மா எதிரே போனில் பேசும் போது காதலனை அண்ணா போட்டு பேசுவது, கருவைக் கலைக்க மருத்துவமனை போகும் போது நண்பனை கணவனாக நடிக்கச் சொல்வது, கருவைக் கலைக்க வீட்டிலிருந்து நகைகளை எடுத்து வருவது என இளைய தலைமுறைக்கு தப்பு பண்ணுவதற்கு சொல்லிக் கொடுக்கும் படமாகவே இருக்கிறது.

* படத்தின் இறுதியில் அந்தக் குழந்தையின் நடிப்பை அதன் போக்கிலேயே படம் பிடித்து இருக்கிறார்கள். யுவனின் பாடல் நெஞ்சைக் கனக்க வைக்கிறது. வெயிலில் வெறுங்காலுடன் நடந்து சூட்டால் அலறும் குழந்தையின் வலியை  நம்மை சுமக்க வைத்திருப்பதில் இயக்குநர் சுசீந்திரன் வெற்றி பெற்றிருக்கிறார்.


* 'லவ் பண்ணும் போது சுற்றியுள்ளவங்க முட்டாளாத்தான் தெரிவாங்க ஆனா நீ ஏமாந்து நிக்கும்போதுதான் நீ முட்டாளானது உனக்குத் தெரியும்', 'இப்ப வேண்டாம்...நீயும் நானும் சேரணுமின்னா இதுதான் நமக்கு எவிடன்ஸ்... புரிஞ்சிக்க', 'கலைச்சதுக்கு அப்புறம் மாத்திப் பேசினாருன்னா', 'ஆம்பளை சுகத்தைத் தேடி அலையிற பொண்ணுக்கு எங்க பையனைக் கல்யாணம் பண்ணி வைக்கமுடியாது', - இப்படி நிறைய வசனங்கள் அருமை.

* தாயும் தந்தையும் வேறு வாழ்க்கை தேடிப் போக அநாதையான குழந்தை போல் எத்தனையோ உண்மைகள் இருக்கத்தான் செய்கின்றன. இருந்தாலும் காதலிக்கும் எல்லாரும் இப்படித்தான் இருப்பார்கள் என்று சொல்லியிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. எத்தனையோ காதல்கள் இதைவிட மோசமான சூழலிலும் ஜெயித்திருக்கின்றன என்ற உண்மையை இயக்குநர் ஏனோ உணரவில்லை.

* வயசுக் கோளாறால் தப்புப் பண்ணி, அதனால் பெற்றோர்கள் கஷ்டப்பட்டாலும் தனக்கான வாழ்க்கையை தானே பார்த்துக் கொள்ள முடியும் என்றுதான் சொல்கிறது படம். மேலும் காதல், உறவு, கர்ப்பம், பிரச்சினைகள், எதிர்பாரா முடிவு என செல்லும் படம் ஆதலால் காதல் செய்வீர் என்று சொல்லும்போது இதெல்லாம் நடக்க காதலியுங்கள்... அதனால் பிரச்சினை இல்லை என்று சொல்வதுபோல் இருக்கிறது.

* படத்தின் தலைப்பை ஆதலால் காதல் செய்யாதீர் என்று வைத்திருக்கலாம். காதல் செய்யாதீர் என்று வைத்தால் படம் பார்க்க யாரும் வரமாட்டார்கள் என்ற பயத்தால் இப்படி வைத்தார்கள் போலும்.

* மொத்தத்தில் யோசித்துப் பார்க்காமல் படத்தைப் பார்த்தால் இதுவும் நல்ல படமே...


படங்களுக்கு நன்றி - இணையம்.

-'பரிவை' சே.குமார்.

6 எண்ணங்கள்:

கவிதை வானம் சொன்னது…

நையாண்டி தலைப்பு என்று நினைக்கிறேன்..நல்ல ஆய்வுப் பதிவு

Unknown சொன்னது…

இந்தக் காவியத்தை நானும் பார்த்தேன்.குறிப்பாக,இள வயதினரை விட குடும்பஸ்தர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.ஒரு வேளை,ஆரம்பித்த குறிக்கோளை சுசீந்திரன் நெருங்கவே இல்லையோ?அந்தக் காலத்திலெல்லாம்,'வலுவான ஒரு செய்தி'யை மக்களுக்குக் கொண்டு செல்லும் ஒரு வழி முறையாக திரைப் படங்கள் தயாரிக்கப்பட்டன...........ஹூம்!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

...ம்... இன்றைக்கு தேவையான (ப)பாடம் தான்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க பரிதி முத்தரசன் அவர்களே...
எல்லாம் சொல்லி கடைசியில் குழந்தை அனாதையாக இருக்க இருவரும் வேறு வாழ்க்கை அமைத்துக் கொள்வதாய் முடித்து, ஆதலால் காதல் செய்வீர் என்றால் என்ன அர்த்தம்... வருத்தமாய் வந்த தலைப்புதான்...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…


வாங்க யோகராசா...

உண்மைதான்... சொல்லவந்ததை சரியாக சொல்லவில்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
படம் இமாலய வெற்றி.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…


வாங்க தனபாலன் சார்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.