மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 14 ஆகஸ்ட், 2013

தொடர்கதை : கலையாத கனவுகள்-7

தொடர்கதை ஆரம்பித்து உடல் நலமின்மை மற்றும் சில வேலைகளால் நீண்ட நாட்களாக தொடரமுடியவில்லை... அதற்காக கடந்த ஆறு பதிவுகளையும் சற்று நினைவூட்டுகிறேன்... படிக்காதவர்கள் பகுதியைச் சுட்டி படியுங்கள்...


மறுநாள் காலை 10 மணி...
முன்னதாகவேசெம்மேரிசுக்கு  எதிர்த்த  டீக்கடையில்  நிற்க,  நண்பர்கள் ஒவ்வொருவராய் வர ஆரம்பித்தனர் எல்லாரும் வந்ததும் சைக்கிள் மீண்டும் கிளம்பி செம்மேரிசை ஒட்டியிருக்கும் ரோட்டில் திரும்ப ஸ்ரீ சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி நுழைவு வாயில் வளைவும் அதன் அருகில் இருந்த கல்லறையும் வரவேற்க சைக்கிளை மிதித்தனர்.

தன் வாழ்வின் புதிய அத்தியாயம் இங்கு ஆரம்பமாகப் போகிறது என்பதை அறியாமல் கல்லூரி நோக்கி நண்பர்களுடன் பயணித்தான் கதையின் நாயகன் ராம்கி என்ற ராமகிருஷ்ணன். 


“தம்பி முத நாலு காலேசுக்குப் போறே... நல்லா சாமிய விழுந்து கும்பிட்டுட்டு துணூறை அள்ளிப் பூசிக்க... அப்பா படத்தையும் கும்பிட்டுட்டு போ... போகும் போது  மாரியாத்தா கோயில்ல இந்த காசை உண்டியல்ல போட்டுட்டு ஆத்தா குங்குமத்தை நெத்தியில வச்சிக்கிட்டு நல்லா படிச்சு பெரியாளா வரணுமின்னு வேண்டிக்க... அப்புறம் அங்கிட்டு இங்கிட்டு திரும்பிப்பாக்காம தலய குனிஞ்சிக்கிட்டே போயிடு... எவளாவது வெறும்கொடத்தோடவும்... வெத்து நெத்தியோடவும் வருவாளுங்க...  இந்தா இந்த தண்ணியக் குடிச்சிட்டு அந்தத் திண்டுல கொஞ்சம் ஒக்காரு... அடியேய் சீதா அடுப்படிக்குள்ள நிக்காம வாசப்பக்கமா நின்னு யாரும் வாறாகளா பாரு... தம்பி சீதை ராசியானவ... அவளை பாத்துட்டு விறுவிறுன்னு கோயிலுக்குப் போயிரு...”   

பகுதி-3   


“டேய் மாப்ளே... தம்பிக்கு யுனிவர்சிட்டி சல்யூட் சொல்லிக் கொடு..”
“இங்க வா... எப்படி அடிக்கணும் தெரியுமா... இப்படி செஞ்சு... இப்படி அடிக்கணும்... புரியுதா?”
அவன் செய்து காண்பித்த யுனிவர்சிட்டி சல்யூட் ஆபாசமாக இருக்க, பேசாமல் தலையைக் குனிந்து கொண்டான்.
“புரியுதா... போ... போயி அந்தா வர்றா பாரு பச்சைத் தாவணி அவளுக்கு யுனிவர்சிட்டி சல்யூட் அடிச்சிட்டு வா... போ... போடா”
மரியக்கண்ணு பட படக்கும் இதயத்துடன் மெதுவாக அவளை நோக்கி நடக்க ஆரம்பித்தான். என்ன நடக்கப் போகுதோ என்ற படபடப்பில் ராம்கியும் நண்பர்களும் அவன் போகும் பாதையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பகுதி-4   


“பண்ணுடான்னா...” என்று அவனை ஒருவன் தள்ளிவிட, மற்றொருவன் மண்டையில் தட்டினான்.
திரும்பி முறைத்தவன் “பூபாலன் தெரியுமா?” என்றான்.
“பூபாலனா... உனக்கு அவரு என்ன வேணும்...?” எதோ சாமி பேரைக் கேட்டு கன்னத்தில் போட்டுக் கொள்வது போல கையிலிருந்த சிகரெட்டை எறிந்துவிட்டு அவசரமாய்க் கேட்டான் வைரவன்.
“அவரு தம்பிதான் நான்...”
“பூபாலண்ணன் தம்பியா நீயி... அதை ஏன்டா நீ முன்னமே சொல்லலை...”
“அவரைச் சொல்லி தப்பிக்க நினைக்கலை...”
“ம்... அப்ப காலேசுக்கு அடுத்த ரவுடி வந்தாச்சு...”
“நா... படிக்கத்தான் வந்திருக்கேன்... ரவுடித்தனம் பண்ண வரலை... இப்ப என்ன நீச்சல் அடிக்கனும்... அடிக்கிறேன்...”

பகுதி-5

“உனக்கு அவளைப் பார்த்த ஏன் இம்புட்டுக் கோவம் வருது... தங்கச்சி உறவு விட்டுப் போயிடக்கூடாதுன்னு உங்கப்பா உனக்கே கட்டி வச்சாலும் வச்சிருவாரு பாத்துக்க... அப்புறம் இப்ப திட்டுனதுக்கு ரொம்ப வருத்தப்படுவே...”
“இவுகளத்தான் கட்டுறாக... எத்தனையோ பேர் பஸ்ஸூல பழகுறாளுங்க... அதுல ஒருத்திய கட்டுனாலும் கட்டுவேன் இந்தக் குந்தானியைக் கட்ட மாட்டேன்...” என்றான் வேகமாக.
ராம்கி சிரித்தான். இருவரும் தோள்மீது கை போட்டபடி நடக்கலாயினர். 
காலம் என்ன கோலம் செய்யும் என்பது யாருக்குத்தான் தெரியுமா? சேகரின் மனைவியாக காவேரி வரவேண்டும் என்று இருந்தால் யாரால் தடுக்க முடியும். நடப்பது நடந்துதானே ஆகும் என மனசுக்குள் நினைத்த ராம்கி, சேகரைப் பார்த்து லேசாக சிரித்தான்.


"சரி... பார்ப்போம்... என்ன இருக்குன்னு... ஆமா இம்புட்டு அழகியா இருக்காளே... யார் இவ... மொதல்ல விசாரிக்கணும்டா..." என்ற பழனி, "என்ன டிபார்ட்மெண்டுன்னு சொன்னால..." என்றான்.
"இல்லடா... பேசவே இல்லை அதெல்லாமா கேப்பாங்க..." அப்பாவியாய் சொன்னான்.
"எப்படியும் நாளைக்கு அவ என்ன கிளாஸ்ன்னு கண்டுபிடிக்கிறோம்... " அண்ணாத்துரை அழுத்தமாக சொல்ல, மீண்டும் தனது கச்சேரியை ஆரம்பித்த சேவியர் "பாவாடை தாவணியில் பார்த்த உருவமா..." எனப்பாட மற்றவர்கள் சந்தோஷமாய் தாளமிட ஆரம்பித்தார்கள். 
ராம்கி மனசுக்குள் மஞ்சள் தாவணி லாவணி பாடியது.

இனி கதைக்குள் போகலாம்...

7. அதிர்ச்சி 


"எங்கடா போயிட்டு வாறே... சரி காலம்பிட்டு வா... சாப்பிட..." என்றாள் நாகம்மா.

"எனக்கு வேண்டாம்மா... நான் சாப்பிட்டேன்..."

"வடிச்சி வச்சா எங்க போயி தின்னுட்டு வாறே..." 

"பழனி வீட்டுல எல்லாரும் சேர்ந்து படிச்சோம்... அங்கயே சாப்பிட்டுட்டேன்..."

"என்னது பழனி வீட்லயா... அவங்க என்ன ஆளுக தெரியுமா... அங்க போயி தின்னுட்டு வாறே..."

"அம்மா படிக்கும் போது சாதி பார்த்தா படிக்க முடியும்... இன்னும் பழம்பஞ்சாங்கமாவே இருக்காதேம்மா"

"ஆமா... நா பழம்பஞ்சாங்கந்தான்.... இப்பதான் ஒருத்த கத்திட்டுப் படுத்திருக்காக... இப்ப நீங்க... ராத்திரிக்கு கஞ்சிதான்... என்னால நேராநேரத்துக்கெல்லாம் வடிச்சுக் கொட்டமுடியாது. சாயந்தரம் எங்கிட்டும் சுத்தப் பொயிட்டு தின்னுட்டு வந்துறாதே... ஆமா சொல்லிப்புட்டேன்..."

"அம்மா நான் கஞ்சி குடிச்சிக்கிறேன்... ஆமா அக்காவுக்கும் உனக்கும் என்ன சண்டை?"

"நா எதுக்குய்யா சண்டை போடப்போறேன்... உள்ள இருக்காக அந்தப்புரத்து ராணி அவுகளையே கேளு..."

"சரி நான் அவகிட்டையே கேட்டுகிறேன்" என்றபடி திண்ணையில் சுருண்டு படுத்திருந்த சீதாவிடம் அமர்ந்து "ஏய்... என்னாச்சு..." என்று முகத்தை மூடியிருந்த தாவணியை இழுக்க தேம்பி அழுது கொண்டிருந்தாள்.

"என்னடி ஆச்சு... அம்மா இன்னைக்கு ரொம்ப கோவமா இருக்கு..."

கண்ணைத் தொடைத்தபடி "ஒண்ணுமில்லேடா..." என்றாள் சீதா.

"ஒண்ணுமில்லாமயா அழுவுறே... சொல்லுடி... அம்மா அடிச்சுச்சா..."

"இல்லடா..."

"அப்புறம்..."

"எனக்கு கலியாணம் பேசுது..."

"இது நல்ல விசயம்தானே... இதுக்கு எதுக்கு அழுவுறே..."

"அது இல்லடா... வந்து... வந்து... நம்ம கனகு மாமா மகன் முத்துராசுக்கு கட்டிக் கொடுக்க போவுதாம்..."

"என்னது... அம்மாவுக்கு என்ன கிறுக்குப் பிடிச்சிருச்சா... அவனுக்குப் போயி...." ராம்கி முடிக்கவில்லை அதற்குள் அவன் பொடறியில் ஒரு அடி விழுந்தது.

"என்னடா காலேசு படிக்கிறேன்னு கொழுப்பு கூடிருச்சோ... அவனுக்கென்னடா... எங்க அண்ணன் மவன்... நாலப்பின்ன இவளுக்கு பாதுகாப்பா எங்க அண்ணனும் அண்ணம்பொண்டியும் இருப்பாக... அவனைக் கட்டிக்க மாட்டாங்களாம்..."

"அம்மா... என்ன பேசுறீங்க... கனகு மாமா நல்லவரு நான் இல்லைங்கலை...ஆனா முத்து மச்சான் தெருப்பொறக்கி... குடிகாரன்... ரவுடி... அதுபோக..." பேச்சை நிறுத்தி அம்மாவைப் பார்த்தான்.

"என்னடா நிறுத்திட்டே... சொல்ல வந்ததை சொல்லு... இந்த ராணிக்கு அவனைவிட நல்லமாப்பிள்ளை வேற யாரு நம்ம போடுறதை ஏத்துக்கிட்டு கட்டிக்கிட்டுப் போவா..."

"அதுக்காக... நீ இப்பச் சொன்னியே அவன் வீட்ல சாப்பிட்டா சாமி குத்தம்ங்கிற மாதிரி குதிச்சியே... அந்த சாதிக்காரன் நம்ம ஊர்லயும் இருக்கான்... அதுல ஒருத்தி ரெண்டு புள்ளைக்கு ஆத்தா... அவகூட...." பேசாமல் சீதாவைப் பார்த்தான்.

"பெரிய மனுசனாயிட்டிக... பெரிய விசயத்தை எல்லாம் விவரமா பேசுறீங்க... இதத்தான் காலேசுல சொல்லிக் கொடுத்தாங்களா... இன்னைக்கு இப்படி இருக்கவன் இவ போற நேரம் மாறிடலாமுல்ல..."

"அம்மா... அவரு மாறுவாருன்னு நாம ஏன் கட்டணும்.... அக்காவுக்கு நல்ல மாப்பிள்ளையா பாப்போம்... அண்ணனுக்கிட்டயும் பேசலாம்..."

"எங்க அண்ணனுக்கு நா வாக்குக் கொடுத்துட்டேன்... முத்துக்குத்தான் இவ... எம்முடிவுல மாற்றமில்லை... நீ பெரிய மனுசனாட்டம் பேசாம வேலயப்பாரு... அண்ணன் பொங்கலுக்கு வரும்போது பேசி முடிவு பண்ணிக்கிட்டு சித்திர வைகாசியில வச்சிடலாம்ன்னு அண்ணன் சொல்லியிருக்கு... சரியா..."

"என்னம்மா... அவ வாழ்க்கையவும் பார்க்க வேண்டாமா..."

"எங்களுக்குத் தெரியும்... ஒங்க வேலயப் பாருங்க..." படக்கென்று சொல்லிவிட்டு நாகம்மா நகர, ஓவென்று அழுத சீதாவை அணைத்துக் கொண்டு "என்னடி நடந்துருச்சு... அண்ணங்கிட்ட பேசுவோம்... பேசாம இரு... அம்மா போக்குல போயி நாம சாதிச்சிக்கிவோம்... இப்ப எதாவது பேசி நாமளா கெடுத்துக்கக்கூடாது. அண்ணன் பொங்கலுக்கு வரட்டும்... அதுவரைக்கும் நீ எதுவும் செய்யாம இரு.. சரியா..."

"ம்..."

"எந்திரிச்சி வேலயப்பாரு..." என்றபடி அங்கிருந்து ராம்கியும் நகர, கண்ணீரைத் துடைத்துவிட்டு வெளியில் வந்தாள் சீதா.

"ஆத்தாடி தம்பிக்காரன் என்ன சொன்னான்னு தெரியலயே... எந்திரிச்சிட்டாக..." என்று முகவாயை தோளில் இடித்துக் கொண்டு வாசலில் சுப்பியை வெட்டிக்கொண்டிருந்தாள் நாகம்மா.

****

"டேய் மச்சான்.. உன்னைத் தேடி வந்த தேவதை மாத்ஸ் பர்ஸ்ட் இயர்..." என்றான் பழனி.

"அதான் தெரியுமே..." முணங்கினான் ராம்கி.

"என்னது தெரியுமா...டேய் இவன் நம்மகிட்ட பொய் சொல்லியிருக்கான்... அவ எல்லாம் சொல்லியிருக்கா... மாப்ளே... கமுக்கமா மறச்சிட்டியேடா..." முதுகில் குத்தினான் அண்ணாதுரை.

"நாந்தான் அவ பர்ஸ்ட் மாத்ஸ்ன்னு சொன்னான்னு சொன்னேனே... நீங்க கவனிக்கலையா... உங்க கவனமெல்லாம் அவ மேலயில்ல இருந்துச்சு..." பொய்யை பொசுக்கிப் போட்டான் ராம்கி.

"சொன்னியா... ஏண்டா புழுகிறே... உன்னோட ரூட்ல நாங்க வரமாட்டோம்டா... ஆமா அவ யாருன்னு சொன்னாளா?" கேட்டான் பழனி.

"ப்ச்.." உதடு பிதுக்கினான் ராம்கி.

"அவ பேரு புவனா... அவ நம்ம காலேசே பார்த்துப் பயப்படுற... நம்மளை எல்லாம் கொண்டு போய் ராக்கிங் செய்து மிரட்டிய.... இப்போ நம்மளிடம் சினேகமாய் சிரிக்கும் கல்லூரியின் ரவுடி நாயகன்... த ஒன் அண்ட் ஒன்லி திருவாளர் வைரவனின் ஒரே தங்கை..." பழனி சொல்லிக் கொண்டே போக

ராம்கி இமைக்க மறந்து திகிலுடன் அமர்ந்திருந்தான். அவன் மனசுக்குள் புவனா கூறிய 'ஆழந்தெரியாம காலை விடாதீங்க... அப்புறம் நொண்டிக்கிட்டுத்தான் திரியணும்...' என்ற வரிகள் வந்து செல்ல...

"நிஜமாடா..." என்றான் உலர்ந்த உதடுகளாய் நாவால் ஒற்றியபடி.

(சனிக்கிழமை... தொடரும்...)
-'பரிவை' சே.குமார்.

4 எண்ணங்கள்:

செங்கோவி சொன்னது…

செம ஷாக் கடைசியில்...தொடருங்கள் குமார்.

செங்கோவி சொன்னது…

கொஞ்சநாட்களாக உங்கள் பதிவில் கமென்ட் போட முடியாதபடி, காப்பி பேஸ்ட் பதிவுகளாகப் போட்டுக்கொண்டிருந்தீர்கள். ஒரு படைப்பாளி இப்படி ஆகிட்டாரேன்னு வருத்தப்பட்ட நேரத்தில், கலையாத கனவுகள் ஆறுதல் தருகிறது. நன்றி குமார்.

Menaga Sathia சொன்னது…

கதை விறுவிறுப்பா போகுது...

கோமதி அரசு சொன்னது…

இன்னைக்கு இப்படி இருக்கவன் இவ போற நேரம் மாறிடலாமுல்ல..."//

இப்படி எத்தனைக் காலம் சொல்லி, சொல்லி பெண்களை கட்டி வைப்பார்களோ!