தமிழகத்தில் இருந்து பாலிவுட்டில் கால்பதித்து முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி, தனது 50வது பிறந்த தினத்தை சில நாட்களுக்கு முன்னர் கொண்டாடினார்.
தமிழ் சினிமாவில் கமல், ரஜினியின் ஆரம்பகாலத் திரைப்படங்களில் அதிகம் ஆக்கிரமித்த ஸ்ரீதேவி, 1963ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிவகாசியில் பிறந்தார். 1967ஆம் ஆண்டு அதாவது தனது நான்காவது வயதில் 'கந்தன் கருணை' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகனார்.
கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினியும் கமலும் இணைந்து நடித்த 'மூன்றுமுடிச்சு' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதில் கமல், ரஜினியுடன் போட்டி போட்டு நடித்திருப்பார். இந்தப் படத்தில் 'வசந்தகால நதிகளிலே... வைரமணி நீரலைகள்...' என்ற அருமையான பாடல் இடம்பெற்றிருந்தது. அதன் பிறகு பாரதிராஜாவின் '16 வயதினிலே...' படத்தில் அவர் ஏற்று நடித்த மயிலு கதாபாத்திரம் எல்லாராலும் பேசப்பட்டது. தமிழ்ச் சினிமா படப்பிடிப்பை ஸ்டுடியோக்களுக்குள் இருந்து வெளியிடங்களுக்கு கொண்டு சென்ற படம் என்ற பெருமையைப் பெற்றது. தமிழ்சினிமாவை 'பாரதிராஜாவிற்கு முன்... பாரதிராஜாவிற்குப் பின்' என்று பார்க்க வைத்த படம் இது. இதில் இடம்பெற்ற 'செந்தூரப்பூவே... செந்தூரப்பூவே...' என்ற பாடல் இன்னும் இசை ரசிகர்களின் விருப்பப்பாடலாக இருக்கிறது.
இதேபோல் 1983ஆம் ஆண்டு பாலுமகேந்திராவின் இயக்கத்தில் கமலுடன் இணைந்து நடித்த 'மூன்றாம் பிறை' தமிழ்த் திரையுலகில் மிக முக்கியமான படமாக அமைந்தது. இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமையாக வந்திருந்தது.இந்தப் படத்தில் மனநிலை தவறிய பெண்ணாக நடித்திருப்பார். கவிஞர் கண்ணதாசனின் கடைசி திரை இசைப்பாடலான 'கண்ணே கலைமானே...' என்ற அருமையான பாடல் இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்தது. இந்தப் பாடலில் மற்றுமல்ல படம் முழுவதும் ஸ்ரீதேவியின் நடிப்பு மிக அற்புதமாக இருக்கும். கமல் சொல்லவே வேண்டாம்... கடைசி காட்சியில் மனுசன் நடிப்பில் கலக்கியிருப்பார்.இந்தப் படத்தின் இறுதிக்காட்சியில் கமலின் நடிப்பு திரையுலகில் ஒரு புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது.
ஆரம்ப காலங்களில் தமிழில் மட்டும் நடித்த ஸ்ரீதேவி பின்னர் மலையாளப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 'ஆலிங்கனம்', 'ஆத்யபாடம்' போன்ற படங்கள் அவருக்கு பெயர் சொல்லும் படங்களாக அமைந்தன. இந்தித் திரையுலகில் காலடி எடுத்து வைத்த ஸ்ரீதேவிக்கு முதல்படம் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கவில்லை. ஆம்... அவர் நடித்த 'சோல்வா சாவன்' என்ற படம் தோல்வியைச் சந்தித்தது. ஆனால் அவரது அடுத்தபடமான 'ஹிம்மத்வாலா' இமாலய வெற்றி பெற்று இந்தித் திரையுலகில் ஸ்ரீதேவிக்கென ஒரு நிலையான இடத்தைப் பிடித்துக் கொடுத்தது. அதன் பிறகு வந்த படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றன.
'லம்ஹே' என்ற இந்திப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது தனது தந்தையை இழந்தார். பின்னர் தனது தாயையும் இழந்தார். பெற்றோர் இருவரையும் தனது இளம்வயதிலேயே இழந்த ஸ்ரீதேவி தனது சொந்த வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகளைச் சந்தித்தார். அந்தப் பிரச்சினைகளில் எல்லாம் இருந்து மீண்டு வந்த அவர் நடிகர் மிதுன் சக்கரவர்த்தியுடன் இணைத்துப் பேசப்பட்டார். மிதுன் சக்கரவர்த்தி தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு ஸ்ரீதேவியை இரண்டாம் தாரமாக திருமணம் செய்யப் போகிறார் என்ற வதந்திக்கு மிதுன் அவர்கள் தனது மனைவியை விவகாரத்து செய்யப் போவதில்லை என்று சொன்ன பிறகுதான் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
அந்த நிகழ்வுக்குப் பிறகு 1996ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி திரைப்படத் தயாரிப்பாளர் போனி கபூரைத் திருமணம் செய்து கொண்டார். அவரது சந்தோஷமான திருமண வாழ்வில் அடையாளமாக ஜான்வி மற்றும் குஷி என்ற இரண்டு மகள்களைப் பெற்றெடுத்தார்.
நீண்ட காலங்களுக்குப் பிறகு தமிழில் அரவிந்த் சாமியுடன் 'தேவராகம்' என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு தமிழ் மற்றும் இந்தியில் வெளியான 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' என்ற படத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது திறமையை நிரூபித்திருப்பார். இந்தப்படம் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது. தமிழில் ஒரு காட்சியில் 'தல' அஜீத் நடித்திருப்பார். தமிழில் ஸ்ரீதேவிக்குப் பின்னர் அம்பிகா,ராதா,நதியா, குஷ்பு, சிம்ரன்,திரிஷா, அசின்,அனுஷ்கா என நிறைய நாயகிகள் வந்து சென்றாலும் ஸ்ரீதேவியின் இடத்தை யாருமே அடையவில்லை என்பதே உண்மை.
இந்த வருடம் மத்திய அரசு ஸ்ரீதேவிக்கு 'பத்மஸ்ரீ' விருது வழங்கி கௌரவித்தது. மேலும் தமிழில் 'மீண்டும் கோகிலா', இந்தியில் 'சால்பாஸ்' மற்றும் 'லம்ஹே', தெலுங்கில் 'க்ஷன க்ஷனம்' முதலிய படங்களுக்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றிருக்கிறார். 'தேவராகம்' படத்தில் நடித்ததற்காக 'டொரண்'டோ விருதினைப் பெற்றார். மேலும் வம்சி ஆர்ட்ஸ் தியேட்டர் இன்டர்நேஷனல் என்ற அமைப்பு 'வாழ்நாள் சாதனையாளர்' என்ற விருதை வழங்கி சிறப்பித்தது.
தன் திறமையால் இந்தியத் திரையுலகை ஆண்ட தமிழச்சி ஸ்ரீதேவி பல்லாண்டு வாழ வாழ்த்துவோம்...
செய்திகளுக்காக விக்கிப்பீடியா உள்ளிட்ட சில தளங்களைப் பார்த்தேன்... அந்தத் தளங்களுக்கு எல்லாம் நன்றி.
-'பரிவை' சே.குமார்.
3 எண்ணங்கள்:
ஸ்ரீதேவிக்கு வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
மயிலு மயிலு மறக்க முடியவில்லை மயிலு...! வாழ்த்துக்கள்...
வாங்க சகோ கோமதி அரசு
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாக்ன தனபாலன் சார்....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
கருத்துரையிடுக