பிரதிலிபியின் 'கொண்டாடப்படாத காதல்கள்' போட்டியில் எனது கதையும் இருக்கு. அதை நீங்களெல்லாம் கொண்டாடினால் பரிசை வெல்லும் படைப்புகளுடன் போட்டியாவது போட முடியும். அதற்கு தாங்கள் செய்ய வேண்டியது கீழே இருக்கும் இணைப்பைச் சொடுக்கி பிரதிலிபியில் கதையை வாசித்து உங்கள் கருத்தையும் மறக்காமல் மதிப்பெண்ணையும் அளியுங்கள். கதை குறித்து உண்மையான கருத்துக்களை அறிய ஆவலாக இருக்கிறேன்.
படத்தைக் கிளிக்கியும் கருத்தைச் சொல்லலாம்
***
பிப்ரவரி - 16 அகல் மின்னிதழில் 'எங்கள் அமீரகம்' என்னும் தலைப்பின் கீழ் எனது கட்டுரையின் முதல் பகுதி வெளியாகி இருக்கிறது. அதன் இரண்டாம் பகுதி வரும் மார்ச் இதழில் வெளியாகும். அகலில் கட்டுரை வாசிக்க கீழே இருக்கும் இணைப்பைச் சொடுக்குங்கள். கட்டுரை குறித்து தங்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். கட்டுரையை பிரதிலிபியிலும் படிக்கலாம்.
அகலில் வாசிக்க : எங்கள் அமீரகம் - 1
பிரதிலிபியில் வாசிக்க : எங்கள் அமீரகம் - 1
அகல் நண்பர்கள் வட்டம் முகநூல் பக்கம் பார்க்க படத்தை கிளிக்குங்கள்
***
வேலைப்பளு கூடுதல் மற்றும் சில பல காரணங்களால் வலைப்பக்கம் அதிகமாக வருவதில்லை. நண்பர்களின் எழுத்துக்களை விடுமுறை தினங்களில் வாசித்து விடுவேன். கருத்து இடுவதில் சிக்கல் இருக்கிறது. சிலரின் பதிவுகளுக்கு பிரச்சினை இல்லை. பலரின் பதிவுகளில் 'நீ ரோபோ இல்லை'ன்னு சொல்லு என்று கேட்கிறது. சொன்னால் ரைட்டு என கருத்து இட அனுமதிக்கிறது. அதிலும் ஒரு சிக்கல் என்னன்னா நாலு பேருக்கு அந்த மாதிரி உள்ள போயி கருத்து இட்டால் ஐந்தாவது நண்பரின் தளத்தில் ரோபோ இல்லைன்னா... படங்களைக் கொடுத்து மரங்களை தேர்ந்தெடு, ஆற்றை தேர்ந்தெடு, புல்வெளியை தேர்ந்தெடு, தெருவைத் தேர்ந்தெடு, டாக்ஸியை தேர்ந்தெடுன்னு கொடுத்து சரியாச் சொன்னாத்தான் உள்ளே போகுது. இதில் கடுப்பாகி வாசிப்பதுடன் வெளியில் வந்துவிடுவதுண்டு. இந்தப் பிரச்சினை எனக்கு மட்டும்தானா இல்லை எல்லாருக்கும் இருக்கான்னு தெரியலை. தனபாலன் அண்ணா வேற ரொம்ப பிஸி போல, அவர் இப்போ அதிகம் வருவதில்லை இல்லேன்னா அவர்கிட்ட கேட்டுக்கலாம். தெரிந்த நண்பர்கள் அதை எப்படி சரி செய்யலாம் என்று சொல்லுங்கள்.

***
பாக்யாவில் மக்கள் மனசு மற்றும் வாசகர் வாய்ஸ்-ல் தொடர்ந்து எனது கருத்துகளையும் தேர்ந்தெடுத்து வெளியிடும் பாக்யா ஆசிரியர் குழுவுக்கு நன்றி. மக்கள் மனசில் ஒரு சில வாரங்கள் தவிர்த்து ஒரு வருடமாக தொடர்ந்து எழுதியிருக்கிறேன் அதுவும் பிரசுரமாகியிருக்கிறது என்பதை நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
***
அம்மாவின் ஸ்டிக்கர் ஒட்டும் பணி மிக தீவிரம் அடைந்து நாட்டுக்காக உயிரிழந்து, தேசியக்கொடியைப் போர்த்தி மரியாதை செய்யப்பட்ட ராணுவவீரனின் மீது ஸ்டிக்கரை வைத்த ஸ்டிக்கர் பாய்ஸின் செயல் வேதனைக்குரியது... கேவலமானது. நேற்று ஒரு வீடியோ பார்க்க நேர்ந்தது... அதில் மரணமடைந்தவரின் வீட்டில் அழுது கொண்டு நிற்கும்பெண்ணிடம் அம்மாவின் அல்லக்கைகள் காவிரித்தாயின் போட்டோவைக் காட்டி... சை... இவர்களுக்கு எப்படி மனசு வருகிறது... இப்படிப்பட்ட கேவலமான செயலை இறந்தவர்களின் வீட்டிலும் செய்ய இவர்களால் எப்படி முடிகிறது. இந்த மானங்கெட்ட பொழப்புக்கு நாண்டுக்கிட்டு சாகலாம் அல்லக்கைஸ்... ஆணவம் பிடித்த தங்கத்தாரகை இதையெல்லாம் ரொம்ப விரும்பும் போல... புகழ் விரும்பி... மமதை பிடித்த மக்கள் தலைவி... யோசித்து வாக்களித்து வெளியில் தூக்கி வீசணும் தமிழக ஸ்டிக்கர் முதலமைச்சரை.... இல்லையேல் எல்லாருடைய வீட்டிலும்.... எல்லாப் பொருளிலும்... இவர்கள் ஸ்டிக்கர் ஒட்டுவார்கள்... அதற்கான கடன் அடுத்த ஐந்தாண்டில் மில்லியன்களின் கூட இருக்கலாம். தமிழனை கேவலப்படுத்தவே இந்த ஈனப்பிறவிகள் பதவியில் இருக்கிறார்கள் போல.

***
பாப்பா மதிய சாப்பாட்டை சில தினங்களாக சாப்பிடுவதே இல்லை... டிபன் பாக்ஸ் அப்படியே வருது... தினமும் கஷ்டப்பட்டு விதவிதமாச் செஞ்சு கொடுத்துவிட்டா... சாயந்தரம் கோழிக்குத்தான் கொட்ட வேண்டியிருக்குன்னு மனைவி சொல்ல, நான் பாப்பாவிடம் என்ன..? ஏன்..? என்று கேட்டு சத்தம் போட்டுக் கொண்டிருந்தேன். அப்போது விஷால், 'இவுகளுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டா பாவம் கோழிங்க பசியா இருக்கும்ன்னு அப்படியே கொண்டாந்துடுறாங்க... இனிமே இதுக்கு கொடுத்து விடுறதுக்குப் பதிலா காலையிலயே கோழிக்கு போட்டிடலாம்... சூடாவாச்சும் சாப்பிடுங்க' என்று சிரிக்காமல் சொல்லிவிட்டு படுத்துக் கொண்டான். இப்படி அப்பப்ப நிறைய டைமிங்கா பேசிக்கிட்டே இருப்பான்... எல்லாத்தையும் பதிஞ்சு வைக்கணும்.

***
நாம் மனசுக்குள் யோசித்து வைத்து... அதை கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றி ஒரு பதிவாக்கினால் காப்பி செய்யும் நபர்கள் ஏதோ தாங்கள் எழுதியது போல் பல தளங்களில் பகிர்ந்து கொள்கிறார்கள். 'தேவதா தமிழ்' கீதா அக்கா, 'ஆல்ப்ஸ் தென்றல்' நிஷா அக்கா என நிறையப் பேர் தங்கள் பதிவுகள் பல தளங்களில் வேறு பெயரில் பதிவாகியிருக்கு என்று சொல்லியிருந்தார்கள். அவர்கள் படைப்பு மட்டுமில்லை... பலரின் படைப்புக்கள் அப்படித்தான் வலம் வருது. ஒரு முறை 'RSS Feed' என்னும் தளத்தில் எனது பதிவுகள் இன்னும் நம் நட்பின் பதிவுகள் எல்லாம் அனுமதியில்லாமல் மொத்தமாக பதியப்பட்டிருந்தன. நான் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி எனது பதிவுகளை நீக்கினேன். நாம் பெற்ற பிள்ளைக்கு வேறொருவன் உரிமை கொண்டாடுவது எப்படி நியாயம்..? எனவே இனிமேல் மனசு தளத்தில் கவிதைகள், சிறுகதைகள், தொடர்கதைகள் எல்லாம் நிறுத்திவிட்டு மனசில் பட்டது, மனசு பேசுகிறேன், மனசின் பக்கம், சினிமா என எழுதலாமான்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன். எதுக்குங்க கஷ்டப்பட்டு சிறுகதை எழுதி நாளைக்கு எவனாச்சும் அதை புத்தகமாப் போடுவான்... என்னைக்காச்சும் வாசிக்க நேர்ந்தால் என்ன இது எல்லாமே நம்மளோட கதை மாதிரி இருக்குன்னு புலம்பினாலும் அவனை ஒண்ணும் செய்ய முடியாதுதானே... எனவே இப்போ நான் தீவிர யோசனையில்... இல்லேன்னா பேசாம மனசு வலைப்பதிவுக்கு மூடுவிழா நடத்திடலாமான்னு கூட யோசிக்கிறேன். என்ன சொல்றீங்க..?

***
இன்னைக்கு காலையில வேலைக்கு போகும் போது சிக்னலில் ரெண்டு மலையாளி பசங்க பேசிக்கிட்டு நின்னாங்க... ஒருத்தன் மற்றவனிடம் 'பெல்ட் போடாம இன் பண்ணக்கூடாதா என்ன?ட என்றான். 'ஏன்... பண்ணலாமே...? யார் பண்ணக்கூடாதுன்னு சொன்னா... போலீஸ்காரனா...?' மற்றவன் அப்பாவியாய்க் கேட்டான். 'அட நீ வேற... வர்றப்போ எதிரே போன பிலிப்பைனி பொண்ணுங்க ரெண்டு கெக்கே பிக்கேன்னு சிரிச்சிக்கிட்டு போகுதுங்க...'என்றான். உடனே மற்றவன் அவனை ஏற இறங்கப் பார்த்துட்டு 'மூதேவி... முதல்ல சிப்பைப் போடு... இன் பண்ணின சட்டை அதுவழியா வெளியே வந்திருக்கு பாரு... அப்புறம் சிரிக்காம என்ன பண்ணுவாளுங்க' என்றதும் 'அய்யே...' என அவன் வேகமாக ஜிப்பை இழுக்க நான் சிரித்துக் கொண்டே கடந்தேன்.

***
என்னைக் கவர்ந்த பாடலாக அனார்கலி படத்தில் இருந்து 'ஆ ஒருத்தி அவளோருத்தி...' அருமையான பாடல்... இது கண்டிப்பாக உங்களையும் கவரும்... என்னது படம் குறித்தா..? அதை அடுத்த பதிவுல விரிவாச் சொல்றேன்... இப்ப பாட்டைக் கேளுங்க...
-'பரிவை' சே.குமார்.








