கூமன்-
எந்த ஒரு வழக்கு என்றாலும் தனது புத்திக் கூர்மையால் துப்புத் துலக்கி தனது மேலதிகாரியான சோமசேகரனின் - ரஞ்சிப் பணிக்கர் - பாராட்டைப் பெற்று, தன்னைப் பார்த்துப் பொறாமைப்படும் சக காவலர்களிடம் தன்னை நாயகனாகக் காட்டிக்கொள்ளும் கிரி சங்கர் - ஆசிப் அலி - தன்னை யார் கேவலப்படுத்தினாலும் அவர்களை ஏதாவது ஒரு வகையில் பலி வாங்கி விடும் குணம் கொண்டவர்.
சோமசேகரனின் ஓய்வுக்குப் பின் அந்த இடத்துக்கு வரும் அதிகாரியான ஹரிலால் - பாபுராஜ் - ஒரு சமயத்தில் ஊரார் முன் கிரி சங்கரை அவமானப்படுத்த, அதற்குப் பலி வாங்கும் விதமாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைப்பவன் ஆதாரம் எதுவும் விட்டுவிட்டு வராமல் சாமர்த்தியமாக எப்படித் திருடுவதென மணியனிடம் - ஜாபர் இடுக்கி - கேட்டு அறிந்து கொண்டு, பகலில் காவல்துறையிலும் இரவும் களவிலுமாகத் தொடர, எல்லா அழுத்தங்களும் ஹரிலால் மீது விழுகிறது.
இது தொடர்ந்து கொண்டிருக்கிறது, தனது பலி வாங்கும் கொடுற புத்தியோடு பயணித்துக் கொண்டிருக்கும் கிரி சங்கர், எதிர்பாராதவிதமாக ஒருவரால் பார்க்கப்பட, வேலைக்கு லீவு போட்டுவிட்டு வெளியூர் போய் தங்கிவிட்டுத் திரும்பும் போது தன்னைப் பார்த்தவர் தூக்கில் தொங்குகிறார். அது குறித்த விசாரணையைத் தனிப்பட்ட முறையில் கையிலெடுக்கும் போது மாதம் ஒன்றென தமிழகம் மற்றும் கேரளாவில் நிகழ்ந்த கொலைகள் குறித்து அறிகிறார். அதன் பின் விசாரணையைத் தீவிரமாக்க, தனக்குப் பிடித்த மேலதிகாரி சோமசேகரனின் உதவியுடன் இதை யார் செய்கிறார்கள்..? எதற்காகச் செய்கிறார்கள் என விசாரித்துக் கொலையாளியைக் கண்டு பிடிக்கிறான்.
இடைவேளை வரை மெல்லச் செல்லும் படம் அதன் பிறகு கொலைகள், தேடல் என வேறொரு பரிணாமம் எடுத்து வேகமாக நகர ஆரம்பிக்கிறது. நாயகன் வீட்டுக்கு அருகில் இருக்கும் லெட்சுமி - ஹன்னா ரெஜி கோஷி - அவனை விரும்புபவள் போல் காட்டப்பட்டு, இறுதிக்காட்சியில் விஸ்வரூபமெடுக்கிறார்.
பரபரவென நகரும் கதை இறுதிக் காட்சியில் இன்னும் அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும் ஆனால் கோவில் போன்ற செட்டில் கல்தூண்கள் எல்லாம் பொத்பொத்தென்று விழும்போது கதையின் வேகத்தில் தொய்வு ஏற்பட்டு விடுகிறது.
தமிழகத்திற்குள்ளும் பயணிக்கும் கதையில் காவல்துறை அதிகாரியாக ஜார்ஜ் மரியமும் காவலராக ரமேஷ் திலக்கும் சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார்கள். பவுலி வல்சன், பைஜூ, மேகநாதன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
சதீஷ் குரூப்பின் ஒளிப்பதிவும் விஷ்ணு ஷியாமின் பின்னணி இசையும் படத்துக்குப் பெரும்பலம்.
இந்தப் படத்துக்கான கதையை கே.ஆர்.கிருஷ்ண குமார் எழுதியிருக்க டிடெக்டிவ், மெமரீஸ், த்ரிஷ்யம் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கியிருக்கிறார்.
இத்திரைப்படைத்த லிஸ்டின் ஸ்டீபன், ஆல்வின் ஆண்டனியின் மேஜிக் பிரேம்ஸ் மற்றும் அனன்யா பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது.
-பரிவை சே.குமார்.
3 எண்ணங்கள்:
நல்ல விமர்சனம் குமார்...
ஓ ஜீத்து ஜோசஃப் படமா....இப்படியான கருவில்தான் பெரும்பாலும் எடுக்கிறார் இல்லையா? குமார்?
படம் பற்றிய விமர்சனம் வழக்கம் போல் அருமை
கீதா
நன்றி தனபாலன் அண்ணா.
**
ஆமாக்கா... அப்படித்தான் எடுக்கிறார் என்றாலும் படம் நல்லாயிருக்கு.
கருத்துரையிடுக