மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 4 டிசம்பர், 2022

மனசு பேசுகிறது : தமிழணங்கு வாசிப்பு அனுபவம்

ச்சுக்குப் போகும் முன் - பிழைதிருத்தம் செய்யும் முன் - நிறையக் கதைகளை, நாவல்களை, கவிதைகளை, கட்டுரைகளை வாசிக்கும் வாய்ப்பு எனக்கு அடிக்கடி கிடைப்பதுண்டு. கரன் கார்க்கி அண்ணனின் 'சட்டைக்காரி'யைப் புத்தகமாவதற்குள் - கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பே - அவர் எழுதிய சூட்டோடு வாசிக்கும் வாய்ப்புஎனக்குக் கிடைத்த பெரும்பேறு என்று சொல்லலாம். அது குறித்து அண்ணனுடன் நீண்ட நேரம் உரையாடியதும் அதற்குப் பின் இன்று வரை அவரின் தம்பி என்ற அழைப்பு எனக்குக் கிடைப்பதும் பெரும் மகிழ்ச்சி என்றாலும் இன்றுவரை இருவரும் சந்திக்காதது வருத்தமே.

அப்படித்தான் சமீபத்தில் தமிழணங்கு என்ற பெயரில் முகநூல் வழி நட்பாகி - இவர்களையும் பார்த்ததில்லை, பேசியதில்லை இதுவரை வாட்சப் உரையாடல்கள் மட்டுமே - தாங்கள் மிகப்பெரிய ஆராய்ச்சி மேற்கொண்டு கோயம்புத்தூர் இடவியல் வரலாற்றை இடம், பொருள், ஏவல் என்ற மூன்று தலைப்பில் எழுதி வரும் நாவலை - இதுவரை கிட்டத்தட்ட 300 பக்கங்கள் - எனக்கு அனுப்பி வாசித்து அது குறித்தான கருத்தைச் சொல்லச் சொன்னார்கள்.

இது முழுக்க முழுக்க ஆய்வு நூல், அதுவும் கணிப்பொறியில் அமர்ந்து தேடி இதுதான் வரலாறு என்று சொல்லாமல், தங்களின் தொடர் தேடல் மூலமும், அது குறித்தான களப்பணி மூலமும் தேடித்தேடி நிறைய எடுத்து, பலருடன் கலந்துரையாடி இந்நூலை எழுதியிருக்கும் போது சும்மா நான் பார்த்து வாழ்ந்த கிராமத்து வாழ்க்கையை வைத்துக் கதைகளை எழுதிக் கொண்டிருக்கும் என்னை நம்பி, நான் வாசித்தறியாத, இதுவரை எனக்குத் தெரியாத விபரங்களை நான் வாசிக்க வேண்டும் எனச் சொன்னது உண்மையில் எனக்கு வியப்பாக இருந்தது என்பதால் சற்றே யோசிக்க அவரோ உங்களது 'திருவிழா' நாவல் நீங்கள் யார் என்பதைச் சொல்லியது என்பதால்தான் உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன் என்றார்.

எனது தற்போதைய சூழல் நெருங்கமான நட்புக்களுக்கு மட்டுமே தெரியும்... அபுதாபியில் இருக்கிறேன்... ஆம் இருக்கிறேன் அவ்வளவுதான்... கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களாய் என்னால் எழுதவோ, படிக்கவோ முடியாத மிகவும் மிகவும் மோசமான வாழ்வின் பக்கங்களில் பயணித்துக் கொண்டிருக்க வேண்டிய சூழல், நாளைய விடியல் நலமாகும் என்ற எண்ணத்துடனே தினமும் விடிந்தாலும் விடியல் மட்டும் ஏனோ தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும் நிலை, இந்த நிலையில் நம்பிக்கையுடன் அனுப்பியிருக்கும் ஆழ்ந்து வாசிக்க வேண்டிய ஆய்வு நூலை எப்படி வாசிக்கப் போகிறோம் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது.

முதலில் இருநூறு பக்கங்கள் முழுக்க முழுக்க இடவியல் வரலாறு - கோவையில் ஆரம்பித்து தேவகோட்டை விருசுழி ஆறுவரை பயணித்த கதையில் கல்வி அரசியலுடன் வெறியாட்டும்... இடங்கள், மலைகள், ஆறுகள் போன்றவற்றின் ஆரம்பப் பெயர்களும் மருவிய பெயர்களும் என விரிவாகப் பயணித்தது. வாசிக்க வாசிக்க இத்தனை மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றனவா என்ற ஆச்சர்யமே மிஞ்சியது. நீண்ட நாட்கள் எடுத்துத்தான் வாசித்து முடித்தேன்.  அது குறித்து எனது கருத்தையும் அனுப்பினேன்.

சில நாட்களுக்குப் பின் அதன் தொடர்ச்சியான பொருளை அடிப்படையாகக் கொண்ட மருதமலை என்னும் தலைப்பில் எழுதியதை அனுப்பினார்கள். குறைந்த பக்கங்களே என்றாலும் வாசிக்கும் மனநிலை சுத்தமாக இல்லாத மனநிலையில் அவர்கள் அனுப்பி பல நாட்களாகியும் தொடவே இல்லை. பிழை திருத்தம் செய்கிறோம், மாற்றங்கள் செய்து கொண்டிருக்கிறோம், உங்கள் கருத்து வந்தால் நல்லாயிருக்கும் என்று வாட்சப்பில் சொன்ன பின்னே வாசிக்க ஆரம்பித்தேன்.

சித்தர்கள், முனிவர்கள் பற்றிப் பேசி, நவபாசானம், வள்ளியின் வெறியாட்டு, செய்வினை என விரிந்த கதையில் நாம் அறியாத விசயங்கள் குறித்த நீண்ட விவாதங்கள் ஒருமுறைக்கு இருமுறை வாசிக்க வைத்தன. அவர்கள் சொல்லியிருக்கும் விஷயங்கள் எது குறித்தும் எனக்கு சிறிதளவு கேள்வி ஞானம் கூட இல்லை என்பதால் பாதி வாசிக்கும் போதே இது குறித்து நம் கருத்தாய் எதைச் சொல்வதென யோசனை எனக்குள் எழுந்தது.  அகங்காரம், வெறியாட்டு, பேறுகள் என எல்லாமே புதிது என்றாலும் சித்தர்கள் இருவரும் பேசுவதாய் வரும் பகுதி முழுக்க முழுக்க ஆய்வுக் கருத்துக்களை மட்டுமே தாங்கி நிற்பது குறித்து என் எண்ணத்தைச் சொன்னேன்.

அதன் பின் அனுப்பிய நவகரை என்னும் தலைப்பில் ஐந்திரன், ஐந்திறன், சித்தம்பலம், ஊழ்வினை, கொற்றவை எனப் பல விஷயங்கள் பேசப்பட்டிருந்தது. மருதமலை போல் இதிலும் ஆய்வுச் செய்திகளே அதிகம் என்றாலும் சுணக்கம் இல்லாதிருப்பதையும் விரிவான எல்லா விளக்கங்களும் ஒன்றும் தெரியாத என்னைப் போன்றோருக்குக் கூட ஒரளவுக்குப் புரிந்து கொள்ளும்படியாக இருக்கிறது, இருக்கும் என்றும் சொன்னேன்.

நவகரையில் இன்னும் கொஞ்சம் பாக்கியிருக்கு என நேற்று ஒரு நாற்பது பக்கத்துக்கு தம் ஊழ் அணங்கு என்னும் தலைப்பிலான பகுதியை அனுப்பித் தந்தார்கள். அதில் வெறியாட்டினைத் தடுத்தாட்கொள்ளும் வேல்கள், கொற்றவை சொல்லும் தம் ஊழ் அணங்கு பற்றிய விபரங்கள், அறுவகை வேல்களை வைத்து வெறியாடும் ஒடிக்களை நவமாக்குதல் என நிறையப் பேசியிருந்தார்கள்.

இந்நாவலை அமாவாசை தினத்தில் வெறியாடிச் சொல்லும் ரங்கி, அதைக் கேட்டு தன் தோழிகளுடன் அது குறித்த ஆராய்ச்சியில் இறங்கும் ஆதிவாசிப் பெண் தமிழணங்கு ஆகியோரை வைத்து நகர்த்திக் கொண்டு வருகிறார்கள். இது நாவலாய் விரிவதைவிட ஆராய்ச்சிக் கட்டுரையாய் பல பக்கங்களில் விரிகிறது.

ஏராளமான விபரங்கள், முகநூலில் அவர்கள் சின்னச் சின்ன செய்திகளைப் பகிரும்போதே நிறையக் கேள்விகள் எழுகின்றன. அவர்கள் பேசியிருக்கும் விபரங்களுக்காக புத்தகமானபின் நிறைய எதிர்ப்புக்களையும் எதிர்பார்ப்புக்களையும் விவாதங்களையும் சந்திக்க வேண்டி வரலாம். அப்படியானவற்றிற்குப் பதில் சொல்ல அவர்களிடம் ஆய்வின் தகவல் அதிகமாகவே இருக்கும் என்பதை நான் இதுவரை வாசித்ததில் இருந்து அறிந்து கொண்டேன். எதற்கும் பதில் சொல்ல முடியும் என்ற தைரியத்தில்தான் இப்படி ஒரு ஆய்வை அவர்கள் தொடங்கியிருக்கிறார்கள் என்பதே என் எண்ணம்.

என்னைப் பொறுத்தவரை நாம் வாசிக்க வேண்டும் என ஒருவர் கொடுத்தால் கண்டிப்பாக வாசித்து எனக்குப் பிடித்ததை, பிடிக்காததைப் பற்றி பகிர்ந்து கொள்வேன். சத்தியமாக அதை மாற்றுங்கள் இதை மாற்றுங்கள் எனச் சொல்லமாட்டேன். எதை எழுத வேண்டும், வேண்டாம் என்பது எழுத்தாளரின் விருப்பம். சுத்தமாக நான் இந்த வரலாற்று விபரங்களில் பூஜ்ஜியம் என்றாலும் அவர் சொன்னதைப் போல் ஒன்னாம் வகுப்பு பையனுக்கு பனிரெண்டாம் வகுப்பு பாடத்தைக் கொடுத்தது போல்தான் என் வாசிப்பு இருந்தது என்றாலும் பல இடங்களைப் பரிட்சைக்குப் படிக்கும் மாணவன் போல மீண்டும் மீண்டும் வாசித்துப் புரிந்து கொண்டேன். அந்த வகையில் எனக்கு தோன்றியதை அவருடன் பகிர்ந்து கொண்டேன். 

நேற்றிரவு வாட்சப்பில் இதுவரை வாசித்தது குறித்து - தனித்தனியாக எழுதி அனுப்பியிருந்தாலும் - சில விசயங்கள் இருவரும் பகிர்ந்து கொண்ட போது, என் கருத்துக்கள் இந்நாவலைப் புரிந்து கொண்ட விதத்திலேயே வந்திருப்பதாகச் சொன்னார்கள். உண்மையில் வியப்பாக இருந்தது. அந்தளவுக்கு நான் நிறைவாகச் சொல்லியிருக்க வாய்ப்பில்லை, ஏனென்றால் நிறைய விஷயங்களை அலசி ஆராய்ந்து எழுதியிருப்பார்கள். அந்தளவுக்கு எனக்கு ஆராய்ச்சி குறித்த விபரங்கள் தெரியாதென்றாலும் அவர்கள் பாராட்டும் விதமாக ஒரளவுக்கு எழுதியிருப்பது ஒரு திருப்தி. அவர்கள் விரும்பிக் கொடுத்ததை என் மனநிலை எப்படியிருந்தாலும் வாசித்து மனதில்பட்டதைச் சொல்லியிருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சி.

ஏவல் குறித்த பகுதிகளையும் அனுப்பித் தருகிறேன் வாசியுங்கள் என்று சொல்லியுள்ளார்கள். வாசிக்கக் கசக்குமா என்ன... காத்திருக்கிறேன்.

தமிழணங்கு பல விவாதங்களை ஏற்படுத்திக் கொடுக்கும், அதற்கான விளக்கங்களையும் பெற்றுக் கொள்ளும்.

விரைவில் நாவலாய் வெளிவர இருக்கும் தமிழணங்குக்கும் அதன் ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள்.

-பரிவை சே.குமார்.

3 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அவசியம் படிக்க வேண்டும் என நினைக்கிறேன்...

ஸ்ரீராம். சொன்னது…

புதிய அறிமுகம் எங்களுக்கு..

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

உங்கள் அனுபவப்பகிர்வு சிறப்பு. நூலாசிரியருக்கு வாழ்த்துகள்.

சோழ நாட்டில் பௌத்தம் என்ற என்னுடைய நூல் அச்சேற்றப்பணி காரணமாக சில மாதங்களாக வலைப்பூக்களின் பக்கங்கள் வர இயலா நிலை. பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். அண்மையில் இந்நூல் வெளியாகியுள்ளது. இனி தொடர்ந்து பதிவுகள் மூலமாகச் சந்திப்போம்.