மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

'பயணங்கள் எனும் கற்றல்' - திரு. அ.முத்துக்கிருஷ்ணன்

யணங்கள் எப்போதுமே சுகமானவை... சுவாரஸ்யமானவை... ஒவ்வொரு பயணமும் நமக்கு ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொடுத்துக் கொண்டேதான் இருக்கும். அதுவும் பயணமே தன் வாழ்க்கையாக வாழ்ந்து கொண்டிருக்கும் திரு. அ.முத்துக்கிருஷ்ணன் அவர்கள், அமீரக எழுத்தாளர் மற்றும் வாசகர் குழுமத்தின் கானல் காணொளிக் கூட்டத்தில் தனது பயணங்களில் தான் கற்றுக் கொண்டதையும் பெற்றுக் கொண்டதையும் பற்றி கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரங்கள் சுவையாக, விரிவாகப் பேசி நேற்றைய விடுமுறை தின மாலையை அழகான, சிறப்பான மாலையாக ஆக்கினார்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: Bilal Aliyar, , ’நனல் அமீரக எழுத்தாளர் மற்றும் வாசகர் வட்டம் வழங்கும் பயணங்கள் ணங்க பய எனும் கற்றல் சிறப்புரை: அ. முத்துக்கிருஷ்ணன் Zoom: 867 846 3868 Password: Travel நாள்: 04.09.2020, வெள்ளிக்கிழமை நேரம்: 18.00 (UAE) 19.30 (INDIA) அனைவரும் இணைய வருக!!’ எனச்சொல்லும் உரை

தன்னைப் பற்றி ஒரு நீண்ட உரையாக நிகழ்த்தி, அப்படியே பயணங்களுக்குள் பயணித்து கூடவே நம்மையும் கைபிடித்து அழைத்துச் சென்றார். தன் ஊரில் ஆரம்பித்து... தூங்கா நகரமான மதுரை எனக்கு மிகவும் பிடித்த ஊரில் ஒன்று... எனக்குப் பிடித்த ஊர் என்றதும் வாக்கப்பட்ட ஊருங்கிறதால பிடிக்குதோ என்ற கேள்விகள் வேண்டாம்... எப்பவும் ஓடிக்கொண்டேயிருக்கும் அந்த மக்களின் உழைப்பு பிடிக்கும்... தமிழ்ச் சினிமா ஏற்படுத்தியிருக்கும் அரிவாள் பிம்பம் பொய்யானது என்பதைப் பறைசாற்றும் அவர்களின் அன்பு பிடிக்கும்... அந்த மக்கள் இப்படித்தான் உழைக்கணும் என்றில்லாம் எப்படியும் உழைக்கலாம் என்பதை எப்போதும் பறைசாற்றிக் கொண்டே இருப்பவர்கள்... சரி பயணத்துக்குள் போவோம்.
திரு.முத்துக்கிருஷ்ணன் மதுரையில் ஆரம்பித்து உலகம் முழுவதும் சுற்றி, கேள்விகளுக்குப் பதிலளித்து ஓய்ந்த போது ஒரு அடைமழை நாளில் மழையில் நனைந்து கொண்டு, செம்மண் சாலையில் சைக்கிளில் பயணிப்பது போலிருந்தது. அவ்வளவு அருமையான பேச்சு... மடை திறந்த வெள்ளமென தடையில்லாமல் பேசுவதெல்லாம் ஒரு கலை... மிகச் சிறப்பாகப் பேசினார்.
அவர் பேசியதன் முழு வடிவத்தையும் எழுத்தாய் வாசிப்பதை விட வீடியோவாக பார்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதால் அவரின் பேச்சில் இருந்து கொஞ்சமே கொஞ்சம் (அதுவே நிறையப் போயிருச்சுங்கிறது வேற விஷயம்) இங்கு பகிரலாம் என்று நினைக்கிறேன்.
என் கால்களிலே கட்டப்பட்டிருக்கும் சக்கரங்களைப் பற்றி என்னை அறிந்தவர்களுக்குத் தெரியும் என ஆரம்பித்தவர், தனக்கு சிறுவயதில் இருந்தே வாசிப்பின் மீது அதீத ஆர்வம் இருந்தது என்றும், அதன் மூலமே இந்த உலகத்தினைப் பற்றி அறியத் தொடங்கினேன் என்றும், சீனப்பெருஞ்சுவர், லூவர் மீயூசியம், மச்சிப்பிச்சு என்கிற மலைத்தொடர் போன்றவையே தன் தலைக்குள் ஏறிக் கொண்டு இந்த உலகத்தைச் சுவாசிக்க வைத்தன என்றும் ஆரம்பித்தார்.
1982 ஆசிய விளையாட்டுப் போட்டி டெல்லியில் நடந்த போது அப்பு என்ற யானை வடிவமைக்கப்பட்டதைச் சொல்லி அந்த நினைவுக்குள் சென்று மீண்டார். மேலும் 1984 லாஸ் ஏஞ்சல்ஸ் சம்மர் ஒலிம்பிக் போட்டி மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் துவக்க விழா குறித்துப் பேசியதுடன் இரண்டு நிகழ்விலும் எத்தனை நாடுகள் கலந்து கொண்டன என்ற பட்டியலைத்தான் எழுதியதாகவும் அது ஏதோ ஒரு வகையில் தன்னுடன் இதுவரை பயணித்துக் கொண்டே இருப்பதாகவும் சொன்னார்.
தனக்குப் புவியியல்தான் மிகவும் பிடித்த பாடம் என்பதால் மேற்படிப்பு படித்திருந்தால் கண்டிப்பாக எனக்கு உலக நிலப்பரப்பைச் சொன்ன புவியியலைத்தான் படித்திருப்பேன் என்றபோது தனது ஆசிரியர்களை நினைவு கூறத் தவறவில்லை. அதேபோல் அறிவியல் மீதும் வானியல் மீதும் தனக்கு பெரும் ஆர்வம் இருந்தது என்பதையும் சொன்னார். ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் வானியல் தொடர்பான போட்டாபோட்டிகள் குறித்தும், அதன் காரணமாக தனக்கு வானியல் ஆராய்ச்சியாளனாக வேண்டும் என்ற ஆசையிருந்ததையும் வெளிப்படுத்தினார்.
எட்டாம் வகுப்புப் படித்த போது தனது சொந்த ஊருக்குப் போயிருக்கையில் மாட்டு வண்டிக்குள் விழுந்ததால் வண்டி தன் இடது காலில் ஏறி, அது சுக்கு நூறாக ஒடிந்தபோது தன் கனவுகள் எல்லாம் உடைந்து போனதாக நினைத்ததாகவும் அதன் பின் மருத்துவத்தின் மூலம் தன்னால் நடக்க முடிந்த போது தன் குடும்பத்தினைச் சூழ்ந்த மிகப்பெரிய வறுமையின் காரணமாக உன் வாழ்க்கையே முடிந்து விட்டதடா எனச் சொல்லாமல் சொன்ன இருட்டுக்குள் இருந்தவனை மெல்ல மெல்ல புத்தகங்கள் பக்கம் நகர்த்தியது நகர்ந்து சென்ற காலம் என்றும் அதன்பின் வாசிப்புக்குள் மூழ்க்கித் திளைத்தேன் என்றும் சொன்னார்.
கல்லூரியில் எலெக்ட்ரானிக்ஸ் முடிச்சிட்டு வேலை தேடிக் கொண்டிருந்த போது திருப்பரங்குன்றத்தில் இருந்ததால் அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தானே சென்று உதவிகள் செய்ததாகவும் அதன் காரணமாகவே தான் கற்றிருந்த ஹிந்தி, உருது மொழிகள் தனக்குள் உயிர்ப்புடன் இருந்தது என்றும் பயணம் மேற்கொண்டு வீடு துறந்து போனவர்களே தனக்கு பயணத்தின் மீதான ஈர்ப்பைக் கொடுத்தார்கள் என்றும் சொன்னார்.
தன் நண்பன் காணாமல் போனபோது தூர்தர்ஷனில் விளம்பரம் கொடுத்ததாகவும், அவ்விளம்பரங்களை அவர்கள் எப்படி அறிவிப்பார்கள் என்பதை மகிழ்வுடன் லயித்துச் சொன்னதுடன் காணாமல் போனவர்களைப் பற்றிய அறிவிப்பில் யாரெல்லாம் காணாமல் போனார்கள் என்று அறிந்து கொள்ள தான் அதைத் தொடர்ந்து பார்க்க ஆரம்பித்ததாய்ச் சொன்னார். காணாமல் போனவர்களைப் பற்றிப் பொறாமைப்பட்டேன் எனச் சொன்ன முதல் மனிதர் இவராகத்தான் இருப்பார்.
மார்க்கெட் சர்வே சம்பந்தமான நிறுவனத்தில் வேலை பார்த்ததையும் கம்பெனியே தனக்கு வழிச் செலவுக்கு காசு கொடுத்து... தங்கவும்... சாப்பிடவும்... செலவு செய்தது ஊர் சுற்றத் தனக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது என்றும் பல்வேறு விதமான மக்களைச் சந்தித்துப் பேச அது ஒரு திறப்பாக அமைந்தது என்றும் தமிழ்நாட்டைப் பற்றி அதுவே அறியத் தந்தது என்றும் சொன்னார்.
சின்ன வயதில் மும்பையில் இருந்ததால் எனக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது, அந்தப் பணியில் இருக்கும் போதுதான் தமிழ் எழுதப்படிக்க கற்றுக் கொள்ள ஆரம்பித்திருந்தேன் என்று சொன்னவர், அதன் பின் தென்னக ரயில்வேயில் வேலை பார்த்ததையும் அந்தப் பணியின் தன்மையையும் பகிர்ந்து கொண்டார். கன்னட மொழி பேசப் பழகியதைச் சொல்லி, வாழ்க்கையில் ஒருவனுக்கு ஒரு மொழி தேவை என்றால் அவன் பத்து நாட்களில் கற்றுக் கொள்வான் என்றும் சொன்னார்.
மதுரைக்கு 2600 ஆண்டுகளாக மக்கள் வந்து கொண்டேயிருக்கிறார்கள் என்றும் ரோமாபுரியுடன் மதுரைக்கு வியாபாரத் தொடர்பு இருந்ததையும் கீழடி இப்போது மதுரையின் வயதைக் கூட்டி இருக்கிறது என்பதையும் வணிகத்துக்காக பயணிகள் வந்திருந்தாலும் அவர்களின் முக்கிய வேலைகளில் ஒன்றாகத் தங்கள் பயணத்தின் அனுபவத்தைக் கூடிப் பேசியிருப்பார்கள் அல்லவா... மதுரையின் ஒவ்வொரு வீதியும் அந்த மக்களின் பாதம் பட்டு, அவர்களின் பேச்சுக் குரல் கேட்டு மகிழ்ந்திருக்கும்தானே என்றார்.
மதுரை உலகின் ஆதி நகரங்களில் ஒன்று என விளக்கமாய்ப் பேசியபோது அவர் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி, பிறந்த ஊரின் மீது தீராக் காதல் கொண்டவனின் பயணம் எப்போதுமே சிறப்பாகத்தான் இருக்கும்... அப்படித்தான் அவரின் பயணமும்... இங்கே பரிவையை நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.
அடுத்து பயணத்தின் போது சன்னலோர இருக்கைக்காகச் சண்டை போட்டதைப் பற்றி, அதன் மூலமே விரிந்த உலகத்தைக் காண முடியும் என விரிவாகப் பேசினார்...அப்போது தனது முதல் விமானப் பயணத்தின் போது சன்னல் இருக்கை வேண்டுமென அரைமணி நேரம் நின்று கேட்டு வாங்கியதாகவும் சொன்னார்.
நானும் சன்னலோர இருக்கை விரும்பிதான்... தேவகோட்டையில் இருந்து மதுரை அல்லது திருச்சி என்பதே அடிக்கடி பயணிக்கும் இடமாக இருக்கும்... அப்போதெல்லாம் பேருந்தில் ஏறியதும் அமர நினைப்பது சன்னலோரத்தில்தான்... வெளியில் பார்த்துக் கொண்டு பயணிக்கவும், வெக்கையுடன் வரும் காற்றுக்காகவுமே அந்த விருப்பம். பெரும்பாலான சமயங்கள் கடைசி இருக்கையான பின்புறப் படிக்கட்டுக்குப் பின்னே அமர்ந்து கொள்வேன்... ரோடு மோசமாக இருக்கும்... தூக்கித் தூக்கிப் போடும் என்றாலும் அந்த இருக்கைப் பயணமே எப்போதும் பிடித்தமாய்... சன்னலோர இருக்கைக்காக சண்டை போட்ட குஞ்சன் சக்சேனாவுக்கு விமானத்தின் முன்புறச் சன்னல் வழி பஞ்சு மேகங்களுடன் விரிந்த நீல வானம் காட்டப்பட்டதால்தான் அவரின் கனவு நனவாகி கார்கிலில் 40 முறை வீரர்களுக்கு உதவ ஹெலிகாப்டரில் முதல் பெண் விமானியாகப் பயணித்திருக்கிறார்.
இதைவிட இன்னொன்றும் சொன்னார்... சன்னல் இருக்கை வழி பார்த்து பார்த்து அதைவிட இன்னும் கூடுதலாய் இந்த உலகை, நிலப்பரப்பை ரசிக்க வேண்டும் என்பதால் டிரைவருக்குப் பக்கத்து இருக்கையைக் கேட்டதாச் சொன்னதுதான் சிறப்பு. நல்லவேளை டிரைவர் இருக்கைதான் வேண்டுமெனச் சொல்லவில்லை.
இயற்கையை ரசிப்பதற்கான மனப்பயிற்சி முக்கியம் என்றதுடன் இயற்கை சார்ந்த ஆர்வத்தை நாம் குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும் என்றும் அப்படி ஏற்படுத்தாவிட்டால் அது அவர்களை எப்படி மாற்றி வைக்கும் என்றும் வருத்தத்துடன் சொன்னார்.
சுற்றுலா மற்றும் பயணம் என்ற இரண்டும் வேறு வேறானவை... இரண்டையும் ஒன்றென நினைக்கக் கூடாது. உங்களுடைய சொகுசு குறையாமல் பயணிப்பது சுற்றுலா என்றும் பயணம் என்பது ஒரு அலாதியான விஷயம் என்றும் சொல்லி, தான் சென்னை செல்லும் போது பாண்டியன் எக்ஸ்பிரஸில்தான் பார்த்த பயணிகளில் பலர், கஷ்டப்பட்டு லோயர் பெர்த் கேட்டு வாங்கி வைத்திருப்பார்கள்... தன் சொகுசுக்கான எல்லாத்தையும் வீட்டிலிருந்து சிட்டைப்படி எடுத்து வந்து அங்கு அதை சரியாக வைத்து தங்கள் வீட்டையே பெர்த்தாக்கிப் பயணிக்க ஆரம்பிப்பார்கள். அவர்களின் வாழ்க்கை கடைசி வரை லோயர்தான்... மாறப்போவதே இல்லை என்றார் சிரிக்காமல்... பார்த்துக் கொண்டிருந்த, கேட்டுக் கொண்டிருந்த நாங்கள் சிரித்தோம்.
பயணம் என்பது முற்றிலும் வேறான, வெளி உலகத்தோடு நீங்கள் உள்வாங்கச் செல்வதே ஆகும்... புதிய உலகத்தைப் பார்க்கப் போவதுடன் அதைப் பற்றி அறிய, அங்கிருக்கும் உணவுப் பழக்கங்களை, அந்த மக்களுடன் உறவாட, விரிந்த நிலப்பரப்பை உள்வாங்க எனத் திட்டமிட்டுப் பயணிக்காமல் பயணிப்பதே பயணம். அதுவே சிறப்பான அனுபவத்தைக் கொடுக்கும் என்றதுடன் எல்லாரும் போன இடத்துக்கு நாமும் போறதைவிட யாரும் செல்லாத வெளிக்கு நாம் செல்ல வேண்டும் அதுதான் உங்களுக்கு பெரிய திறப்பைக் கொடுக்கும்.
நான் பலமுறை டெல்லிக்குப் போயிருந்தாலும் ஏனோ தாஜ்மகாலுக்குப் போக விரும்பியதில்லை... போனதும் இல்லை... அதற்கான காரணம் எனக்கு ஈர்ப்பு ஏற்படவில்லையோ அல்லது சுற்றுலாத்துறையின் செயல்பாடுகளாகவோ இருக்கலாம் என்றவர் மகாபலிபுரத்துக்குச் செல்ல வேண்டுமென்றாலும் அதிகாலையில் போய் கடலையும் சிற்பங்களையும் தரிசித்து வருவேன் என்றார்.
கொடைக்கானல் குற்றாலத்தை நாம் திறந்தவழிப் பார்களாக மாற்றி வைத்திருக்கிறோம் என வருத்தப்பட்டார்... மலையில் நாம் தூக்கி வீசும் மதுப்பாட்டில்களால் பழங்குடி மக்கள் மட்டுமின்றி விலங்குகளும் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் நாம் பயணத்தின் மூலமாக இயற்கையைக் கெடுத்து பசுமையைக் கொலை செய்கிறோம் என்றும் வருத்ததுடன் பகிர்ந்து கொண்டார்.
புதிய வெளிக்குள் பயணிக்கும் போது அங்கிருக்கும் மக்களின் மொழி தெரியாவிட்டாலும் அவர்களுடன் சைகையால் பேசி, புதிய கற்றலை நீங்கள் பெறுவீர்கள் என்றார்.
கல்வியை விட பயணத்தால் அதிகளவில் கற்றுத்தர முடியும் என்றும் அது புதிய இடங்களை, கதைகளை, உரையாடல்களை, மனிதர்களை, நல்ல விஷயங்களை நமக்கு அறிமுகப்படுத்தும் என்றும் வாழ்க்கை மதிப்பீடுகளை மாற்றி அமைப்பதுடன் சவால்கள் நிறைந்ததுதான் பயணம் என்றும் அதற்காகவே நாம் பயணிக்கும் பயணம் நமக்கு நிறையக் கற்றுக் கொடுக்கும் என்றும் சொன்னார்.
தன்னை பயணிக்க வைத்த பயணிகள் குறித்துக் கூறும் போது முதலில் 1821-ல் பிறந்த வெறிபிடித்த பயணியான சர் ரிச்சர்ட் பட்டன் பற்றி மிக விரிவாகப் பேசினார். அவர் பார்த்த வேலைகள்... அவரின் பயணம் என விரிவாகப் பேசி, இந்திய காமசூத்ரா மற்றும் அரேபிய காமசூத்ரா என்று சொல்லப்படும் 'நறுமணத் தோட்டம்' போன்றவற்றை மொழி பெயர்த்திருக்கிறார் என்றும் தமிழிலும் இப்புத்தகங்கள் இருக்கின்றன என்றும் சொன்னதுடன் ரிச்சர்ட் இருபத்தி ஒன்பது மொழிகளில் பேசக் கூடியவர் என்ற ஆச்சர்யமான விஷயத்தையும் பகிர்ந்து கொண்டார்.
அடுத்து 1809-ல் பிறந்த சார்லஸ் டார்வின் பற்றிப் பேசும் போது அவர் பீகிள் என்னும் கப்பலில் ஆயிரக் கணக்கான கிலோமீட்டர்கள் வரை கடலிலும் அதை விடக் கூடுதலாய் நிலப்பரப்பிலும் பயணித்ததையும் கீழடியில் ஒரு முழுமையான எலும்புக் கூடு கிடைத்ததைப் பற்றி நாம் சிலாகிக்கும் வேளையில் கிட்டத்தட்ட 5000 எலும்புக் கூடுகளை சார்லஸ் சேகரித்திருக்கிறார் என்ற ஆச்சர்யமான தகவல்களையும் கூடுதலாகப் பகிர்ந்து கொண்டார்.
ரஷ்யா முதன் முதலில் 1957-ல் லைக்கா என்கிற தெருநாயை விண்வெளிக்கு அனுப்பியது. அதன் பின் முதல் விண்வெளி வீரரான யூரி காக்ரின்... அப்புறம் நீல் ஆம்ஸ்ட்ராங்...இவர்களின் பயணமெல்லாம் வியக்க வைக்கும். அதேபோல் கிறிஸ்டோபர் கொலம்பஸ், இந்தாளு அங்கும் இங்குமென உலகமெங்கும் சென்டிங் அடித்திருக்கிறான். இவர்களைப் போன்றவர்கள்தான் பயணித்துக் கொண்டே இந்த நிலப்பரப்பின் வரைபடத்தை மாற்றி மாற்றி வரைந்து கொடுத்திருக்கிறார்கள் என்றார்.
கொலம்பஸ் துறை சார்ந்த வல்லமை பெற்ற அறிவுசாலி, திறமைசாலி... இவர்களுக்கு வானசாஸ்திரம் நன்றாகத் தெரியும்... இவர்கள் எல்லாருமே நட்சத்திரங்களைப் பார்த்துத்தான் தங்கள் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். ஜமைக்காவில் ஒரு வருடம் தங்க வேண்டிய நிலை ஏற்பட்ட போது அந்த மக்களுக்கு சந்திரகிரணத்தைப் பற்றிச் சொல்லியிருக்கிறார் கொலம்பஸ்... அதன்பின்னே அந்த மக்கள் இவரைக் கொண்டாடியிருக்கிறார்கள் என்றார்.
அடுத்து இபின் பதூதா (Ibn Battuta) பற்றிப் பேசினார்... மொராக்கோவின் அபு அப்துல்லா முகமது இபின் பதூதா, மெக்காவில் இருந்து உலகெங்கும் பயணித்ததைப் பற்றிச் சொல்லி, துபை இபன் பதூதா மால்லைப் பற்றிச் சொல்லி, அந்த மாலினை அவரின் நினைவாகவே வடிவமைத்திருப்பதைப் பற்றி வியந்து பேசியதுடன் அவரின் இந்தியப் பயணம், குறிப்பாக தமிழகப் பயணம், அதிலும் குறிப்பாக இராமநாதபுரத்தின் பெரியபட்டிணத்துக்கு வந்தது... அந்த மக்கள் தங்களின் விருந்தினருக்கு வெற்றிலையைக் கொடுப்பதைப் பற்றி எழுதியிருப்பது என விரிவாகப் பேசினார்.
பௌத்தம் சார்ந்து அதில் வெறி பிடித்துத் திரிந்த யுவான்சுவாங் பற்றிப் பேசும் போது அவரின் இந்தியப் பயணம் குறித்தும் ஆறாம் நூற்றாண்டில் காஷ்மீரில் ஆரம்பித்து இந்தியா முழுவதும் அலைந்து திரிந்து நாலந்தாவில் நீண்ட காலம் தங்கியிருந்து... அதன் பின் காஞ்சிபுரத்தில் தங்கி மதுரை வரை வந்து போன விபரங்களைச் சொல்லி அவர் 5000 கிலோமீட்டருக்கு மேல் நடந்தே பயணித்திருக்கிறார் என்று சொன்னது வியப்பாய் இருந்தது. பயணத்தின் மீதான காதலால் இவர்கள் எல்லாம் நாடோடிகளாய் சுற்றித் திரிந்திருக்கிறார்கள் அல்லவா..?
ஆஸ்திரேலியாவைக் கண்டுபிடித்த கேப்டன் குக் பற்றிப் பேசினார். மதுரையில் இருக்கும் யானைமலைப் பற்றிய கட்டுரை எழுதியபோது இதைப் போன்ற இரு மலைகளான இலங்கை சிகிரியா மற்றும் ஆஸ்திரேலியாவின் உலுரூ பற்றியும் எழுதியதாகச் சொன்னார்.
அடுத்து மிகவும் முக்கியமான புத்தகமான 'வால்கா முதல் கங்கை வரை' எழுதிய ராகுல்ஜி பற்றி விரிவாகப் பேசும்போது நாற்பத்தைந்து வருடங்கள் பயணத்துக்காகவே செலவழித்த மனிதன் என்றும் தமிழ் உள்பட பலமொழிகள் கற்றவர் என்றும் சொன்னதுடன் நம்ம கி.ராவைப் பற்றிச் சொல்லி அவர் படிக்காதவர், மழை பெய்யும் போது பள்ளியில் ஒதுங்கிய போதும் பள்ளிக்கூடத்தைப் பார்க்கவில்லை மழையைத்தான் பார்த்தேன் என்றதை நினைவு கூர்ந்து ராகுல்ஜி இந்தியப் பயண இலக்கியத்தின் தந்தை என்றார்.
நாம் ஒவ்வொரு வயதிலும் ஒரு இடத்துக்குப் பயணிக்க வேண்டும்... சின்ன வயதில் பார்த்த இடத்துக்கு வேறொரு வயதில், வேறொரு காலகட்டத்தில் பயணித்தால் கிடைக்கும் அனுபவம் தனிதான்... மதுரையில் இருக்கும் சமணர் மலைக்கோ அல்லது வேறு மலைக்கோ பசுமை நடையில் பயணிக்கும் போது நான் அந்த அனுபவத்தை உணர்ந்திருக்கிறேன். ஒரு மலையை மழைக் காலத்தில்... வெயில் காலத்தில்... பனிக்காலத்தில் பார்க்கும் போது கிடைக்கும் அனுபவம் வேறுவேறாகத்தான் இருக்கும் என்றும் பயணம் ஒரு அனுபவவெளி... திறந்தவெளி எனபதை பயணங்கள் நமக்கு உணர்த்தும் என்றும் சொன்னார்.
பூம்புகார் முதல் கொடுங்கலூர் வரை ஒவ்வொருவரும் கண்டிப்பாக பயணிக்க வேண்டும்... அந்த அனுபவத்தை உணர வேண்டும் என்ற போது இரா.முருகவேள் அவர்களின் 'மிளிர் கல்' நாவல் பற்றிப் பேசினார்.
தான் சீக்கிய மதம் பற்றிப் படித்தேன் என்றும் குருநானக் எனக்கு மிகவும் பிடித்தவர் என்றும் அவரின் பயணம் குறித்தும் பேசினார்.
பயணத்தின் போது இரவுத் தங்கலுக்காக ஒரு தேடுதல் என்பதே நமக்கு நிறையக் கற்றுக் கொடுக்கும் என்றார். உண்மைதான் பழனி நடைப்பயணத்தின் போது இரவு தங்கலுக்காக இடம் தேடுதல்... பகல் முழுவதும் நடந்த களைப்பில், கால் வலியுடன் படுத்ததும் தூங்கி விடுவோம் என்பதால் பாதுகாப்பான இடமாகத் தேடுவதில் இருக்கும் அந்தப் பயணத்தின் நிறைவு... அது ஒவ்வொரு நாளும் வித்தியாசமான அனுபவத்தைக் கற்றுக் கொடுக்கும். ஒருமுறை தேடித்தேடி இடம் பிடித்து நத்தத்தில் ஒரு வணிக வளாகத்தை ஒட்டிப் படுத்தபோது மாமா தலைக்கு வைத்திருந்த பாதயாத்திரைப் பையை ஒருவர் இழுத்ததும் நாங்கள் எழுந்து அவரைப் பிடித்து, அவர் அழுது மன்னிப்புக் கேட்டதும் தனிக்கதை.
அஜந்தா எல்லோரா பற்றி மகிழ்வோடு பேசினார்... உலக அதிசயங்களில் இந்த இடம் ஏன் வரவில்லை என்று எனக்குள் எப்போதும் கேள்வி எழும் என்றார்... அது முக்கியமான இடம் என்றார்.
உங்களுக்கு எதுவுமே தெரியாது என்பதை பயணமே கற்றுக் கொடுக்கும் என்றவர் இப்போது நாம் ஒரே அறைக்குள் வாழ்க்கை முழுவதுமாய் அடைபட்டுத்தான் கிடக்கிறோம்... இது கொரோனாவால் மட்டுமில்லை... சூழ்நிலைக் கைதியாய் நாம் அடைபட்டுக் கிடக்கிறோம் என்பதே உண்மை... சொல்லப் போனால் நல்ல பயணத்துக்கு நாம் ஏங்கிக் கொண்டுதான் இருக்கிறோம் என்றார்.
இந்தியாவில் ஒரு வாழ்நாளில் பார்த்து முடித்து விடமுடியாத நிறைய இடங்கள் இருக்கு.. முதலில் அதில் சிலவற்றையாவது பார்க்க முயலுங்கள் என்றார். தமிழ்ச் சினிமா இயக்குநர்கள் அழகிய இடங்களுக்காக வெளிநாடுகளுக்குப் பயணிக்க, இயக்குநர் மணிரத்தினம் எப்போதுமே இந்தியாவில் நாம் காணாத இடங்களுக்குப் பயணித்துப் படம் பிடித்து வருவது ஞாபகத்தில் வந்தது.
இன்று போக்குவரத்துகள் சுலபமாகிவிட்டதால் உலகின் எந்த மூலைக்கும் போய் வருவது சாத்தியமாகியிருக்கிறது என்றும் பேசினார். அப்போது இரயில் பயணம் குறித்து விரிவாகப் பேசினார்.
செட்டிலானவுடன் உங்களுடன் பயணிக்க ஆசைப்படுகிறேன் என்று சொல்லும் நபர்களிடம் இறந்தால் மட்டுமே செட்டிலாக முடியும் என்று சொல்வதாய்ச் சொன்னார்.... எத்தனை எதார்த்தமான பேச்சு.
இப்போது சன்னலோர பயணங்களுக்கான அடிபிடிகள் குறையக் காரணம் சவப்பெட்டி போன்ற செல்போன்களே காரணம் என்றும் இன்றைய குழந்தைகளின் உலகம் ஒரு போனுக்குள் சுருங்கிவிட்டதே என்ற வருத்தமும் அவர்களை எப்படி அதிலிருந்து மீட்கலாம் என்ற எண்ணமும் தமக்குள் இருப்பதாய்ச் சொன்னார்.
மனிதகுலம் தோன்றிய மத்திய ஆப்பிரிக்காவுக்குப் போக வேண்டுமென்ற ஆசை எனக்குள் இருந்து கொண்டேயிருக்கிறது என்றவர் பாலஸ்தீனப் பயணம் பற்றியும் இலங்கைப் பயணத்தில் முள்ளிவாய்க்கால் சென்றதைப் பற்றியும் சிலாகித்துப் பேசினார்.
சேகுவேராவின் 'மோட்டார் சைக்கிள் டைரி'யைப் படித்துப் பயணப்பட்டவன் என்றதுடன் இந்தியாவின் மிக நீண்ட இரயில் பயணமான குமரி முதல் அஸ்ஸாம் வரையிலான ஆறு இரவு, ஐந்து பகல் பயணம் பற்றியும் பேசினார். அப்போது புதுதில்லியில் இருந்து லண்டனுக்குச் செல்ல இருக்கும் பேருந்து பற்றியும் அதில் பயணிக்க அவர்கள் கேட்கும் தொகை தன்னை சீச்சி இந்தப் பழம் புளிக்கும் என எண்ண வைத்ததாகவும் சொன்னார்.
உலக முழுவதும் 'பேக் பேக்கர்ஸ்' பயணிகள் அதிகரித்திருப்பதைப் பற்றிச் சொன்னார். இந்த உலகை அறிந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கை நம்மில் உருவாக வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்குள்ளும் அந்த வேட்கையை நாம் ஏற்படுத்த வேண்டும் என்றார்.
மக்களின் கலாச்சாரம் அவர்களின் வாழ்க்கை முறை ஒவ்வொரு அம்பது கிலோ மீட்டருக்கும் வேறுபட்டுக் கொண்டுதான் இருக்கும்... தமிழகத்தில் ஒவ்வொரு இடத்திலும் சாம்பாரின் சுவையும் சாவுச் சடங்குகளும் மாறித்தான் இருக்கின்றன என்றார்.
வாசித்தல், பயணித்தல் என்ற இரண்டு விசயங்களை நாம் பின்பற்ற வேண்டும். கலாச்சாரத்துக்கு கோடுகள் இல்லை.... எத்தனை விதமான பச்சை நிறமிருக்கிறது... எத்தனை நிறமான நீல வானம் இருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்றார்.
தான் எழுதிய விளையாட்டுப் போட்டிகளின் துவக்க விழாவில் கலந்து கொண்ட நாடுகளின் பட்டியலில் இருக்கும் அறுபது நாடுகளில் இருபது இருபத்தைந்து நாடுகளைச் சுற்றி விட்டேன் என்றும் கொரோனா காலம் முடிவுக்கு வந்த பின் நாமெல்லா மீண்டும் பயணிப்போம் என்றும் சொன்னார்.
இதன் பின் நிகழ்ந்த கேள்விப் பதில் பகுதியும் சிறப்பாக இருந்தது. அதில் பெரும்பாலான கேள்விகளுக்கு இன்னும் போகவில்லை என்பதுதான் பதிலாய் இருந்தது என்றாலும் அவர் காடுகள் பற்றிய கேள்விக்குச் சொல்லி பதில் சிறப்பாய் இருந்தது. இயற்கை என்பது நம்மை ஈர்க்கும் ஒன்று என்றதுடன் செவ்விந்தியர்கள், அபார்ஜின், பளியர்கள் போன்ற பழங்குடியினரின் வாழ்க்கை முறை, அவர்கள் மீதான தனது ஆர்வம் பற்றிப் பேசினார். மேலும் பழங்குடிகள் இந்த உலகத்துக்கே வழிகாட்டிகள் என்றும் அவர்கள் மட்டுமே காடுகளைப் பற்றி மிகத் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கக் கூடியவர்கள் என்றார்.
ஆஸ்திரேலியாவின் டார்வின் பல்கலைக் கழகத்தில் ஒரு பழங்குடியின மனிதர் துணை வேந்தருக்கு இணையாக அமர்ந்திருந்தார்... இந்தியாவில் பழங்குடி இனத்தவருக்கு நாம் இப்படியானதொரு கௌரவத்தைக் கொடுத்திருக்கிறோமா...? என்ற கேள்வியை முன் வைத்தார். அவர்களை நாம் மனிதர்களாகவே நினைப்பதில்லை என்பதுதானே உண்மை. பழங்குடி மக்களுடன் அவர் பழகியதைச் சொல்லி, அவர்கள் ரொம்பக் குறைந்த வாழ்க்கை வாழும் மனிதர்கள் என்பதால் 'மினிமலிஸ்ட்' என்று சொல்கிறோம். பழங்குடி மக்களை நாம் அவர்களின் நிலத்தில் இருந்து விரட்டிக் கொண்டிருக்கிறோம்... அவர்களின் மொழிகளை அழித்துக் கொண்டிருக்கிறோம் என வேதனைப்பட்டார். இந்த இடத்தில் எழுத்தாளர் ச.பாலமுருகன் எழுதிய சோளகர் தொட்டி நாவலும் வீரப்பன் வேட்டையில் அந்த மக்கள் பட்ட பெரும் துன்பங்களுமே மனதில் நிழலாடியது.
பழங்குடி மக்களை நேரில் சந்தித்துப் பேசியது.. அவர்களிடம் இருந்து கற்றுக் கொண்டது பற்றியெல்லாம் சொன்னதுடன் மேன்மையான மனிதர்கள் அவர்கள் எனச் சொல்லிக் கொண்டே வரும் போது ராஞ்சியில் இருக்கும் ஒரு பழங்குடி வீட்டில் உரையாடிக் கொண்டிருக்கும் போது என் கண் ஒரு இடத்துக்கு அடிக்கடி போனது. நான் உரையாடி முடிந்ததும் 'என்ன மாம்பழம் சாப்பிடுறீங்களா..?' எனக் கேட்டார் அந்த பழங்குடி மனிதர். நான் சிரிக்கவும் 'இல்லை நீங்க பழம் சாப்பிட ஆசைப்பட்டுத்தானே அங்கயே பாத்தீங்க...?' என்றார். நான் அதை ஒத்துக் கொண்டு சரியென்றதும் அவர் தன் பையனை அழைத்துப் பறிக்கச் சொல்ல, அவன் எட்டுமிடத்தில் பழம் கிடக்க, மரத்தில் ஏறி உச்சிக்குச் செல்ல நானோ நக்கலாய்ச் சிரித்தேன். பையன் இறங்கி, பழத்தைக் கழுவி என்னிடம் கொடுத்தபோது அந்தப் பெரியவர் 'எதற்காகச் சிரித்தீர்கள் எனத் தெரிந்து கொள்ளலாமா..? எனக் கேட்டதும் எனக்கு என்னமோ போலாகிவிட்டது. கீழிருக்கும் கிளையில் கிடக்கும் பழங்களை விடுத்து மேலே ஏறிப் பறிப்பதைப் பார்த்துச் சிரித்ததைச் சொல்ல, அவரோ மரம் காய்க்க ஆரம்பிக்கும் போதே ஒரு கிளை பறவைகளுக்கு என விட்டு விடுவோம் என்றார். எனக்குள் பெரும் வியப்பும் பேராச்சிரியமும்... அந்த மக்கள் எத்தனை மேன்மையான வாழ்க்கை முறை, மதிப்பீட்டு முறை கொண்டவர்கள் என்ற ஆச்சர்யம் எனக்குள் இன்னமும் இருந்து கொண்டேதான் இருக்கிறது.
எதைச் சொல்வது எதை விடுவது எனத் தெரியவில்லை என அவர் சொன்னதைப் போல் எதை எழுத, எதை விட என்ற எண்ணமே எழுந்தாலும் மீக நீண்ட பதிவாகிப் போனதால் இத்துடன் முடித்து விடுவது நலமெனத் தோன்றுகிறது. விரிவாகப் பார்க்க விரும்பினால் கானல் முகநூல் பக்கத்திலோ அல்லது ஸ்ருதி டிவியின் யூடிப் பக்கத்திலோ போய்ப் பாருங்கள்.
-'பரிவை' சே.குமார்.

4 எண்ணங்கள்:

வல்லிசிம்ஹன் சொன்னது…

அன்பு வெங்கட் இனிய காலை வணக்கம்.
இது என்ன அனியாயமாய் இருக்கிறதே.

அவர் சொன்னதெல்லாம் பொய்யாய் இருக்கும் பாருங்கள்.
அவருக்கு இருக்கும் பழக்கங்கள் பொய் சொல்ல
வைக்கின்றன.
உங்களை நியைத்து வருத்தமாக இருக்கிறது.
எனக்குத் தெரிந்த ஒரு மிகப் பெரிய பணம் படைத்தவர்,
வாழ்வு முழுவதும்
Neither lend nor Borrow கொள்கையைக் கடைப்பிடித்தார்.
தானம் நிறையச் செய்வார்,
அந்த வசதியும் மனதும் இருந்ததால்.
இனிமேல் ஜாக்கிரதையாக இருக்கக் கற்றுக் கொடுத்திருக்கிறார்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... Youtube பக்கத்தில் கேட்க வேண்டும்...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

யூ ட்யூபில் பார்க்கிறேன்
நன்றி

Ranjith Ramadasan சொன்னது…

மகிழ்ச்சி நல்ல இடுக்கை நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் Tech Helper Tamil https://www.techhelpertamil.xyz/