மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 19 செப்டம்பர், 2020

மனசு பேசுகிறது : திமிலும் மனோபாலாவும்

பெரும்பாலான வெள்ளிக்கிழமைகளின் மாலை வேளையை மனம் மகிழும் நிகழ்வுகளால் அலங்கரிக்கும் அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் குழுமத்தின் 'கானல்' காணொளிக் கலந்துரையாடலில் நேற்றைய நிகழ்வாக, சகோதரர் தெரிசை சிவாவின் வம்சி வெளியீடாக வந்திருக்கும் இரண்டாவது சிறுகதை தொகுப்பான 'திமில்' வெளியீட்டு நிகழ்வு மிகச் சிறப்பாக நடந்தது. புத்தகத்தை வெளியிட்டு தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதுடன் நண்பர்களின் கேள்விகளுக்குச் சுருக்கமாகவும் நகைச்சுவையோடும் பதிலளித்தார் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட திரு. மனோபாலா அவர்கள்.


நிகழ்வை ஆரம்பித்து வைத்த அண்ணன் ஆசிப் மீரான் அவர்கள் வழக்கம் போல் சிறப்பாய் ஆரம்பிக்க, திருமதி. ஜெஸிலா பானு அவர்கள் மனோபாலா பற்றி மிகச் சிறப்பானதொரு சிறு குறிப்பு வரைந்தார். 

தன்னைப் பற்றி விரிவான சிறுகுறிப்பு வரைந்த ஜெஸிலாவைப் பாராட்டி, சிவாவின் புத்தகத்தை அறிமுகம் செய்வதில், அதுவும் தான் ஒரு தென்மாவட்டக்காரனாக ஒரு தென்மாவட்ட எழுத்தாளனின் புத்தகத்தை அறிமுகம் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி என்றதுடன் திமில் என்றால் வீரம், அழகு என்றெல்லாம் சொல்வார்கள் எனப்பேசி புத்தகத்தில் இருக்கும் பல கதைகள் அருமை என்ற மனோபாலா, வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டு தன் மண்ணின் மக்களையும் அவர்களின் பேச்சு வழக்கையும் கதைக்குள் கொண்டு வருதல் சிறப்பு என்றார். 'பொன்னுலெஷ்மி' என்னும் கதை தனக்கு ரொம்பப் பிடித்ததாகவும் அந்தக் கதை சாதாரணமாய் கிரிடிட் கார்டை தேய்த்து வாழ்க்கை நடத்தும் ஒருவனில் தொடங்கி, மனம் கனக்க வைத்து முடிந்ததாகச் சிலாகித்துப் பேசினார்.  

மேலும் கொரோனாவால் இப்படி முடங்கிக் கிடப்பது பற்றியும் அதனால் சினிமாத் தொழில் பாதிக்கப்பட்டிருப்பது பற்றியும் சொல்லி, இதுவரை தான் 960 படங்களைக் கடந்திருப்பதாகவும் கொரோனா இல்லை என்றால் இந்நேரம் 40 படங்களை முடித்திருப்பேன் என்றும் சொன்னார்... அந்த நம்பிக்கைதான் வாழ்க்கை இல்லையா...?  அப்போது 'கடல் எப்ப வந்துறது... கருவாடு எப்பத் திங்கிறது..' என்றார் சிரித்தபடி

ஜூம் வழிக் கூட்டங்கள் நம்மை ஒவ்வொருவருடைய வீட்டுக்குள்ளும் அழைத்துச் செல்கிறது. மேடை போட்டுப் பேசினால் கூட இப்படி ஒரு வரவேற்புக் கிடைக்காது என்றும் சொன்னார். இன்றைய நிலையில் அதுதான் உண்மை... இனி மேடை போட்டு நிகழ்வுகள் நடத்துவதெல்லாம் குறைந்து விடவும் வாய்ப்பு இருக்கிறது.

அதன் பின் சிவாவின் ஏற்புரை, தன்னை எழுத்தாளனாக்கிய நாஞ்சில் நாடன், கோதை கண்ணன் போன்றோருக்கு நன்றி சொன்னதுடன் திமிலில் இருக்கும் கதைகள் 2000-ஆவது வருடத்தில் எழுதியவை என்று சொல்லி, இதிலிருக்கும் கதைகளை பல எழுத்தாளருக்கு அனுப்பி வாசிக்கச் சொன்னபோது சிலர் நல்லாயிருக்கு என்று சொன்ன கதை பலருக்குப் பிடிக்கவில்லை... வாசிப்பில் ஒவ்வொருவரும் வித்தியாசப்படுகிறார்கள் என்பதைச் சொல்லி, எல்லாருக்கும் நன்றி சொல்லி முடித்துக் கொண்டார்.

எப்பவும் சிறப்பு அழைப்பாளர் ஒரு மணி நேரத்துக்கு மேல் பேசிய பின்னே கேள்விக்கணைகள் தொடுக்கப்படும், ஆனால் நேற்று மனோபாலா அவர்கள் ஒருமணி நேரமே இருப்பேன் என்று முன்பே சொல்லிவிட்டதால் அவருடனான பேச்சு கேள்வி-பதில் பகுதியாகத்தான் இருந்தது.

ஆசிப் அண்ணன் அவர்கள் கிட்டத்தட்ட 42 ஆண்டுகள் திரைத்துறையில் இருக்கிறீர்கள்... சொல்லப்போனால் நான்கு தசாப்தம்  என்று சொல்லி நாலைந்து கேள்விகளை ஒன்றாகக் கேட்டு வைக்க, தனது ஆரம்ப காலம், ஆழ்வார்பேட்டையில் மணிரத்தினம், பி.சி.ஸ்ரீராம், சந்தானபாரதி, கமல் மற்றும் சில நண்பர்களுடன் ஆழ்வார்பேட்டை குருப்ஸாக இருந்து பேராபட்டில் அடித்த அரட்டைகள், சினிமா... சினிமா... சினிமா எனச் சினிமாவைப் பற்றியே பேசியது, தன்னைக் கமல் இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் கொண்டு போய் சேர்த்துவிட்டது, தான் எடுக்கும் படத்துக்கும் தனது படிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லாதது, அதுவே கமலுக்குப் பிடிக்காதது... தன்னைக் கே.எஸ்.ரவிக்குமார் நடிகனாக்கியது  என எல்லாம் சொல்லி இந்த வழியில்தான் பயணிக்க வேண்டும் என்று நினைத்துப் பயணித்தாலும் இடையில் 'டேக் டைவர்சன்' எனச் சொல்லி மடை மாற்றுவது போல் மாறி மாறிப் பயணித்திருக்கிறேன் என்பதை 'சென்னைக்குத்தான் வருகிறோம் என்று நினைப்போம் விழுப்புரத்தில் போற வழியை மாற்றி இந்தப்பக்கமாகப் போங்கள் என்று சொல்வதில்லையா அப்படித்தான் வாழ்க்கையும்' என்றார் புன்னகையுடன். மேலும் மாறி மாறிப் போய்க்கிட்டே இரு... உனக்கான இடம் வரும்போது இறங்கிக்க... அதுவரை பயணித்துக் கொண்டேயிரு என கே.எஸ்.ரவிக்குமார் சொன்னதாகவும் சொன்னார்.

அடுத்ததாகப் 'பெனாத்தல்' சுரேஷ் அண்ணன் அவர்கள் சதுரங்கவேட்டை படம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்... அது ஒரு சினிமா போல் இல்லாமல் பீரோபுல்லிங் போன்ற பல விஷயங்களை வைத்துத் தனித்தனியாக எடுக்கப்பட்டிருக்கும் கதையைக் கேட்கும் போது இந்தப் படம் சரிவருமா என்ற எண்ணம் உங்களுக்கு வந்திருக்கலாம்... அப்படியிருந்தும் அதை எப்படித் தைரியமாக முதல் படமாகத் தயாரித்தீர்கள் என்று கேட்டதும் இது நல்ல கேள்வி என ஆரம்பித்து, தான் முதலில் கஜினி படத்தை எடுக்க நினைத்ததாகவும் சூர்யா இதுக்குச் சரியா வருவார்... இந்த நடிகை ஓகே என்றெல்லாம் சொல்லி வைத்த பின்... கஜினி மட்டுமல்ல.. பல படங்களுக்கு எல்லாம் நான் சொல்லி விடுவேன்.. அதன்பின் சினிமாவில் நடிக்கப் போய்விடுவதால் அவர்கள் வேறு பக்கம் போய்விட்டார்கள். அதேபோல் மிஷ்கினின் நந்தலாலா... அப்புறம் அட்லீயின் ராஜாராணி... அந்தப் பையன் உதவி இயக்குநராய் பணிபுரியும் போது அவனின் திறமையைப் பார்த்து உங்கிட்ட கதையிருந்தாச் சொல்லு நான் தயாரிக்கிறேன் எனச் சொல்லி, ராஜாராணி கதையை எடுக்க முடிவு செய்து ஜெய்க்குப் பதிலாக சிவகார்த்திகேயனை யோசித்து வைத்திருந்தோம்... ஆனால் அவனோ எனக்கு இது முதல் படம் பெரிய பேனரில் பண்ணினால் நல்லாயிருக்கும்... அடுத்த படம் நாம பண்ணலாமுன்னு முருகதாஸ்கிட்ட பொயிட்டான் என இன்னும் விரிவாகப் பேசியவர், நான் கிண்டிக் கொடுத்த அல்வாவை எனக்கே கொடுத்துட்டுப் போயிடுறானுங்க எனச் சிரித்தபடிச் சொன்னார்.

நம்ம புதிதாக படம் தயாரிக்கக் களம் இறங்கியிருக்கிறோம்... பெரிய பேனர் என்பது நல்ல படமாக எடுத்தால் தானாக வந்துவிடும் என்பதைப் புரிந்து வைத்திருந்ததால் அப்படியான ஒரு வாய்ப்புக்காக காத்திருந்த வேளையில்தான் நளன் குமாரசாமியிடம் பேசினேன். அப்போது அவர் வினோத்தின் கதையைச் சொல்லி, அம்மாவுக்கும் பிடிச்சிருக்கு என்றார். பின்னர் பேசினோம்... நட்ராசைத்தான் கதாநாயகனாப் போடணும் என்று சொன்னாதும் யோவ் அவன் பம்பாயில கேமாராவத் தூக்கிட்டுத் திரியிறான் அவனெதுக்கு எனச் சொல்ல, அவன்தான் என்ற முடிவில் மாறாமல் இருந்ததால் நான் அவனிடம் பேசினேன்... நட்ராஜ் எங்க வீட்டுப் பிள்ளை மாதிரி, என்னண்ணே படம் பிடிக்க வாடான்னு சொல்லுவேன்னு பார்த்தா நீ நடிக்க வாடாங்கிறே என்றவனிடம் என்னமோ தெரியல உன்னய வச்சி எடுத்துச் சிக்கிச் சீரழியணுமின்னு நெனக்கிறான் போல எனச் சிரித்துக் கொண்டே சொன்னேன். படத்தை ஆரம்பித்து இளவரசு போர்ஷனை இரண்டு வாரத்துக்குள் முடித்துவிட்டோம். இந்தப் படம் என்னை மிகப்பெரிய உயரத்துக்குக் கொண்டு போச்சு... நிறைய விருதுகள் வாங்கினேன்... என்னோட தயாரிப்புக் கம்பெனியும் பெரிய பேனர் ஆயிருச்சு என்றார்.

அடுத்த கேள்வியை தொடுத்த வேல்முருகன், நான் தொடர்ந்து உங்களது வேஸ்ட் பேப்பர் (WASTE PAPER) சேனலைப் பார்ப்பவன், சொல்லப் போனால் அது வேஸ்ட் பேப்பர் இல்லை... தரமான பேப்பர் என்று சொல்லி, ஆழ்வார்பேட்டை குருப்ஸாக இருந்து நீங்கள் எல்லாரும் பேசிய, கண்ட கனவுகள் எல்லாம் நனவாகியிருக்கிறதா என்பதாய்க் கேட்டதும், அதெப்படிங்க எல்லாக் கனவும் நனவாகும்... அதெல்லாம் ஆகாதுங்க என ஆரம்பித்து தனக்குப் பொன்னியின் செல்வன் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததையும் அது நிறைவேறாமல் போனதையும் அதை  இப்போது மணிரத்தினம் எடுப்பதையும் சொன்னார்.

இயக்கிய படங்களில் சிறப்பான படம் எது எனத் திருமதி. ஜெஸிலா கேட்க, அப்படியெல்லாம் சொல்ல முடியாது... இதுதான் சிறப்பு என முற்றுப்புள்ளி வைத்து விட முடியாது... பிள்ளை நிலா படத்தைக் கலைமணி என்மீதான நம்பிக்கையில் கொடுத்தார். எனக்கும் நிறைய சரித்திரப் படங்கள் எடுக்கணும் பொன்னியின் செல்வன் எடுக்கணும் என்ற ஆசைகள் எல்லாம் இருந்தது. 2002-ல் சன் டீவியில் பொன்னியின் செல்வனைச் சீரியலாக கொண்டு வர முயற்சித்தோம்... முடியலை... கடல்புறா, யவனராணி போன்ற கதைகளை படமாக்க நினைத்தேன்... அதுவும் முடியலை... தெலுங்கில் ஒரு இயக்குநர் பாகுபலின்னு வரலாற்றுப் படமெடுத்திட்டார். எனவே சிறப்பான படம் நான் இன்னும் எடுக்கவில்லை என்றும் சொல்லலாம் என்றார். மேலும் பொன்னியின் செல்வனை எடுக்க நினைத்தால் ஏதோ ஒரு வகையில் தடங்கள் வரும் எனச் சொல்லி கமலுக்கு, தனக்கு, தற்போது கொரோனாவால் மணிரத்தினத்துக்கு என தடங்கள் வந்ததை விரிவாய்ப் பேசினார்.

அடுத்துப் பாலாஜி ஒரு முக்கியமான கேள்வி கேட்க இருக்கிறார்... வாருங்கள் பாலாஜி என்று ஆசிப் அண்ணன் சொன்னதும் அவரு எப்பவும்தான் கேட்டுக்கிட்டு இருக்கிறார். அவரை விடுங்கள்... அடுத்த ஆளைக் கூப்பிடுங்க என்றார் சிரித்தபடி. பாலாஜி அண்ணன் எங்கிருக்கிறார் எனத் தெரியாமல் (கூட்டம் அப்படி) எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும் எனத் திருவிழாவில் அழைப்பது போல் அழைத்தும் பிடிக்க முடியாததால் அரசியல் பிரமுகரும், தனது கேள்விகளுக்குள் அரசியலையும் புகுந்தி லாவகமாய் கேள்வி கேட்பவருமான பிலால் அவர்களுக்கு வாய்ப்புப் போனது.

நான் உங்கள் ரசிகன்... உங்களோட கட்டை உருட்டுதலை கல்லூரிக் காலங்களில் பயன்படுத்தி இப்போது இங்கும் கார்ப்பரேட் கூட்டங்கள் முடிந்தபின் இதுகுத்தான் இந்த உருட்டா எனப் பேசுவதுண்டு எனச் சொல்லி, நம்ம நாட்டில் இப்போது மொழி சார்ந்த பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கும் போது வெளிநாட்டில் இருக்கும் ஒரு சிறு அமைப்பு உங்களை அழைத்து ஒரு புத்தக வெளியீடு நடத்துவது குறித்து பிலால் கேட்க, எனக்கு எப்பவுமே வாசிப்பு மேல அதிக ஈடுபாடு உண்டு... நிறைய வாசிப்பேன்... இப்படியான நிகழ்வுகளில் கலந்து கொள்ளுதல் என்பதே மகிழ்ச்சிதானே... திறமையானவங்களை எப்பவுமே நான் வாழ்த்துவதுண்டு... அப்படித்தான் தம்பி தெரிசை சிவாவின் திமில் நிகழ்விலும் கலந்து கொண்டேன் என்றார். 

நான் அடுத்த கேள்வியும் வச்சிருந்தேன்... ஆனா அதுக்கான பதிலும் இதுலயே சொல்லிட்டீங்க... இருந்தாலும் கேட்கிறேன் என இயக்குநராய் இருப்பவர்கள் அதிகம் வாசிக்க வேண்டும் என்பது அவசியம்தானே என்றதும் கண்டிப்பாக வாசிப்பு முக்கியம்... அதுபோக நாவல்களைப் படமாக்கும் முயற்சிகள் வரவேற்க்கத்தக்கது. அதை ஏ.பி.நாகராஜ் ஆரம்பித்து வைத்தார்... மகேந்திரன் தொடர்ந்தார்... இப்போது வெற்றிமாறன்... அசுரன், விசாரணையின்னு நாவல்களைத் தேடித்தேடி படமாய் எடுப்பது சிறப்பு... அதற்காகவே அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்றார்.

இளையராஜா... இதுதான் பாலாஜி அண்ணன் வைத்த கேள்வி. ஒரே ஒரு வார்த்தை... இது உலகமே சுவாசிக்கும் பெயர் என்பதை இளையராஜாவைக் கொண்டாடும் எல்லாரும் அறிவோம். விரிவாகப் பதில் வரும் என்று நினைத்தால் மனோபாலாவோ 'சுவாசம்' எனச் சொல்லி நிறுத்திவிட்டார். இந்த ஒற்றை வார்த்தை சொல்லும் ஓராயிரம் கதைகளை என்றாலும் இளையராஜாவுடன் உங்களுக்கு நெருக்கம் அதிகம்... அதைப் பற்றி நீங்க விரிவாக எங்களிடம் சொல்ல வேண்டும் என்று ஆசிப் அண்ணன் கேட்டதும் விரிவாகப் பேச ஆரம்பித்தார்.

ராஜாவுக்கும் தனக்குமான உறவு... பிள்ளை நிலா படத்துல ரெண்டே ரெண்டு பாட்டுத்தான்... படமெல்லாம் எடுத்து முடிச்சிட்டு ஒரு கடினமான சூழலில்தான் அவரிடம் ரீரெக்கார்டிங்குக்காக போய் நின்றேன்... நான் போட்டுத் தரலைன்னா என்ன பண்ணுவே எனக் கேட்டு விட்டுப் போட்டுக் கொடுத்தார். அதுவரை ரீரெக்கார்டிங்குக்கு எனத் தனியாக கேஸெட் வந்ததில்லை... ஜெர்ரி கோல்ட்ஸ்மித்தின் ரீரெக்கார்டிங் கேஸெட்டுக்களைக் கேட்கும் போது நம்மாளுக இப்படிப் பண்ணுவதில்லையேன்னு தோணும்.. அந்தக் கவலை என்னோட பிள்ளைநிலாவில் தீர்ந்தது. ஆம் என் படத்துக்குத்தான் முதன் முதலில் ரீரெக்கார்டிங் கேஸெட் வந்தது. அதன் பிறகு வேறு படங்களுக்கு வரவில்லை... இப்போது நிறைய வருகிறது என்றார்.

எத்தனை பேர் போய் நின்றாலும் அஞ்சு, பத்து நிமிடங்களில் பாடல் போட்டுக் கொடுத்து விடுவார். பாடலின் மெட்டை அவரின் குரலில் கேட்பதே மகிழ்ச்சிதான். என்ன மனுசன் அவர்...? தில்லானா மோகனாம்பாள்ல நம்ம மனோரமா ஆச்சி சொல்றது மாதிரி அப்படியே கொட்டிக்கிட்டே இருக்கு அவருக்கிட்ட எனச் சிலாகித்தார்.  மேலும் முதல் மரியாதை, கிழக்கே போகும் ரயில் படத்தை எல்லாம் இளையராஜா மியூசிக் இல்லாமல் பார்க்கவே முடியாது என்றார். நாம பாட்டுக்கான சிச்சுவேசனைச் சொல்லிட்டா அவரு ஒரு கற்பனையில பாடலை உருவாக்கிடுவாரு... இதை அப்படியே நம்மால் கொண்டு வர முடியுமா என்ற எண்ணம் வர ஆரம்பித்து விடும்... எங்க இயக்குநர் ஒண்ணு சொல்ல, இவர் ஒண்ணு சொல்லன்னு... அந்த நட்பு வேற என இன்னும் இன்னுமாய் ராஜா பற்றிப் பேசினார் மகிழ்வாய்.

தெரிசை சிவா நடிகனா இயக்குநரா எது உங்களுக்குப் பிடித்திருந்தது என்பதாய்க் கேட்டதுக்கு எதுவாக இருந்தாலும் விரும்பிப் பணி செய்தால் போதும் என்று சொன்னார், ஹிந்தியில் ஒரே ஒரு படம் மட்டும் எடுத்துவிட்டு பின்னர் அந்தப் பக்கமே போகவில்லையே ஏன் என ஆசிப் அண்ணன் கேட்டதும், ஹிந்தித் திரையுலகின் அரசியல் பற்றி விரிவாகப் பேசினார். தன்னோட படத்தை தாசரி நாராயணராவ் தெலுங்கில் எடுத்தவுடன் அவருக்கு ஹிந்தியில் அதை எடுக்கும்படி அழைப்பு வர, தனக்கு வேறு படவேலை இருப்பதால் இதன் மூலமான தமிழை மனோபாலாதான் இயக்கினார் அதனால் அவரே எடுத்தால் சிறப்பாக வரும்ன்னு சொன்னதால் தான் அழைக்கப்பட்டதாகவும், ஆந்திராவில் 80% படத்தை 20 நாளில் முடித்ததாகவும் ஆனால் 20% படத்தை கிட்டத்தட்ட 80 நாட்கள் மும்பையில் எடுத்ததாகவும் சொன்னார். அதற்குக் காரணம் அவர்கள் படப்பிடிப்புத் தளத்துக்கு வருவது... இந்திக்காரனுக்கும் இந்தி பேசுபவனுக்கும் அவர்கள் கொடுக்கும் மரியாதை... தங்கள் மொழி மீதான பற்று என எல்லாம் சொல்லி, அங்கு தான் காலையில் ஸ்டுடியோவைத் திறக்க போனதையும் ராதிகா இது நம்மூரு இல்லை... இங்க லேட்டாப் போனப் போதும் கெடந்து தூங்கு எனச் சொன்னதாகவும் அதன்பின் தமிழில் படம் எடுக்கும் போது நேரப்பிரச்சினையில் மாட்டித் தவித்ததாகவும் சொன்னார்.

அப்போது அவனுக மொழிக்கு மரியாதை கொடுக்கிறானுங்க... ஆனா நாமதான் வந்தாரை வாழ வைக்கும் இனம்ன்னு ஒண்ணைச் சொல்லிக்கிட்டே எல்லாரையும் ஆதரிக்கிறோம்... ம்... எத்தனை காலத்துக்குத்தான் வந்தாரை வாழ வைக்கப் போறோமோ எனத் தன் ஆதங்கத்தையும் பதிவு செய்தார்.

ரபீக் சுலைமான் அண்ணாச்சி ஒரு கேள்வியை அனுப்பியிருக்க, அது சரிவர புரியாததால் அவருக்கு அழைக்க அவரும் மேடை ஏற நேரமாக, ஆசிப் அண்ணனே அடுத்த கேள்வியையும் கேட்டார். லயன்கிங் படத்தில் டப்பிங் பேசியதைப் பற்றி... வால்ட் டிஸ்னியில் இருந்து தன்னைத் தேடி வந்து பேசக் கேட்டதாகவும் குரலை மாற்றிப் பேசலாமா என்றதற்கு மனோபாலா குரல் என்பது தெரிய வேண்டும் என்று சொல்லிப் பேச வைத்ததாகவும் அது தனக்கு மிகப்பெரிய பேரை வாங்கிக் கொடுத்ததாகவும் அவர்கள் தனக்குப் பரிசுப் பொருட்களையும் பாராட்டுப் பத்திரத்தையும் அனுப்பி வைத்ததாகவும் இதெல்லாம் நடக்குமென கனவு கூட காணவில்லை என்றும் சொன்னார். 

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்ற வசனத்தை ஒருமுறை பேசி நடிங்க சார் எனச் சகாரிகா என்பவர் கேட்க, அதை நடித்துக் காண்பித்து 20 வருடமாகத் தனக்கு ஒவ்வொரு படத்திலும் ஒரு சிறந்த வசனம் வந்து விடுவதாகவும் அதை வைத்தே ஓட்டுவதாகவும் அதே வசனத்தைப் பலர் பயன்படுத்துவதாகவும் சொன்னவர், கட்டை உருட்டுதல், எப்படியிருந்த நான் போன்றவற்றை வைத்தே பலகாலம் ஓட்டியிருக்கிறேன் என்றும் சிரித்தார்.

ரூவைசில் இருந்து கலந்து கொண்ட ஸ்ரீராம் தம்பதிகள் படத்தில் நடிக்கும் போது இயக்குநர்களுக்கு யோசனை சொல்வீர்களா...? அப்படிச் சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா என்றும் ஒரு படத்தில் சைக்கிள் ஓட்டுவதைப் பற்றியும் கேட்டார்கள். ஒரு நடிகனாய் நான் என் யோசனைகளை அதிகம் சொல்ல மாட்டேன்... அப்புறம் எதுக்கு இயக்குநர்... சிலர் நீங்க ஏதுவும் சேத்துக்கிறதுன்னா சேத்துக்கங்கன்னு சொல்வாங்க... அப்போது கொஞ்சம் சேர்க்கலாம் என்றாலும் அவங்களே நல்லா எழுதி வச்சிருப்பாங்க... அப்புறம் அதுல நாம என்ன மாற்றம் செய்யப் போறோம் என்றவர் சைக்கிள் ஓட்டும் நகைச்சுவை எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்றார்.

அடுத்த படம் எப்போது இயக்குவீர்கள்...? இன்றைய சினிமாவின் நிலை என்ன என்பதாய் செந்தமிழ் செல்வன் என்பவர் கேட்க, அடுத்து படம் இயக்கும் எண்ணமில்லை... தயாரிப்பாளனாய்த் தொடரவே ஆசை என்றும் இன்று நிறைய புதிய இயக்குநர்கள் நல்ல கதைகளுடன் வருகிறார்கள். புதியவர்களை வளர்க்கவே எனக்கும் ஆசை... என் தயாரிப்பில் புதியவர்கள் நல்ல கதையுடன் வரும்போது கண்டிப்பாக வாய்ப்புக் கொடுப்பேன்... கைதி போன்ற படத்தை எடுத்த லோகேஷ்... அரைத்த மாவையே அரைப்பதில்லை... இப்பக் கூட மாஸ்டரில் விஜயை வேறு விதமாகக் காட்டியிருக்கிறேன் என்கிறார்... அடுத்து கமலிடம் போயிருக்கிறார்... திறமையிருந்தால் பயணித்துக் கொண்டேயிருக்கலாம் என்றார்.

ஓடிடி (OTT) குறித்த ஆசிப் அண்ணனின் கேள்விக்கு விஞ்ஞான வளர்ச்சியை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இப்ப கொரோனா காலத்தில் படத்தை எடுத்து கையில் வைத்திருப்பது என்பது எத்தனை வலியையும் வேதனையையும் கொடுக்கும் என்றதுடன்  இது தியேட்டருக்கு... இது ஓடிடி தளத்துக்கு என்பதை படம் எடுப்பவன் முடிவு செய்யட்டும் என்றார்.

ரஜினியுடனான நட்பு பற்றி ஆறுமுக நயினார் என்பவர் கேட்டதுக்கு அவர் நல்ல மனிதர், அவருடன் நிறையப் படங்களில் நடித்திருக்கிறேன் அப்போதெல்லாம் சக நடிகராய்ப் பார்க்காமல் இயக்குநர் என்ற இடத்தில்தான் வைத்துப் பார்ப்பார் என்றார். ஊர்க்காவலன் படமெடுக்கும் போது ரஜினிக்கும் மனோபாலாவுக்கும் பிரச்சினை என்றெல்லாம் கேள்விப்பட்டதுண்டு அதையெல்லாம் சொல்லாமல் ஒரு மனிதனின் நற்குணங்களை மட்டுமே சொல்லி அவர் சிறந்த மனிதர் என்றார்.

சசிகுமார் அண்ணன் அவரின் உண்மையான பெயரான பாலச்சந்தர் பற்றிக் கேட்ட கேள்வியை, ஆசிப் அண்ணன் இயக்குநர் பாலசந்தர் என நினைத்துக் கேட்க,அவரும் எங்க ரெண்டு பேரு ஊருக்கும் இடையில் 14 கிமீ தூரம்தான்... அவரெல்லாம் சிறந்த இயக்குநர்... அவர் பெயரைக் கெடுக்கக் கூடாது எபதாலேயே மனோபாலா என மாற்றிக் கொண்டேன் என்றார். சசிகுமார் அண்ணன் எனக்கு வாய்ப்புக் கொடுங்க நேரடியாக அவரிடம் கேட்கிறேன் எனச் சொல்லி, தான் பாலசந்தர் பற்றிக் கேட்கவில்லை பாலச்சந்தர்-லூபா-மனோபாலா ஒரு சிறுகுறிப்பு என்றுதான் கேட்டேன் என்றதும் தன் சொந்தப் பெயர் பாலச்சந்தர் என்றாலும் பாலச்சந்தருக்கு முன் தன்னைப் பேர் சொல்லி அழைக்க விரும்பாத கமல் லூபா என அழைத்ததாகவும் அதன் பின் மனோபாலாவாக தானே மாற்றிக் கொண்டதாகவும் சொன்னார்.

சுபான் அண்ணன் ஏதோ கேட்க நினைத்திருந்தார் போல அழைப்புக் கொடுத்தும் கடைசி வரை மேடை ஏறவில்லை... போட்டோ பிடிக்கப் போய்விட்டார் போல.

முன்னரே அழைப்புக் கொடுத்து வராதா ரபீக் சுலைமான் அண்ணன் இயக்குநர் ஈ.இராமதாசு பற்றிக் கேட்க, அவரைத் தான் சந்தித்தபோது ஒரு கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு அப்படியே தன்னிடம் வந்ததாகவும் , தென்மாவட்டக்காரன் என்பதால் அவர் மீது நேசம் உண்டானதாகவும் சொன்னவர், கையில் வைத்திருந்த புத்தகம் கவிதைப் போட்டியில் வாங்கிய முதல்பரிசு என்றதும் என்ன கவிதை சொன்னே எனக் கேட்ட போது பொருளாதார சரிவு பற்றிப் சொன்னதாகச் சொல்ல, எங்கே கவிதையைச் சொல்லு எனக் கேட்டதும் 'பொருளாதாரச் சரிவுக்குக் காரணம் தேசியக் கொடியில் ஒற்றைச் சக்கரம் இருப்பதாலேயே' என்பதாய்க் கவிதை சொன்னதும் ரொம்ப பிடித்துப் போய்விட்டது என்றவர் அவரின் திரைப்பயணம் குறித்துப் பேசி, சமீபத்தில் உடல் நலமில்லாமல் இருந்தார்... இப்போது நல்லாயிருக்கார்... இன்னும் சிறப்பான படங்கள் கொடுப்பார் என்றார்.

இறுதியாக நண்பர் கமல் பற்றிச் சொல்லச் சொன்னதும் புதிதாக நடிக்க வருபவர்கள் அவரின் படங்களை எல்லாம் பார்த்துவிட்டு வந்தாலே போதும்... அவ்வளவு இருக்கிறது அவரின் படங்களில் என்றவர், நான் கமர்சியல் படங்கள் எடுப்பது கமலுக்கு எப்போதுமே பிடிப்பதில்லை... ஊர்க்காவலன் எடுக்கும் போதெல்லாம் திட்டினார். அதனாலயே அவரை இயக்கும் வாய்ப்பு வரவேயில்லை... நானும் அந்த ஆழ்வார்பேட்டை வீட்டில் வளர்ந்தவன் என்பதில் எனக்கு மகிழ்வும் பெருமையும் உண்டு... இப்பவும் எங்க நட்பு எப்பவும் போலிருக்கு... அவரோட நடிக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைக்கலை... லோகேஷோட படத்துல அந்த வாய்ப்பு வரும்ன்னு நினைக்கிறேன்... அப்புடியே இல்லைன்னாலும் லோகேஷை மிரட்டியாச்சும் வாங்கிருவேன்... அதுக்கும் மசியலைன்னா வெடிகுண்ட வீசிக்கீசி இடம் புடிக்கணும் என்றார் சிரித்தபடி.

அண்ணே இவ்வளவு ஓப்பனாப் பேசுறீங்க... பிரச்சினை ஆயிறாம  என ஆசிப் அண்ணன் சிரிக்க, அப்படிப் பிரச்சனை வந்தா வடிவேலு சொல்ற மாதிரி நானெல்லாம் அந்தளவுக்கு ஒர்த் இல்லைன்னு சொல்லிடலாம் எனச் சொல்லிச் சிரிக்க எல்லாரும் சிரித்தார்கள்.

நகைச்சுவையுடன் சிறப்பாக தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார் நம்மவரின் நண்பரான இயக்குநர் மனோபாலா.  தான் பிரபலம் என்பதாலேயே பல விஷயங்களில் முன்னுரிமை கிடைப்பதாகவும், டிடிஆராக பல படங்களில் நடித்ததால் தனக்கு இரயில் டிக்கெட் முன்பதிவில் உறுதிசெய்யப்பட்ட டிக்கெட் கிடைப்பதாகவும் கோவில்களுக்குச் சென்றால் தனியாக அழைத்துச் சென்று சாமி கும்பிட வைத்து அனுப்பி விடுகிறார்கள் என்றும் சொல்லி, துபையில் தன்னை மக்கள் சூழ்ந்து கொண்டதையும் பாலாஜி அண்ணன் லாவகமாகத் தன்னை அழைத்துச் சென்றதையும் நினைவு கூர்ந்தார்.

கொரோனா முடிந்து வாய்ப்பிருக்கும் பட்சத்தில் அமீரகம் வந்து தங்கள் முன் இன்னும் சிறப்பான, கலகலப்பான பேச்சைக் கொடுக்க வேண்டுமென ஆசிப் அண்ணன் கேட்டுக் கொண்டார்.

உண்மையிலேயே மிகச் சிறப்பானதொரு நிகழ்வு... கேள்விகள் கேட்கப்பட்ட வரிசை... ஒரு மணி நேரத்துக்குள் அவரிடமிருந்து முடிந்தளவு பெற்றுக் கொண்டது என மொத்தத்தில் வழக்கம் போல் எங்கள் அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் குழுமத்தின் கானல் காணொளிக் கூட்டம் மிகச் சிறப்பு.

-'பரிவை' சே.குமார்.

4 எண்ணங்கள்:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

நிகழ்வை நேரில் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. சிறப்பான விவரிப்பு.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

நிகழ்வில் கலந்துகொள்ளாத குறையை நீக்கிய பதிவு

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... அழகான விவரிப்பு...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை
முரளிதரன் ஐயா அவர்களின் கருத்தை வழிமொழிகின்றேன்