கலக்கல் ட்ரீம்ஸ் தசரதனின் புதிய நாவலான 'அசோலா' நேற்று விற்பனைக்கு வந்தது. அது குறித்துப் பேசும்போது இப்போதைய சூழலில் சிறிய வெளியீட்டு விழாக் கூட வைக்க முடியாது என்பதால் நேரடி விற்பனைக்கு கொண்டு வந்துட்டேன் என்றதுடன் கதையை அதன் போக்கில் எழுதிச் சென்றதால் அது எல்லாருக்கும் பிடிக்குமா..? பிடிக்காதா..? என்பதெல்லாம் தெரியாது எனவேதான் பெரிதாக எதுவும் செய்யவில்லை என்றார்.
கதையை அதன் போக்கில் எழுதுவேன் என்ற வார்த்தை எனக்குப் பிடித்துப் போனது, ஏனென்றால் நானும் அப்படித்தான் எழுதுவேன். அவருடன் தொடர்ந்து பேச, சிலருக்கு அச்சில் ஏறும் முன்னரே வாசிக்கக் கொடுத்தேன்... அப்போது கலவையான விமர்சனமே வந்தது. சிலர் சில இடங்களில் மாற்றச் சொன்னார்கள்... நான் என் எழுத்தை எப்போதும் பிறருக்காக மாற்றுவதில்லை என்றும் சொன்னார். நானும் அப்படித்தான் யாருக்காகவும் என் எழுத்தை மாற்றுவதில்லை.
இப்படியாகப் பேச்சு நகர்ந்த போது எதிர்சேவை குறித்தான விமர்சனங்கள் பற்றிப் பேசினோம். இதுவரை எனக்கு வந்த... அதாவது முகம் தெரிந்த, முகம் தெரியாத நண்பர்கள் எழுதிய விமர்சனங்கள் எல்லாமே நல்ல கதைகள் என்பதாய்த்தான் இருந்தது. சின்னச் சின்ன விசயங்கள் சிலர் சொல்லியிருந்தார்கள். அடுத்த புத்தகமாக்கல் நிகழ்ந்தால் அதில் அதெல்லாம் சரி பண்ணிக் கொள்ளலாம். கிராமிய வழக்கு என்பதால் ஒற்று, சந்தி எனப் பிழைகள் அதிகமாகத்தான் தெரியும். அதையும் ஒரு எழுத்தாளர் சுட்டிக் காட்டினார். அதையெல்லாம் ஏற்றுக் கொண்டேன்.
என் முதுகுக்குப் பின்னே சொல்லப்படும் விமர்சனங்களைப் பற்றி எப்போதும் கவலைப்படுவதில்லை. எழுதும் போது எனக்கு எல்லாமே நல்ல கதைகள்தான்... அது பொதுவெளியில் பகிரப்படாதவரை. மின்னிதழிலோ, இணையப் பக்கங்களிலோ பகிரப்பட்டு விட்டால் அதற்கான விமர்சனங்களை மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டுமேயொழிய என் எழுத்தை நீ எப்படிக் குறை சொல்லலாம் என்று மல்லுக்கு நிற்பது கூடாது என்பதில் எப்பவும் உறுதியாய் இருப்பேன். முகத்துக்கு நேரே சொல்லும் நிறை குறைகளை எப்போதும் கேட்டுக் கொள்வதுண்டு. அதைச் செயல்படுத்துகிறோமோ இல்லையோ அவர்கள் சொல்வது அவர்கள் பார்வையில் நியாயமானதுதானே... அதற்கு உரிய மரியாதையை எப்போதும் கொடுக்கத் தவறுவதில்லை. முதுகுக்குப் பின்னே... அதெதுக்குங்க நமக்கு... நம்ம பாதையைப் பார்த்து நடை போடுவோம் எனக் கடந்து விடுவேன்.
சில நாட்களுக்கு முன் என் கதைகள் உறக்கம் வருவதாய் முதுகுக்குப் பின்னே ஒரு கருத்து சொல்லப்பட்டது... என் காதுக்கு அந்தச் செய்தி வந்தபோது இன்னைக்கு ரொம்பப் பேரு தூக்கமில்லாமல் டாக்டருக்கும் மாத்திரைக்கும் செலவு பண்ணிக்கிட்டு இருக்காங்க... நம்ம கதை தூக்கம் வருதுன்னா... நல்லதுதானே என்றேன். எனக்கும் என் மகனுக்கும் தூக்கம் ஒன்னுவிட்ட பங்காளியெல்லாம் இல்லை உடன் பங்காளி... எங்க படுத்தாலும் அடுத்த நொடி தூங்கிருவோம். அதனால் கூட தூக்கம் என் கதைகளிலும் இருக்கலாம். இதைத் தசரதனிடம் சொன்னபோது எதிர்சேவையா சொல்லியிருக்கார்... அடப்பாவி எனச் சொல்லிச் சிரித்தார்.
கிராமமும் அதன் நிலப்பரப்பும் அது சுமக்கும் மனிதர்களும் சொல்லும் கதைகள் ஏராளம்... அந்த வாழ்க்கையை வாழ்ந்தவனுக்கே அந்தக் கதைகளின் வாசம் புரியும்... திருவிழாவையும் எழவையும் எழுதுவதென்பது எல்லாராலும் முடியாது... அதை அனுபவித்திருந்தால் மட்டுமே எழுத முடியும்... நான் அனுபவித்திருக்கிறேன்... அதை எழுதுகிறேன்... யாரையும் வாசிக்கச் சொல்லி எப்போதும் கட்டாயப் படுத்தியதுமில்லை... படுத்தப் போவதுமில்லை.
சமீபத்தில் ஒரு இணைய இதழுக்காக எழுதியதுதான் பார்வதி டீச்சர் கதை... அவர்கள் அதன் நீளம் காரணமாக வாசிக்க மாட்டார்கள் என நாசூக்காகச் சொல்லி மறுத்த பின்னரே கலக்கல் ட்ரீம்ஸில் பகிரப்பட்டது.. இதுவரை 8000 பேருக்கு மேல் வாசித்திருக்கிறார்கள். எந்த ஒரு கதையாக இருந்தாலும் வாசிப்பவரை இழுத்துக் கொண்டால் அதன் நீளம் ஒரு பொருட்டேயில்லை என்பதை நிரூபித்திருக்கிறது பார்வதி டீச்சர். உண்மையில் அதற்குக் கிடைத்த வரவேற்பு எனக்கே ஆச்சர்யம்தான்.
கறுப்பி வேறு விதமான களம்... எப்படியான விமர்சனம் வருமோ என்ற எண்ணத்தைச் சமீபத்தில் என்னுடன் பேசிய சில சகோதரிகள் உடைத்திருக்கிறார்கள். வேறு மாதிரியான கதையோ என வாசித்தால் அந்தப் பெண்களின் நிலமை வருத்தமளிக்கிறது என்பதே அவர்களின் கருத்தாய் இருந்தது. எனவே கறுப்பி காமம் நிறைந்த கதைதான் என்றாலும் வலி சுமக்கும் கதையாக பெண்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியே.
என் எழுத்து எனக்கு என்னத்தைக் கொடுத்தது..?
நிறைய நல்ல நட்புக்களைக் கொடுத்தது, என் எழுத்துக்கென நல்ல வாசகர்களைக் கொடுத்தது என்பதே உண்மை என்றாலும் அதையும் தாண்டி நீ வாசித்துப் பாரேன் என பகிரும் முன் நண்பர்கள் அனுப்பிய அவர்களின் எழுத்தைச் (சு)வாசிக்கக் கொடுத்தது... நேற்று முத்தாய்ப்பாய் தமிழகத்தின் தலை சிறந்த எழுத்தாளர் எழுதி முடித்த நாவலை அச்சேறுமுன் வாசிக்கக் கொடுத்தது.
ஆம் மிகச் சிறப்பான வரலாற்றுத் தகவல்களுடன் எழுதும் தமிழின் முன்னணி எழுத்தாளரின் அடுத்த நாவல் அச்சுக்குப் போகுமுன் எனக்கு வாசிக்க வந்திருக்கிறது. நாங்கள் இருவரும் பார்த்ததில்லை... பேசியதில்லை... அவர் முந்தைய நாவல்களுக்கு நான் எழுதிய விமர்சனங்கள் பிடித்துப் போனதால் முகநூல் அரட்டையிலும் வாட்ஸப்பிலும் மின்னஞ்சலிலும் மட்டுமே எப்போதாவது உரையாடல்... அவ்வளவே.
இன்று தன் நாவலைத் திருத்தக் கூடச் செய்யாமல் அப்படியே எனக்கு அனுப்பி வாசித்துச் சொல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறார்... பால்மணம் மாறாத குழந்தையாய் இருக்கும் நாவலை அவர் மீண்டும் செதுக்கும் போது 50 பக்கம் கூடலாம்... அல்லது 50 பக்கம் குறையலாம். ஆனால் அவர் பிரசவித்த குழந்தையை முழுவதுமாக வாசிக்கக் கிடைத்த பேர் எங்கிருந்து எனக்குக் கிட்டியது... எல்லாம் என் எழுத்து பெற்றுத் தந்ததுதானே.
என் எழுத்தில் யாருக்காகவும் சமரசம் செய்து கொள்ளமாட்டேன்... அது அதன் பாதையில்தான் பயணிக்கும்... அவரைப் போல எழுதலாமே என்பவர்களுக்கு அவரைப் போல எழுத அவர் இருக்கிறாரே பின் நான் எதற்கு...? எனக்குத் தெரிந்ததை எழுதுவதே என் எழுத்து... நான் கிராமத்தான்தான்... திருவிழாவையும் எழவையும் எருமை மாட்டையும்தான் எழுதுவேன்... யாரையும் வாசியுங்கள் எனச் சொல்லி இதுவரை சொன்னதில்லை, நட்புக்களைத் தவிர..
விமர்சனங்களை ஏற்க மறுத்ததுமில்லை... உங்களிடம் சொல்வதெல்லாம் ஒன்றுதான்... எப்போதும் விமர்சனங்களை முகத்துக்கு முன் சொல்லக் கற்றுக் கொள்ளுங்கள்... அதன் மதிப்பு வீரியமானதாக இருக்கும். முதுகுக்குப் பின்னே அல்ல...
-'பரிவை' சே.குமார்.
3 எண்ணங்கள்:
முதுகுக்குப் பின்னால் விமர்சிப்பவர்கள் இருக்கிறார்களா என்ன? உங்கள் கதைகளைப் பற்றிய நியாயமில்லாத விமர்சனம் அது.
அந்த வரலாற்று எழுத்தாளர் யார் என்று அறிய ஆவல்.
முதுகுக்குப் பின்னால் விமர்சனம்... ஒன்றும் சொல்வதற்கில்லை. பலர் இப்படித்தான் குமார். இதற்கெல்லாம் கவலை கொள்ள வேண்டியதில்லை.
கறுப்பி - தொடர்ந்து கலக்கல் ட்ரீம்ஸில் வெளிவருவது அறிந்து மகிழ்ச்சி. நல்ல வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை.
கதைக் கட்ட சில பேர் பிறந்து விட்டால் -
கண்ணகி வாழ்விலும் களங்கம் உண்டு...
காப்பாற்ற சில பேர் இருந்து விட்டால் -
கள்வர்கள் வாழ்விலும் நியாயம் உண்டு
கோர்ட்டுக்குத் தேவை சில சாட்சி...
குணத்துக்கு தேவை மனசாட்சி...
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே -
உனக்கு நீதான் நீதிபதி...
மனிதன் எதையோ பேசட்டுமே -
மனசப் பார்த்துக்க நல்லபடி - உன்
மனசப் பார்த்துக்க நல்லபடி...
கருத்துரையிடுக