மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 18 ஜூலை, 2020

மனசு பேசுகிறது : கந்த சஷ்டி கவசம்

தமிழ்க்கடவுள் முருகன் || tamil god murugan

துதிப்போர்க்கு வல்வினைபோம்; துன்பம்போம் ; நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் - கதித்தோங்கும் 
நிஷ்டையும் கைகூடும், நிமலனருள் கந்தர் 
சஷ்டி கவசம் தனை.

ந்த சஷ்டி கவசத்தின் மீது சிறு வயதிலிருந்தே ஒரு தீராக் காதல்... அதற்கு இன்னொரு காரணம் முருகன் மீதான அதீதக் காதலே... எதனால் அவன் மீது அத்தனை ஈர்ப்பு என்பதெல்லாம் தெரியாது... தங்கக் குதிரையில் இருக்கும் அழகு மலையானை எவ்வளவு பிடிக்குமோ அதை விடக் கூடுதலாய் முருகனைப் பிடிக்கும்.

அப்போது முதல் இப்போது வரை எதெற்கெடுத்தாலும் வாயில் வரும் வார்த்தை 'அப்பா முருகா'தான். முருகன் பாடல்கள் என்றால் போதும்... அதைக் கேட்காமல் விடுவதில்லை... மருதமலை மாமணியை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது... திரும்பத் திரும்பக் கேட்கலாம். 

அழகர் கோவிலுக்குச் செல்லும் போது அழகு மலையான், பதினெட்டாம் படியானுடன் சோலைமலை முருகனையும் தரிசிக்க முடியும். அதுவும் பதினெட்டாம்படியானைக் கும்பிட்டதுடன் மலையேறி, நூபுரகங்கை தீர்த்தத்தில் குளித்து, ராக்காயியை வழிபட்டு, மேலிருந்து இறங்கும் போது முதலில் பழமுதிர்ச்சோலை முருகனை வழிபட்டுவிட்டுத்தான் கீழே இறங்கி வந்து அழகுமலையானைக் கும்பிடச் செல்வோம்.

இது அழகு மலையானுக்கான பதிவு அல்ல... கந்தனுக்கான பதிவு... கந்தன் கறுப்பன் அல்ல... அவன் அழகன்... நம்மை ஈர்க்கும் புன்னகை முகத்தின் அரசன். சரி கந்த சஷ்டிக்கு வருவோம்.

நான் பெரும்பாலும் காலை வேளைகளில் கந்தர் சஷ்டி கவசம் கேட்டு விடுவேன்... பாடலைக் கேட்கும் போது வரிகளும் மனப்பாடமாய் வரும்... சூலமங்களம் சகோதரிகள் பாடியது மட்டுமின்றி, மகாநதி ஷோபனா, சித்ரா என பலரின் குரலில் கேட்பதுண்டு.

சின்ன வயசிலேயே அந்த டங்கு டிங்கு... டாடா டிடூன்னு வர்ற வரிகள் மீது ஒரு ஈர்ப்பு... எங்கள் ஊரில் மார்கழி மாதம் பொங்கல் வைத்து திருப்பள்ளி எழுச்சி கொண்டாட ஆரம்பித்தது நாங்கள் படித்துக் கொண்டிருக்கும் போது எங்கள் முன்னெடுப்பில்தான்... ஆரம்ப வருடங்களில் நாங்கள்தான் பொங்கல் வைப்பதும்... மழை பெய்யும் போது குடை பிடித்துக் கொண்டெல்லாம் பொங்கல் வைத்திருக்கிறோம்... இப்போதுதான் ஐயர் ஒருவர் வந்து பூஜை செய்கிறார்... ஒவ்வொரு வீடும் ஒருநாளென அதற்கான செலவை ஏற்க்க வேண்டும்... அப்படியான காலைத் திருப்பள்ளி எழுச்சியில் கந்தர் சஷ்டி கவசம் போட்டுட்டா சாமி கும்பிடப் போறோம் என்பது நடைமுறை.

சின்ன வயதில் எங்க ஊர்ல இருந்து பழனிக்கு பாதயாத்திரையாய் நிறையப் பேர் போவாங்க... அப்பல்லாம் ஒரு மாசத்துக்கு மேல் பஜனை நடக்கும்... எல்லாரும் அவ்வளவு அருமையாப் பாடுவாங்க... 'முத்தான முத்துக்குமரா முருகையா வா...வா' என்றும் 'பாசிப் படந்த மலை முருகையா...' என்றும் 'சுட்டதிரு நீரெடுத்து...' என்றும் ராகத்துடன் பாடுவது கேட்க இனிமையாக இருக்கும். எங்க அத்தை ஒருத்தவங்க கந்தர் சஷ்டி கவசத்தை பார்க்காமல் மனப்பாடமாய் தினமும் சொல்வார்கள்... அவர் சொல்ல ஆரம்பித்ததும் ஒரு சத்தமும் இல்லாமல் அத்தனை நிசப்தமாய் இருக்கும். அவர் பாடி முடித்ததும் அரோகரா போட்டு சுண்டலோ, பொங்கலோ கொடுப்பார்கள்.

முருகன் மீதான காதல் என்னையும் கல்லூரி படிக்கும் போது பழனிக்கு பாதயாத்திரை போக வைத்தது. ஆறு வருடங்கள் நடைபயணம்... அதெல்லாம் மறக்கமுடியாத அனுபவம்... நடந்து போய் முருகனை தரிசித்த போது கிடைத்த சந்தோஷம் இரண்டு வருடங்களுக்கு முன் காரில் பயணித்து, மாமாவின் நண்பர் மூலம் கூட்டத்தில் சிக்காது நேரடியாக முருகனை அருகிருந்து தரிசித்த போது கிடைக்கவில்லை என்பதே உண்மை... ஆனாலும் விஷாலுக்கும் ஸ்ருதிக்கும் அருகில் முருகனைப் பார்த்ததில் அதீத மகிழ்ச்சிதான்.

ஒரு சாரார் தினமும் கேட்கும்... சொல்லும் முருகனுக்கான மந்திரத்தை, நான் உன்னை வணங்கமாட்டேன்... உன் கோவிலுக்குள் வரமாட்டேன்... எனச் சொல்லும் நபர்கள் தரம் தாழ்த்திப் பேசவேண்டிய அவசியம் என்ன...  எனக்குப் பிடிக்காது என்னும் போது அது ஆபாசமாக இருக்கட்டும், அருவெறுப்பாக இருக்கட்டும் எதுவாகவோ இருந்துட்டுப் போகட்டும்... உனக்கென்ன வந்தது..?

போகாத ஊருக்குள்ள என்ன இருந்தா நமக்கென்ன... அங்க இருக்கது அந்த ஊருக்காரனுக்குத் தெரியும்... ஒருவரின் மத உணர்வுகளை, அது எந்த மதமாக இருந்தாலும் புண்படுத்த நினைப்பது கேவலமான செயலாகும். இப்படிப் பேசச் சொல்லி அந்த மனுசன் யாருக்கும் சொல்லிச் செல்லவில்லை... அவர் பேரைச் சொல்லிக் கொண்டு ஆட்டம் போடுவது... அவர் மீதிருக்கும் மரியாதையைக் குறைப்பதற்கான செயலே என்பதை இப்படியான கறுப்பர் கூட்டத்துக்கு கால் கழுவும் மற்றவர்களும் உணர வேண்டும்... இந்த மாதிரியான ஆட்களுக்கு உணர்த்த வேண்டும்.

ஒரு மதத்தின் நம்பிக்கையை அடித்துத் துவம்சம் செய்து விடுகிறேன் என ஆட்டம் போடுபவர்களுக்கு மற்ற மதத்து நண்பர்கள் சாமரம் வீசுவது ஏன் என்று தெரியவில்லை... உங்களுக்கு என்ன தெரியும் அவர்களின் நம்பிக்கையும் வழிபாடும்... உங்கள் தெய்வ நம்பிக்கை எப்படியோ அப்படித்தான் மற்றவர்களுக்கும் என்பதை உணருங்கள். எதற்கெடுத்தாலும் ஆமாம் சாமி என கம்பு சுற்ற வராதீர்கள்... சுற்றும் கம்பு ஒருநாள் உங்கள் பிடறியிலும் அடிக்கக் கூடும்... அப்போது கதறி லாபம் இல்லை.

கந்தர் சஷ்டி கவசம் சொல்வது பிணி நீங்கத்தானே ஒழிய... அதைப் பெரிசாக்கு இதைப் பெரிசாக்கு என்பதாக அல்ல... ஒரு நம்பிக்கையை கேவலமாகப் பேசுபவனுக்கு ஆதரவாக அள்ளி வீசுபவர்களே உங்கள் வீட்டில் எல்லாருமே கறுப்புச் சட்டை போட்டிருக்கவில்லை என்பதையும் உணருங்கள்... எனக்குத் தெரிந்த நண்பர் இறை எதிர்ப்பாளர்... ஆனாலும் அவரின் மனைவியும் குழந்தைகளும் கோவிலுக்குப் போவார்கள்... (கலைஞர் குடும்பம் மாதிரியானெல்லாம் கேட்கக்கூடாது) எங்களுடனும் வந்திருக்கிறார்கள். அவர் மனதுக்குப் பிடிக்கவில்லை ஒதுங்கியிருக்கிறார்... எந்த மந்திரத்தையும் தெய்வத்தையும் அவர் கேலி, கிண்டல் செய்ததில்லை... 

இதேபோல் என்னுடன் படித்த கிறிஸ்தவ நண்பன் தினமும் எங்களுடன் புவனேஸ்வரி அம்மனை வணங்கி திருநீறு வைத்துக் கொள்வான்... அவனிடம் கர்த்தர் வந்து தப்பெனச் சொல்லவில்லை. கந்தர் சஷ்டியை அடித்துத் துவம்சம் செய்ய நினைப்பவனுக்கு முட்டுக் கொடுக்கும் பல நண்பர்கள் பொங்கல் கொண்டு போய் கொடுத்தால் சாமிக்குப் படைத்தீர்கள் என்றால் சாப்பிடமாட்டோம் என்று சொல்பவர்கள்தான்...  மத நம்பிக்கையில் அதீத ஈடுபாடு கொண்டவர்கள்தான்... அதே நம்பிக்கை மற்ற மதத்தாரின் நம்பிக்கை மீதும் இருக்கட்டும். மதத்தைச் சுமக்காமல் மனிதர்களாய் இருக்கும் நிறைய உறவுகள் இருக்குமிடத்தில்தான் இது போல் சில பதர்களும் எல்லா மதத்துக்குள்ளும் இருக்கிறார்கள்.

ஆக, கந்தர் சஷ்டி கவசம் என்பது எனக்கெல்லாம் எப்போதும் மனசுக்குள் ஒலித்துக் கொண்டிருப்பதுதான்... கறுப்பர்களுக்கு நம்மைவிட இலங்கைத் தமிழர்கள் அருமையாக பதில் சொல்லியிருக்கிறார்கள்... அதிலும் நேற்று ஒரு நண்பரின் வீடியோ பார்க்கக் கிடைத்தது. கவிதையில் வெளுத்து வாங்கியிருக்கிறார்... தமிழ்க்கடவுள் முருகன் என் பாட்டன் என்பவர்கள் எல்லாம் முன்னும் பின்னும் பொத்திக் கொண்டு அமர்ந்திருக்க (இது ஓட்டரசியல்) இலங்கை வாழ் சொந்தங்களோ சிக்ஸர்களாக அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் மகிழ்ச்சியே....

மேவிய வடிவுறும் வேலவா போற்றி..!
தேவர்கள் சேனா பதியே போற்றி..!
குறமகள் மனமகிழ் கோவே போற்றி..!
திறமிகு திவ்விய தேகா போற்றி..!
இடும்பா யுதனே இடும்பா போற்றி..!
கடம்பா போற்றி கந்தா போற்றி..!
வெற்றி புனையும் வேலே போற்றி..!
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே..!
மயில்நட மிடுவோய் மலரடி சரணம்..!
சரணம் சரணம் சரவண பவஓம்...
சரணம் சரணம் சண்முகா சரணம்..!
சரணம் சரணம் சண்முகா சரணம்..!!
-'பரிவை' சே.குமார்.

9 எண்ணங்கள்:

KILLERGEE Devakottai சொன்னது…

எந்த மதமும் பிற மதங்களை தாழ்த்தி சொல்லி கொடுக்கவில்லை.
விளங்கா முடுமைகள்தான் இப்படி அண்ணாந்து எச்சில் துப்புகின்றனர்.

உலகத்துக்கே இன்றைய கடவுள்.
கொரோனாம்மாள்தான்.

விளம்பரம் படுத்துகிறது நண்பரே...

KILLERGEE Devakottai சொன்னது…

எந்த மதமும் பிற மதங்களை தாழ்த்தி சொல்லி கொடுக்கவில்லை.
விளங்கா முடுமைகள்தான் இப்படி அண்ணாந்து எச்சில் துப்புகின்றனர்.

உலகத்துக்கே இன்றைய கடவுள்.
கொரோனாம்மாள்தான்.

விளம்பரம் படுத்துகிறது நண்பரே...

ஸ்ரீராம். சொன்னது…

அவர்கள் கிடக்கிறார்கள்...

துரை செல்வராஜூ சொன்னது…

உங்களது பாணியில் பதிவு அருமை...

நலமெலாம் வாழ்க..

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல பகிர்வு.

கீழ்த்தரமான வேலைகளைச் செய்வதற்கென்று இப்படி சிலர் இருக்கிறார்கள். என்ன செய்ய.

Geetha Sambasivam சொன்னது…

மிக அருமையான பதிவு. புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்ளட்டும்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எப்படியாவது மதக்கலவரத்தை உண்டு பண்ணுவதே சிலரின் இலக்கு... ஏன்னென்றால் தேர்தல் வருகிறதல்லவா...?

முருகன் அனைவரையும் காக்க வேண்டும்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

விளம்பரம் சரி பண்ணியாச்சு கில்லர்ஜி அண்ணா...
வலைத்தள மருத்துவர் அண்ணன் தனபாலன் அவர்களும் கணிப்பொறி மற்றும் செல்போனில் திறந்து பார்த்து ஓகே சொல்லியாச்சு...
கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி.

Thenammai Lakshmanan சொன்னது…

சரியா சொன்னீங்க. கும்பிடாதவங்க & இறை நம்பிக்கை இல்லாதவங்க ஏன் அதைப் பத்திப் பேசணும். அடுத்தவங்க நம்பிக்கையை என்றைக்கும் புண்படுத்தக் கூடாது.