மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 1 ஜூலை, 2020

'ஈழ இலக்கியத்தைப் புரிந்து கொள்ளல்'-குணா கவியழகன்

டந்த வெள்ளியன்று நடந்த, நந்தா அவர்கள் முன்னெடுத்த ஜூம் கலந்துரையாடல் டாக்டர். சென் பாலன் அவர்களின் 'மாயப் பெருநிலம்' என்னும் நூல் குறித்த அறிமுகமும், எழுத்தாளர் குணா கவியழகன் அவர்களின் 'ஈழ இலக்கியத்தைப் புரிந்து கொள்ளல்' என்னும் தலைப்பிலான உரையுமாய் மிகச் சிறப்பாக நிகழ்ந்திருக்கிறது.


படம் இதைக் கொண்டிருக்கலாம்: Kuna Kaviyalahan, தாடி மற்றும் கண்களுக்கான கண்ணாடிகள்

சென் பாலனின் 'மாயப் பெருநிலம்' கிண்டில் 'பென் டூ பப்ளிஷ்' போட்டியில் கலந்து கொண்டு வரவேற்பைப் பெற்ற நாவல். இதைக் குறித்து புள்ளியல் துறை பேராசிரியை அ. வெண்மணி அவர்கள் பேசினார். நாவலை ஆழ்ந்து வாசித்து அதன் வேகம், வீச்சு, அது பேசும் அரசியல் என எல்லாத்தையும் விரிவாகப் பேசினார்.

சென் பாலன் தனது ஏற்புரையில் இந்த நாவல் கிண்டில் போட்டிக்காக எழுதியதல்ல... ஒரு விஷயத்தை எழுதும் போது அதில் எவ்வளவு உண்மைத்தன்மை இருக்கு என்பதை தீவிரமாக ஆராய்ந்து, நாம் சொல்வது சரியா எனச் சிந்தித்தே எழத வேண்டும் என்பதால் நிறைய மெனக்கெடல் இருந்தது. சிவராத்திரி தேதி, கும்பகோணம் குறித்த செய்திகள் என எல்லாமே உண்மையாகவே கொடுக்கப்பட்டிருக்கும். அதை உணர்ந்து உள்வாங்கி பேசிய வெண்மணி அவர்களின் பாராட்டு மூலம் இது கிண்டில் போட்டியையும் தாண்டிய ஒரு புத்தகம் என என்னால் அறிய முடிகிறது... அவர்களுக்கு நன்றி என்றார்.

குணா கவியழகன் குறித்த அறிமுகத்தை நெருடா சொன்னார். அப்போது 'மொழியறிந்த சொற்களுடனா வந்தேன் நான். வலியறிந்த சொற்களுடனே வந்தேன் உங்களிடம்' என்று அவர் சொன்னதை நினைவு கூர்ந்து சிறு அறிமுகத்தைச் சொன்னார்.

எழுத்தாளர் குணா கவியழகன் பேச ஆரம்பிக்கும் போது கொரோனா குறித்துப் பேசி, ஈழ இலக்கியத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்... ஈழ இலக்கியத்தின் சிறப்பம்சம் என்பது அரசியல் நீக்கம் செய்யப்படாத இலக்கியம் என்பதே ஆகும் என்றார். தமிழ் நாட்டில் தங்களுக்குத் தானே முடி சூட்டிக் கொண்ட ஜாம்பவான் அல்லது தங்களுக்குள்ளாக முடி சூட்டிக் கொண்ட எழுத்தாளர்கள் தொடர்ச்சியாக அரசியல் நீக்கம் செய்த இலக்கியங்களை எழுதுங்கள் எனச் சொல்லிக் கொண்டே இருந்தாலும் ஈழ எழுத்தாளர்கள் தொடர்ந்து அரசியல் நீக்கம் செய்யாத எழுத்தைத்தான் எழுதுகிறார்கள். அதற்குக்காரணம் ஈழத் தமிழர்களின் வாழ்க்கையின் சிக்கல் கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகளாக அரசியலில் இருந்துதான் வருகிறது என ஆரம்பித்து மிக விரிவாகப் பேசினார். ஏகப்பட்ட தகவல்கள்... எதையும் மறைத்தோ விடுத்தோ பேசவில்லை...

புலிகள் பற்றியும், தமிழக எழுத்தாளர் ஒருவர் அவரின் எழுத்தை தட்டையான எழுத்து என்று சொல்லி பேட்டி கொடுத்ததையும்... என்னை வாசித்தவர்கள் கண்டிப்பாக யார் தட்டையான எழுத்துக்குச் சொந்தக்காரர் என்பதை உணர்ந்திருப்பார்கள் என்றார். ஆனந்த விகடன் பேட்டியில் தான் சொன்னதற்கு அவர்களே கேள்விகளைப் போட்டு வெளியிட்டது பற்றியும், தனது ஏணைப்பிறை என்ற நஞ்சுண்டகாடு நாவல் பத்து வருடங்களாக வெளிவராமல் இருந்த அரசியல் காரணம் பற்றியும், விடுதலைப் புலிகள் பற்றி தமிழக அரசியல்வாதிகளும் பத்திரிக்கைகளும் புரிந்து வைத்திருக்கும் அபத்தங்கள் பற்றியும் பேசினார்.

பிரபாகரனை வைத்து அரசியல் செய்யும் நம்ம ஊரு எழுச்சித் தலைவரை விட்டு வாங்கு வாங்கென வாங்கிவிட்டார். ஒரு இனமே போராடியதை... புலிகள் போராடினார்கள் என்றாக்கி வைத்ததுடன் போராட்டம் செய்யாமல் புலிகள் சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் என்றாக்கி விட்டார்கள்... இந்த வரலாறுதானே பின்வரும் சந்ததிகளைச் சென்றடையும் என்றார். ஈழப் புத்தகங்களை வாசித்து மட்டும் ஒரு இனத்தின் எழுச்சியை... அழிவைப் பற்றித் தெரிந்து கொள்ளமுடியாது என்றவர் ஒரு சிலரின் புத்தகங்களைச் சொல்லி அவற்றின் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்றார்.

பல சிறந்த எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் ஈழத்தில்... ஆனால் அவர்களை எல்லாம் இந்தத் தமிழகத்தில் பெரும்பாலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றார். தான் இதுவரை மூன்று சிறுகதைகள் மட்டுமே எழுதியிருப்பதாய்ச் சொன்னார். நானே பாத்திரமாக நின்று எழுதும் கதைகள் ஏராளமாய் எழுதப்படுகின்றன என்றாலும் நஞ்சுண்டகாட்டில் நான் பிரதான பாத்திரமாய் நின்று எனக்கு மற்றொருவரின் (சுகுமாரன்) கதையைச் சொன்னது போல் இதுவரை யாரும் எழுதியதாக நான் அறியவில்லை என்றார்.

கேட்கப்பட்ட கேள்விகளும் சிறப்பானவையாக இருந்தன... அவரின் பதிலும் விரிவாக இருந்தது... குணா கவியழகன் இயக்கத்தில் இருந்தவர்... முள்ளி வாய்க்கால் நிகழ்வுக்குப் பின்னே இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்தவர் என்பது நமக்குத் தெரியும் என்பதால் அவர் ஈழ எழுத்தை மட்டுமல்ல... அரசியலை... விடுதலைப்புலிகள் பற்றிய செய்திகளை மிக விரிவாகப் பேசினார்.

இலங்கைத் தமிழ் எனக்குக் கேட்க ரொம்பப் பிடிக்கும்... எங்கள் ஊர் செல்லும் வழியில் இலங்கைத் தமிழர் முகாம் இருப்பதால் அவர்களுடன் பேசிப், பழகி அந்த மொழியின் மீது ஒரு ஈர்ப்பு எப்போதும் உண்டு... அதேபோல் பிரபாகரன் மீது ஒரு பற்று... அது இரண்டுமே குணாவிடம் பார்க்க, கேட்க முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி... நேற்று நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை என்பதால் இன்று முகநூலில் இருந்த வீடியோவில் நிகழ்வைப் பார்த்தேன்.

சென் பாலன் பற்றிய சிறு அறிமுகத்தை அபிராம் கிருஷ்ணாவும் நன்றி உரையை செல்வமும் சொன்னார்கள்.

இச் சிறப்பான நிகழ்வை முன்னெடுத்த நந்தாவுக்கும், எழுத்தாளர் குணா கவியழகனை இதில் பேச வைத்த நெருடாவுக்கும் நன்றி.

எழுத்தாளர் குணா கவியழகனின் பேச்சைக் கேட்க கீழிருக்கும் இணைப்பில் செல்லுங்கள்.


-'பரிவை' சே.குமார்.

2 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சுவாரஸ்யமான விவாதங்கள்...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நல்ல கலந்துரையாடல் என்று தெரிகிறது. ஈழ இலக்கியம் பெரும்பாலும் அரசியலுடன் கலந்துதான் வரும்.

நம் வலைப்பதிவர் தனிமரம் நேசன் எது எழுதினாலும் கண்டிப்பாக அதில் அவர்கள் அரசியல் கலந்திருக்கும். நான் சில சமயம் கருத்திடும் போது சொல்லியதுண்டு. ஆனால் அது இல்லாமல் அவர் எழுதுவது கடினம் என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.

எனக்கும் இலந்தைத் தமிழ் மிகவும் பிடிக்கும். அவர்கள் பேசுவது எல்லாம் மிகவும் ரசிப்பேன். நானும் முதலில் எல்லாம் அப்படித்தான் சிறு வயதில் பேசிக் கொண்டிருந்தேன் அப்புறம் மாறிவிட்டது.

கீதா