மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 13 ஜூலை, 2020

மனசின்பக்கம் : செம்மொழியும் எம்மொழியும்

னதில்பட்டதை எழுதி ரொம்ப நாளாச்சு... நிறைய கதைகளை வாசித்து அது குறித்தெல்லாம் எழுதியாச்சு... 2016-ல் மங்கையர் சிகரத்தில் எழுதிய சிறுகதையான 'நேசம் சுமந்த வானம்பாடி' நேற்று சிறுகதைகள்.காம் தளத்தில் பகிரப்பட்டிருக்கிறது என்பதைச் சொல்லி, மனதில்பட்டதைப் பேசப் போகலாம் வாருங்கள்.

ஸ்ரீராம்...

'எங்கள் பிளாக்' ஸ்ரீராம் அண்ணனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். எங்கள் பிளாக்கில் வாழ்த்து வீடியோ போடப்பட்டது. அதில் நானும் சின்னதாய் ஒரு வாழ்த்துச் சொல்லியிருந்தேன். கருத்துகள் இட முடியாத காரணத்தால் அங்கு நிகழ்ந்த நீண்ட கருத்துடையாடலில் கலந்து கொள்ள இயலவில்லை. இரண்டு முறை போனிலும் பல முறை மின்னஞ்சலிலுமாய் தொடரும் பந்தம்... விரைவில் சந்திக்க வேண்டும் அண்ணா. இறையருளால் நீடுழி வாழ்க.💙

கவிஞர்கள்...

நேற்று ஆனந்தயாழை மீட்டிய முத்துகுமரனின் பிறந்த தினம்...  இருக்க வேண்டிய வயதில் இறந்தவன், இறவாத கவிதைகளைக் கொட்டிக் கொடுத்துச் சென்றிருக்கிறான். நேற்று இணையத்தில் வழிந்த வாழ்த்தில் தெரிந்தது அவனின் பேனாவில் விளைந்த எழுத்துக்களின் வீரியம்... முத்தாய்ப்பாய் அவரின் மகன் ஆதவன் எழுதிய கவிதையை வாசிக்க நேர்ந்தது... அதன் கடைசி வரிகளில் இருந்த வலி இன்னும் இம்சிக்கிறது... 'எனக்கும் என் தங்கைக்கும் நீங்கள்தான் அப்பா... இன்னும் கொஞ்சநாள் உயிரோடு இருந்திருந்தால் என்ன தப்பா...'

இன்று கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் நான் விரும்பும் கவிஞன் பழனிபாரதியின் பிறந்தநாள்... இருவருக்கும் வாழ்த்துகள்.💚

செம்மொழி...

சகோதரர் நெருடாவின் மகள் செம்மொழி... எங்களுக்கெல்லாம் அபி... அபி இப்போது கதைசொல்லியாய் பிரபலமடைந்து வருவது மிகவும் மகிழ்வாய் இருக்கிறது. தங்கு தடையற்ற தமிழ்... பதட்டமில்லாத, அவசரப்படாத குறிப்பாக அச்சமில்லாத பேச்சு... சிரித்த முகம் இதுவே போதுமானதாய் இருக்கிறது உயரம் தொட..

ஆரம்பத்தில் திருக்குறள் சொன்னதிலிருந்து நாளுக்கு நாள் தன்னை மேம்படுத்திக் கொள்ளும் அவரின் திறன் வியக்க வைத்தது... வைக்கிறது. அதுவே இப்போது கதை சொல்லியாய் ஜூம் கலந்துரையாடல்களில் தன் ஆளுமையை அழகாக பதிவு செய்வதில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. எடுக்கும் கதைகளைச் சொல்ல ஆரம்பித்ததில் இருந்து முடிக்கும்வரை கூட்டத்தை தன் கட்டுக்குள் வைத்துக் கொள்வதற்கு அசாத்திய திறமை வேண்டும்... அது அபியிடம் இருக்கிறது... அந்தப் புன்னகைக்கு மயங்காதோர் உண்டா..?

மறைமலைநகரில் இருந்து நடத்திய கூட்டத்தில் கதை சொல்லியதற்கும் நேற்று நாகபட்டினத்திலிருந்து நடத்திய கூட்டத்தில் (முழுவதும் பார்க்கவில்லை... வேலையின் காரணமாக ஒரு கதை, ஒரு பாடல் மட்டுமே கேட்க முடிந்தது) பேசியதற்கும் நிறைய மாற்றங்கள் நிறைவாய்...  நிலவன் ஐயாவின் பேத்தி என்பதால் பேசுவது என்பது சாத்தியம்தான் என்று பலர் சொல்கிறார்கள்... ஐயாவின் பேத்தி என்பதைவிட என் சகோதரன் நெருடாவின் மகள் என்று சொல்வதையே நான் விரும்புகிறேன்... காரணம் நெருடாவின் வாசிப்பு அப்படியானது... அவர் தேடி வாசிக்கும் புத்தகங்களை எல்லாம் நான் தொட்டுப் பார்த்தது கூட இல்லை... அதுபோக அபியை அடுத்தடுத்து  நகர்த்திச் செல்லும் அவரின் முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது.  அப்புறம் பாரதி... அபியின் வளர்ச்சியில் பாரதியின் பங்கே அதிகம்... தினமும் வீடியோ எடுத்துப் பகிர்ந்தல் என்பதெல்லாம் எல்லா அம்மாக்களுக்கும் சாத்தியமில்லை... அதை திறம்படச் செய்வதுடன் மகளை யார் வாழ்த்தினாலும் உடனே அவர்களுக்கென ஒரு நன்றிப் பதிவு போடத் தவறுவதில்லை.

அபி சிகரம் தொடப் பிறந்தவர்... இன்னும் உயர்வார்... வாழ்த்துகள்.💚💙💛

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், நிற்கிறார்

கரகாட்டக்காரி...

சமீபத்தில் எழுதிய சிறுகதை... ரொம்ப நாளா எழுத வேண்டுமென நினைத்த கதை... கொஞ்சம் உண்மை கலந்து நிறையக் கற்பனையுடன் எழுதிய கதை... ஆனால் எதை எழுத வேண்டுமென நினைத்தேனோ அதை விட்டு கதை வேறு ஒரு பாதையில் பயணித்தது என்றாலும் மனநிறைவைக் கொடுத்த கதையாக இருந்தது. எழுத நினைத்த பாதையில் வேறு ஒரு கதை எழுதிக் கொள்ளலாம் என்பதால் இக்கதை அது பயணித்த பாதையிலேயே.

கதையில் இருந்து கொஞ்சமாய்...

முதல் வரிசையில் ராஜேந்திரன் உக்கார்ந்திருந்தார்... அவருக்கு அருகே ராமையா... அப்புறம் சந்திரன்...

அடப்பாவிகளா... கரகாட்டம் வைக்கக் கூடாதுன்னு கூட்டத்துல குதிச்சவங்கதானே இவங்க... யோசித்தபடி ‘என்ன மாமா... அன்னக்கி கூட்டத்துல நாடகம், கரகாட்டமெல்லாம் வேண்டாம்ப்பா... அதெல்லாம் இப்ப யாரு பாத்துக்கிட்டு இருக்கா... கரகாட்டத்துக்கு போலீஸ்காரன் அனுமதி கொடுக்க மாட்டான். அப்படியே கொடுத்தாலும் ஒரு மணிக்கு நிப்பாட்டச் சொல்லுவான்... காசப்புடிச்ச கேடு... அது போக பொண்ணு புள்ளய பாக்க முடியாதுன்னு குதிச்சாங்கன்னு வாட்ஸப்புல வாய்ஸ் மெஜேஸ் அனுப்பியிருந்தீங்க... இப்ப அதுகதான் முன்னால உக்காந்திருக்குக...’ என்றான்.


புவனா...

தற்போது எழுத ஆரம்பித்து பேர் வைக்காமல் நகரும் நாவல் 270 பக்கங்கள் வரை வளர்ந்திருக்கிறது. குடும்பக் கதைதான்... பகை... காதல்... திருவிழாக்கள்... கொஞ்சம் எங்க பக்க ஆன்மீக வரலாறுகள் என நகர்த்திச் செல்ல உத்தேசித்து எழுத ஆரம்பித்து நகர்ந்து கொண்டிருக்கிறது... இதை எழுத ஆரம்பித்த பின்னர்தான் தினமும் பத்துப் பக்கமேனும் எழுதும் எண்ணம் வந்திருக்கிறது. கதை எழுத ஆரம்பித்தால் எப்பவுமே கதை நாயகி பின்னேதான் பெரும்பாலும் நகர ஆரம்பிப்பேன்... இப்போது புவனாவின் பின்னே... கதையை எழுதி முடிச்சிடலாம் போல... பேர் வைப்பதுதான் சிக்கல். நல்ல பேராய்த் தேட வேண்டும்.

சமீபத்தில் 'எதிர்சேவை' குறித்து நண்பர்களுடன் பேசியபோது சொன்னது கதையை அழகாய் நகர்த்தி படக்கென முடித்து விடுவது முட்டுச் சந்துக்குள் நிறுத்துவது போலாகி விடுகிறது என்பதாகவும் கதைகளுக்கான தலைப்பை இன்னும் அழகாக வைக்க வேண்டும்... கதைத் தலைப்பில் கவனம் செலுத்துங்கள் என்பதாகவுமே இருந்தது. உண்மைதான் தலைப்பு சரியாக வைப்பதில் எனக்கு எப்போதுமே பிரச்சனை உண்டு... சில தலைப்புகள் சரியாக ஏறி அமர்ந்து கொள்ளும் 'வீராப்பு'வைப் போல. 

முன்னர் எழுதிய 'வேரும் விழுதுகளும்', 'நெருஞ்சியும் குறிஞ்சியும்', 'கறுப்பி', 'வெந்நீரை விழுங்கும் வேர்கள்', 'கொலையாளி யார்?' என எல்லா நாலல்களுக்கும் கதையோடு ஒன்றிய பெயர்தான் வைத்திருக்கிறேன்... இந்த புதிய நாவலுக்கு இன்னும் நல்ல பெயராய் தேட வேண்டும்.👨 நட்புக்கள் இருக்கப் பயமேன்...

புவனா இப்படித்தான் மனதுக்குள் நிறைந்திருக்கிறாள்...😆

உதவி இயக்குநர்...

முகநூலில் வரும் நட்பு அழைப்புக்களை எல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்வதை எப்போதும் செய்வதில்லை... அவர் போட்டிருக்கும் பதிவுகள்... அவரின் நட்புக்கள் எனப் பார்த்துத்தான் இணைத்துக் கொள்வது வழக்கம். சமீபத்தில் மத்தியமரில் எழுத ஆரம்பித்தபின் நிறைய நட்பழைப்புகள் வர ஆரம்பித்திருக்கின்றன. சமீபத்தில் ஒரு உதவி இயக்குநரும், எழுத்தாளர் தேவிபாலா சாரும் கோரியிருந்த நட்பழைப்பை ஏற்றுக் கொண்டேன்.

அந்த உதவி இயக்குநர் ஒரு நாள் முகநூல் அரட்டையில் வந்து கொஞ்ச நேரம் பேசினார்... அவரின் குறும்படத்துக்கு கதை தரமுடியுமா என்றும் கேட்டார். நான் எழுதுவதெல்லாம் கிராமத்துக் கதைகள் என்று சொல்லிவிட்டேன். பேசுவோம் சகோ என்று சொல்லியிருக்கிறார்... இதுவல்ல மேட்டர்.. இன்னொன்னு இருக்கு...

அது என்னன்னா... அவர் வைத்திருக்கும் வாட்ஸப் குழுமத்தில் என்னை இணைத்திருந்தார்... அங்கு என்னைப் பற்றிய விபரம் சொல்லி அழைப்பை ஏற்றுக் கொண்ட போது ஒருவர் வந்து 'நெருஞ்சியும் குறிஞ்சியும்' நாவல் எழுதிய எழுத்தாளர் 'பரிவை' சே.குமாரா நீங்க... (கவனிக்க எழுத்தாளர்... 😃) அப்படின்னு கேட்டதும் எனக்கு ஆச்சர்யம்... நெருஞ்சியும் குறிஞ்சியும் முழுவதும் இங்கு பகிரப்படவில்லை... அது நாவலாக இன்னும் வடிவம் பெறவில்லை என்றாலும் அமேசானில் பென் டூ பப்ளிஷ் போட்டிக்காக போட்டிருந்தாலும் இதுவரை யாரும் எடுத்து வாசிக்கவில்லை என்ற நிலையில் இவருக்கு எப்படித் தெரியும் என யோசனையில் நீங்க யாருங்க என்றேன்.

தனிச் செய்தியில் வந்தவர் நானும் சே.குமார் தாங்க... அதே பெயரில்தான் எழுதுறேன்... ஒருநாள் கூகிள்ல ஏதோ தேடும் போது என் பெயர் போட்டுத் தேடினால் 'பரிவை' சே.குமார் அப்படின்னு வந்து விழுந்துக்கிட்டே இருந்துச்சு... அட இது யாருடா நம்ம பேருலன்னு பாத்தப்பத்தான் உங்க வேரும் விழுதுகளும் பார்த்தேன்... இன்னும் வாசிக்கல... வாசிக்கிறேன் என்றார்... அப்ப நானும் ரவுடிதாங்கிற மாதிரி... எழுத்தாளனாய் கொஞ்சம் வெளியில் தெரிய ஆரம்பித்திருப்பதும் மகிழ்ச்சிதானே.😃

வெங்கட் நாகராஜ்...

இவரின் படைப்புக்கள் எல்லாமே மிகச் சிறப்பு....தனபாலன் அண்ணா எழுத்துக்களை ஒளிரவிட்டு, ஒளித்து வைத்து என கலக்கிக் கொண்டிருப்பதைப் போல, இவரும் இப்ப எழுத்தில் ஜாலம் காட்டிக் கொண்டிருக்கிறார்... நமக்கெல்லாம் அந்த மாதிரி எழுத்துரு வரமாட்டேங்கிது... அவரின் தளத்தில் அந்த எழுத்து ஈர்க்கிறது... இங்கயும் இதுவல்ல மேட்டர்.... இன்னொன்னு இருக்கு....

அது என்னன்னா... நேற்று அவர் பகிர்ந்த குறும்படம்... பார்த்து விட்டு ரொம்ப நேரம் அந்தக் கதையையே யோசித்துக் கொண்டிருந்தேன்... ஒரு மாணவி அம்மாவாய் இருக்கும் போது இந்தச் சமூகம் பார்க்கும் பார்வையை அந்தக் குழந்தையின் ஒற்றை அணைப்பும்.. அம்மா என்ற ஒற்றை வார்த்தையும் தூக்கித் துடைத்து வீசிவிடுகிறது அல்லவா...? அந்தத் தாய் கருவுற்றுப் பெற்றாளா.. இல்லை கடவுள் கொடுத்ததா என்பதை கதையின் போக்கில் சொல்லிச் செல்கிறார்கள்... ஆறு நிமிடக் கதை அநாயசமாய் மனதைக் கொள்ளை அடிக்கிறது. அருமை.😍

கில்லர்ஜி...

கில்லர்ஜி அண்ணன் இங்கிருக்கும் போதெல்லாம் தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பார்... ஊரில் கூட தேடியெல்லாம் வந்து பார்த்துச் சென்றார். தொடர்ந்து நிறைய எழுதுபவர்களில் அவரும் ஒருவர்... இப்பல்லாம் இங்கிட்டு வர்றதில்லை... இவர் மட்டுமில்லை... பலர் அப்படித்தான்... இவனென்ன நம்ம பக்கம் வரலை... நாம ஏன் போக வேண்டும் என்ற எண்ணமாகவும் இருக்கலாம்... கருத்திட முடியாத நிலை என்பதை தனபாலன் அண்ணா அறிவார்... அவருக்கு மட்டும் கருத்துப் போடுறேன்னு பலர் நினைக்கலாம்... அங்கு முகநூல் வழி கருத்திடும் வசதி இருக்கு... அதனால் போடும் கருத்து ஏற்றுக் கொள்ளப்படுகிறது... இதுவல்ல மேட்டர்... இன்னொன்னு இருக்கு...

அது என்னன்னா... தன்னுடைய புத்தகம் ஒன்றை அமேசான் கிண்டிலில் வெளியிட்டிருக்கிறார்... எல்லாரும் அதை வாங்கி வாசித்து அவரை ஊக்கப்படுத்துங்கள்... வாழ்த்துகள் அண்ணா👍.

ஜோதிஜி...

அண்ணனின் எழுத்துக்கள் எப்பவுமே மிக விரிவாக, அதிக தரவுகளுடன் சொல்ல வந்ததை அதன் புள்ளி விபரங்களுடன் சொல்லும் என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை... அதுவும் கொரோனா காலத்தில் முகநூல் வழி அவர் பதியும் பதிவுகள் எல்லாம் சிந்திக்க வைப்பவை... சில நேரங்களில் படங்கள் போட்டு அவர் தட்டும் கருத்துகள் சிரிக்கவும் வைக்கும்... இதுவல்ல மேட்டர்... இன்னொன்னு இருக்கு...

ஞாயிற்றுக் கிழமைகளில் 4 தமிழ் மீடியாவில் செய்திக் கோர்வையாக அவர் பேசும் தொகுப்பு... ஆரம்பத்தில் குரலில் இருந்த வித்தியாசம் அடுத்தடுத்த தொகுப்பில் மாறி, அருமையாக பேச ஆரம்பித்தார்... சமீபத்தில் வீடியோ வந்ததா தெரியலை... நான் கடைசியாகக் கேட்டது அச்சு ஊடகங்கள் பற்றிய அவரின் தொகுப்பு... அருமை... அடுத்த கட்ட நகர்வுக்கு வாழ்த்துகள் அண்ணா...💚

இன்னும் நிறைய இருக்கு... இன்னொரு நாள் எழுதலாம்.
-'பரிவை' சே.குமார்.

6 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சென்ற முறை நேரில் சந்திக்க முடியாவிட்டாலும், காணொளியில் கண்டேன்...

செம்மொழி செல்லத்தின் காணொளிகள் அனைத்துமே சிறப்பாக இருக்கும்...

நம் நண்பர்களின் தகவல்கள் அருமை...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்களைப்போலவே வலைப்பூ பிரச்சனை விசு சாரின் வலைப்பூவிற்கு இருந்தது... இப்போது சரியாகி விட்டது...

Settings-ல் comment பகுதியில் Embedded என்பதை Pop-up window என்று வைத்துப்பாருங்கள்... அடுத்து 2,3 பதிவுகளுக்கு அவ்வாறே இருக்கட்டும்... பிறகு பழையபடி மாற்றிக் கொள்ளலாம்... விவரங்களை அடுத்து சொல்கிறேன்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...

இப்ப மாத்தியிருக்கேன்... வருதா பார்ப்போம்...

ஸ்ரீராம். சொன்னது…

வாழ்த்துகளுக்கு நன்றி.

அபி சிகரம் தொட வாழ்த்துகள்.

நாவல் நன்றாக வர வாழ்த்துகள்.

கில்லர்ஜி, வெங்கட் ஆகிய நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

கதம்பமாக, நறுக்கான செய்திகள். வலைப்பூ நண்பர்களின் திறமைகளை அறிமுகப்படுத்தியது மகிழ்வினைத் தந்தது.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சிறப்பான தொகுப்பு. என்னையும் பதிவில் குறிப்பிட்டதில் மகிழ்ச்சி குமார். ஒன்றிரண்டு முயற்சிகள் செய்து பார்த்தேன். அவ்வளவு தான். இருக்கும் நேரத்தினை முடிந்த அளவு சிறப்பாக, பயன்படுத்தும் முயற்சி அவ்வளவு தான்.

தொடரட்டும் உங்கள் பதிவுகள். பாராட்டுகளும் வாழ்த்துகளும் குமார்.

பகிர்ந்த குறும்படம் உங்கள் மனதையும் தொட்டிருக்கிறது! நன்றி.