மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 1 டிசம்பர், 2019

சினிமா : மிக மிக அவசரம்

Image result for மிக மிக அவசரம்
மிக மிக அவசரம்...

சுரேஷ் காமாட்சியின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம்.

மாஸ்... மண்ணாங்கட்டி... வகையறா படங்களுக்கு இடையே அவ்வப்போது தமிழ் சினிமாவில் எதார்த்தம் பேசும் படங்களும் வருவதுண்டு. மலையாளிகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது நாம் பேசும் எதார்த்தம் ரொம்ப ரொம்பக் குறைவு. அவர்கள் எதார்த்தங்களில் மட்டுமே கதைகளை நகர்த்துகிறார்கள்... வெற்றியும் பெறுகிறார்கள்.

நாம் 'ஏய்', 'ஊய்' என்ற சொற்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் படங்களுக்குத்தான் தியேட்டரிலும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். எதார்த்தம் பேசும் சிறிய பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பது மிகப்பெரிய சிரமமாக இருப்பதாலேயே இங்கு இது போன்ற படங்களை எடுக்க இயக்குநர்கள் யோசிக்கிறார்கள்.

பெண்களின் பிரச்சினைகளைப் பேசும் எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும், அவை எல்லாம் உடம்பில் இருக்கும் குறைகளை மையப்படுத்தியேதான் இருந்திருக்கிறனவே தவிர உடல் உபாதைகளைச் சொல்லும் படமாக இருந்ததில்லை... அந்த வகையில் மிக மிக அவசரம் ஒரு பெண்ணின் உபாதையைச் சொல்கிறது. இப்படி ஒரு கதையை எடுத்ததற்காகவே இயக்குநர் சுரேஷ் காமாட்சியைப் பாராட்டலாம்... கூடவே கதை எழுதிய ஜெகனையும்...

ஒரு பெண், அது யாராகவோ இருக்கட்டும்... வேலைக்குப் போகுமிடத்தில் உடல் உபாதையைத் தீர்க்க படாது பாடு படும் நிலைதான் இங்கு இன்னும் இருக்கிறது. பெரிய வேலையில் இருக்கும் பெண்கள் தவிர அன்றாட வேலை பார்க்கும் பெண்களின் நிலை இன்னும் இப்படித்தான். நம் வீட்டுப் பெண்கள் கூட இப்படியான சூழலைக் கடந்து வந்திருக்கலாம். நாம் அதையெல்லாம் அறிந்து கொள்வதும் இல்லை... அறிய நினைப்பதும் இல்லை.

இங்கே நாயகி காவல்துறையில் பணி புரிகிறாள். பெண் காவலர்களை எதாவது ஒரு சாதிக் கலவரம் நிகழ்ந்த இடம் அல்லது அரசியல்வாதி வருகிறார் என பாதுகாப்புப் பணி அதுவும் இல்லை என்றால் திருவிழாக்களில் பாதுகாப்பு என கொண்டு போய் நிறுத்தும் போது அவர்களை நாம் ஒரு காவலராக மட்டும்தான் பார்க்கிறோமே ஒழிய பெண்ணாக அல்ல... சக ஆண் காவலர்கள் கூட அவர்களை அப்படித்தான் பார்க்கிறார்கள். பல மணி நேரம் நிற்க வேண்டிய இடத்தில் ஒரு பெண் சிறுநீர் கழிக்காமல் எப்படி நிற்க முடியும் என்பதை நாம் யாரும் யோசிப்பதே இல்லை.  இந்தச் சிறுநீர் பிரச்சினையைத்தான் மிக மிக அவசரமாய் கையில் எடுத்திருக்கிறார்கள்... இது அவசியமும் கூட.

ஆண்களைப் பொறுத்தவரை பொதுக் கழிப்பறை கூட தேவையில்லை... ஒரு சுவர் இருந்தால் போதும் அதில் சித்திரம் வரைந்து விட்டு நகர்ந்து விடுவோம். பேருந்து நிலையங்களில் எல்லாம் சுவரோரங்களில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு சுத்தமாக வைத்திருப்பதில் நமக்கு அதிகப் பங்குண்டு. கிராமத்தில் இருந்து வருபவன் முன்னெல்லாம் பெண்கள் போறாங்கன்னு யோசிச்சிக்கிட்டு நின்னான்... இப்ப அவனும் போன என்ன எனச் சீட்டி அடித்தபடி ஹாயாக சிறுநீர்க் கழிக்க ஆரம்பித்துவிட்டான்... நகரத்துப் பழக்கம் கிராமத்திலும் வேரூன்றியிருக்கிறது. கிராமத்து விவசாயம் நகரத்தால் அழிந்து வருகிறது.  எது தேவையோ அதைத் தொலைப்பதில் நாம் தீவிரமாகியிருக்கிறோம்... தொலைத்தும் விட்டோம்.

Image result for மிக மிக அவசரம்

பெண்கள் அப்படியெல்லாம் தங்கள் உடல் உபாதையை சுவரைப் பார்த்து முடித்துக் கொள்ள முடியாது. சிறுநீருக்கே சிரமப்பட வேண்டிய நிலையில் மாதவிடாய் நேரமென்றால் பணியிலிருக்கும் அதுவும் மேலே சொன்ன ஏதாவது ஒரு இடத்தில் நாள் முழுவதும் நிற்கும் பெண்ணின் நிலையை யோசித்துப் பாருங்கள்... அக்கா, தங்கைகளுடன் பிறந்திருந்தால்... மனைவி, மகளுக்கு நாப்கின் வாங்கிக் கொடுப்பதை யோசிக்காமல் செய்பவராக இருந்தால் அப்படியானதொரு வலியை ஆண்களாகிய நாம் கண்டிப்பாக உணர்ந்திருப்போம். இயக்குநர்  நாப்கினை கையில் எடுக்கவில்லை என்றாலும் சிறுநீரை அடக்கி வைப்பதன் வலியைச் சொல்லியிருக்கிறார்.

இலங்கையில் இருந்து கோவிலுக்குத் தரிசனத்துக்காக வரும் ஒரு அமைச்சருக்கான பாதுகாப்பு.... கோவிலுக்கு குண்டு வைப்போம் என மிரட்டல் வேறு என்பதால் பாதுகாப்புப் பணி தீவிரமாய்... ஒவ்வொருவருக்கும் ஒரு இடத்தில் பணி... என காவலர்களை ஒவ்வொரு இடமாக இறக்கி விட்டுச் செல்லும் மேலதிகாரி முத்துராமனுக்கு இறக்கி விடுபவர்களில் பெண் காவலர் சாமந்தி மீது காம எண்ணமும் ஒரு பழி வாங்கலுக்கான காத்திருப்பும் இருக்கிறது. அதன் காரணமாக ஒதுங்க இடமில்லாமல் வெளியில் நிற்க வேண்டிய பாலத்தில் பணி.

காவல்துறை என்றில்லை பெரும்பாலான இடங்களில் தனக்கு கீழே வேலை பார்க்கும் பெண்களை மேலதிகாரியாக இருக்கும் ஆண் என்ன பாடு படுத்துகிறார்கள் என்பதை நாம் அறிவோம். சமீப காலத்தில் பல காவல்துறை நிகழ்வுகளையும் முகநூலும் வாட்சப்பும் ஆடியோவாக, வீடியோவாக நமக்கு காட்டின... காட்டிக் கொண்டிருக்கின்றன... எத்தனை கொலைகள் தற்கொலைகளாக மாற்றப்பட்டன என்பதையும் நாம் அறிவோம் அல்லவா..? அறிந்து அப்போது மட்டும் பொங்குவோம்... அடுத்த இரண்டு நாளில் வேறொன்று வேர்விடும் நாம் தீவிரமாய் பொங்குவோம்... அடுத்தொன்று முளைக்கும் வரை.

இன்று பெண்களின் உடல் உபாதையைவிட மீசை முளைக்க ஆரம்பிக்கும் ஆண்கள் தங்களின் உடல் உபாதையைத் தீர்த்துக் கொள்ள விலங்குகளைப் போல் அலைவதையும் தங்கள் அவஸ்தை தீர்ந்ததும் அப்பெண்ணை எரித்துக் கொல்வதையும் பார்க்கும் அவலத்தில்தான் இப்போதைய இந்தியா இருக்கிறது... இவர்கள் எல்லாம் இதைச் செய்து கொண்டே இருப்பதற்கு காரணம் சட்டம் கடுமையாக இல்லாததுதானே... தையலை வேட்டியாடினால் தையல் மிஷின் கொடுப்பார்கள் என்பதை உணர்ந்தே வைத்திருக்கிறார்கள். உடனடி சாவென்பதைவிட கை காலை வெட்டி எடுத்து தின்பதும் கழுவுவதும் ஒரே கை என ஆக்கி வாழ விட்டால் அடுத்தவன் யோசிப்பான்... அதைச் செய்ய எந்த அரசுக்குத் தைரியம் இருக்கிறது. ஜெயிலுக்குள் போட்டு சலாம் அடித்துக் கொண்டிருக்கும் நம் நாடு எப்போது அரபு நாடுகளைப் போல சட்டத்தை கடுமையாக்குவோம்..?

கதை சொல்லியிருக்கும் விதத்தில் நாம் பலவாறாக, தவறான சிந்தைக்குள் இப்படியிருக்குமோ, அப்படியிருக்குமோ என யோசிக்க ஆரம்பிக்கும் போது சாமந்தியின் காதலன் சிறுநீர் பற்றிப் பேச, இவளுக்கும் போக வேண்டும் என்ற எண்ணம் வந்ததும் அவளின் அவஸ்தையின் பின்னே நாமும் பயணிக்க ஆரம்பிக்கிறோம். படத்தின் ஆரம்பத்தில்  பெயர்கள் போடும் போது நடக்கும் டெலிபோன் உரையாடலின் காரணமாகத்தான், அவள் இப்படியொரு வலியோடு நிற்க வைக்கப்படுகிறாள்... காவல்துறையில் பணிபுரிந்து மறைந்தவரின் பெண் என்றாலும் பெண் பெண்தானே... படுக்கைக்கு அழைக்கும் அதிகாரிகளுக்கு அவள் யார் என்ற விபரம் எதற்கு..?

Image result for மிக மிக அவசரம்

மாமா... குழந்தை... காதலன்... சிறுநீர் அவஸ்தை... பாலத்தில் நடக்கும் சின்னச் சின்ன நிகழ்வுகள் என அந்தப் பெண் படும் பாட்டை அவளோடு நாமும் பட வைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர். 

வெளிநாட்டு அமைச்சர் வந்தாரா..?

வெடிகுண்டு பிரச்சினை என்னா...?

வீட்டில் தனியே இருக்கும் குழந்தை என்ன செய்கிறாள்..?

அவளுக்கு உதவ நினைக்கும் ஆம்பூலன்ஸ் டிரைவரான காதலன்  நினைத்தபடி உதவ முடிந்ததா...?

அவள் நிலைக்கு வருத்தப்படும் காவலர் ஈ.இராமதாசு என்ன செய்தார்...?

அவளின் அந்த அவஸ்தை  முடித்து வைக்கப்பட்டதா..?

இலங்கைத் தமிழன் என்றால் தீவிரவாதியா..?

குண்டு வைக்கப்பட்டதா...? அப்படி வைக்கப்பட்டிருந்தால் வெடித்ததா... இல்லையா...?

இப்படி நிறையக் கேள்விகளுக்கான பதிலை இரண்டு மணி நேரத்துக்குள் சொல்லி முடித்திருக்கிறார் இயக்குநர்... கதையின் களம் கோவில்... குண்டு வைப்பு... அமைச்சருக்குப் பாதுகாப்பு... என இருந்தாலும் நிலைத்து நிற்பது என்னவோ அந்தப் பாலமும் அந்தப் பெண் காவலரும்தான்... பெண் காவலர் சாமந்தியாக நடித்திருக்கும் ஸ்ரீபிரியங்கா... மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்... தன் அவஸ்தையை அவர் முகத்திலும் தனது செய்கைகளிலும் காட்டும் போது உண்மையிலேயே சிறுநீர்க் கழிக்க விடாமல் படமெடுத்திருப்பார்களோ என்று தோன்ற வைக்கிறார். 

தமிழ்ச் சினிமாவில் சதை காட்டி நடிக்கும் மற்ற மாநில தமிழ் நடிகைகளுக்கு மத்தியில் தன் நடிப்பைக் காட்டும் தமிழ்ப் பெண்கள் நிற்பது அவ்வளவு எளிதல்ல... பலரை ஒடவிட்ட தமிழ்த் திரையுலகம் இவரையாவது பயன்படுத்துமா தெரியவில்லை... அமலாபால்களுக்கும் நயன்தாராக்களுக்கும் கேத்தரினாக்களுக்கும் மத்தியில் ஸ்ரீபிரியங்கா இடம் பிடிப்பது என்பது கடினமே என்றாலும் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகையாக வலம் வர வாழ்த்துக்கள்.

படம் ரொம்ப நல்லாயிருக்குன்னு சொல்லிக்கிட்டே போனா குறைகளே இல்லையா..? 

இல்லைன்னு சொல்லலையே... இருக்குல்ல... 

வெடிகுண்டு, தீவிரவாதம் அப்படிங்கிறதெல்லாம் படத்துக்குத் தேவையில்லாததுதான்... ஒரு அமைச்சரின் பாதுகாப்புக்கான பணி என்று சொல்லியிருந்தாலே போதும்... எந்த அமைச்சரும் சொன்ன நேரத்தில் வருவதில்லைதானே... எப்படியும் நாலைந்து மணி நேரம் நிற்க வேண்டியிருக்கும் என்பது அறிந்ததுதானே.... அமைச்சர் வருகிறார் என பள்ளிக் குழந்தைகளை ஒருநாள் முழுவதும் வெயிலில் நிற்க வைத்தவர்கள்தானே நாம். கதையை அப்படிச் சுற்றிச் சொல்லியது தேவையில்லாததே... பரபரப்புக்காக அது சேர்க்கப்பட்டிருந்ததால் பிரச்சினையை அழுத்தமாகப் பேசவில்லை என்றே தோன்றியது.

ஒரு மணி நேரத்துக்குள் எடுத்தால் டாக்குமெண்டரி போலாகிவிடும் என்பதால் கூட இப்படி கிளையாய் பல சேர்த்திருக்கலாம்... பக்கத்தை நிரப்ப எழுத்தாளர்கள் தேவையில்லாமல் எழுதுவதில்லையா அப்படித்தான்னு வச்சிக்கங்களேன்... இப்ப என்ன... நாம பாலத்துல மட்டும் நிற்போம்... பால் குடம் பார்க்கப் போறவங்களப் பத்தி நமக்கென்ன கவலை...

முத்துராமனுக்கு மேலே உயரதிகாரியாக இயக்குநரும் நடிகருமான... என்ன அரசியல்வாதியா..? அது நமக்கெதுக்கு... அதனால இயக்குநரும் நடிகருமான அண்ணன் சீமான் மட்டும் போதும்... நல்லாவே நடிச்சிருக்காரு... 'கட்டு'க் கதை சொல்றதைவிட 'கனமான' கதாபாத்திரத்தில் நடிக்கலாம்... அரசியலும் பிழைக்கும் கதைகளும் பிழைத்துக் கொள்ளும்.

ஈ.ராமதாஸ், வி.கே. சுந்தர், ஹரீஸ், லிங்கா, குணா என எல்லாருமே தங்கள் கதாபாத்திரத்துக்கு வலு சேர்த்திருக்கிறார்கள். 

வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும் சுரேஷ் காமாட்சியின் வீ ஹவுஸ் புரடெக்ஷனுடன் இணைந்து தயாரித்திருக்கிறது. 

இயக்குநர் சேரன் ஒரு பாடலை எழுதியிருக்கிறார் என்பதையும் சொல்ல வேண்டும்.

இசை - இசான் தேவ், ஒளிப்பதிவு - பாலபரணி, எடிட்டிங் - சுதர்சன், கதை - கே.பி ஜெகன், இயக்கம் - சுரேஷ் காமாட்சி.


Image result for மிக மிக அவசரம்மற்றபடி இது போன்ற குறைந்த பட்ஜெட் படங்களை யாரும் பார்ப்பதில்லை... அதுவும் புதுமுகங்கள் என்றால் யோசிப்பதுண்டு... வெளிநாடுகளில் எல்லாம் இந்தப் படங்கள் வருவதேயில்லை... தமிழ்ராக்கர்ஸ், தமிழ்கண், தமிழ்ரசிகன் என இவர்கள்தான் இம்மாதிரியான படங்களைப் பார்க்க வைக்கிறார்கள். வெளிநாட்டு வாசியாய் இவர்களை வாழ்த்தலாம்தான் இல்லையா... இவர்கள் இல்லை என்றால் பொழுது போவது சிக்கல்தான்.

மிக மிக அவசரம் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.

*****************

டிஸ்கி-1:  காற்றுவெளியில் எனது 'மரப்பாலம்' நாவல் வாசிப்பு அனுபவம் குறித்தான கட்டுரையும் தேன்சிட்டு மின்னிதழில் 'பேரம்' என்ற சிறுகதையும் வந்திருக்கின்றன. இரண்டு இதழ்களின் ஆசிரியர் குழுவுக்கும் நன்றி.

டிஸ்கி-2: கணேஷ்பாலா அண்ணன் நடத்தும் படத்துக்கு கதை எழுதும் போட்டியில் இருக்கும் 'வலி' வாசித்து உங்கள் கருத்தைச் சொல்லுங்க.

-'பரிவை' சே.குமார்.


4 எண்ணங்கள்:

Anuprem சொன்னது…

வித்தியாசமான கதைகளம்...கண்டிப்பாக பார்க்க வேண்டும் ...

போலிஸ் பணியில் இருக்கும் பெண்களை கண்டு இது போல யோசித்தது உண்டு ....எப்படி இவர்களால் முடிகிறது என்று ..ஆனாலும் யாரிடமும் அதை பற்றி பேசியது இல்லை ..

Yarlpavanan சொன்னது…

சிறந்த ஆய்வுக் கண்ணோட்டம்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பார்த்து விட்டேன்... நல்லதொரு வித்தியாசமான திரைக்கதை...

'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றி அண்ணா... அருமையானதொரு படம்... கொஞ்சம் சினிமாத்தனம் இருந்தாலும் நல்லதொரு கருத்து...