மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 5 அக்டோபர், 2018

மனசு பேசுகிறது : பரியேறும் பெருமாள் - ஒரு பார்வை

Related image

கொஞ்சம் பெரிய பதிவுதான்... நிறைய எழுத ஆசை நீளமே (நீலம் அல்ல) போதுமென்றது...  பொறுமையாக வாசித்து உங்களின் மனக் கருத்தைச் சொல்லுங்கள்.

ரியேறும் பெருமாள்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், இயக்குநர் பா.ரஞ்சித்தை தயாரிப்பாளராக மாற்றியிருக்கும் படம்.  

சா'தீ'யம் பேசும் படம் மட்டுமின்றி அதன் வலிகளைச் சொல்லும் படம்.

'இப்பல்லாம் எங்க சார் சாதி பாக்குறாங்க...?' என்று பெருமைக்காக பேசினாலும் இன்னும் சாதி வெறி என்பது ஊறித்தான் கிடக்கிறது மனித உள்ளத்துக்குள்...

விமர்சனங்கள் எல்லாமே ஆஹா... ஒஹோ என்றுதான் புகழ்கின்றன... அந்தப் புகழ்ச்சிக்கு ஏற்ற படமே இது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை... சாதியை தொட்டுக் கொண்டு கோபுரமாக ஆக்கியதைத் தவிர்த்து... 

ஆமா.. அதென்ன ஆதிக்கச் சாதிப் பெண்களை மட்டும் எப்போதுமே தேவதையாகக் காட்டுகிறார்கள் என்ற விவாதம் வாட்ஸப் குழுமத்தில் ஓடியது... அதானே... ஏன்..?. தேவதைகள் எல்லாச் சாதியிலும் இருக்கத்தானே செய்கிறார்கள்... காட்டலாமே... எது தடுக்கிறது..? 

அதென்ன படத்தில் ஆதிக்க சாதிப் பெண்கள் மட்டுமே வழியக்கப் போய் காதலிப்பதாய் காட்டுகிறார்கள் என்ற விவாதம் எங்கும் ஓடவில்லை... ஓடாது... காரணம் நாம் 'ஆதிக்க' சாதிக்கு எதிரானவர்கள்... தப்பென்றால் எல்லாமே தப்புத்தான் என்னும் எண்ணம் நமக்குள் வருவதில்லை... இவன் நல்லவன், அவன் கெட்டவன் என்ற பகுப்பாய்வில் நாம் கில்லாடிகள்தான் எப்போதும்... பகுப்பாய்வில் கூட நாம் சாதி பார்ப்போம்தானே... 

இந்தச் சாதிப் பெண்ணைக் காதலிக்க வேண்டும்... திருமணம் செய்ய வேண்டும்... என்பதெல்லாம் வாய்வழிச் செய்தியாக தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட சாதி இளைஞர்களுக்குச் சொல்லப்பட்டு அப்படி நடக்கும் பட்சத்தில் பணமும் கொடுக்கப்படுகிறது என்பதையும்... அது அதே சாதி இளைஞிகளுக்குச் சொல்லப்படுவதில்லையே ஏன் என்பதையும்... நாம் யாருமே விவாதப் பொருளாக எடுத்துக் கொள்ளமாட்டோம். காரணம் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே சாதி வியாபாரப் பொருள்.

இந்தக் காதல் என்பது இரண்டு சாதிக்குள் மட்டும் நிகழ்வதில்லை... எல்லாச் சாதிகளுக்குள்ளும்தான் நிகழ்கிறது. நாம் நீலக் குறீட்டை படத்தில் நடித்த நாய்க்கும் வைக்கும் இடத்தில் இன்ன சாதியெனச் சொல்லி மார்தட்டிக் கொள்கிறோம்... குலம் காக்க வந்த குலவிளக்கு நான் என் சாதி மக்களில் கெட்டவர்களே இல்லை என்பதாய்... அப்ப எதிர் தரப்பு...அதுதான் ஆதிக்க சாதி.... ஆமா... ஆதிக்க சாதி என்றால் 'நீலம்' தவிர்த்து அனைவருமா..?

இங்கு எந்த சாதிக் காதல் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது..? ஒரே சாதிக்குள் காதலித்தாலும் பிரிவினைகளும் அடிதடிகளும் உண்டுதான் என்பதை நாம் மறந்துவிட்டு ஏதோ இரு சாதிகளுக்குள் மட்டுமே இது பரவிக் கிடப்பது போலவும்... அவர்களுக்குள் மட்டுமே ஆணவக் கொலைகள் நிகழ்த்தப்படுவது போலவும் பாவனை செய்வது ஏனோ..?

ஒவ்வொரு சாதிக்கும் மேலும் கீழும் சாதிகள் உண்டு... மேலே இருப்பவனுக்கு கீழே இருப்பவன் அடிமை சாதி... கீழே இருப்பவனுக்கு மேலே இருப்பவன் ஆதிக்க சாதி... இதில் எதற்காக படம் முழுவதும் சாதீயக் குறியீடுகள்... அதுவும் இரு பக்கத்து வலியைச் சொல்லும் படத்தில் ஒரு பக்கம் மட்டுமே குறியீடுகளாய் நிரம்பி வழிகிறது... மறுபக்கம் அதெல்லாம் தேவையில்லை... அவங்க பூராவும் ஆதிக்கம்தான் என்பதாய்... 

ரஞ்சித்தின் படங்கள் எப்போதுமே 'சாதீ'யத்தை சவுக்கு கொண்டு அடிப்பது போல் ஆளாளுக்குப் பேசுவோம்... அது எப்போதும் சவுக்கு எடுப்பதில்லை... சாதியை மட்டுமே உரக்கப் பேசும். இப்படி சாதியை வைத்துப் படமெடுத்துப் பெயர் வாங்கலாம் என்ற நினைப்பு மட்டுமே அவருக்குள் இருப்பதால்தான் அந்த வட்டத்துக்குள் இருந்து வெளிவர மறுக்கிறார்.. அதையே அவரின் படங்களும் பறை சாற்றுகின்றன.

மாரி செல்வராஜ்க்கு ரஞ்சித் கிடைத்ததால்தான் சுதந்திரமாக படமெடுக்க முடிந்திருக்கிறது என்று ஆளாளுக்குப் புகழ்கிறார்கள்...  ரஞ்சித் இல்லாது வேறொரு தயாரிப்பாளர் கிடைத்திருந்தால் கண்டிப்பாக 'நீலம்' பாய்ச்சாது இன்னும் சிறப்பாக எடுத்திருப்பார் என்றே தோன்றுகிறது.

சரி... படம் எப்படி...?

அருமையான படம்... 

இப்படித்தான் காதல்கள் கொல்லப்படுகின்றன என்பதைத் தைரியமாகச் சொன்ன படம். அதுவும் ஆணவக்கொலை செய்வதற்கென்றே ஒரு கிழவன் ஊருக்குள்... அவர் செய்யும் கொலைகள் நம்மைப் பதற வைக்கின்றன. ஆற்றுக்குள் சிறுவன் கொலை கதைக்குத் தேவையில்லாதது என்பதைத் தவிர.

ஒரு நட்பு... அது காதலாகுமா... ஆகாதா... என்பதான கதையில் அதை காதலாக்கி... அவனை அடித்து... உதைத்து... சிறுநீர் கழித்து.... என்ன ஒரு கொடூரம்... எத்தனை வக்கிரமானது இந்தச் சாதி வெறி..

அதன் பின் அவன் அவளிடம் நடந்ததைச் சொல்லி... அவள் கட்டியழுது... ஒரு காதல் பாடல்... பின்னர் 'சாதி' வெறியர்களால் பிரச்சினை... இப்படியாகத்தானே எப்போதும் நகரும் தமிழ் சினிமா, ஆனால் இதில் தான் பட்ட அவமானத்தை கடைசி வரை சொல்லாமலே மனசுக்குள் போட்டுப் பூட்டி மறுகும் அவனும்... அதனால் அவளும் படும்பாட்டை நம் வாழ்க்கைக் கதையாக முன்னிறுத்தியிருக்கிறார் மாரி செல்வராஜ். வாழ்த்துக்கள் மாரி.

'இந்தப் பையனா... நல்ல பையனாச்சே... நான் வேணுமின்னா பேசிப் பாக்கட்டுமா...?' என்று சொல்லும்போது அட ஆணவக்கொலை செய்யும் கிழவனுக்குள் சிறிய மனசு கூட இருக்கே என்று தோன்றினாலும் அதற்கு முன்னான ஒரு காட்சியில் பேருந்தில் அதே இளைஞனை கூப்பிட்டுப் பக்கத்தில் அமரச் செய்து ஊர் பேரைக் கேட்டதும் ஏதோ தொடக்கூடாததைத் தொட்டது போல் எழுந்து... நகர்ந்து செல்லும் அந்தக் கிழவன் மீது ஏற்பட்ட கோபம் இறுதிவரை நீடிக்கவே செய்கிறது.

தன் பெண் ஒருவனை ரொம்பப் பிடிக்கும் அவனுக்கு மட்டுமே திருமணப் பத்திரிக்கை கொடுப்பேன் என்று சொல்லும் போதே அவனைக் காதலிக்கிறாள் என்று நினைக்கும் பெற்றோரை என்ன சொல்வது..? ஏன்... எதற்கு... எப்படி... என்றெல்லாம் கேள்விகள் கேட்காமல் முடிவுகளை எடுப்பது எல்லாச் சாதியிலும் இருக்கத்தான் செய்கிறது... அதில் சாதிப் பாகுபாடெல்லாம் இல்லைதானே.

இது போன்ற ஆட்கள் ஆதிக்க சாதியில் மட்டுமே இருக்கிறார்கள் என்று காட்டுவது தீவிரவாதி என்றால் முஸ்லீம்தான் என்ற தமிழ்ச் சினிமாவின் அழிக்க முடியாத கறைபோல்தான். 

ஒரு கிராமியக் கலைஞனை, அம்மணமாக்கி ஓட விடும் போது கண்ணீர் மட்டுமல்ல... வலியும் மனமெங்கும்... இன்னும் இப்படியான சாதீய வெறிகள் இருக்கத்தானே செய்கின்றன... குறிப்பாக இளைஞர்களுக்குள் சா'தீ' வளரத் தொடங்கியிருக்கிறது சமீப காலங்களில்...

காதலாகுமா... ஆகாதா.... என்பதை காலம் சொல்லுமென 'சரி வா... கப்பல் விடலாம்' என்று முடித்தாலும் அவனும் அவளின் தந்தையும் பேசும் காட்சிகளின் வசனம் செம... அருமையான இறுதிக்காட்சி... காலம்தான் பதில் சொல்லணும் என்றபோது காலம் எப்போது பதில் சொல்லும் என்னும் கேள்வி நமக்குள். 

நான் செருப்புத் தைப்பவனின் மகன்தான்... அன்னைக்கு ஒதுக்குனவன் இன்னைக்கு எங்கிட்ட வந்து நிக்கிறான் என்று முதல்வர் சொல்வது எதார்த்த உண்மை... என் நண்பனின் தந்தையை ஒதுக்கியவர்கள் அவன் அண்ணனின் முன் 'சார்' என போய் நின்றார்கள்... நிற்கிறார்கள்.. காரணம் படிப்பு... படிப்புத்தான் மாற்றத்திற்கான ஒரே வழி.

'நான் சாதி பார்த்தாடா பழகுறேன்...' என்ற ஆனந்தின் கேள்வியை நாம் நம் நட்பில் பலமுறை கேட்டிருப்போம்... என் கல்லூரி நாட்களில் எனக்கு பெரும்பாலும் சாப்பாடு கொடுத்தது என் நண்பனின் தாய்... அவர் எனக்கும் அன்னைதான்... அந்த வீட்டில் நீலவண்ணம் குடிகொண்டிருக்கவில்லை. இப்பவும் நாங்கள் எந்த வண்ணத்தையும் சுமக்கவில்லை. மனிதர்களாய்தான் தொடர்கிறோம் நட்பை.

எங்கள் பேராசான் ஆதிக்கசாதி மனிதர்தான்... கல்லூரிக் காலத்தில் விடுமுறை தினங்கள் எல்லாம் அவர் வீட்டில்தான்... நாங்கள் பத்துப் பேருக்கும் மேல்... எங்களில் ஆண்ட... ஆளப்போற... ஆதிக்க... நீல சாதிகள் எல்லாம் உண்டு... பிரிவினை இல்லை. அசைவம் சாப்பிடாத ஐயா வீட்டில் அம்மா எங்களுக்காக அசைவம் சமைப்பார்... நாங்கள் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து சாப்பிடுவோம்.. என்னருகே பிராமணப் பெண்ணான என் தோழி அமர்ந்து சாப்பிடுவார்... நாங்கள் நாங்களாக இருந்தோம்... ஐயா வீடு ஒரு நாளும் சாதீய ஏற்றத்தாழ்வைப் போதிக்கவில்லை. அது சமத்துவபுரமாகத்தான் இன்றும்.

சித்தப்பனின் மகள் வேறொருவனுடன் பழகும்போது, அதுவும் ஊர்ப் பேரைச் சொன்னாலே இன்ன சாதிக்காரன் என்று தெரியும் நிலையில் அவன் திருமணத்துக்கு வரும்வரை வீட்டில் சொல்லவோ, அவனுடன் மோதவோ செய்யாத வகுப்புத் தோழன் திடீர் வில்லனாதல் சினிமாவுக்கானது... குறிப்பாக தமிழ் சினிமாவுக்கு.

2005-களில் வேட்டையாடித்தான் பொழப்பு நடத்தினார்கள் என்பது சினிமாவுக்கானது... வேட்டையாடுதல் என்பது இப்போதும் இருக்கும் ஒரு பொழுதுபோக்குத்தான்.

'வா கருப்பி...' என்றதும் அது அவனுடன்தான் போகிறது... பின் எப்படி சாதி வெறியர்களின் கையில் மாட்டுகிறது..? இருப்பினும் சாதீயக் குரூரம் நாயின் சாவில்.... டைரக்டரின் டச்... செம... அவன் கைலி அவிழ்ந்து விழ, கதறி ஓடி வந்து புழுதியில் விழுந்து அழுவது... மனசைப் பிழிந்தது. இன்றைய இளவட்டங்கள் சாதியைத் தூக்கி சட்டைப் பையில் வைத்துக் கொண்டு அலைகிறார்கள்... மாற்றம் அவர்களில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

எங்க பக்கம் சல்லிக்கட்டு மாடு செத்தால் நடக்கும் நிகழ்வுகள் நாயின் இறப்பில்... மாரடித்தல்.... ஒப்பாரி என வித்தியாசமாய் சிலவும் அதனோடு.... அப்படியிருக்கிறதா..?

'டாக்டர்' ஆவேன் என்று சொல்பவன் முதல்வர் இது சட்டக் கல்லூரி... டாக்டராக முடியாது வக்கீலாத்தான் ஆகலாம் என்ற பின்னே 'அம்பேத்காராவேன்' என்பது சாதீய மனிதர்களுக்கானது... சாதிப் பற்றாளனின் கைதட்டலுக்கானது. அவன் சொல்லும்போதே டாக்டர் அம்பேத்கார் போல் ஆவேன் என்று சொல்லியிருக்கலாம். இங்கே பாரதி, அம்பேத்கார், அப்துல்கலாமை எல்லாம் சாதி மத வட்டத்துக்குள் வைத்துப் பார்க்கவில்லை. அவர்களைச் சார்ந்தோரே வட்டமிடுகிறார்கள்.

குடத்தின் மூடி திறந்து கண்மாயில் தண்ணீர் குடிப்பது போல் வாய் வைத்து தண்ணீர் குடிக்கும் பழக்கம் பார்க்கப் புதுசு... அப்படி இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலும்.

எந்தச் சிறிய கிராமத்திலும் 12வது வரை பள்ளிகள் இருப்பதில்லை... பக்கத்துச் சிறு நகரங்களில்தான் படித்து கல்லூரிக்கு வந்து சேர்வோம்... ஆங்கிலத்தில் புலியாக இல்லை என்றாலும் ஓரளவேனும் தெரிந்திருக்கும்... விவரமானவனாக இருப்பவன் ஏ பார் அம்பிகா என்பானா..? 

கருப்பியைக் கொல்லும் இரயில்தான் இறுதியில் ஆணவத்தையும் கொல்கிறது... ஆணவம் அத்துடன் செத்துவிடுமா என்ன... அது எப்பவும் போல் எல்லா இடத்திலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்.

இந்த இரயில்கள்தான் எத்தனை காதல் கொலைகளைச் செய்து இருக்கின்றன... இருந்தும் இன்னும் உயிர்போடு ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன காதலிக்கும் உயிர்களைத் தேடி...

சமரசமாப் போங்கடே என்று கை கொடுக்கச் சொன்னால் ஆளுக்கு ஒரு பக்கம் முகத்தை வைத்துக் கொண்டு கை கொடுக்கிறார்கள்... அப்புறம் அங்க எப்படி சமரசம் வரும்..?

பிடித்த நடிகையின் அட்டைப் படம் போட்ட நோட்டு, வீட்டுப் படிக்கல்லில் வைத்து எழுதுதல்... என பால்யத்தைப் புரட்டிப் பார்க்க வைத்த காட்சிகள் அழகு.

சினிமாத்தனமும் குறியீடுகளும் நிறையயிருந்தாலும் வாழ்க்கையை... வலியை... அவரவர் பார்வையில் சொல்லும் கதைக்களத்துக்காக கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

கதிர்... எதார்த்த நடிகன்... தமிழ் சினிமாவின் நம்பிக்கை விதை.

ஆனந்தி... அழகான, நடிக்கத் தெரிந்த பெண்... G.V.பிரகாஷைப் போல் குட்டைப் பாவாடை மாட்டிவிடவில்லை என்றால் கண்டிப்பாக ஜொலிப்பார்.

சூரி, சந்தானம் போன்றவர்களின் நகைச்சுவை நம்மைக் கொல்லும் காலத்தில்தான் யோகிபாபுக்கள் இயற்கையாய் வந்து போகிறார்கள்.

படத்தை நகர்த்திச் சென்றிருக்கும் விதம் அருமை... காட்சிகள் கண் முன்னே நிற்கின்றன.

சந்தோஷ் நாராயணனின் இசை படத்துக்கு பெரிய பலம்.

படம் முழுவதும் சா'தீ'ய வன்முறையைச் சொல்லி இறுதியில் புள்ள குட்டிகளைப் படிக்க வையுங்கடா என்ற தேவர் மகனையும் கொண்டாடினோம்... ஆணவக் கொலைகளைச் சொல்லும் போது சா'தீ'யக் குறியீடுகளை அள்ளித் தெளித்திருக்கும் பரியேறும் பெருமாளையும் கொண்டாடுவோம்... இன்னும் வர இருக்கும் சாதிப்படங்களை எல்லாம் வரவேற்போம்.

நாம் சா'தீ'யத்தை உயிர்ப்போடு வைத்திருக்க வேண்டும் என்பதில் அரசியல்வாதிகளைவிட ஆபத்தானவர்கள் இந்த சினிமாக்காரர்கள் என்பதை நாம் எப்போது உணரப் போகிறோம்..? 

தமிழ் சினிமா சா'தீ'யத்தை விட்டு வெளியே வந்தாலே போதும்... சாதி மெல்லச் சாகும் என்பதே உண்மை.

ஆமா... பரியன்.... 

மிகச் சிறப்பான படம் என்பதைச் சொல்லவும் வேண்டுமா... 

மாரி செல்வராஜ்கள் சா'தீ'ய சமரசம் செய்யாமல் இன்னும் நிறைய வாழ்க்கைப் படங்களைக் கொடுக்க வேண்டும்... அது சினிமாவில் மட்டுமல்ல மக்கள் மத்தியிலும் மாற்றங்களைக் கொடுக்கும் படமாக அமைய வேண்டும்.

வாழ்த்துவோம் மாரியை...
-'பரிவை' சே.குமார்.

4 எண்ணங்கள்:

S.P.SENTHIL KUMAR சொன்னது…

அருமையான அலசல். எல்லோரும் சக்கட்டுமேனிக்குப் புகழ்ந்து கொண்டிருக்கும் போது அதிலுள்ள குறைகளையும் எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள். ஆனால், அந்தக் குறைகளைக் கடந்து சாதியத்தை தோலுரித்துக் காட்டிய படம்தான் இது. அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டிய படமும் கூட...

இன்று சாதி மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது என்றால் அதற்கு சமூக ஊடகங்கள்தான் மிகப் பெரிய காரணம். தமிழ் மொழி மீது இளைஞர்களுக்கு ஈர்ப்பு ஏற்பட, ஜல்லிக்கட்டு போன்ற போராட்டத்திற்கு சமூக ஊடகங்கள் எப்படி துணை நின்றனவோ அதேபோல் சாதி பெருமை பேசுவதற்கும் மற்ற சாதிகளை திட்டித் தீர்ப்பதற்கும், சாதிய உணர்வை ஊட்டுவதற்கும் இந்த சமூக ஊடகங்கள் காரணமாக இருக்கின்றன.

நான் பள்ளியிலோ கல்லூரியிலோ படிக்கும் காலத்தில் இத்தனை சாதிய பாகுபாடுகள் இல்லை. இப்போது இளைஞர்கள் தங்கள் பெயருக்குப்பின் சாதிப் பெயரைப் போட்டுக்கொள்கிறார்கள். நாம் மீண்டும் பின்னோக்கிப் போகிறோம். நம் சமூகம் எப்போது சாதிய மாயையிலிருந்து விடுபடுமோ தெரியவில்லை. அதுவரை பரியேறும் பெருமாள் போன்ற படங்கள் வரத்தான் செய்யும்..

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

அருமையான விமர்சனம். பார்க்கவேண்டிய படம்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

உங்கள் கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன் செந்தில் சார்.

சமூகம் எப்படி சார் விடுபடும்... சுற்றிலும் இருந்து அழுத்திக் கொண்டுதானே இருக்கிறது மீடியாவும் அரசியலும்.

நன்றி சார்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றி ஐயா..