மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 13 அக்டோபர், 2018

மனசு பேசுகிறது : 'ப்ரிய' ஜானு - ராம்

Image result for vijay sethupathi hd images in 96

'ப்ரிய' ஜானு...

மனமின்றிப் பறந்தாய்... மகிழ்வின்றி இறங்கி இருப்பாய் என்றாலும் நலமுடன் சிங்கப்பூர் போயிருப்பாய் என்று நம்புகிறேன்.

தனிமையும்... வெறுமையும்... எத்தனை கொடுமையானது என்பதை உணர்ந்த தருணம் அதை விடக் கொடுமையானது... நீ சென்ற பின் நான் சென்னை நோக்கிப் பயணித்த அந்த நிமிடங்கள் என் எதிரிக்கும் வரக்கூடாது ...

இந்த ரீயூனியனும் அதில் நீ கலந்து கொண்டதும் எதிர்பார்த்து நிகழ்ந்தல்ல... எதேச்சையான நிகழ்வுதானே... பின் ஏன் உன் வரவை என்னிடம் மறைக்க நினைத்தான் முரளி...

நீ எப்படியும் வரப்போறே... பின் மறைத்து என்ன செய்யப் போகிறார்கள்... என்னிடம் சொல்லி விட்டார்கள்... கேட்ட நிமிடத்தில் இருந்து நீ என்னை முதலில் தொட்டபோது சுமந்த படபடப்பை மீண்டும் சுமக்க ஆரம்பித்தேன்...

நீ என்னருகே வரும் வரை பைத்தியமாய் ஒதுங்கி நின்றேன் என் கையில் வைத்திருந்த பலூனில் அடைப்பட்டிருந்த காற்றைப் போல...

என் பயணம் தஞ்சைக்குள் நுழைந்தது மாற்றுப் பாதையில் செல்ல வேண்டிய சூழலால்தான் என்றாலும் அதுதானே நம்மை ஒரு இரவில் மடை திறந்த வெள்ளமென எல்லாம் பேச வைத்தது...

என் மாணவி காரோட்ட, நாம் கடைசியாய் சந்தித்த பாலத்தைக் கடந்த போது  நீ என் மீது மை அடித்து இதை பத்திரமா வச்சுக்க என்று சொன்ன அந்த நாள் ஞாபகம் வந்து படுத்தியது... அதுதானே நம் கடைசி சந்திப்பு...

என் குதூகலம் அவளுக்குள்ளும் ஓட்டிக் கொள்ள, நான் சொன்ன படி காரோட்டினாள். தஞ்சையின் அடையாளங்களைக் காட்டிக் கொண்டு வந்த போதே நம் பள்ளி வராதா என்று ஏங்கியபடியே வந்த நான் அதைக் கண்ட போது என் அடையாளத்தை மீட்டுக் கொண்டேன் என்பதை விட பத்தாப்பு ராமாக பயணித்தேன்... உன்னை எனக்குள் மீட்டிப் பார்த்தேன்.

வாட்ச்மேன் அண்ணனிடம் கேட்டு உள்ளே சென்றவனுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள்... ஊர் சுற்றல், டென்சன் எல்லாம் மறந்து பறக்க ஆரம்பித்தேன்.

இந்த சந்தோஷங்களையெல்லாம் புதைத்து வைத்துவிட்டுத்தானே தாடியும் மீசையுமாய் ஊர் ஊராய் சுற்றிக் கொண்டு கண்டிப்பான ஆசிரியனாகவும் வாழ்க்கிறேன்... இது என்னை நானே ஏமாற்றிக் கொள்ளுதல்தானே ஜானு...

பள்ளிக்குள் உன்னுடன் சுற்றி வர வேண்டும் என்ற என் ஆசை நிராசையாய் ஆகிவிட்டது... ஆம் சென்னையில் கூடலாம் என  என் ஆசைக்கு அணை போட்டு விட்டார்கள் பாவிகள்... அதுவும் கூட நல்லதுதான்... என் வீட்டில் எனக்காக மட்டும் சில மணி நேரங்கள் வாழ்ந்துவிட்டுச் சென்றாயே... யாருக்குக் கிடைக்கும் இது போன்றதொரு பாக்கியம்...

வகுப்புக்குள் போனதும் உன் இடத்தில்தான் அமர்ந்தேன்... என்னருகே நீ இருப்பது போல் உணர்ந்தேன்... என்னை இழந்து உன்னைச் சுமந்தேன் என்பதே உண்மை ஜானு.

வகுப்பிற்கு நீ வராத அந்த நாட்கள் எனக்கு எத்தனை கொடுமையாக இருந்தது தெரியுமா..? காய்ச்சல் குறையுமுன்னே எனக்காய்தான் நீ வந்தாய் என்று தெரியும்... எல்லாரும் உன்னிடம் பேச நான் மட்டும் ஒதுங்கியே நின்றேன்... என் படபடப்பும் துடிதுடிப்பும் நீ அறிவாய் என்பதை உணர்ந்தேன்... என்னைத் திரும்பிப் பார்த்த அந்த ஒற்றைப் பார்வையில் அதை நீ உணர்த்தினாய்....

அதுதான் மீண்டும் மீண்டும் என் நினைவுக்குள்... எப்படி மறக்க முடியும் அந்தப் பார்வையை...

நம் நண்பர்களின் வாட்ஸ்அப் குழுமத்தில் என்னைச் சேர்க்காமலேயே இருந்திருக்கிறார்கள்... அது ஏன்... நீ அதில் இருந்ததால்தானோ...? எல்லாரும் பார்க்கணும் என்றதும் என்னைச் சேர்த்து மாப்ள, மச்சான், தலைவான்னு உருகுறாங்க ஜானு... நீமட்டும் ஹாய் கூட சொல்லலை.... எனக்குத் தெரியும் உண்மையான அன்பு உன்னிடம் மட்டுமே என்பது... சுபா... அவள விடு அவ எந்தங்கச்சி... அந்தப் பாசம் வேற...

குழுமத்தில் இணைந்ததும் பத்தாம் வகுப்பு போட்டோ பகிரப்பட்டது... அதில் உன்னைப் பார்த்து உருகித்தான் போனேன்.... 'சின்னப் பொண்ணு நான் ஒரு செந்தூரப் பூ நான்...' பாட்டை நீ பாடிய போது வெல்லக்கட்டி நான் என்றபோது புருவம் உயர்த்தி என்னைப் பார்த்த ஞாபகம் மனசுக்குள் மணியடித்தது தெரியுமா....?

ம்....

அன்றைய இரவை நீங்கா இரவாக மாற்றிய நீ தங்கியிருந்த ஹோட்டலைத் தாண்டி வரும் போது என்னை அறியாமல்  கண்ணீர்... எல்லாரையும் போல் ஆண்பிள்ளை அழலாமா என்பாய் நீயும்... காதலின் கண்ணீருக்கு ஏது வேறுபாடு..?

அது போக அழுகை துக்கத்துக்கு மட்டுமானதல்ல...  சுகத்துக்கும்தானே...

உண்மையைச் சொன்னா வீட்டுக்குப் போகணுமா என்று தோன்ற,. எங்கெங்கோ சுற்றிவிட்டு இரவுதான் வீட்டுக்குப் போனேன்... மின்சாரம் இல்லை.... யமுனை யாற்றிலே வீடெங்கும் கேட்கிறது... எப்படியிருந்திருக்கும் எண்ணிப் பார்.... ஓவென்று அழுதேன்... மெல்ல மெல்லக் கரைகிறேன் நான்... மின்சாரம் வந்துவிட்டது...

வீடெங்கும் நிசப்தம்... வீடும் வெறுமையாய் இருந்தது ஆனால் அதில் உன் வாசம் நிறைந்திருந்தது ஜானு... அது போதுமே எனக்கு ஆயுசுக்கும்...

அந்த வாசனையை மீண்டும் மீண்டும் சுவாசிக்கிறேன்...

இன்னொருவனின் மனைவியின் வாசத்தைச் சுவாசிக்கலாமா என்றெல்லாம் எனக்குத் தோன்றவில்லை... அந்த வாசம் எனக்காய் நீ விட்டுச் சென்றதுதானே... அதில் என் பத்தாப்பு ஜானுதான் தெரிந்தாள்... இன்னொருவனின் மனைவி சத்தியமாய்த் தெரியவில்லை எனக்கு...

இனி

மெட்ரோ ரயில்...

காபிக்கடை...

மழை இரவு...

அவ்வளவு ஏன்... என் காரில் தனிமைப் பயணம் கூட

எனக்கு உன் அருகாமையைச் சொல்லிக் கொண்டே இருக்குமே ஜானு... எப்படி மீள்வேன்..?

என் மோட்டார் சைக்கிளில் போகும் போது என் தோள் பிடித்து நீ அமர்ந்திருப்பதாய் நினைத்து பேசிக் கொண்டே போகிறேன்... பைத்தியம் போல....

22 ஆண்டுகளுக்குப் பிறகு என்னைப் பைத்தியமாய் அடித்திருக்கிறது உன் நினைவுகள்...

காரின் கியரில் கை வைக்கும் போது உன் ஞாபகம் சுடுகிறது என்னை... அழுகிறேன் நான்...

நீ வேதனையோடு அதைப் பிடித்திருக்க... எங்கே நானும் நேசமாய் பிடித்து விடுவேனோ என்பதாலேயே அத்தனை முரட்டுத்தனம் காட்டினேன்...

அத்தனை அழுத்தம் கூடாதுதான் என்று இப்போது நினைத்து வெட்கப்படுகிறேன்...

என் முரட்டுத்தனம் உன் கையில் வலியாய் இறங்கியிருக்கும் என்றாலும் அந்த சில நிமிடங்கள் ஏதோ ஒரு உணர்வு எனக்குள் பூத்தது என்பதை மறைக்க முடியவில்லை... அதில் எனக்கான வாழ்வு இருந்தது ஜானு..

என்னைப் பார்த்து 'நாட்டுக்கட்டை' என்றாயே... உன்னை... இப்ப நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது போ... இந்தத் தஞ்சாவூர்க்காரியை சிங்கப்பூர் வாழ்க்கை  கொஞ்சம் கூட மாற்றவில்லையே எப்படி..?

அதென்ன படக்குன்னு நீ வெர்ஜினாடான்னு கேட்டுட்டே... போட்டோ எடுப்பவனாய் ஊர் ஊராய் சுற்றி வருபவன் என்பதால் கேட்டாயோ... இதை முரளியிடம் சொன்னால் சிரிப்பான்...22 வருசமா நான் கற்போடு இருந்தேன் என்றால் சிரிக்கத்தானே செய்வார்கள்... நான் சோகங்களைச் சுமப்பவன்... எனக்கான வாழ்க்கையில் மற்றவற்றைச் சுமக்க... ரசிக்க... தருணம் ஏது ஜானு..?

அப்பா... அம்மா.... நீ கேட்கவில்லை... நானும் சொல்லவில்லை... நீ கடந்து போனாய்... அவர்கள் கடனில் போனார்கள்... இப்ப நான் மட்டும் தனிமரமாய்...

உன் துப்பட்டா,  நீ வைத்த பூ என நான் சேகரித்து வைத்திருந்த பொக்கிஷங்களைப் பார்த்து நீ ஆச்சர்யப்பட்டாய்...  அதுதானே நம் காதலின் முகவரி... அதை எப்படித் தொலைப்பேன்... ஒருவேளை இன்றைய தலைமுறை பார்க்க நேர்ந்தால் சிரிக்கக் கூடும்... சிரிக்கட்டுமே... அந்தக் காலக் காதலை இன்றைய செல்போசி சேமிப்பில் சேர்க்க முடியுமா...?

பொக்கிஷப் பெட்டியில் புதிதாய் நீ மழையில் நனைத்து, நான் காயப்போட்ட உன் குர்தாவும்... பேண்ட்டும்... என்றாவது ஒரு நாள் மீண்டும் எடுத்துப் பார்ப்பேன்... அப்போது உன் வாசத்தையும் நேசத்தையும் மீண்டும் சுவாசித்துக் கொள்வேன்... அன்னையின் மார்பில் பசியாறும் குழந்தையென...

உன்னைத் தேடி பல வருடங்களுக்குப் பிறகு கல்லூரிக்கு வந்த நான் வசந்தி சொன்னதை வைத்து உன்னைப் பார்க்காமலே வந்துவிட்டேனே... அந்த இடத்தில் நான் சந்திரனாக இருந்திருக்கலாம்... வீம்பு பிடித்த ராமாக இருந்து விட்டேனே.... தவறு என் மீதுதானே...பிறகு ஏன் நீ அப்படி அழுதாய்...?

காபிக்கடையில் என் மாணவிகளிடம் நீ பொய்க்கதை சொன்னாலும் அந்தக் கணத்தில் உன் முகத்தில்தான் எத்தனை பூரிப்பு... எத்தனை சந்தோஷம்... உன் கண்களில் அவர்கள் ஆனந்தத்தைக் கண்டிருக்கலாம்... நானோ சொல்ல முடியாத வலியின் பிரவாகத்தை... வாழ முடியாத வாழ்வைக் கண்டேன்.

அந்த இரவில்... நான் காதலில் தோற்றதைவிட உன்னைத் தொலைத்ததை எண்ணி வருந்தினேன்...

இதோ இப்போது நீயும் நானும் காபி சாப்பிட்டபடி பேசிக் கொண்டிருந்த என் வீட்டுப் பால்கனியில்தான் நிற்கிறேன் தனியாய்...

இப்போதும் மழை பெய்கிறது...

மஞ்சள் குர்தா அணிந்த பெண் ஒருத்தி சாலையைக் கடந்து போகிறாள்...

என்னையறியாமல் அழுகிறேன்.... இடி இடிக்கிறது... ஓவெனக் கதறுகிறேன் அந்த இடியோடு...

ஆம்பளை அழலாமா என்று மறுபடியும் நினைக்காதே...

ப்ளீஸ்... நான் அழ வேண்டும் ஜானு...

என்னுள் இருக்கும் துக்கத்தை... சந்தோஷத்தை நான் அழுது தீர்க்க வேண்டும் ஜானு...

உன்னை இறக்கிவிட்ட நொடியில் என் உயிரே போனதாய்தான் நினைத்தேன்... எப்படிச் சொல்வேன் உன்னிடம் அதை... குற்றவாளியாய் நின்றிருந்தேன்.

அப்போதுதான் 'ரொம்பத் தூரம் பொயிட்டியா ராம்'ன்னு உன் குரல்... அதில் எத்தனை ஏக்கம்...?  அதே இடத்தில்தான் இடத்தில்தான் நிற்கிறேன் என்றவனுக்கு உன்னைத் தேடி ஓடி வரத் தோணலை... ஆனால் நீ ஓடி வந்தாயே... தொலைந்து கிடைத்த குழந்தையை காண ஓடிவரும் அம்மாவைப் போல வந்தாயே...

என்னை எடுத்துக் கொஞ்ச முடியாத சூழலில் நீ... அடித்துத் தீர்த்துக் கொண்டாய்....

அந்த ஹோட்டல் செக்யூரிட்டி எத்தனை முறை கதவைத் திறந்து மூடுவான்....  கண்டிப்பாக அவன் உன்னையும் என்னையும் வேறு மாதிரி நினைத்திருக்கக் கூடும்...  தினத்தந்தியில் போடப்படும் கள்ளக்காதல் செய்தி போல.... மனங்களின் வலி அவர்களுக்கு எப்படித் தெரியும்... நினைத்துவிட்டுப் போகட்டும்... அதனால் நாம் கெட்டா போய்விடுவோம்.

என் மாணவி ஒருத்தி எனக்கு மிக நெருக்கமாய்... அவள்தான் என் காரை ஓட்டிச் சென்றவள்...  அவளால்தான் ரீயூனியன்... நம் சந்திப்பு எல்லாமே நடந்தேறியது... யார் அவள் என்று யோசிக்கிறாயா... உன்னிடம் கூட சாரை பத்திரமாப் பாத்துக்கங்கன்னு சொன்னாளே அவதான்... அப்படியே பேச்சிலும் செயலிலும் உன்னைப் போல்... அதனால்தான் அவளை மனசுக்குள் மகளாய் வைத்தேன்...

சுபாவுக்கு என்னால் உன் திருமண வாழ்வில் பிரச்சினை வந்துவிடப் போகிறதோ என்ற பயம் மனசுக்குள்... அதான் போன் பண்ணிக் கொண்டே இருந்தாள்... கல்யாணம் ஆகாத நான்... கல்யாணம் ஆகியும் நினைவுகளைச் சுமக்கும் நீ... பயம் வரத்தானே செய்யும்... மனித மனம் நிலையில்லாததுதானே....

அவளிடம் இருவரும் அருகருகே இருந்தும் போனில் பொய்யாகப் பேசினோமே... எதனால்... அந்த இரவில் நாம் நமக்காக வாழ வேண்டும் என்பதால்தான்... பாவம் தெரிந்தால் வருந்துவாள்... மறந்தும் சொல்லி விடாதே...

உன் மகள் போட்டோ பார்த்து மகிழ்ந்த மனசு நீ வரும் வரை எங்கே உன் குடும்பத்துடன் வருவாயோ என்ற பயத்தோடுதான் இருந்தது... ஏன் தெரியுமா..?

உன் மகள் என்னை யாரென்று கேட்க... நீ 'மாமாடா' என்று எல்லாத் தோற்ற காதலர்களின் சந்திப்பில் நிகழ்வது போல் சொல்லிவிட்டால்...

நல்லவேளை நீ மட்டும் வந்தாய்...

எனக்கான... மன்னிக்கவும்... நமக்கான 'நல்'ளிரவைத் தந்தாய்...

உன் எச்சில்பட்ட சாப்பாட்டை சாப்பிடும் முன் யாரேனும் பார்க்கிறார்களா என்று பயத்தோடு பார்த்துக் கொண்டேன் நான்... எங்கே விட்ட இடத்தில் தொடர்கிறான் என்று நண்பர்கள் நினைத்து விடுவார்களோ என்ற பயமும் முதிர்ச்சி அடைந்த வயசும்தான் அப்படி பார்க்கச் சொன்னது.

நான் உன்னை வீட்டுக்கு கூப்பிட்டபோது என்னை விஸ்வாமித்திரன் என்றாய்... எனக்குச் சிரிப்புத்தான் வந்தது... எடுக்கும் போட்டோக்களில் எல்லாம் நீதானே தெரிகிறாய்... இல்லேன்னா இவன் பெரிய ரவுடியாய்த்தான் இருந்திருப்பான் தெரியுமா...?

நீயும் நானும் ஒரே கட்டிலில் இருந்தோம் என்று முரளியிடம் சொன்னால் நம்புவான்னு நினைக்கிறியா...? அப்ப எல்லாம் முடிஞ்சிருச்சா என்பதுதான் அவனின் கேள்வியாய் இருக்கும்... அவனின் பார்வை அப்படித்தான்... பார்வைகளில் வித்தியாசம் இருக்கத்தானே செய்யுது ஜானு.

இது அவசர உலகம் ஜானு... காதலின் ஆத்மா இங்கிருப்பவர்களுக்குப் பிடிபடுவதில்லை. இப்ப கள்ளக்காதல் வேறு தவறில்லை என்று சொல்லி வைத்துத் தொலைத்திருக்கிறது கலாச்சார இந்தியா... நம் நேசத்தையும் அதில் சேர்த்தாலும் ஆச்சர்யமில்லை ஜானு...

உனக்கொன்று தெரியுமா... திருமணம் முடிந்து சில மாதங்களுக்குப் பிறகு பெண்ணொருத்தி காதலனுடன் ஓடியிருக்கிறாள்... இன்னொரு பெண்ணே போலீஸே காதலனுடன் சேர்த்து வைத்திருக்கிறது இங்கே... காரணம் கள்ள உறவுக்கு அரசு கொடுத்த மரியாதை... இதில் வாழ்வும் காதலும் அல்லவா தொலைகிறது... சை... இதையெல்லாம் பார்க்கும் போது பப்பி ஷேமாகத் தெரிகிறது ஜானு...

எத்தனை முறை கேட்டும் கிடைக்காத 'யமுனை ஆற்றிலே' பாடலை மின்சாரம் போன நேரத்திலா பாடுவாய்..? கள்ளி...

யமுனை ஆற்றில் நீ இறங்கிய போது எதிர்க்கரையில் இருந்து நான் அடித்துப் பிடித்து ஓடி வந்து கைவிளக்கு வெளிச்சத்தில் உன் முகம் பார்க்க, விழி மூடிய அதில்தான் எத்தனை உணர்ச்சிகள்.... என் கண்ணுக்கு நீ தேவதையாய்...

அந்தத் தருணத்தை... அந்தச் சந்தோஷத்தை  வார்த்தையில் சொல்லிவிட முடியாது... அனுபவிக்கணும்... நான்... நான் மட்டுமே ஆத்மார்த்தமாக அனுபவித்தேன் ஜானு...

அந்த நிமிடம் அப்படியே நீடிக்கக் கூடாதா என்ற பேராசை கூட எனக்குள் எட்டிப் பார்த்தது... ஆசைகள் எப்போதும் ஆசைகளாய் மட்டுமேதானே ஜானு.

'ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ...
ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ...
பாவம் ராதா...'

என்ற வரிகளில் உன் வலியும் வேதனையும் எனக்குள்ளும்...

உன் திருமணத்தில் ஓரமாய் ஓளிந்து நின்றேன் என்றேன் நான்... நீயோ உரிமை கொண்டாடி கூட்டிப்போக மாட்டாயா என்று காத்திருந்தேன் என்றாய்...  அப்பவும் நான் கோழையாய்த்தான் இருந்திருக்கிறேன் என்று இப்போது நினைக்கும் போது வெட்கத்தைவிட வேதனையே என்னைக் கொல்கிறது ஜானு...

உன்னை முதன் முதலில் சேலையில் பார்த்தப்போ அப்படியே தூக்கிட்டுப் போய் தாலி கட்டணும்ன்னு தோணுச்சின்னு சொல்லிக் காட்டியபோது உனக்குள்தான் எவ்வளவு மகிழ்ச்சி... மீண்டும் மீண்டும் சொல்லச் சொன்னாயே... அதை நீ ரசித்தாயா..? இல்லை வாழ்ந்தாயா..?

சேலையில் நீ தேவதை ஜானு... அந்த இரவில் உன்னைச் சேலையில் பார்க்க ஆசை... சிங்கப்பூர் வாழ்க்கை நாகரீக உடைக்குள் உன்னைத் தள்ளியிருக்க... கேட்க நினைத்ததை கேட்காமலே விட்டுவிட்டேன்.... நீயேனும் அவ்வளவு விருப்பமா சேலையில் பார்க்க என ஒருமுறை கட்டிக் காட்டியிருக்கலாம்... எங்கே தூக்கிக்கிட்டு கோயிலுக்கு அந்த நள்ளிரவில் போய்விடுவேனோ என்று நினைத்து விட்டாய் போலும்...  ஹா...ஹா... சும்மா... நீ ரசிப்பாயே.... அதான்...

ஒரு இரவுக்குள் ஓராயிரம் நாள் வாழ்வைக் கொடுத்துச் சென்றிருக்கிறாய்....

காட்டுச் செடிக்கு தண்ணீர் விட்டது போல...  நினைவுகளைச் சேமித்து அசைபோட்டபடி வாழப்போகிறேன் வரும் நாட்களை...

ஏர்போர்ட்டில் நீ முகம் மறைத்து அழுதாய்.. இங்கே இப்போது நான் முகத்தில் அடித்து அழுகிறேன்...

கரையும் கண்ணீரெல்லாம் நீயாக... நாமாக... நம் நினைவுகளாக...

உன் மகளிடம் என்றாவது ஒரு நாள் நாம் காதலைச் சொல்லி விடு... மறக்காமல் நாம் வாழ்ந்த அந்த மழை இரவையும்... அவள் உணரட்டும் நம் காதலின் உன்னதத்தை...

நான் மீண்டும் தாடிக்குள் ஒரு கண்டிப்பான ஆசிரியனாய் மெல்ல மெல்ல மாறிக் கொண்டிருக்கிறேன்...

தாடி மீசை இல்லாத பத்தாப்பு ராம் அதே பத்தாப்பு ஜானுக்கானவன்... அவனை நீ மீண்டும் சந்திக்க நேர்ந்தால் உன் முன் நிறுத்துகிறேன் அப்படியே... என்ன சந்தோஷம்தானே...

ஜானு...  என்னில் உன்னைத் தொலைத்து விடாதே.... ப்ளீஸ்...

உன் வாழ்க்கையை நீ வாழ்...

உனக்காக நான் திருமணம் செய்து கொள்கிறேன் ஜானு...

மழை இரவு நினைவுகள் தாலாட்டட்டும்... கோபமாகவோ... துயரமாகவோ அதை மாற விட்டு விடாதே... அது உன்னை.... உன் வாழ்க்கையைக் கொன்று விடும்... நீ வாழணும்... மகிழ்வாய்... நிறைவாய்...

இந்தக் காதல் தவிர்த்து வாழ வேண்டிய வாழ்க்கை நிறைய மீதம் இருக்கிறது ஜானு...

மீண்டும் சந்திக்க நேர்ந்தால் உன் விருப்பப்படி என் மகளுடன் சந்திக்கிறேன்... அப்போது அவளிடம் சொல்வேன்... உனக்கு அம்மாவா இருக்க வேண்டியவள் இந்த ஜானு என...

கண்டிப்பாக அவளுக்கு உன் பெயர் வைக்க மாட்டேன்... அது எனக்கான பெயர்.... அதை மற்றவர்கள் என் முன்னே அதட்டியோ... மிரட்டியோ... கூப்பிடுவதை என்னால் கேட்க முடியாது ஜானு...

ரொம்ப பேசிட்டேன் போல... எல்லாத்தையும் இறக்கி வச்சிட்டேன் போல...

நீ சமைத்த பாத்திரங்கள் இன்னும் கழுவப்படாமலே... என்ன சமைக்க... என்ன சாப்பிட.... தோணலை ஜானு...

கண்ணீர் வடிக்காதே ஜானு... நான் அழுதேன் என பலமுறை எழுதிவிட்டு உன்னை கண்ணீர் வடிக்காதே என்கிறேன் பார்...

அழுது விடு ஜானு...

உன்னில் இருந்து இந்தச் சுமை இறங்கும் வரை அழுது விடு...

அதுதான் நகரும் உன் வாழ்க்கைக்கு நல்லது ஜானு...

காலம் எதையும் தவறாகச் செய்வதில்லை...

உன் வாழ்வில் சந்தோஷம் குடி கொள்ளட்டும்...

'ராம் என்ன இறக்கி விடப் போறியா'ன்னு கேட்டியே ஜானு... எப்படி இறக்கி விடுவேன் சொல்லு.

இறக்கி விடத் தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும்...


ராமச்சந்திரன்.

('ஆல்ப்ஸ் தென்றல்' நிஷா அக்கா எழுதச் சொல்லி கேட்டதற்காக எழுதிய பகிர்வு - ஒரு பதிவு எழுத வைத்தமைக்கு நன்றி அக்கா)


-'பரிவை' சே.குமார்.

6 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

இரண்டு பக்கங்களிலிருந்தும் சிந்தித்திருப்பது அருமை குமார்.

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

எப்படி சகோ இப்படிக் கொட்டுகின்றன வார்த்தைகள்? ராம் மனதிலிருந்து உருகி உருகி எழுதியது அருமை..

இராய செல்லப்பா சொன்னது…

கதை மாதிரியும் இல்லை, உண்மை மாதிரியும் இல்லை, ஆனால் கதையும் இருக்கிறது, உண்மையும் இருக்கிறது. வாழ்க உம் காதல்! வாழ்க உம் முன்னாள் காதலி! நீங்களும் வாழ்க, அவளை மறந்து!

-இராய செல்லப்பா சென்னை

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அய்யா...

ஹா.. ஹா..ஹா...

முன்னாள் காதலியா... அது சரி.

இது ஒரு படம் பார்த்து அதனை வைத்து எழுதியது...

கதையும் இல்லை... உண்மையும் இல்லை...

படத்தின் தாக்கம்தான்..

நன்றி அய்யா.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் சகோதரி...

அப்படியெல்லாம் இல்லை... இதே என்ன எழுதுறேன்னு கேட்கிறார்கள்.

தங்கள் கருத்துக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றி அண்ணா.